அன்று வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்காக விடுதலை போரை நடத்தினார்கள் நம் தலைவர்கள். இன்றும் தேவை ஒரு விடுதலை போர். எதற்கு தெரியுமா? சினிமா மோகத்திலும் குடிப்பழக்கத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் இளைஞர்களை மீட்க. திலகர் போன்ற தன்னலமற்ற இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய வரலாறு அதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
வெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே, நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை மக்கள் உணராத காலக்கட்டத்திலேயே ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய ஒப்பற்ற தலைவர் பால கங்காதர திலகர். இன்று அவர் பிறந்த நாள்.
பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 ல் பிறந்தார். சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர். அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.
மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் திலகர். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார்.
பூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்றனர்.
அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார்.
திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.
உண்மையே பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.
இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.
ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது.
இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.
1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
===========================================================
உங்களுக்கு தெரியுமா?
* சுவாமி விவேகானந்தர் பிரபலம் அடைவதற்கு முன்னமே அவரை தனது இல்லத்தில் தங்கவைத்து ஆத்மவிசாரணை புரிந்த கொடுப்பினை பெற்றவர் திலகர்.
* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட பெருமை கொண்டவர் திலகர்.
* விநாயகர் சுதுர்த்தி ஊர்வலம் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அதைக்கொண்டு வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை உணர்வை ஊட்டியவர் திலகர்.
===========================================================
1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.
கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம். இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.
(ஆக்கத்தில் உதவி : என்.டி.என்.பிரபு | desamaedeivam.blogspot.in | tamil.thehindu.com)
[END]
சித்திரச் சோலைகளே உம்மை வளர்க்க இப்பாரினிலே முன்னம் எத்தனை வீரர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நம் வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள்.
வந்தே மாதரம்
மிக மிக அருமையான ஒரு பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
– சுந்தர்
திரு திலகர் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. ஹோல் ரூல் இயக்கம் என்பதை ”ஹோம் ரூல் ” இயக்கம் என்று மாற்றவும்
இன்று திரு சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம். அவரும் நம் நாடு விடுதலை க்காக பாடுபட்ட ஒப்பற்ற வீரர். அவரையும் நாம் இந்நாளில் நினைவு கூறுவோம்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்
நன்றி
உமா
கக்கன் காமராஜ் போன்ற நல்லவர்கள் இருந்த அரசியல் அழுக்காகி போனதற்கு யார் காரணம்? சுதந்திரம் எப்படி பெற்றோம் என்று கூட தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
என்றாவது தியாகிகளுக்கு – விடுதலை வீரர்களுக்கு – எல்லையில் நம்மை காக்கும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது உண்டா?
தமிழர்களும் – நம் நாட்டு மக்களும் எதையும் விரைவில் மறந்து விடுவார்கள். அந்த மறதியே அநீதிக்கு எதிராக போராடும் குணத்தை மழுங்கடித்துவிட்டது!!
ஒழுக்கமும் பக்தியும் மட்டுமே ஒரு நல்ல சமூக மாற்றத்திற்கு தேவை இப்பொழுது …
இவ்வளவு தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்து, ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையை பார்க்கின் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல் ஆகி விட்டதே!!!!!!!!!!!
ஆனாலும் இவர்கள் அனைவரும் புண்ணியவான்களே.
நாட்டிற்குழைத்த நல்லதொரு தலைவரைப் பற்றிய நினைவு பதிவிற்கு நன்றிகள்.