ஜான் ரோப்ளிங் என்பவர் ஜெர்மனியை பூர்வீகமாக கொண்ட ஒரு சிவில் என்ஜினீயர். 1830 ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் நிலவிய உள்நாட்டு குழப்பத்தையொட்டி தனது தாயுடன் யூ.எஸ்.ஸில் குடி புகுந்தார் ரோப்ளிங். யூ.எஸ்.வந்த புதியில் விவசாய வேலையைத் தான் அவரால் பார்க்க முடிந்தது. அதற்கு பிறகு ரயில் தண்டவாளங்களை பதிக்கும் பணியை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மிக வேகமாக வளர்ந்து வந்த காலகட்டம். நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் ப்ரூக்ளின் தீவுகளை இடையே ஓடும் கிழக்காறு பிரித்து வைத்திருந்தது. இவற்றை இணைக்கும் வகையில் ஒரு பாலத்தை கட்டினால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று பொறியாளர் ஜான் ரோப்ளிங் என்பவருக்கு தோன்றியது. ஏனெனில், மன்ஹாட்டனிலிருந்து ப்ரூக்ளின் செல்ல மக்கள் அப்போது பெரும்பாலும் படகுகளையே நம்பியிருந்தனர். பெருகி வரும் மக்கள் தொகைக்கு படகுகள் போதுமானதாக இல்லை. மேலும் பாலம் ஒன்று இருந்தால் அது நியூயார்க்கின் வர்த்தகத்திற்கு வேறு உபயோகமாக இருக்கும் என்பது அனைவரின் பரவலான எண்ணம். ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? இப்போது போல அப்போது பாலம் கட்டும் தொழில்நுட்பம் இல்லை. அதுவும் இரு கரைகளையும் அணைத்தபடி ஓடிக்கொண்டிருக்கும் ஆறு மீது…!
1860 ஆம் ஆண்டு ஜான் ரோப்ளிங்கின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அந்த வருடம் தான் அமெரிக்காவின் மன்ஹாட்டன் மற்றும் ப்ரூக்ளின் தீவுகளை இணைக்கும் வகையில் ஒரு பாலத்தை கட்ட அவர் முடிவு செய்தார். அந்த காலகட்டத்தில் அத்தனை நீளத்தில் ஒரு பாலத்தை அதுவும் தொங்கு பாலத்தை (Suspension Bridge) யாரும் கட்டியதில்லை. எனவே அவருடைய யோசனையை எடுத்த எடுப்பிலேயே அனைவரும் நிராகரித்துவிட்டனர். ஆனால் ஜான் ரோப்ளிங்கிற்கோ நிச்சயம் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஒட்டுமொத்த உலகமும் பாலம் கட்டும் விஷயத்தில் அவருக்கு எதிராக நின்றனர்.
அவருடைய கனவிற்கு ஆதரவாக இருந்தது அவருடைய ஒரே மகன் வாஷிங்டன் தான். வாஷிங்டன் அப்போது சிவில் எஞ்சினியரிங் படித்து வந்தார். அவர்கள் இருவரும் பாலம் குறித்த விரிவான சர்வே நடத்தி பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்பா மகன் இருவரும் சேர்ந்து பாலத்தை கட்டுவதற்குரிய திட்டத்தை தீட்டி தகுந்த வேலையாட்களையும் தேர்வு செய்து பணியில் இறங்கினர். பணியில் தோன்றக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இருவருமே தீர்மானமாக இருந்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் ஜான் ரோப்ளிங், ப்ரூக்ளின் நதியில் படகுத் துறையில் நின்றுகொண்டு பாலத்தின் கோபுரங்களை அமைப்பது தொடர்பான சர்வேயில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த பயணிகள் படகு ஒன்று எதிர்பாரதவிதமாக அவர் மீது மோதி அவரது இரண்டு கால்களும் சம்பவ இடத்திலேயே சிதைந்துவிட்டன. அடுத்த சில நாட்களில் (22, ஜூலை 1869 ஆம் ஆண்டு) டெட்டனஸ் வந்து இறந்துவிடுகிறார் ஜான்.
மிகப் பெரிய கனவு ஒன்று நிறைவேறாமலே அப்பா இறந்துவிட, அப்பாவின் கனவை எப்படியாவது நிறைவேற்றிட மகன் சூளுரைக்கிறார். அப்போது அவருக்கு வயது 32. வேறு யாராவது இருந்திருந்தால் பாலமாவது மண்ணாங்கட்டியாவது என்று போயிருப்பார்கள். ஆனால், வாஷிங்டன் ரோப்ளிங் விடவில்லை.
மிகப் பெரிய கனவு ஒன்று நிறைவேறாமலே அப்பா இறந்துவிட, அப்பாவின் கனவை எப்படியாவது நிறைவேற்றிட மகன் சூளுரைக்கிறார். அப்போது அவருக்கு வயது 32. வேறு யாராவது இருந்திருந்தால் பாலமாவது மண்ணாங்கட்டியாவது என்று போயிருப்பார்கள். ஆனால், வாஷிங்டன் ரோப்ளிங் விடவில்லை.
1870 ஆம் ஆண்டு மீண்டும் பாலம் கட்டும் வேலை தொடங்குகிறது. சில மாதங்கள் கழித்து நடந்த மற்றொரு விபத்தில் வாஷிங்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் அசைக்க முடியாது போய்விட்டது. பேசும் சக்தியும் பறிபோனது.
வாஷிங்டன் படுத்த படுக்கையாகிவிட சூப்பர்வைஸ் செய்ய எவரும் இல்லாத காரணத்தால் பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
இது போதாதா ஊர் வாய்க்கு? ஆளாளுக்கு அந்த பாலத்தை பற்றியும் அந்த பாலம் கட்டும் திட்டம் பற்றியும் எதிர்மறையாக பேச ஆரம்பித்தனர்.
“அப்போவே சொன்னோம்… இது சரிப்பட்டு வராதுன்னு… கேட்டாங்களா அப்பாவும் பிள்ளையும்? நடக்காத ஒன்னை நடத்திக்காட்டுறேன்னு வீம்புக்கு இறங்கினா இப்படித் தான் ஆகும்…”
பாலத்தை கட்டுவது பற்றிய வரைபட திட்டம் அறிந்திருந்த ஒரே நபர் வாஷிங்டன் தான். அவர் பேச்சு மூச்சற்று படுக்கையில் கிடைக்க இனி அந்த பாலமே சாத்தியமில்லை என்று முடிவுக்கு வந்தனர் அமெரிக்கர்கள்.
ஊராரின் இந்த எகத்தாளம் பற்றி செய்தித் தாள் மூலம் அறிந்துகொண்ட வாஷிங்டன் துடித்துப் போனார். உடனடியாக எழுந்து பாலம் கட்டும் வேலையை மீண்டும் அவர் தொடங்க விரும்பினாலும் அவர் உடல்நிலையில் அது முடியாது.
அவரால் தனது ஆட்காட்டி விரலை மட்டுமே அசைக்க முடியும். அது அவருக்கு ஒரு புது யோசனையை கொடுத்தது. தனது மனைவி எமிலியிடம் விரலால் தட்டி பாலத்தை மீண்டும் கட்ட தான் வழிகளை கூறுவதாகவும், பொறியாளர்களை உடனே வரவழைக்குமாறும் கூறினார்.
இந்த புதிய விரல் சங்கேத பாஷை நன்றாக ஒர்கவுட் ஆனது. தான் விரும்பியதை எமிலியிடம் விரல் அசைவுகள் மூலம் வாஷிங்டன் தெரிவிக்க, அவர் அதை என்ஜினீயர்களுக்கு தெரிவித்தார். மறுபடியும் பாலம் கட்டும் வேலை முழு வீச்சில் துவங்கியது.
அடுத்த பதினொரு வருடமும் வாஷிங்டன் தனது விரல் அசைவுகள் மூலமே தனது கட்டளைகளை தெரிவித்தார். எமிலியும் பொறுமையாக தனது கணவர் சொல்வதை டீகோட் செய்து, என்ஜினீயர்களுக்கு தெரிவித்தார். (உங்கள் கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட மிகப் பெரிய பிரம்மாண்டமான பாலங்க இது!) இப்பொது உள்ளது போல ஆற்றின் மீது பாலம் கட்ட பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் அப்போது கிடையாது. எனவே துரதிர்ஷ்டவசமாக பணியின்போது பல்வேறு காலகட்டங்களில் பல தொழிலாளர்கள் விபத்துக்களில் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் பாலத்தை கட்ட ஸ்டீல் கேபிள்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம், ஒப்பந்தத்திற்கு மாறாக மட்டமான பலகீனமான ஸ்டீல் கேபிள்களை சப்ளை செய்ய, பாலம் கட்டிக்கொண்டிருக்கும்போதே அறுந்து விழுந்தது. பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் காவல் துறை உதவியுடன் களை எடுக்கப்பட்டனர். தரமான கேபிள்களை சப்ளை செய்ய வேறு ஒரு நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு வழியாக அனைத்து தடைகளையும் தாண்டி கட்டிமுடிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு ப்ரூக்ளின் பாலம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.
இன்று சுமார் 2 கி.மீ. நீளமுள்ள இந்த தொங்கு பாலம், ஜான் ரோப்ளிங், வாஷிங்டன் ரோப்ளிங் மற்றும் எமிலி வாஷிங்டன் ஆகியோரின் விடாமுயற்சி மற்றும் மனவுறுதிக்கு எடுத்துக்காட்டாய் அல்லவா விளங்குகிறது. பேச்சு மூச்சற்று கிடந்த ஒரு மனிதனின் வார்த்தைகள் மீது சில பொறியாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையையுமல்லவா காட்டுகிறது. மேலும் எமிலி என்கிற ஒரு பெண்மணி தனது கணவர் மீது வைத்திருந்த அன்பையுமல்லவா பறைசாற்றுகிறது? அது மட்டுமா எத்தனையோ தொழிலாளர்களின் தியாகத்தையும் அல்லவா பறைசாற்றுகிறது?
தடைகள்? அதை சந்திக்க தயாரா என்று எல்லாரிடமும் கேட்டுப்பாருங்கள்… 90% பேர் “இல்லை! நான் ஏன் தடைகளை சந்திக்கவேண்டும்?” என்று தான் சொல்வார்கள். வேறு சிலர், உலகிலேயே துன்பப்படுபவர்கள் தாங்கள் தான் என்று சொல்வார்கள். ஆனால் யதார்த்தம் வேறு. நாம் அனைவரும் வாழ்வில் பலவித தடைகளை சந்திக்கிறோம். அவரவர் எடுத்துக்கொண்டிருக்கும் செயலின் தன்மையை பொறுத்து அதன் அளவும் விஸ்தீரணமும் வேண்டுமானால் மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். ஆனால், தடைகள் என்பது எப்போதும் எல்லாருக்கும் உள்ளது தான்.
ப்ரூக்ளின் பாலத்தின் இந்த சரித்திரம், எந்த தடைகள் வந்தபோதும் கலங்காமல், விடா முயற்சியுடன் உழைத்து லட்சியத்தை எட்டுவதை படம்பிடித்து காட்டுகிறது.
(யூ.எஸ்.ஸில் – நியூயார்க்கில் வசிக்கும் நம் வாசகர்கள் எத்தனை பேருக்கு ப்ரூக்ளின் பாலத்தின் பின்னணியில் இப்படி ஒரு வரலாறு இருப்பது தெரியும் என்று நமக்கு தெரியாது. பாலத்தை ஒரு முறை சென்று பார்த்து, புகைப்படம் எடுத்து நமக்கு அனுப்புங்கள். குறிப்பாக அந்த INSCRIPTION. பாலத்தை புகைப்படம் எடுக்க அனுமதி உள்ளதா என்று விசாரித்துவிட்டு எடுக்கவும். I LOVE THE BROOKLYN HISTORY!!)
சற்று நினைத்து பாருங்கள்… பாலத்தை கட்டவேண்டும் என்று கனவு கண்டவர், விபத்தில் இறந்துவிடுகிறார். அவரது வாரிசு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக வீழ்ந்துவிடுகிறார். பொறியியலே படித்திராத அவர் மனைவி, பாலம் கட்ட உதவுகிறார். கணவரின் சங்கேத ஒற்றை விரல் குறியீடுகளை மட்டும் வைத்துக்கொண்டு கட்டுமானத்தை மேற்பார்வையிடுகிறார். இது எப்படி சாத்தியமாயிற்று????
எடுத்த வேலையை முடித்தே தீரவேண்டும் என்கிற அவர்களது மனவுறுதி அதை சாதிக்க வைத்தது. மாபெரும் சாதனைகள் அனைத்தும் சாதிக்கப்பட்டவை வலிமையினால் அல்ல. விடா முயற்சியினால்.
உங்கள் லட்சிய பயணத்தில் எத்தனை தடைகள், எத்தனை துரோகங்கள், என்ன கோள்கள், எந்த கிரகங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் கலங்கவேண்டாம்… கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான்!!!! (எடுத்த செயலை முடிக்க மனவுறுதியுடன் இருப்பவன் ஜோதிட கட்டங்களை பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்!). உங்கள் மனவுறுதிக்கு முன்பாக எந்த கோளும் எதுவும் செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புங்கள்.
என்ன… நாம் சொல்வதில் முழு நம்பிக்கையில்லையா? அப்போ… திருவள்ளுவர் சொல்லுவதையாவது நம்புங்கள்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள் 620)
வள்ளுவர் சொன்னா அதுக்கு அப்பீல் உண்டா என்ன?
==================================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
==================================================================
[END]
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
வெற்றியுடன் ஒரு காலை வணக்கம் சுந்தர் சார், எங்கள் மனம் எப்போதெல்லாம் சோர்ந்து அடுத்து என்ன செய்வது என்று திக்குத் குத்தெரியாமல் இருக்கும்போதெல்லாம் இப்படி ஒரு motivation உங்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது எங்களுக்கு என்ன தேவை என்று ஒரு வேளை என் அப்பன் நரசிம்மன் தங்களிடம் வந்து சொல்கிறானோ என்னவோ என தோன்றுகிறது எது எப்படியோ நம்மை எல்லாம் அடிக்கடி மனதளவில் பேச வைத்து விடுகிறான் அந்த Almighty விடா முயற்சிக்கு இதை விட ஒரு எடுத்துக்காட்டு தேவை இல்லை மானசீகமாக திரு வாசிங்டன் ப்ரூக்ளின் அவர்களிடம் வேண்டுகிறேன் உங்களின் விடாமுயற்சியின் ஒரே ஒரு சதவீதத்தை எங்களுக்கும் தாருங்கள்.
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
வணக்கம்…….
எடுத்த வேலையை எத்தனை இடர்கள் வரினும் முடித்தே தீரவேண்டும் என்கிற அவர்களது மனவுறுதி அதை சாதிக்க வைத்தது. மாபெரும் சாதனைகள் அனைத்தும் சாதிக்கப்பட்டவை வலிமையினால் அல்ல. விடா முயற்சியினால்.
எனக்குள் உறங்கிக் கிடந்த நம்பிக்கை விதை தற்போது துளிர் விட ஆரம்பித்திருக்கிறது…………..
நன்றிகள் பல…………
Wonderful. Now I too love the brooklyn history and creators of the bridge!
**
As usual, Monday would pose to many of us like unwanted/undesired day since you know the reason.
But, making these Mondays more pleasurable had been possible only because of your posts Sundarji. Keep it up.
**
After seeing this story, it only makes me remember the quote of Swami Vivekananda about the will.
“To succeed, you must have tremendous perseverance, tremendous will. ‘I will drink the ocean’, says the persevering soul; ‘at my will mountains will crumble up’. Have that sort of energy, that sort of will; work hard, and you will reach the goal.”
**
Thanks so much for the monday morning specials and inspiration.
**
**Chitti**.
மிகவும் தன்னம்பிக்கையான நம் வாழ்கையின் மேல் நமக்கு நம்பிக்கை ஊட்டும் அருமையான ஸ்பெஷல்/ ப்ரூக்ளின் பாலத்திற்கு பின்னால் இவ்வளவு பெரிய கதையை இந்த பதிவின் மூலம் படிக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது. விடா முயற்சியினால் நாம் எந்த வித கடினமான வேலையையும் சாதிக்கலாம். ஒரு பெரிய பாரங்கல்லைக் கூட அனாயசமாக புரட்டிப் போடலாம்.
ஜான் ரோப்ளிங், வாஷிங்டன் ரோப்ளிங் மற்றும் எமிலி வாஷிங்டன் ஆகியோருக்கு எமது பாராட்டுக்கள்
நாளும் கோலும் நம்மை எதுவும் செய்து விடாது மன உறுதி இருந்தால்.
//பாலத்தை ஒரு முறை சென்று பார்த்து, புகைப்படம் எடுத்து நமக்கு அனுப்புங்கள். // தாங்கள் நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
நன்றி
உமா
hi sundar sir
வாழ்க வளமுடன்
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ…? – என்று பாரதி கவிதை பாடியது ஜான் ரோப்ளிங், வாஷிங்டன் ரோப்ளிங் மற்றும் எமிலி வாஷிங்டன் மற்றும் உங்களை போன்றோருக்குதான் .
அனைவர்க்கும் எமது உளமார பாராட்டுகள் , நன்றிகள்
விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டு படைக்கும் எந்த ஒரு படைப்பும், காலம் கடந்து நிற்கும் என்பதற்கு மற்றுமொரு எடுத்து காட்டு. நன்றி சுந்தர் சார்!
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் Kural 611
அருமையான பெருமைமிகு ”தன்னம்பிக்கை கட்டுரை” ,நன்றிகள் நட்பே.!!!