Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி!

பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி!

print
ன்று மகத்துவம் மிக்க தை அமாவாசை மட்டும் அல்ல…. பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு முழு அமாவாசையான இன்று முழு நிலவை தனது தாடங்கத்தை (காதணி) வீசி அன்னை உமையவள் தோற்றுவித்த நாள்! நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு நாள்!!

தூய பக்தர்களுக்காக நம் அன்னை எதையும் செய்வாள்… என்பதை உலகிற்கு உணர்த்திய நாள் இன்று. பக்தி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இந்த நிகழ்வு நடைபெற்றது எப்போதோ அல்ல… 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில். (அது குறித்த ஆதாரம் கட்டுரையில் பின்னே வருகிறது.)

Thirukkadavur Temple_

இந்த பதிவை பொருத்தவரை நாம் சற்று வித்தியாசமாக அளிக்க எண்ணியிருந்தோம். எனவே திருக்கடையூர் கோவிலின் உதவியை நாடினோம். திருக்கடையூரின் சிறப்பு, அன்னை முழு நிலவை தோற்றுவித்த நிகழ்ச்சி, அன்னையின் அருளை பெற இன்று நாம் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, ஆலயத்தின் தலைமை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களின் மகள் சந்திரகலா மகாலிங்கம் அவர்கள் தமது தந்தையாரிடம் கேட்டு நமக்கு அளித்த தகவல்களுடன் சேர்த்து உருவாக்கப்பட்டதே இந்த பதிவு. திருக்கடையூரிலிருந்தே தகவல்கள் கிடைக்கப்பெற்று தயார் செய்த பதிவு என்பதால் இதை படிக்கும் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைப்பதாக.

பதிவின் இறுதியில் கூறப்பட்டுள்ளபடி செய்யுங்கள். அன்னை அபிராமியின் அருளை ‘தை அமாவாசை’ நன்னாளாம் இன்று பரிபூரணமாக பெறுங்கள்!!

========================================================

“திருக்கடையூரில் தை அமாவாசை” – அன்னையின் அருளை பெற இன்று நாம் செய்யவேண்டியது என்ன?

ஆலயத்தின் தலைமை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார்கூறும் தகவல்கள்!

தருமபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் தை அமாவசை வைபவத்தை முன்னிட்டு அதன் குறிப்பு.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்த கலசதால் பரஸ்பரம் கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் சிவன் அமிர்த கலசத்தை லிங்கமாக உருக்கொண்டு நின்றார். விஷ்ணு அமிர்த கலசத்தை திரும்ப பெறும் பிரயத்தனத்தில் அம்பிகை தவத்தில் இருக்கும் நிலையில் சிவனை சமாதானம் செய்யும் பொருட்டு, அம்பிகையை மனதில் தியானித்து தன்னுடைய கழுத்தில் உள்ள ஆபரணத்தை கழற்றி வைக்க அது அபிராமி அம்மையாக தோன்றி நின்றாள்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை, விஷ்ணுவின் உத்தேசம் நிறைவேறும் பொருட்டு அதி அற்புத சுந்தரியாக சௌந்தரியத்தின் அர்த்தமாக வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத அளவு பிரம்மத்தின் முழு அர்த்தமாக நின்றாள்.

சிவன் தனது இடபாகம் நின்ற நாயகியின் திவ்ய ரூபம் கண்டு பிரேமையில் ஆழ்ந்து போக லிங்கமானது திரும்பவும் அமிர்த கலசமாக மாறியது.

இதுவே அபிராமி தோன்றிய வரலாறாக திருக்கடவூர் புராணம் கூறுகிறது. அதன் காரணமாகவே அம்மன் சன்னதியும் சுவாமி சன்னதியும். எதிர் எதிரே காதல் கொண்ட கோலத்தில் உள்ளது.

Abirami Ambal

திருக்கடையூருக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.

திருமால், பிரம்மன், எமன், சப்தகன்னியர், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்கை உட்பட பலர் வழிபட்ட தலம். காவிரியின் தென்கரைத் தலங்களில் இது 47&வது தலம்.

இந்தத் திருத்தலம் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்றது. தவிர அருணகிரியார், அபிராமி பட்டர் ஆகியோரும் பாடி இருக்கிறார்கள்.

63 நாயன்மார்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களான காரி நாயனாரும் குங்கிலியக் கலய நாயனாரும் இங்கு வாழ்ந்து முக்தி அடைந்திருக்கிறார்கள்.

சிவபெருமானின் அட்டவீரட்டான தலங்களில் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த தலம் திருக்கடையூர் ஆகும். எம சம்ஹாரம் செய்த நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 18 நாள் திருவிழாவாக கோலாகலமாக நடக்கும்.

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் அமைந்திருப்பது போலவே விநாயகருக்கு உண்டான அறுபடை வீடுகளில் இது மூன்றாவது படை வீடு. கள்ளவாரண பிள்ளையார் என்று அழைக்கப்படும் இந்த விநாயகர், துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தியபடி தரிசனம் தருகிறார்.

DSC_1189

‘சிதம்பர ரகசியம்’ என்று சொல்வது போல் ‘திருக்கடையூர் ரகசியம்’ என்கிற பிரயோகமும் உண்டு. திருக்கடையூரில் ஸ்வாமிக்கு வலப்புற மதிலில் ஒரு யந்திரத் தகடு உள்ளது. இதை திருக்கடையூர் ரகசியம் என்பர். முதலில், அகத்தியர் வழிபட்ட பாபஹரேஸ்வரரையும் பின் அமிர்தகடேஸ்வரரையும் அடுத்து யந்திரத் தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

ஆதிசக்தியின் அவதாரமான அபிராமி அம்மையின் அருள் இந்த கலியுகத்தில் நடந்தது வரலாற்று சான்று.

தஞ்சை மாநகரை ஆண்ட சரபோஜி மன்னன். அன்னை அபிராமியின் பரம பக்தர். ஒவொரு அமாவாசை ற்றும் பௌர்ணமி திதிகளில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபடாமல் உணவு கூட உட்கொள்ள மாட்டார். அதைப்போல ஒரு மகர மாத அம்மாவசை அன்று தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருக்கடவூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அதை கேள்வி உற்ற கோவில் நிர்வாகி மற்றும் சிப்பந்திகள் பரபரப்பு அடைந்தனர். ஏனெனில் திருக்கடவூரில் மடவிளாக தெருவில் வசித்து வந்த சுப்பிரமணி பட்டர் அம்பிகையின்

தீவிர பக்தர் ஏன் அம்மன் மீது கொண்ட பக்தி பித்தர் என்று கூட சொல்லலாம் அவர் அம்மன் எதிரே அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தால்

உலகை எல்லாம் மறந்து விடுவார் நேரம் போவது தெரியாமல் அமர்ந்து இருப்பார். அன்றும் அதை போல அம்மன் எதிரே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். சுப்ரமணிய பட்டர். அவரை எழுப்பவும் முடியாமல் எல்லாரும் கலங்கி போய் நிற்க அரசரும் வந்தே விட்டார். சிறப்பு பூஜை நடக்க ஆரம்பித்தது, அரசர் பட்டர் அமர்ந்து இருந்ததை பார்த்தும் பூஜை முடியும் வரை காத்திருந்து விட்டு பிறகு இவர் யார் என்று மற்றவரிடம் கேட்க அவரை பிடிக்காதவர்கள் பட்டரை பற்றி தவறாக சொல்லி விட்டனர். இவர் அம்மன் பெயரை சொல்லி ஏமாற்றுபவர் என்றும் போதைக்கு அடிமை ஆனவர் என்றும் அதை மறைக்கவே அம்மன் பக்தர் போல நடிக்கிறார் என்றும் சொன்னார்கள்.

அரசர் அவரை சோதிக்க தயார் ஆனார். பட்டரே என்று பலதடவை வினவி பின்பு அவரிடம் இன்று என்ன திதி என்று கேட்டார் அதற்கு அம்மன் முகத்தை அகக்கண்ணில் பார்த்து பரவசம் அடைந்து கொண்டு இருந்த பட்டர் சட்டென்று “இன்று பௌர்ணமி திதி போடா” என்று சொல்லி தியானத்தில் ஆழ்ந்து விட்டார் அரசர் சினம் கொண்டு “அமாவசை திதியான இன்று பௌர்ணமி என்று கூறி உள்ளீர்கள்

இன்று முழுநிலவு தோன்றவில்லை எனில் மரண தண்டனை விதிப்பேன்” என்று கூறி சென்று விட்டார்.

எல்லோரும் அதிர்ந்து விட்டனர். பட்டர் மீது பாசம் கொண்ட சிலர் அவரை எழுப்பி “அய்யா என்ன காரியம் செய்து விட்டீர்? இன்று திதியை மாற்றி சொல்லியது மட்டும் அல்லாது அரசரை போடா என்று வேறு விளித்து விட்டீர்களே? அரசர் இன்று முழுநிலவு தோன்றவில்லை னில் உமக்கு மரண தண்டனை அளித்து உள்ளார்” என்று சொல்லவும் பட்டர் சிறிது கண்ணை மூடி தியானித்து “எல்லாம் அவள் திருவிளையாடல் . அவள் சொல்ல விரும்பியதை நான் சொன்னேன். எனக்கு இந்த தண்டனை அவள் விரும்பியதாக இருந்தால் அதையும் ஏற்று கொள்வேன்

ஆனால் அன்னையை பாடாமல் மட்டும் இருக்கமாட்டேன்” என்று அன்னை அபிராமி பற்றி அந்தாதி பாட ஆரம்பித்தார். அதுவே அபிராமி அந்தாதி.

அவர் பாடிய 79 வது பாடல் ‘விழிக்கே அருளுண்டு’ என்று தொடங்கும் பாடல் பாடி முடித்தவுடன் அன்னை ஆதிபராசக்தி காட்சி கொடுத்து தனது வலது காதில் உள்ள தாடங்கத்தை (காதணி) எடுத்து வானத்தில் எறிந்து அதை முழு நிலவாக மாற்றினாள். உலகம் வியந்தது. சரபோஜி மன்னர் பட்டரை வணங்கி மன்னிப்பு கேட்டு அந்தாதியை முழுவதுமாக முடிக்குமாறும் கேட்டுகொண்டார். பின்னர் சன்மானங்கள் எல்லாம் வழங்கி சிறப்பு செய்தார் என்பது வரலாறு. அதற்குச் சான்றாக உரிமை செப்புப் பட்டயம் ஒன்று, அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

இந்த அற்புதமான தினம் நாளை 08.02.2016 அன்று திருக்கடவூரில் கொண்டாடப்படுகிறது. தை அமாவசை தினமான நாளை முழுநிலவு தோன்றிய நிகழ்ச்சி செய்முறையோடு மற்றும் அபிராமி அம்மை பாராயாணம் விளக்கு பூஜை நடை பெறும். திருக்கடவூர் சுற்றுவட்டார கிராமவாசிகள் பால் குடம் எடுத்து பிரார்த்தனை நிறைவேற்றுவார்கள். தை அமாவாசையையொட்டி அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நவரத்ன அங்கி அணிவிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதியை ஒவ்வொரு பாடலாக பாட சிவாச்சாரியார் ஒவ்வொரு பாடலுக்கும் நிவேதனத்துடன் தீபாராதனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அபிராமி பட்டர் பாடிய 76வது பாடல் பாடும்போது விளக்குகள் அணைக்கப்பட்டு மின் விளக்கால் அமைக்கப்பட்ட முழு நிலவு காட்டப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் அபிராமி அந்தாதி பாராயணம் பக்த கோடிகளால் செய்யப்பட்டு முழுநிலவு காட்சி நடைபெறும். அம்மனுக்கு நவரத்தின அங்கி அணிவிக்க பட்டு அற்புதமாக ஜொலிப்பாள்…. அபிராமி அன்னை தனது அண்ணன் மகாவிஷ்ணுவின் ஆபரணம் மூலம் தோன்றியவள் என்பதால் விஷ்ணுவின் அம்சம் அந்த ஏழுமலையானின் சக்தி இவளுக்கு உண்டு. ஸ்ரீசக்ர மாதாவாக நாளை காட்சி அளிப்பாள்.

Abirami Amman_

ன்றைய தினம் திருக்கடவூர் வர இயலாதவர்கள் தன் இல்லத்திலேயே அபிராமி அம்மையின் படம் வைத்து விளக்கு ஏற்றி வைத்து அபிராமி அந்தாதியை வாசித்தால்…

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்

இந்த பதினாறு செல்வங்களும் நிச்சயம் நமக்கு அருள்வாள் அபிராமி அன்னை!

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

அபிராமி அந்தாதியின் சிறப்பு

அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி ‘உதிக்கின்ற’ என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.

உதாரணத்திற்கு முதல் இரண்டு பாடல்களையும் பாருங்கள்… துணையும் என்று முதல் பாடல் முடிந்து அடுத்த பாடல் துணையே என்று துவங்குகிறது.

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

‘அபிராமி அந்தாதி’ – கவியரசு கண்ணதாசனின் விளக்கவுரையுடன்…
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_03.html

திருக்கடையூர் கோவிலுக்கு செல்லவும் பூஜை மற்றும் இதர விபரங்களுக்கும் பார்க்க : www.thirukkadavoor.com

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check…

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

========================================================

[END]

3 thoughts on “பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி!

  1. சமீபத்தில் அபிராமி அந்தாதி பாடல் புத்தகம் என் கண்ணில் பட்டது, அதில் மூன்று பாடல்களை தினமும் நான் பாடி வருகிறேன். என்று நான் படிக்க ஆரம்பிதேனோ அன்றிலிருந்து என் பார்வையில் திருக்கடவூர் என்ற சொல் அடிக்கடி படுகிறது. அம்மாவை ஒரு நாள் நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆசை மனதில் அதிகரிதுள்ளது. இன்று காலை குமரி பகவதி அம்மனை தரிசனம் செய்தேன் எனக்கு இன்று என்ன சிறப்பு என்று தெரியாது. உங்கள் பதிவு அதை எனக்கு இப்பொழுது தெளிவு படுத்தியது ,அண்ணா.கூடிய சீக்கிரம் திருக்கடவூர் சென்று வருவேன் என்று உங்கள் பதிவு எனக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. உங்கள் உதவி பெற நான் எத்தனை பிறவிகள் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை. உங்களுக்கு இறைவன் எல்லா செல்வங்களும் தந்து உதவ வேண்டும் என்று மனதார ப்ரார்த்திப்பேன் நன்றி….

  2. அபிராமி பட்டர் பற்றிய கதையை தங்கள் நடையில் படிப்பது மிகவும் நன்றாக உள்ளது. தாங்களே ஒரு உழவாரப் பணியில், அபிராமி அந்தாதி புத்தகம் பரிசாக பணியில் கலந்து கொண்ட வாசகர்களுக்கு பரிசாக கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது
    இந்த பதிவின் மூலம் திருக்கடையூர் ரகசியம் பற்றி தெரிந்து கொண்டேன். அபிராமியின் படம் கொள்ளை அழகு. மெய் சிலிர்க்கும் பதிவு இது.
    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  3. ‘எங்கோ யாரோ ஒரு ஜீவனின் தேடலுக்கு என் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு’ என்று நீங்கள அடிக்கடி சொல்வீர்கள். அது உண்மை என்பது நாதன் அவர்களின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது.

    திருக்கடையூர் போன்ற கோவில்கள் எல்லாம் நம் பாரம்பரியத்தின் பொக்கிஷங்கள்.

    அன்னை தாடங்கத்தை வீசி முழு நிலவை தோற்றுவித்த சம்பவம் ஏற்கனவே எனக்கு தெரிந்திருந்தளும், உங்கள் நடையில் நமது தலத்தில் படிப்பது இனிமையான அனுபவம்.

    நன்றி

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *