தான் சார்ந்த சமயத்துக்கு ஒருவர் செய்யும் மிகப் பெரிய தொண்டு எது தெரியுமா? வேற்று சமயத்தவரும் தன் சமயத்தை பற்றி உயர்வாக கருதும்படி நடந்துகொள்வது தான். அந்த வகையில் நாம் வியக்கும் ஒரு நபர் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
தங்களை தீவிர ஹிந்து என்று சொல்லிகொள்பவர்களுக்கு கூட பகவத் கீதை தெரியுமா என்பது சந்தேகமே ஆனால் இஸ்லாமியரான இவருக்கு திருக்குர்ஆன் எந்தளவு தெரியுமோ அதே அளவு பகவத் கீதையும் தெரியும்.
சமய ஒற்றுமைக்கும் சமயப் பொறைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இவர். பதவியை களங்கப்படுத்தியவர்கள் மத்தியில் பதவிக்கே பெருமை தேடி தந்தவர் திரு.கலாம்.
நம் எதிர்கால சந்ததியினருக்காக தொலைக்நோக்கு பார்வையுடன் திட்டங்கள் தீட்டி அதை சாதித்து காட்டும் உத்வேகத்துடன் தற்போது எந்த பதவியில் இல்லாத நிலையிலும் அதற்காக உழைத்து வருகிறார். எத்தனை பெரிய விஷயம்?
நாம் இதுவரை சந்தித்த சாதனையாளர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல ஒரு குணம் உள்ளது. அது என்னவென்றால் திரு.அப்துல் கலாமை, அவர்கள் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக கருதுகிறார்கள்.
‘இவரை ஒரு முறையாவது சந்திக்கவேண்டும். இவரிடம் சில நிமிடங்கள் பேசவேண்டும். புகைப்படம் எடுக்கவேண்டும்….’ என்பது என் மிகப் பெரிய ஆசை. திருவருள் துணை புரியவேண்டும்.
நண்பர் திரு.பி.சுவாமிநாதன் ‘தீபம்’ ஆன்மீக இதழில் ‘திருப்பதி… திருப்பம்…. திருப்தி’ என்ற பெயரில் திருமலையின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் அதிசயங்கள், அற்புதங்கள் குறித்து ஒரு தொடர் எழுதினார்.
அந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் திரு.அப்துல் கலாம் தாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த சமயம் ஒரு முறை திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வந்தபோது நடந்துகொண்ட விதம் பற்றி எழுதியிருக்கிறார்.
ரம்ஜான் சிறப்பு பதிவு 2 ஆக இதை அளிக்கிறேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
===================================================
20-திருப்பதி… திருப்பம்… திருப்தி — பி.சுவாமிநாதன்
இந்து மதத்தவர்கள் மட்டுமே வந்து வழிபட வேண்டும் என்று சில ஆலயங்களில் ஒரு கட்டுப்பாடு உண்டு. இதை சம்பந்தப்பட்ட ஆலயத்துக்குள், நுழைகிற இடத்தில் ஒரு தகவல் பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய – மிகவும் புராதனமான பிரபலமான சில ஆலயங்களில், இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்காது.
காரணம் – பிரமாண்டமான இந்த ஆலயத்தின் தொன்மையான சிறப்பு அனைத்து தரப்பினருக்கும் தெரிய வேண்டும் என்பதுதான். அது மட்டுமில்லை. தனி மனித பக்தி உணர்வுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் ஒரு காரணம். தெய்வ பக்தி என்பது, அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். பிற மதத்தவர்கள் எத்தனையோ பேருக்கு நம் தெய்வங்கள் அருள் புரிந்திருக்கின்றன. அதற்கான கதைகளையும் படித்திருக்கிறோம்.
டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது திருமலை திருப்பதிக்கு வந்திருக்கிறார். என்றுமே இந்திய மக்கள் நலனிலும், இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வந்த போற்றத்தக்க தமிழர் – டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். அப்படிப்பட்ட மனித நேயர், ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் ரேணிகுண்டா வரை விமானத்தில் வந்து, பிறகு அங்கிருந்து சாலை வழியாக திருமலை வந்தார்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்பதியில். நண்பகல் வேளை தரிசனத்துக்கு தான் ஆலயத்துக்கு வந்தால், எங்கெங்கிருந்தோ வந்து குவியும் சாதாரண பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் என்கிற எண்ணத்தில், எவருக்கும் தொந்தரவு இல்லாத அதிகாலை தரிசனத்துக்கு திருமலைக்கு வந்தார் அவர்.
திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தனர் அர்ச்சகர்கள்.
அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் நுழையவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
அனைவருக்கும் கலக்கம். தங்களது வரவேற்பு முறையில் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டதோ அல்லது அவர் மனம் கோணும்படி ஏதேனும் சம்பவம் நடந்து விட்டதோ என்று ஆளாளுக்கு அப்துல் கலாமின் முகத்தையே தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அர்ச்சகர்களும் தேவஸ்தான அதிகாரிகளும் ஒன்றாக, வாருங்கள்… வாருங்கள்… பெருமாளைத் தரிசிக்கலாம்” என்று ஏழுமலையானின் சன்னிதியை நோக்கி அவரை அழைத்துப் பார்த்தனர்.
ஊஹும்! அப்துல் கலாம் ஓரடிகூட எடுத்து வைக்கவில்லை. அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான அதிகாரி ஒருவரைப் பார்த்து, பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு விட்டுத்தான் நான் ஆலயத்தின் உள்ளே நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும், அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே, அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும்” என்றாரே பார்க்க வேண்டும்!
கூடியிருந்த அனைவரும் ஒருகணம் திகைத்து நின்றனர். ‘இந்தப் பண்பு வேறு எவருக்கு வரும்?’ என்று ஆச்சரியத்துடன் கலாமையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆம்! மாற்று மதத்தைச் சேர்ந்த எந்த அன்பர் திருமலைக்கு வந்தாலும், அவர்களுக்கும் பிற பக்தர்களைப் போலவே தரிசனம் செய்து வைக்கப்படும். ஆனால், அதற்கு முன்னதாக தேவஸ்தானத்தில் இருக்கும் ஒரு கையேட்டில் அந்த அன்பர் தன் கையெழுத்தை இட வேண்டும். இது திருமலையில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை ஆகும். இது எப்படி வந்தது என்கிறீர்களா?
அன்னியர்கள் ஆண்ட காலத்தில், அவர்கள் திடுதிப்பென்று திருமலை ஆலயத்துக்குள் நுழைந்து விடுவார்கள். பூஜை வேளையில் தொந்தரவு தருவது, நகைகளையோ விக்கிரகங்களையோ களவாடிச் செல்வது இதெல்லாம் அவ்வப்போது நடந்ததுண்டு. தேவஸ்தான அதிகாரிகளும், அப்போது திருமலை திருப்பதி பகுதியை ஆண்ட ஒரு சில அரசர்களும் இதனால் கவலைப்பட்டார்கள்.
‘அன்னியப் படையினர் திருமலை சன்னிதானத்துக்குள் நுழைவது கோயில் சொத்தைக் கொள்ளை அடிக்கத்தானே! அவர்களுக்குத் தேவையானதை அவர்களுக்குத் தேவைப்படும்போது நாமே கொடுத்து விடுவோம். அதன்பின் ஏன் கோயிலுக்குள் வரப்போகிறார்கள்?’ என்று அவ்வப்போது கப்பம் கட்டி, ஒரு மாதிரியாக அவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்தார்கள்.
ஆலயத்தின் நலன் கருதி பலரும் கூடிப் பேசி அறிவித்த இந்தத் திட்டம், ஒரு சில அதிகாரிகளை உறுத்தச் செய்தது. காரணம் – ‘கொள்ளை அடிக்கிறவர்களை வேண்டுமானால் கோயிலுக்குள் வருவதைத் தடுத்து விடலாம். ஆனால், பெருமாளை உண்மையிலேயே தரிசிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் திருமலைக்கு வரும் மாற்று மத பக்தர்களையும் தடுப்பது போல் அல்லவா இது ஆகிவிடும்?’ என்று ஆலோசித்து, ‘ஒரு பக்தனாக – பெருமாளைத் தரிசிக்க விரும்புபவர்கள் ஆலயத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்படி ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், ‘திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க விரும்புகிறேன்’ என்று எழுதி தேவஸ்தானத்தில் உள்ள பதிவேட்டில் ஒரு கையெழுத்து போட்டு விட்டுச் செல்ல வேண்டும்’ என்று, அந்த விதியை சற்றே மாற்றி அமைத்தார்கள்.
ஆலய அதிகாரிகள் சொல்ல மறந்த இந்த விஷயத்தைத்தான் டாக்டர் அப்துல் கலாம் நாசூக்காக நினைவுபடுத்தி, அந்தப் பதிவேட்டைக் கொண்டு வரச் செய்தார். அதில் கையெழுத்திட்ட பின்னர் தான், சகல மரியாதைகளுடன் மலர்ந்த முகத்துடன் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். பங்காரு வாகிலி எனப்படும் தங்க வாசலைக் கடந்து உள்ளே சென்று, பத்து நிமிடங்கள் சன்னிதியின் முன்னால் நின்று ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்பட்டன. திருமலையின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டது. சடாரி சாத்தப்பட்டது. வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
மற்ற ஆலயங்களைப் போல் திருமலையில் பெருமாளுக்கு சாத்திய மாலைகள், வேறு எவருக்கும் சாத்தப்படுவதில்லை. காரணம் – இந்த மலர்களும் மாலைகளும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் தான் சூடி பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே, பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக திருப்பதிக்கு வரும் எப்பேர்ப்பட்ட வி.ஐ.பி-க்கும் சகல கவனிப்புகள் இருக்குமே தவிர, பெருமாளுக்கு சாத்திய மாலை மரியாதை மட்டும் இருக்காது.
வலம் வந்து முடித்த அப்துல் கலாமுக்கு ஆலய அர்ச்சர்கள் லட்டு, பட்டு வஸ்திரம் என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.
அப்போதும் அப்துல் கலாம் தன் முத்திரையை மீண்டும் ஒருமுறை பதித்தார். சாதாரணமாக இது போன்ற பிரசாதங்கள் தரப்படும் போது யாருக்குத் தருகிறார்களோ, அவரது பெயர், அவரது குடும்பத்தினர் பெயர்கள் போன்றவற்றைச் சொல்லி, அவரது வியாபாரம், செல்வ வளம் போன்றவை பெருக வேண்டும் என்று மந்திரங்கள் முழங்க பிரசாதம் தருவது வழக்கம். அதுபோல், அப்துல் கலாமுக்கு பிரசாதம் தரும் போதும் வழக்கமான முறைப்படி மந்திரம் சொல்லித் தர முற்பட்டார்கள்.
அப்போது அப்துல் கலாம் சொன்னார்: தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி பிரசாதம் வழங்க வேண்டாம். இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களும் பெற வேண்டும் என்று வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்.” அர்ச்சர்கள் உட்பட அனைவரும் வியந்து போனார்கள்.
ஏழுமலையானே வியப்புக்குரியவன் தான். எப்படி? ‘பகவான் பரம தயாளன்; எளியவன் என்றால், தரையில் அல்லவா இருக்க வேண்டும்! இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வரச் சொல்லலாமா’ என்றார் ஓர் அன்பர். அதற்கு, ஸ்வாமி தேசிகன் சொல்வார்: பகவான் பரம தயாளன் என்பதற்கு, அவன் மலைமீது நிற்பது தான் சாட்சி. நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி பராமரிக்கும் விவசாயி, பரண் கட்டி அதன் மேலிருந்து காவல் இருப்பது ஏன்? அப்போதுதான், நெடுந்தூரம் அவன் பார்வைக்கு உட்படும். பயிர்களை பாதுகாக்க முடியும். அப்படி, அனைவரையும் பாதுகாக்கத்தான், பகவான் மலைமீது ஓய்வே இல்லாமல் நின்று கொண்டிருக்கிறான்.”
எவ்வளவு பெரிய கருணை இது! அந்தக் கருணை வெள்ளம் அனைவரையும் எப்போதும் காக்கட்டும். என்றும் நம் மனம் அவனைச் சரணடையட்டும்.
(நன்றி – balhanuman.wordpress.com | தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
==================================================================
Also check from our archives:
ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!
ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
==================================================================
[END]
இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமை இக்காலத்தில் திரு.கலாமிற்கு மட்டுமே சேரும் என்று இப்பதிவை படித்ததும் தோன்றுகிறது. மத ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் ஒரு அரசியல் துறவி திரு.கலாம் அவர்கள். திரு.சுவாமிநாதன் அவர்கள் மூலம் சனிக்கிழமையன்று திருப்பதியை தரிசித்த திருப்தி. கூடவே திருப்பதியில் திரு.கலாம் அவர்கள் வெளிப்படுத்திய மிக உயர்ந்த மாண்பு எனக்கு இன்னோரு கபீர்தாசராக அவரை நினைக்க வைக்கிறது. நன்றி சுந்தர்ஜி
இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன் கலாம் அய்யா அவர்கள். அய்யாவை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. அவர் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது சிவப்புக் கம்பள வரவேற்ப்பை மறுத்தவர்…ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள் என்று உணர்த்தியவர்.
—
அவரின் :அக்னிச்சிறகுகள்” நூல் ஒரு தன்னம்பிக்கைச் சுரங்கம்..ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகன் ஆன பின்பும் அவரின் கடும் உழைப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..திருமலையில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் சிறந்த பண்பாளர் என்பதற்கு சான்று…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
இவரை போன்ற ஒரு தலைவர் ஆளும் காலத்தில் நாம் வாழ்வதே மிக பெரிய பாக்கியம்
அந்த ஏழுமலையான் கருணையுடன் திரு. அப்துல் கலாம் அவர்களை மீண்டும் நம்முடைய இந்தியாவின் ஜனாதிபதியாகவும், திரு. நரேந்திர மோடி அவர்களை இந்தியாவின் பிரதமராகவும் ஆக்கி இந்தத் திருநாட்டை மெருகேற்ற வேண்டும் என எல்லோருடன் சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்.
சுந்தர் சார்,
திரு ஜெயாகுமார் சொல்லியது போல் திரு அபதுல் கலாம் அவர்கள் மீண்டும் இந்தியாவின் குடியரசு தலைவராக வந்தால் நம் நட்டிருக்கு நல்லது.
நன்றியுடன் அருண்.
வியப்பும் சிலிர்ப்பும் அளிக்ககூடிய அருமையான பதிவு !!!
திரு அப்துல் கலாம் அவர்களைப்பற்றி பல செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம் – ஆனால் அவர் திருமலைக்கு விஜயம் செய்ததும் இப்படி ஒரு மகத்தான செயலை செய்து நம்மையும் திருமலை கோவிலில் இருப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தும் அதே வேலையில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய மனசாட்சிபடி நடக்கக்கூடிய நெறிமுறைகளை நமக்காக அவரே முன்னின்று வழி காட்டி சென்றிருக்கிறார் !!!
பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது நாடு முன்னேறவும் நம் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தமது எண்ணங்களை நமக்காகவும் வருங்கால தலைமுறைக்காகவும் இதுவரை வழங்கி மேலும் வழங்க காத்திருக்கும் திரு அப்துல் கலாம் அவர்கள் மனநிம்மதியோடும் , ஆரோக்கியத்தோடும் , எல்லையில்லா மகிழ்ச்சியோடும் தம் குடும்பத்தாருடன் நலமுடன் வாழ அந்த பரம்பொருள் நித்தம் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் துணை நின்று அருள் புரிவாராக !!!
மனிதருள் நல்ல மாணிக்கம் ஆகும் அவர் பற்றி சொல்வத்ருகு வார்த்தை இல்லை.
இப்படிப்பட்ட தலைவர்கள் வாழும் காலத்தில், நாமும் வாழ்கிறோம் என்று நாம் பெருமை படவேண்டும், அதுமட்டுமன்றி இதை பார்த்து, படித்து மதவெறி பிடித்தவர்கள் எம்மதமும் சம்மதம் என்ற நிலைக்கு வரவேண்டும்.
திரு கலாமின் நினைவாக இந்த பதிவை நான் பார்க்க நேர்ந்ததே நான் செய்த பாக்கியம். அவர் திருப்பதியில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இறைவனை தரிசித்ததை படிக்கும் பொழுது இப்பொழுது அவர் நம்மிடம் இல்லையே என்று மனம் மிகுந்த வேதனை அடைகிறது….
பெருமாளுக்கு உகந்த நாளான ஆஷாட சுக்ல ஏகாதசியில் இறைவன் அவரை வைகுண்டத்திற்கு தன்னுடன் அழைத்து சென்று விட்டார். படிக்க படிக்க கண்களில் கண்ணீர் கசிகிறது …… நம் எல்லோருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்த சரித்திர நாயகன் இல்லாமல் இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்து விட்டது. அவர் விட்டு சென்ற கனவை நனவாக்குவோம் ………
கலாமின் புகழ் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்….
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர்.இந்த பதிவை பார்கதற்கு என்னை மன்னித்து விடுங்கள் சுந்தர்.தன் சீரிய குணத்தாலே எல்லோர் மனிதிலும் உயர்ந்து நிற்கிறார்.இறைவனே வந்து உங்களை அழைத்து சென்று இருபார்.சென்றுவாருங்கள் அய்யா நன்றி .
திரு கலாம் அவர்கள் நம் நாட்டிற்கு கிடைத்த அரும் பொக்கிஷம். இதற்கு முன்னரும் இவரை போல் வாழ்ந்தவர் யாருமில்லை. இனி பிறக்கபோவதுமில்லை. இன்றைய அரசியல்வாதிகள் இனியாவது இவரை பின்பற்றட்டும். அவர் சொன்னது போலவே சரித்திரமாகவே மாறி விட்டார். அவர் பிறப்பில்லா பெரு வாழ்வு அடைய எம் இறைவனை வேண்டி துதிக்கின்றேன்.