“கட்டுப்படியாகாது சார்…. போய்ட்டு நான் எம்ப்டியா தான் வரணும்”
“இல்லே சார்… அங்கே 108 திவ்யதேச கண்காட்சி நடக்குது. உங்களுக்கு ரிட்டர்ன் சவாரி நிச்சயம் கிடைக்கும்.”
“அதெல்லாம் சொல்ல முடியாது சார். 250க்கு கம்மி வராது… கிடைக்கலேன்னா நீங்க புடிச்சி தருவீங்களா??” எடக்கு மடக்காக கேள்வி கேட்டார்.
நமக்கோ நேரமாகிக்கொண்டிருந்தது. கால்டாக்ஸிக்கு போன் செய்யலாம் என்றால் அவர்கள் அவசரத்திற்கு வருவதேயில்லை என்று தீர்மானமே போட்டிருக்கிறார்கள். என்ன செய்ய?
“மீட்டர் போடுங்க. மீட்டருக்கு மேல நான் 20 ரூபா கூட தர்றேன். நாங்க ரெகுலரா போய்ட்டு தான் இருக்கோம்…. 250 ரொம்ப ஜாஸ்தி”
நமது பதிலால் கடுப்பான அவர் “அப்போ ரெகுலரா போறங்கவங்க கிட்டேயே போகவேண்டியது தானே. என்னை எதுக்கு கூப்பிட்டே…?” என்று கூறி நம் பதிலுக்கு கூட காத்திராமல் ஆட்டோவை கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.
ஆட்டோ ஓட்டுனர்கள் இப்போதெல்லாம் ரூ.100/- க்கு குறைவான சவாரிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு என்ன தான் நாளிதழில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்தாலும் பேனர்கள் வைத்தாலும் அபராதம் போட்டாலும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ஆட்டோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அவர்கள் நோக்கம்… ஓரிரு சவாரிகளில் ஆட்டோ வாடகையும், வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் எடுத்துவிடுவது. மீதி தொகை மாலை டாஸ்மாக்கிற்கு. இதற்கு பணம் வசூலாகிவிட்டால் அவர்கள் அன்றைக்கு மேற்கொண்டு ஆட்டோ ஒட்டுவதில்லை. இது தான் நாமறிந்த வகையில் பல ஆட்டோ ஓட்டுனர்களின் வழக்கமாக இருக்கிறது. கஷ்டப்பட்டு நாள் முழுதும் ஆட்டோ ஓட்டி குடும்பத்திற்காக ஓடாக தேயும் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் இப்போது அரிதாகிவிட்டனர்.
ஆட்டோ சவாரி தொடர்பாக நமக்கு நிகழ்ந்த மேற்கூறிய கசப்பான அனுபவம் உங்களில் பலருக்கு நிகழ்ந்திருக்கும். ஆட்டோ கூப்பிட போய் பி.பி. எக்கச்சக்கமாக எகிறி மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்கள் பலர் உண்டு.
ஆட்டோவில் ஒரு அருந்தொண்டு!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் ஆவிச்சி அருகே நம்மை கடந்து சென்ற அந்த ஆட்டோவை காண நேர்ந்தது. “ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர மஹா பெரியவா ஸ்வாமிகள்” என்று எழுதப்பட்டு அதன் கீழே மகா பெரியவாவின் மூன்று படங்கள் காணப்பட்டது. அதற்கு மேலே, “METER FARE ONLY” என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது.
மகா பெரியவாவின் படங்களை அதுவும் இத்தனை படங்களை ஒரு ஆட்டோவில் நாம் பார்ப்பது இதுவே முதன்முறை. நமது பைக்கை உடனே திருப்பி அந்த ஆட்டோவை ஒரு பத்து நிமிடம் சேஸ் செய்து விருகம்பாக்கம் சந்திரா மால் அருகே சவாரியை இறக்கிக்கொண்டிருந்தபோது பிடித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் மொபைல் நம்பரை வாங்கினோம். நமது விசிட்டிங் கார்டை கொடுத்து அடுத்த நாள் தொடர்புகொள்வதாக கூறி, கிளம்பும் காமிராவில் அவரது ஆட்டோவை படமெடுக்க முற்பட்டோம். ஆனால் அதற்குள் அவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து போய்விட அதான் நம்பரே வாங்கிவிட்டோமே அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம், என்று விட்டுவிட்டோம்.
மறுநாள் அவரை தொடர்புகொண்ட போது “சாரே ஜஹான் சே அச்சா” என்கிற பாடல் அவர் மொபைலில் காலர் டியூனாக ஒலித்தது. அவரிடம் பேசியபோது அவர் பெயர் ஸ்ரீபாலாஜி (42) என்பதும், மகா பெரியவாவின் தீவிர பக்தர் என்பதும் தெரிந்தது. மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரு.ஜார்ஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களிடம் சிறந்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனருக்கான மரியாதை இவர் பெற்றிருப்பதும் தெரிந்தது.
மகா பெரியவா பற்றி அவர் கூறியது அனைத்தும் புருவத்தை உயர்த்தும் தகவல்கள்.
அவரை உடனடியாக சந்திக்கும்ஆர்வம் நமக்கு ஏற்பட்டுவிட, “உங்கள் நேர்மைக்கு தேசபக்திக்கும் பெரியவா பக்திக்கும் ஒரு சல்யூட். உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும் சார்… உங்களுக்கு ஒரு சால்வை போட்டு உங்கள் ஆட்டோவில் உங்களை ஒரு பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்!” என்றோம்.
“என்னை மன்னிச்சுடுங்க சார். என்னைப் பார்க்கலாம். பேசலாம். ஆனா நான் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டேன். எனக்கு விளம்பரம் எல்லாம் வேண்டாம்” என்றார் எடுத்த எடுப்பில்.
இப்படி ஒரு ரியாக்ஷனை நாம் எதிர்பார்க்கவில்லை அவரிடம். “சார்… உங்களுக்கும் விளம்பரமெல்லாம் கிடையாது… ஜஸ்ட் உங்க சேவையை பத்தி நாலு பேருக்கு எடுத்து சொல்றது தான் என் நோக்கம். தவிர என்னுடையது சேவை நோக்கோடு நடத்தப்படும் ஒரு இணைய தளம்!”
“என் ஆட்டோவை எத்தனை ஆங்கிள்ல வேணும்னாலும் படம் எடுத்துக்கோங்க. ஆனா நான் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டேன். தப்பா நினைக்காதீங்க!”
எப்படியாவது அவரை படம்பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும் என்று தீர்மானமாக இருந்ததால் வேறு விதமாக பேசினோம்.
“ஒ.கே. சார்… உங்களுக்கு ஒரு பிரார்த்தனை படம் தர்றேன். அதை நீங்க வாங்கிக்குற மாதிரியாவது போட்டோ எடுத்துக்குறேன்”
“இல்லை சார்… தப்பா நினைக்காதீங்க. என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தினா என்னை மன்னிக்கணும். மிக மிகப்பெரிய அதிகாரிகள் எனக்கு பரிசு கொடுத்து கௌரவிச்சப்போ கூட நான் ஃபோட்டோ எடுக்க அனுமதிக்கலை!” என்று அவர் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்.
சரி… அட்லீஸ்ட் அவர் ஆட்டோவையாவது படம் எடுக்க சம்மதித்திருக்கிறாரே… அதுவே போதும். இதற்கும் மனசு மாறிவிடுவதற்குள் ஓடிப்போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் வருவதாக கூறினோம்.
ஏதாவது ஒரு கோவில் முன்பாக வைத்து அவரை சந்திக்க ஆசைப்பட்டோம். அடுத்தடுத்து பேசியதில் ஆழ்வார்திருநகர் மெகா மார்ட்டை ஒட்டி செல்லும் சாலையின் உள்ளே உள்ள ஒரு பிள்ளையார் கோவில் முன்பு சந்திப்பது என்று முடிவானது.
சொன்னபடி பிள்ளையார் கோவிலில் நாம் ஆஜராகிவிட, அடுத்த சில நிமிடங்களில் பாலாஜி வந்துவிட்டார்.
“இந்த இடம் போக்குவரத்து நெருக்கடி மிக்க இடமாக இருக்கிறது. ஆட்டோவை புகைப்படம் எடுப்பதை இங்கு வைத்துக்கொள்வோம். ஐந்து நிமிடத்தில் படங்கள் எடுத்துவிடுகிறேன். பிறகு ப்ரீயான இடத்திற்கு சென்று அங்கு பேட்டியை வைத்துக்கொள்ளலாம்” என்றோம்.
நானும் அதைதான் சொல்ல நினைத்தேன் என்றார். இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு தனியார் பள்ளியின் முன்பாக நிழலில் வாகனத்தை பார்க் செய்தோம்.
ஆட்டோவை இப்போது தான் சற்று ஆற அமர பார்க்கிறோம். இது ஆட்டோ அல்ல. ஒரு கோவில்.
“ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர மஹா பெரியவா ஸ்வாமிகள்” என்னும் வாசகம் நாடு நாயகமாக காணப்பட்டது. அதற்கு கீழே “எவ்வளவு என்பது வியாதி. மீட்டர் என்று கேட்போம். சட்டத்தை மதிப்போம்” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
கீழே, “வெயில் மழை என்றும் பாராமல் உயிரை பணயம் வைத்து உழைக்கும் ஆம்புலன்ஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்., ஆர்மி, காவல் துறை, மாநகரப் பேருந்து, நீதித் துறை, மருத்துவத் துறை வாகனங்களுக்கு உடனே வழி விடுதல் மக்களாகிய நமது ஜனநாயகக் கடமையாகும். வந்தே மாதரம். வாழ்க பாரதம்” என்று எழுதப்பட்டிருந்தது.
ஆட்டோ முழுக்க கிடைத்த கேப்பில் எல்லாம் மகா பெரியவா படங்கள் தான்.
“சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே” “என் உயிர் என் தல, என் தல என் உயிர்” போன்ற வசனங்கள் ஆட்டோக்களின் பின்புறம் பார்த்து பார்த்து பழகிப் போன நமக்கு பின்புறம் மேலே எழுதப்பட்டிருந்த வாசகம் கண்களுக்கு குளுமையாக இருந்தது. அது என்ன வாசகம் தெரியுமா?
“வெயில் மழை என்று பாராமல் மக்களை ஏற்றிச் செல்லும் MTC பஸ்ஸிற்கு நாம் இடையூறு இல்லாமல் ஓட்டுவோம். நாம் அனைவரும் தகாத வார்த்தைகள் தவிர்ப்போம்!” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.
ஆட்டோ ஓட்டுனர்கள் டென்ஷனானால் அவர்கள் உச்சரிக்கும் வார்த்தையை கேட்டு நாம் மெர்சலாகிவிடுவோம் என்பதே உண்மை.
இங்கே நாம் பார்த்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாகவேண்டும். ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாம் வெளியூர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டியிருந்தது. சென்ட்ரல் செல்லும் 17M பேருந்தில் பயணம். பேருந்து ஆனந்த் தியேட்டர் அருகே சென்றபோது, நம் பஸ் டிரைவருக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கும் தகராறு மூண்டுவிட்டது. நடந்தது என்ன, தவறு யார் மீது என்று தெரியவில்லை. அவர் இவரை திட்ட, இவர் அவரை திட்ட இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்து சில நொடிகளில் நரகல் நடையாக மாறிவிட்டன. முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் பயணிகள் சிலர் வேறு வழியின்றி காதை பொத்திக்கொண்டார்கள்.
இதை எதற்கு சொல்கிறோம் என்றால், மாநகரப் பேருந்து டிரைவர்களுக்கும் சென்னை நகர ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். பல சமயங்களில் இருவர் நடவடிக்கைகளும் நமக்கே எரிச்சல் ஏற்படுத்தும்.
எனவே இங்கே ஆட்டோவில் ஸ்ரீபாலாஜி “நாம் அனைவரும் தகாத வார்த்தைகள் தவிர்ப்போம்!” என எழுதியிருப்பது மனதுக்கு இதமாக இருந்தது.
இது மட்டும் தானா?
அபே ஷேர் ஆட்டோ ஒட்டுனர்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார் ஸ்ரீபாலாஜி. “இரவு பகல் பாராமல் ரூ.7 க்கும் 10க்கும் 15க்கும் ஆட்டோ ஓட்டி உழைக்கும் அபே ஷேர் ஆட்டோ ஒட்டுனர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்” என்று வலப்பக்கம் பக்கம் ஒரு வாசகம் காணப்படுகிறது.
இடப்பக்கம் :
* இந்தியர்களே, ஒருவர் எதிர்பார்ப்புக்கு முன்னரே வழிவிடுதல் மிகச் சிறந்த பழக்கமாகும். அவரின் இதயம் குளிர்வதால் நமது நட்பு பெருகும்.
* மக்களே நமது முதலாளி.
* வாருங்கள் தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்.
* சைலன்சர் என்பது சத்தமில்லாமல் ஓட்டுவதற்கே. மற்றவர்கள் இதயத்தை கிழிப்பதற்கு அல்ல.
* முதியோர்கள் இதயத் துடிப்பு நின்று போகுமாறு ஒட்டாதீர்கள். அரசு கண்டுகொள்வதில்லை. நீதித் துறை கண்டுகொள்ள வேண்டும்!
இது தவிர ஊனமுற்றவர்களுக்கு சலுகை கட்டணம், பிரசவத்திற்கு இலவசம் என பிற சேவைகள் உண்டு. மேற்கூறிய இந்த வாசகங்களை எழுத்தில் மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தி வருகிறார் இவர் என்பது தான் விசேஷமே.
செருப்பைக் கழற்றி போட்டுவிட்டு ஆட்டோ உள்ளே ஏறி அமர்ந்தால், MP3 ப்ளேயரை ஸ்பீக்கரில் ஒலிக்க விடுகிறார். ஜெய ஜெய சங்கர…. ஹர ஹர சங்கர…. என்கிற மந்திரம் தொடர்ந்து ஒலிக்கிறது.
இடப்பக்கம் டிஜிட்டல் மீட்டர். வலப்பக்கம் முதலுதவிப் பெட்டி. (மருந்துகளுடன்!!)
தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் என்றில்லை… எமெர்ஜென்சி என்றால் சாலையில் அடிப்பட்டு கிடப்பவர்கள் உட்பட அனைவருக்கும் ஓடிச் சென்று முதலுதவி செய்கிறார் ஸ்ரீபாலாஜி. (ஒவ்வொரு மாதமும் முதலுதவி சம்பந்தப்பட்ட மருந்துகள் வாங்க மட்டுமே ரூ.1500/- செலவிடுகிறார்.)
ஆட்டோக்காரர்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள், மீட்டருக்கு சூடு வைப்பவர்கள் என்ற அடையாளங்களைப் போக்க, பாலாஜியைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஆட்டோ என்றாலே அலறி ஓடும் சென்னைவாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், தனது வித்தியாசமான செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்றுள்ளார் இவர்.
இவரது நேர்மையை பற்றி கேள்விப்பட்ட சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரு.ஜார்ஜ் இவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
“உங்கள் நேர்மை மற்றும் சீர்த்திருத்தக் கருத்துக்கள் பல எதிர்ப்புக்களை உங்களுக்கு சம்பாதித்து தந்திருக்குமே?”
“நிறைய சார். என்னை ரெண்டு மூணு முறை கொல்ல கூட முயற்சி நடந்தது. என்னை வெட்ட வந்தாங்க. உருட்டுக் கட்டையால அடிக்க வந்தாங்க. என் ஆட்டோவை கொளுத்தக் கூட முயற்சி நடந்தது. மகா பெரியவா புண்ணியத்துல தப்பிச்சேன்.” ஒரு சில காவல் நிலையங்களில் தன்னைக் கொல்ல நடந்த முயற்சிகள் குறித்து அளித்த புகார்களின் நகலை நமக்கு காண்பித்தார்.
அவரை தீர்த்துக்கட்ட நடந்த சம்பவங்களை பற்றி அவர் விவரித்தபோது தெலுங்கு பட காட்சிகள் சில நினைவுக்கு வந்தன.
“ஆனால் மகா பெரியவா உங்க கூட இருக்கும்போது நீங்க எதுக்கும் கவலைப்படவேண்டாம்.” என்றோம்.
“அந்த நம்பிக்கையில தான் சார் ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கேன்!” என்றார்.
ஒரு முறை இவர் புகார் அளிக்க சென்றபோது, இவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து இவருக்கு போலீஸ் பாதுகாப்பளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு காவல் துறை உயர் அதிகாரியை இவர் சந்தித்தபோது , “சார்… உங்கள் நேர்மையும், கொள்கையும் ஒ.கே. ஆனா 24 மணிநேரமும் போலீஸ் உங்களை பாதுகாக்க முடியாது. ஏன்னா நீங்க ஒரு இடத்துல இருக்குற ஆளா இருந்தா பரவாயில்லை. நாலு இடத்துக்கு போயிட்டு வர்ற ஆள். உங்களுக்கும் குடும்பம் இருக்கு. புள்ளை குட்டிங்க இருக்காங்க. அவங்களுக்காகவாவது நீங்க உயிரோட இருக்கணும். அவங்களை மனசுல வெச்சு நீங்க உங்களை கொஞ்சம் மாத்திக்கணும். உங்க மேல சம்பந்தப்பட்டவங்களுக்கு இருக்குற கோபம் வடியுற வரைக்கும் கொஞ்ச காலம் உங்க ஆட்டோவுல இருக்குற வாசகங்கள் எல்லாத்தையும் அழிச்சிட்டு சரசாரி ஆட்டோ டிரைவரா இருங்களேன். நிலைமை சரியானப்புறம் பார்த்துக்கலாம்!” என்றார்.
அதற்கு இவர், “நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பெரியவங்க எவ்வளவோ தியாகம் பண்ணித் தான் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாங்க. பலர் தங்கள் கொள்கைக்காக வீட்டை, குடும்பத்தை இழந்திருக்காங்க. அவ்வளவு ஏன், 120 கோடி பேர் நிம்மதியா தூங்க ஒரு சில ஆயிரம் ராணுவ வீரர்கள் எல்லையில் தங்கள் உயிரை பணயம் வைக்கிறாங்க. அவங்களோட தியாகத்துக்கு முன்னாள் என்னோட இந்த தியாகமெல்லாம் ஒன்னுமே இல்லை சார்!” என்று சொல்லியிருக்கிறார்.
உடனே இணைக் கமிஷனர் அசந்து போய் மரியாதை செலுத்தினாராம். (நாமும் தான்!).
“இப்படி உயிருக்கு பயந்து ஒவ்வொரு நாளும் கடத்த வேண்டுமா? இந்த ஆட்டோ தொழிலை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வேறு ஒரு நல்ல வேலை வாங்கித் தருகிறேன்!” என்று வேறு ஒரு நேர்மையான அதிகாரி இவருக்கு உதவும் நோக்கில் கூறியபோது அதற்கும் மறுத்துவிட்டார்.
திருவண்ணாமலையில் பிறந்த பாலாஜி, மகா பெரியவா பக்தரானது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. (அது அடுத்த பாகத்தில் வரும்!) பாலாஜி தற்போது விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இதைத் தவிர வேறு ஏதேனும் சேவைகளில் ஸ்ரீபாலாஜி ஈடுபட்டு வருகிறாரா?
எண்ணற்ற சேவைகளில் அவர் ஈடுபட்டு வருவது நமக்கு புரிந்தது. அவராக நம்மிடம் பேச்சு வாக்கில் பகிர்ந்தவற்றை மட்டும் இங்கே சொல்கிறோம்.
வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த நேரம் கார்கில் போரின் போது, நாட்டிற்கு பொதுமக்கள் தங்களாலான உதவிகளைச் செய்யலாம் என்ற அறிவிப்பு வர, “எனக்கு கார் டிரைவிங் தெரியும்” என்று சொல்லி, ‘பரேலி கேண்ட்’ பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு தற்காலிக டிரைவராக பணியாற்றியிருக்கிறார்.
அங்கே மலையில் ஓடைகளில் ஆப்பிள்கள் மரங்களில் இருந்து விழுந்து மிதந்து வருமாம். அதை அப்படியே அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு வந்து கீழே உள்ள பள்ளி மாணவர்களுக்கு தருவாராம். சேவை செய்ய கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விடுவதில்லை இவர்.
“சார்… ஃபோர் வீலர் டிரைவிங் தெரியுமென்றால் ஏதாவது டாக்ஸி ஓட்டலாமே… ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள்?” என்று நம் சந்தேகத்தை கேட்டோம்.
“என்னோட கொள்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஆட்டோ தான் சரிப்பட்டு வரும் சார். முதல்ல நான் டாக்ஸி தான் ஓட்டினேன் சார்… யாராவது அடிபட்டு கிடந்தாங்கன்னா சவாரியை நிறுத்திட்டு அவங்களை காப்பாத்த போவேன். ஒரு சிலர் ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஒரு சிலர் “முதல்ல என்னை கொண்டு போய் விடுய்யா… அதெல்லாம் போலீஸ்காரங்க பாத்துக்குவாங்க”ன்னு சொல்வாங்க.. பல முறை என்னைப் பற்றி என் முதலாளியிடம், சம்பந்தப்பட்ட டாக்ஸி நிர்வாகத்திடம் கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காங்க. அவர்கள் கூப்பிட்டு என்னை வார்ன் பண்ணுவாங்க. இப்படி என்னோட கொள்கைக்கு ஒத்துவராததாலே அதை விட்டுட்டேன்.”
“ஆட்டோவுல சவாரி போகும்போது மட்டும் அந்த பிரச்சனை வராதா?”
“இங்கேயும் வரும். அப்படி வரும்போது, டக்குன்னு கை போட்டு வேற ஏதாவது ஆட்டோவுல சவாரியை மாத்தி விட்டுடுவேன். தவிர இதுல நானா ராஜா நானே மந்திரி என்பதாலே என்னைப் பத்தி யார் கிட்டே போய் புகார் சொல்ல முடியும்?” சொல்லிவிட்டு சிரிக்கிறார் ஸ்ரீபாலாஜி.
ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்த சமூக கண்ணோட்டம் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
“ஒரு சில கெட்ட சம்பவங்களை வச்சு, அந்த துறை சார்ந்த எல்லாருமே அந்த பணி செய்கிறவர்கள் எல்லாருமே தப்பானவங்கனு நெனைக்க கூடாது. எல்லா துறைகளிலும் நேர்மையாக பணியாற்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சேவை சமர்ப்பணம்” என்கிற பாலாஜி, ஆறு மாதங்களுக்கு முன் தான் தவணை முறையில் சொந்தமாக ஆட்டோ வாங்கியிருக்கிறார்.
புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு அவற்றை பின்பற்றி வாழ்ந்து வரும் ஸ்ரீபாலாஜி திருமண விஷயத்தில் மட்டும் அப்படி இல்லாமல் இருப்பாரா என்ன?
யாராவது ஒரு விதவைப் பெண், ஏழைப் பெண்ணை மணந்து கொள்ள தீர்மானித்திருந்த பாலாஜி, மணந்திருப்பது அறுவை சிகிச்சை செய்துகொண்ட சத்யா என்கிற இதயநோய் கொண்ட ஒரு பெண்ணை. இன்று இரண்டு குழந்தைகளுக்கு ஸ்ரீபாலாஜி தந்தை. மகள் ஸ்வாதி ஐந்தாம் வகுப்பும், மகன் ஸ்ரீராம் நான்காம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
“எப்படி சார்… கேட்கும் எனக்கே கொஞ்சம் பயமாயிருக்கு… எப்படி சாத்தியமாச்சு?” என்றோம் ஆச்சரியத்துடன்.
ஆட்டோவில் முன்பக்கம் இருந்த மகா பெரியவா படத்தை காண்பித்து, “இவர் இருக்குற தைரியத்துல தான் சார்.” என்றார்.
“உங்க மனைவியை அவசியம் நான் பார்க்கணும் சார்….” என்றோம்.
“சந்திப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போலாம் சார்” என்றார்.
மனைவி இதயநோயாளி என்பதால் அவருக்கு வீட்டு வேலைகளில் இவர் தான் கூட மாட உதவி செய்கிறார். மாலை 6 மணிக்கு மேல் இதற்காகவே ஆட்டோ ஒட்டுவதில்லை இவர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தன், ‘ரேஷன் கார்டுக்கு’ கிடைக்கும் இலவச அரிசியை, தயிர் சாதமாக சமைத்து, உணவில்லாமல் வாடும் நூறு பேருக்கு வழங்குகிறார். தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக அந்த சேவையை தொடரமுடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.
இந்த சந்திப்புக்கு கூட இவர் ஒப்புக்கொண்டது, பல்வேறு பிரச்சனைகளில் தினசரி தவிக்கும் ஒரு சராசரி ஆட்டோ டிரைவரான தானே தன்னால் இயன்ற சேவைகளை இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும்போது, பல துறைகளில் உத்தியோகத்தில் தொழிலில் நன்கு சம்பாதித்து வருபவர்கள் மனது வைத்தால் எவ்வளவோ செய்யலாம். கொள்கைப் பிடிப்புடன் நேர்மையாக வாழலாம்… மகா பெரியவாவின் உண்மையான ஒரு தொண்டனாக அவரது பெருமையை பரப்பலாம் என்பதை எடுத்துக்காட்டத்தான் என்றார்.
மகா பெரியவா பற்றிய பதிவுகளை தொடர்ந்து படிப்பதினாலோ அல்லது பகிர்வதினாலோ ஒருவர் அவரது பக்தர் ஆகிவிடமுடியாது. சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுமானால் அப்படி கூறிக்கொண்டு பெருமையடையலாம். ஆனால் நிஜ வாழ்வில் அவரது கொள்கைகளை, உபதேசங்களை எந்தளவு ஒருவர் பின்பற்றி வருகிறார், அவர் செயல் எந்தளவு மகா பெரியவாவுக்கு பெருமை சேர்க்கிறது என்பதே முக்கியம். இந்த அளவுகோலின்படி பார்த்தால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்று தெரியாது.
ஆனால் ஸ்ரீபாலாஜியின் நேர்மையும் சமூக அக்கறையும், பொதுமக்களிடமும் பயணிகளிடமும் சக ஓட்டுனர்களிடமும் காவல்துறையினரிடமும் அவர் காட்டும் கண்ணியமும் அணுகுமுறையும் மகா பெரியவா மீது பெரு மதிப்பை பக்தியை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை.
இவரது ஆட்டோவில் ஒரு முறை பயணித்தவர்கள், மீண்டும் விரும்பித் தேடிச்சென்று பயணிக்கத் துவங்கியுள்ளது இவரது சேவைக்கு கிடைத்த மரியாதை. மேலும் மறக்காமல் அனைவருக்கும் மகா பெரியவா படத்தை தருகிறார். (மகா பெரியவா படம் வேண்டும் என்று கேட்கும் இவரது பயணிகளிடம் நண்பர் சாணுபுத்திரன் அவர்கள் நம்மிடையே கொடுத்திருந்த குஞ்சிதபாத சங்கரன் படங்களை கொடுத்து அவற்றை கொடுக்குமாறு கூறியிருக்கிறோம்.)
தனது பெயர், புகழ் என அனைத்தையும் மகா பெரியவாவுக்கே அற்பணித்து வாழ்ந்து வருகிறார் ஸ்ரீபாலாஜி.
பேசிக்கொண்டே இருந்தோம். பெரியவாவை இவர் சந்தித்த அனுபவங்கள், அவர் இவரிடம் கூறியது என எங்கள் உரையாடல் சுமார் ஒன்றரை மணிநேரம் நீண்டது.
சந்திப்பு நிறைவடைந்தவுடன், அவரது திருமதியை சந்திக்க வேண்டி அவர் இல்லத்துக்கு சென்றோம்.
விருகம்பாக்கதில் ஒரு வீட்டில் மாடி போர்ஷன். ஒரே ஒரு ரூம் தான். அதில் ஒரு ஓரம் சமையலறை. அதில் ஒரு ஓரத்தில் சாமி படங்கள். ஓரமாக சற்று பெரிதாக ஒரு மகா பெரியவா படம்.
ஒரு கணவன் மனைவி மட்டுமே வசிக்கூடிய அந்த சிறிய அறையில் நான்கு பேர் கொண்ட கொண்ட குடும்பம் வசிக்கிறது.
நாம் செல்லும்பொது அவர் திருமதி இல்லை. எங்கோ சென்றிருந்தார்.
அவர் பிள்ளைகளின் படிப்பு மற்றும் இதர விஷயங்கள் பற்றி சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருந்த நொடிகளில் திருமதி.சத்யா பாலாஜி வந்துவிட்டார். நம்மை அவரிடம் திரு.பாலாஜி அறிமுகப்படுத்த அவருக்கு வணக்கம் கூறி நாம் வாங்கிச் சென்ற பழங்களை கொடுத்தோம்.
திரு.ஸ்ரீபாலாஜி அவர்களின் நேர்மையை பற்றியும் தொண்டைப் பற்றியும் சிலாகித்து கூறி இவர் உதவியின்றி ஒத்துழைப்பின்றி அவர் இத்தகைய தொண்டுகளை செய்ய முடியாது என்றும், அதற்காக அவரை பார்த்து வாழ்த்தும் இவரை திருமணம் செய்துகொண்டதற்கு நன்றியும் சொல்லிவிட்டு போகவே வந்தோம் என்றும் கூறினோம்.
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (குறள் 51)
(பொருள் : இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.)
தன் பொருளாதார நிலையை அனுசரித்து இல்லறம் நடத்தக்கூடிய மனைவி ஒருவருக்கு அமைந்துவிட்டால் நெருப்பு மீது கூட படுத்து நிம்மதியாக உறங்கலாம். ஆனால் வருவாய்க்கு உட்பட்டு அனுசரணையாக குடும்பம் நடத்தத் தெரியாத மனைவி அமைந்துவிட்டால் கோடி கோடியாக சம்பாதித்தாலும் அவர்களால் பட்டு மெத்தையில் கூட நிம்மதியாக உறங்கமுடியாது.
அந்த வகையில் ஸ்ரீபாலாஜி ஆசீர்வதிக்கப்பட்டவர். அவர் மேன்மேலும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ நம் குரு மகா பெரியவாவையும் எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகிறோம்.
* திரு.ஸ்ரீபாலாஜி அவர்கள் யாரிடமும் எந்த ஒரு பண உதவியையோ அல்லது அதிகாரப்பூர்வ உதவியையோ எதிர்ப்பார்க்கமாட்டார். இதெல்லாம் பெரியவாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. அவரின் வேண்டுகோளின்படி இந்த பதிவு திருத்தப்பட்டுள்ளது.
=======================================================================
அடுத்த பாகத்தில்….
மஹா பெரியவாவை சந்தித்த அந்த தருணங்கள்!
….விரிவாக…!
=======================================================================
ALSO CHECK :
‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா?
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
மேலும் இது போன்ற ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களுக்கு :
=======================================================================
[END]
hats off to Mr.balaji..
வணக்கம் சார்.
குடும்பம் ஒரு கோயில் அதுமாதிரி ஆட்டோ ஒரு கோயில் .
ஆட்டோவை பற்றி நீங்கள் எடுத்த போடோக்கள் எல்லாமே அப்படித்தான் சொல்ல தோன்றுகிறது.
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர். எல்லா சமயத்திலும் பெரியவா பார்த்துகொள்வார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது.
இன்னும் ஒரு மணிமாறன் போல சேவையும் மேலும் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காத குணமும் இவரிடமும் உள்ளது.
எல்லா பக்கமும் திருப்பி திருப்பி போட்டோ எடுத்து எங்கள் மனதை குளிர வைத்து, சந்தோசம் காண வைக்க உங்களால் மட்டுமே முடியும்.
மகா பெரியவா அவர்களின் பக்தனுக்கு சேவை செய்ய நம் வாசகர்களுக்கு கசக்குமா என்ன?.
திரு பாலாஜி மற்றும் அவர் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ பெரியவா அவர்களின் துணை என்றும் இருக்கும்
நன்றி
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தன், ‘ரேஷன் கார்டுக்கு’ கிடைக்கும் இலவச அரிசியை, தயிர் சாதமாக சமைத்து, உணவில்லாமல் வாடும் நூறு பேருக்கு வழங்குகிறார்.
சூப்பர். உண்மையில் மிக மிக நல்ல மனிதர். பதிவுக்கு நன்றி.
Dear Sundar ji,
HATS OFF TO YOUR CONTRIBUTION AND SRI BALAJI FOR HIS DEVOTION TO MAHA PERIAVAYA AND HIS RICH IDEALS.
I felt great happiness and sorrow in reading this article. Happiness is to read about Sri. Balaji and your efforts to convince him to repay his auto loan amount.
Sorrow is that still he is getting threatening for his life from social elements for his truthfulness and to meet his financial burden for normal living without expecting
anything from any body.And that too he is distributing Curd rice to poor and needy from his ration rice. He is pefectly following Maha Periyava’s Instruction although
he can’t afford to do that right now.
Lesson from Sri. Balaji.
1) We all should distribute annadana to our capacity to poor and needy may be 10 or 100 or 1000 with the wealth we have as per Maha Periava instruction.
2) Whoever we are, we should stick to our Dharma and help and serve the society inspite of resistance, bad comments.
Mahaperiava Saranam.
Regards,
Sankar.
Sir, i have just narrated a few accounts from my observations. he is really a samaritan beyond any doubts or materialistic desires. I bet that. I am very glad that i met and conversed with him for few hours. thanks.
மிகவும் அருமையான நீண்ட பதிவு. திரு பாலாஜிக்கு ஒரு ராயல் salute நான் கூட ஒரு முறை வளசரவாக்கம் செல்லும் பொழுது இந்த ஆட்டோவை பார்த்தேன், என்னடா மகா பெரியவா போட்டோ இருக்கிறேதே என்று மிகவும் சந்தோசப் பட்டேன் ; அப்பொழுது நினைத்தேன் சுந்தர் இந்த ஆட்டோவை பார்த்தல் கண்டிப்பாக நமக்கு ஒரு அழகிய பதிவு கிடைத்திருக்கும் என்று. சரியாக உங்கள் கண்களில் இந்த ஆட்டோ மாட்டி இருப்பது மகா பெரியவா கருணை அல்லது பாலாஜியை செய்யும் நேர்மையான தொழிலை பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. அவர் மென்மேலும் பல உயரிய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் நம்மால் முடிந்த உதவி செய்வோம்.
பதிவை படிக்க படிக்க பரவசம்…. ஆட்டோவை பார்க்கும் பொழுதே தெய்விக அம்சமாக உள்ளது
மகா பெரியவா…. கடாக்ஷம் …
நன்றி
உமா
சுந்தர்ஜி
‘நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை!”
ஸ்ரீபாலாஜி சேவை படிக்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது
ஸ்ரீபாலாஜி சேவை நாட்டிற்கு மிகவும் தேவை.
அவர் சேவை தொடரவும் அவர் அன்பு குடும்பம் செழிக்கவும் எல்லாம் வல்ல நம் மஹா பெரியவா அவர்களிடம் பிராத்தனை செய்கிறேன்.
குறிப்பு
நான் நிறைய எழுத வேண்டும் என்று நெனைக்கிறேன், ஆனால் வேலை பார்க்கும் இடத்தில் நேரம் கிடைக்கவில்லை ,மேலும் வீட்டில் கண்ணினி வசதி இல்லை. மேலும் எனக்கு தமிழ் டைப் பிங்
தெரியாது.
எனவே நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் . பிழை இருந்தால் பொருத்துதருள்க.
திரு சுந்தர் அவர்களுக்கு,
நான் உங்கள் தளத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது முதல் தவறாமல் எல்லா பதிவுகளையும் படித்து விடுவேன். உங்கள் சேவையையும், பக்தியையும் மனதளவில் பாராட்டுவேன். ஆனால் இந்த பதிவின் மூலம் என்னை மனம் திறந்து பாராட்ட வைத்துவிட்டீர்கள். இரண்டு சேவை மனப்பான்மை உடையவர்கள் சந்தித்தால் அதன் தாக்கம் மிகப் பெரியது ஆகும். படித்த கணமே என் மனதில் ஒரு தாக்கம். அதை விவரிக்கத் தெரியவில்லை. நான் மகா பெரியவாளின் பக்தை. முடிந்தவரை மகா பெரியவாளின் அருளுரைக்கு ஏற்ப நடந்து வருகிறேன். இவரின் மகா பெரியவாளின் பக்தியும், நம்பிக்கையும், சேவையும் கண்டு, நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பதை உணர்ந்தேன். இவருக்கு எந்த வகையிலாவது உதவ எண்ணுகிறேன். தங்கள் ஈமெயில் முகவரி கிடைத்தால், விவரங்களை பகிர உதவும்.
நன்றி,
மீனாக்ஷி
திரு.ஸ்ரீபாலாஜி அவர்கள் யாரிடமும் எந்த ஒரு பண உதவியையோ அல்லது அதிகாரப்பூர்வ உதவியையோ எதிர்ப்பார்க்கமாட்டார். இதெல்லாம் பெரியவாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. அவரின் வேண்டுகோளின்படி பதிவின் கருத்துக்கள் திருத்தப்பட்டுள்ளது.
திரு.சுந்தர் அவர்களுக்கு,
திரு. பாலாஜி அவர்களின் சேவையை மிகவும் பாராட்டுகிறேன். தாங்கள் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்னுடைய மனமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
அவரும், அவர் குடும்பமும் நலமும் வளமும் பெற்று சிறப்பாக வாழ்ந்திட கடவுளை பிரார்த்திக்கின்றேன்.
நன்றியுடன்,
திருமதி. ரமா ஷங்கர்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. திரு.பாலாஜி அவர்களும் அவர் குடும்பத்தினரும் என்றென்றும் நல்லமுறையில் இதே போல அறவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்
அன்புடையீர்
சிறப்பான செய்தியினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” அந்த சொற்றொடர் இவரனையாருக்கே உரித்தானது இவர் முகம் தெரிய வேண்டாம் உள்ளம் தெரிகிறது (ஆட்டோ எண் அறியப்பட்டதால் முகம் தெரிந்து கொள்வது சிரமம் அல்ல) இறைவனை உருவமாகப் பார்க்க வேண்டியிருந்தால் ஆலயத்தில்தான் சென்று பார்க்க வேண்டுமென்பதால் இவரனையாரையும் அவரது ஆட்டோவிலேயே பார்க்க முடிந்தால் சிறப்பே வாழ்க இவர் தொண்டு வளர்க இவர் பணி பொத்தாம் பொதுவாக சொல்லாமல், ஆதாரத்துடன் இது போல நல்லவர்களை அறிமுகப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் இதயம் விழைந்த நன்றி
அன்பன்
செபரா
ஸ்ரீ குருபாதுகா சமாஜ உறுப்பினர்
நடேச நகர்