Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club

பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club

print
மது பிரார்த்தனை கிளப் பதிவில் எப்போதும் கதை ஒன்றை சொல்லிவிட்டு பிறகு தான் பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சிறப்பு விருந்தினரை உங்களுக்கு அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வாரம் கதையே தேவையில்லை என்னுமளவிற்கு சிறப்பு விருந்தினரின் அறிமுகமும் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களில் ஒன்றுமே பிரமாதமாக அமைந்துவிட்டபடியால் கதையை தனியாக தரவில்லை.

சரி… இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல்!

Maha periyava devotee Rajalakshmi Vittal Mamiயார் இந்த ராஜலக்ஷ்மி விட்டல்? பிரார்த்தனை கிளபிற்கு தலைமை தாங்கும் அளவிற்கு என்ன செய்துவருகிறார்? மேலே படியுங்கள். இவர் நம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை தாங்குவது நாம் செய்த பாக்கியம் என்று உங்களுக்கு புரியும்.

திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல். மஹா பெரியவாளின் பரம பக்தை. அவரே எல்லாம் என்று, நம்மைப் போல் அல்லாமல், மிக வித்யாசமாக, வாழ்ந்து கொண்டிருப்பவர். அப்படியென்ன வித்யாசம்? திருச்சி மாவட்டம் நொச்சியத்தில் (மாதவ பெருமாள் கோவில்) கொள்ளிடக் கரையில் ஒரு சின்ன இடத்தில், வேத பாடசாலை, கோ சாலை நடத்திக் கொண்டு, அதனினும் பெரிய ஆசையாக அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, வேத வியாசர், ஆதி சங்கரர், நம் பெரியவாள் உள்ளடக்கிய கோவிலை கட்டி வருகிறார். இதற்கு அடுத்த கட்டமாக நாம் அங்கு போகும் போது தங்குவதற்கு 20 வீடுகளும் கூட. அதுவும், தனக்குப் பின்னால் ஆசிரமம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக. இவையனைத்தும் முடிந்த பின், அநாதை பிரேத சம்ஸ்காரம், ஞான வாபி, ஸ்ரார்த்த கட்டம் இவற்றை ஏற்படுத்தும் உத்தேசமும் உண்டு. அதற்கு வசதியாக ஆஸ்ரமத்தின் பின் புறத்தில் கொள்ளிடத்தின் வடகரை.

மாமி கட்டிக் கொண்டிருக்கும் அம்பாள் கோவிலில் ஸ்தபதி மற்றும் கட்டிட வேலைகள் மிக துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. தை மாதம் லலிதைக்கு பட்டாபிஷேகம் நடத்த உத்தேசித்துள்ளார். பெரியவாளின் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு இம்மகத்தான தொண்டில் இணைந்து அம்பாளின் அனுக்ரஹத்தை பெற வேண்டும் என்பது மாமியின் ஆசை. முப்பது வருடங்களுக்கு முன் ஃப்ரெண்டிடம் தான் சொன்னது போல், இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் பெரியவா பக்தர்களிடம் போனிலும், நேரிலும் பேசுவதிலும் மாமிக்கு அளவு கடந்த சந்தோஷம்.

இதையெல்லாம் செய்து கொண்டு வரும் இவர் வயது என்ன தெரியுமா? எண்பது !

இந்த வயதில் இப்படி ஒரு பெரிய பொறுப்பு ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு இவர் தனியாளாக செய்துவருவதை பார்த்த இவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரை பற்றியும், இவரது பணி பற்றியும் இவரை சந்தித்து பேட்டி எடுத்து அதை தனது முகநூலில் தொடர் போல வெளியிட, மஹா பெரியவா பக்தர்களுக்கு மத்தியில் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. அதை பால் ஹனுமான் தனது தளத்தில் பகிர்ந்திருந்தார். அங்கு நாம் தொடரை படித்த போது ராஜலக்ஷ்மி மாமியை ஏன் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமையேற்க அழைக்கக்கூடாது என்று கருதி அவர்களை தொடர்பு கொண்டு, நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினேன்.

நமது தளத்தின் நோக்கம் மற்றும் பணிகளை பற்றி கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் பிரார்த்தனைக்கு தலைமையேற்க தயங்கினார். “பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் அளவிற்கெல்லாம் நான் ஒன்றும் அத்தனை பெரிய மனுஷி கிடையாது… எல்லாம் மஹா பெரியவா தான்” என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “எங்கள் பிரார்த்தனை கிளப்பிற்கு ஒவ்வொரு வாரமும் தலைமை தாங்குவதே மஹா பெரியவா தான். எங்கள் பிரார்த்தனைகள் இறைவனிடம் கொண்டு போய் சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய மிகப் பெரிய பொறுப்பை அவரிடம் தான் ஒப்படைத்திருக்கிறோம். நீங்கள் இந்த வார பிரதிநிதி. அவ்வளவு தான். மறுக்காமல் எங்கள் அழைப்பை ஏற்று எங்களை காப்பாற்றவேண்டும். எத்தனையோ இன்னல்களுக்கு இடையே இந்த பிரார்த்தனை தான் எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது அம்மா” என்றோம்.

கடைசியில் மனமிரங்கி “சரி” என்றார்.

இராமாயண பாராயணம் சம்பந்தமாக திருமதி.ராஜலக்ஷ்மி கூறிய ஒரு சிலிர்ப்பூட்டும் சம்பவம் ஒன்றையும் அவர் நமக்கு கூறும் அறிவுரையையும் அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம். ஒரு வரிகூட விடவேண்டாம். அத்தனையும் முத்துக்கள்.

இயக்குவது அவரல்லவா?

Rajalakshmi Mami
தனது மூத்த சகோதரியுடன் ராஜலக்ஷ்மி விட்டல் மாமி (நின்றுகொண்டிருப்பவர்)

“அதி மஹா ருத்ரம் நடத்தி (1988) மூணு மாசத்துல கடன் எல்லாம் அடஞ்சுடுத்துன்னு மாமா சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் பண்ணின பிசினஸ்ல நிச்சயமா அம்பத்தி ரெண்டாயிரம் ரூவா அத்தன சீக்கரத்துல லாபமா வந்திருக்காது. அப்பிடின்னா, பெரியவா தான் ராமன் தன்னோட தாசனுக்காக கடனை தீர்த்த மாதிரி ஏதோ பண்ணிருக்கான்னு புரிஞ்சுண்டேன். அதுக்கப்றம் எனக்கெதுக்கு பிசினஸ்? மிச்சம் இருந்ததையெல்லாம் என் ஃப்ரெண்ட் கிட்ட கொடுத்தேன். ஒரு லட்சம் கெடச்சுது. நான், என் மனசுக்குள்ள பெரியவாட்ட சொன்னேன் – பெரியவா, நீங்க ஏழை சந்நியாசி கிழவன்னு சொன்னேளே, இப்போ நீங்க லட்சாதிபதின்னு. அந்த பணத்தை என் பிள்ளையும், மாமாவுமா பல விதத்துல இன்வெஸ்ட் பண்ணி பெருக்கினா. அப்புறம் நானும் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். எல்லாமா போட்டுத்தான் இந்த இடத்தை வாங்கினேன். மாமா கூட கேட்டா ‘இந்த வயசுல யானை வாங்கலாமா’ன்னு. நான் சொன்னேன் ‘எல்லாம் பெரியவா பாத்துப்பா’ன்னு. நான் இங்க வந்து பாத்தப்போ அவ்ளோ லக்ஷ்மிகரமா இருந்தது. தென்னை, வாழை, பசு மாடு, கன்னுக்குட்டி, சாணம், பின்னாடியே கொள்ளிடம்….எனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து. இங்க லலிதைக்கு கோவில் வரப்போறதுன்னு நெனைக்கும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா, முதல்ல எனக்கு ஆஸ்ரமம், பாடசாலை மட்டும் தான் மனசுல இருந்தது. அதுக்கு ஒரு ஸ்கெட்ச் போடச் சொல்லி பெங்களூருல அபர்ணாங்கற பொண்ணு கிட்ட சொன்னேன். அவ ஆர்க்கிடெக்சர் படிச்சுருந்தா. ஒரு காலேண்டர்ல ஆஸ்ரமம், சுத்திவர காடு, மான், முயல்கள் எல்லாம் படமா போட்டு இருந்தது. அதையும் அவகிட்ட கொடுத்தேன். அவ என்ன போட்டு கொண்டு வந்து கொடுத்தா தெரியுமா? அம்பாளோட ஸ்ரீ சக்ரம் ! இப்போ சொல்லுங்கோ, இதெல்லாம் யாரு பண்றா? நானா? எல்லாமே பெரியவாதான். அவர்தான் எல்லாத்தையும் பாத்துப் பாத்துப் பண்றார்.

நீங்களே சொல்லுங்கோ, யாராவது இந்த மாமிக்காக ஏதாவது பண்ணுவாளா? எல்லாரும் யாருக்காக பண்றா? பெரியவாளுக்காக. அவர்தான் சூட்ஷுமமா இருந்து இத்தனை கார்யங்களையும் கவனிச்சு நடத்திண்டு இருக்கார். இது ஒரு பெரிய அதிசயம் இல்லையா? எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையெல்லாம் வரது. ஆனா, ஒவ்வொரு தடவையும் பெரியவா தன்னோட பக்தாள்ல யாரையாவது அனுப்ச்சு வேண்டியதை செய்ய வச்சுடறா. அவா எல்லாம் எங்கிட்ட என்ன சொல்றா தெரியுமா? மாமி, நீங்க கவலை படாதீங்கோ. நாங்க பாத்துக்கறோம்னு.

ராமாயணத்துல கிஷ்கிந்தா காண்டத்துலதான் ஹனுமார் ராமர்ட்ட அடைக்கலமாறார். அதுமாதிரி நானும் கிட்டத்தட்ட என்னோட முப்பதாவது ப்ராயத்துல தான் பெரியவாட்ட சரணடைஞ்சேன். ஆனா, அவரைப்போல வல்லமை எல்லாம் எனக்கு கெடயாது. இப்போ, நீங்களெல்லாம் அந்த வாயு புத்ரனோட சேர்ந்தவா எல்லாரும் ராம சேனைல சேர்ந்துண்ட மாதிரி பெரியவாட்ட சரணாகதி ஆயுட்டேள். எனக்கு இப்போ உங்களைப் போல கோடிக் கணக்கான குழந்தைகள். பெரியவா குடும்பம் பெரிசாய்டுத்து. அவாளுக்கு உங்களை எல்லாம் காப்பாத்தற பொறுப்பு வந்துடுத்து (இதை சொல்லும் போது சிரிக்கிறார்). நீங்களெல்லாம் தான் எனக்கு கெடச்ச பெரிய நிதி. நீங்க எல்லாரும் பரம க்ஷேமமா இருப்பேள்.

மழை பெய்யவேண்டி பெரியவா சொன்ன படி இராமாயண பாராயணம் – ஆனால் மழை பொழிந்ததா?

1968,69 – ல திருச்சில இருந்தேன். மழையே இல்லை. சகல ஜீவ ராசிகளும் தண்ணிக்கு தவிச்சுது. ஜனங்களுக்கு லாரில தான் தண்ணி வரும். நம்ம குளிக்கறதே அதிர்ஷ்டம். மாடுகளை குளிப்பாட்ட முடியாது. என்னோட தேவைகளுக்கு கிணத்துலேர்ந்து இறச்சுப்பேன். எங்கயோ ஆழத்துல தண்ணி இருக்கும். பயிர்கள் எல்லாம் அழிஞ்சுது. எங்க பாத்தாலும் வறட்சி. கஷ்டம். நாட்டு நடப்பு நன்னா இல்லை. மக்கள் ரொம்ப அவதிப்பட்டா.

Rama Coronation C

அயோத்தியும் அப்படித்தான் இருந்தது. அதனாலதான் பரதனை சீக்கரமா அழைச்சுண்டு வரணும்னு சொன்னா. இதெல்லாம் யோசிச்சப்ப தான் இராமாயண பிரவசனம் வெச்சுக்கலாம்னு என்னோட குருவுக்கு கார்டு எழுதினேன். பண்ணுன்னு அவர் அனுக்ரஹம் செஞ்சார். அவர் சொன்னதன் பேர்ல அவரோட நேர் சம்பந்தி அரியூர் சுப்பிரமணிய கனபாடிகள் (ஹனுமான் காட், காசி) எங்க அகத்துலையே தங்கி பத்து நாளைக்கு இராமாயண பிரவசனம் பண்ண சம்மதிச்சார். அப்போ, என் அம்மா வந்திருந்தா. அவர், என்னோட அம்மா கிட்ட ‘இந்த பொண்ணை எப்படி பத்து மாசம் வயத்துல வச்சுண்டு இருந்தே, ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டேங்கறாளே ன்னு சொல்லுவார். மாமா, குழந்தைகள், வீடு, வாசல், மாடுன்னு இருந்துடுவேன். டைம் கெடச்சா ராமாயணம் படிக்க ஒக்காந்துடுவேன். அதையெல்லாம் என் பிள்ளை கிட்ட சொல்லுவேன். பின்னாடி ஆத்துல என்னைவிட வயசான மாமி இருந்தா. ‘என்ன லக்ஷ்மி உன்னை ரெண்டு நாளா பாக்கவே முடியலை’ன்னு கேப்பா. நான் படிச்சத மாமிட்ட சொல்லுவேன். மாமியும் எனக்கு நெறைய சொல்லுவா. எனக்கு இந்த நகை, நட்டு, சினிமா, வம்பு எதுலயும் ஈடுபாடு கெடயாது. எப்பவும் பகவன் நாமாவ ஸ்மரிச்சுண்டு இருப்பேன். ராமாயணத்துல என்னை அப்பிடியே பிழிஞ்ச எடம் ஒண்ணு இருக்கு, அத அப்புறம் சொல்றேன்.

ப்ரவச்சனத்தோட ஒம்பதாவது நாள் வரைக்கும் மழை இல்லை. அப்போ கனபாடிகள் பகவானை பிரார்த்தனை பண்ணிண்டு, நான் இந்த ஊரை விட்டு கெளம்பறதுக்கு முன்னாடி மழை பெய்யலேன்னா, என்னோட வாக்கு பொய், ராமாயணம் பொய், பக்தியும் பொய்ன்னு ஆய்டும். அதுக்கப்றம் நான் இராமாயண பிரவசனம் பண்றத விட்டுடுவேன்னு சத்ய பிரமாணம் எடுத்துண்டார். ஆச்சு, அவர் கெளம்பற நேரமும் வந்துது. எல்லாருக்குமே மனசு பாரமா இருந்தது. அப்போ, மேகம் கருக்க ஆரம்பிச்சுது. சில நிமிஷத்துல இருட்டாய்டுத்து. கொஞ்சமா ஆரம்பிச்ச மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துது. ராமன், தானும் பொய் இல்லை, தன்னை நம்பின பக்தனும் பொய் இல்லைன்னு நிரூபிச்சான். நான் சுவாமி முன்னாடி உக்காந்துண்டு கதறினேன். (எழுத்துரு உதவி : balhanuman.wordpress.com)

ராஜலக்ஷ்மி மாமி நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

அன்னிக்கு மட்டும் இல்லை, இன்னைக்கும் அதுதான் சத்யம். நாடு சுபிக்ஷமா இருக்கணும்னா தர்மம் தழைக்கணும். தர்மத்தை நாம ரக்ஷிக்கணும். நமக்கு நல்ல மனசு, புத்தி, சிந்தனை, வாக்கு, கார்யம் இருக்கணும்னு பகவானை ப்ரார்த்திக்கணும். எல்லார் கிட்டையும் அன்பு செலுத்தணும். ஞானம் வேணும்னு பகவான் கிட்ட கேக்கணும். அடக்கத்தோட இருக்கணும். அஹங்காரம், கோபம், துவேஷம், ஆசை, துரோகம், வக்ரம், பொய், பொறாமை, வேஷம் எல்லாத்தையும் விட்டுடணும். அப்போ பகவான் நம்மை நிச்சயமா ரக்ஷிப்பார். கை விட மாட்டார். தர்மத்தை காப்பாத்துங்கோ, அது உங்களை காப்பாத்தும். ஷேமமா இருங்கோ.

நாம எப்பவுமே சித்த சுத்தி பண்ணிண்டே இருக்கணும். எல்லாருக்கும் எப்பவும் நல்லதுதான் செய்யணும். நம்மால யாருக்கும் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அப்படித்தான் நம்ம கர்ம பலனை கொறச்சுக்க முடியும். பகவானும் ஓடோடி வந்து நம்மை ரட்சிப்பார்.

(ராஜலக்ஷ்மி மாமியை இறைவன் அருளால் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரம் நொச்சியம் சென்று நேரில் சந்தித்து அளவளாவி ஆசி பெற்றுவிட்டு வர உத்தேசித்துள்ளேன். அதன் பின்னர் அவர் கட்டி வரும் லலிதாம்பிகை கோவிலுக்கு நம் தளம் சார்பாக நிதி திரட்டி அவரிடம் அளிக்கப்படும்!).

========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதல் கோரிக்கை முற்றிலும் நெகிழ வைக்கும் ஒன்று என்றால் மிகையாகாது. தனது ஆருயிர் நண்பர்கள் படும் துயரத்தை கண்டு பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற எதையேனும் செய்தே தீரவேண்டும் என்று துடிப்பு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு, செய்வதறியாது கலங்கி, இறுதியில் இந்த கூட்டு பிரார்த்தனையாவது அவர்களுக்காக நாம் செய்வோம் என்று கருதி அதற்கு இங்கு மனு செய்திருக்கிறார். இதற்காக அவர் மெனக்கெட்டு பிரவுசிங் செண்டர் சென்று அங்கு இதை தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் என்று கருதுகிறேன். நண்பர்கள் பால் அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கும் அக்கறைக்கும் ஒரு ராயல் சல்யூட்.

அடுத்து நண்பர் விஜய். இவர் நம் RIGHTMANTRA துவங்கியதில் இருந்தே நம் நண்பர். நம் பணிகளில் வெளியே தெரியாமல் உடனிருப்பவர். சமீபத்தில் நம் ஆண்டுவிழாவிற்கு கூட மனைவியுடன் வந்திருந்தார். அடுத்த சில நாட்களில் அவர் மனைவி கீழே கூறிய விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல சான்றோர்களை தரிசித்ததால் மிகப் பெரிய ஆபத்து ஒன்று தவிர்க்கப்பட்டு இத்தோடு போனது என்று நான் கருதுகிறேன்.

==========================================================

நண்பர்கள் நலம் பெறவேண்டும்

என் பெயர் தீபா. நான் உங்கள் இணையதளத்தின் மூலம் பல தகவல்களையும் படித்தேன். இதில் பயன் பெறும் வகையில் அனைத்து தகவல்களும் உள்ளன. இதில் ஆன்மீக தகவல்களும், பிரார்த்தனை நிறைவேறிய கதை தகவல்களும், உங்கள் RIGHTMANTRA.COM தளம் வளர்ந்த கதையையும் படித்தேன். இதன் மூலம் பலர் ஆத்ம திருப்தியும் பயனும் பெற்றுள்ளார்கள் என்பதையும் அறிந்தேன். அதேபோல் உங்களுடைய பிரார்த்தனை கிளப்பில் என்னுடைய பிரார்த்தனையும் நிறைவேற பிரார்த்தியுங்கள்.

என்னுடைய பிரார்த்தனை என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர்களுக்காக.

முதல் நபர் கணேஷ் கண்ணா ஆவார். அவர் பெரும் கடன் பிரச்னையில் உள்ளார். அவருடைய கடன் பிரச்னை தீரவும், அவரும் அவர் குடும்பத்தினரும் நலமுடன் வாழவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இரண்டாவது நபர் உமாதேவி ஆவார். அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் உள்ளது. அதற்காக விரைவில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடனும் அவர் குடுமப்தினர் நலமுடனும் இருக்க பிரார்த்தியுங்கள்.

மூன்றாவது நபர் உமாராணி ஆவார். அவர் குடும்பப் பிரச்சனையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சொந்த மகனால் தான் அவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடல் நிலை சரியில்லாமலும் மனநிம்மதியில்லாமலும் இருக்கிறார். அவருடைய மகன் திருந்தவும் அவர் இனி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவும் பிரார்த்தியுங்கள்.

மேற்கூறிய இந்த மூவரின் நலனுக்காக பிரார்த்திக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதில் பிழை ஏதேனும் இருந்தால் மன்னியுங்கள்.

நன்றி
தீபா

==========================================================

எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைத் துணை நலம் பெறவேண்டும்

என் பெயர் விஜய். சுந்தர் அவர்களின் நண்பன். இந்த தளத்தின் தீவிர வாசகர்.

என் மனைவி பவித்ரா (27) உறவினர் வீட்டுக்கு செல்லும்போது அங்கு படி இடறி கீழே விழுந்துவிட்டார். கையில் வைத்திருந்த உறவினரின் குழந்தைக்கு அடிபடாமல் காப்பாற்றவேண்டி இவர் ஏடாகூடமாக விழுந்துவிட்டார். அதில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரமாக அலுவலகம் செல்ல முடியாது அவதிப்பட்டு வருகிறேன். அவர் விரைவில் பரிபூரண குணம் பெற்று வீடு திரும்ப உங்கள் அனைவரையும் பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

– விஜய் SJEC

==========================================================

நமது பொது பிரார்த்தனை :

Odisha Phailin Cyclone copy

புயல் புரட்டிப்போட்ட ஓடிஷாவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்

ஓடிஷாவில் சமீபத்தில் பைலின் புயல் தாக்கி மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வசிக்க வீடின்றி, உண்ண உணவின்றி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் ஏற்படுத்திய பாதிப்பு விரைவில் நீங்கி, அம்மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பவும், அவர்கள் சந்தோஷமாக இனி வரும் நாட்களை எதிர்கொள்ளவும் இறைவனை பிரார்த்திப்போம்.

எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களில் எந்த வித அசம்பாவிதமும் நிகழக்கூடாது

அதே போல, ம.பி.யில் நவராத்திரியை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோவில் திருவிழாவில் வதந்தி கிளப்பிவிடப்பட்டதையடுத்து நெரிசல் ஏற்பட்டு அதில் 115 பக்தர்கள் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடையவும், கோவில் மற்றும் இதர ஆலயம் எதிர்காலத்தில் இப்படியொரு அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என இறைவனை பிரார்த்திப்போம். (இது போன்று கோவில், மற்றும் புண்ணிய யாத்திரைகளுக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் அவர்கள் மறுபிறவி என்பதே இன்றி நேரடியாக முக்தி பெறுவார்கள் என்று சிறு வயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்!)

==========================================================

வாசகி தீபா அவர்களின் நண்பர்கள் கணேஷ் கண்ணா, உமாதேவி, உமா ராணி ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்ந்து அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழவும், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நண்பர் விஜய் அவர்களின் மனைவி பவித்ரா அவர்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்பவும், ஓடிஷாவில் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு முழுமையாக நீங்கி அங்கு இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பவும், கோவில் திருவிழாக்களில் எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கவும் பிரார்த்திப்போம்.

=========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

=========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : அக்டோபர் 20, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவிலின்  முதன்மை குருக்கள் சச்சிதானந்த ஸ்வாமி!

7 thoughts on “பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அருள்மழை பொழிந்த கருணைக்கடல் – Rightmantra Prayer Club

 1. ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக படம் மிக அழகாக உள்ளது,இது வரை பார்க்காத ஒன்று ,மிக்க நன்றி .

 2. இங்கு பிரார்த்தனை வேண்டி சமர்பித்துள்ள அனைவருக்காகவும் மற்றும் நம் பொது பிரார்த்தனை புயல் புரட்டிப்போட்ட ஓடிஷாவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களில் எந்த வித அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்பதர்க்காகவும் உளமார இறைவனிடம் வேண்டுவோம்..

 3. .திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திரிபுவனநாயகி திருகோயில் [எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் தீர ]:[கோயில் போன்:94435 96619].,044-27240294…..காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 16 கி.மி. தொலைவில் திருமாகறல் அமைந்துள்ளது. …இங்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்
  தினமும் வழங்கபடுகிறது.

  இங்கு திங்கள் கிழமை தரிசனம் செய்து ,திருஞானசம்பந்தரின் இந்த திருகோயில் பதிகம் பாடி [48நாட்கல்] வர எலும்பு ,எலும்பு சம்பந்தமான நோய்கள் உடனே குணமாகும் …..

  திருச்சிற்றம்பலம்

  விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
  மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
  கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
  செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

  கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
  மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
  இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
  அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

  காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
  மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
  தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
  பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

  இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
  மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
  கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
  நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.

  துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
  மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
  வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
  நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

  மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
  இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
  மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
  உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.

  வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
  மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
  கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
  ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

  தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
  மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
  பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
  பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.

  தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
  பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
  சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
  ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.

  காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
  மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
  நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
  ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

  கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
  அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
  மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
  உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.
  திருச்சிற்றம்பலம்

 4. சுந்தர்ஜி
  தேடி தேடி பார்த்து நமது பிரார்த்தனை கிளபிற்கு தலைமை தாங்கும் ஒவ்வொரும்
  முத்துகளுக்கும், மணிகளுக்கும் தேர்ந்துஎடுத்த உங்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
  இந்தமாதிரி நிகழ்சிகள் படிக்கும்போது நாமும் இந்தமாதிரி மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என மனது துடிக்கிறது.

 5. பெரியவர்கள் ஆதரவும், பெரியவாவின் ஆசியும் நம் தளத்திற்கு எப்பொழுதும் உண்டு.

  நம் தள வாசகி தீபா அவர்களின் நண்பர்கள் கணேஷ் கண்ணா, உமாதேவி, உமா ராணி ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்ந்து அவர்கள் விரைவில் நலமுடன் வாழவும், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரி பவித்ரா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும், ஓடிஷாவில் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு முழுமையாக நீங்கி அங்கு இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பி மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

 6. சுந்தர்ஜி,

  எனக்கு அந்த லலிதாம்பிகையே நேரில் பார்த்த மாதிரி இருக்கு. எனக்கு அவா மடியில் படுத்து கொண்டு அழ வேண்டும் போல் உள்ளது. அவர்கள் இந்த வார பிரார்த்தனைக்கு கிடைத்தது மஹா பெரியவாளின் அருள் அன்றி வேறு எதுவும் இல்லை.அவருக்கு என்னுடைய அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  மஹா பெரியவா மற்றும் லலிதாம்பிகையின் அருளலால்
  வாசகி தீபா அவர்களின் நண்பர்கள் கணேஷ் கண்ணா, உமாதேவி, உமா ராணி .விஜய் அவர்களின் மனைவி பவித்ராஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்ந்து விடும்.

 7. சுந்தர்ஜி

  இந்த வார பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்கும் திருமதி ராஜலக்ஷ்மி விட்டல் அம்மா அவர்களை வணங்குகிறேன். சாட்சாத் ஸ்ரீ மகா பெரியவர் அவர்களின் நேரடி பிரதிநிதி போல இயங்கிவரும் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இந்த வாரம் ஸ்ரீ மகா பெரியவா அவர்களே திருமதி ராஜலக்ஷ்மி அம்மாவின் உருவில் தலைமை ஏற்பதாக எண்ணி மகிழ்கிறேன்.

  அம்மா அவர்களின் ஆசியையும் அவரின் அறிவுரைகளையும் நமக்கு பெற்றுதந்த தங்களுக்கும், அம்மா அவர்களுக்கும் நன்றி கூறி இந்த வார பிரார்த்தனைகளுக்கு எப்போதும் போல் அனைவரும் வேண்டுவோம். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *