Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
துவாரகைக்கு அருகே உள்ள டாங்கோர் என்னும் சிற்றூரில் ராமதாஸர் என்கிற பக்தர் ஒருவர் இருந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார் அவர். தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பியதும் வீடு திரும்பிவிடுவார். “இவர் நம் வீட்டுக்கு வரமாட்டாரா…!” என்று மக்கள் ஏங்கி தவிப்பார்கள். அந்தளவு இனிமையாக பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்வார்.

பெயர் தான் ராமதாஸரே தவிர துவாரகையில் உள்ள கிருஷ்ணன் மீது பெரும் பக்தி பூண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட ஏகாதசிக்கு துவாரகை சென்று, தமது கையால் தொடுத்த துளசி மாலையை துவாரகா நாதனுக்கு சாத்தி, துவாதசி அன்று அதிதிகளுக்கு அன்னமிட்டுவிட்டு திரும்புவார். பல ஆண்டுகள் இவ்வாறு செய்து வந்தார்.

அது மட்டுமல்ல…  மாத ஏகாதசியின் போதும் உபவாசமிருந்து பூஜைகள் செய்து மறுநாள் ஒரு அதிதிக்கேனும் உணவிடாமல் விரதத்தை பூர்த்தி செய்யமாட்டார். இரவு நேரங்களில் மக்களுக்கு பாகவதக் கதைகளை சொல்வார்.

"

இப்படியே நாட்கள் சென்றன. முதுமையும் வந்தது. மிகவும் சிரமப்பட்டு துவாரகைக்கு சென்று, “கண்ணா இனி என்னால் வரமுடியமா முடியாதா என்று தெரியாது. முதுமை காரணமாக அடுத்த முறை நான் வரமுடியாது போனால் நீயே எனது ஊருக்கே வந்து எனக்கு தரிசனம் தரவேண்டும்” என்று கண்ணனிடம் மன்றாடினார்.

Lord Krishna

அடுத்த நொடி, சங்கு சக்ரதாரியாய் கையில் கௌஸ்துபம் மற்றும் கமலத்தோடு அவர் முன் தோன்றிய பரந்தாமன், “வத்ஸ! கலங்காதே… நெடு நாட்களாக என்னையே வழிபடுகிறாய். நான் உன்னை கைவிடமாட்டேன். என்னை உன்  ஊருக்கு அழைத்துச் செல்!” என்றான்.

பரவசத்தோடு பக்தவத்ஸலனை தொழுத ராமதாஸர், கலங்கியபடி “ஐயனே… நானோ ஒரு பரம ஏழை. நான் எப்படி உங்களை அழைத்துச் செல்வேன்?” என்று கூறி கண்கலங்கினார்.

“கவலைப்படாதே. இரவு ஆலயத்திற்கு முன்பாக ஒரு தேர் வரும். அதில் என்னை ஏற்றிச் செல்” என்றான்.

இறைவனை நாம் அழைத்துச் சென்றால் நாம் திருடிக்கொண்டு செல்வதாக அல்லவா நம்மை பிடித்து தண்டிப்பார்கள் என்று ராமதாஸர், மனம் கலங்கியபடி நின்றுக்கொண்டிருக்க, இறைவன் மறைந்துவிட்டான்.

இரவு பொழுது வந்தது. பகவான் சொன்னபடி பொன்னாலான தேர் ஒன்று கோவிலுக்கு அருகே வந்து நின்றது. ராமதாஸரும் பகவானின்  விக்ரகத்தை தூக்கி தேரில் ஏற்றி தனது மடி மீது கண்ணன் தலை படுமாறு வைத்துக்கொண்டார்.

தேர் புறப்பட்டு புயல் வேகத்தில் டாங்கோர் நகரை அடைந்தது. இவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மாயமாய் மறைந்தது.

மறுநாள் காலை கோவிலுக்கு வந்து சன்னதியை திறந்த அர்ச்சகர்கள் அங்கு இறைவனின் விக்ரகம் இல்லாததை கண்டு திகைத்தனர்.

