Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

print
சென்ற பிரார்த்தனை பதிவில், நமது பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்துள்ள சபரி என்னும் தெய்வீக குழந்தை பற்றியும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நமது தளத்தின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அக்குழந்தை பேசவிருப்பதை பற்றியும் அறிவித்திருந்தேன். சிறுவன் சபரிக்கும் நமது முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது

சபரி வெங்கட்டை நான் கடந்த ஓரிரு மாதங்களாகத் தான் அறிவேன். அவனிடம் பேசும்போது தான் ஒரு பார்வைத்திறன் அற்றவன் என்கிற மனோபாவமே இல்லாமல் இந்த சிறு வயதிலும் இத்தனை தன்னம்பிக்கையுடன் பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். அவன் வயதில் இருக்கும் சராசரி குழந்தைகளை விட அறிவிலும் ஆற்றலிலும் பன்மடங்கு சிறந்து விளங்கும் சபரி உண்மையில் நம் கண்களை திறக்க பிறந்த தெய்வீகக் குழந்தை தான்.


குறைப் பிரசவத்தில் (ஏழு மாதத்தில்) பிறந்ததால் இந்த குறைபாடு ஏற்பட்டதாகவும், கருவில் இருக்கும்போது தாயின் பனிக்குடம் உடைந்து குழந்தை நீரை குடித்துவிட்டதாகவும் அதையொட்டியே இந்த பார்வை குறைபாடு ஏற்பட்டதாகவும் கூறினார் அவன் தந்தை சீனிவாஸ்.

மருத்துவமனை அலைக்கழிப்புக்களும் இதற்கு ஒரு காரணம் என்பதை அறிந்துகொள்ளும்போது நெஞ்சம் நொறுங்கிப் போனது. ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் பார்வை குறைப்பாட்டை சரி செய்ய சிகிச்சைக்கு சென்றபோது குழந்தைக்கு பார்வை வர வாய்ப்பில்லை என்பதை அறிந்தும் கூட பெற்றோரிடம் விஷயத்தை கூறாமல் இவனது கண்களை பரிசோதனைக் கூடமாக்கி வேடிக்கை பார்த்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். பின்னாளில் வேறோர் மருத்துவமனைக்கு செல்லும்போது தான் விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர் சபரியின் பெற்றோர். கிராமத்து பெற்றோர் என்பதால் ஏய்ப்பதில் சுகம் போல…!

விவசாயம் பார்த்து வந்த நிலத்தை விற்று மகனின் கல்விக்காக எதிர்காலத்திற்காக கோவையில் புறநகர்ப் பகுதி ஒன்றில் தற்போது குடிவந்திருக்கின்றனர் சபரியின் பெற்றோர். சபரியை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது, நிகழ்சிகளுக்கு அவனை அழைத்து செல்வது போன்ற பணிகள் இருப்பதால் வேறு எந்த பணிக்கும் அவனது தந்தையால் செல்ல முடியவில்லை.

சபரி இனி எங்கள் குடும்பத்தில் ஒருவர், எனது தம்பி என்று அவன் பெற்றோரிடம் கூறியிருக்கிறேன். அவன் இனி வளரும் காலங்களில், சமூக  வாழ்வு மற்றும் கல்விக்கு என்று என்ன உதவி தேவைப்பட்டாலும் நம்மிடம் தகவல் தெரிவிக்கும்படியும் இயன்றத்கை செய்ய நாமும் நம் வாசகர்களும் காத்திருப்பதாக கூறியிருக்கிறேன்.

மகனுக்கு  பார்வையில்லாவிட்டாலும் சிறந்ததொரு எதிர்காலத்தை அமைத்துத்தரவேண்டும் என்கிற துடிப்பு அவர்களிடம் இருக்கிறது.

சபரியிடமோ SIGHT எனப்படும் புறப்பார்வை தான் இல்லையே தவிர VISION எனப்படும் அகப்பார்வை மிக மிக தெளிவாக இருக்கிறது.

உண்மையில் (VISION) அகப்பார்வை எவரிடம் இல்லையே அவரே பார்வையற்றவர். அந்த வகையில் பார்க்கும்போது சபரி நம் எல்லோரையும் விட பார்வை மிக்கவர் – வாழ்க்கையை எதிர்நோக்கும் விதத்தில்.

நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியபடி சபரி போன்றோர் வாழ்வில் விளையாடித் தான் இறைவன் நம்மை போன்றவர்களுக்கு பாடங்கள் நடத்துகிறான். அந்த பாடத்தை அலட்சியம் செய்யவேண்டாம்.

பள்ளி செல்லும் பிள்ளைகள் உடைய பெற்றோர் தாங்கள் பிள்ளையை வளர்க்கும் விதம் சரி தானா என்று ஒரு முறை சுய பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக உங்களுக்கு வழி காட்டுவதற்கு ஒரு குறுந்தொடர் எழுதவுள்ளேன்.

சபரி குறித்து சிறப்பு பதிவு வெளியிடவிருப்பதாகவும், நம் ஆண்டுவிழா சிறப்பு விருந்தினர் நம் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் அதற்க்கு சபரியின் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பும்படி அவன் தந்தை திரு.சீனிவாசிடம் பேசியபோது அவர் சில புகைப்படங்களை, பேப்பர் கட்டிங்குகளை நமக்கு இ-மெயில் அனுப்பியிருந்தார்.

சபரியின் தந்தையுடன் நாம் பேசியதிலிருந்தும் அவர் நமக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தும் செய்திகளை தொகுத்து அளிக்க நினைத்திருந்தேன். அவற்றை வைத்து ஒரு சிறப்பு பதிவு வெளியிட திட்டமிட்டு அதற்காக தயார் செய்துவந்தேன்.

இந்நிலையில் நேற்றைக்கு வெளியான தினமலர் – வாரமலர் இதழில் சபரி வெங்கட் குறித்து ஒரு பக்கத்தில் சிறப்பு கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல நாம் என்ன எழுத நினைத்தோமோ அதை விட மிக சிறப்பாக அக்கட்டுரை திரு.முருகராஜ் என்னும் நிருபரால் எழுதப்பட்டுள்ளது. அதையே இங்கு நம் வாசகர்கள் படிக்கவும் தருகிறேன்.

உனக்கு என்ன வேண்டும் சொல். கட்டாயம் செய்கிறோம்.

கோவையில் ஒரு விழாவில் சபரி பேசியபோது சபரியின் திறமையை ஆற்றலை வியந்து “உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்?” என்று விழா அமைப்பினர் கேட்டபோது, அவன் கேட்டது மருத்துவ உதவியோ அல்லது பணமோ அல்லது சினிமா நட்சத்திரங்களை சந்திக்கவேண்டும் என்பதோ அல்ல. அப்படி அவன் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் சபரி கேட்டது என்ன தெரியுமா?

எல்லாமே சொல்லிட்டா எப்படி? கட்டுரையில் படியுங்களேன்…..!

ஓவர் டு தினமலர்……

======================================

தன்னம்பிக்கையின் மறுபெயர் சபரி வெங்கட்

உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.

அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்.

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.

பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.

பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.

பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.

பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.

அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்.

கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.

இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.

ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.

அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.

விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.

அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.

இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.

கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், “உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்” என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.

சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்?

இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், “ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்” என்று கேட்டிருக்கிறார்.

எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, “நாடு நல்லாயிருக்கணும்’ என்ற வரம் கேட்பேன் என்றதும் “என்னப்பா இப்படி சொல்றே’, நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா’? என்றதும், “பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்” என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.

சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான்.

வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்… கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்… சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558 | 9965063853

(நன்றி : தினமலர் எல்.முருகராஜ்)

www.dinamalar.com/supplementary_detail.asp?id=16220&ncat=2

[END]

===========================================
Also check :

===========================================

16 thoughts on “கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!

  1. Sabari is an incarnation of Swami Vivekananda. He is supergifted with powers such that he is born to attain Glory. Once Again its a stern remainder of our infinite power within every one one of us.

    Mass article anna. கிரேட், கிரேட் Salute to our Hero Sabari Venkat -^-

  2. சுந்தர் சார் சபரி வெங்கட் பற்றி படித்ததும் கண் கலங்கிடுச்சு சார்
    ஆனா அந்த பையனோட தன்னம்பிக்கை நாட்டுப்பற்று என்னை பிரமிக்கவைக்குது வாழ்கவளமுடன் சபரி நம் அனைவரும் என்றும் துணை இருப்போம்

  3. நன்றி சுந்தர்ஜி,
    நம் ஆண்டுவிழாவில் விழாவில் சபரி பேசப்போவதை கேட்க ஆவலாக உள்ளேன். கோவையில் இருந்தாலும் நிச்சயம் இதற்காக சென்னை வருவேன்.

    சபரியின் அறிவும் ஆற்றலும் என்னை வியக்கவைக்கவைக்கிறது. இருக்காதா பின்னே தெய்வம் தந்த பிள்ளையாயிற்றே..

  4. நமது தள ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சபரி வெங்கட் என்கிற ஒரு உண்மையான சாதனையாளரை பேச வைக்கும் முயற்சிக்கு நன்றி சுந்தர். கலாம் அவர்களை சந்திக்கவேண்டும், நாடு நல்லாயிருக்கணும் என்கிற ரீதியில் சிந்திக்கும் இவருடைய லெவல் நிச்சயம் நினைத்துப்பார்க்க முடியாது. சபரியின் பெற்றோர்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள். சபரியின் பேச்சை கேட்கப்போகும் நாமும் அதிர்ஷட்டசாலிகள்.

  5. நாமெல்லாம் ஒன்றும் இல்லை இந்த சிறுவனின் முன்னால்….குழந்தையை தெய்வத்திடம் ஒப்பிட்வோம்…அந்த குழந்தையே தெய்வமாக இருந்தால்…..
    .
    உனக்கு என்னவேண்டும் சொல் தருகிறோம் என்றவர்களிடம் இந்த நாடு நல்ல இருக்கவேண்டும் என்ன கூறி நாம் எல்லோரயும் யோசிகவைதுவிட்டன் இந்த சிறுவன்…வயதில் சிறுவனாக இருந்தாலும் எண்ணத்தில் நீ (ங்கள்) என்னைவிட பெரியவன்(ர்)…..
    .
    நீ நீடுழி வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை மனபூர்வமாக வேண்டுகிறேன்…..
    .
    நம் ஆண்டுவிழாவில் இவரை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இப்பொழுதே தேன்றுகிறது…..
    .
    மாரீஸ் கண்ணன்

  6. பார்வை இல்லாத குழந்தையை பெற்றதனால் நொந்து நூலாகாமல்
    கடவுலை நொந்து கொள்ளாமல், அவனுக்குள் இருக்கும் அசாத்திய திறமையை வெளியுலகுக்கு கொண்டு வந்த திரு சீனிவாஸ்- நீலவேணி தம்பதியர்க்கு இந்த இடத்தில் பாராட்டுக்கலை சமர்ப்பிக்கின்றேன்.

    ஏனென்ரால் என்னதான் ஒரு குழந்தை திறமைசாலியாக இருந்தாலும் அதனுடைய திறமையை வெளிக்கொண்டுவருவது என்பது, மிகப்பெரிய போராட்டமாக அமைந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.

    இந்த சிருவனின் சாதனை, நாம் பிரேமவாசத்தில் உடல் குறைபாடு காரணமாக அநாதரவாக விடப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஒரு சாட்டை அடி.

    1. அருமையான கருத்து சந்திரசேகரன் அவர்களே.
      மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
      நன்றி.
      – சுந்தர்

  7. இத படிக்கும் பொழுது கண்ணீர் விடாமால் இருக்க முடியவில்லை .ஆனந்த கண்ணீர் – இந்த குழந்தைக்கு என்ன ஒரு தன்னம்பிக்கை ,தனை பற்றி கவலை படாமல் நாட்டை பற்றி கவலை படுகிறான் இந்த குட்டி விவேகானந்தர்

    சோக கண்ணீர் : சேவையாக இருக்க வேண்டிய மருத்துவமும் ,கல்வியும் வியாபாரமாக மாறி போனதன் விளைவு

    இந்த குட்டி விவேகானந்தரை இவ்வளவு தன்னம்பிக்கை யோடு வளர்த்த அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்

  8. சார்
    நிச்சயமாக விவேகந்தர் than சபரியாக பிraந்து உள்ளார்
    தெய்வம் பிள்ளையாயிற்றே. சபரி
    சேவையாக இருக்க வேண்டிய மருத்துவமும் ,கல்வியும் வியாபாரமாக மாறி போனதன் விளைவு
    மனது கனக்கிறது
    selvi

  9. நவம்பரில் (கார்த்திகை மாதம்) மாலை போட்டு சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை (பாலகன்) வணங்க செல்வது வழக்கம். இந்த முறை நமது தள விழாவில் செப்டம்பர் மாதம் இந்த சபரியை பார்க்க போவது இரட்டிப்பு மகிழ்வே.

    இது போன்ற தெய்வீக குழந்தை நமது பாரதத்தில் பிறந்தது நமக்கு எல்லாம் பெருமை. அகநோக்கு – உள்ளொளி கொண்டுள்ள இந்த குழந்தை விரைவில் கண்ணொளி பெறவும் எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றலை பிரார்த்திப்போம்.

    சந்தோசம்.
    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  10. சுந்தர் சார்,
    சந்திர சேகர் சார் சொல்லியது மிகவும் சரி.
    மிகவும் சிறப்பான பதிவு.
    நன்றி

  11. “பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை,” எளிதில் சமாளித்து விடுவேன்.
    இது போல் ஒரு பதில் சபரி போன்றவர்களிடம் இறைவனின் ஆதிக்கம் செலுத்துவது தெளிவாக தெரிகிறது .

    நம்மைப்போன்றோர் நமது பிள்ளைகளுக்கு இதனை தெரிவுபடுத்தி,விளக்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் .

    நமது விழவிர்க்கு நல்லதோர் சிறப்பு விருந்தினரை தெரிவு செய்துள்ளீர் .
    -நன்றி

  12. டியர் சபரி,
    கடவுள் உன்னை கைவிடமாட்டார்.
    நீ எங்கள் குடும்ப நண்பனாக இருப்பது நங்கள் செய்த புண்ணியம் அன்புடன் க.பாலா நிசாந்த், ஒட்டன்சத்திரம்.

  13. சுந்தர்ஜி,

    சபரி மாற்று திறனளியாக இருந்தாலும் மனதை தளர விடாமல் இப்படி ஒரு தெய்வீக குழந்தையை பெற்றெடுத்த அந்த தாய் தந்தையர்க்கு
    முதலில் ஒரு solute . கடவுள் ஒரு கதவை மூடினால் அடுத்த கதவை திறப்பான் என்பதற்கு முன் உதாரணம் சபரிதான். அந்த முகத்தில்தான் என்ன ஒரு கம்பீரம். எப்போது ஆண்டு விழா வரும் என்று ஆவலோடு காதிரிகின்றோம்

  14. சிந்திக்க தூண்டும் சிறப்பான கட்டுரை
    வயதால் சபரி சிறுவனாக இருக்கலாம் ஆனால் உள்ளத்தால் சிந்தனையால் வாழ்கையை அணுகும் முறையால் தனது தொலைநோக்கு பார்வையால் நம் எல்லோரை காட்டிலும் உயர்ந்து நிற்கிறார்
    மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்ற சொல்லுக்கு வாழும் உதாரணம் தான் சபரி
    எவரொருவர் தம்மிடம் இருக்கும் குறைகளை பெரிதாக கருதாமல் அதனை துச்சமாக மதித்து சுயத்தை ஆராய்ந்து வாழ்க்கையின் தடைக்கற்கள் ஒவ்வொன்றையும் படிக்கற்கள் ஆக்கி தாமும் முன்னேறி மற்றவர்கள் முன்னேறுவதற்கு உதாரணமாக இருக்கிறார்களோ அவர்கள் மகான்கள் – அவ்வகையில் சபரியும் ஒரு மகானாகவே காட்சியளிக்கிறார்
    சபரி மென்மேலும் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைத்திடவும், வெகு விரைவில் அவரது கண் பார்வைக்கு நல்லதொரு வழி அமைந்திடவும், அவரும் அவரது பெற்றோரும் நோய் நொடி இன்றி மன அமைதியுடனும் என்றென்றும் சந்தோசமாக வாழ்ந்திட எல்லாம் வல்ல பரம்பொருள் அவர்களுக்கு என்றென்றும் துணை நின்று அருள் செய்ய பிரார்த்திப்போம் !!!

  15. பிறவியில் கண் இல்லாத மாற்றுத திரனாளிகள் பலர் உண்டு. எல்லோருக்கும் இத்திறன் வந்துவிடுவதில்லை.
    தம்பி சபரிக்கு இறைவன் கொடுத்த வரம் இது.
    புறக்கண் உள்ள நம்மால் செய்ய இயலாத செயல்களை சபரி தன் அகக்கண்ணால் திறம்பட செய்து முடிக்கிறார். சபரிக்கும் அவர் பெற்றோருக்கும் எம் வாழ்த்துக்கள். பாரிஸ் ஜமால், நிறுவனத்தலைவர் பிரான்ஸ் தமிழ் சங்கம், பாரிஸ், பிரான்ஸ்.
    சுந்தர்ஜி ஐயா அவர்களுக்கு எம் இதயம் கனிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *