நமது தள வாசகி ஒருவரின் அண்ணன் மகன், +2 தேர்வு முடிவுகள் குறித்த மன அழுத்தத்தில், எங்கே பெயிலாகிவிடுவோமோ என்கிற பயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். ஆனால் இன்று வெளியான அந்த முடிவுகளில் மாணவன் பாஸாகியிருப்பதோடு நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறான் என்று தெரியவந்துள்ளது. இத்துணைக்கும் அவன் பெற்றோர் அவனுக்கு எந்த வித மன உளைச்சலையும் கொடுக்கவில்லை. “நீ எந்த மார்க் எடுத்தாலும் பரவாயில்லை. ரிலாக்ஸா இரு!” என்று தான் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
நாம் இதுவரை பார்த்தது, கேட்டது, படித்தது என அனைத்தையும் வைத்து இந்த பதிவை தயார் செய்துள்ளோம்.
படித்துவிட்டு அவசியம் பகிருங்கள். எங்கோ யாரோ ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ ஊக்கம் கொடுத்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் நிற்க இது உதவலாம். ஒரு உயிரோ பல உயிர்களோ காப்பாற்றப்படலாம்.
தேர்வு ஒன்றும் உங்கள் தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் இல்லை!
”குழந்தைகளே… புத்தகங்களைக் கிழித்து விடாதீர்கள்!’ என்ற காலம் போய், இப்போது ‘புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்…’ என சொல்லும் காலம் வந்துவிட்டது…” – கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய இந்த கவிதை ஆயிரம் அர்த்தங்களை சொல்லும். ஆம், கல்வி மற்றும் பரீட்சையில் தேர்ச்சி குறித்த நமது அணுகுமுறை, மலர்ந்து மணம் வீசவேண்டிய எத்தனையோ மலர்களை பொசுக்கிவிடுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது : ப்ளஸ்-டூ படிக்கும் ஒரு மாணவனோ, ‘மதிப்பெண்கள் அதிகமா வருமா, வராதா…’ என வீட்டில் காட்டிய மிதமிஞ்சிய கண்டிப்பில், நடுங்கியபடியே பரீட்சை எழுதி… அதில் பெயிலாகிவிட்டால் என்னாகுமோ என்ற பதற்றத்தில், தேர்வு முடிவு வரும் முன்னரே தற்கொலை செய்துகொண்டுவிட்டான். தேர்வு முடிவில் அவன் பெற்ற மதிப்பெண்கள் 94%.
பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவும், +2 வகுப்பு பரீட்சை முடிவும் வாழ்க்கையில் முக்கியம் தான். ஆனால், அதில் பெயிலாகிவிட்டால் ஏதோ வாழ்க்கையே தொலைந்துவிடுவது போன்ற ஒரு சூழலை இன்றைய சமூகம் மாணவர்கள் மீது ஏற்றிவைத்துவிடுகிறது.
”வாழ்க்கையின் திசையை முடிவு செய்யப் போவதே அந்த பரீட்சைதான். அதில் தோற்றுவிட்டாலோ அல்லது மதிப்பெண்களை இழந்துவிட்டாலோ… எல்லாம் முடிந்துவிட்டது! இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில் மார்க் எடுத்தால்தான், அடுத்த அடி எடுத்துவைக்க முடியும். இல்லாவிட்டால், அதலபாதாளத்தில் விழ வேண்டியதுதான். நீ பெயிலாகிவிட்டால் உறவினர்கள் மத்தியில் நான் விழிக்க முடியாது. அவனை பார் அவன் நல்ல மார்க்குகள் எடுத்து எம்.பி.பி.எஸ். சேர்ந்துவிட்டான். இவளைப் பார் இவள் நல்ல மார்க்குகள் எடுத்து பி.இ. சேர்ந்துவிட்டாள்” என்பது போன்ற எண்ணத்தை ஆசிரியர்களும் பெற்றோரும் தொடர்ந்து விதைத்தபடியே இருக்கிறார்கள். இத்தகைய பேச்சுக்கள் அம்மாணவர்கள் மீது அளவுக்கதிகமான மனச் சுமையை ஏற்றிவைத்துவிடுகின்றன.
கல்வி… பொருளீட்டுவதற்கு என்கிற கருத்தாக்கத்தை பிள்ளைகளின் மனதில் நாம் ஆழமாக விதைத்து பலகாலம் ஆகிவிட்டது. ஆனந்தமாக, விருப்பபட்டு அவர்கள் விரும்புகிற துறையை தேர்வு செய்கிற வாய்ப்பை பெரும்பாலான பெற்றோர் தருவதில்லை. எதிர்காலம் என்னாகுமோ என்கிற பயம் தான் காரணம்; ஆனாலும், கொஞ்சம் அவர்களின் குரலையும் காதுகொடுத்து கேளுங்கள்.
இப்போதெல்லாம் பரீட்சையில் பெயிலாகிவிட்டால், உடனே அடுத்து மறுதேர்வு எழுதி, பாஸ் செய்துவிட முடியும். அந்த கல்வியாண்டிலேயே விரும்பும் படிப்பில் சேரமுடியும். அப்படியிருக்க, விலைமதிப்பற்ற நமது செல்வங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்?
மாணவர்கள்தான் இந்தியாவின் தூண்கள் என அப்துல் கலாம் போன்ற அறிஞர்கள் எல்லாம் நம்பிக்கொண்டிருக்க, ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுதும் பல்லாயிரம் மாணவர்களை இந்த ‘பரீட்சையில் தோல்வி’ என்கிற அற்ப காரணத்துக்காக இழந்துகொண்டிருக்கிறோம்.
சென்ற ஆண்டு மட்டும் இந்தியா முழுதும் சுமார் 8500 மாணவர்கள் தேர்வு தொடர்பான பயம் மற்றும் தோல்விகளால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெரியுமா? (கடந்த மூன்று வருடங்களில் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் இதுபோல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.)
காலை எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போவது வரை படிப்பு, ஹோம் ஒர்க், ரெக்கார்டு, சிலபஸ், பரீட்சை, டியூஷன் இது தான் மாணவர்கள் வாழ்க்கை. சனி, ஞாயிறு என விடுமுறைகளில் கூட இது தான் நிலைமை. இன்றைய மாணவர்கள் மீது சமூகம் திணிப்பது இதைத்தான். ஏன் இப்படி என கேட்டால், பரீட்சைக்குத் தயார் செய்கிறோம் என்கிறார்கள். கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?
போட்டிகள் நிறைந்த உலகம் என்பதெல்லாம் சரிதான். அதனால் போட்டியில் ஜெயித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த உலகம் இருக்கிறதா?
வெற்றிகரமான வாழ்க்கையில் படிப்பு, தேர்வில் தேர்ச்சி இவையெல்லாம் ஒரு அங்கம், அவ்வளவே. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாகிவிடாது.
தொடக்கக் கல்வியை கூட ஒழுங்காக கற்காத, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெயிலான எத்தனையோ சாதனையாளர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களிடம் கைகட்டி வேலை செய்யும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு ரேங் ஹோல்டர்களும் இருக்கிறார்கள்.
தேர்வில் தோற்றும் வாழ்க்கையில் சாதித்தவர்கள்!
* அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ராக்பெல்லர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
* ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்.
* மிகப் பெரிய எழுத்தாளரும் நாடாக ஆசிரியருமான மார்க் டுவெயின் ஆரம்பக் கல்வியை கூட சரியாக கற்க முடியாதவர்.
* மோட்டார் வாகன துறையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஹென்றி போர்டு பள்ளிக் கூட படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
* ஆங்கில இலக்கியத்தின் முடி சூடா மன்னனான ஷேக்ஸ்பியர் 13 வயதுக்கு பிறகு கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்லவில்லை.
* தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பள்ளிக்கூட படிப்பை பாதியில் விட்டவர். படிப்பு சரியாக ஏறவில்லை என்ற காரணத்தால்.
* அவ்வளவு ஏன்… நாம் பெரிதும் மதிக்கும் போற்றும் சரித்திரம் கண்ட ஒப்பற்ற தலைவர் ஆப்ரகாம் லிங்கனுக்கு சரியாக படிப்பு ஏறவில்லை. ஆனால் அவர் செய்யாத சாதனையா?
* பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றுப்போன சச்சினின் கவனம் கிரிக்கெட்டில் குவிந்தது, பத்தாம் வகுப்பு பாடத்தில் அவரைப்பற்றியே பாடம் படித்தார்கள் பிள்ளைகள்.
* பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை துறந்து ராணுவம் போய் எண்ணற்ற கனவுகள் கண்டு தெருவோரத்தில் படுத்து,வாரக்கணக்கில் பசியோடு போராடி இருபத்தி ஆறு ஆஸ்கர்களை அள்ளினார் வால்ட் டிஸ்னி.
* கற்றலில் குறைபாடு (Dyslexia) காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நண்பர் நந்தகுமார் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, +2 ஆகிய தேர்வுகளை ப்ரைவேட்டாக எழுதி, இறுதியில் அரசு கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று, ஐ.ஏ. எஸ். தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்து இன்று வருமான வரித்துறையில் ஆணையராக உள்ளார். எவ்வளவு பெரிய சாதனை இது… எவ்வளவு பெரிய உண்மையை இது உணர்த்துகின்றது…!
இதிலிருந்து என்ன தெரிகிறது? சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கல்வித் தகுதியோ தேர்வு முடிவுகளோ தடுத்து நிறுத்திவிட முடியாது.
பிள்ளைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதலே வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதலை உண்டாக்கக் கூடிய பாடங்கள் தேவை. கல்வி என்பதே அறியாமை இருளை அகற்றக் கூடியதுதான். ஆனால், மதிப்பெண் என்கிற ஒன்று மட்டுமே பிரதானம் என்று சொல்லிக் கொடுக்கப்படும் கல்விமுறையால் எந்த பயனும் இல்லை. இத்தகைய மனப்போக்கு ஒவ்வொரு மான்வர்களிடத்தும் தேவையற்ற பதட்டத்தையும் பயத்தையுமே வளர்க்கிறது.
முன்பெல்லாம் பள்ளியில் நல்லொழுக்கக் கல்வி (மாரல் சயின்ஸ்), உடற்கல்வி, ட்ரில் வகுப்புகள் போல உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வகுப்புகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டன. ஆனால், இப்போது அந்த வகுப்புகள் எங்கே போனது என்றே தெரியவில்லை.
காரணம் கேட்டால், மற்ற பாடங்களை நடத்தவே நேரம் இல்லை என பதில் வருகிறது. பள்ளியிலேயே யோகா, தியானம், விளையாட்டு, நடை முறைக் கல்வி போன்றவற்றை கற்றுத்தரவேண்டும். இதைவிட மேலாக ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டாயம் உளவியல் ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டியது அவசியம். வாரம் ஒரு தடவையாவது உளவியல் வகுப்பு வேண்டும். மற்ற பாடங்கள் தரும் டென்ஷனை இந்த வகுப்பு குறைக்க உதவும். மனம் அமைதியாக இருந்தால்தான் பாடங்களைப் புரிந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும். இதை உணராமல் எத்தனை ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தியும் பயனில்லை.
சமீபத்திய உதாரணமாக… அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட இந்தியர்களின் கதையைப் பாருங்கள். இங்குள்ள மிக உயர்ந்த பொறியியல் நிறுவனங்களில் படித்து கோல்டு மெடல் வாங்கிப் பட்டம் பெற்று அமெரிக்காவில் எக்கச்சக்கமாக சம்பாதித்தவர்கள்தான் அவர்கள். ஆனால், ஒரு நெருக்கடி என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதை அவர்களுக்கு படிப்பு கற்றுத்தரவில்லை. எனவே, படிப்பு என்பது பணம் சம்பாதிக்கும் கருவி மட்டுமல்ல; வாழ்வை எப்படி கடக்கவேண்டும் என்பதற்கான ஓடமும்கூட என்று மாற்றி அமைக்கும்போதுதான் அதன் உண்மையான பயன் கிடைக்கும்.
குழந்தைகளை ஐந்து வயதுக்கு முன் பள்ளிக் கூடங்களில் சேர்த்து படிப்பு என்ற பெயரில் திணிப்பை ஆரம்பித்தால், அவர்களின் மூளை கடும் பாதிப்படையும் என்கிறது விஞ்ஞானம். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? குழந்தையின் பார்வைத் திறன் ஒருங்கிணைவதற்கும் முன்பே, மூன்றரை வயதில் ப்ரிகேஜி சேர்க்கும் முன்பே, ப்ளே ஸ்கூல்களில் மழலைகளை சேர்த்து உற்சாகத்தை ஒடித்துப் போட்டுவிடுகிறோம். பிறந்து சுமார் இரண்டரை வயதுக்குப் பிறகு பெற்றோரும், பள்ளிக் கூடங்களும் தரும் நெருக்கடியால் சிறு வயதிலேயே மிக கொடுமையான மனப் பதற்றத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். இதுவே, இவர்களின் இளமைப் பருவத்தையும் சிதைத்து வாழ்க்கையையும் வாடவைத்துவிடுகிறது.
அதிக மார்க் வாங்கும் தலைமுறையை உருவாக்க நாம் எடுத்துக் கொள்ளும் கவனத்தை, உடலாலும் மனதாலும் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதிலும் காட்டவேண்டும். மிகப் பெரிய நிறுவனங் களெல்லாம் இன்று ‘எத்தனை மார்க்?’ என்று பார்ப்பதைவிட, ‘எப்படி பேசப் பழகுகிறார்?’ என்பதைத்தான் நேர்முகத் தேர்வுகளில் அதிகம் கவனிக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு… அதற்கேற்ப தகுதிகளை வளர்த்துவிடுவோம். பரீட்சைகளில் தேர்ச்சியடைவதைவிடவும் வாழ்க்கையில் தேர்ச்சி அடைவது மிகமிக முக்கியமல்லவா..!
இறுதியாக பெற்றோர்களுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றே ஒன்று தான். தேர்வு ஒன்றும் உங்கள் தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் இல்லை.
(ஆக்கத்தில் உதவி : ஆனந்த விகடன், தினமணி)
=====================================================================
Also check :
கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!
ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ?
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
=====================================================================
[END]
மிகவும் அருமையான தக்க சமயத்தில் பதிவாக வந்ததில் மகிழ்ச்சி. இந்த பதிவை அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் படிக்க வேண்டும்
தேர்வில் தோற்றால் மீண்டும் எழுதி கொள்ளலாம் . பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏட்டுச் சுரைக்காயாக வளர்க்காமல் , உலக அனுபவகளை சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருக்க வேண்டும்.
இந்த வருட +2 தேர்வில் எனது அண்ணா மகன் சதீஷ் 1102 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்று உள்ளான், அவனுக்கு எனது வாழ்த்துக்கள் ,. மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
உமா வெங்கட்
மிக அருமையான, இந்நேரத்திற்கு மிகவும் தேவையான ஒரு அற்புதமான பதிவு.
நமது தள வாசகர்களில், ஆசிரியர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் அவசியம் இப்பதிவினை மாணவர்களுடனும் மற்றும் சக ஆசிரியர்களுடனும் பகிர வேண்டும்.
Right article on the right time. Exams and results are not the measuring instruments to judge the smartness and intelligence.
சார்… பேரன்ட்ஸ் & ஸ்டூடண்ட்ஸ் சும்மா இருந்தாலும் சொந்தக்காரங்க தொல்லை தாங்க முடியவில்லை. மார்க் என்ன, மார்க் என்னன்னு கேட்டு, என்ன படிக்கப்போராறு, இந்த மார்க்குக்கு காலேஜ்ல இடம் கிடைக்காது அப்படின்னு சொல்லியே சாகடிக்கிறாங்க சார்… என்ன செய்றது?
அன்பின் சுந்தர் அண்ணா.
சும்மா நச்சுனு ஒரே வார்த்தைல சொல்லிடிங்க அண்ணா..அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது அண்ணா.
மிக்க நன்றி அண்ணா.
Right article at the right time…
It is high time we (parents, teachers & everyone in the society) change our mentality…