Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

print
* வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு போட்டு சோர்ந்து போயிருப்பவரா நீங்கள்?

* அலுவலகத்திலும் பிற இடங்களிலும் அனுதினமும் அவமானங்களை சந்தித்து சந்தித்து நொறுங்கிப் போகிறவரா?

* எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை என்று புழுங்கித் தவிப்பவரா?

* எங்கேயும் எப்போதும் சூழ்ச்சிகளுக்கும், துரோகங்களுக்கும் தொடர்ந்து இரையாகி வருபவாரா?

* ஆண்டவன் உங்களுக்கு மட்டும் வஞ்சனை பண்ணிட்டான்னு குமுறுகிறவரா?

* அல்லது மொத்தத்துல வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… வாழவே பிடிக்கலைன்னு சதா புலம்பிகிட்டே இருப்பவரா?

இந்த பதிவு உங்களுக்கு தான்….!

“இந்தப் பிரச்னையெல்லாம் எனக்கில்லேப்பா… I am perfectly well. I am a gifted person” என்று நினைப்பவரா?

இந்த பதிவு உங்களுக்கும் தான்….!!


கதை கேளு… கதை கேளு… நிஜமான கதை கேளு!

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன். சினிமா கதை இல்லீங்க. நிஜக் கதை. (ஹலோ… ஹலோ… எங்கே ஓடுறீங்க?? ஏன் அதுக்குள்ளே அவசரப்படுறீங்க? என்னோட கதைன்னா சொன்னேன்? கொஞ்சம் பொறுமையா படிங்க பாஸ்!!)

சிறு வயது முதல் தமிழ் மீடியத்திலேயே படித்து வந்த அந்த இளைஞருக்கு (நம்ம கதையோட ஹீரோ) ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக வந்தார். அடுத்து பிளஸ் 2விலும் நல்ல மதிப்பெண்கள் (மாவட்டத்தில் முதல்) எடுத்ததை அடுத்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தார்.

ஆங்கிலம் பேசவேண்டும் என்கிற தணியாத ஆவல் காரணமாக, ஆங்கிலத்தில் பேசும் மாணவர்களுடன் தமது நட்பை – அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ – இவர் வளர்த்துக்கொண்டார். பின்னர், கல்லூரியில் நடைபெறும் இலக்கியம் தொடர்பாக நிகழ்ச்சிகள், நாடகங்கள், அனைத்திலும் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வார். அவருக்கு இருந்ததெல்லாம் ஒரே ஒரு லட்சியம் தான். ஆங்கிலத்தில் நிபுணத்துவம் பெறவேண்டும். அதற்காக எந்த அவமானத்தையும் அவமதிப்பையும் இவர் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்.

இதென்ன பிரமாதம்?

இதெல்லாம் ஒரு விஷயமா? இதென்ன பிரமாதம்? அப்படின்னு தானே கேக்குறீங்க. ம்….. சொல்ல மறந்துட்டேனே அந்த இளைஞருக்கு பிறவியிலிருந்தே பார்வை கிடையாது. அவர் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி.

மேலே படிங்க!

இந்த சூழலில், கல்லூரியில் இருந்த சில சீனியர்களுக்கு இவரது செய்கை பிடிக்கவில்லை. அதாவது இவரோட ஆங்கில தாகம், எல்லார் கிட்டயும் ஆங்கிலத்திலேயே பேசும் இவரோட பழக்கம் இதெல்லாம் அவங்களுக்கு ஏனோ பிடிக்கலை. குறிப்பாக ஒரு சீனியர் மாணவனுக்கு இவரைக் கண்டால் சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் பேரு ராபர்ட்னு வெச்சிக்கோங்களேன்.

ராகிங் ஸ்பெஷலிஸ்ட்

ராபர்ட் யாருன்னா அவன் தான் அந்த காலேஜ்ல ராகிங் ஸ்பெஷலிஸ்ட். அதுவும் எப்படியாப்பட்ட ராக்கிங் ஸ்பெஷலிஸ்ட்னா அவன் யாரையாவது ராக்கிங் பண்ணினா, ஜஸ்ட் அஞ்சே நிமிஷத்துல அழ வெச்சிடுவான். மேல கை கிய் வெக்கமாட்டான்.  ஆனா வார்த்தைகளால சாகடிச்சிடுவான். எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் அவன்கிட்டே நிக்க முடியாது. அவங்களை அழவைக்காம விடமாட்டான். கத்தியின்றி  ரத்தமின்றி வார்த்தைகளாலேயே காயப்படுத்துவான். கண்ணை கசக்கினதும் தான் அவங்களை விடுவான். இப்படியாப்பட்ட ராபர்ட்டுக்கு நம்ம ஹீரோமேல ஒரு காண்டு. “என்ன இவன் எப்போ பார்த்தாலும் இங்கிலீஷ், லிட்டரேச்சர், டிராமா, காம்பெடிஷன் அப்படி இப்படின்னு சீன் போட்டுகிட்டே இருக்கான்? அதுவும் நம்மளையெல்லாம் சுத்தமா கண்டுக்குறதேயில்லை?” என்கிற எரிச்சல் வேற அவனுக்கு.

ஒரு நாள் நம்மாளு இவன் கண்ணுல மாட்டுனாரு. “ஏய்…இங்கே வா…”ன்னு கூப்பிட்டான்.

“நான் இங்கே இருக்கேன். கரெக்டா பார்த்து வா” – அதுலயும் ஒரு நக்கல்.

நம்மாளு போனாரு.

“Tell me senior”

“ஏய்… என்ன இங்கிலிஷ்ல பேசுறே? தமிழ் தெரியாதா உனக்கு?”

“Yes… i know senior”

“அப்போ தமிழ்ல பேசு”

“No senior. I am speaking in English because you know English and understand it senior. Isn’t it?”

“என்ன மறுபடியும் இங்கிலிஷ்ல பேசுறே… தமிழ் தெரியும்ல? ஒழுங்கா தமிழ்லயே பேசு…”

“சரி…”

“நான் பொதுவா உன்னை மாதிரி மாற்றுத் திறனாளிகளை ராகிங் செய்றதில்லே… ஆனா நீ ரொம்ப திமிர் பிடிச்சவன். உன்னை ராக்கிங் பண்ணியே தீர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

“சரி…”

“ஓகே….. எங்களை மாதிரி கண்ணு தெரிஞ்ச ஆளுங்களோட சரி சமமா படிக்கிறது உனக்கு கஷ்டமாயில்லே.. எப்படி உன்னால முடியுது?”

இப்படியாக இவர்கள் உரையாடல் சிறிது நேரம் நீள்கிறது. பல்வேறு விஷயங்களை பற்றி அவரிடம் பேசுகிறான். நம்மாளும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வருகிறார். இதனிடையே ராபர்ட் இவரை ராக்கிங் செய்வதை பார்க்க அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது.

நம்ம ஆளுக்கு லட்சியமே இந்த காலேஜ்ல சேர்ந்து இங்க்லீஷ்ல ஒரு கலக்கு கலக்கணும், அதுல ஒரு சாதனை பண்ணனும்னு என்பது தான் என்பதை புரிந்துகொள்ளும் ராபர்ட், எந்த அஸ்திரத்தை வீசினாலும் நம்மாளு கலங்காது நிற்கும் நிலையில்…. கடைசியில்… அந்த கீழ்த்தரமான செயலில் இறங்குகிறான்.

நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு

“சரி.. நீ இங்கிலீஷ்ல பெரிய எக்ஸ்பர்ட் தான். பெரிய ப்ரொஃபசர் தான்… ஒத்துக்குறேன். நான் கேட்குற சில கேள்விகளுக்கு முதல்ல பதில் சொல்லு”

“உங்க அம்மாவை நீ பார்த்திருக்கியா?”

“………..” (மௌனம்)

“உன்னை பத்து மாசம் சுமந்து பெத்த உங்கம்மா எப்படியிருப்பாங்க தெரியுமா?”

“………..” (மௌனம்)

“உன் அப்பா எப்படியிருப்பார்?”

“………..” (மௌனம்)

“இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரம் இதெல்லாம் எப்படியிருக்கும் தெரியுமா?”

“………..” (மௌனம்)

“ரெயின்போ, மலை, அருவி, நதி, போன்ற இயற்கை காட்சிகள் எப்படியிருக்கும்னு தெரியுமா?”

“………..” (மௌனம்)

“சரி… அதையெல்லாம் விடு. நீ எப்படியிருப்பேன்னு உனக்கு தெரியுமா? உன் முகம் எப்படியிருக்குன்னு உனக்கு தெரியுமா?”

“………..” (மௌனம்)

“தெரியாதில்லே… உன் முகமே உனக்கு எப்படியிருக்கும்னு தெரியாது. நீ என்ன இங்க்லீஷ்ல டிகிரி படிச்சு, இங்கிலீஷ்ல பேசி கிழிக்கப்போறே? நீ வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போறே? உனக்கெல்லாம் சாகனும்னே தோணினது இல்லையா? என்னடா வாழ்க்கை இது… பேசாம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துடலாம்னு கூட தோணினது இல்லையா? உண்மையை சொல்லு…”

ஒரு உயிரை கொல்றது தான் கொலை என்பதில்லை

ஒரு உயிரை கொல்றது தான் கொலை என்பதில்லை. இப்படி ஒருவரை பலர் முன்னிலையில் காயப்படுத்துவது, அவமானப்படுத்துவது, அவரது காரக்டரை கொல்வது கூட (Character Assassination) கொலை தான். படுகொலை. சொல்லப்போனால் உயிரை எடுப்பதைவிட இது கொடுமையானது. மிகுந்த வலியை தரக்கூடியது. மகா பாவம். (நான் சொல்றது பாவ புண்ணியத்துல நம்பிக்கை இருக்குறவங்களுக்கு!). சில பேர் இதுல பெரிய எக்ஸ்பர்ட்ஸ். இதுக்கு நம்ம கோர்ட்ல தண்டனை இல்லாம இருக்கலாம். ஆனா, ஆண்டவனோட கோர்ட்னு ஒன்னு இருக்கு. அங்கே நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். குறள் 206

சரி… ராபர்ட் கேட்ட கேள்விகளுக்கு நம்மாளோட நிலைமையில நீங்க இருந்திருந்தீங்கன்னா என்ன செஞ்சிருப்பீங்க… என்ன பதில் சொல்லியிருப்பீங்கன்னு ஒரு நிமிஷம் கற்பனை செஞ்சி பாருங்க. அப்புறம் மேலே படிங்க.

கற்பனை செஞ்சிட்டீங்களா???? என்ன அந்த இடத்துலயே மாட்டிகிட்டு சாகனும்னு நினைச்சீங்களா???? கரெக்ட்???? பார்வையில்லாத சூழ்நிலையில வேற என்ன பண்ண முடியும்? சினிமா ஹீரோ மாதிரி பறந்து பறந்து அடிக்க முடியுமா என்ன?

இது ஷூட்டிங் இல்லே… கலை நிகழ்ச்சி மேடையில்லை… வசனம் எழுதித் தர இது நாடகமுமில்லை… நிஜம் … துடிக்க வைக்கும் நிஜம்…

மேலே படிங்க…

முதல்ல நீ கையை கொடு

ஒரு சில வினாடிகளுக்கு பிறகு…

நம்ம ஹீரோ மௌனத்தை உடைக்கிறார். ராபர்ட்டிடம்…”முதல்ல நீ கையை கொடு… ஜஸ்ட் வான்ட் டு ஷேக் மை ஹாண்ட்ஸ் வித் யு….”

“டேய்… முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… சமாளிக்காத”

“நோ… நோ… நீ கையை கொடேன். அப்புறம் சொல்றேன்”

வேண்ட வெறுப்பாக ராபர்ட் கைகளை நீட்ட, அழுத்தமாக அவரது கைகளை பற்றி குலுக்குகிறார் நம்ம ஹீரோ.

பின் டிராப் சைலன்ட்டாக இவர் சொல்லப்போவதை மொத்த கூட்டமும் பார்த்து கொண்டிருக்கிறது.

“முதல்ல உனக்கு நான் நன்றி சொல்லனும்னு ஆசைப்படுறேன். தேங்க் யூ வெரி மச். எனக்கு இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீ சொன்ன மாதிரி தற்கொலை எண்ணம் வந்திருக்கு. ‘பார்வையில்லாம எதுக்கு இந்த உலகத்துல வாழனும்? பேசாம செத்துடலாம்’னு யோசிச்சிருக்கேன். ஆனா, உன்னை பார்த்ததும், இந்த நிமிஷத்துல இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். நான் வாழ்ந்து காட்டுறேன். என்னால என்ன முடியும்னு சாதிச்சு காட்டுறேன். உன்னை மாதிரி மிருகங்களே வெட்கமில்லாம இந்த உலகத்துல நடமாடும்போது நான் எதுக்கு சாகனும்?”

ராபர்ட் இவர் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டபடி நின்றுக்கொண்டிருக்க ஒரு சில வினாடிகள் நிசப்தத்தை தொலைக்கும் விதமாக கூடியிருந்த மொத்த கூட்டமும் ஒரு கணம் நம்மாளுக்கு விசிலடித்து கைகளை தட்டினர். (பேட்டியின்போது அவர் இந்த சம்பவத்தை சொன்னவுடன் நானும் எழுந்து நின்று கைதட்டினேன்!)

ஒரே நாளில் நம்ம ஆளு, மொத்த காலேஜின் ஹீரோவாயிட்டார்

அப்புறம் என்ன? ஒரே நாளில் நம்ம ஆளு, மொத்த காலேஜின் ஹீரோவாயிட்டார். ராபர்ட்டோட நண்பர்கள் எல்லாம் அப்புறம் அவனை ஒதுக்கிட்டு இவரோட நண்பர்களாயிட்டாங்க.

அன்றைக்கு நம்ம ஹீரோவின் மனதில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய லட்சியத் தீ…. இன்று வரை எரிந்துகொண்டிருக்கிறது.

நம்ம ஹீரோ லயோலா கல்லூரியில் பி.ஏ. படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பட்டம் பெற்றபின்பு, அங்கேயே முதுகலைப் பட்டப் (எம்.ஏ.) படிப்பில் சேர்ந்தார். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. பின்னர் சென்னை பல்கலைகழகத்தில் ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு M.Phil முடித்தார். பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் தான் பயின்ற சென்னை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பணி.

யார் இந்த நிஜ ஹீரோ?

பிரின்ஸ் ஜூவல்லரி மற்றும் ரேமண்ட்ஸ் ஷர்டிங் & ஷூட்டிங் விளம்பரங்களில் ஆங்கிலத்தில் கணீரென்று ஒலிக்கும் குரல் (Prince Jewellery Panagal Park, Raymonds the Complete Man) இவருடையது தான்!

இவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், இவரது கணீரென்ற குரலை கேட்கவும்… கீழ்காணும் லின்க்கை செக் செய்யவும்.

http://acea2z.com/index.php?option=com_content&view=article&id=19&Itemid=195

அது மட்டுமா…. இவர் வேறு பல எண்ணற்ற விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் கணீரென்ற குரலில் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். சுருக்கமாக சொன்னால் இவர் ஒரு சகலகலா வல்லவர்.

தற்போது இவர் யார் ? இவர் பேர் என்ன?

இளங்கோ என்கிற பெயருடைய இவர் தற்போது, ACE PANACEA SOFTSKILLS PVT. LTD. என்ற வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். தமிழகம் முழுதும் (ஏன் உலகம் முழுவதும்) ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி இவருடையது. இவர் கீழுள்ள சுமார் 300 பயிற்ச்சியாளர்கள் மற்றும் 50 ஊழியர்களின் ஊதியத்துக்கு இவர் தான் பொறுப்பு. ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாழ்க்கையில் நல்ல கல்வி உட்பட சகல வசதிகளும் கிடைத்து, எந்த உடல் குறைபாடும் இல்லாது இருப்பவர்களே மேற்படி சாதனையை நிகழ்த்துவது கடினம். அப்படியிருக்கும் சூழலில் பிறந்ததிலிருந்தே பார்வையற்ற இவர், இப்படி – ஒரு சாதனை அல்ல – பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் என்றால் அவர் எத்துனை பெரிய ஹீரோ? நான் நிஜ ஹீரோ என்று இவரை குறிப்பிட்டது சரி தானே….?

நமது தளத்தின் பேட்டிக்காக

இவரை நமது தளத்தின் பேட்டிக்காக சந்திக்க விரும்பி, அப்பாயிண்ட்மென்ட் பெற்றோம். குறிப்பிட்ட நாளில் நண்பர் விஜய் ஆனந்த்துடன் அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம்.

இது வரை நமது தளத்திற்காக நான் எடுத்த பேட்டிகளில், நிகழ்த்திய சந்திப்புக்களில் முதன்மையானது இது. அர்த்தமுள்ளது. என்னை மிகவும் மாற்றியுள்ளது. பக்குவப்படுத்தியுள்ளது. பெருமைப்பட வைப்பது.

பேட்டிக்காக இவரிடம் பேசப் பேச பல தன்னம்பிக்கை முத்துக்களை அள்ளிக்கொண்டே இருந்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வதென்று ஒரு நிஜ ஹீரோவிடம் கற்றுக்கொண்டேன் என்றால் மிகையாகாது.

இவரது சந்திப்பு, நிச்சயம் எனது வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. உங்கள் வாழ்க்கையிலும் தான்.

இவரது லட்சியப் பயணம், சவால்களை இவர் எதிர்கொண்ட விதம், தன்னம்பிக்கை, எதிர் நீச்சல், கடவுள் நம்பிக்கை, இவரது வி.ஐ.பி. நண்பர்கள், திரைத் துறை பழக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நானும் இவரும் ஒன்னு தாங்க – ஒரு விஷயத்துல!

ஒரு விஷயத்துல நானும் இவரும் ஒன்னு தாங்க. அதாவது ‘வாழ்ந்து காட்டுறதைவிட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை’ என்பதை அழுத்தந்திருத்தமாக நம்புபவன் நான்! என்னை ஒழிக்க நினைச்சவங்க… நினைச்சிக்கிட்டு இருக்குறவங்க… எல்லாருக்கும் அதையே தான் நானும் சொல்றேன்! நோட் தி பாயிண்ட்!!

இவருடனான பேட்டியில் நாம் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில் எனக்கு மிகப் பெரிய கலங்கரை விளக்கம்.

நாம் : “சார்… நாம் ஒழுங்கா சரியா நம்ம வேலையை கரெக்டா பார்த்துகிட்டிருந்தாலும், நம்மளை நோக்கி சில வேண்டாத பிரச்னைகள் வருதே… அதை எப்படி எடுத்துக்கிறது? உதாரணத்துக்கு கரெக்டா ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி நாம் ஒழுங்கா ஹைவேஸ்ல போய்கிட்டிருக்கோம்… அதுக்கு நாம பொறுப்பு. ஒகே. ஆனா, எதிர்ல ஒருத்தன் எந்த ரூல்ஸையும் ஃபாலோ பண்ணாம, குடிச்சிட்டு தாறு மாறா வண்டி ஓட்டிகிட்டு வந்து நம்ம மேலே மோதி ஆக்சிடென்ட் பண்ணிட்டு போனா, நாம என்ன பண்ண முடியும்? அதுவும் சில சமயம் தப்பே நம்ம மேல தான்னு ARGUE பண்ணினா அதை எப்படி சார் எடுத்துக்குறது?”

(இது நம்ம அன்றாட வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்குற ஒன்னு தான். அதுவும் அனுபவப் பூர்வமான ஒன்னு!!!!!!!)

அதுக்கு நம்ம ஹீரோ சொன்ன பதில் என்ன?

தவிர… நம் அன்புக்குரிய சூப்பர் ஸ்டார் அன்புள்ள ரஜினிகாந்த் பற்றியும் இவர் கிட்டே பேசியிருக்கேன். சூப்பர் ஸ்டார் பத்தி இவர் சொல்றது என்ன?

அடுத்த பாகத்தில் விரிவாக பகிர்ந்துகொள்கிறேன்…..

9 thoughts on “ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

  1. Very inspirational one Sundar. Hats of to Illango the man with the vision. Thanks Sundar for this excellent interview.

  2. நன்றி. MIKKA நன்றி. திரு.SUNDAR அவர்களுக்கு. மீண்டும் மீண்டும் படிக்க துண்டுகிறது. 🙂 கோட் ப்ளேசஸ் 🙂

  3. நானே நேரில் பேசுனா மாதிரி இருக்கு. ரொம்ப நன்றி சுந்தர் சார்.

  4. இறை அருளுடன் துணிவு, நேர்மை, வலிமை கடின உழைப்புடன் பாடு பட்டால் வாழ்வில் எந்தத் துறையிலும் முன்னேறலாம் என்பதற்கு எவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பாரிஸ் ஜமால், தலைவர்,பிரான்சு தமிழ்ச் சங்கம், பாரிஸ்.

  5. மிக மிக அற்புதம்…. சோர்ந்து இருக்கும் பலருக்கு இவரது வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்….. நீலகண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *