Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, June 18, 2024
Please specify the group
Home > Featured > கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

print
சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது கோ-சேவை. கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது. தயங்கவும் கூடாது. பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார். வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி. அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது. எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.

ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.

Ramanar - ko sala

பகவான் ரமணர் அவரை பார்த்து, “நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய். ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு. சாணத்தை அள்ளிப்போடு. கோ-சாலையை சுத்தம் செய்!” என்றார்.

செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு, ஆஸ்ரமத்தின் கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.

பசுவின் சாணம், கோமியம் ஆகியவை நம் மேல்படுவது, பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும் சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன? தீராத தோல் நோய் உள்ளவர்கள், உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.

அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு. ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே. ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும், பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?

சென்ற வாரம் நம்முடன் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு வந்த நண்பர் செந்தில் கோ-சாலையில்....
சென்ற வாரம் நம்முடன் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு வந்த நண்பர் செந்தில் கோ-சாலையில்….

* காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.

* பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.

பசு காயத்ரீ மந்திரம்

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

* 1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் அவன் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றிவிடுவான்.

* வீடுகளில் கிரகப் பிரவேசத்தின் போது பசுக்களை உள்ளே அழைத்து வருவது ஏன் தெரியுமா?

பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.

மேலும் பசுவானது அந்த கிரகத்தில் நுழையும்போது, அந்த கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியடைகின்றன. பசுவின் மூச்சுக் காற்று, அந்த இல்லத்தில் உள்ள துர்தேவதைகளை விரட்டிவிடும்.

* நம் வாசகி ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் அவரது  உடன்பிறந்த ஒருவர் வீட்டில் அவரது மகன் அகால மரணம் அடைந்தையையொட்டி மனமாற்றத்துக்கு ஏதேனும் பரிகார பூஜை செய்ய விரும்புகிறார்கள் என்றும் என்ன செய்யலாம் என்றும் நம்மிடம் கேட்டார். நாம் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட் இல்லையென்றாலும் நமக்கு தெரிந்த ஒரு தகவலை சொன்னோம்.

“பரிகாரம், மாந்த்ரீகம், அது இது என்று பணத்தை வீணாக செலவு செய்யவேண்டாம். கணபதி ஹோமமும் நவக்கிரக ஹோமமும் வீட்டில் செய்யச்  சொல்லுங்கள். பசுவை கன்றோடு வீட்டுக்கள் அழைத்து வந்து அனைத்து அறைகளுக்கும் அது சென்று அதன் மூச்சு காற்று அந்த கிரகத்தில் தாராளமாக படும்படி செய்யுங்கள். அது போதும். அந்த இல்லத்தில் உள்ள  தோஷங்கள் அனைத்தும் போய்விடும்!” என்றோம். (வீடு தரைத் தளத்தில் இல்லாமல் மாடியில் இருப்பவர்கள், கோமியத்தை வாங்கி வந்து, மாவிலை கொண்டு வீடு முழுவதும் தெளிக்கவேண்டும்!)

DSC00989

மஹா பெரியவா கூறிய அமுத மொழி

Periyavaதெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். ‘கோ க்ராஸம்’ என்று இதை சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாய் ஆஹாரம்.

கோ க்ராஸம்’ என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்று பெயர் வந்திருக்கிறது. திருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.

மேற்கூறிய மந்திரம் வேதத்திற்கு நிகரான மந்திரம் ஆகும்.

==============================================================

Also check :

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

[END]

12 thoughts on “கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

 1. பசுவிற்கு செய்யும் சேவை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் செய்யும் சேவையாகும். நம் தளமும் ஒவ்வொரு உழவாரப் பணிக்கும் பசுவிற்கு உணவளித்து விட்டு வேலையை தொடங்குவதை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  மாதா மாதம் நம் தளம் செய்யும் கோ சம்ரோக்ஷனத்தினால் நம் தளம் வெகு விரைவில் உச்ச நிலையை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

  நன்றி
  உமா

 2. வணக்கம்…

  அருமையான பதிவு….. பசு மடம் அருகில் இருந்தும் இதுவரை சென்றதே இல்லை…. செல்ல வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறது. எங்கள் மகளுக்கு கூட தோல் அலற்சி இருக்கிறது…….கோமாதா குணப்படுத்த வேண்டும்….

  தாமரை வெங்கட்

 3. கோ ஸேவை செய்வதால், த்ரிமூர்த்திகள் முதலான ஸகல தேவதைகளும் த்ருப்தியடைகிறார்கள் என்று சாஸ்த்ரங்களும், இதிஹாஸ புராணாதிகளும் கூறுகின்றன. உதாரணமாக பவிஷ்யத் புராணத்தில்,

  “பசுவின் கொம்பின் ஆரம்ப பாகத்தில் ப்ரம்மாவும், விஷ்ணுவும், தலையின் நடுவே மஹாதேவனும் குடிகொண்டிருக்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது

 4. நாங்கள் நகரத்தின் நடுவில் குடியிருந்தாலும், அரசுக்குடியிருப்பு என்பதால் சுற்றுப்புறம் பராமரிப்பு செய்யாமல் குப்பையும் கூளமுமாக இருக்கும். நாமே செய்யலாம் என்றாலும் உடன் குடியிருப்போர் அதற்கு ஒத்துவருவதில்லை. ஆகையால் அடிக்கடி வீட்டிற்குள் பூராண் வந்துவிடும். கடந்த மூன்று மாதமாக வீட்டிற்கு, பசுவின் கோமியம் வாங்கி வந்து தெளித்து வருகிறேன். தற்பொழுது அத்தொல்லை இல்லை. பசுவைப்பற்றிய மேலும் பல தகவல்களை அறிய முடிந்தது. நன்றி!.

 5. நல்ல கட்டுரை. வெளி நாட்டில் (சொல்லவே கஷ்டமாக உள்ளது) கொல்லப்படும் மாடுகள் – ஒன்றல்ல இரண்டல்ல. அவை தடுத்து நிறுத்த பட வேண்டும். பிரார்த்தனையால் மட்டுமே இது இயலும்.

 6. 35 வருடங்களுக்கு முன்னால் என் பாட்டி தினமும் பசுவுக்கு உணவும் குடிக்க தண்ணீரும் ஏன் கொடுத்தார்கள் என்று இப்போது புரிகிறது. மிகவும் உபயோகமான பதிவு.

 7. வணக்கம் சார்,
  இங்கே ஒரு தகவலை பதிவு செய்ய விருப்படுகிறேன் .
  எனக்கு தெரியவில்லை எனது முன்னோர்கள் செய்த தவறா என்று.
  .என்னுடைய தனிப்பட்ட பிரச்னையே குறுப்பிட விரும்ப வில்லை.பல கஷ்டங்களுக்கும் பல இன்னல்களுக்கும் ஆளனேன், இன்று ஓர் அளவுக்கு நல்ல இருக்கேன். சார் சொன்ன மாதிரி பசுக்களுக்கு, ,காகத்துக்கு,எறும்புகளுக்கு,என்னால் முடிந்த அளவுக்கு உணவு கொடுத்து வருகிறேன். ரோடு ஓரம் படுக்கிட்டி இருந்த நான் இன்று நிம்மாதியான உறக்கம்,உணவு,மாதம் ஒரு முறை ஆன்மிக பயணம் என்று நல்ல இருக்கிறது,
  எதற்கு இதை சொல்லுகிறேன்ரால். நான் இப்படி செய்தனால் தான் என்னுடைய பாவங்களை போக்கி நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது மட்டும் அல்ல இன்னும் பல வினோதங்கள் நடந்து உள்ளது. ஓம் ஸ்ரீ சரவணா பவ . நன்றி சார் .

 8. வாசித்த கதை:

  மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல் பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம் அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால், அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின் மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி.

  நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன். செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள். மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது, அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும் புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக் கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில் கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு புராணத்தில் இருக்கிற தகவல். ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம் பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.

  ஆதிசங்கரரிடம் அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.

  1. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

   இதிலிருந்து இரண்டு விஷயங்கள் புரிகிறது.

   கண்ணனுக்கே அதுவும் ஒரு அரக்கியை கொன்றதற்கே பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

   அப்படி கடவுளுக்கே பிடிக்கும் பிரம்மஹத்தி தோஷத்தை பசு நிவர்த்தி செய்கிறது என்றால் அது எந்தளவு ஒரு பரிசுத்தமான உயிரினமாக இருக்கவேண்டும்…!

   – சுந்தர்

 9. கோ என்னும் ஜீவனுக்குள், சகல ஜீவ பாவ நிவர்த்தி சக்தி இருப்பதை உணர்ந்தேன்,கோ மாதவின் தாழ் பணிவோம்.

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *