Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

print
ராமனின் பெருமை அளவிடற்கரியது. அவன் நாமத்தின் மகிமையோ அதனினும் பெரியது. அதை சொல்லும் அவன் அடியார்களின் பெருமையோ அதையும்விட பெரியது. அதை படிக்கும் மக்கள் யாவரும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார் என்பதை சொல்லவும் வேண்டுமோ? மார்ச் 28, 2015 சனிக்கிழமை ஸ்ரீ ராம நவமியையொட்டி அளிக்கப்படும் குறுந்தொடர் இது.

ராமாயணத்தில் குகனின் பாத்திரம் எந்தளவு சிறப்பை பெற்றதோ அதே அளவு சிறப்பை பெற்றது சபரியின் பாத்திரம். சபரி அடிப்படையில் ஒரு வேடுவப் பெண். ஷத்ரிய வீரன் ஒருவனுக்கும் வேடுவக் குல பெண் ஒருவளுக்கும் பிறந்தவள். தேனை சேகரித்து கொண்டு வந்து விற்பதே அவர்கள் தொழில்.

சபரிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்ற போது, எண்ணற்ற காட்டு விலங்குகளை கொன்று விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அடிப்படையிலேயே இளகிய மனம் படைத்த சபரி, “இத்தனை உயிர்களை கொன்று எனக்கு ஒரு திருமணமா? எனக்கு திருமண வாழ்க்கையே வேண்டாம்” என்று பெற்றோரை விட்டு பிரிந்தாள்.

பெற்றோரை விட்டு பிரிந்த சபரிக்கு மாதங்க முனிவர் அடைக்கலம் கொடுத்து அவளுக்கு நல்லுபதேசங்களை வழங்கினார். மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பணிவிடைகளை செய்து தன் காலத்தை கழித்து வந்தாள் சபரி.

Sabari_Rama

ஒரு தாழ்த்தப்பட்ட இனத்து பெண்ணுக்கு மாதங்க முனிவர் தனது ஆசரமத்தில் இடம் கொடுத்து அவளுக்கு பாடங்களும் போதித்து வந்தது சக முனிவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் மாதங்க முனிவரை ஒதுக்கிவைத்தனர்.

மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில் வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். இராமாவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணன் இங்கு தன் தம்பி இலக்குவனோடு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்!” என்று கூறினார்.

அவர்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சபரி தினசரி இராமநாமத்தை தியானித்து வரலானாள். அதன் பலனாக சபரிக்கு எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்துவந்தது.

இப்படியிருக்கையில் ஒரு நாள் இவர்களை ஒதுக்கி வைத்த கூட்டத்திலிருந்த ஒரு முனிவர் பம்பையில் நீராடிவிட்டு கரையேறி வந்த போது, ஆஸ்ரமதிற்கு நீர் எடுத்துச் செல்ல வந்த சபரியின் கை தற்செயலாக அவர் மீது பட்டுவிட்டது.

வெகுண்டெழுந்த அந்த ஆச்சார சீலர், தனது அருந்தவம் இதனால் கெட்டுப்போய்விட்டதாக கூறி, சபரியை நோக்கி கடுமையான வார்த்தைகளை கூறி ஏசினார். “உனக்கு அறிவிருக்கிறதா? குளித்துவிட்டு வரும் என் மீது உன் கை பட்டுவிட்டதே… என் முகத்தில் இனி ஒரு நொடி கூட நீ விழிக்கக்கூடாது. இங்கேயிருந்து உடனே போய்விடு.” என்று பலவாறு அவளை நிந்தித்தார்.

தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும் தன்னை மன்னித்துவிடும்படியும் சபரி கெஞ்சி கேட்டுக்கொண்டாள். இருப்பினும் அந்த முனிவர், மீண்டும் பம்பையில் முங்கி குளித்தால் தான் இந்த தோஷம் எனக்கு போகும் என்று கூறி, நீராட சென்றார்.

பரம பக்தையான சபரியை நிந்தித்ததால் முனிவர் ஆற்று நீரில் கால் வைத்தது தான் தாமதம் அந்த நதி முழுக்க இரத்த சிவப்பாக மாறி, புழுக்கள் நெளிய ஆரம்பித்துவிட்டது. பம்பை நீர் இப்படி குருதி சாக்கடையாக மாறியது கண்டு திடுக்கிட்ட முனிவர், சபரி ஏதோ சூனியம் செய்துவிட்டதாக கூறிக்கொண்டே ஓட்டம் பிடித்தார்.

இதனிடையே மாதங்க முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரியின் குடிலுக்கு வந்தனர்.

அவர்கள் வந்ததும், சபரி காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளை பறித்து வந்து  முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து வணங்கினாள். இராமனும் அதை ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தார். பக்தரின் எச்சில் பட்ட உணவை இன்னமுதாக ஏற்பதில் சிவபெருமானுக்கு தானும் சற்றும் சளைத்தவரல்ல என்பதை இராமபிரானும் உணர்த்தினார். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.

தன் பாதம் பணிந்து வணங்கி நின்ற சபரியை நோக்கிய அண்ணல், “அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, அதற்கு சபரி, “இராமா, பம்பாநதி முழுவதும் எவருக்கும் உதவாத வண்ணம் புழுக்கள் பெருகி அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும்! மரவுரி தரித்து காட்சியளிக்கும் நீ ஒரு கணம் இந்த ஏழைக்காக சர்க்கரவர்த்தி திருமகனாக காட்சி தரவேண்டும்!” என்றாள்.

இராமபிரான் புன்முறுவல் புரிந்தவாறு, “தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் நீ இறங்கி ஒரு நொடி நின்றால் கூட போதும். அது தூய்மையாகிவிடும். மற்றபடி சக்கரவர்த்தி திருமகனாக நான் காட்சி தரவேண்டும் என்கிற உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்!” என்றார்.

சபரியும் பம்பையில் இறங்கி, “இராமா எல்லாம் உன் கருணை” என்று கூற, சபரியின் திருவடி ஸ்பரிசம் பட்ட அடுத்த நொடி பம்பை சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது.

இராமபிரானும் சபரியின் அன்புக்கு கட்டுப்பட்டு அவளுக்கு மட்டும் சக்கரவர்த்தி திருமகனாக காட்சி தந்தார்.

அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தர்மசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார்.

இராமனைவிட இராம நாமம் பெரிது. இராம நாமத்தைவிட பெரிது அதை உச்சரிக்கும் அடியவர் தம் பெருமை. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே.

தண் நறுங்கானும், குன்றும், நதிகளும், தவிரப் போனார்;
மண்ணிடை, வைகல்தோறும், வரம்பு இலா மாக்கள் ஆட,
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே,
புண்ணியம் உருகிற்றன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார்!
– ஆரணிய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்

(….இராமநாம மகிமை தொடர்ந்து பொழியும்)

=====================================================================

Also Check :

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

=====================================================================

7 thoughts on “சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

 1. இராமாயணத்தில் சபரியின் கதை தெரியும். ஆனால் இந்த சம்பவம் தெரியாது. இறைவனின் மெய்யடியாரை பழித்தால் இயற்கை கூட நமக்கு எதிராக திரும்பிவிடும் என்று தெரிகிறது.
  ராமநாமம் புரியாத அற்புதம் ஏதேனும் உண்டா என்ன?

  பதிவுக்கு பிரத்யேகமாக அருமையான ஓவியம் வரைந்து தந்துள்ள நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

  ராம நாம மகிமையை ராம நவமியோடு முடித்துவிடாமல் முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து அளிக்கவேண்டும் என ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி
  உமா வெங்கட்

 2. வாழ்க வளமுடன்

  யானை வரும் பின்னே , மணி ஓசை வரும் முன்னே

  28 இல் ராமநவமி என்றால் முன்னமே பதிவை போட்ட சுந்தர் சாருக்கு நன்றி

 3. மிகவும் அருமையான பதிவு. ராம நாமத்தின் மகிமை நன்றாக புரிந்தது.

  ராம ராம ராம

 4. அருமையான பதிவு.
  ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்
  வாழ்க வளமுடன்
  நன்றி

 5. ராமருடன் காட்டுக்கு சென்ற போது விஸ்வாமித்ரர் வசிஷ்டர் வைத்த ராமா என்ற பெயரை சொல்ல விரும்பாமல் அதற்கு இணையான பெயர் சொல்லலாம் என்று பல மைல் நடந்து செல்லும் பொது யோசித்து பார்த்தும் அதற்கு இணையான பெயர் இல்லை என்று அறிந்த பிறகு அன்பாக ராமா என்றார்.

  வால்மீகி இராமாயணத்தில் வுள்ளது.

  ராமருக்கு இனியன நாமம் எதுவும் இல்லை.

  நன்றி.

  கே. சிவசுப்ரமணியன்

 6. ராம நாம மகிமையை விளக்கும் இனிய அழகிய பதிவு………… ஸ்ரீ ராம ஜெயம்…..

 7. உண்மையான் அன்புக்கும், பக்திக்கும் இறைவன் எப்போதும் கட்டுண்டவர்.

  அன்னை சபரியின் மகிமை அறிந்து மகிழ்ந்தோம்.

  ஓவியம் நன்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *