Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > “உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு !

“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு !

print
ன் மகனை சந்திக்க கிராமத்தில் இருந்து ஒரு தந்தை சென்னை வந்தார். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த மகன், சென்னையில் ஒரு வெற்றிகரமான பிசினஸ் புள்ளி. மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தான் அவன். பிறந்ததிலிருந்தே தன் கிராமத்திலேயே தனது வாழ்க்கையை கழித்துவிட்ட தந்தைக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. புரியவும் புரியாது. “அதனால் என்ன? நான் என் மகனுடனும் அவன் குடும்பத்துடனும் சில நாட்கள் கழிக்கவே வந்திருக்கிறேன். வெளியே போய் யாருடன் நான் பேசப்போகிறேன்?” என்பது அவர் கருத்து.

ஆனால் மகனுக்கோ அப்பா சென்னைக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். அது சம்திங் ஸ்பெஷல் அவனுக்கு. அப்பாவின் இந்த வருகையை மறக்க முடியாததாக செய்துவிடவேண்டும் என்று விரும்பினான். அப்பாவை அழைத்துக்கொண்டு போய் சென்னையை சுற்றிக் காட்டவேண்டும் என்றும் விரும்பினான். மாலை வேளைகளில் அப்பாவும் மகனும் ஏதாவது ரெஸ்டாரண்ட்டுக்கு  போய் நேரத்தை கழிப்பது வழக்கம்.

Walking Stick

ஒரு நாள் மகன் மிக உற்சாகமான ஒரு மூடில் இருந்தான். “இன்னைக்கு நைட் நாம ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போவோம்!” என்றான்.  ஓட்டல் ரெஸ்டாரண்டில் அமர்ந்துகொண்டு சூரியனுக்கு கீழே உள்ள அனைத்தை பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சாப்பிட்ட பானங்களுக்கு சைட் டிஷ்ஷாக வேர்கடலை, சாலட், சிப்ஸ் என்று சிலவற்றை ஓட்டல் பணியாளர்கள் வைத்தார்கள். வயதான அந்த தந்தைக்கோ கிட்டத்தட்ட பற்கள் கிடையாது. எனவே அவற்றை சாப்பிடுவதில் அவருக்கு ஆர்வம் கிடையாது. அவர்கள் புறப்படும்போது, டேபிளில் இருந்த அவித்த வேர்கடலையை மட்டும் ஒரு கைநிறைய எடுத்து தனது வேட்டியில் அவற்றை முடிந்துகொண்டார். காரில் போகும்போதோ அல்லது வேறு எப்போழுதாவதோ அதை சாப்பிடலாம் என்று நினைத்திருப்பார் போல.

மகன் பில்லை செட்டில் செய்த பிறகு இருவரும் வெளியே வந்தபோது துரதிர்ஷ்டவசமாக தந்தை ஓட்டலின் லாபியில் கால் தடுக்கி, விழுந்துவிடுகிறார். வேட்டியில் முடிந்து வைத்திருந்த வேர்கடலை கார்பெட் மீது விழுந்து நாலாபுறமும் சிதறி ஓடுகிறது.

ஒன்னும் பிரச்சனையில்லே. அந்த சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். அந்த மகனோட இடத்துல யாராவது இருந்திருந்தா வெட்கப்பட்டு ரொம்பவும் சங்கடப்பட்டிருப்பாங்க.

“இவரையெல்லாம் ஸ்டார் ஓட்டலுக்கு கூட்டிட்டு வந்தேன் பாரு… என்னை சொல்லணும்” என்று தன்னை தானே நொந்து கொண்டிருப்பார். “இதான் கடைசி. இனிமே வெளியே எங்கேயும் இவரை கூட்டிட்டு வரப்போறதில்லே…” நிச்சயம் இப்படித் தான் முடிவே கட்டியிருப்பார்கள்.

ஆனால் இந்த மகன் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. மெலிதான புன்னகையுடன், தன் தந்தை எழுந்திருக்க உதவினான். கோபமோ எரிச்சலோ படுவதற்கு பதில் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டான். சிரித்துக்கொண்டே இருவரும் வீடு திரும்பினார்கள். நிச்சயம் அடுத்த வாரமும் இங்கு வரவேண்டும் என்று இருவரும் முடிவுசெய்தனர்.

அந்த வயதான தந்தைக்கு அந்த இடமும் அந்த அவித்த வேர்கடலையும் ரொம்ப பிடித்துவிட்டது. அடுத்த சில நாட்களில் நண்பர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றபோது, தந்தையானவர் ஓட்டலில் நடந்ததை அனைவரிடமும் சொல்லி சிரிக்க வைத்தார்.

ஒருவர் மகனை பார்த்து கேட்டார்…. “உங்களுக்கு அப்போது சங்கடமாக இல்லையா?”

“அவர் என் அப்பா. அவருக்கு தெரிஞ்ச அவங்க ஊர் பாஷையில தான் அவர் பேசுவார். சென்னை மாதிரி ஒரு பெரிய மெட்ரோபாலிடன் சிட்டில இருக்குற பெரிய பெரிய ஸ்டார் ஓட்டல்ஸ்க்குகூட வேட்டி கட்டிட்டு போகத் தான் அவர் விரும்புவார். பார்ல சைட் டிஷ்ஷா வைக்கிற வேர்கடலையை அப்புறம் சாப்பிடுறதுக்கு எடுத்து வெச்சுக்குவார். இப்படி அவர் விரும்புறதை எல்லாம் அவர் செய்வார். அதனால் என்ன?”

அவரோட நேச்சருக்காகவும் பழக்கவழக்கங்களுக்காகவும் நான் ஏன் சங்கடப்படணும்? அடுத்தவர்களை பாதிக்காத வரை அவர் செய்யும் எதையும் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

ஓட்டல் பணியாளர்கள் அந்த சம்பவத்தை பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அந்த மகன் கவலைப்படவில்லை. “அவங்க அக்கறை அவங்களோட பில்லுலயும் டிப்ஸ்லயும் மட்டும் தான் இருக்கணும். என்னோட அக்கறை எங்கப்பாவோட சந்தோஷத்துல தான் இருக்கணும்!”

Happy Fathers day

இந்த விஷயத்தில் கணவனின் கருத்துக்கு மனைவி முழு ஆதரவு தெரிவித்தாள். தன் மாமனாரை பற்றி பெருமிதம் கொள்ள பல்வேறு விஷயங்கள் இருப்பது அவளுக்கு தெரியும்.

மேற்சொன்ன உதாரணம் ஒரு தந்தை மீது மகனுக்கு உள்ள பாசத்தை மட்டும் குறிக்க கூறப்பட்டதல்ல. பாசத்திற்கும் மேல் ஒரு தந்தை மீது மகனுக்கு உள்ள புரிதலை கூறுவது அது. மற்றவர்கள் வாழ்க்கை முறைக்கு (LIFE STYLE) நாம் அளிக்கவேண்டிய மரியாதையை பற்றி கூறுவது.

“70 களை கடந்த ஒரு முதியவர் தன்னுடைய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. தன் விருப்பப்படியே அவர் இருப்பது அவருக்கு பிடிக்கிறது. அவர் விரும்பியதை செய்கிறார். என்னை பொருத்தவரை பழைய பஞ்சாங்கமாக என் தந்தை இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. இந்த வயதில் அவர் விருப்பத்திருக்கு எதிராக ஏன் போர்க் மற்றும் முள் கரண்டியை கொண்டு சாப்பிட அந்த பெரியவருக்கு நான் சொல்லித் தரவேண்டும்?”

“நீதி நெறி பிறழ்ந்து அவர் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது ஆபத்தான செயல்களை செய்தால் மட்டுமே நான் கவலைப்படுவேன். மற்றபடி அவர் விரும்பியபடி அவர் இருக்கட்டும். இந்த வயதில் நான் அவரை மாற்ற  முயற்சிக்கமாட்டேன். அவர் என் அப்பா. நான் அவரை விரும்புகிறேன். அவர் மீது மரியாதை செலுத்துகிறேன்”

என்ன நண்பர்களே, உங்களால் இப்படி சிந்திக்க முடியுமா?

பல தருணங்களில் தங்களது குடும்பத்து உறுப்பினர்களின் இத்தகு செயல்கள் குறித்து பலர் சங்கடப்படுவதை பார்க்கிறோம். இதற்காக வெளிநபர்களிடம் “அவங்களுக்கு நாகரீகமோ அனுபவமோ பத்தலை. அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க” என்று இறங்கிப் போய் பேசுவதையும் பார்க்கிறோம்.

“என் மனைவிக்கு இங்கிலீஷ் தெரியாது. அவளுக்கு உலகம் தெரியாது. வெளியே நடக்கிறது என்னனு தெரியாது. அதுனால அவளை நான் வெளியில எங்கேயும் கூட்டிட்டு போறதில்லை. என்னோட நட்பு வட்டங்களிலோ அல்லது பிசினஸ் வட்டங்களிலோ அவளை நான் யாருக்கும் அறிமுகப்படுத்துறதில்லே…”

“எங்கப்பா அம்மாவுக்கு போர்க் & ஸ்பூன் வெச்சு சாப்பிட தெரியாது. அதனால அவங்களை நான் ரெஸ்டாரண்ட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போறதில்லே.”

“என் கணவர் ஒரு சாதாரன கிளார்க். அதனால் அவரை என்னோட பணக்கார ப்ரெண்ட்ஸ் கிட்டே அறிமுகப்படுத்த சங்கடமா இருக்கும்.”

“என் அண்ணனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லே. அதனால அவனை நான் எங்கேயும் கூட்டிட்டு போறதில்லே…”

இது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு உள்ளதா? அல்லது இது போன்று நினைப்பவர்களை பார்க்கிறீர்களா? அவர்களுடன் பழகுகிறீர்களா?

‘ஆம்’ என்றால்…. உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்… நானோ மற்றவர்களோ ஏன் இப்படி நினைக்கவேண்டும்? இதில் நாம் வெட்கப்பட என்ன இருக்கிறது? ஒருவர் வெட்கப்பட இந்த உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது.

மற்றவர்களின் கருத்தை  பற்றியும் அவர்கள் விமர்சனம் பற்றியும் பலர் கவலைப்படும் நேரத்தில் உண்மையான மகிழ்ச்சியை புறக்கணிக்கிறார்கள்.

நமது உறவுகளை மதிப்போம். அவர்கள் உணர்வையும் மதிப்போம்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

=================================================================

ஒரு வேண்டுகோள்!

நம் வாசகர்கள் அனைவரும், அவரவர் தந்தைக்கு இன்று ஏதேனும் ஒரு பரிசு தரவேண்டும். அவர்கள் விரும்பும் எதையாவது வாங்கித் தரலாம். வேட்டி, சட்டை, வாட்ச் இப்படி ஏதாவது. இவற்றை தந்து கையில் செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அவரவர் தந்தையிடம் ஆசிபெறுங்கள். அவசியம் நம் வாசகர்கள் இதை செய்யவேண்டும். ஒருவேளை இந்த பதிவை நீங்கள் சற்று தாமதமாக பார்த்தாலும் பரவாயில்லை. அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டால் அன்று தான் அவர்களை மதிக்கவேண்டும் கௌரவிக்க வேண்டும் என்பதில்லை. தினம் தினம் அன்னையர் தினம் தான். தந்தையர் தினம் தான்.

உங்கள் தந்தைக்கு ஏதேனும் பரிசு கொடுத்து அவரிடம் ஆசிபெற்று விட்டு உங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்!

=================================================================

[END]

8 thoughts on ““உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” – தந்தையர் தின சிறப்பு பதிவு !

  1. “தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்” -நபிகளின் பொன்மொழி

    என் தந்தைக்கு ஒரு புத்தக விரும்பி என்பதால், நான் ஒரு புத்தக கடையின் voucher பரிசாக கொடுக்க சொன்னேன்…

    தாயுமானவன்!

    தூக்கம் மறந்த வேளையிலே..
    கதை..சொல்லி..தூங்க வைத்தான்..
    அவன் தாயும்… அல்ல..

    கைபிடித்து ..
    வழி நடத்தினான்..
    அவன் என் பாதுகாவலனும் அல்ல..

    படிக்க மறந்த வேளையிலே..
    கல்வி கற்று கொடுத்தான்..
    அவன் என் ஆசானும் அல்ல..

    கஷ்டம் வந்த வேளையிலே..
    கை கொடுக்க ஓடி வந்தான்..
    அவன் கடவுளும் அல்ல..

    கடைசிவரை நான் இருக்கேன் என்றான்
    என் காதலனோ.. கணவனோ..அல்ல..

    அவன் எல்லாவற்றிற்கும் மேலானவன்..
    என் தகப்பன்… அவன் எனக்கு தாயுமானவன்..

    அனைத்து தந்தைக்கும், இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்..

  2. தாயிற் சிறந்த கோவிலுமில்லை…… தந்தை சொல் மிக்க மந்திரமில்லை….. ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை……நம் அன்னை தந்தையே அன்பின் எல்லை…..
    அப்பனுக்கு அப்பனான நம் சிவபரம்பொருளையும் நினைவில் கொள்வோம் ….

  3. BELATED FATHERS டே WISHES TO EVERYBODY .

    இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது. என் தந்தைக்கு 91 வயதாகிறது . அவருக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரத்தை இந்த சைட் மூலம் சொல்லி கொள்கிறேன்.

    தாங்கள் கூறிய இந்த பதிவில் உள்ள மகனை போல் ஒவொருவரும் தனது பெற்றோர்களின் உணர்ச்சி மற்றும் உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும்

    நமது உறவுகளை மதிப்போம்
    நன்றி
    உமா

  4. நம் தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்…தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை. தான் தனது வாழ்நாளில் கற்ற அனுபவப் பாடத்தை, தன் பிள்ளைகளுக்கு ஊட்டி இந்தச் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தருகிறார் அப்பா. முகநூலில் ஒரு கவிதை படித்தேன்.

    “நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்”
    என்று உணரும் காலத்தில்
    “நீ சொல்வதெல்லாம் தவறு”
    என்று சொல்ல நமக்கு ஒரு மகன்
    பிறந்து விடுகிறான் .

    காலம் வேகமாக சுலழ்கிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம், கவலைகளை மறந்து, நம் தந்தையுடன்மகிழ்வாய் இருப்பதற்கே இது போன்ற நாட்கள். ஆகவே, அன்று ஒரு நாள் நமது அப்பாவின் மகிழ்சிக்குக் காரணமாய் இருப்போம்.

    என் அப்பா-விற்கு பழைய பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். இரவு நேரங்களில் மொட்டை மாடியில் மொபைல் மூலம் பாடல்கள் கேட்பார். அதனால் இந்த தந்தையர் தினத்தில், அவர் மகிழும் வண்ணம் ஒரு வானொலி (PHILIPS RADIO) flipkart -ல் வாங்கி பரிசளித்தேன்.. மிகவும் மகிழ்ந்து போனார்.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

    விஜய் ஆனந்த்

  5. எல்லா முரண்பாடுகளுக்கும்
    கருத்து ஒப்புமை இன்மைக்கு நடுவிலும்

    எல்லோருக்கும் தனது தந்தைதான்
    முதல் விருப்ப நாயகன்.
    முதல் ஆசான் !

  6. எந்த ஒரு ஆண் தன் தாயை தன் சகோதரியை நேசிக்கிறானோ, அவர்களின் உணர்வுகளை மதிக்கிறானோ அவனே தன் மனைவி மக்களையும் நேசிக்கமுடியும். நேசம் என்பது தனியே ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படுவதாயின் அது நிஜமானதல்ல. நேசம் என்பது சிறு வயது முதலே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியது. அதனை பெற்றோர் தாம் தம் பெற்றோரை ,உறவினர்களை நேசிப்பதன்மூலம், ஆதரிப்பதன் மூலம் தான் தம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். ஆகவே குற்றங்களை மட்டும் பாராது, உறவுகளுடன் நல்ல சுமூகமாக வாழ்ந்து இளம் சந்ததிக்கு உதாரணமாக விளங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *