ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பையே ஒரு இனிமையான புரிதலையே பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம். அம்பிகாபதி அமராவதி, நள தமயந்தி, சாவித்திரி சத்தியவான், ரோமியோ ஜூலியட், லைலா – மஜ்னு, ஆகியோரின் வாழ்க்கையில் காதல் புனிதத்துவம் பெற்றது.
ஆனால் இன்று ‘காதல்’ எப்படி இருக்கிறதும், சமூகம் ‘காதல்’ என்று எதை அழைக்கிறது தெரியுமா?
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘காதலர் தினம்’ என்கிற வார்த்தையையே நம் இளைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்று போணியாகாத ஒரு காதல் திரைப்படத்தை வாங்கி வைத்திருக்க, அதை ஒளிபரப்ப கண்டுபிடித்த சந்தை டெக்னிக் தான் இந்த ‘காதலர் தினம்’. ‘காதலர் தின சிறப்பு திரைப்படம்’ என்று அது அந்த விஷ விதையை தூவி வைத்து ஆரம்பித்து வைத்த வழக்கம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது. தமிழகத்தில் காதலர் தினம் ஊடுருவியது இப்படித் தான். அதற்கு முன்பு வரை நம் தமிழகத்துக்கு அது தெரியாது.
காதலின் புனிதத்துவத்தை பாதுகாப்பதற்காக காதலர் தினம் அனுஷ்டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல்யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று நினைவுகூரப்படுகிறது.
வந்தால் தான் காதல் என்ற நிலை போய் வலுக்கட்டாயமாக செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடே இந்த காதலர் தினம். மிக தந்திரமாக நம் சமுக கட்டுப்பாட்டை சீர்குலைக்க இதை செய்துள்ளார்கள். இதன் விளைவு காதல் தெய்வீகம் என்று நிலையிலிருந்து இப்போது தெருவிற்கு வந்துவிட்டது.
‘காதலர் தினம்’ என்ற பெயரில் இன்று, மனித வாழ்க்கையில் இளம் பருவத்தில் ஏற்படும் இன்பகரமான புனிதமான அனுபவத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்பது பிற்போக்குத் தனமானது என்று நான் கூட முன்பு கருதியதுண்டு. ஆனால் இன்று ‘காதல்’ என்கிற புனிதமான வார்த்தை எந்தளவு கொச்சைப்படுத்தப்படமுடியுமோ அந்தளவு கொச்சை படுத்தப்படுகிறது.
காதலர் தினத்தன்று கடற்க்கரைகளில், பார்க்குகளில் நடக்கும் கூத்துக்களை பார்க்கும்போதும், செய்திதாள்களில் படிக்கும்போதும் இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது என்று அச்சமே ஏற்படுகிறது. தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் கேட்கவே வேண்டாம். பிரபல ஜோடிகளை கூப்பிட்டு “நீங்கள் எப்படி காதலித்தீர்கள்? அதை செய்து காட்டமுடியுமா?” என்று கேள்வி கேட்டு, அவர்கள் காதல் செய்வதை உலகமே பார்க்க படம் பிடித்து காட்டுகிறார்கள். இது தான் காதலர் தினத்தை கொண்டாடும் வழியா?
எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!
அப்புறம் இன்னொரு அதீதமான அபத்தம் – ‘காதலர் தினம்’ என்றாலே அன்று வலுக்கட்டாயமாக எவருக்கேனும் ப்ரோபோஸ் செய்வது அல்லது ப்ரொபோசலை ஏற்றுக்கொள்வது என்ற வாடிக்கை, நம் இளைய தலைமுறையினர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. இந்த மாயையில் சிக்குண்டு ஆராய்ந்து பாராமல் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை. திருமண பந்தம் என்பது ஆயிரங்காலத்து பயிர். அதை இப்படி ஆராயாமல் கைகொள்ளலாமா?
ஆராயாமல் காதலித்து, மணமுடித்து திருமண வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டு ஒற்றை ஆளாக நிற்க நேர்ந்தால், அந்த பெண்ணிற்கு வாழ்க்கை தர, மறுமணம் செய்துகொள்ள, எத்தனை பேர் இங்கே முன்வருவார்கள்? ஆழமாக யோசிக்கவேண்டிய விஷயம் இது.
சமீபத்தில் ஒரு அமைப்பு ஒட்டியிருந்த காதலர் தின எதிர்ப்பு சுவொரொட்டி ஒன்றை பார்க்க நேர்ந்தது. சற்று சூடாக இருந்தாலும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காதல் என்ற போர்வையில் கற்பு கள்வர்களிடம் வாழ்க்கையை பறிகொடுத்த பெண்களுக்கு தெரியும் அந்த உண்மை.
ஏமாற்றப்படும் வரை எங்கள் காதல் தெய்வீகமானது என்று தான் பெண்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். கழற்றிவிடப்படும் வரை “காதல் ஒரு காவியம்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள் ஆண்கள்.
காதல் கூடாது என்பதல்ல நம் வாதம். காதல் என்கிற போர்வையில் நடக்கும் கூத்துக்கள் குறிப்பாக காதலர் தினத்தன்று நடக்கும் கூத்துக்கள் கூடாது என்பதே நம் கருத்து. நமது தெய்வங்களே பல காதல் திருமணம் புரிந்தவை தான். அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என்று இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் இடையிலான புனித அன்பு காதலாக மாறியது என்பதை கம்பன் கவி நடையில் விளக்கிக் கூறியிருக்கிறார். வள்ளியை முருகப் பெருமான் காதலித்து கரம்பிடிக்கவில்லையா? அதுதான் உண்மையான காதல்.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது.
இசைஞானி இசையில் முன்னர் ‘இதயம்’ என்கிற ஒரு படம் வெளிவந்தது. காதலை மிகவும் பெருமைப்படுத்திய படம். இளையராஜாவின் இசை அந்த படத்தின் ஜீவநாடியாக அமைந்தது. அதில் ஒரு காட்சி வரும், கதாநாயகி, ஹீராவின் பின்னே அவள் அழகை வர்ணித்தபடி ஒரு இளைஞர் பட்டாளம் சுற்றும். அவர்களை நோக்கி அவள் ஒரு கட்டத்தில் அவள் சொல்வாள் : “என் பின்னால் சுற்றுவதை விட்டுவிட்டு கடமையை செய்யுங்கள். வாழ்வில் சாதித்து காட்டுங்கள். உங்க பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க!” என்று. தனிமையில் வாடுவதாக கருதும் இளைஞர்களுக்கு நாம சொல்லவிரும்புவது இதைத் தான்.
மற்றபடி காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
– ரைட்மந்த்ரா சுந்தர்
========================================================
Support Rightmantra to sustain!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Your contribution really matters. Donate us to run this website without break.
Our A/c Details – Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check :
காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?
‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
========================================================
[END]
உண்மை. இன்றைய காதலை பல சமயங்களில் facebook மற்றும் போன் தான் தீர்மானிகிறது. இது மிகவும் அபாயம் நிறைந்த பாதை என்பதை பலர் மறந்து விடுகின்றனர். காதலிக்கும் சமயங்களில் போன்இல் புகை படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய விஷயம். மற்றும் திருமணம் வரை சற்று ஒழுங்கு முறையுடன் எந்த விதத்திலும் காதலுக்கு தடயம் ஏற்படுத்தாமல் நடந்து கொள்வதே நல்லது.
சரியான நேரதில் வெளியாகியுள்ள சரியான பதிவு. அவசியமான பதிவும் கூட.
சொல்ல வந்த விஷயத்தை மிக அழகாக சொல்லி அதே நேரம் நம் தளத்தின் புனிதமும் கெடாமல் அதை பதிவு செய்வது என்பது சவாலான விஷயம். ஆனால், நீங்கள் மிக அழகாக அதை செய்திருக்கிறீர்கள்.
பதிவின் இறுதியில் இன்றைய காதல் பற்றி குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது போய் ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்றாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை.
காதலின் இலக்கணமே மாறிவிட்ட சூழ்நிலையில் காதலை புனிதமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை தேட வேண்டியிருக்கிறது.
தனிமையில் வாடும் இளைங்கர்களுக்கு கூறியுள்ள அறிவுரை ‘நச்’. உங்களின் பன்ச்.
– பிரேமலதா மணிகண்டன்
மேட்டூர்
Well said சுந்தர்ஜி!!
கவியரசு கூறியதுபோல் காதல் “சரீரத்தின் தாளமாக இல்லாமல் ஆன்மாவின் ராகமாக இருப்பின் போற்றப்படும்”.
மேலும் அவர் வார்த்தையிலேயே கூற வேண்டுமெனில் கரம் பிடித்தவளை/னை காதலிப்பதே மிக உன்னதமானது.
வாசுதேவன் நெ வீ
சார்,
என்ன சொல்லி என்ன நடக்க போகுது.இதில் பல விஷயங்கள் யோசிக்க வேண்டும்.இன்று இருக்கும் சூழ்நிலை, டிவி, சினிமா போன்றவை போய் இன்று whatsapp use பண்ணி கிழியுது. …பட்டப் பகலில் கடற்கரை மணலில் படம் சூப்பர்..என்ன படம் போட்டு என்ன?