அனைவரிடமும் விசாரித்தபோது, கடைசியாக இங்கு நெடுநேரம் இருந்தது ராமதாஸர் தான் என்று புலனானது. “அடுத்த முறை நான் உன்னை எப்படி தரிசிப்பேன்… அடுத்த முறை நான் உன்னை எப்படி தரிசிப்பேன்…?” என்று அவர் தான் புலம்பிக்கொண்டிருந்தார். எனவே அவர் தான் விக்ரகத்தை கவர்ந்து சென்றிருக்கவேண்டும் என்று முடிவு செய்து அர்ச்சகர்களும் துவாரகை ஊர் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் டாங்கோர் விரைந்தனர்.

இங்கே தன்னைத் தேடி ஒரு பெருங்கூட்டமே துவாரகையிலிருந்து வந்து கொண்டிருப்பது ராமதாஸருக்கு தெரிந்துவிட்டது. “நான் தான் சொன்னேனே… எனக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிடுவார்கள் என்று… இப்போது என்ன செய்வது? சொல் கிருஷ்ணா சொல்” என்று விக்ரகத்தின் காலை பிடித்துக்கொண்டு அலறினார்.

பகவான் அசையவேயில்லை.

ஒரு வழியாக தன்னை தேற்றிக்கொண்டு, தனது வீட்டு புழக்கடையில் இருந்த கிணற்றுக்குள் பகவானின் சிலையை போட்டுவிட்டார்.

இவரது வீட்டை அடைந்த துவாரகை ஊர் மக்களும் பிரமுகர்களும் இவரிடம் பலவாறு விசாரணை செய்தனர். இவர் ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிட்டார்.  இருப்பினும் இவரது வார்த்தையை நம்பாமல் வீடு முழுதும் சோதனையிட்டனர்.

கிணற்றுக்கு அருகே ஒரு சில துளசி தளங்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து, கிணற்றுக்குள் ராமதாஸர் விக்ரகத்தை மறைத்து வைத்திருக்கவேண்டும் என்று கருதி, கிணற்றுக்குள் சிலர் இறங்கி தேடினர். கடைசியில் பகவானை கண்டுபிடித்துவிட்டனர்.

ராமதாஸரிடம் “உனக்கு ராஜ தண்டனை உண்டு. விரைவில் காவலர்கள் வருவார்கள் உன்னை கைது செய்ய…” என்று கோபமாக கூறிவிட்டு விக்ரகத்துடன் துவாரகை புறப்பட்டனர்.

ராமதாஸர் கதறி அழுதார்.

“விக்ரகத்தின் எடைக்கு எடை வேண்டுமானால் பொன் தருகிறேன். என் கிருஷ்ணனை என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்றார்.

“நீயோ ஒரு பரதேசி. உன்னால் இதற்கு எடைக்கு எடை பொன்னை எப்படி தரமுடியும்? திருடியதோடு மட்டுமல்லாமல் எங்களிடம் விளையாட வேறு செய்கிறாயா?” சீறினர் துவாரகாபுரி மக்கள்.

"

“எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்” என்று கூறி மன்றாடினார் ராமதாஸர்.

‘ராமதாஸர் எப்படியும் தோற்கப்போகிறார். அதையும் பார்த்துவிட்டு போவோமே’ என்று கருதிய மக்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதற்குள் ‘ராமதாஸர் துவாரகா கிருஷ்ணரின் எடைக்கு எடைக்கு பொன் தரப்போகிறார்’ என்ற விஷயம் ஊர் முழுதும் பரவி அனைவரும் இவர் வீட்டு முன் கூடிவிட்டனர்.

துலாபாரம் அமைக்கப்பட்டது.

ஒரு தட்டில் பகவானின் விக்ரகத்தை இருவர் சுமந்து வந்து துலாபாரத்தில் வைத்தது தான் தாமதம் அடுத்த நிமிடம் தட்டு கீழே சென்றது. மற்றொரு தட்டு மேலே எழும்பியது.

இங்கு “இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்ற தாஸர், தனது மனைவியின் மூக்குத்தி திருகாணியுடன் வந்தார்.

கையிலே ஒரு வளையல் அளவு கூட எதுவும் பொன் இல்லாதது கண்டு அனைவரும் நகைத்தனர். “தம்பிடிக்கு வழியில்லை இதில் பகவானின் எடைக்கு எடை பொன் தருகிறானாம்…” என்று ஏளனம் செய்தனர்.

ராமதாஸரோ சிறிதும் கலங்காமல், “ஹரே கிருஷ்ணா… துவாரகாபுரி நாதா… ‘இனி உன்னுடனே இருப்பேன்’ என்று சொன்ன உன் வாக்கு பொய்க்கலமா?” என்று கூறி பரந்தாமனை துதித்தபடி திருகாணியை மற்றொரு தட்டில் வைக்க, என்ன அதிசயம்… திருகாணி வைக்கப்பட்ட தட்டு கீழே இறங்கி, இரண்டு தட்டுக்களும் ஒரே நேர்கோட்டில் நின்றது.

அனைவரும் அதிசயத்தை பார்த்து மெய்சிலிர்த்தனர். “கோவிந்தா…. கோவிந்தா… கிருஷ்ணா… கிருஷ்ணா…” என்ற கோஷம் தான் எங்கும் கேட்டது.

ஊரார் ராமதாஸரது பக்திக்கு தலைவணங்கினர். “பகவானே இங்கு வசிக்க திருவுள்ளம் கொண்டிருக்கிறார் போலும்” என்று கருதி, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிருஷ்ணரை அவரிடமே விட்டுவிட்டு சென்றனர்.

தன்னலமற்ற பக்தி இருந்தால் நாம் இறைவனை தேடி போகவேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வந்துவிடுவான். இதையே துவாரகா ராமதாஸரது சரித்திரம் உணர்த்துகிறது.

[highlight]வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாளை தளத்தில் சுதந்திர தின ஸ்பெஷல் பதிவுகள் இடம்பெறும். நன்றி.[/highlight]

===============================================================

Also check : Success Stories where our Rightmantra Prayer Club prayers are answered….

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : 23 வருடங்களாக திருமலைக்கு பாதயாத்திரை சென்று வரும் திரு.எம்.சந்திரபாபு. (ஒன்பது வருடங்களாக ஆண்டுக்கு இரண்டு முறை சென்று வருகிறார்.)

Babuஇரண்டு வாரங்களுக்கு முன்னர் இவர் தன் குழுவினரோடு திருமலைக்கு பாதயாத்திரை கிளம்பியபோது இவரை நாம் சுருட்டப்பள்ளிக்கே சென்று வழியனுப்பி ஆசிபெற்றது மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.

திரு.சந்திரபாபு அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தற்போது வயது 64.

இத்தனை ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வருகிறீர்களே இதனால் நீங்கள் அடைந்த நன்மை ஏதேனும் ஒன்றை சொல்லமுடியுமா என்று கேட்டால், “என்ன அப்படி கேட்டுடீங்க?” என்று சொல்லி மனிதர் பட்டியலிடுகிறார்.

“பாதயாத்திரை சென்று வந்த பிறகு, நிச்சயம் வீட்டில் எதாவது ஒரு சுபநிகழ்ச்சி நடக்கும். திருமணம், கிரகப் பிரவேசம் இப்படி. மேலும் பாதயாத்திரை மூலம் சென்று ஏழுமலையானை தரிசிக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

முதல் முறை பாதயாத்திரை போய்ட்டு வந்தவுடனேயே நான் இருந்த ஓட்டு வீட்டை இடிச்சி மாடி வீடா கட்டினேன். இப்போ நாலு வருஷத்துக்கு முன்னால வேற ஒரு இடத்துல கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டுருக்கேன். வாடகை மட்டுமே எனக்கு ரூ.40,000/- வருது.

எனக்கு மட்டுமில்லே நிறைய பேர்  சொல்லியிருக்காங்க. “பாதயாத்திரை போய்ட்டு வந்தபிறகு சொந்த வீடு கட்டிட்டேன் சார், பையனுக்கு பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு அது இதுன்னு…!”

என் வாழ்க்கையிலே இன்னொரு அதிசயம் கூட நடந்தது சார். என் மகன் கோபிராஜன், அவனுக்கு இப்போ 29 வயசாகுது. பத்தாம் வகுப்பு வரைக்கும் தான் படித்திருக்கிறான். ஒரு சாதாரண எல்.ஐ.சி. ஏஜெண்ட்டா தான் வேலை பார்க்குறான். அவனுக்கு எப்படி கல்யாணாம  செய்துவைக்கப் போகிறேனோன்னு ரொம்ப கவலைப்பட்டேன். காரணம், பி.இ., பி.டெக் எல்லாம் படித்து கைநிறைய சம்பளம் வாங்குபவர்களுக்கே இந்த காலத்தில் பெண் கிடைப்பது குதிரைக்கொம்பா இருக்கு. ஆனா பாருங்க என் மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் பெண் கிடைத்து திருமணமாகி, இன்று எனக்கு நான்கு வயதில் ஒரு பேரப்பிள்ளை இருக்கிறான். இதற்கு காரணமாக நான் நம்புவது பாதயாத்திரை செய்த பலன் தான்.

Babu Padha yathra
சுருட்டப்பள்ளியில் திரு.சந்திரபாபு அவர்களையும் திரு.ஸ்ரீராமுலு அவர்களை கௌரவித்தபோது…

“இந்த வருஷம் போகும்போது என்கூட ஆண்டாள்னு ஒரு அம்மா வந்தாங்க. அவங்க வயசு எப்படியும் 70 இருக்கும். அவங்களும் அவங்க கூட அவங்க சொந்தக்கார பையன் ஒருத்தனும் வந்திருந்தான். பையன்னால கூட நடக்கமுடியலே. ஆனா அந்தம்மா அவளோ வேகமா நடக்குறாங்க. 20 வருஷமா திருப்பதிக்கு பாதயாத்திரை போகணும்னு வேண்டுதலாம். அவங்க கணவர் இறந்த பிறகு அவரோட தங்க செயின் ஒன்னை பாதயாத்திரையா வந்து திருப்பதி உண்டியல்ல போடுறதா வேண்டுதலாம். ஆனா அவங்களால் போக முடியலே. நாங்க பாத யாத்திரை போறதை கேள்விப்பட்டு இந்த தடவை நாங்க கிளம்புற அன்னைக்கு அதாவது கடைசி நேரத்துல எங்க குழுவுல சேர்ந்து எங்க கூட வந்தாங்க.”

“அவங்க நடக்குறதை பார்த்து ஆச்சரியமா இருக்கும். அவனோட அருள் இல்லேன்னா 70 வயசுல எல்லாம் இப்படி நடக்கமுடியாது சார். உண்டியல்ல செயினை போட்டுட்டு வந்தவுடனே கண்கலங்கினாங்க. ‘எத்தனை வருஷம் வேண்டுதல் தெரியுமா தம்பி?’ன்னு சொல்லி கண்கலங்குனாங்க. இப்படி எவ்வளவோ சொல்லலாம்”

நமது பிரார்த்தனை கிளப் பற்றி ஏற்கனவே இவருக்கு தெரியும். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். ஏதேனும் ஆலயத்தில் குறிப்பாக ஐயப்பன் ஆலயத்தில் சென்று அந்த நேரம் பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

Also check : அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…

இந்த வார பிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகி திருமதி.சரஸ்வதி நமது தளத்திற்கு புதியவர் என்று கருதுகிறோம். தனது தோழி மகனுக்காக இந்த பிரார்த்தனையை அவர் சமர்பித்திருக்கிறார். எத்தனை நல்ல உள்ளம்! நமது பிரார்த்தனை கிளப் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை வீண்  போகாது.

(நீங்களும் உங்கள் நட்பும் சுற்றமும் இதுபோல ஏதேனும் பிரச்சினையிலோ பாதிப்பிலோ இருந்தால் நமது பிரார்த்தனை மன்றத்துக்கு கோரிக்கை அனுப்பலாமே!)

அடுத்து நாம் வைத்திருக்கும் கோரிக்கை. குட்டி சந்திரன் அவர்களை நமது வாசர்களுக்கு தெரிந்திருக்கும். சுறுசுறுப்புக்கும் துறுதுறுப்புக்கும் பெயர் பெற்றவர். நமது பல்வேறு சேவைகளில் துணை நிற்பவர். உழவாரப்பணி குழு உறுப்பினர்களில் ஒருவர். அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பு நீங்கி அவர் விரைவில் நலம்பெறவேண்டும்.

அடுத்து திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்கள். நம் தளத்திற்கோ நமக்கோ அறிமுகமானவர் அல்ல. ஆனால் இந்த உலகில் துயரப்படுபவர்கள் அனைவரும் நம் சொந்தம் அல்லவா? அதுவும் சங்கர சுப்பிரமணியம் போன்றவர்கள் நிச்சயம் நமது சொந்தமே. தினமலர் நாளிதழில் அவரைப் பற்றிய செய்தியை பார்த்தவுடன் கண்கலங்கிவிட்டோம். வசதியும் கைநிறைய சம்பளமும் வந்தவுடன் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கத் துடிக்கும் பிள்ளைகளுக்கு நடுவில் தனக்கு பார்வை குறைபாடு, உடல் குறைபாடு ஆகியவை இருந்தும் அதை பற்றி கவலைப்படாமல் வயதான பெற்றோர்களை காப்பாற்றவேண்டி அவர்களுக்கு சோறு போடவேண்டி அரசு வேலை கேட்கும் அவருக்கு நிச்சயம் கேட்டது கிடைக்கவேண்டும்.

பொது பிரார்த்தனை மிகவும் உருக்கமான ஒன்று.  விவசாயமே நமது நாட்டின் முதுகெலும்பு. ஆனால் விவசாயிகளோ கூண்டோடு தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கின்றனர். எத்தனை கொடுமை இது?

அரசு திட்டம் ஒன்றுக்கு நிலம் கொடுத்து கடந்த 17 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுகின்றனர் நம் விவசாயிகள். அவர்களுக்காகவே இந்த வார பொது பிரார்த்தனை.

===============================================================

* திருமண தாமதம் தொடர்பான கோரிக்கைகள் தனியாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாம் கூறிய அந்த முக்கியப் பிரமுகரைப் பற்றி நமது தளத்தில் பதிவு வெளியானவுடன் அந்த பிரார்த்தனைகள் அவரைக் கொண்டே நடத்தப்படும். அதுவரை திருமண தாமதம் தொடர்பான பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அந்த கோரிக்கைகளை மின்னஞ்சல் அனுப்பவும்.

நம் தளத்தில் வெளியிட பிரார்த்தனை கோரிக்கை தனியாகவும், பெயர் ராசி நட்சத்திர விபரங்கள் தனியாகவும் அனுப்பவும். பெயர், ராசி, நட்சத்திரம் எதற்காக என்றால் நாம் திருமண பரிகாரத் தலங்களுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

வேறு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பெயரை போட்டு  வெளியிடலாமா அல்லது பெயர்களின்றி வெளியிடவேண்டுமா என்று குறிப்பிடவில்லை. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அவர்களிடம் பதில் வந்த பிறகு அடுத்தடுத்த வாரங்களில் அந்த கோரிக்கைகள் மன்றத்தில் வைக்கப்படும்.

**  பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

தோழி மகனுக்கு உடல்நிலை சரியாகவேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்.

எனது தோழி தனலக்ஷ்மி அவர்களின் மகன் பிரஷாந்த். வயது 25.

அமெரிக்காவில் நியூ ஜெர்ஸி நகரில் COGNIZANT ல் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து பரிபூரண ஆரோக்கியத்தோடு வீடு திரும்ப இந்த ரைட்மந்த்ரா பிரார்த்தனை குழுவினரை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.

நன்றி,

சரஸ்வதி,
சென்னை.

===============================================================

டைஃபாய்டு காய்ச்சல் நீங்கவேண்டும்!

நம் தள வாசகரும் நம் உழவாரப்பணி குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு.குட்டி சந்திரன் (28) டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த நான்கைந்து நாட்களாக கடுமையான காய்ச்சல் அவருக்கு இருந்து வந்தது. ராயபேட்டை அரசு மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்ததில் டைஃபாய்டு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். அவர் விரைந்து நலம் பெற்று முன்பைப் போல சுறுசுறுப்பாக செயலாற்ற, பணிக்கு செல்ல இறைவனை வேண்டுவோம்.

– ‘ரைட்மந்த்ரா’  சுந்தர்

===============================================================

பெற்றோரை பார்த்துக்கொள்ள அரசு வேலை கேட்கும் மாற்றுத் திறனாளி

Sankara Subramaniyamவயதான பெற்றோரை எந்த முதியோர் இல்லத்தில் தள்ளி விடலாம் என, பலர் நினைக்கும் இந்த காலத்தில், செயலிழந்த கால்களையும், பார்வை குறைந்த கண்களையும் கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞர், வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள, அரசு வேலை வேண்டும் என, எதிர்பார்க்கிறார்.

கோவை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மல்லிகா தம்பதியின் ஒரே மகன் சங்கர சுப்ரமணியம், 29; பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி; ஆனால், ஞாபக சக்தி உண்டு.இவரால், உருவங்களை, நிழலாக மட்டுமே காண முடியும். ஆனால், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளும் அபார ஆற்றல் உள்ளது; நுட்பமான ஞாபக சக்தியும் உள்ளது.தன் குறைகளை, தெளிவாக புரிந்துகொண்ட சங்கர சுப்ரமணியம், மனதை திடப்படுத்தி, மீதமுள்ள நிறைகளை பயன்படுத்தி, வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொண்டு வருகிறார். பிறர் படிப்பதை கேட்டு, ‘ஸ்கிரைப்’ முறையில் தேர்வு எழுதி, 10ம் வகுப்பு தேர்வில், 62 சதவீத மதிப்பெண் பெற்றார்.

‘தங்க மாணவர்’

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில், பி.ஏ., பொருளாதாரம் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார். இதன் பின்னணியில், இவரது ஏழை தந்தை கிருஷ்ணமூர்த்தி அனுபவித்த சிரமங்களை, சொல்லி மாளாது.’படித்தது போதும், ஏதாவது வேலை பார்த்து, இனியாவது, வயதான பெற்றோரை, பத்திரமாக பார்த்துக் கொள்வோம்’ என, 2013ல், டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார்; ஆனாலும், வேலை கிடைக்கவில்லை.

டி.என்.பி.எஸ்.சி., நிராகரிப்பு

தளராத சங்கர சுப்ரமணியம், 2014ல் எழுதிய, ‘குரூப் – 4’ தேர்விலும் தேர்ச்சி பெற்று, ஊனமுற்றோர் தரவரிசை பட்டியலில், எட்டாம் இடத்தைப் பிடித்தும், நிராகரிக்கப்பட்டார். வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் என்பதை, 29 ஆண்டு வாழ்க்கையில் உணர்ந்து விட்டவர், கடைசி முயற்சியாக, சமீபத்தில், கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, தன் கல்வித் தகுதி, உடல் தகுதிக்கு ஏற்ப, ஏதாவது அரசு வேலை வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது ஆசை, பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பை நிறைவேற்றுவது, முதல்வர் ஜெயலலிதாவின் கையில் தான் உள்ளது! (செய்தி : தினமலர்)

யார் யாருக்கோ அரசு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கிறது. தகுதி உடைய இவருக்கு நிச்சயம் கொடுக்கவேண்டும்.

===============================================================

பொது பிரார்த்தனை

அப்பாவி ஏழை விவசாயிகள் காப்பற்றப்படவேண்டும்

17 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காத 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முடிவு

உ.பி.,யின் மதுரா பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்காக தங்கள் விவசாய நிலங்களை விட்டுக் கொடுத்த விவசாயிகளுக்கு, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீடு வழங்கப்படாததால், தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு, 25 ஆயிரம் பேர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்குள்ள மதுரா பகுதியில், 1998ல், பெரிய அணை கட்டப்பட்டது. இதற்காக, விவசாயிகளின், 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்தது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.விவசாய நிலங்கள் பறிபோனதால், விவசாயம் செய்ய முடியாமல், பசியும், பட்டினியுமாக வாழும் விவசாயிகள், பல முறை மனு செய்தும், அகிலேஷ் அரசு இழப்பீடு வழங்கவில்லை.

அரசுகள் தான் எங்களை மோசம் செய்கிறது என்றால், இயற்கையுமா? கண்கலங்கும் விவசாயி
அரசுகள் தான் எங்களை மோசம் செய்கிறது என்றால், இயற்கையுமா? கண்கலங்கும் விவசாயி

இதையடுத்து, மதுரா பகுதியில் உள்ள விவசாயிகள், 25 ஆயிரம் பேரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதி, தங்களை தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.நிலங்களை கொடுத்துள்ள விவசாயிகளுக்கு, 800 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது.

விவசாயிகளை ஒன்றுதிரட்டும் போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் விவசாய பிரிவான, பாரதிய கிசான் சங்கம் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் சார்பில், இந்த அமைப்பு தான், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

நமக்கு சோறிடும் விவசாயிகளுக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பது கண்டு நெஞ்சம் கனக்கிறது. அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கங்கள் விரைந்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும். அவர்கள் முகம் மலரவேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

===============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgஉடல்நிலை பாதிப்படைந்து நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.பிரஷாந்த் அவர்களும், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நம் தள வாசகர் திரு.குட்டி சந்திரன் அவர்களும் விரைந்து குணம் பெற்று அன்றாட பணிகளை தொய்வின்றி தொடரவும், வயதான பெற்றோரை காப்பாற்றவேண்டி அரசு வேலை கேட்கும் மாற்றுத் திறனாளி திரு.சங்கர சுப்பிரமணியம் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கவும், நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் உ.பி. விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும் அவர்கள் வாழ்க்கை மலரவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள திரு.எம்.சந்திரபாபு அவர்கள் மேலும் மேலும் பலமுறை வேங்கடமுடையானை தரிசித்து, தனது குடும்பத்தினருடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவும் அம்பிகையை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 16, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

===============================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

===============================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

===============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W: www.rightmantra.com

===============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

===============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மத்தூர் மகிஷாஷூர மர்த்தனி ஆலய தவில் வித்துவான், காஞ்சி காமகோடி பீடம் திரு.ஏ.ஜி.லோகநாதன் அவர்கள்

4 thoughts on “‘இறைவனை வீடு தேடி வரவழைத்த பக்தி’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

  1. சங்கு சக்ர தாரியான எம்பெருமான் தன பக்தரை தடுத் தாட் கொண்ட விதத்தைப் படிக்க பரவசமாக உள்ளது. உன்னத மான பரிபூரணமான பக்திக்கு ஈடு இணை ஏது?

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு சந்திர பாபு அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் .
    இந்த வார பிரார்த்தனைக்கு தாங்கள் பதிவு செய்து இருக்கும் திரு சங்கர சுப்ரமணியன் பற்றி படிக்க மனம் கனக்கிறது

    நம் நண்பர் குட்டி விரைவில் குணமாக வேண்டும் . திரு பிரசாந்த் அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

    லோக சமஸ்தா சுகினோ பவந்து

    ராம் ராம் ராம்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம்……இந்த வாரம் பிரார்த்தனை சமர்ப்பித்துள்ளவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வு வளம் பெற வேண்டுமெனவும் திருவருளையும், குருவருளையும் வேண்டுகிறோம்……….

  3. வணக்கம் சுந்தர். எல்லோர் சிரமங்களும் தீர நானும் எங்கும் நிறைந்து இருக்கும் பரம் பொருளிடம் பிராத்திக்கிறேன்.முக்கண்ணி அருளால் அனைவரும் நலம் பெறுவார்கள்.நன்றி

  4. நம் தளத்தின் பிரத்தியேக சிறப்பு – பிரார்த்தனை கிளப் பதிவு – அதனை ஒட்டிய செறிவூட்டும் நிகழ்வுகள். அந்த வகையில் இந்த பதிவும் சேர்கின்றது.
    இறைவனை வீடு தேடி வரவைக்க முடியுமா? என்று ஒரு கேள்வியை தொடுத்து, அந்த கேள்விக்கு விடையாக..எந்த ஒரு ஐயமின்றி..ஆம்..முடியும்..தன்னலமற்ற பக்தி ஒன்றே ..இறைவனை வீடு தேடி வரவைக்கும் என்று சொன்ன Rightmantra தளத்திற்கு நன்றிகள்.
    பதிவினை மேம்போக்காக பார்த்தால், நாம் கடலை மேம்போக்காக பார்ப்பது போல்..கடல் அலை மற்றும் நீரே தெரியும். ஆனால் பதிவினை நன்றாக,உற்று பார்த்து சிந்தித்தால்,கடலின் ஆழத்தில் கிடைக்கும் அரிதான முத்து போன்ற உயர்ந்த கருத்துக்கள் கிடைக்கும்.

    நன்றி அண்ணா…

Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *