ஒரு சாதாரண சன்னியாசியின் வாழ்க்கையே இங்கே பல போராட்டங்களுக்கு உரியது என்றால் கடவுளின் வாழ்க்கை இங்கே எப்படி இருந்திருக்கும்? கண்ணன் தன் பால்ய வயதில் செய்த குறும்புகள், இளவயதில் நடத்திய விளையாட்டுக்கள், போர்முனையில் செய்த தந்திரங்கள் இவை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் பொறுமையும் அவர் பட்ட துன்பமும் யாருக்கும் தெரியாது.
கபடர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அவதரிக்க வேண்டிய நிலை என்பதால், ஸ்ரீவிஷ்ணு தனது மாயா சக்தியால் இந்த அவதாரத்தையே ஒரு நாடகமாக நடத்திக் காட்டினார்.
***********************
அது சரி கிருஷ்ணரின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்?
அது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மனக்குறை. இதை யாரிடம் சொல்லி மீட்சிபெறலாம் என்று சிந்தித்து ஈற்றில் மற்றவர் குறை போக்கும் மஹாவிஷ்ணுவிடமே சரணடைந்தனர்.
“மஹா பிரபோ எங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள் சுவாமி. அஷ்டமியாகிய என்னையும் நவமியாகிய இவளையும் யாருமே நன்நாளாகக் கண்டுகொள்வதில்லை, சுபகாரியங்களில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இந்த வேதனையை எங்களால் தாங்க முடியவில்லை. இத்துன்பம் போக்கவல்லவர் நீங்களல்லவோ” என்றிறைஞ்சி நின்றனர்.
மஹா விஷ்ணுவும் “கவலை வேண்டாம் உங்கள் குறைதீர வழி செய்தருள்வேன்” என்றாராம். அதன்படி ஒரு நவமித் திதியிலே ராமவதாரத்தையும் அட்டமித் திதியிலே கிருஷ்ணாவதாரத்தையும் மேற்கொண்டு பரமாத்மா இவ்வுலகம் உய்ய வழி செய்தாராம்.
அறியாமை மேலீட்டினால் அஷ்டமி, நவமித் திதிகளை ஒதுக்கி வைத்த மக்கள் அத்தினங்களிலே கோகிலாஷ்டமியையும் இராம நவமியையும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட மட்டும் தவறுவதேயில்லை. இறைவன் முன்னே எல்லோரும் சமமே. இங்கு உயர்வு தாழ்வுக்கு இடமேயில்லையென்ற உயர்ந்த தத்துவத்தை இந் நிகழ்வுகள் சொல்லாமல் சொல்கின்றனவல்லவோ.
விஷ்ணு பரமாத்மா பூமித்தாய்க்கு வரமளிக்க நினைத்தபடி ஆவணித் திங்கள் ரோகினி நட்சத்திரத்து அஷ் டமித் திதியில் அவதாரமானார்… அந்தப் புண்ணிய தினமே கோகுலாஷ்டமி என்றும், ஜன்மாஷ் டமி, கிருஷ்ண ஜெயந்தி என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வைணவ சம்பிரதாயத்தினர் இத்திருநாளை கண்ணன் பிறந்த ரோஹினி நட்சத்திர நன்நாளை ஸ்ரீஜெயந்தி என்று கொண்டாடுவர். மஹா விஷ்ணுமூர்த்தி யின் அவதாரங்களுள்ளே… கிருஷ்ணாவதாரம் மிகச் சிறந்த அவதாரமாகும்.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
பொருள் : தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும், தர்ம வழி நடக்கும் எளியோரைக் காக்கவும் யுகந்தோறும் அவதரிக்கிறேன்.
தனது தங்கையான தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று அசரீரி கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாகக் கருவுற்றதும், திருமால், மாயா தேவியைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபன் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாகு’ என்றார்.அதன்படி, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக எழுந்த பேச்சை கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் வளர்ந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாகக் கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார்.
பிறந்ததிலிருந்து துன்பப்பட்ட ஒரு ஜீவன் சரித்திரத்தில் உண்டென்றால் அது கிருஷ்ணர் தான். சிறைச்சாலையில் நடு இரவில் பிறப்பு. பெற்ற தாய் குழந்தையை அரவணைக்கும் முன்னர் தாயை பிரிந்து, புயல் மழை வீசும் நடு இரவில் தந்தை வசுதேவரால் கூடையில் தூக்கி செல்லப்பட்டு, இடி, மின்னல், பெரு வெள்ளம் என பலவித தடங்கல்களில், பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திலும் நதிநீரிலும் அலைகழிக்கப்பட்டு… அப்பப்பா… கிருஷ்ணனை தவிர வேறு ஏதேனும் ஒரு குழந்தை என்றால் அப்போதே எமலோகப்பட்டினம் போய் சேர்ந்திருக்கும்.
ஆயர்பாடியில் யசோதையின் கட்டிலில் கிருஷ்ணனை கிடத்திவிட்டு ஒரு ஏக்கப்பார்வை பார்த்துவிட்டு வசுதேவர் கிளம்புகிறார். இத்தனைக்கும் நந்தகோபனோ யசோதையோ வசுதேவருக்கு உறவினர்கள் கூட அல்ல. அந்த யோசதையும் பெற்ற அன்னையைவிட கண்ணனிடம் பேரன்பு காட்டி வளர்த்தாள். அந்த அன்பு கூட வளர்ந்து ஆளானபிறகு அவளை பிரியும் போது கண்ணனை வருத்தியது.
பால்ய பருவத்தில் கூட ஒவ்வொரு நாளும் கண்ணனை பல்வேறு ஆபத்துக்கள் தொடர்ந்து வந்தன. சற்று யோசித்து பாருங்கள். விஷம் தடவப்பட்ட முலைப்பாலை ஒரு குழந்தை குடித்தால் என்ன ஆகும்? அடுத்தடுத்து அவன் மாமன் கம்சன் ஏவிய அசுரர்கள் ஒரு குழந்தையை கொல்ல அணிதிரண்டால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு ஒவ்வொரு ஆபத்து.
வண்டிச் சக்கரமாக வந்த சகடாசுரன், கடத்த வந்த தீப்திகன், பாலூட்ட வந்த பூதகி, கொக்காக வந்த பகன், பாம்பாக வந்த ஆகா சுரன், கழுதையாக வந்த தேனுஜன், இடை யர்களாக வந்த பிரம் பலன்- வியோமன், காளையாக வந்த அரிஷ்டன், குதிரை யாக வந்த கேசி என பலரும் வஞ்சகமாக கண்ணனைக் கொல்ல வந்தனர். அத்தனை பேரையும் குழந்தைக் கண்ணன் விளையாட்டாகக் கொன்றான். காளிங்கனை மட்டும் அடக்கி மன்னித்துவிட்டான்.
குளத்தில் நண்பர்களுடன் விளையாடப் போனால், அங்கேயும் காளிங்கன் ரூபத்தில் ஒரு ஆபத்து. காட்டிற்கு போனால் காடு தீப்பற்றி எரிந்து அங்கு ஒரு ஆபத்து.
கண்ணனுக்கு இப்படி பல இடையூறுகள் வருவதைக் கண்ட ஆயர்பாடியினர் ஐந்து வயதான கண்ணனை அழைத்துக்கொண்டு பசுக் கூட்டங்களுடன் பிருந்தாவனம் சென்று விட்டனர்.
ஒவ்வொரு அடியையும் இப்படி ஆபத்துக்களை கடந்து கண்ணன் எடுத்து வைக்க, அவன் நண்பன் பிரம்மதேவனுக்கே கண்ணனின் தெய்வீகத் தன்மையில் சந்தேகம் வந்து அவனது நண்பர்களை கடத்திவிடுகிறான். பிறகு கிராமத்தினர் இந்திரா விழா கொண்டாடவில்லை என்பதற்காக இந்திரன் தன் வேலையை காட்டுகிறான். கோவர்த்தன கிரியையே குடையாக பிடித்து மக்களை காப்பாற்றுகிறான் கண்ணன். என்ன இருந்தாலும் குழந்தையல்லவா அவன்? விரல் வலிக்காதா?
அடுத்து கோபியர்களுடன் அவன் கொண்டிருந்த நட்பு. மிக மிக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதும் விமர்சிக்கப்பட்டதும் இது தான்.
உருவமில்லாத இறைவன் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டே பல வடிவங்களில் தோன்றி அருள் புரிகிறான். இறைவனுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள தொடர்பு ஆத்ம பந்தம் ஒன்றே என்ற தெளிவான புரிதலுடன் ராசலீலை என்னும் நிகழ்வை அணுகுதல் வேண்டும். இந்த கோபியர்கள் வேறு யாரும் அல்ல… வேதங்களில் உள்ள மந்திரங்களே என்று பாகவதம் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
(கண்ணனின் ராசலீலையின் மிகப் பெரிய ரசிகர் யார் தெரியுமா? நம்ம தலைவர் சிவபெருமான் தான். ராசலீலைக்கு பரமேஸ்வரன் அளிக்கும் விளக்கம் அப்பப்பா…! அது பற்றி வேறொரு பதிவில் நீங்கள் பார்க்கலாம். Please check : சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை – உண்மை சம்பவம் !)
சராசரி மனிதர்களை ஆட்டிப்படைக்கும், காமம், குரோதம், பேராசை, மாயை, அகந்தை என அத்தனை குணங்களும் கண்ணனுடன் ராசலீலையில் பங்கேற்றவர்களுக்கு தொலைந்தது. பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் இதில் பாலினத்துக்கே வேலை இல்லை. ஆனால் இன்று வரை ராசலீலைக்காக கிருஷ்ணர் தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் ராசலீலை புரிந்தபோது கிருஷ்ணரின் வயது என்ன தெரியுமா? பத்து.
(கீழ்வரும் பாடல், கண்ணனை நினைத்து கோபிகைகள் பாடுவது போல, கண்ணதாசன் எழுதியிருப்பார். அதே சமயம், சற்று ஆழ்ந்த பார்த்தால் புரியும்…. பரமாத்வாமை தேடும் ஜீவாத்மாவின் தேடல் இது என்று. ராசலீலையின் உண்மையான அர்த்தம் இது தான்.
ஒவ்வொரு வரியும் எத்தனை எத்தனை அர்த்தம். கண்ணனை எந்தளவு கண்ணதாசன் நேசித்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்…
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே…
காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே…
கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ…தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே!!
கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே…ஓ…கண்ணீர் பெருகியதே!!)
சரி… கண்ணனின் போராட்டத்திற்கு வருவோம்…
இது எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? கிருஷ்ணனுக்கு 14 வயது ஆகும்போது தான் தெரிந்தது தன் பெற்றோர் தன்னை பெற்றவர்களில்லை, வளர்த்தவர்களே என்பது. அதற்கு பிறகு பிருந்தாவனத்தில் இருந்து மதுராவுக்கு சென்றபின், அவன் தாய் மாமன் கம்சனிடம் நேருக்கு நேர் மல்லு கட்டவேண்டியிருந்தது. கம்சனை கொன்று அவனது தாத்தாவிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் அவனது அறையில் தனிமையில் அமர்ந்து அவன் தாய் யசோதை அவனுக்கு சோறூட்டியதை நினைத்துக்கொள்வானாம். அடிக்கடி உத்தவர் மூலம் அவன் பெற்றோர்களுக்கும், கோபிகைகளுக்கும், ராதைக்கும் கடிதம் எழுதி அனுப்புவானாம். அவர்களுடன் அவன் மீண்டும் சேரவிரும்பினாலும் அது முடியாது என்பதே யதார்த்தம்.
அவன் ராஜ வம்சத்தில் ஒரு ஷத்ரியனாக பிறந்தபோதும் அவனை மாடுமேய்ப்பவன், பால்காரன் என்றே பல அரசர்கள் விளித்து வந்தனர். கேலி செய்தனர். எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டான். மதுராவில் ஜராசந்தனுடன் நடந்த போர் மர்மம் மிகுந்தது. ஜராசந்தனை கண்ணன் பிறகு வெற்றிகொன்டாலும் மதுராவில் நடைபெற்ற போரில் கண்ணன் பின்வாங்கியது போரில் புறமுதுகிட்ட கோழை என்று அவனை அழைக்க காரணமாகியது. கடவுளின் அவதாரத்திற்கு கோழைத்தனமா? ஒரு போதுமில்லை. தனது தாய் வழி சொந்தங்கள், மதுராவின் அரசாட்சிக்கு கண்ணன் ஆசைப்படுகிறான் என்று கருதிவிடக்கூடாதே என்று தான் அவன் நினைத்தான்.
ஜராசந்தனுடன் மதுராவில் நடந்த போர் ஒரு வகையில் நல்லது தான். அதனால் தான், துவாரகையில் அவன் தன் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ முடிந்தது. துவாரகையில் கூட அவன் ஒரு போதும் சிம்மாசனத்தில் அமர விரும்பியதில்லை. இத்தனைக்கும் அதை வென்றது அவன் தான். அவனைவிட துவாரகையை ஆள எவருக்கு தகுதி உண்டு?
துவாரகையில் கூட கண்ணன் மீது பழி சுமத்தல் படலம் விடவில்லை. நரகாசுரனை கொன்ற பின்னர், அவன் சிறைபிடித்து வைத்திருந்த 16,000 பேரை அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மணந்துகொண்டான். “கண்ணா இனி நாங்கள் எங்கே போவோம்? எங்களை யார் ஏற்றுகொள்வார்கள்?” என்று அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் மனமிரங்கிய கண்ணன் அவர்களை ஏற்றுக்கொண்டான். மணவாழ்க்கையில்லாமல் பக்தைகளாக மட்டுமே இவர்கள் இருந்தார்கள். இதற்காக கண்ணனுக்கு கிடைத்த பட்டம் என்ன தெரியுமா? பெண் பித்தன்.
காமக் குரோதங்கள் உழலும் ஒரு சாதாரண மனிதனாக அந்த பரந்தாமனை எண்ண முடியுமா? நாரத மகரிஷிக்கு கூட இது குறித்து சந்தேகம் எழுந்தது. துவாரகைக்கு சென்று அவர் பார்த்தபோது, வெட்கி தலைகுனிந்தார். ஒவ்வொரு பெண்ணுடனும் ஒரு கிருஷ்ணர் இருந்தார். கிருஷ்ணனின் தெய்வீகத் தன்மைக்கு இதை விட உதாரணம் வேறு இருக்க முடியுமா?
(இந்த இடத்தில் அந்த பெண்களின் நிலையை கண்ணதாசன் படம்பிடிக்கும் அழகை பாருங்கள்…
கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ…
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா…!! கண்ணா…!! கண்ணா…!!)
அடுத்த குற்றச்சாட்டு கிருஷ்ணரின் குடும்பத்தினரிடமிருந்தே கிளம்பியது. சத்யபாமாவின் தந்தை சத்ரஜித்திடம் இருந்த சியமந்தக மணி தொலைந்துபோக கண்ணன் தான் திருடிவிட்டான் என்று அவன் குடும்பத்தினரே குற்றம் சுமத்தினர். இதில் கொடுமை என்னவென்றால் சகோதரன் பலராமன் கூட இந்த குற்றத்தை கண்ணன் மீது சுமத்தினான் என்பதே. சியமந்தக மணியை திருடியவனை கண்டுபிடித்து அந்த மணியை மீட்கும் வரை கண்ணன் ஒய்வு உறக்கம் கொள்ளவில்லை.
சிசுபாலன் போன்றோர் கண்ணன் மீது அவதூறு கிளப்பியபோது அதை புன்னகையுடன் எதிர்கொண்டவன், தன் சொந்தங்களே தூற்றியபோது கலங்கித் தான் போனான். பாண்டவர்கள் நடத்திய யாகத்தில் எச்சில் இலைகளை எடுத்தான், திரௌபதிக்கு அவமானம் நிகழ்ந்தபோது ஓடிப்போய் காப்பாற்றினான், குருக்ஷேத்ர போரில் கடைசி வரை கூட இருந்து பாண்டவர்களை காப்பாற்றினான். கடைசியில் அவனுக்கு கிடைத்தது நன்றி மறந்தோரின் சுடு சொற்களே. தன் மகனை அஸ்வத்தாமன் கொன்றபோது திரௌபதி, “இதற்கு நீயும் உடந்தை தானே?” என்று கண்ணனை பார்த்து கோபம் கொப்பளிக்க கேட்டாள். எத்தனை பெரிய குற்றச்சாட்டு? ஆண்டாண்டு காலம் அவர்கள் உடனிருந்து அவர்களை எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து காத்ததற்கு எத்தனை பெரிய பரிசு!
ஆனாலும் மறுபடியும் அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றதும் முதலில் போய் நின்றவன் அவனே. போர் முடிந்ததும் காந்தாரி வெற்றி பெற்றவர்களை தனது கண்ணை திறந்து பார்க்க விரும்பினாள். பத்விரதையான அவள், கண்ணைத் திறந்து பார்த்தால், பஞ்ச பாண்டவர்கள் பஸ்பமாகிவிடுவர் என்பதால் தான் முன்னே போய் நின்றான் கண்ணன். இப்படி மற்றுமொரு முறை தன்னுயிரை பணயம் வைத்து அவர்களை காத்தான் கண்ணன்.
==========================================================
We need your help…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
பாண்டவர்களின் கடைசி வம்சம் பரீக்ஷித்து, உத்தரையின் கருவில் இருந்தபோது, அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்திலிருந்து அக்கருவை காத்தது அவனே. இதன்மூலம் தான், கண்ணன் தான் யார் என்று உலகினருக்கு நிரூபித்தான். எப்படி தெரியுமா? ஒருவன் பிரம்மாஸ்திரத்தை திருப்பி அனுப்பவோ வலுவிழக்கச் செய்யவோ வேண்டுமெனில் அவன் கற்புள்ளவனாக இருக்கவேண்டும் என்பது விதி.
தன்னுடல் வேறு ஆத்மா வேறு என்பதை கண்ணன் நன்றாகவே அறிந்துவைத்திருந்தான்.
“நான் அறநெறி பிறழ்ந்து வாழ்ந்ததில்லை. தர்மம் அல்லாதவற்றை என் வாழ்வில் செய்ததில்லை. உண்மையல்லாதவற்றை பேசியதில்லை. போரில் புறமுதுகிட்டு ஓடியதில்லை. கம்சனையோ கேசியையோ கொல்ல அறநெறி அல்லாதவற்றையும் பின்பற்றியதில்லை!” என்கிறான் கண்ணன்.
“நான் சொல்வதெல்லாம் உண்மை எனில், உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு, உயிரோடு வெளியே வரட்டும்” என்றான். பரீக்ஷித்து தாயின் கருவில் இருந்து உதித்தான். அவன் மூலம் தான், நமக்கு வியாச மகரிஷியும், சுகதேவரும், கிடைத்தார்கள். அவர்கள் மூலம் பாகவதம் கிடைத்தது.
கிருஷ்ணரின் பரிசுத்த வாழ்வே பரீக்ஷித்து வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்கைக்கு சாட்சி.
இப்படி ஒவ்வொரு அடியும் கிருஷ்ணர் போராட்டத்துடன் கழிக்க அவரின் இறுதிக் காலமோ கொடுமையிலும் கொடுமை. காந்தாரியின் சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது.
யதுகுலத்தின் கிருஷ்ணரின் பிள்ளைகளில் சிலர் கிருஷ்ணரை பார்க்க வந்த ரிஷிகளை பார்த்து ஏதோ விளையாட்டு செய்ய, விளையாட்டு வினையானது. “இந்த உலக்கையாலேயே உங்கள் யதுகுலமே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு அழிந்துபோவீர்கள்” என்று ரிஷிகள் சபித்துவிடுகின்றனர்.
தன் கண்ணெதிரே தன் குலம் அழிவதை யாராலும் பார்க்க முடியுமா? கண்ணன் பார்க்க நேருகிறது. எத்தனை பெரிய கொடுமை இது?
ரத்தம் தோய்ந்த தனது குலத்தினரின் சடலங்களுக்கு இடையே கண்ணன் நடந்து செல்கிறான். ஒரு காட்டுக்கு.
நீண்ட நெடிய போராட்டம் மிகுந்த வாழ்க்கை பயணத்தாலும், நடந்த சம்பவங்களால் மனதளவிலும் உடலளவிலும், பாதித்திருந்ததாலும் கானகத்தில் தனிமையில் நிஷ்டையில் அமர்ந்தான். தன் கடைசி காலத்தில் கண்ணன் பார்க்க விரும்பியது அவனது ஆத்யந்த தோழியான திரௌபதியைத் தான். அந்தோ பரிதாபம்… அவள் வரவேயில்லை. வந்ததென்னவோ ஒரு வேடனின் அம்பு. கிருஷ்ணரின் பாதத்தை ஏதோ ஒரு விலங்கு என்று நினைத்து வேடன் ஒருவன் எய்த அம்பு.
உலக்கையின் மிச்சச் சொச்சத்தை ஒரு மீன் விழுங்க, அந்த மீனை பிடித்த வேடன் அதை அறுத்தபோது வயிற்றில் இருந்த ஒரு சிறிய வளையத்தை அந்த அம்பில் பூட்டியிருந்தான். அந்த அம்பு தான் கிருஷ்ணரை பதம் பார்த்தது. ரிஷிகளின் சாபத்தை கிருஷ்ணர் தானே கடைசியில் ஏற்கவேண்டி வந்தது.
தான் வாழ்ந்த காலகட்டத்தையே ஒளிரச் செய்த அந்த ஜீவன், அரவணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் இல்லாத நிலையில் இந்த உலகைவிட்டு பிரிந்தது.
கிருஷ்ணரின் வாழ்க்கையை சற்று கூர்ந்து பார்த்தால் தெரியும் – செல்வச் செழிப்புக்கிடையே அவர் ஒரு துறவியின் மனநிலையில் வாழ்ந்தது, போர் முனையில் அழுகுரல்களுக்கிடையே அவர் ஒரு சாட்சியாக நின்றுகொண்டிருந்தாலும் தன் அவதார நோக்கத்தை பரம்பொருளாக அமைதியாக நிறைவேற்றியது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் குறைவாக புரிந்து கொள்ளப்பட்டாது கிருஷ்ணாவதாரமே. அதிகம் தூற்றப்பட்டதும் கிருஷ்ணாவதாரமே.
தர்மத்தை காக்க ஒரு புயல் மழையின் இரவில் இந்த உலகை ரட்சிக்க வந்த அந்த பரமாத்மா, வலி மிகுந்த தனிமையில் இந்த உலகை விட்டு பிரிந்தார்.
கண்ணன் மொத்தம் 125 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். கி.மு. 3102 பிப்ரவரி 18-ல்- 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள், பிற்பகல் 2 மணி, 27 நிமிடம், 30 வினாடியில் கிருஷ்ணாவதாரம் முடிந்தது. கிருஷ்ணர் அவதரித்த மதுரா, வளர்ந்த பிருந்தாவனம், ஆட்சி புரிந்த துவாரகை உள்ளிட்ட பல இடங்கள் இன்றும் இருக்கிறது. வரலாற்று சான்றுகளாக. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டால், இருந்தவையெல்லாம் இல்லையென்றாகிவிடுமா? இல்லை வரலாறு தான் கற்பனையாகிவிட முடியுமா?
தான் வாழ்ந்த காலம் முழுதும் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் வாரி வாரி அனைவருக்கும் அளித்த பரம்பொருள், தான் துயருற்ற காலத்தில் ஆறுதல் சொல்ல எவருமின்றியே தனிமையிலேயே இருந்தார். இது தான் கண்ணனாக அவர் அவதரித்ததற்கு கொடுத்த விலை.
கடவுளாய் இருப்பது அத்தனை சுலபமல்ல. அது தான் கிருஷ்ணாவதாரம் நமக்கு உணர்த்துவது.
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
RIGHTMANTRA ARTICLES ARE THE RESULT OF HARDWORK AND ARE COPYRIGHTED. PLEASE USE THE SHARE TOOL AT THE BEGINNING AND END OF THE ARTICLE TO SHARE TO YOUR CIRCLE. COPY PASTING THE CONTENT IS PROHIBITED.
==========================================================
Also check:
சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!
மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன்
கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!
கண்ணன் மனம் குளிரும் வகையில் ஒரு கோகுலாஷ்டமி – OUR KRISHNA JAYANTHI CELEBRATIONS!
==========================================================
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
[END]
மிக அருமையான கிருஷ்ணனை பற்றிய பதிவு. என்னே அந்த பரமாத்மாவின் லீலைகள். கண்களில் நீர் கோர்க்க வைத்து விட்டீர்கள். அவரது ஜென்மாஷ்டமி அன்று இப் பதிவினை வழங்கி பாராட்டுகளை பெற்று விட்டீர்கள்.