இருப்பினும், நம் தளத்தில் வரலக்ஷ்மி விரதம் குறித்து பதிவு ஒன்று வந்தேயாகவேண்டும் என்று நம் வாசகியர் சிலர் அன்புக்கட்டளை இட்டுவிட்டார்கள். “இணையத்தில் தான் இது குறித்து நிறைய இருக்கிறதே, நான் வேறு அளிக்க வேண்டுமா??” என்றேன். “பூக்களை கொண்டு பூஜை செய்வதற்கும், பூக்களையெல்லாம் சேகரித்து மாலை தொடுத்து பூஜை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நம் தளத்தில் வெளியாகும் பதிவு, மாலை போன்றது. மாலை தொடுக்க உங்களுக்கு தான் தெரியும். எங்களுக்கு தெரியாது. மேலும் இணையத்தில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் நிறைய உள்ளது. இறுதியில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே நீங்களே தேர்ந்தெடுத்து ஒரு பதிவை போடுங்கள். இந்த ஆண்டு இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு உபயோகமாக இருக்கும்” என்றார். (வர வர நம்ம வாசகிகள் நல்லா பேச கத்து கிட்டாங்கப்பா!). எனவே மகளிர் அணியின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பதிவு.
சொன்னது போல, இவை சேகரித்து தொடுக்கப்பட்ட மாலை தான். இருப்பினும் பக்தியுடன் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நன்னாளில் அனைவரின் வீட்டிலும் சகல சௌபாக்கியங்கள் பெருகி இன்பங்கள் பொங்கட்டும்.
நாம் வேண்டுவதெல்லாம் பிறர் நன்மையே. அதுவும் குறிப்பாக நம் தள வாசகர்களின் நன்மையே.
(சமீபத்தில் அன்னையின் சன்னதியில் தனியாக ஒரு 15 நிமிடம் இருக்கும் வாய்ப்பு கிட்டியது. பொதுப் பிரார்த்தனை முடிந்த பின்னர் அன்னையிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. திரும்ப திரும்ப உங்கள் அனைவரின் நலனையே கேட்டேன்.)
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
இதோ வரலக்ஷ்மி விரதம் பற்றிய சிறப்பு பதிவு – ஒரு கதையுடன் !
==================================================
லட்சுமி பூஜை பற்றிய புராண கதை
பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.
லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..? மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.
பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.
வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றியவள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களையும் வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமைமிகுந்தவள். அதர்வண வேதத்தில் லட்சுமிதேவி அனைவருக்கும் நன்மையே செய்வாள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமி தேவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.
விரத முறை: இந்த விரதம் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபத்தை எழுப்பவேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி முகத்தை, தாழம்பூ சூட்டி ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கக்காசுகள் (முடியாவிட்டால் மஞ்சள் செவ்வந்தி) வைத்து சிலைக்கு புதிய மஞ்சள் நிற ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தில் சந்தனம் குங்குமம் இட வேண்டும். கும்பத்தின் மேல் மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின்பு ஐந்து வகை ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மஞ்சள் கயிறை வலதுகையில் கட்டவேண்டும். நைவேத்யமாக அம்மனுக்கு கொழுக் கட்டை படைக்கலாம். பூஜைக்குப் பின்பு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மறுநாள் லட்சுமி உருவத்தை நீர் நிலையில் கரைத்துவிட வேண்டும். அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு போல இன்றும் தங்க நகைகள் வாங்க நல்ல நாள். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
(நன்றி : தினகரன்.காம், தினமலர்.காம்)
லக்ஷ்மி ராவே மா இண்டிகி – Video
[END]
From our archives
=======================================
Also check :
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
=======================================
very usefull infermation for womens…thanks to rightmantra…
வரலக்ஷ்மி பூஜை பற்றிய விவரங்கள் மற்றும் கதையும் நன்றாக உள்ளது
சர்வ மங்களங்களையும் அளிப்பவள் மகாலட்சுமி.
அவளை ஆத்மார்த்தமாக தன் வீட்டு பெண்ணாக பாவித்து ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அன்புடன் வரவேற்று பூஜித்தால் சகல நலன்களும் நமக்கு கிடைக்கும்.
எங்கள் வேண்டுகோளுக்காக போட்டாலும் உங்கள் மனதில் உள்ள எங்கள் மேல் உள்ள பற்றும் மதிப்பும் புரிகிறது. நன்றி சார்.
ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை பற்றிய விவரங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
Sunder sir, Very good and useful information about varalaxmi pooja. May Laxmi-ma bless you.
Actually, we don’t have the custom to celebrate the varalaxmi pooja in my family (from both and in-laws ) side . But I very much interested to do the pooja. Can I perform the pooja from next year? Will it possible without the custom? Please clarify my doubt.
Sure. By God’s grace well in advance i will post an article. And moreover, don’t worry about customs. Your love and compassion towards God and the needy is more important.
– Sundar
அருமையான பதிவு !!!
திருமகளின் பூஜை தோன்றிய விதத்தையும், பூஜையின் விதிமுறைகளையும் , அன்னையை அலட்சியப்படுத்தியதால் விளைந்த இன்னல்களையும் விளக்கி லக்ஷ்மி பூஜை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி !!!
திருமகள் அருள் பெறுவோம் – துன்பங்கள் நீங்கி வளமோடு வாழ்வோம் !!!