Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!

print
ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவன். இவன் மனிதப் பிறவியில் உயர்வு, தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையேயும் வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பேரருளாளன் இவன். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்திருக்கும் ‘துலுக்க நாச்சியார்’ சந்நதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும். ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள் பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிருபித்த சம்பவம் இது.

DSCN2669

முகலாயர்களின் முதல் படையெடுப்பின்போது இந்த ஸ்ரீரங்கத் திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சுல்தானின் படைகள் திருவரங்கத்தை நெருங்குவதை அறிந்துகொண்ட பக்தர்கள், மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒரு தற்காலிக சுவற்றை எழுப்பி அதன் முன் உற்சவரான நம்பெருமாளை வைத்துவிடுகின்றனர். கோவிலை சூறையாட வந்த மாலிக் கபூரின் படையினர் உற்சவர் நம்பெருமாளின் விக்ரகத்தை தில்லிக்கு தூக்கிச் சென்று விடுகின்னர். தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த சுல்தானிடம் (அப்துல்லா உசேன் கசன்பி) அந்த விக்ரகம் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. (தென்னிந்திய படையெடுப்பை முடித்துவிட்டு மாலிக் கபூர் தில்லி திரும்பி செல்லும்போது 241 டன் தங்கம், 20,000 குதிரைகள், 612 யானைகள் ஆகியவற்றை கொண்டு சென்றானாம்!)

அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள், அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி, தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அதுமட்டுமல்ல, அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.

அப்போதெல்லாம் இது போல கைப்பற்றப்படும் தங்க நகைகளை ஆபரணங்களை ஒன்றாக சேர்த்து உருக்கிவிடுவார்கள். தமது படையினர் இவ்விதம் சூறையாடி கைப்பற்றி வந்த அனைத்து தங்க நகைகளையும் பொருட்களையும் ஒன்றாக உருக்கி தனது கஜானாவில் சேர்க்கும்படி சுல்தான் ஆணையிட, சுல்தானின் அன்பு மகள் நம்பெருமாளை உருக்கவேண்டாம் என்றும், தாம் ஒரு பொம்மை போல விளையாடுவதற்கு தந்துவிடும்படியும் தன் தந்தையிடம் மன்றாடி கேட்க, மகளின் வேண்டுகோளுக்கு இரங்கி சுல்தான் அதை உருக்காது தந்துவிட்டார்.

Namperumalநம்பெருமாள் விக்ரகத்தின் மீது பேரன்பு செலுத்தும் சுல்தானின் மகள் அந்த விக்ரகத்தை விட்டு நொடிபொழுதும் கூட பிரிய மனமின்றி தவிக்கிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத சுல்தான், மகளின் அரங்கன் மோகத்தை முறிக்க நேரம் பார்த்து காத்திருக்கலானார்.

இந்நிலையில் அரங்கனின் உற்சவர் விக்ரகம், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த திருக்கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தானும் அவர்களை தில்லி வரை பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.

திருவரங்கத்து வாழ் பெரியோர்கள் நம்பெருமாளை எப்படி மீட்பது என ஆலோசித்தனர். கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல் என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர். அதில் சிறந்தவர்களில் 60 பேர் பாதுஷாவின் மாளிகைக்குச் சென்றனர். புகழ் பெற்ற ‘ஜக்கிந்தி’ நடனம் ஆடினார்கள். மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார். அதை “வேண்டாம்” என்று கூறிய நடன குழுவினர் “எங்கள் அரங்கன் சிலையை பரிசாகத் தாருங்கள்” என்று கேட்டார்கள்.

வெறும் சிலை மட்டும் கேட்கிறார்களே என வியந்த பாதுஷா, அந்தபுரத்திலிருந்து எடுத்துக்கொள்ள கூறினார். சுரதானிக்கு தெரியாமல் இவர்கள் அரங்கன் சிலையை கொண்டு வந்துவிட, சுரதாணி அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள்.  பித்து பிடித்தவள் போல ஆனாள். அவள் நிலை கண்ட பாதுஷா கலவரமடைந்து, அரங்கனை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார்.

அரங்கனைக் காண வேண்டும் எனும் ஆசையில் சுரதாணியும் படைகளோடு சென்றாள். படைகள் வருவதை அறிந்த நாட்டியக் குழு திருவரங்கம் செல்லாமல், ஒன்றாக சென்றால் அகப்பட்டு கொள்வோம் என மூவர் மட்டும் பிரிந்து அரங்கனை எடுத்துக் கொண்டு திருமலை சென்றார்கள்.

அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மறைத்து வைத்தார்கள். வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுரதாணி அரங்கனைக் காணாமல், மிகுந்த துயரம் அடைந்தாள். துக்கம் தாங்காமல், கோவிலின் முன் மயங்கி விழுந்து உயிர் துறந்தாள். அப்போது அங்கு அரங்கனின் விஸ்வரூபம் தோன்றியது. சுரதாணியின் உடலில் இருந்து ஒரு ஒளி கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.

Tulukka Nachiyarபல்லாண்டு காலம் திருமலையில் மறைந்து இருந்த அரங்கன், ஒரு சோழ மன்னனால் திருவரங்கம் கொண்டு வரப்பட்டு மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். சோழமன்னனின் கனவில் தோன்றி சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும் படி அரங்கன் கூறினான். அதன்படி சோழ மன்னன், அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில் ஒரு சன்னதி அமைத்து, அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை தீட்டச் செய்தான்.

இன்றும் கோவில் இரெண்டாம் பிரகார வடகீழ் மூலையில் சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார்.

பீபீ நாச்சியார் சந்நதியில், இந்தத் தாயாருக்கு இன்றும் ரொட்டி, கீரை வகைகள் நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன. அதோடு, மார்கழி மாதம் ஏகாதசி திருவிழா பகல் பத்து திருநாளில் உற்சவர் ரங்கநாதர், கைலி (லுங்கி) அணிந்தபடி, துலுக்க நாச்சியாருக்கு காட்சி அருள்கிறான். அரங்கன் எழுந்தருளும் போது சுரதாணிக்கு நன்றாக காட்சி கொடுக்கும் நோக்கில் திருப்பாதம் தாங்கிகள் அரங்கன் வீற்றுள்ள தோளுக்கினியானை உயரத் தூக்கிப் பிடித்து படியேற்ற சேவை சாதித்து அங்குள்ள ‘அர்ஜுன மண்டபத்தில்’ அரங்கனை எழுந்தருளச் செய்கிறார்கள். துலுக்க நாச்சியார் மண்டபத்தில் முகமதியர் வழக்கப்படி அகில், சந்தன பொடி தூவி தூப புகை போடப்படுகிறது.

இன்றும்  நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, துலுக்க நாச்சியாருக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு அரங்கனுக்கு படைக்கப்படுகிறது.

(* இதெல்லாம் 12 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள். துலுக்க நாச்சியாரின் தியாகத்தையும் அரங்கன் மீது அவள் கொண்ட பக்தியையும் உணர்ந்து பூஜை உட்பட சகல மரியாதைகளும் அவளுக்கு தொடர்ந்து கிடைக்குமாறு ஒரு நடைமுறையை ஏற்படுத்தி தந்தவர் ராமானுஜர்.)

மனிதர்கள் மதம் பார்க்கலாம். ஜாதி பார்க்கலாம். ஆண்டவன் பார்ப்பானா? அன்பைக் கொண்டு அடியவர்களை அளப்பவனுக்கு சுரதானாவும் ஒன்று தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் ஒன்று தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. கொண்டாடியது சுரதானா. ஆகையால்தான் அவரை நாம் கொண்டாடுகிறோம்.

அடுத்த முறை அரங்கனை தரிசிக்க திருவரங்கம் சென்றால், மறக்காமல் அன்னை துலுக்க நாச்சியாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள்.

இஸ்லாமிய அன்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்!

(ஆக்கத்தில் உதவி : Dinakaran.com, Arivomaanmeekam.blogspot.in)

===================================================================

Also check: சென்ற ஆண்டு ரம்ஜான் சிறப்பு பதிவுகள்

தேவை இன்று ஒரு கபீர்தாசர் – ரம்ஜான் சிறப்பு பதிவு !

திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்! ரம்ஜான் ஸ்பெஷல் 2
===================================================================

[END]

8 thoughts on “அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!

  1. வணக்கம்…..

    “அன்பைக் கொண்டு அடியவர்களை அளப்பவனுக்கு சுரதானாவும் ஒன்று தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும் ஒன்று தான்”.

    கண்களில் கண்ணீர் பெருகுகிறது. நாம் எப்போது இவ்வாறு இறைவன் மீது அன்பு செலுத்த போகிறோம் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

    முகமதிய நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள் ….

    தாமரை வெங்கட்

  2. பதிவு அருமை!

    அவனருளாலே அவன்தாள் வணங்கி… சுரதாணி நாச்சியார் கதை அருமை ….

    பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமலான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த ரமலான்!

  3. வணக்கம் சார்,

    நல்ல பதிவு.

    எனக்கு தெரிந்த ஒருவர் என்னிடம் சொன்னது. பலர் இதை செய்து தங்களுடைய வாழ்கையில் நல்ல முறையில் உள்ளனர். நானும் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த பெருமாள் புண்ணியத்தில் நல்ல முறையில் இருக்கிறேன்.வருடத்தில் மாதம் ஒரு முறை எதாவது தமிழ் மாதத்தில் ஒரு திங்கள் கிழமை கண்டிபாக திருப்பதி ஏழுமைலயனை பார்க்க வேணும் இப்படி 12 மாதங்கள் பார்த்தல் நம்முடைய செல்வ செழிப்பு உயரும். நான் அந்த பெருமாள் புண்ணியத்தில் 9 மாதங்கள் பார்த்துவிட்டேன். இன்னும் 3 மாதங்கள் உள்ளன. நிறையவே மாற்றங்கள்.
    குறிப்பு: அப்படி போக முடியாதவர்கள் எப்பயாவது திருப்பதி ஏழுமைலயனை சென்று வந்தால் உடனே ஸ்ரீ ரங்கம் சென்று ஸ்ரீரங்கத்து பெருமாளை பார்க்கா வேண்டும்.
    நம்பிக்கையோடு செய்தல் நற்பலனை தருவார்.

    வாழ்த்துக்கள்.

    நன்றி சார்.

  4. நண்பர்கள்அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்…

    விஜய் ஆனந்த்

  5. துலுக்க நாச்சியாரின் கதையை படிக்கும் பொழுது இறைவன் அவரை தடுத் தாட் கொண்ட நிகழ்வை பார்க்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. இறைவனிடம் அன்பு செலுத்து வதற்கு ஜாதி மதம் தடை இல்லை

    இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா

  6. அருமையான பதிவு …..

    “லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே
    ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே
    க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே
    ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோமே.”

    சிவாய நம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *