Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 25, 2022
Please specify the group
Home > Featured > கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

print
ந்த உலகில் 100% புண்ணியம் செய்தவர்களும் இல்லை. 100% பாபம் செய்தவர்களும் இல்லை. இரண்டையும் மனிதர்கள் கலந்தே செய்கிறார்கள். ஆகையால் தான் மனிதப் பிறவியே அமைகிறது. முற்பிறவியில் செய்த பாபத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த பிறவியில் வாழ்க்கை அமைகிறது. அப்படி அமையும் இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் புண்ணியமோ, இறைவழிபாடோ பிறவியை மேலும் சிறப்பானதாக அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. ஆனால் செய்யும் பாபம் இப்பிறவியை துன்பம் நிறைந்ததாக ஆக்குகிறது. ஆக நமது இந்த நிலைக்கு காரணம் ஒரு வகையில் நாமே தான்.

ஒருவர் செய்த முன்வினைப்பயனும், இவ்வினைப்பயனும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்றால், கோவில் எதற்கு அதில் கடவுள் எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? என்ற கேள்விகள் எழலாம். இறைவனின் அருங்குணங்களுள் ஒன்று மன்னித்தல். ‘மன்னிப்பு’ என்ற ஒன்றை மட்டும் இறைவன் நமக்கு வழங்கவில்லை என்றால் இந்த உலக வாழ்க்கை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு துன்பமயமானதாக இருக்கும். நாம் சுவாசிப்பதால் உயிர்வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதால் உயிர் வாழ்கிறோம்.

சென்ற ஆண்டு சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசக முற்றோதல் சீர்காழியில் நடைபெற்றபோது அதை காண சென்றிருந்தபோது... முற்றோதலின் இறுதியில் பன்னிருதிருமுறையை தலைமீது வைத்து அலங்காரமாக எடுத்துவந்த தொண்டர்
சீர்காழியில் திருவாசக முற்றோதலின் இறுதியில் பன்னிருதிருமுறையை தலைமீது வைத்து அலங்காரமாக எடுத்துவந்த தொண்டர்

உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், கலியின் கொடுமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், இறைவன் வழங்கிய அருட்கொடை தான் பன்னிரு திருமுறைகள். வேதத்திற்கு இணையானவை… ஏன் அதனினும் மேலானவை இந்த பன்னிரு திருமுறைகள். திருமுறைகளை பற்றி நீங்கள் அறிந்திருந்தாலே புண்ணியம் செய்தவர்கள் என்று தான் அர்த்தம். விதியை உடைப்பதில், ஊழ்வினையை அறுத்தெரிவதில் பன்னிரு திருமுறைக்கு நிகர் எதுவுமில்லை.

பன்னிரு திருமுறையில் சொல்லப்படாத தீர்வுகளே இல்லை. அது தீர்க்காத பிரச்சனைகளும் இல்லை.

நமது முந்தைய பதிவுகளில் ஒன்றான ‘பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!’ பார்த்துவிட்டு பின்னூட்டமிட்டுள்ள வாசகி ஒருவர், தமது சகோதரிக்கு கூன் பிரச்னை இருப்பதாகவும், பாண்டியனின் ஜூரத்தை நீக்கி கூனை போக்கிய பதிகத்தின் வரிகளை தருமாறும் கேட்டுக்கொண்டார். அதை தனிப் பாதிவாகவே தருகிறோம். பலரும் பயன்பெற உதவியாக இருக்கும் என்று பதலளித்திருந்தோம்.

Panniru Thirumuraigal

இதோ நண்பர் சிவ.விஜய் பெரியசுவாமி அவர்கள் தினத்தந்தி ஆன்மீக மலரில் எழுதியிருந்த பாண்டிய கூன் நிமிர்த்திய படலுமும் அது தொடர்பான பதிகமும்.

அதே போன்று பாண்டியனின் ஜூரம் போக்கிய பதிகமான திருநீற்று பதிகமும் தந்திருக்கிறோம். கடுமையான காய்ச்சலினால் எவரேனும் அவதிப்பட்டால் உரிய சிகிச்சையை மேற்கொண்டு கூடவே இந்த திருநீற்று பதிகமும் படித்துவந்தால் நிச்சயம் நோயின் கடுமை வெகு சீக்கிரம் குறைந்து முற்றிலும் நலம்பெருவார்கள்.

====================================================================

எதிர்நீச்சல் போட்ட ஏடு !

கூன் பாண்டியன். நெடுமாற பாண்டியன் என்பதுதான் அவன் பெயர் என்றாலும், கூன் விழுந்தவன் என்ற காரணத்தால் ‘கூன் பாண்டியன்’ என்ற பெயர் அவனுக்கு நிலைபெற்று விட்டது. கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவி இருந்தான். அதனால் சைவ சமயத்தை எதிர்த்து வந்தான். ஒரு முறை கூன் பாண்டியன் ஆட்சி செய்த மதுரைக்கு திருஞானசம்பந்தர் வந்து தங்கியிருந்தார்.

மன்னனை பீடித்த நோய்

அப்போது சமணர்கள், சம்பந்தர் தங்கியிருந்த மடத்தை தீயிட்டு கொளுத்தினர். சம்பந்தர், ‘அந்தத் தீ அரசனையே சாரட்டும்’ என்று கூறி ‘செய்யனே திருஆலவாய்       மேவிய…’ என்ற பதிகத்தை பாடினார். (பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் துன்புறுவோர் இந்த பதிகத்தை பாடி, ஈசனை தொழுதால் தீவினைகள் அண்டாது. மேலும் செய்தவருக்கே அந்த தீவினைகள் செய்து சேரும்). உடனடியாக தீயின் வெப்பம், கூன் பாண்டியனை வெப்ப நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான்.

அவனைச் சார்ந்திருந்த சமண சமயத் துறவிகளால் அந்த நோயை சரி செய்ய முடியவில்லை. கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசி, சிறந்த சிவ பக்தையாவார். அவரது வேண்டுதலால் சம்பந்தர், ‘மந்திரமாவது நீறு…’ என்ற பதிகம் பாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி சாம்பலை மன்னனுக்கு பூசினார். மறுநொடியே பாண்டியனின் நோய் நீங்கியது. இதையடுத்து மன்னன் மனம் சைவ சமயத்தை நாடிச் சென்றது.

அனல் புனல் வாதம்

இதனை தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தரை ‘அனல் புனல்’ வாதத்திற்கு அழைத்தனர். மன்னன் முன்னிலையில் இந்த வாதம் நடைபெற முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக அனல் வாதம். அதாவது மூட்டப்பட்ட நெருப்பில் தாங்கள் எழுதிய சமயக் கொள்கைகள் அடங்கிய ஏடுகளை போட வேண்டும். மனதிற்குள் அச்சம் இருந்தாலும், சமணர்கள் கொஞ்சம் அகந்தையுடன், தாங்கள் எழுதிய சமயக் கொள்கை அடங்கிய ஏடுகளை தீயில் போட்டனர். அது முற்றிலும் எரிந்து சாம்பலானது.

அதன்பின்னர் திருஞானசம்பந்தர் தான் பாய திருநள்ளாறு ஈசனைப் பற்றிய ‘போகமார்த்த…’ என்னும் பதியம் அடங்கிய ஏட்டினை தீயில் இட்டார். அந்த ஏடு தீயில் கருகாமல் பச்சையாகவே இருந்தது. இதன் காரணமாக அந்தப் பதிகம் இன்றளவும் ‘பச்சைப் பதிகம்’ என்றே அழைக்கப்படுகிறது. வெட்கித் தலை குனிந்த சமணர்கள் மன்னனிடம், ‘மன்னா! அனலில் எங்கள் ஏடுகள் எரிந்தது தற்செயலான ஒன்றாக இருக்கலாம். எனவே நாங்கள் புனல் வாதத்தில் ஈடுபட நீங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

எதிர்த்து வந்த ஏடு

மன்னன் அனுமதி வழங்கினான்; சம்பந்தரும் போட்டிக்கு சம்மதித்தார். வைகை ஆற்றங்கரைக்கு அனைவரும் வந்தனர். வைகையில் இருகரைகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் கரையில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். புதுமையான வாதத்தைக் காண சிவனடியார்களும், சமணர்களும் மட்டுமின்றி பொதுமக்களும் அங்கு குவிந்திருந்தனர்.

‘அத்தி நாத்தி…’ என்று எழுதிய ஏட்டினை சமணர்களும், ‘வாழ்க அந்தணர்…’ எனும் பதிகம் அடங்கிய தனது ஏட்டினை சம்பந்தரும் வைகை ஆற்றில் விட்டனர். சமணர் ஏடு ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அப்போது சம்பந்தர் ஈசனை துதிக்க, சம்பந்தரின் ஏடு வைகை ஆற்றில் வெள்ளம் செல்லும் திசையில் செல்லாமல் வெள்ளத்தை எதிர்த்துக் கொண்டு எதிர்நீச்சல் போட்டுச் சென்றது.

கூன் நிமிர்ந்தது

வைகை ஆற்றின் இருபுறமும் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை எதிர்த்துச் செல்லும் ஏடுகளைப் பார்த்து அனைவரும் ஆரவாரம் செய்தனர். மன்னன் மனதிலும் ஆனந்தம் பொங்கியது. உள்ளத்தில் தோன்றிய புத்துணர்ச்சியால் வைகை நதியை எட்டிப் பார்த்த வண்ணம், எழுந்த மன்னனின் கூனானது அவனையும் அறியாமல் நிமிர்ந்தது. கூன் பாண்டியனாக இருந்த மன்னன் நெடுமாறன், நின்றசீர் நெடுமாறனாக ஆனான்.

சம்பந்தரின் புனல்வாத பதிகத்தில் ‘வேந்தனும் ஓங்குக’ என ஈசனை வேண்டி இருந்ததால், சிவபெருமான் பெருங்கருணை கொண்டு மன்னனின் கூனை நிமிர்த்தி அருளினார். இந்த நிலையில் மந்திரி குலச்சிறையார் என்பவர் எதிர்த்துச் செல்லும் ஏடுகளை எடுக்கக் குதிரை மீது கிளம்பிச் சென்றார். அப்போது அந்த ஏடுகள் கரையிலே தங்கும்படியாக, ‘வன்னியும் மத்தமும்…’ எனத் தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடினார்.

மன்னன் கட்டிய கோவில்

ஏடுகள் அனைத்தும் திருவேடகம் என்னும் தலத்திலுள்ள வைகை நதிக் கரையோரம் போய்த் தங்கியது. இந்த திருவேடகம் மதுரைக்கு அடுத்த சமயநல்லூர் என்னும் ஊருக்கு அருகில் இருக்கிறது. ஏடுகள் ஒதுங்கிய இடத்தை இன்றும் காணலாம். குலச்சிறையார் திருவேடகம் வந்ததும் இறங்கி ஏடுகளை எடுத்துக் கொண்டு, திருவேடகம் ஈசனை வணங்கி விட்டு பின்னர் சம்பந்தர் இருக்கும் இடம் வந்து ஏடுகளை சமர்ப்பித்தார்.

சம்பந்தரின் ஏடு நீரை எதிர்த்து கரையேறியதால் மன்னன் அன்று முதல் சைவ சமயத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டான். ஞானசம்பந்தர் ஏடு ஒதுங்கிய இடத்தில், திருவேடகத்தில் இருந்த ஈசனின் ஆலயத்தை கூன் பாண்டியனே கட்டி முடித்தான். இந்த ஆலயத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் தனித்தனியே ஐந்து நிலை ராஜகோபுரங்கள் உள்ளன. ஈசனின் திருநாமம் ஏடகநாதர் என்றும், அம்பாள் திருநாமம் ஏலவார்குழலி என்றும் அழைக்கப்படுகிறது.

நன்றி : சிவ.விஜய்.பெரியசுவாமி | தினத்தந்தி

====================================================================

சீர்காழியில் சம்பந்தர் அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட குளக்கரை
சீர்காழியில் சம்பந்தர் அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட குளக்கரை

திருப்பாசுரம்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.

வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.

ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.

பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.

மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.

நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.

====================================================================

திருநீற்றுப் பதிகம்

பாடல் – 1
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பாடல் – 2
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பாடல் – 3
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் – 4
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் – 5
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

பாடல் – 6
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

பாடல் – 7
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.

பாடல் – 8
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

பாடல் – 9
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.

பாடல் – 10
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

பாடல் – 11
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

 

14 thoughts on “கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

 1. சார்,

  கடன் தீர்க்கும் பதிகத்தை தரும்படி வேண்டிகொள்கிறேன். அல்லது அந்த புத்தகத்தின் பெயரை சொல்லவும்.

  நன்றி

  லோஹபிராமன்.

  1. நம் தளத்திலேயே கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல் பதிவாக வந்துள்ளது . pls refer the following link

   http://rightmantra.com/?p=12053

   நன்றி
   உமா

  2. கடன் தீர்க்கும் பதிகம்

   கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் வாழ்வதற்கும், பிறரிடமிருந்து கடன் பெறாமலே போதிய பொருளாதாரத்துடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்

   பண் : பழம்பஞ்சுரம் (3–108) ராகம் : சங்கராபரணம்
   பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: மதுரை

   வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
   ஆதம் இல்லி அமணொடு தேரரை
   வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
   பாதி மாதுடன் ஆய பரமனே
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
   கைதவம் உடைக் கார் அமண் தேரரை
   எய்தி, வாது செயத் திருவுள்ளமே?
   கைதிகழ் தரு மாமணி கண்டனே,
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   மறை வழக்கம் இலாத மாபாவிகள்
   பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
   முறிய வாது செயத் திருவுள்ளமே?
   மறி உலாம் கையில் மா மழுவாளனே,
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
   கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்
   செறுத்து, வாது செயத் திருவுள்ளமே?
   முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   அந்தணாளர் புரியும் அருமறை
   சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
   சிந்த, வாது செயத் திருவுள்ளமே?
   வெந்தநீறு அது அணியும் விகிர்தனே,
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
   மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
   ஓட்டி வாது செயத் திருவுள்ளமே?
   காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
   விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
   கழல, வாது செயத் திருவுள்ளமே?
   தழல் இலங்கு திருவுருச் சைவனே
   ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
   காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
   தேற்றி, வாது செயத் திருவுள்ளமே?
   ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,
   ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   நீலமேனி அமணர் திறத்து நின்
   சீலம் வாது செயத் திருவுள்ளமே?
   மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
   கோலம் மேனியது ஆகிய குன்றமே,
   ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   அன்று முப்புரம் செற்ற அழக நின்
   துன்று பொற்கழல் பேணா அருகரைத்
   தென்ற வாது செயத் திருவுள்ளமே?
   கன்று சாக்கியர் காணாத் தலைவனே,
   ஞாலம் நின்புகழே மிக வேண்டும், தென்
   ஆலவாயில் உறையும் எம் ஆதியே

   கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
   வாடல் மேனி அமணரை வாட்டிட,
   மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்
   பாடல் வல்லவர், பாக்கிய வாளரே

   திருச்சிற்றம்பலம்

   1. மாறன் சார்,

    மிக்க நன்றி. Rs 40 லட்சதிற்கும் மேலாக கடன் உள்ளது. ஊ ழ் வினை தான் காரணம் என்று கூறுகிறார்கள். எமற்றபட்டேன் உறவினர்களால். இந்த பதிகத்தை நம்பிக்கையுடன் வாசிக்கிறேன், அது என் கஷ்டங்களை போகட்டும். நன்றி லோஹாபிராமன்.

 2. வணக்கம்………..

  இறைவனின் திருவருளாலும், திருமுறைகளின் மகிமையாலும் அனைவரின் குறைபாடுகளும் நீங்கி நலமும் வளமும் பெற வேண்டும்……..

 3. நன்றி சுந்தர் சார். எனது இரண்டாவது மகனுக்கு (2 வயது) நாளை முதுகில் உள்ள கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம். (காஞ்சி காமகோடி child டிரஸ்ட் hospital ). அவனுக்கு நேற்று முதல் ஜுரம் உள்ளது. ஜுரம் தணிந்து ஆபரேசன் நன்றாக நடக்க ஈசனை வேண்டுகிறேன். சரியான சந்தர்பத்தில் மிகச் சரியான இரண்டு பதிகங்கள். எல்லாம் அவன் செயல்.
  ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர.

 4. கடன் தொல்லை நீங்க பதிகங்களும் மற்றும் இறைவனை கசிந்துருகி வணங்குவதும் நிச்சயம் உதவும் . அதில் சந்தேகமே இல்லை . இந்த முறைகளை தவிர கடனை திருப்பி செலுத்த மைத்ர முகூர்த்தம் பார்த்து , அன்றைய நாளில் -அந்த அசலில் குறைந்த அளவே செலுத்தினாலும் நம் கடன் தொல்லை முற்றிலும் நீங்குவதாக ஐதிகம். வரும் திங்கள் கிழமை 29-09-2014 அந்த நாள் வருகிறது (காலை 9.30 முதல் 11.30 வரை ). ஆகையால் நம் தள வாசகர்கள் கடன் தொல்லை நீங்க இந்த வாய்ப்பை முயன்றிடலாம்
  நன்றி சுந்தர்ஜி

 5. மேலும் செவ்வாய் தோறும் கடனை திரும்ப செலுத்த தொடங்கினால் சீக்கிரம் அடைத்திடலாம்…….

 6. திருவாசகம் முற்றோதல் குறைந்தபட்சம் ஆண்டிற்கொரு முறை வீட்டில் எளிமையான முறையிலாவது செய்து வந்தால், மனதிற்கு அமைதியும் நன்மையும் கிடைக்கும். இது எங்களின் அனுபவம். நன்றி!.

 7. சுந்தர் சார் , அருமை ,அதுவும் தக்க சமயத்தில் வெளியிட்டு இருப்பதும் அருமை .நமது திருமுறைகளை முறைப்படி படனம் செய்து வந்தால் அவைகள்ளால் நாம் அடையும் நற் பலன்கள் சொல்லி மாளாது … திருமுறைகளின் மகிமை குறித்த அருமையான பதிகம் இதோ :

  புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே;
  புத்த னார்தலை தத்தெனத் தத்துமே;
  கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
  கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே;
  பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
  பழைய என்புபொற் பாவைய தாக்குமே;
  சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
  செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.

  தலைகொள் நஞ்சமு தாக விளையுமே;
  தழல்கொள் நீறு தடாகம தாகுமே;
  கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே;
  கோள ராவின் கொடுவிடம் தீருமே;
  கலைகொள் வேத வனப்பதி தன்னிலே;
  கதவு தானும் கடுகத் திறக்குமே;
  அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே;
  அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே.

  வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே;
  வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே;
  மங்கை பாகனைத் தூது நடத்துமே;
  மருவி யாறு வழிவிட்டு நிற்குமே;
  செங்க லாவது தங்கம தாக்குமே;
  திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே;
  துங்க வான்பரி சேரற்கு நல்குமே;
  துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே.

  பெருகும் வைகை தனையடைப் பிக்குமே;
  பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே;
  நரியெ லாம்பரி யாக நடத்துமே;
  நாடி மூகை தனைப்பேசு விக்குமே;
  பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே;
  பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே;
  வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே;
  வாத வூரர் வழங்கிய பாடலே.

  பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
  ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
  வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
  ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

  வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
  கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
  நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
  மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

  திருமுறையே சைவநெறிக் கருவூலம்
  தென்தமிழின் தேன்பா காகும்
  திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
  செவிமடுத்த செந்தமிழ் வேதம்
  திருமுறையே நடராசன் கரம் வருந்த
  எழுதியருள் தெய்வ நூலாம்
  திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
  மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்……..

  சிவாய நம…..

 8. Sundar Sir,
  Thank you very much for your effort and time for publishing this Thirumurai pathigam in response to my request.
  Also, I have a request to you please: in the prarthanai sangam could you please pray for the cure of my sister, Vasantha’s koon mudhugu.(hunch back).
  Thanks and regards
  Sakuntala

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *