Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !

‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !

print
சுமார் பதினேழு ஆண்டுகள் இருக்கும். அப்போது நாம் படிப்பை முடித்து ஒரு வரைகலை நிபுணராக பணிக்கு சேர்ந்த புதிது. நம் அலுவலகத்திற்கு ரெகுலராக வந்து செல்லும் கஸ்டமர் ஒருவர் ஒரு நாள் அவரது பணியின் பொருட்டு அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஜீவாதாரமாக விளங்கக்கூடிய மிகப் பெரிய ஆர்டர்  ஒன்று அவர் கையைவிட்டு போய்விட்டது என்று சர்வசாதாரணமாக கூறினார்.

Thiruvalluvar“என்ன சார்…. இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு… கொஞ்சம் கூட அலட்டிக்காம எப்படி உங்களால சகஜமாக இருக்க முடிகிறது?” என்று நம் சந்தேகத்தை கேட்டோம்.

“அதை தக்க வெச்சிக்க என்னால மேக்ஸிமம் என்ன பண்ண முடியுமோ அதை  பண்ணினேன். அதையும் மீறி அது கையைவிட்டு  போய்டுச்சு. என்ன பண்றது வள்ளுவர் கூட சொல்லியிருக்கார்….

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (குறள் 376)

அதை நினைச்சி ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்” என்று ஒரு குறளை எடுத்து விட்டார்.

(இந்த குறளின் பொருள் : ஒரு பொருளை எத்தனை காத்தாலும் நமக்கு அது இல்லை என்றால், அது நம்மிடம் தங்காது. ஆனால் அது நமக்கு தான் என்று இருந்தால் நாமே அதை வெறுத்து வெளியே தள்ளினாலும் அது நம்மை விட்டுப் போகாது.)

“என்ன சார் சொல்றீங்க? இதுக்கெல்லாம் கூடவா குறள் இருக்கு?” ஆச்சரியத்தில் விரிந்தோம்.

“திருக்குறள் ஒரு கடல் சார். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான வரிகள் திருக்குறளில் உண்டு” என்றார்.

(உண்மை தான். சென்ற ஆண்டு ஒரு மிகப் பெரிய விஷயம் நம் கையைவிட்டு நழுவிய போது, மேற்படி குறள் தான் நமக்கு ஆறுதலளித்தது.)

அதுவரை மேலோட்டமாக திருக்குறளை பார்த்து வந்த நாம் அந்த நண்பரிடம் பேசியது முதல் சற்று ஆழமாக பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போது புத்தகக் கண்காட்சி அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். அங்கு கண்காட்சிக்கு செல்லும்போது ஒரு திருக்குறள் தெளிவுரை நூலை வாங்கி வந்தோம். (ONE OF THE BEST தெளிவுரை அது.  உங்களுக்கும் வேண்டுமென்றால் நமக்கு தகவல் தெரிவிக்கவும். வாங்கி அனுப்புகிறோம்).

அதுமுதல் சராசரி வாழ்க்கையின் சம்பவங்களை திருக்குறளோடு பொருத்திப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. பல குறள்கள் மனப்பாடம் ஆயின. திருக்குறளை கற்க கற்க மனதில் உள்ள மாசுகள் அகன்றன. கொள்கையில் பிடிப்பு ஏற்பட்டது. நேரத்தின் அருமை புரிந்தது. எழுத்து செம்மை பெற்றது.

எத்தகைய சூழல் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அவருக்கு வள்ளுவர் தனது குறள் மூலம் தீர்வு சொல்லியிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டோம்.

வள்ளுவர் காட்டும் வழி நின்று வாழ்ந்தால் ஒருவர்க்கு வாழ்வில் தோல்வி என்பதே இல்லை. துன்பம் என்பதும் இல்லை.

திருக்குறள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் நல்முத்து என்றாலும் நமக்கு மிகவும் பிடித்த சில குறள்களை பட்டியலிடுகிறோம்.

DSCN4604

சில சமயம் சில செயல்களில் இறங்க அச்சமும் தயக்கமும் தலை காட்டும்போது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619).

என்ற குறள் நினைவுக்கு வரும்.

கடந்த காலங்களில் பணத்திமிரில் சிலர் நம்மிடம் தகாத முறையில்  நடந்துகொண்ட போது,

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். (குறள் 158)

என்ற குறளின் கூற்றுப்படி அமைதி காத்தோம்.

நம் மீது பொறாமை கொண்டோர் நம் பாதையில் குறுக்கிட்டு நமக்கு ஊறு விளைவிக்க முயன்றபோது,

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (குறள் 319)

என்ற (LAW OF KARMA) குறள் நினைவுக்கு வரும். நம் லட்சியத்தில் நாம் கவனம் செலுத்துவோம். அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான் என்று ஆறுதல் அடைந்தோம்.

நட்பு என்றால் மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் நமக்கு அதன் அர்த்தமே வேறு. நட்பு தொடர்பாக மட்டுமே நான்கு அதிகாரங்களை தந்திருக்கிறார் வள்ளுவர்.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787)

(பொருள் : அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.)

நம் முன் சிரித்துப் பேசிவிட்டு நமது முதுகிற்கு பின்னே புறம் பேசுபவர்களை கண்டால்…

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (குறள் 182)

இந்த குறள் நினைவிற்கு வரும்.

(ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது!)

சில சந்தர்ப்பங்களில் எப்படித் தான் இந்த உலகில் வாழ்வது என்ற ஐயம் ஏற்படும்போது,

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (குறள் 295)

என்று ஆறுதல் அளிப்பார் வள்ளுவர்.

(வாய்மையோடு  ஒருவர் வாழ்ந்து வந்தால் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட அவர்கள் உயர்ந்தவர்களாவார்கள்.)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

‘திருக்குறள் முரசு’ செல்வன்.குறள் மகனுடன் சென்னையில் திருக்குறள் விழிப்புணர்வு உண்ணாவிரதத்தின்போது…

எம் லட்சியம் என்ன? எங்கே போகிறேன் நான்?

இந்த வாழ்க்கையில் எம் குறிக்கோள் என்னவென்றால் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட பக்தி திருமுறைகளின் புகழை பரப்பும் தொண்டை செய்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொண்டை உலகறியச் செய்வது.

மற்றொன்று ‘திருக்குறள்’ தொண்டு செய்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து இந்த உலகில் குறள்நெறி பரவ உறுதுணையாய் இருப்பது.

சமீபத்தில் நடைபெற்ற நமது ரைட்மந்த்ரா விருதுகள் விழாவில் கூட முதல் மரியாதை யாருக்கு அளித்திருக்கிறோம் என்று பாருங்கள்…

Rightmantra Awards 2014 B copy

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரைட்மந்த்ரா தளத்தை துவக்குவதற்கு முன்பு நமக்கு இரண்டு மிகப் பெரிய ஆப்ஷன்கள் இருந்தன. ஒன்று ஒரு மிகப் பெரிய ENTERTAINMENT WEBSITE க்கு தலைமை செய்தியாளராக செல்வது, மற்றொன்று புகழ்பெற்ற CINEMA PORTAL ஒன்றுக்கு முதன்மை ஆசிரியராக செல்வது. இரண்டிலுமே ரூ.60,000/- வரை அப்போதே ஊதியம் தருவதாக சொன்னார்கள். வாரம் ஒரு சினிமா பார்க்க வாய்ப்பு, நடிகர் நடிகைகளை சந்திக்கக் கூடிய  வாய்ப்பு, டிராவல் அலவன்ஸ், அப்படி இப்படி என பல சலுகைகள் வேறு. ஆனால் இறைவன் அளித்த இந்த அறிவையும் ஆற்றலையும், இன்று தோன்றி நாளை மறையும் விட்டில் பூச்சிக்களை போன்ற திரைப்பட நடிகர்களை பற்றி எழுதவும், கிசுகிசுக்களை / ஊர்வம்புகளை எழுதவும், மனதை மழுங்கடிக்கூடிய செய்திகளை எழுதவும் நாம் பயன்படுத்த விரும்பவில்லை. லட்ச லட்சமாக கொட்டிக்கொடுத்தாலும் கூட.

வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இருக்க விரும்பினோம். நம் எழுத்துக்கள் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் மட்டுமே பயன்படவேண்டும் என்கிற உறுதி கொண்டு RIGHTMANTRA.COM என்கிற இந்த எளிய முயற்சியை துவக்கினோம்.

அப்போது நம் மீது அக்கறை கொண்ட நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது… நமது கண் முன் இருந்த ஆப்ஷன்களை பற்றி கூறி இந்த தளம் தொடர்பாக நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை வாழ்க்கைப் பயணத்தை பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “யாரை நம்பி நீ இதுல இறங்குறே? இதுல உன்னால சாதிக்க முடியுமா? எதுக்குப்பா ரிஸ்க் எடுக்குறே?” என்று கேட்டார்.

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” குறள் 1023

என்று பதில் தந்தோம் அவருக்கு.

(இந்த குறளின் பொருள் : என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று  செயலாற்றும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.)

உண்மை தான். தெய்வம் துணை நிற்பதால் தான் அரசியல், சினிமா இரண்டையும் தவிர்த்து வெற்றிகரமாக ஒரு தளம் நடத்த முடியும் என்பதை நிரூபித்ததோடல்லாமல் மூன்றாமாண்டில் நமது தளம் அடியெடுத்து வைத்திருக்கிறது.

தெய்வம் நமக்குத்துணை பாப்பா!
ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா!!

– ஜனவரி 16 – இன்று திருவள்ளுவர் தினம்

===========================================================

தெய்வ மணம் வீசும் சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்!

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.

variyarஉலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள். திருமால் இரண்டடியால் மூவுலகையும் அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா உலகங்களையும் அளந்தவர்.

திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும் சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது, வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்வது.

கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள் தனது பெருமையினின்றும் குறையாது. திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண் மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும். எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும் சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.

இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக் கிடைக்கும். கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன் சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

– திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

===========================================================

முக்கிய அறிவிப்பு : தொடர் விடுமுறை காரணமாக இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்றவாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !

===========================================================

Also check :

திருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்!

திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

ஷேர் ஆட்டோவில் ஒரு சமூகத்தொண்டு!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள் – Rightmantra Prayer Club

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ? RIGHTMANTRA PRAYER CLUB

“இது கூட தெரியாமல் தான், நீர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீரா?” Righmantra Prayer Club

===========================================================

[END]

5 thoughts on “‘திருக்குறள்’ தந்த திருப்புமுனை – திருவள்ளுவர் தின ஸ்பெஷல் !

  1. திருவள்ளுவர் தினத்தில் திருக்குறள் பற்றிய அசத்தல் பதிவு . 17 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் சந்தித்த நபருக்கு நன்றி சொல்ல வேண்டும். தாங்கள் சுட்டிக் காட்டிய ஒவ்வொரு குறளும் அருமை. திருக்குறளை ஒவ்வொருவரும் padiththu பயன் பெற வேண்டும் .ஒவ்வொரு ஆண்டு vizha விலும் திருவள்ளுவர் விருது கொடுத்து திருவள்ளுவரை கௌரவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு பிடித்த திருக்குறள் , இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் .

    நன்றி
    உமா வெங்கட்

  2. வாழ்வின் தத்துவத்தை கொண்ட உலக பொதுமுறை திருக்குறள் நாம் அனைவரும் படித்து பயன்பெற்ற, மேலும் பயன்பெற உதவுவது.
    நீங்கள் சுட்டிகாட்டியுள்ள எல்லா குறளும் மிகவும் அர்த்தமுள்ள குறள்கள்.
    உங்களின் ஆரம்ப பதிவுகள் அனைத்தும் குறள் இல்லாமல் அமைந்தது இல்லை.
    உங்கள் லட்சியத்திற்கும் நீங்கள் போகும் பாதைக்கும் என்றன்றும் தெய்வம் உங்கள் துணை நிற்கும்.
    நன்றி

  3. வேதம் இருப்பதால் சமஸ்கிருதத்திற்கு பெருமை. திருக்குறள் இருப்பதால் தமிழுக்கு பெருமை. எனவே திருக்குறள் வேதத்திற்கு சமமானது என்று மகா பெரியவா கூட ஒரு முறை கூறியிருக்கிறார்.

    திருக்குறள் கற்போம், குறள்வழி நிற்போம்.

    தங்களுக்கு பொருத்தமான குறள் எது தெரியுமா?

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில். (குறள் 446)

    அனைவருக்கும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின, காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்

  4. Could you please tell me name of book you bought? I just need Thirukkural book with simple explanation about each couplet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *