“கண்ணே…!” என்று கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லாததால் மிகவும் மனம் வருந்திய தம்பதிகள் மதுரையில் எழுந்தருளிருக்கும் சொக்கநாதப் பெருமானிடம் அடிக்கடி சென்று இது குறித்து முறையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் விரக்தியுற்ற தனபதி தனது தங்கை மகனை சுவீகாரம் எடுத்து அக்குழந்தையை தனது குழந்தை போல கண்ணுங்கருத்துமாக வளர்த்து வந்தார்.
அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் சுசீலைக்கும் தனபதியின் தங்கைக்கும் அடிக்கடி பூசல்கள் எழுவது வாடிக்கையானது.
தனபதியும் தனது மனைவி சுசீலையின் வார்த்தைகளை கேட்டு தங்கையையும், தங்கையின் வார்த்தைகளை கேட்டு மனைவியையும் கடிந்துகொள்வார்.
இப்படிப்பட்ட காலகட்டங்களில் ஒருநாள் தனபதியின் தங்கை, “அப்பா… என்று அழைக்க உனக்கு ஒரு பிள்ளைக்கு வக்கில்லை. என் பிள்ளை அந்தக் குறையை போக்குகிறான். நீ என்னவென்றால் எங்களையே குறை கூறுகிறாய். என் மகன் இல்லாவிட்டால் உனக்கு ‘புத்’ நரகம் தான் என்பது நினைவிருக்கட்டும்” என்றாள்.
இது கேட்டு மனமுடைந்த தனபதி, “சோமசுந்தரப் பெருமானே எந்த பிறவியில் என்ன பாவம் செய்தோமோ… எங்களுக்கென்று எங்கள் பெயரைச் சொல்ல ஒரு மகவின்றி இது போன்ற வார்த்தைகளை எல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. அடுத்த ஜென்மத்திலாவது எங்களுக்கு புத்திர பாக்கியத்தை கொடு” என்று கூறி தனது தங்கையின் மகன் பெயருக்கே அனைத்து சொத்துக்களையும் எழுதி தந்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
வெளியேறியவர்கள் கோவில் கோவிலாக தீர்த்த யாத்திரை செய்து ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
தனபதி சென்றவுடன் இது தான் சமயம் என்று காத்திருந்த தனபதியின் பங்காளிகள் அனைவரும், தனபதியின் தங்கையிடம் வம்பு செய்து சண்டையிட்டு அவள் மகன் மீது தனபதி எழுதி வைத்த சொத்துக்களை தங்களுக்கே உரிமையானது என்று கூறி அபகரித்துக்கொண்டனர்.
அனைத்தையும் இழந்து மகனுடன் நடுவீதிக்கு வந்த தனபதியின் தங்கை கண்ணீர் சிந்தினாள். “நம் அண்ணனுக்கு நாம் செய்த துரோகமே நமக்கு இந்த நிலையை தந்திருக்கிறது” என்று உணர்ந்து, சொக்கநாதப் பெருமான் முன்பு சென்று தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டி கதறினாள்.
சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்களுள் ஒன்று தன்னை சரணடைந்தவர்களின் பிழையை பொறுத்து அவர்களை மன்னிப்பது. தயாநிதியான சொக்கநாதப் பெருமானை அவளது கண்ணீர் உருக்கியது. மேலும் அவள் தனது அடியவனின் தங்கை வேறு. எனவே அவளை மன்னித்து நல்லருள் புரிய திருவுள்ளம் கொண்டார் சொக்கநாதப் பெருமான்.
அன்று இரவு உறங்கியவள் கனவில் அசரீரி வடிவில் சிவபெருமான் தோன்றி “உன்னை ஏமாற்றி சொத்தை பிடுங்கியவர்கள் மீது வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடு. நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன்” என்று கூறி மறைந்தார்.
அவளும் அவ்வாறே வழக்கு தொடுக்க, வழக்கு விசாரணைக்கு வந்தது. அவையில் தனபதியின் பங்காளிகள் அனைவரும் “சொத்து தங்களுக்கே சொந்தம்” என்றனர். மேலும் “இது தான் தனபதியின் விருப்பமும் கூட” என்றனர்.
“நீங்கள் கூறுவதற்கு என்ன சாட்சி?” என்று அவையோர் கேட்க, “இதோ அவர் எழுதித் தந்த சாசனம்” என்று கூறி தாங்கள் போலியாக தனபதி போல கையெழுத்திட்டு தயாரித்த ஓலையை காண்பித்தனர்.
தனபதியின் தங்கை பக்கம் திரும்பிய வழக்காடு மன்றத்தினர், “உன் தரப்பு நியாயத்துக்கு உன்னிடம் என்ன சான்று இருக்கிறது? சாட்சி யாராவது உண்டா?” என்று வினவினர்.
அதைக் கேட்டு கண்ணீர் சிந்திய தனபதியின் தங்கை, “எங்களுக்கென்று யார் இருக்கிறார்கள். திக்கற்றறோருக்கு தெய்வமே துணை. அந்த சொக்கநாதப் பெருமான் தான் எங்களுக்கு சாட்சி” என்றாள்.
அந்த நேரம் யாரும் எதிர்பாராதவிதமாக தனபதியே அங்கு வந்தார்.
அண்ணனை கண்டதும் தங்கை அவரது காலில் வீழ்ந்து “என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா” என்று கதறினாள்.
தனபதி அவளுக்கு ஆறுதல் கூறி, சபையோரிடம் தன் சொத்துக்கள அனைத்தும் தன் தங்கையின் மகனுக்கே போய் சேரும் என்றும் தானே அதை தன் கைப்பட ஓலையில் எழுதிக்கொடுத்ததாகவும் கூறினார்.
திடுக்கிட்ட பங்காளிகள் “இதை ஏற்கக்கூடாது. இவர் தனபதியே அல்ல. தனபதி எங்கோ தூரதேசம் போய்விட்டார். அவர் இறந்துவிட்டதாகக் கூட பேசிக்கொள்கிறார்கள்.” என்றனர்.
“நான் தனபதியே தான். இவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். இதோ இவர் தான் எங்கள் ஊர் தலைவர். இவன் எங்கள் பங்காளி முத்தப்பன், இவன் சடையப்பன்…” என்றெல்லாம் அனைவரையும் சரியாக அடையாளம் கூறினார்.
அதுமட்டுமல்லாது தனக்கு என்னென்ன சொத்துக்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று புள்ளிவிபரத்துடன் சபையோரிடம் கூறினார்.
தொடர்ந்து, வந்திருப்பது தனபதி தான் என்றும் அவர் கூறுவதே உண்மை என்றும் நிரூபணமானது.
பஞ்சாயத்தார் பங்காளிகளை “உடனே இங்கிருந்து போய்விடுங்கள். இல்லேயேல் ராஜ தண்டனைக்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரிக்க, பதறியடித்த பங்காளிகள் அனைவரும் ஓட்டமெடுத்தனர்
தனது சொத்துக்களை மீண்டும் சபையோர் முன்னிலையில் சுவடியில் எழுதி சாசனம் செய்த தனபதி அதை தனது தங்கையிடம் ஒப்படைத்தார். பின்னர் “நான் வருகிறேன்” என்று கூறியபடி அவையிலிருந்து திடீரென மறைந்தார்.
அனைவரும் தனபதி திடீரென மறைந்தது கண்டு திகைத்தனர். தனபதியின் தங்கை, “சொக்கநாதா….” என்று கதறியபடி தான் சொக்கநாதரிடம் சென்று முறையிட்டதும் அவர் கனவில் தோன்றி உரைத்ததையும் அவையோரிடம் கூறினாள்.
விஷயம் மன்னன் சுந்தரபாத சேகரனுக்கு எட்டியது. அவன் உடனே சபைக்கு வந்து அனைத்தையும் விரிவாக கேட்டு மகிழ்ந்து உடனே சொக்கநாதரை சென்று வழிபட்டான்.
– இது தான் திருவிளையாடல் புராணத்தில் வரும் 39 வது படலமான “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்”
உங்களுக்கும் இதே போல ஈசனே வருவான். நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் சாட்சியாகவே வந்து வழக்குரைப்பான். அன்போடு “சிவாய நம” என்று நீங்கள் உருகி கூப்பிட்டாலே ஓடோடி வந்து ஏவல் செய்ய காத்திருப்பான். நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறிய கருத்து தான் : அவன் அருளை பெற நீங்கள் நாயன்மார்களை போல இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ‘அன்பே சிவம்’ என்பதை உணர்ந்த மனிதர்களாக இருந்தால் போதும்.
==========================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
தொடர்புக்கு : Rightmantra Sundar | M: 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.நாகராஜ குருக்கள்
வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் வாசகர்களுக்காக நடைபெறவுள்ள இந்த வார பிரார்த்தனைக்கு காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.நாகராஜ குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். நேரில் சென்று சம்பந்தப்பட்ட வாசகர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்து அவர்களின் பெயர் விபரங்களை கொடுக்க காஞ்சி செல்லவேண்டியிருக்கிறது என்றும் நாம் கூறியிருந்தோம். எனவே வழக்குகளில் நிவர்த்தி வேண்டி கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு சென்ற சனிக்கிழமை காஞ்சி சென்றிருந்தோம்.
முதல் முறை நாம் சென்றது வார நாள் என்பதால் கூட்டம் அதிகமில்லை. ஆனால் இந்த முறை சனிக்கிழமை அதுவும் பிரதோஷம் வேறு. கோவில் மிக பரபரப்பாக இருந்தது. நல்ல கூட்டம்.
நாம் சென்று திரு.திரு.நாகராஜ குருக்களை சந்தித்து நாம் வந்திருக்கும் நோக்கத்தை கூறி, வாசகர்களின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். பிரார்த்தனை கிளப்புக்கு அவர் தலைமை ஏற்பது குறித்தும் விளக்கினோம்.
“விளக்குகளை ஏற்றிவிட்டு பின்னர் அர்ச்சனை செய்யலாம்” எனவே 16 விளக்குகளை ஏற்றிவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.
ஆலய வளாகத்தில் இருந்த கடையில் 16 அகல் விளக்குகளை வாங்கி அங்கிருந்த தீப மேடையில் கோரிக்கை அனுப்பியுள்ள அனைவருக்காகவும் பிரார்த்தித்துக்கொண்டு விளக்கேற்றினோம்.
பின்னர் சன்னதி சென்று அனைவரது பெயர்களுக்கும் சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்தோம். பின்னர் பட்டியலை கொடுத்து சுவாமியிடம் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டோம்.
அனைவருக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து பிரசாதம் பெற்றுக்கொண்டு, பிரதட்சிணம் வந்தோம்.
இத்தனையும் கடும் பரபரப்புக்கிடையே நடந்தது.
மூன்று பிரதட்சிணம் வந்துவிட்டு, குருக்களை சந்தித்து அவருக்கு அனைவரின் சார்பாக ஒரு சிறு மரியாதை செய்துவிட்டு பெயர்ப் பட்டியலையும் ஒப்படைத்துவிட்டு பிரார்த்தனை கிளப் பற்றி கூறிவிட்டு புறப்படலாம் என்றால்… அதற்குள் அவர் ஹோமத்தில் அமர்ந்துவிட்டார்.
இங்கு அடிக்கடி ஹோமம் நடப்பது வழக்கம். அன்றும் அப்படித் தான். அவரது உதவியாளரிடம் விசாரித்தோம். எப்படியும் ஒன்றரை மணிநேரமாவது ஆகும் என்று தெரிந்தது.
சரி… நாம் நமது மற்ற ப்ரோக்ராம்களை முடித்துவிட்டு திரும்ப வரும்போது மீண்டும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் வருவோம் என்று அவரிடம் “நான் பக்கத்தில் போய்விட்டு மறுபடியும் வருகிறேன்…” என்று சைகையில் காட்டிவிட்டு புறப்பட்டோம்.
காஞ்சி நகருக்கு வெளியே உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு சென்றோம். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஜீயரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டு புறப்படுவதற்கு மிகவும் லேட்டாகிவிட்டது. (என்ன கோவில்? என்ன விசேஷம் அங்கே என்பது பற்றி விரிவான பதிவு பின்னர் வரும்) மீண்டும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் வந்தோம்.
மணி அப்போது மதியம் 1.00 pm இருக்கும். குருக்கள் இருக்கவேண்டுமே என்று பதட்டம் தொற்றிக்கொண்டது. ஏனெனில், கோவில் மதியம் நடை சாத்திவிட்டால் அதன் பிறகு மாலை 4.00 மணிக்கு தான் திறப்பார்கள்.
நாம் போகும்போது கோவிலில் கூட்டம் சற்று குறைந்திருந்தது. நல்லவேளை குருக்கள் இருந்தார். புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்.
“ஹோமத்துல நீங்க உட்கார்ந்துட்டதாலே பக்கத்துலே ஒரு கோவிலுக்கு போய்ட்டு வந்தேன் சுவாமி…” என்று கூறி, நமது பிரார்த்தனை கிளப் மற்றும் பிரார்த்தனை நேரம் உள்ளிட்ட அனைத்தையும் அவரிடம் விளக்கினோம்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்காகவும் அடுத்த இரண்டு வாரங்கள் ஞாயிறு மாலை 5.30 – 5.45 பிரார்த்தனை செயயவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
“ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் ப்ரார்த்தனையாளர்கள் சார்பாக இந்த சிறிய கௌரவத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறி, அவருக்கு பொன்னாடை போர்த்தி, ஒரு சிறு மரியாதையை செய்தோம்.
“எங்கள் வாசகர்கள் அருள்மிகு வழக்கறுத்தீஸ்வர சுவாமி மற்றும் அன்னை மருகுவார் குழலி அருளுடன் வழக்கு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, அவர்களது இதர கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி இந்த மண் பயனுற வாழ்வாங்கு வாழவேண்டும்” என்று நீங்கள் ஆசி தந்தருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
“எல்லாரும் சௌக்கியமா ஷேமமா நல்லா இருப்பீங்க… ” என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து நமது தளத்தின் பிரார்த்தனை படத்தை பரிசளித்தோம்.
திரு.நாகராஜ குருக்கள் எவ்வளவு பிஸியான ஒரு மனிதர் என்பதை அங்கே நேரில் சென்றால் தெரியும். ஆனால், அந்த பரபரப்பிலும் நாம் சொன்னதை கவனமாக கேட்டு, நமக்காக வழக்கறுத்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்வதாக சொன்னதோடு நமது மரியாதையையும் ஏற்று நம்மை பெருமைப்படுத்தினார்.
கோரிக்கை சமர்பித்துள்ள வாசகர்கள் அடுத்த 16 வாரத்துக்குள் ஒரு முறை அல்லது அதற்கு பின்னர் உங்களால் இயன்றபோது ஒரு முறை சென்று வழக்கறுத்தீஸ்வரரை தரித்து அர்ச்சனை செய்யவேண்டும். 16 வாரத்துக்குள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.
நல்லதே நடக்கும்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…
இந்த பதிவை பொருத்தவரை சுமார் 18 வாசகர்கள் வழக்கு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் இதர கோரிக்கைகளை வழக்கறுத்தீஸ்வரருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அது தவிர, அவசியம் அவசரம் கருதி இருவரது பிரார்த்தனை சேர்க்கப்பட்டுள்ளன.
முதலாவதாக இடம்பெற்றுள்ள பிரார்த்தனையை சமர்பித்திருப்பவர் திருமதி.ரேஷ்மி. இந்த தளத்தின் மூலம் நமக்கு அறிமுகமான நம் உடன்பிறவா சகோதரிகளில் ஒருவர். இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை. சந்தான பாக்கியம் இல்லாம் இவர் எந்தளவு துன்பப்படுகிறார் என்று நமக்கு தெரியும். இவரது கோரிக்கை ஏற்கப்பட்டு இவருக்கு புத்திர பாக்கியம் கிட்டியவுடன் இவரை உங்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். அந்த வேளை வரவேண்டும் என்று இறைவனை வேண்டுங்கள்.
நமது பிரார்த்தனை கிளப்புக்கு இவர் அனுப்பிய முதல் கோரிக்கை என்ன தெரியுமா?
“மத்தவங்களைப் பத்தியே கவலைப்படுறீங்க. உங்களை பத்தி கவலைப்பட யார் இருக்காங்க?” என்று நமது நல்வாழ்வுக்காக ஒரு பிரார்த்தனையை இறைவனிடம் வேண்டி தன் கைப்பட எழுதி நமக்கு அனுப்பியிருந்தார். அதை படித்தபோது நம்மையுமறியாமல் கண் கலங்கிவிட்டோம்.
நம்மை பற்றி கவலைப்படவும் நம் மீது அக்கறை செலுத்தவும், நம் குடும்பத்தினர் தவிர வெளியேயும் இப்படி சிலர் இருக்கிறார்கள் என்பது தான் இந்த தளத்தை ஓய்வு ஒழிச்சலின்றி மூன்றரை ஆண்டுகள் நடத்தியதால் நமக்கு கிடைத்த ஒரே வெகுமதி. இவருக்கு புத்திர பாக்கியத்தை முருகன் அருளும் வரை நாம் ஓயப்போவதில்லை என்பதை மட்டும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
அடுத்து சமர்பித்திருப்பவர் நமது நலம் விரும்பிகளுள் ஒருவர். எனது அன்னையை போன்றவர். இதற்கு மேல் வார்த்தைகள் தேவையா என்ன?
அவர் மகிழ்ச்சியே நம் மகிழ்ச்சி.
நல்லது நடக்கும். விரைந்தே நடக்கும். வாழ்க வளமுடன், அறமுடன், நலமுடன்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
வழக்கு தொடர்பான பிரச்னைகளில் நிவர்த்தி வேண்டி வழக்கறுத்தீஸ்வரரிடம் பிரார்த்திக்கும் RIGHTMANTRA வாசகர்களின் பெயர் விபரங்கள்
1) எஸ்.ராம்குமார்
2) சுகன்யா தேவி
3) சாய்குமார்
4) ராஜேஸ்வரி
5) ராமசாமி
6) கஜேந்திரன்
7) நாகலட்சுமி
8) லோகேஸ்வரன்
9) சரஸ்வதி
10) ராகவேந்திரன்
11) சங்கரநாராயணன்
12) நளினா
13) ஸ்ருதி
14) தளபதி முத்துக்குமார்
15) ராகேஷ்
16) வர்ஷினி
17) த.வெங்கடாசலம்
18) கே.நாகராஜன்
19) நித்யகல்யாணி
மேற்கூறியவர்களில் வழக்கு தவிர்த்து வேறு கோரிக்கைகளை சமர்பித்துள்ள வாசகர்களும் அடங்குவார்கள். அத்தனை பேர்களின் வழக்குகளின் விபரத்தையும் பிரார்த்தனை விபரத்தையும் இங்கே வெளியிடுவது சாத்தியமில்லை என்பதால் பெயர்களை மட்டும் அளித்துள்ளோம். மேற்கூறிய பெயர்களை தயவு செய்து உங்கள் டைரியிலோ தாளிலோ எழுதி பிரார்த்தனை செய்யும் நேரம், இவர்களின் பெயர்களை மனதுக்குள் கூறி பிரார்த்திக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
இது தவிர இங்கு மேலும் இரு வாசகர்களின் பெயர்களையும் சமர்பிக்கிறோம்.
==========================================================
(1) கைவிடாதே முருகா என்னை!
என் பெயர் ரேஷ்மி. திருமணமாகி பத்து வருடமாகிறது. குழந்தைக்காக போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. இந்நிலையில் ஒரு நாள் ‘வேல்மாறல்’ தொடர்பான தேடலில் இருந்தபோது இந்த தளம் கண்களில் பட்டது. பார்த்தபோதே மனதுக்குள் ஒரு வித மகிழ்ச்சி. நம்பிக்கையின் கதவுகள் திறந்தது போல இருந்தது.
எனக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்கள் எல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், முருகப் பெருமானை தவிர வேறு தெரிந்த டாக்டர் இல்லை. எனக்கு குழந்தை பாக்கியத்தை டாக்டர்களுக்கெல்லாம் டாக்டரான அந்த முருகன் தான் தரவேண்டும்.
ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அந்த குழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையால் எனது கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கைவிடாதே முருகா என்னை,
நன்றி.
ரேஷ்மி
==========================================================
(2) அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்!
ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு என் பணிவான வணக்கம்.
எனது கணவருக்கு அவர் முன்பு வேலை பார்த்த இடத்திலிருந்து பல லட்சங்கள் சம்பள பாக்கி வரவேண்டியுள்ளது. பாடுபட்டு அல்லும்பகலும் சம்பாதித்த பணத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். இதனிடையே எனது மகனுக்கு அவன் பார்க்கும் உத்தியோகத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. தீய சகவாசம் வேறு ஏற்பட்டுள்ளது. எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன். மேலும் பட்டியலிடமுடியாத பிரச்னைகள் பல உள்ளது. இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளால் எனது நிம்மதி தொலைந்து போய் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாரத்துடன் தான் இதை பதிவு செய்கிறேன்.
எனது கணவருக்கு வரவேண்டிய சம்பள பாக்கி சரியாக வந்து, எனது மகனுக்கு உத்தியோகத்தில் நல்லதொரு ஏற்றமும், மாற்றமும் கிடைக்கவும் எனது உடல்நிலை முன்னேற்றமடைந்து வாட்டி வரும் உபாதைகள் நீங்கவும் பிரார்த்திக்கும்படி ரைட்மந்த்ரா வாசகர்களை கேட்டுகொள்கிறேன்.
– பெயர் & ஊர் வெளியிட விரும்பாத வாசகி
==========================================================
பொது பிரார்த்தனை
தவப்புதல்வனின் ஆன்மா இறைவனடி சேரட்டும்!
நாம் இங்கே நிம்மதியாக சாப்பிடுகிறோம், தூங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் தான். ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாச்சின் சிகரத்தில் 19 சுமார் ஆயிரம் உடி உயரத்தில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. சியாச்சினை பொறுத்தவரை, இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுடன் போராடுவதை காட்டிலும் குளிருடன் போராடுவதுதான் பெரும் பிரச்னையாக இருக்கும். பனிப்புயல் வீசினால் தொடந்து 3 வாரங்களுக்கு வீசும்.
அப்போது காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். இதனால் அங்கு பணிபுரியும் வீரர்களுக்கு தலைவலி, பேச்சுக் குளறல், தூங்குவதில் பிரச்னை, பசியின்மை என இப்படி பல பிரச்னைகள் ஏற்படும். இதையெல்லாம் சமாளித்து பணியில் ஈடுபட்டாலும் பனிச்சரிவு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. சிகரத்தில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பனிக்காலம் மற்றும் மைனஸ் 69 டிகிரி செல்சியசுக்கு கீழே வெப்ப நிலை வரும்போது பனிச்சரிவு ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி ராணுவ முகாம் மீது பெரிய பனிப்பாறை ஒன்று விழுந்து அமுக்கியது. இதில், ராணுவ நிலையில் இருந்த ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனிப்பாறைக்குள் புதைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பனிப்பாறை பெரிய அளவில் இருப்பதால் அதை உடைத்து உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்பாறைக்குள் சிக்கி உயிரிழந்த வீரர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
19 பட்டாலியன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பாக சியாச்சின் அவலாஞ்சியில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஹனுமந்தப்பா என்பவர் ஈடுபட்டு வந்தார். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, சியாச்சின் அவலாஞ்சியில் நடந்த பனிச்சரிவில் சிக்கிய ஹனுமந்தப்பா, 6 நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி ராணுவ ஆராய்ச்சி மைய மருந்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார்.
ராணுவ மருத்துவமனையின் அவசர சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவருடைய உயிரை காப்பாற்ற, கடந்த மூன்று நாட்களாக போராடினர். ஆனால் அவர்களுடைய கடும் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று முற்பகல் 11:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த ஹனுமந்தப்பாவுக்கு மகாதேவி என்ற மனைவியும், குழந்தையும் உள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் பணி புரிந்து வந்தார். ஹனுமந்தப்பா உயிரிழந்ததையடுத்து அவரது சொந்த கிராமமான தர்வாட் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஹனுமந்தப்பாவின் ஆன்மா இறைவனடி சேரவும், அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், மேலும் இந்த விபத்தில் பலியான மற்ற வீரர்களுக்ககவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் வேண்டுவோம்.
இனி இப்படி ஒரு சோகம் நிகழக்கூடாது என்பதே நம் பிரார்த்தனை.
==========================================================
வழக்கு தொடர்பான கோரிக்கைகளை சமர்பித்திருக்கும் வாசகர்கள் அனைவரின் பிரார்த்தனை நிறைவேறி அவர்களுக்கு உரிய நீதி விரைவில் கிடைக்கவும், குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் நம் அன்பு சகோதரி ரேஷ்மி அவர்களுக்கு விரைவில் நல்ல அழகான ரோக்கியமான குழந்தை பிறக்கவும், அடுத்தடுத்த பிரச்சனைகளால் குடும்பத்தில் நிம்மதியின்றி தவிக்கும் நம் வாசகியின் குடும்பத்தில் சகல் சௌபாக்கியங்களும் மகிழ்ச்சியும் நிலவவும் திருவருள் வேண்டி பிரார்த்திப்போம். நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் ஆன்மா இறைவனடி சேரவும், எல்லையில் நாட்டை காவல் காக்கும் வீரர்கள் எந்த வித ஆபத்துமின்றி தமது பணியில் ஈடுபடவும் ஆண்டவனை வேண்டுவோம்.
இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.நாகராஜ குருக்கள் அவர்கள் தனது குருக்கள் தொண்டில் சிறந்து விளங்கவும், அவரது பிரார்த்தனைகள் செக்கிரம் நிறைவேர்டி அவர் பரிகாரம் செய்யும் அனைவருக்கும் திருவருள் தவறாமல் கிடைக்கவும் அவரும் அவர்தம் குடும்பத்தினரும் சீரோடும் சிறப்போடும் வாழவும் இறைவனை வேண்டுவோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 14, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…
அடுத்த பிரார்த்தனை கடன் பிரச்னைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு திருச்சேறை ஸ்ரீ ருண விமோசன லிங்கேஸ்வரர் கோவில் குருக்கள் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே கடன் பிரச்னைகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!
சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும். பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.
முக்கியமான ஒரு விஷயம் : மேற்படி பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புபவர்கள், “இனி நான் கடன் வாங்கமாட்டேன். சுப செலவுகள் (அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே) மற்றும் எதிர்பாராத தவிர்க்க இயலாத விஷயங்கள் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கமாட்டேன். ஆடம்பர செலவுகள் செய்யமாட்டேன். வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாக குடும்பம் நடத்துவேன். ஒவ்வொரு ரூபாயின் அருமை உணர்ந்தே செலவு செய்வேன்!” என்று ஒரு சங்கல்பம் செய்துகொண்டு பிறகு பிரார்த்தனையை அனுப்பவும். இல்லையெனில் ஓட்டைப் பாத்திரத்தில் நீர் நிரப்புவது போலத் தான்.
For more details please check : கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் திருப்பாம்புரம் கோவிலின் அர்ச்சகர் திரு.கௌரி சங்கர்
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திரு.கௌரிசங்கர் குருக்கள் அவர்கள் திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் நமக்காக பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
==========================================================
[END]
தனபதி , சுசீலையின் கதையை நம் தளத்தின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் வாசகர்களின் கோரிக்கை ஈசன் அருளால் நிறைவேறவும் . திரு ஹனுமந்தப்பாவின் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்தனை செய்வோம். பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு நாகராஜ குருக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
ராம் ராம் ராம்
நன்றி
உமா வெங்கட்
மதுரையம்பதியின் திருவிளையாடல்களில் ஒன்று தங்கள் கைவண்ணத்தில் எங்களுக்கு காட்சியாக இருந்தது.பொற்றாமரை குளமும் கோவில் கோபுரங்களும் பார்க்க அருமை.
பட்டியலிட்ட அனைவருக்கும் பிரார்த்தனை நிறைவேற வேண்டுவோம்.
என் மனகாயத்திற்கு தடவிய மருந்து போல உள்ளது இந்த பதிவு. பொறுத்து பார்ப்போம் ஈசனின் காரணம் என்ன என்று.
நன்றி
வழக்குரைத்த படலம் அருமையிலும் அருமை. மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுரங்கள், பொற்றாமறை குளம் அதைவிட அருமை. இடையே இடம்பெற்றிருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் படம் அதையும் விட அருமை.
வாசகர்கள் சார்பாக விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழக்கருத்தீஸ்வரர் கோவில் குருக்களை கௌரவித்தமைக்கு நன்றி.
சகோதரி ரேஷ்மி அவர்கள் தங்களுக்காக பிரார்த்தனை கடிதம் எழுதிய சமர்பித்த விஷயத்தை படித்தபோது உண்மையில் நெகிழ்ந்துவிட்டோம். நானும் தங்களுக்காக அடிக்கடி வேண்டிகொல்வதுண்டு. அனால், பிரார்த்தனை சமர்பிக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. நீங்கள் சொல்வது போல அவருக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைத்து அவரை எங்களிடம் அறிமுகப்புத்துங்கள்.
மற்றும் பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்த அனைவரது பிரார்த்தனையும் நிறைவேற ஈசன் அருள் புரிவான்.
கடன் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தாங்கள் வைத்துள்ள வேண்டுகோள், உண்மையில் சிந்திக்க வைக்கும் ஒன்று. நம் கடனை அடைய நாமும் முயற்சிக்கவேண்டும். இறைவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்பது மிக மிக உண்மை.
– பிரேமலதா மணிகண்டன்
மேட்டூர்