Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > Featured > ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club

print
ரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

DSC00041

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான்.

Mango2“அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்: “ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்” – குறள்: 314

(நன்றி : www.thamizhmozhi.net)

DSCN4695 copy

நமது வாசகி, ஈரோடு ஞானப்பிரகாசம் அவர்களின் துணைவியார் தமிழ்செல்வி அவர்கள் குறள் மகனைப் பற்றிய பதிவில் ஒரு கமெண்ட் அளித்திருந்தார். அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதால் அதை இங்கே உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

தமிழ்செல்வி ஞானப்பிரகாசம் : “பள்ளியில் படித்த பொழுது எனது தமிழாசிரியர், வாழ்வில் நாம் ஒரே ஒரு திருக்குறளைப் பின்பற்றிவந்தால் போதும். நம் வாழ்வு மேன்மையடையும் என்றார். அதன் பலனாக நான், சொல்லுக சொல்லைப் பிறிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மையறிந்து எனும் குறளைப் பின்பற்றி வருகிறேன். இதன் காரணமாக நாம் பேசும் எவ்விஷயமும் ஆதாரமுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்காகவே தேடித்தேடி நல்ல விஷயங்களைக் கற்று கொண்டு வருகிறேன். மேலும் தற்பொழுது, தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலால் பெண் எனும் குறளைப் பின்பற்றுவது என முடிவு செய்து அதன் படி நடந்து வருகிறேன். கமலாலயக் குளத்தின் அழகும், திருவாரூர் தியாகராஜப் பெருமானின் அருளையும் அருந்தினோம். திருக்குறள் மகனின் சேவை மென்மேலும் சிறக்க திருவள்ளுவப் பெருமான் அருள வேண்டும்”.

அவர் கூறுவதைப் போல, இன்றும் தனது ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தான் கூறிய திருக்குறளை கடைசியில் தருகிறார். பாராட்ட வேண்டிய முயற்சி.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருவாரூரின் திருஞானசம்பந்தர் என பெயர் பெற்றுள்ள திருவள்ளுவரின் தத்துப்பிள்ளை சிறுவன் குறள் மகன் அவர்கள்.

குறள் மகன் நமக்கு அறிமுகனானது முதல் திருவாரூரில் உள்ள அவர் வீட்டில் சென்று சந்தித்தது வரை, ஏற்கனவே பதிவளித்துள்ளோம். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு அது.

குறள் மகனின் சாதனை சாதரணமானது அல்ல. தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று திருக்குறள் மீது ஆர்வத்தை தூண்டி திருக்குறள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி, அப்பள்ளிகளில் மரக்கன்றும் வேறு நட்டு வருகிறார். இதுவரை 306 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்றுள்ளார். 24,300 திருக்குறள் நூல்களை மாணவர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறார். 3060 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். தற்போது அவர் செய்து வரும் அரும்பணி என்ன தெரியுமா? ‘உள்ளம்தோறும் வள்ளுவர். இல்லம் தோறும் திருக்குறள்’ என்னும் கருப்பொருளின்அடிப்படையில், திருக்குறள் நூலும் திருவள்ளுவர் படமும் இல்லாத வீடே நம் மாநிலத்தில் இருக்ககூடாது என்பதன் அடிப்படையில் வீடு தோறும் திருவள்ளுவர் படத்தையும் நூலையும் விநியோகித்து வருகிறார். தற்போது திருவாரூரில் துவங்கி இந்த பணி நடைபெற்று வருகிறது.

DSC02876

ஒரு வீட்டிற்கு விளக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவு திருக்குறளும் அவசியம். புற இருளை விளக்கு விரட்டும். அக இருளை திருக்குறள் விரட்டும்.

உங்கள் வீட்டில் திருக்குறள் இருக்கிறதா?

இந்த வார பிரார்த்தனைக்கு குறள் மகன் தலைமை ஏற்கவேண்டும் அதுவும் திருவாரூர் கோவிலுக்கு அருகே தான் அவர்களது வீடு என்பதால் பிரார்த்தனையை தியாகராஜர் சன்னதியிலும் அன்னை கமலாம்பாள் செய்யவேண்டும் என்று குறள் மகனின் தந்தை திரு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இதை விட நமக்கு வேறு என்ன பேறு வேண்டும்?

பிரார்த்தனை நிறைவேறுகிறதோ இல்லையோ? ஆனால், குறள் மகன் தன் முன்னே வந்து நிற்கும்போது அம்மையப்பன் நிச்சயம் அவனை ஏறெடுத்து பார்ப்பார்கள். அவன் பிரார்த்தனையை கேட்பார்கள். நமக்கு அது ஒன்று போதுமே.

DSCN4609

நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே!

(புகைப்பட விபரம் : சென்ற மாதம் ஒரு நாள், சென்னை மெரினா கடற்கரையில் குறள் மகனின் சாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது. அது சமயம் நாமும் நண்பர் குட்டி சந்திரனும் நேரில் சென்று குறள் மகனை கௌரவித்து, வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வீடெங்கும் திருக்குறள் நூலை சேர்ப்பிக்கும் குறள் மகனின் பணியில் நம்மையும் இணைத்துக்கொள்ள விரும்பி திருக்குறள் படத்தையும் குட்டி சந்திரனுக்கு வாங்கித் தந்தோம். மறக்க முடியாத ஒரு அனுபவம்.)

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா….

நம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அனைத்தும் நல்ல முறையில் லாபத்தோடு இயங்கவேண்டும்!

நம் வாசகியர் இருவர், அவர்கள் பணிபுரியும் நிறுவனம் நல்ல முறையில் லாபத்தோடு இயங்கவேண்டும் என்று நம்மிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கான தீர்வு குறித்து தனிப் பதிவு ஒன்று வருகிறது. இருப்பினும் சூழ்நிலையின் அவசரம் கருதி இந்த பிரார்த்தனை மன்றத்தில் அந்த கோரிக்கை வைக்கப்படுகிறது.

ரைட் மந்த்ரா என்பது ஒரு குடும்பம் போல. நம் வாசகர்கள் யாவரும் அதில் உறுப்பினர்கள். நல்லதை சிந்திக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் பணிபுரியும் நிறுவனம் நல்ல முறையில் இயங்கி லாபம் கொழிக்க அவர்கள் விரும்புவதில் ஆச்சரியம் இல்லையே..!  இறைவன் இதற்கு அருள்புரியவேண்டும்.

‘தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. அது போல, ‘ரைட் மந்த்ரா வாசகர்கள் என்றோர் இனமுண்டு. தனியே அவர்களுக்கு அருங்குணங்கள் உண்டு’ என்பது நமது அபாரமான நம்பிக்கை.

பிறர் துயர் கண்டு இரங்கும் தயாள குணம், தெய்வ பக்தி, தேசப்பற்று, நேர்மறை சிந்தனை, இதிகாசங்களை, புராணங்களை, வேத உபநிஷதங்களை  போற்றுவது, நமது கலாச்சாரத்தை மதிப்பது, அறநூல்களின் பால் ஈடுபாடு, அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாது இருத்தல், பணி புரியும் நிறுவனத்துக்கு விசுவாசமாக இருத்தல், புகை, மது மற்றும் இன்ன பிற தீய பழக்கங்களில் இருந்து விலகி இருத்தல், பெரியோர்களை மதித்தல், பொறமை கொள்ளாதிருத்தல் etc. etc. etc., இப்படி நம் தள வாசகர்களின் குணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இணையத்தில் நேரத்தை வீணடிக்கவும், மலிவான உணர்சிகளை தூண்டும் விஷயங்கள் கணக்கில்லாமால் இருக்கும்போது, நல்ல விஷயத்தின்பால் ஈடுபாடு இருந்ததால் தான் நம் தளமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது.  வந்திருக்கிறீர்கள். வாசகர்களாக மாறியிருக்கிறீர்கள். ஆகையால் தான் இந்த தளத்தின் TAG LINE ஐ கூட ‘தேடல் உள்ள தேனீக்களுக்கு’ என்று  வைத்துள்ளோம். தேனீக்கள் எப்போதும் மலர்களை நாடியே செல்லும். ஆனால் கொசுக்களோ சாக்கடையை நாடி செல்லும். உழைப்பிலும் நல்ல விஷயத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும் நம் வாசகர்கள் தேனீக்கள் போல என்றால் மிகையாகாது.

நல்லவற்றை நினைப்பவர்களுக்கு நல்லவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்லது தானே நடக்கவேண்டும்? எனவே நம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் யாவும் நல்ல முறையில் லாபம் கொழிக்க இயங்கி அவர் வாழ்வு சிறக்க துணை புரியவேண்டும்.

இது முதல் பிரார்த்தனை.

================================================================

மழலைச் செல்வம் வேண்டும்!

ரைட் மந்த்ரா எடிட்டர் சுந்தர் அவர்களுக்கு,

வணக்கம். நான் ரைட் மந்திரா இணையதளத்தை சமீபத்தில் தான் முதல்முறையாக பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் ஆற்றும் புனிதத் தொண்டு மென்மேலும் வளர எனது பிரார்த்தனைகள்.

எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை மழலைச்செல்வம் கிட்டவில்லை. மருத்துவர்களிடம் சென்று வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.

என் கணவர் மஹா பெரியவா மேல் மிகுந்த பக்தி கொண்டவர். நானும் இப்போது மஹா பெரியாவாளை (அவர் அருளால்)  வணங்க ஆரம்பித்திருக்கிறேன். அவர் அருளால் எங்களுக்கு ஒரு மழலை செல்வம் கிடைக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் ரைட் மந்த்ராவில் படித்த அனுபவம்  (தேடி வந்து துயர் தீர்த்த தெய்வம் – சாட்சியாய் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!) என்னுள் மேலும் நம்பிக்கையை வளர்த்து விட்டது. எனக்கு ஒரு குழந்தை பிறக்க மஹா பெரியவா அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரார்த்தனை க்ளப் மூலமாக வைக்கும் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். என்னுடைய பிரார்த்தனையும் விரைவில் நிறைவேற அனைவரும் வேண்டிக்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் கூறியது போல கூட்டுப் பிரார்த்தனை என்பது மகா பெரியவா அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

நன்றி.
பிரபா.

================================================================

பொது பிரார்த்தனை

பெருகி வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்!

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஏடுகளில் பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் பெருகி வருகிறது. இதை ஒரு அரசு எப்படிப்பட்ட நடவடிக்கையின் மூலம் தடுக்க முடியும் என்றால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒழுக்கமான நெறிமுறை கொண்டவர்களாக மாற்றுவதின் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. இது மட்டும் போதுமானது அல்ல. அனைவருக்கும் வேலையை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரம் மிகுதி நிலையில் இருத்தல் வேண்டும். அது அவர்களுக்கு உழைத்தால் மட்டும் கிடைக்க வேண்டும். இலவசமாக அரசு எதையும் வழங்க கூடாது. அப்படி வழங்குவதின் மூலம் அவர்கள் வேலைக்கு செல்லாமல் ஒன்றுகூடி சூதாடுவது, மது பழக்கத்திற்கு ஆளாவது, அதற்கு தேவையான பணத்திற்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவது மேலும் அவர்களின் குடிபழக்கத்தால் தங்களை தாங்களே கட்டுப்படுத்த முடியாமல் வன்கொடுமையில் ஈடுபடுவது போன்ற சமூதாயத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.

child abuse-1 preview
இதன் அர்த்தம் புரிகிறதா? ப்ளீஸ்… கொஞ்சம் நேரம் செலவிட்டு படியுங்களேன்.

அவர்களை ஒடுக்க கடுமையான சட்டங்களின் மூலம் தண்டிக்க வேண்டிய நிலைக்கு அரசு ஆளாகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறிய தக்க நடவடிக்கைகளை அரசு முன்கூட்டியே எடுப்பது நன்மை பயக்கும். தற்போதைய குற்றவியல் சட்டங்கள் மிகவும் பழமையானதாகவும், வலுவிழந்தும் உள்ளது தான் இதற்கு காரணம் என கருதுகிறோம்.

சமுதாயத்தின் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேறாக அமைந்திருப்பது குடிப்பழக்கமே ஆகும். எனவே அரசே மதுபானக்கடைகளை நடத்தும் அவலத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மதுக்கடைகளை மூடவேண்டும்.

மேலும் பள்ளிகளில் மனப்பாடக் கல்வி முறையை ஒழித்து, வாழ்வியலோடு தொடர்புடைய பாட திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும். பள்ளிகளில் யோகா, தியானம் கட்டாயமாக்கப்படவேண்டும். இதன் மூலம் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும்.

மேற்படி சமூக மாற்றங்களுக்காக இறைவனின் திருவருளை வேண்டுவதை தவிர வேறு வழி நமக்கு இல்லை.

இறைவன் தான் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பெருகி வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முடிவுக்கு வரவேண்டும்.

இதுவே நம் பொது பிரார்த்தனை.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநம் தள வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் நல்ல முறையில்  இயங்கி லாபம் கொழிக்கவும், நம் வாசகர்களது வாழ்வு சிறக்கவும், வாசகி பிரபா அவர்களுக்கு விரைவில் புத்திரப் பாக்கியம் கிடைத்து அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், நம் நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முடிவுக்கு வரவும் இறைவனை வேண்டுவோம். மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள செல்வன். குறள் மகன் தனது திருக்குறள் தொண்டை தொய்வின்றி ஆதரவும் இல்லந்தோறும் திருக்குறள் விளக்கை ஏற்றும் அவர் முயற்சி வெற்றியடையவும்,  அறியாமை இருள் அகலவும், அவர் தம் வாழ்வு சிறக்கவும் அவர் குடும்பதினொரு சந்தோஷமாக வாழவும் இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 10,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய டிரஸ்டி திரு.நந்தகுமார் அவர்கள்.

8 thoughts on “ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club

 1. துறவியின் கதை மிக நன்றாக உள்ளது.

  //ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”

  துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்//

  .நாம் தவறு செய்பவர்களை தண்டிக்காமல் அவர்கள் மனம் திருந்தும் படி தக்க பாடம் புகட்ட வேண்டும். இயேசுவே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லி இருக்கிறார்.

  மேலே உள்ள படத்தில் குழந்தையின் மன நிலையை பார்க்கும் பொழுது மிகவும் மனம் கனமாக உள்ளது. நம் நாட்டில் பாலியில் பலாத்காரம் குறைய வேண்டும். அப்பொழுதான் நாடு மேன்மை பெரும்.

  இந்த வார பிரார்த்தனைக்குத் தலைமை ஏற்கும் குரள் மகனுக்கு எமது வாழ்த்துக்கள் அவர் மேலும் பல விருதுகளைப் பெற இறைவன் அருள் புரிய வேண்டும்.

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். மற்றும் நாடு முன்னேற்றம் அடைய இறைவனை பிரார்த்திப்போம். கூட்டுப் பிரார்த்தனை மிகவும் வலிமை வாய்ந்தது.

  //பிரார்த்தனை செய்து கேட்கும் கடமை நம்முடையது. கொடுக்கும் உரிமையோ இறைவனுடையது. தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் அதற்கு பலன் ஒன்று இந்த உலகில் கிடைக்கும் . மனித குலம் எல்லா வளமும் நலமும் பெற்று நேர் வழியில் வாழ்ந்திட இறைவன் அருள் புரிவார்.//

  லோக சமஸ்த சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா

 2. வணக்கம்

  எங்குமே முதலாளிகள் மன நிறைவோடு இருந்தால் மட்டுமே தொழிலாளிகளும் நன்றாய் வாழ முடியும்.

  மேலும் குழந்தைப் பருவத்திலேயே நற்குணங்களை வளர்ப்பதால் மட்டுமே ஒருவரை நல்லவராக ஒழுக்கமனவராக ஆக்க முடியும்.

  இறைவன் திருவருளால்அனைவரும் நலமாய் வாழ, நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.

 3. இன்று வரலக்ஷ்மி நோன்பு.
  காலையிலே பூஜையை முடித்து விட்டு நமது வாசக அன்பர்களுக்காகவும், அன்பர்களின் கோரிக்கைகளுக்காகவும் மகாலட்சுமி தாயாரிடம் மனமுருக வேண்டிக்கொண்டோம்.

  இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் குட்டி குறள் மகன் அவர்கள் வாழ்வில் எல்லாவித சௌபாக்கியங்களையும் பெற வேண்டும்.மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது.

  இந்த வார பிராத்தனைக்கு கோரிக்கை வைக்கும் திருமதி. பிரபா அவர்களுக்கு , எல்லாம் வல்ல பரம்பொருளின் கருணையினால் கூடிய விரைவில் சகல சௌபாக்கியங்களுடன் மழலை செல்வம் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.

  பொது பிராத்தனை கோரிக்கையை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. பெண்களுக்கு எதிரான அநீதிகள் கண்டிப்பாக குறைய வேண்டும்.

 4. நம் வாசகர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் யாவும் சிறந்த முறையில் இயங்க வேண்டுமெனவும்

  திருமதி பிரபா அவர்கள் அழகான ஆரோக்கியமான குழந்தைச் செல்வத்தினை வெகு சீக்கிரத்தில் பெறவேண்டுமெனவும்

  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாதொழிய வேண்டுமெனவும் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் மனித நேயத்தோடும் இறையுணர்வோடும் வாழ வேண்டும் என பிரார்த்திப்போம்

 5. இவ்வார பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் மிகமிக அதிகமானவர்களின் வேண்டுகோள். ஆகையால் இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் மற்றும் இதேபோல் கோரிக்கைகளைக் கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளூம் நிறைவேற மகப்பெரியவா அவர்களின் பாதம் பணிகிறேன்.

 6. பிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேற இறைவனை பிரார்த்தித்து கொண்டேன்.

 7. பிரபா அவர்கள்,திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருகோயில் சென்று அங்கு[ காலை 8,9 அல்லது 10 மணிக்கு மட்டுமே தினமும் ]பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் செய்து கொள்ளவும் .[அலுவலகத்தில் 700 ரூபா கட்டணம்]…இந்த பரிகாரம் செய்தால் தங்களின் முன் ஜென்ம தோசம் ஏதேநும் இருந்தால் முற்றிலும் அகன்று விடும் . அங்கு உள்ள அஸ்வமேதப் பிரகாரம், கொடுமுடிப் பிரகாரம் 5 முறை வலம் வரவும் .பின்பு அங்கிருந்து உடனே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்[முக்குளம் ]நீராடி சுவாமி ,அம்பாள் ,புத பகவான் ,பிள்ளை இடுக்கி அம்மன் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும் .பின்பு அங்கிருந்து மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள புத்திர காமேஸ்வர் தீர்த்தத்தில் நீராடி ஈசன் ,புதிய,பழைய அம்பாள்கள் அபிசேகம் ,அர்ச்சனை செய்து ,வெளி பிரகாரத்தில் தனி சன்னதி மற்றும் விமானத்தின் கீழ் உள்ள புத்திர காமேஸ்வர் அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட்டு நெய் தீபம் ஏற்றி ,5 முறை வலம் வரவும் ..பின்பு அருகில் உள்ள திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் சென்று சுவாமி ,அம்பாள் வழிபட்டு ,பின்பு மூலவர் மாசிலாமணீஸ்வரர் அருகில் உள்ள தனி சன்னதியில் கோயில் கொண்ட புத்திரத் தியாகேசர்[இவர் முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிநார் ] அபிசேகம் ,அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி வழிபடவும். அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் திருமடம் சென்று திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானதிடம் ஆசி வாங்கி வரவும் …பின்பு அதே நாளிலோ அல்லது ஒரு அமாவாசை தினத்திலோ கும்பகோணம் சுவாமி மலை அருகில் உள்ள திருக்கருகாவூர் சென்று , இந்த கோவிலில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜித்துத் தரப்படும் நெய்யை இரவில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். [கண்டிப்பாக 48 நாட்கள் சாப்பிட வேண்டும் ,அசைவம்,மது ,புகை கூடவே கூடாது .பெண்கள் வீட்டுவிலக்கு நாட்களில் மட்டும சாப்பிட வேண்டாம் ..ஆனால் ஆண்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் ] . திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் திருகோயில் செல்லும் போழ்து அருகில் உள்ள ஆவூர் பசுபதிஸ்வரர் திருகோயில் சென்று அங்கு உள்ள பஞ்ச பைரவர்களையும்[ஐந்து பைரவர்கள் ] நெய் தீபம் ஏற்றி ,அர்ச்சித்து வழிபடவும் …தினமும் வீட்டில் காலை ,மாலை யும் “திருவிளையாடல் புராணம்” அதில் வரும் மதுரைக் காண்டம் 4-வது பகுதியில் உள்ள “தடாதகை பிராட்டியின் பிறப்பு ” மற்றும் 11-வது பகுதியில் உள்ள “உக்கிர பாண்டியன் பிறப்பு “இரெண்டையும் பாடலாகவோ அல்லது உரைநடையாகவோ பாராயணம் செய்து வரவும் ..திருமுறை பதிகமும் 48 நாட்கள் வீட்டில் எப்போதும் படித்து வரவும் …

  திருச்சிற்றம்பலம்

  கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
  பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
  பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
  வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

  பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
  வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
  வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
  தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

  மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
  எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
  பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
  விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

  விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
  மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
  தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
  கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

  வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
  மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
  மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
  ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

  தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
  ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
  பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
  வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

  சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
  அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
  மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
  முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

  பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
  உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
  கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
  விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

  கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
  ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
  வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
  உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

  போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
  பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
  வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
  றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

  தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
  விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
  பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
  மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே

  திருச்சிற்றம்பலம்

  ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *