Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…

சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…

print
மக்கு ஒருவர் எதுவும் திருப்பி செய்ய முடியாது என்கிற நிலையில் நாம் அவருக்கு செய்யும் உதவி தான் உண்மையான உதவி. சொல்லப்போனால் அதுதான் உண்மையான தருமமும் கூட.

‘தர்மம்’ என்றால் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மேல் தர்மம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை.

தர்மம் என்பதன் அர்த்தம் ‘வாழும் முறை’. அது ஒரு நெறிமுறைகளின் தொகுப்பு. ‘தானம்’ என்பது அதில் ஒரு அங்கம். நம்மை சுற்றியுள்ள நம்மை சார்ந்து நமது வாழ்க்கை சிறக்க உதவுபவர்களுக்கு பிரதியுபகாரம் பாராமல் ஏதாவது செய்யவேண்டும். அது தான் தர்மம்.

நாம் காலை எழுவதிலிருந்து திரும்ப உறங்கச் செல்லும்வரை, நமது வாழ்க்கையை சீராக கொண்டுசெல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனையோ பேர் உதவுகிறார்கள். அவர்கள் செய்யும் உதவியை அவர்கள் நேரடியாகத் தான் செய்யவேண்டும் என்பதில்லை. அவர்கள் கடமையை அவர்கள் தவறாமல் செய்வதே நமக்கு உதவி தான். உதாரணத்துக்கு தபால்காரர்கள், குப்பை அள்ளுபவர்கள், துப்புரவு பணியாளர்கள், விவசாயிகள் போன்றோர்கள்.

இவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் திருப்திபடுவதே உண்மையான வழிபாடு. இறைவனை நேரடியாகச் சென்று சேரும் வழிபாடு.

இது தான் சந்திரமௌலீஸ்வரர் பூஜை !

மகா பெரியவா ஒரு முறை சாதுர்மாஸ்ய விரதத்தின்போது சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்த நேரம் கலவை என்று நினைக்கிறோம் அவரை தரிசிக்க சுற்றுப்புறங்களில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துவிட்டனர்.

“சாமி இங்கே இருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்” என்றனர் பணிவுடன்.

நாம் சோற்றில் கை வைக்க தாங்கள் சேற்றில் கால் வைக்கும் இந்த விவசாயிகளுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதிய பெரியவா அவர்களை உபசரித்து பிரசாதம் கொடுத்து சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்காக அன்பர்கள் கொடுத்திருந்த, சேர்த்து வைத்திருந்த வஸ்திரங்களை எல்லாம் ஒன்று விடாமல் அவர்களுக்கு கொடுத்து ஆனந்தப்பட்டார். அதற்கு பிறகு அன்று சந்திரமௌலீஸ்வரர் பூஜையை செய்யவில்லை. சிப்பந்திகள் கேட்டதற்கு : “இதோ இப்போ பண்ணினது என்னன்னு நினைச்சே… இவாளுக்கெல்லாம் வஸ்திரங்கள் கொடுத்தேனே இதுவே சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான்…” என்றாராம்.

சாஸ்திர சம்பிரதாயங்களை பெரிதும் மதிக்கும் ஸ்ரீமடத்தில் நடந்தது இது. இதன்மூலம் மடத்து சிப்பந்திகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பெரியவா மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற மாபெரும் உண்மையை உணர்த்தியிருக்கிறார் என்றால் மிகையல்ல.

*************************

இதற்கிடையே சென்ற மாதம் ஒரு நாள் மாலை ஒரு வேலையாக எங்கோ போய்விட்டு நமது அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மேற்கு மாம்பலம் பரோடா தெரு வழியாக நாம் வரும்போது அங்கே துப்புரவு பணியாளர்கள் சிலர் பணி செய்து கொண்டிருந்ததை பார்த்தோம். பொதுவாக இவர்களை போன்றவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு அந்த நேரத்தை பொறுத்து டீ, காபி அல்லது உணவு வாங்கித் தருவது நமது வழக்கம்.

DSC08980

அவர்களிடம் பேசியபோது மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் கால்வாய்களில் உள்ள அடைப்பை எடுக்கும் ஒப்பந்தப் பணிக்கு வந்திருப்பதாக கூறினார்கள்.

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரித்து அவர்களுக்கு டீ சாப்பிட கொஞ்சம் பணம் கொடுத்தோம்.

இவர்கள் மொத்தம் ஏழு பேர் இந்த ஒப்பந்தப் பணிக்காக வந்திருந்தனர்.

“பலகாரம் ஏதாச்சும் வாங்கி கொடுத்தா சாப்பிடுவீங்களா?”

மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்கள்.

உடனே நமது அலுவலகம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் சென்று அனைவருக்கு ஒரு ஸ்வீட் போளியும் போண்டாவும் வாங்கிச் சென்று கொடுத்தோம்.

நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.

அன்று மாலை வீட்டுக்கு புறப்படும்போது மீண்டும் அவர்களை பார்க்கச் சென்றோம். சாப்பிட்டார்களா நன்றாக இருந்ததா என்று விசாரிக்க.

“ரொம்ப நல்லா இருந்துச்சு சார்… ரொம்ப நன்றி” என்றார்கள் அங்கிருந்த பெண்ணும் அவர் கணவரும்.

*************************

அடுத்த நாள் ஆடிக்கிருத்திகை. ஒவ்வொரு ஆடிக்கிருத்திகைக்கும் குன்றத்தூர் சென்று முருகனை தரிசித்து நம்மால் இயன்ற எளிய அறப்பணிகளை செய்வது நமது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகைக்கு அன்றைய கமிட்மெண்ட்ஸ் காரணமாக குன்றத்தூர் அல்ல வேறு எங்கும் கூட செல்லமுடியவில்லை. ஆடிக்கிருத்திகை நமக்கு தவறியதில்லை என்பதால் மனதுக்கு என்னவோ போலிருந்தது.

அந்நேரம் சட்டென்று அந்த துப்புரவு பணியாளர்கள் நினைவுக்கு வந்தனர்.

அப்போதிருந்த மிச்ச சொச்ச பணிகளை முடித்துவிட்டு அவர்களை பார்க்கச் சென்றோம்.

DSC08989

நாம் சென்ற நேரம் பகல் சுமார் 12.30 இருக்கும். அவர்கள் பணியின் தீவிரம் புரிந்தது. சேற்றை அள்ளி அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தனர். நமக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. ஆனால் அவரோ இறங்கி மண்வெட்டியில் அனைத்தையும் அள்ளி கொட்டிகொண்டிருந்தார்.

(பிளாஸ்டிக் கழிவுகளை கவர்களை மழைநீர் வடிகாலில் விடுவதால் தான் இது போன்று அடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவற்றை சுத்தம் செய்வது யார்? இவர்களை போன்றவர்களுக்கு உதவ விரும்பினால் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக குப்பைத் தொட்டியில் போட்டாலே போதும்.)

முந்தைய நாளே நாம் அறிமுகமாகிவிட்டபடியால் முகமலர்ச்சியுடன் நம்மை பார்த்து வணக்கம் வைத்தனர் அனைவரும். பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு இன்னும் எத்தனை நாள் வேலை நடக்கும் என்ன ஏது என்று விசாரித்துக்கொண்டிருந்தோம்.

IMG_20160726_103341

சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு “இன்னைக்கு ஆடிக்கிருத்திகை. உங்கள் எல்லாரோட மதிய சாப்பாட்டுக்கு இதை வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ என்னால முடிஞ்சுது” என்று கூறி அவர்கள் கையில் ஒரு தொகையை கொடுத்தோம்.

அதை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

உடனே அந்த குழுவில் இருந்த சீனியர் ஒருவர் பின்னால் இருந்த கோவிலை காட்டி (ஒரு சிவன் கோவில் பின்னணியில் இருக்கிறது பாருங்கள்) “சாமி… நீங்கள் நல்லாயிருக்கணும் சாமி” என்று கையெடுத்து வணங்கினார். ஏனெனில், ஒரு சாண் வயிற்றுக்குத் தான் இவர்கள் இந்த வேலையெல்லாம் செய்கிறார்கள்.

DSC08985

இதற்கு மேலும் ஆடிக்கிருத்திகைக்கு முருகனை தரிசிக்க செல்லவில்லையே என்கிற வருத்தம் இருக்குமா என்ன? இதை விட சிறந்த வழிபாடு இருக்கமுடியுமா என்ன?

கிடைக்கும் கூலியில் பெருமளவு உணவுச் செலவுக்கே சென்றுவிடும் என்பதால் இது அந்த தொழிலாளர்களை பொறுத்தவரை மிகப் பெரிய உதவி.

இவர்களை போன்றவர்கள் இருப்பதால் தான் நாம் வீட்டில் நிம்மதியாக அமர்ந்து டீ.வி. பார்க்கமுடிகிறது. ஒரு குளியலுக்கு நூறு லிட்டர் தண்ணீர் செலவழிக்க முடிகிறது.

இவர்களை போன்றவர்கள் இந்த வேலைகளை செய்ய மறுத்துவிட்டால் என்ன ஆகும் சற்று யோசித்துப் பாருங்கள்?

லட்சங்கள் என்ன கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் எதிர்காலத்தில் சில வேலைகளை செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். எனவே நாம் செய்யும் இந்த சிறு உதவி அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க முடிந்தால் அதுவே பெரிய தருமம்.

DSC08983

மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை செய்யும் யாருக்கு நாம் உதவி செய்தாலும் (சாக்கடை சுத்தம் செய்பவர், துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனை / பிணவறை ஊழியர்கள், வெட்டியான்கள் போன்றோர்)  அதன் பன்மடங்கு பலனைத் தரும். பலன் கருதி இவற்றை நாம் செய்யக்கூடாது. இது நமது அத்தியாவசிய சமூகக் கடமை.

இது போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வது நமது வழக்கங்களில் ஒன்று. இதில் சற்று மெனக்கெட முடிந்தால் நேரம் செலவிட முடிந்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. #0031.

அடுத்த முறை உங்கள் பகுதியிலோ தெருவிலோ இது போன்ற துப்புரவு பணியாளர்கள் பணி செய்தால் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லாமல், ஒரு நிமிடம்அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் பணியின் தன்மையை கஷ்டத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நம்மைப் பற்றியும் கவலைப்பட நாலு பேர் இருக்கிறார்களே என்று அவர்களுக்கு தோன்றும். மேலும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர், டீ அல்லது காபி, முடிந்தால் உணவு இவற்றை வழங்குங்கள். இதற்கு லட்சங்கள் தேவையில்லை. சில நூறு ரூபாய் போதும். ஆனால், இதில் கிடைக்கும் மனநிறைவு அனுபவித்தால் தான் புரியும்.

சில தெருக்களில் சாலைகளில் இவர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள் வேலை செய்யும் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் பெரிய காம்பவுண்ட் கேட் இறுக மூடியிருக்கும். போர்டிகோவில் இரண்டு கார்கள் நின்றுகொண்டிருக்கும். யார் வீட்டு அடைப்பை சரி செய்ய இவர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுக்குள் அமர்ந்து டீ.வி. பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்கக் கூட இவர்கள் எத்தனை திண்டாடுவார்கள் தெரியுமா? சக மனிதர்களை புறக்கணித்துவிட்டு காசிக்கு போய் என்ன பயன், ராமேஸ்வரத்துக்கு போய் என்ன பயன்?

எனவே இவர்களைப் போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து மனிதத்தை நிலைநிறுத்துவோம்.

இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில் நமக்கு சற்று தயக்கம் உண்டு. கத்தியின் மேல் நடப்பது போல பாலன்ஸ் செய்யவேண்டும். கொஞ்சம் நமது வார்த்தைகளின் தொனி மாறிவிட்டாலும் தர்மத்தை தம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். இருப்பினும் நமது நோக்கத்தை அறிந்தவர்கள் நீங்கள் என்பதால் நமக்கு கவலையில்லை. ஒரு சில வாசகர்கள் நம்மிடம் பேசும்போது இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதாகவும் நாம் வெளியிட தயங்கவேண்டாம் என்றும் தாங்களும் இது போல செய்ய ஆரம்பித்திருப்பதாகவும் கூறுவதுண்டு. பதிவின் நோக்கமே ஒரு வினை ஊக்கியாக அமைந்து உங்களையும் இது போன்ற செயல்களில் ஈடுபடவைத்து அது தரும் மனநிறைவை உணரச் செய்வது தான் என்பதால் நமக்கு ஒரு சிறு ஆறுதல்.

மற்றபடி நாம் செய்யும் அனைத்தையும் வெளியே சொல்வதில்லை. சொல்ல நினைத்ததுமில்லை. அனைத்தும் ஈசன் அறிவான். அது போதும்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

சுவாமி விவேகானந்தர் இது பற்றி மிக அருமையாக கூறியிருக்கிறார்….

Swami-Vivekananda2மனத்தில் என்னவோ அமைதியில்லை. நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்களா சுவாமிஜி ?

ளைஞன் ஒருவன் ஒருநாள் சுவாமி விவேகானந்தரிடம் வந்து தியானம் பற்றிய தமது சந்தேகத்தைக் கேட்டான்.

“நான் நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். ஐபம் செய்கிறேன். குரு ஒருவரின் அறிவுரைப்படி தியான வேளையில் மனத்தை வெறுமையாக்க முயல்கிறேன். ஆனால் இத்தனை செய்தும் மனம் அமைதியுறவில்லை, கட்டுப்படவில்லை. இருந்தாலும் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டு தியானத்திற்காக அமர்கிறேன். கண்களை மூடி நீண்ட நேரம் தியானம் செய்கிறேன். மனத்தில் என்னவோ அமைதியில்லை. சுவாமிஜி, நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்களா?”

சுவாமிஜி கருணைக் குரலில் கூறினார்: “என் மகனே, என் வார்த்தைகளுக்கு நீ செவி சாய்ப்பதானால், முதலில் உன் அறையின் கதவைத் திற. வெளியில் வா. உன் பார்வையைச் சுற்றிலும் சுழலவிடு. உன் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏழைகளும் ஆதரவற்றவர்களும் வாடுகிறார்கள். உன்னால் இயன்ற அளவு அவர்களுக்குச் சேவை செய். ஒருவன் நோயுற்றுக் கிடக்கிறான், அவனைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவனுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய், அவனுக்குப் பணிவிடை செய். பசியில் வாடுகிறான், அவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உழல்கிறான், அவனுக்கு அறிவு கொடு; உன்னைப்போல் நன்றாகப் படிக்க வை. என் மகனே, உனக்கு என் அறிவுரை இதுதான் உனக்கு மன அமைதி வேண்டுமானால் இயன்ற அளவு மற்றவர்களுக்குச் சேவை செய்!” ¶¶

==========================================================

Also check : 

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அன்னதானம் என்கிற அருந்தவம்!

செய்யும் தானம் எப்போது பலனளிக்கும்? ஒரு கதை சொல்லும் நீதி!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்

==========================================================

[END]

 

4 thoughts on “சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…

  1. Dear SundarJi,

    Really this kind of articles needed.. we know you very well, so please don’t stop it publishing..

    Thanks,
    Rgds,
    Ramesh

  2. “சக மனிதர்களை தவிக்க விட்டுவிட்டு காசி ராமேஸ்வரத்திற்கு போய் என்ன பயன்?”

    முழுதும் சரியான வரி… Hats off to you Ji!

    அன்பன்,
    நாகராஜன் ஏகாம்பரம்

  3. கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, உண்மையை தவிர வேறில்லை. மற்றுமோர் மைல்கல் மற்றும் மனதின் கதவை தட்டும் பதிவு.

  4. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. தாங்கள் தர்மம் செய்வதை வெளியில் சொன்னதால் பலருக்கும் பயன்படும். தயவு செய்து தயங்க வேண்டாம். தங்கள் செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அசுத்ததில் கை வைக்கா விட்டால் நம் எல்லோர் வீடும் அசுத்தமாகிவிடும். கடவுளின் முதல் குழந்தை இவர்கள் தான். தங்கள் ஒவ்வொரு பதிவும் மக்களை வழிகாட்டவும் அவர்களை கலியுக கஷ்டங்கலிலிருந்து மீட்டெடுக்கவும் நம் புராணங்கள் மற்றும் பெரியொர்கள் காட்டிய வழிகளை பின்பற்றவும் ஆலோசனை அளித்து பதிவுகள் வெளியிட்டு எங்கள் எல்லோர் மனதிலும் நீக்கமற நிரைந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *