Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

print
ரு சின்ன சிராய்ப்பு கூட நம்மையெல்லாம் மிகவும் பாதித்து முடக்கிபோட்டுவிடுகிறது. “கஷ்டப்படமாட்டேன், கீழே விழமாட்டேன், தழும்பை பெறமாட்டேன், ஆனால் வெற்றிக் கோப்பை மட்டும் வேண்டும்” என்கிற மனோபாவம் தான் பலரிடம் உள்ளது. ஆனால் “இத்தகைய எண்ணம் தவறு. இதோ இவர்களை பார்த்தாவது நீங்கள் திருந்துங்கள்” என்று நம் கண் முன்னே பலரை உதாரணம் காட்டுகிறான் இறைவன்.

அப்படிப்பட்ட உதாரணங்களில் ஒருவர் தான் இந்த கட்டுரையின் ஹீரோ சூர்யா.

தினமலர் ‘நிஜக்கதை’ பகுதியில் நண்பர் முருகராஜ் வெளியிட்டிருக்கும் கட்டுரையை கீழே தருகிறேன். சூர்யாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக பேசினேன். அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை.

வார்த்தைகள் தடுமாறின. ஆனால் நோக்கம் தடுமாறவில்லை. நம் தளத்தில் கட்டுரையை வெளியிட விருப்பதாகவும் புகைப்படங்களை அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டேன். சொன்னபடி அனுப்பினார். நமது தளத்தையும் பார்வையிட்டதாக கூறி, நன்றாக இருப்பதாக கூறினார். இவரைப் போன்றவர்களின் வார்த்தைகள் கோடி பெறும்.

================================================

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்

ஊன்றி நடக்க உறுதி கொண்டால் ஒட்டடை நூல்கூட ஊன்று கோல்தான்.

என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன்

நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.

இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.

பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.

செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.

நான்காம் வகுப்பு ப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.

வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.

கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.

நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.

புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD,NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD,BUDGET FURNITURE,IMPERIAL INFOTECH,VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.

சூர்யாவின் தந்தை காவல்துறையின் கைரேகைப் பிரிவில் இன்ஸ்பெக்டராக சென்னையில் இருந்தவர். பணி ஒய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டார். சூர்யா தற்போது பொள்ளாச்சியில் இருந்து கொண்டுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறார். தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி, அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி ஆகியோர், ‘எப்படியும் நம்ம சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வற்றாது வழங்கி வருகின்றனர்.

அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளைப் பகலாக்கிக் கடுமையாக உழைத்து, நல்லதொரு வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா தனக்கு உற்றுழி உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ் , மற்றும் பல நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இவ்வளவு திறமையா என்று இவரது வெப் டிசைனைப் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.

ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும் என்று சொல்லும் சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் (creativeEstudio.com) என்ற வலைதளத்துக்குச் செல்லவும். அவரது அலைபேசி எண்: 9790741542.

(நன்றி : எல்.முருகராஜ், தினமலர்)

[END]

 

11 thoughts on “முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !

 1. சூர்யா மேன்மேலும் சாதனைகள் செய்ய என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்..

 2. சூர்யா மேன்மேலும் சாதனைகள் செய்ய என்னுடைய வா ழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.. எல்லாம் அவன் அருள். நன்றி

 3. டியர் சூர்யா,
  உங்கள் முயற்சிக்கு இறைவன் என்றும் துணை இருப்பன். உங்கள் சகோதரருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  பாஸ்கரன்

 4. சுந்தர் சார் வணக்கம்

  சூர்யா மேன்மேலும் சாதனைகள் செய்ய என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்..

  நன்றி

 5. சூர்யாவின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

  அருண்

 6. சாதனையாளர்களை எங்களுக்கு அறிமுகபடுதுவதில் சுந்தர் ஜி நிகர் சுந்தர் தான் .சூர்யாவின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.
  மனோகர்

 7. நண்பர் சுந்தருக்கு

  பொள்ளாச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யா பற்றி நான் எழுதிய கட்டுரையை இன்னும் அழகாக்கி,சிறப்பான முன்னுரையுடன் பிரசுரித்ததன் மூலம் ரைட் மந்திரா.காமின் நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை கட்டுரை நாயகன் சூர்யாவிற்கு கொண்டு சேர்த்தமைக்கு மிகவும் நன்றி!

  அன்புடன்,
  இல.முருகராஜ்

 8. வணக்கம் சுந்தர் அண்ணா,
  இந்த ரைட் மந்த்ரா தளத்தோட தலைப்பில் “தேடல் உள்ள தேனிகளுக்கு” என்கிற வாசகர்களுக்காக நீங்கள் பதிச்சி இருக்கீங்க. ஆனால், ஒவ்வொரு பதிவிலும், பதிவிடுகிற ஒவ்வொரு நபர் பற்றிய செய்திகளை சேகரிச்சி, அவர்களை தொடர்பு கொண்டு, அதன் மூலம் கிடைக்கிற தகவல்களை தொகுத்து, ஒழுங்கு படுத்தி அதை பார்த்து மற்றவர்களும் தங்களுடைய வாழ்கையை நல்ல முறையிலும், பயனுள்ளதாக அமைத்து கொள்ள இத்தனை பெரிய முயற்சி செய்து வெளியிடுரிங்க. அதுவும் உங்களுடைய இந்த சென்னை அலுவலக வாழ்க்கைக்கு நடுவில.எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் சமுதாயத்துக்காக உழைக்க நமது எப்படி வேணும்னாலும் உடலை தயார் பண்ணிக்கலாம்.ஆனால், சில விசயங்களை செய்து முடிக்க பணம் என்கிற ஒன்று முக்கியமான தேவை. அதை பத்தி நான் யோசிச்சால் எனக்கு வியப்பு மட்டும் தான் மீதம். இப்படியும் ஒருத்தர் தனது சமுதாயத்திற்காக நல்ல விசயங்களை சொல்ல இந்த அளவு உழைக்க முடியுமா என்கிற வியப்பு.ரைட் மந்த்ரா செடிய பொறுத்த வரை நீங்க தான் “ராஜா தேனீ “என்பது உங்களுடைய உழைப்பு சொல்லாமல் சொல்லுது.இந்த ரைட் மந்த்ரா செடியில பூக்கும் பூவில தேன் அருந்த வர தேனீக்களில் நானும் ஒரு தேனியாக இருக்குறது மட்டும் எனக்கு பெருமை தராது என நினைக்கிறேன்.தேன் மட்டும் அருந்தி விட்டு செடிய பத்தி யோசிக்கமா இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.நானும் என்னால முடிந்த பங்களிப்ப இந்த தளத்துக்கு தர விரும்புகிறேன். ஆனால், அது என்னோட கர்மாவுக்காக இல்லை. என்னுடைய ஆத்ம திருப்திக்காக. ஏணா சாதாரண உணவு, உடை, இருப்பிட தேவையோட மட்டும் என் வாழ்க்கைய வாழ விருப்பம் இல்லாததல சொல்றேன்.
  நன்றி.

 9. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
  அருமை உடைய செயல்.

  என்ற வான்மறை வள்ளுவத்தின் நிலைக் கலனாய் எப்போதும் இருக்கின்ற தினமலர் நாளிதழ் ஆசிரியர்கள்,முளைக்க முனையும் சிறு விதையான எனக்குள்ளும் பெருவிருட்சம் இருப்பதை முன்மொழிந்திருக்கிறார்கள்; நீங்கள் வழிமொழிந்திருக்கிறீர்கள்; பலர் என்னைப் பாராட்டி வாழ்த்தி வாய்ப்புத் தருவதாய் வாக்களித்திருக்கிறார்கள். உங்கள் எல்லோருடைய உன்னதங்களுக்கும் எப்படி நன்றி செய்யப் போகிறேன்?

  நாலு பேருக்கு நன்னம்பிக்கை முனையாய் நானிருந்தால் நல்லது.

  நெம்புகோலாய் இருப்போம்; நேயத்தினால் சிறப்போம்.

 10. உலகைச் சுற்றிவரப் பிறந்தவன் அல்லன்
  உலகமே சுற்றிவரும் சூரியன் நீ!
  வாழ்த்துக்கள் சூரியா வாழ்த்துக்கள்!

 11. ஹலோ சூரியா! உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *