ஒரு வார்த்தை கூட தேவையற்ற வார்த்தை அல்ல. எனவே சற்று பெரிதாக உள்ள பதிலைக் கூட ஆழ்ந்து படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ரைட்மந்த்ரா சார்பாக அஞ்சலி கூட்டம்!
இன்று மாலை 5.00 மணிக்கு நமது RightMantra.com மேற்கு மாம்பலம் அலுவலகத்தில் திரு.அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு தீபம் ஏற்றி வைத்து அஞ்சலி கூட்டம் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் கலந்துகொண்டு அன்னாரை கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று மாலை நடைபெறவுள்ள அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள் மாலை சரியாக 5.00 மணிக்கு அவரவர் இடத்தில் ஒரு ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவர் ஏற்கனவே இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார். எனவே நாம் பிரார்த்தனை செய்யவேண்டியது அவருக்காக அல்ல. அவருடைய கனவுகளுக்காக. “திரு.அப்துல் கலாம் நமது தேசம் குறித்தும் நமது இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் குறித்தும் கண்ட கனவுகள் நனவாகவேண்டும்” என்பதே நமது பிரார்த்தனையாக இருக்கட்டும்.
Rightmantra Sundar, Rightmantra.com
E : editor@rightmantra.com | M : 9840169215
விகடன் மேடை – திரு.அப்துல் கலாம்
”எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?”
பத்மா சபேசன், சென்னை.
”நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, என் லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்!”
”2020-ல் இந்தியா வல்லரசாக உருவாகும் என்று கூறியிருந்தீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்… அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறதா?”
எஸ்.சையது முகமது, சென்னை-93.
”ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன். உலகமயமாக்கலில், வல்லரசு என்ற சித்தாந்தம் என்றோ போய்விட்டது. இந்தியா 2020 -க்குள் சமூக, பொருளாதாரத்தில், அமைதியில், பாதுகாப்பில், வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்பதுதான் நான் வலியுறுத்தும் கருத்து. 60 கோடி இளைய சமுதாயத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ‘என்னால் முடியும்’ என்று அவர்கள் நினைப்பார்களேயானால், நம்மால் முடியும், இந்தியாவால் கண்டிப்பாக முடியும்! மன எழுச்சிகொண்ட இளைய சமுதாயம் இந்தியாவை வளர்ந்த நாடாக்கிக் காட்டும்!”
”நம்பிக்கைத் துரோகிகளை என்ன செய்யலாம்?”
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
”இது ஒரு நல்ல கேள்வி. என் பதில்… மன்னிப்பு, மன்னிப்பு, மன்னிப்பு. அது இரண்டு நல்ல மனிதர்களை உருவாக்கும்!”
”மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது சுதந்திரமாக இருந்தீர்களா?”
எஸ்.சையது முகமது, சென்னை-93.
”குடியரசுத் தலைவரின் சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை. அரசியல் சட்ட வரம்புக்குள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் யாரும் தலையிடவில்லை. கேபினெட் அங்கீகரித்த ‘Office of Profit bill’ அரசியல் சட்டத்தின் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று நாடாளுமன்றத்துக்குத் திருப்பி அனுப்ப முடிந்ததே! அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும் என்று நான் கூறிய ஆலோசனைகள், மத்திய அரசால் ஏற்கப்பட்டன!”
”உலக அரங்கில் இந்திய ஜனாதிபதிக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லையே! அந்தப் பதவி இந்தியாவுக்குத் தேவைதானா?”
இ.ராமஜெயம், ராணிப்பேட்டை.
”ஜனாதிபதி பதவியை வகிப்பவரின் தொலைநோக்குப் பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், உயர்ந்த எண்ணமும், செயல்களும்தான், அந்த நாட்டுக்கும், அந்தப் பதவிக்கும் பெருமை சேர்க்கும். ஒவ்வொரு ஜனாதி பதியும், அவர்களின் தனிச் சிறப்பால் நாட்டுக்குப் பெருமை சேர்த்து உள்ளனர்!”
”நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!”
பொன்னி, கோவை.
”இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!”
”உலக அரசியல் தலைவர்களில் தங்களைப் பிரமிக்கவைத்தவர் யார்?”
”தென் ஆப்பிரிக்காவின் நிற வெறியை எதிர்த்துப் போராடி, அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியும், 26 வருடம் தனிமைச் சிறையில் ராபின் தீவில் இருந்து, தன் பொறுமை யால், மனோதிடத்தால், பதவிக்கு வந்து, தென் ஆப்பிரிக்காவில் அடிமை நிலைக்குக் காரண மானவர்களை மன்னித்து, அவர்களையும் அந்த நாட்டுக் குடிமக்களாக அங்கீகரித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களும்தான் என்னைப் பிரமிக்க வைத்த உலக அரசியல் தலைவர்கள்!”
”சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?”
ஆர்.சுரேஷ், துறையூர்-10.
”நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!”
”தற்போதைய நிலையில் ‘இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?”
ச.கோபிநாத், சேலம்.
”சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்… ஜனநாயகம்… ஜனநாயகம்!”
”அணுகுண்டு, ராக்கெட் எல்லாம் உருவாக்கி, இந்தியாவைத் தலை நிமிரவைத்த உங்களால், ஒரு சிறந்த அரசியல் தலைவரை தமிழ்நாட்டுக்காக உருவாக்கித் தர முடியுமா? இந்தக் கேள்வியின் வலியை, ஆதங்கத்தை உணர முடிகிறதா?”
மாணிக்கம்.வி, சிங்கப்பூர்.
”இதுவரை கடந்த 12 ஆண்டுகளில், நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்துவைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில், ‘எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சிப் பணிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். சில நூறு பேர் கைகளை உயர்த்தினார்கள். ‘எத்தனை பேர் சந்திரனுக்கும் வியாழன் கிரகத்துக்கும்செல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். அனைவரும் கை உயர்த்தினார்கள். ‘எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். 50 பேர் ‘நாங்கள் நல்ல அரசியல் தலைவர்கள் ஆக விரும்புகிறோம்!’ என்றார் கள். அதில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம், ‘நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு மாணவன், ‘இந்தியாவை 10 ஆண்டுகளுக்குள், வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன்’ என்று சொன்னான். ஒரு மாணவி, ‘லஞ்சத்தை ஒழிப்பேன்’ என்று சொன்னாள். இன்னொரு மாணவன், ‘இளைய சமுதாயத்துக்கு ‘என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து, ‘நம்மால் முடியும்’ என்ற ஒருமித்த மனப்பான்மையை வளர்ப்பேன். அப்படி என்றால், இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்!’ என்று கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன். எனவே, தகுதியான நல்ல அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க… அதிகரிக்க, நல்ல வளர்ச்சியோடு கூடிய… தொலைநோக்கோடு கூடிய அரசியல் மாற்றம் வரும்!”
”சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவது எனக்குப் பிடிக்கவே இல்லை. குறைந்த பட்சம் இந்தியாவின் வரலாறு, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை, பொருளாதாரம் ஆகியவைபற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் எப்படி ஒரு சமூகத்தை வழி நடத்த முடியும்? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
வாசுகி, திருப்பூர்.
”தொலைநோக்குப் பார்வையும் சமூக விழிப்பு உணர்வும், பொது நல நோக்கத்தோடு சுயநலம் அற்ற நற்பண்புகளும், தன்னைவிடத் தேசம் பெரியது என்ற உணர்வும்கொண்ட, மக்கள் மனோநிலையை அறிந்த நற்பணி செய்யக் கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர் களைத் தேர்ந்தெடுக்கலாம். ஜனநாயக நாட்டில் மக்களின் ஓட்டு உரிமை மிகவும் முக்கியம். அதைச் சரியாகப் பயன்படுத்தினால், அப்படிப்பட்ட தலைவர்கள் நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்!”’
”தற்போதைய அரசியல் சட்டத்தில் ஒரே ஒரு மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ளலாம் என்று இருந்தால், எந்தச் சட்டத்தைத் திருத்துவீர்கள்… ஏன்?”
எஸ்.ரேவதி, கட்டளை.
”ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றால், அதற்கு மாறாகச் செயல்படுவார்கள் என்றால், அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவருவேன்!”
”இந்திய மக்கள்தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் 60 சதவிகி தத்துக்கும் மேல். 35 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை. 2 கோடிக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி வசதி அளிக்க முடியவில்லை. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே வறுமையில் வாடும் மக்கள்தொகை அதிகம். இந்த நிலையில், இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?”
அல்லன், புதுச்சேரி.
” ‘இந்தியா 2020’ என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவிகிதத்துக்கு உயர்த்தி, அதை நிலை நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படிச் செய்யப்படுமேயானால் – வேலைவாய்ப்பைப் பெருக்கி, தனி நபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தைப் பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதி நீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறங்களுக்கு அளித்து, ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளைக் கிராமப்புறம் பெறத் தேவையான பன்முகப் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, வறுமையில் வாடும் மக்களை அதில் இருந்து விடுவித்து, மேல் தட்டுக்குக் கொண்டுவந்து, சமூகப் பொருளாதார வேறுபாடு அற்ற, ஓர் அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும் பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால்… அவசியம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இந்தியா வளர்ந்த நாடாக மாறும்!”
”தாங்கள் சிறுபான்மை இனத்தவராகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டதோ,
சந்தோஷப்பட்டதோ உண்டா?”
தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி.
”அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. அப்படிச் சிந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு முறை டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா மேல்நிலைப் பள்ளி யில் ஹமீலா அக்தர் என்ற மாணவி இதே கேள்வியைக் கேட்டார். அந்த மாணவிக்கு பினாச்சியோ என்ற கவிஞரின் வரிகளில் சொன்ன பதில் என்ன என்றால்…
‘நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்!’
என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை… உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால்… நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்!”
”நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?’
(ஹோஷ்மின், ஆப்பிரிக்கா)
“வாசித்த வரிகளில்
2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.
‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’
‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’
திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!”
”இவர் இல்லையேல் நான் இல்லை’ என்று நீங்கள் நினைக்கும் மனிதர் யார்?”
கு.இரத்தினம், ஆண்டிபட்டி.
”திருவள்ளுவர்!”
”அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?”
கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை.
”நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.
இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், ‘என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். ‘எனக்கு வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.
‘நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, ‘எனக்கு வேண்டும்… எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!”
(நன்றி : ஆனந்த விகடன்)
==================================================================
Also check from our archives:
கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்! வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!
“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”
==================================================================
[END]
ஒவ்வொரு கேள்வியும் பதிலும் ஒவ்வொருவர் மனதையும் ஊடுருவி செல்லும் விதமாக பொட்டில் அடித்தார் போல் உள்ளது . இன்னும் பல காலம் அவர் நம்மிடம் வாழ்ந்து இருக்கலாம். அவர் கண்ட 2020 ஆண்டின் தொலைநோக்கு பார்வை கனவு நனவாகி இருக்கும்.
ஒவ்வொரு கேள்வியும் பதிலும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது.
அவர் மறைந்தாலும் என்றும் அவர் உலக மக்களின் மனதில் வாழ்கிறார்,,,, வானில் நட்சத்ரமாக ஜொலித்து கொண்டு இருப்பார்.
நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.
அவருக்கு 5 மணிக்கு மானசீகமாக அஞ்சலி செலுத்துகிறேன், அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அழகிய பதிவை தொகுத்து அளித்ததற்கு நன்றிகள் பல
இந்த பதிவை அனைத்து இளைஞர்களும் , கல்லூரி மாணவர்களும் படிக்க வேண்டும்.
நன்றி
உமா வெங்கட்
வைர வரிகள்
எத்துனை தீர்கமான சிந்தனை
அதில் தான் எவ்வளவு ஆழமான நம்பிக்கை
ஒவ்வொரு கேள்விக்கும் அவர் தந்தது பதில்கள் அல்ல தீர்வு
தனிஒரு மனிதனாக ஒட்டு மொத்த இளைதளைமுறையினரை சிந்திக்க வைத்து கனவு காண வைத்த ஒப்பற்ற மாமனிதர்
முதுமை உருவத்தில் மட்டுமே
உள்ளத்தில் குழந்தையை போலவும்
எண்ணத்தில் விஞ்(ஞானி) போலவும் வாழ்ந்தவர்
நண்பர்களே
அன்னாரது இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்
அவரது இழப்பை ஈடு செய்ய ஒரே வழி அவர் தம் எண்ணங்களை செயல் வடிவம் பெற செய்து நடைமுறைப்படுத்துவதுதான்
தனி மனித ஒழுக்கத்தையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்தி சென்ற அந்த புனிதரின் கனவை நனவாக்குவோம் அல்லது அதற்கான முயற்சியை செய்வோம்
சுந்தர்ஜி ,
மாண்பு மிகு திரு.அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தியினை கேள்விப்பட்டவுடன் நாம் நம் தளத்தைத்தான் முதலில் நினைத்தோம். ஏன் என்றால் நீங்கள் திரு கலாம் அவர்களை சந்திப்பது உங்கள் இலட்சியம் என அடிக்கடி சொல்வீர்கள்! அவரின் முன்னிலையில் இல்லாவிட்டாலும் மேடையில் அவரின் படத்தின் முன்பாவது உங்கள் லட்சியங்கள் நிறைவு பெறட்டும் ! நல்ல கனவுகள் இப்போது இல்லாவிட்டாலும் வேறு எப்போதோ பலிக்கும் என்று நம்புவோம் !! இறைவனோடு கலந்த திரு.கலாம் அவரது ஆன்மா உங்களை, நம்மை ஆசீர்வதிக்கட்டும் என வேண்டுவோம் ! நன்றி !
வணக்கம் சுந்தர். மிக அருமையான கேள்வி பதில்கள்.வித்தியாசமான கோணத்தில் சிந்தனை.மாற்றம் நம்மிடம் இருந்து வரவேண்டும் என்கிறார். நாம் தலைவர்கள் இடத்தில இருந்து எதிர் பார்க்கிறோம்.இதுதான் மேலோட்டமான சிந்தனைக்கும்,ஆழ்ந்த சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம் போலும் .பகிரந்தற்கு நன்றி.