வியாச மகரிஷி சொல்ல அதன் பொருள் உணர்ந்து எழுதியருளியவர் விநாயகப் பெருமான். மகாபாரதத்தை புராணங்களோடு போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. புராணங்கள் என்றால் பழையது புராதனமானது என்று பொருள். (மொத்தம் பதினெட்டு புராணங்கள் உள்ளன.) அந்த பதினெட்டு புராணவரிசையில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை வராது. இவை இரண்டும் இதிகாசங்கள் என்ற வகையைச் சார்ந்ததாகும். ‘இதிகாசம்’ என்றால் ‘இப்படி நடந்தது’ அதாவது ‘இதி’ என்றால் ‘இப்படி’ என்றும் ‘காசம்’ என்றால் ‘நடந்தது’ என்றும் பொருள் கூறப்படுகிறது. அதாவது ‘நடந்த வரலாறு’ என்று அர்த்தம்.
மகாபாரதம் கற்பனை கதை அல்ல – உண்மையான நிகழ்வு
எனவே பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல, மகாபாரதம் ஏதோ கற்பனை கதை அல்ல. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் நிஜத்தில் நடைபெற்றவை. சில நூறாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றவற்றுக்கே நம்மிடம் போதிய சான்றுகள் இல்லை. ‘மகாபாரதம்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வு என்பதால் ஒரு சில சான்றுகளே கிடைத்துள்ளன. மற்றபடி மகாபாரதம் மற்றும் பாரதப் போர் நடைபெற்ற பல இடங்கள் இன்றும் நம் நாட்டில் இருக்கின்றன. பல இடங்கள் காலப்போக்கில் பெயர் மாறியிருக்கின்றன.
அழிந்து போகும் உடலோடு கூடிய புலன்கள் விரும்பும் செயல்களைச் செய்து ஆத்மாவைக் கேவலப்படுத்தக்கூடாது என்பதே வியாசரின் கொள்கை. இதுதான் மகாபாரத்தின் மையக் கருத்து.
மகாபாரதத்தில் கிளைக்கதைகள் வகிக்கும் முக்கிய பங்கு
மகாபாரதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கிளைக்கதைகள் பல உண்டு. அவற்றில் நளதமயந்தி வரலாறு, சத்தியவான் சாவித்திரி வரலாறு, ராமன் வரலாறு, துஷ்யந்தன் சகுந்தலை வரலாறு, அரிச்சந்திரன் வரலாறு, குசேலன் கதை, பரசுராமன் கதை போன்றவைகள் குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர நீதி என்று பார்த்தால் பகவத் கீதை, விதுர நீதி & ஏராளமான ரிஷிகள் முனிவர்களைப் பற்றிய விவரங்களும் நகுஷன் போன்ற அரசர்களைப் பற்றிய கதைகளும் அடங்கியுள்ளது.
தேவயானி-கசன் கதை, யயாதியின் கதை, சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும்.
மனித குல நாகரீகங்களும் தொழில் நுட்ப வசதிகளும்ப பன் மடங்கு இன்றைய யுகத்தில் பெருகிவிட்டாலும் இன்றைய மனிதன் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டாலும் நினைத்தாலும் இப்படி ஒரு கதையை கற்பனையாக கூட எழுதமுடியாது. ஆனால் பாரத வரலாற்றையும் பாரதபோரில் நடந்தவைகளையும் எழுதிய வேத வியாசர் ஒரு யுக புருஷர். தெய்வ சொரூபி.
காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை
“காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை” என்னும் வாக்கு மகாபாரத்திற்கு மிகவும் பொருந்தும். அந்த அளவிற்கு ஒவ்வொரு கிளைக்கதையும் மையக்கதையோடு தொடர்புடையவை. முதலில் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வு பின்னர் நடைபெறப் போகும் மிகப் பெரிய மாற்றத்துக்கு காரணமாக அமையும் அதிசயக் காட்சிகள் மகாபாரதத்தில் அநேகம் உண்டு.
அந்த வகையில் நியூட்டனின் மூன்றாம் விதியான “EVERY ACTION HAS EQUAL AND OPPOSITE REACTION” (ஒவ்வொரு செயலுக்கும் அதற்க்கு சமமான எதிர் விளைவு உண்டு) என்னும் விதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதத்தில் காணப்படுகிறது என்பது ஆச்சரியம் தான்.
20-25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் ஞாயிறு தோறும் ‘மகாபாரதம்’ தொடர் பார்த்த ஞாபகம் இன்னும் பசுமையாக இருக்கிறது. அர்த்தம் புரியவில்லை என்றாலும் அந்த டைட்டில் பாடலுக்காகவே பார்ப்பது உண்டு.
ஞாயிறு வரும் தொடரின் முழு வசனங்களின் தமிழாக்கமும் முந்தைய நாள் தினமலர் இதழில் வெளியாகிவிடும். அதை வாங்கி படித்து அடுத்த நாள் ஒளிபரப்பாகும் தொடரை அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்.
அதற்கு முன்பு ஒளிபரப்பான ராமாயணம் எந்தளவு சூப்பர் ஹிட்டானந்தோ அதை விட பன்மடங்கு தொலைக் காட்சி நேயர்களிடம் மகாபாரதம் சூப்பர் ஹிட்டானது.
அதற்கு பின்னர் சன் டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., உள்ளிட்ட சாட்டிலைட் டி.வி.க்கள் வந்துவிட்டன. இருப்பினும் தமிழுக்கென்றே இந்த மாபெரும் காவியம் பிரத்யேகமாக எடுக்கப்படவில்லை. சில தொடர்கள் வந்தாலும் அவை அனைத்தும் ஹிந்தியில் எடுக்கப்பட்ட தொடர்களின் டப்பிங்கே. நேரடி தமிழில் இதுவரை எவரும் அதை தயாரிக்கவில்லை. காரணம்… அதற்கு ஆகும் பொருட்செலவு.
தற்போது கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுதும் பார்க்கும் சன் டி.வி. என்கிற மிகப் பெரிய ஊடகமும், வற்றாத சுரங்கமாய் தாரளமாக பொருட் செலவு செய்ய சுனில் மேத்தா என்கிற மிகப் பெரிய தயாரிப்பாளரும், டைரக்ஷன் துறையில் நல்ல அனுபவமும் சிறந்த தொழில் நுட்ப அறிவும் ஒருங்கே பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகியோரும் ஒன்று சேர்ந்துவிட இதோ தமிழில் பிரத்யேகமாக மகாபாரதம் தொடர் துவங்கிவிட்டது.
முதல்முறையாக தமிழ் நடிகர், நடிகைகள் நடிக்க மிகப் பிரமாண்டமாகத் நேரடியாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடர் சன் தொலைக்காட்சியில் பிப்ரவரி 17ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை – ஒரு மணிநேரம் – ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு ஃபிரேமிலும் நேர்த்தி மற்றும் செறிவு !
தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை இணைத்திருக்கிறேன். எந்தளவு ஒவ்வொரு காட்சியும் கலர் ஃபுல்லாக – ரிச்சாக – தெரிகிறது பாருங்கள். இதை சற்று பெரிய ஸ்க்ரீன் டி.வி.யில் பார்க்கும்போது நிச்சயம் ஒவ்வொரு காட்சியும் மனதை கொள்ளை கொள்ளும் என்பது உறுதி. புகைப்படங்களில் காணப்படும் அரங்குகள், ஆபரணங்கள், கலைஞர்களின் மேக்கப், என்ன ஒவ்வொரு அம்சத்திலும் நேர்த்தியை பார்க்க முடிகிறது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது டி.வி. செட்டுக்கள் விற்பனை அதிகரிப்பதை போன்று இந்த சீரியலை அடிப்படையாக வைத்து டி.வி. விற்பனை விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியமில்லை.
ஒரே மாதிரி ஸ்டீரியோ டைப் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மத்தியில் இது போன்ற இதிகாசத் தொடர்கள் ஒளிபரப்பாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமிலை. மகாபாரதம் உணர்த்தும் ‘வாழ்வியல் நீதிகள்’ இதன் மூலமாகவாவது இன்றைய தொலைக்காட்சி நேயர்களிடம் சென்று சேரும். அந்த வகையில் தொலைக்காட்சி வரலாற்றில் இது மிகப் பெரிய முன்னேற்றம் + மாற்றம்.
சினி விஸ்டாஸ் என்ற நிறுவனம் சார்பில் சுனில் மேத்தா, பிரேம் கிஷண் மல்கோத்ரா தயாரிக்கும் இந்த தொடரை சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தேவா இசை. பா.விஜய் பாடல். கில்லி சேகர் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். கணேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்ரியா, பூஜா, ஐஸ்வர்யா, அமத் ஆகியோருடன் புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.
ஃபேஸ்புக் மட்டுமே தெரிந்திருக்கும் இன்றைய தலைமுறையினர் மற்றும் அவரசர வாழ்க்கையில் நேரமின்றி தவிக்கும் இல்லத்தரசிகள் பலருக்கு நமது இதிகாசம் மற்றும் அவற்றின் மாண்பு போன்றவை சரியான முறையில் இந்த தொடர் மூலம் சென்று சேரும். அந்த வகையில் இந்த தொடர் வரவேற்கத்தக்கது.
அனைவரும் பார்த்து பொருள் உணர்ந்து பயன்பெறுங்கள். உங்கள் குழந்தைகளிடம் பாரதப் பாத்திரங்கள் மற்றும் அதன் மேன்மை பற்றி அடிக்கடி பேசுங்கள்.
…………………………
அடுத்து வருவது :
* மகா பாரதம் தொடரை இயக்கும் அரிய வாய்ப்பை பற்றி தொடரின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுவது என்ன?
* தொடரின் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி
* மற்றும் மகாபாரதம் தொடரின் ஹைலைட்ஸ் – பிரத்தேக படங்களுடன் !
…………………………………………………………………………….
உண்மையில் சன் தொலைகாட்சி இந்த படைப்பின் மூலம் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது எப்பொழுதும் அழுது வடிந்து கொண்டு இருக்கும் நெடுந்தொடர்களுக்கு மத்தியில் மக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் நம் சரித்திரங்களை தெரிந்து கொள்ள ஒரு மிக பெரிய வாய்ப்பு ,இத்தொடர் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்ல தகவல்கள். அடுத்த கட்டுரையை படிக்கும் ஆவல் வந்து விட்டது சுந்தர். கீப் இட் அப்.
SUPER SUNDAR SIR.
நல்லதகவல் .
நன்றி சுந்தர்ஜி .
மனோகரன்
நல்ல தகவலுக்கு நன்றி. தங்கள் அடுத்த பதிவை படிக்கும் ஆவல் வந்துவிட்டது
இன்றய இளைங்கர் சமுதாயம் இந்திய வரலாறு, பண்பாட்டை நன்கு அறிந்து கொள்ள மகாபாரதம் தொடர் மிகவும் பயன்படும். சண் தொலைக்ககாட்சிக்கு வாழ்த்துக்கள்.