ஐந்து மணிநேரம் போனதே தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம் தான். பலப் பல வருடங்களுக்கு பிறகு போவதால் (கிட்டத்தட்ட 30 வருடங்கள்) “இதோ பகவானை நெருங்கிவிட்டோம். இதோ இன்னும் சற்று நேரத்தில் தரிசனம் கிடைத்துவிடும்” என்கிற எதிர்பார்ப்பிலேயே நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
கடைசியில் ஒரு வழியாக ஆயிரம் சூரியனின் ஒளிக்கு ஒப்பான ஸ்ரீனிவாசனின் தரிசனம். ஏதோ ஏழுமலையானே நேரில் நிற்பது போன்ற ஒரு அனுபவம். ஒரு சில வினாடிகள் தான். ஆனாலும் திவ்ய தரிசனம்.
ஏழுமலையான் தரிசனம் முடிந்ததும் திருமலையில் சுற்றிப் பார்க்கவேண்டிய இதர பகுதிகளை பார்த்துவிட்டு இறுதியில் நாராயணகிரி வந்தோம். இங்கு தான் விஷ்ணு பாதம் உள்ளது. திருமலைக்கு வரும்போது ஸ்ரீமன் நாராயணன் முதன் முதலில் இங்கு தான் காலடி வைத்தாராம். ஒரு சிறிய மலையில் உச்சியில் இது உள்ளது. இங்கிருந்து பார்த்தால் திருமலையின் மொத்த அழகும் தெரியும்.
ஏழுமலையானின் பாதத்தில் எனது சிரசை வைத்து வணங்கி, அவன் அருள் வேண்டினேன்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்கிறார்களே… பார்க்கலாம் என்ன திருப்பம் வருகிறது என்கிற நம்பிக்கையுடன் சென்னை திரும்பினேன். மிகப் பெரிய ஒரு மாற்றத்தை, ஏற்றத்தை மனம் கற்பனை செய்து வைத்திருந்தது. ஒரு பெரிய அதிசயம் என் வாழ்வில் நடக்கப்போகிறதுஎன்று திடமான நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது. என் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்பணித்து உழைத்து வந்த ஒரு விஷயத்தில் எனக்கெதிரான சிலரின் சூழ்ச்சி வெற்றி பெற்றதால் எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் கிட்டியது. ஏமாற்றம் மட்டுமல்ல அவமதிப்பும் சேர்ந்து கிடைத்தது. ஜூலை 14 அன்று நண்பர்கள் பலர் ஒரு முக்கிய நிகழ்வுக்கு என்னை விட்டுவிட்டு செல்ல, நான் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்தேன். உலகமே இருண்டுவிட்டது போன்ற ஒரு உணர்வு. என் ஏமாற்றத்தை பரிதவிப்பை வெளிக்காட்ட முடியாது தவித்தேன். (ஆனா இப்போ அதை நினைத்தால் சிரிப்பு தான் வருது. இதுக்காகவா நாம கவலைப்பட்டோம்? என்று. ஏனெனில் அப்போதிருந்த மனநிலையில் அதுவே எனக்கு பெரிய விஷயமாக பட்டது!)
திருப்பதி போய்வந்தால் திருப்பம் ஏற்படும் என்றார்களே இப்படி நான் குப்புற விழும்படி ஆகிவிட்டதே என்று வேதனையில் துடித்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு நீங்கள் வருகிறீர்கள். வந்தவுடன் உங்களை நிலைகுலைய வைக்கும் வண்ணம் சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? சற்று யோசித்து பாருங்கள்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. இது அவன் ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு கிடைக்கும் தோல்வி. அவன் கொடுக்கும் தோல்வி. இப்போது நாம் வேதனைப்பட்டாலும் நிச்சயம் அதில் காரணமிருக்கும். எனவே நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடுவோம். அவன் தரும் தோல்வியை மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்வோம் என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். எனக்கு வேறு வழியும் இல்லை.
அப்போதெல்லாம் நண்பர்கள் மத்தியில் என்னுடைய G-MAIL STATUS MESSAGE மிகவும் பிரபலம். ஏதாவது வித்தியாசமான பொன்மொழிகளை அடிக்கடி போட்டுக்கொண்டே வருவேன்.
இந்த திருமலை ரிட்டர்ன் ஏமாற்றத்திற்கு பிறகு நான் அளித்த G-MAIL ஸ்டேட்டஸ் மெசேஜ் என்ன தெரியுமா?
ஸ்ரீமன் நாராயணனின் பாதத்தை போட்டு, “மனிதர்கள் தரும் வெற்றியை விட, இறைவா நீ தரும் தோல்வியை 1000 மடங்கு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்!” என்பது தான்.
இதைப் பார்த்தவுடன் சிலரின் எகத்தாளம் இன்னும் அதிகமானது. ஆனால் நான் அது பற்றி கவலைப்படவில்லை.
அவன் தரும் தோல்வி இது. நிச்சயம் மனிதர்கள் தரும் வெற்றியை விட இறைவன் தரும் தோல்வி ஆயிரம் மடங்கு பவித்திரமானது. அர்த்தமிக்கது. போற்றத்தக்கது.
மனிதர்கள் தரும் வெற்றில் சுயநலம் இருக்கும். சூழ்ச்சி இருக்கும். எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இறைவன் தரும் தோல்வியில் கூட மகத்துவம் இருக்கும்.
அவன் தந்த தோல்வியை அமைதியுடன் ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து சில நாட்களில் தி.நகரில் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் சென்று மீண்டும் இறைவனை தரிசித்தேன்.
ஆண்டுகள் உருண்டுவிட்டன. அன்று (2011) அவன் தந்த தோல்வி, இன்று (2013) என்னை எங்கே ஏற்றியிருக்கிறது தெரியுமா?
நமது ஆண்டுவிழாவில் நானே எதிர்பார்க்காமல் திரு.சுவாமிநாதன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் “திரு.சுந்தரின் மகத்தான சேவையை பாராட்டி இந்த பொன்னாடையை அவருக்கு இந்த மேடையில் அணிவிக்கிறோம்” என்று கூறி நம்மை மேடையில் கௌரவித்தார்கள்.
எதிர்பாராத இந்த செயலால் ஒரு கணம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். அல்லும்பகலும் ரைட்மந்த்ராவுக்காக உழைத்ததற்கு இறைவன் கொடுத்த வெகுமதி இது.
இறைவனுக்கு ஒரு கணம் நன்றி கூறி, “இந்த கௌரவம் எனக்கு கிடைப்பதல்ல. நம் தளத்திற்கு கிடைப்பது. என் வாசகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. இது சாத்தியப்பட அவர்கள் தான் காரணம்!” என்று கூறி பார்வையாளர்களுக்கு நன்றி கூறினேன்.
தொடர்ந்து பார்வையாளர்கள் பலர், “சுந்தர், உங்க அப்பா அம்மாவை மேடைக்கு கூப்பிடுங்க….. உங்க அப்பா அம்மாவை மேடைக்கு கூப்பிடுங்க…..” என்று குரல் எழுப்பினர். வேறு வழியின்றி அவர்களை மேடைக்கு அழைக்க, நம் வாசகர்கள் அவர்களை மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
என் பெற்றோருக்கு இது வரை நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. “இப்படி ஒரு பிள்ளையை பெற்றோமே” என்று அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கும்படியான செயல்கள் எதையும் இதுவரை செய்யவில்லை. (இனி தான் ஏதேனும் செய்யவேண்டும். அதற்கு பிறகு தான் என் மூச்சு நிற்கும்.)
ஆனால் மேடையில் வைத்து அனைவரின் முன்பும் என் பெற்றோரின் கால்களில் விழும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கண்கள் கசிந்தன.
என்னென்னவோ எங்க அப்பா அம்மாவுக்கு நான் செய்யனும் என்று நினைத்தேன். ஆனால் எதையுமே இது வரை என்னால் செய்யமுடியவில்லை. அட்லீஸ்ட் இப்படி ஊரறிய அவர்கள் காலில் விழ முடிந்ததே… என்று என்னை தேற்றிக்கொண்டேன்.
2011 ல் அவன் அந்த தோல்வியை எனக்கு தந்திருக்காவிட்டால்…. இன்று ரைட்மந்த்ரா என்னும் தளம் இல்லை. அதன் மூலம் எனக்கு கிடைத்த உங்களை போன்ற தரமான வாசகர்கள் இல்லை. மன அமைதி இல்லை. ஆலய தரிசனம் இல்லை. உழவாரப்பணி இல்லை. அதன் மூலம் சம்பாதிக்கும் புண்ணியங்களும் இல்லை.
இன்று எனக்கு எது இருக்கிறதோ இல்லையோ சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கிறது. மரியாதை இருக்கிறது. மன அமைதி இருக்கிறது. அல்லும் பகலும் தூக்கத்தை தொலைத்து உழைத்தாலும் அதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது. இங்கு நான் மனிதர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. அவன் விருப்பப் படியான ஒரு பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பதால் அவன் அங்கீகாரத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். அது நினைப்பதைவிட அதிகமாகவே நமக்கு கிடைத்துவருவது நீங்கள் அறிந்தது தானே?
இப்போது சொல்லுங்கள்… இறைவன் தரும் தோல்வி மனிதர்கள் தரும் வெற்றியை விட 1000 மடங்கு போற்றத்தக்கது தானே?
எனவே அடுத்த முறை ஏதேனும் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது உங்களுக்கு எதிர்பாராதது ஏதேனும் நடந்தால் அவன் கவனம் உங்கள் பக்கம் திரும்பிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லது நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சொன்னால் இது புரியாது. உணர்ந்தால் தான் புரியும்.
மீண்டும் சொல்கிறேன் : “மனிதர்கள் தரும் வெற்றியை விட, இறைவா நீ தரும் தோல்வியை 1000 மடங்கு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்!”
(மேலே கூறிய திருமலை அனுபவத்தை நமது ஆண்டுவிழாவில் மேடையில் பேசும்போது கூறினேன் என்பது குறிப்பிடத்தக்கது! இந்த தளத்தில் என் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை கூடுமானவரை தவிர்க்க நினைக்கிறேன். இருப்பினும் இந்த பதிவின் முக்கியத்துவம் கருதி இந்த எளியவன் புகைப்படத்தை வெளியிட்டுக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!!)
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=====================================
சுந்தர்ஜி,
புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலை மாலவனின் திருவடி தரிசன பாக்கியத்தை இந்த காலை வேளையில் தரிசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி. கோவிலுக்கு சென்றால் உடனே பலன் எதிர்பார்க்கும் அனைவர்க்கும் ஒரு படிப்பினை தருவதுபோல் உள்ளது இன்றைய பதிவு. உங்கள் ஒருவர்க்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக நம் அனைவர்க்கும் ரைட் மந்திரா என்ற வெற்றி கிடைத்திருக்கிறது. எல்லாம் அவன் செயல். நன்றி
நமது ஆண்டு விழாவில் தாங்கள் பேசியதை விட பதிவில் படிக்கும் போது மிகவும் சுவாரசியமாக உள்ளது .உங்கள் மனதில் பழைய நண்பர்கள் கொடுத்த மனவருத்தத்தை மறந்து விடுங்கள்.
நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம்.rightmanthra சுந்தர் எங்களுக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி .
\\\ இறைவன் தரும் தோல்வி மனிதர்கள் தரும் வெற்றியை விட 1000 மடங்கு போற்றத்தக்கது .\\\
-நட்புடன்
மனோகர்
ஸ்ரீவாரி பாத தரிசனம் கோடி புண்ணியம். நன்றி சுந்தர்.
மனிதர்களாகிய நாம் நம்முடைய இந்த பிறப்பை மட்டும்தான் பார்க்கிறோம், அதற்கேற்றாற்போல் சிந்திக்கிறோம். ஆனால் இறைவன் நம்முடைய பல பிறவிகளை கணக்கில்கொண்டு அதற்கான பலாபலன்களை தருகிறார். அதை புரிந்துகொண்ட இறைவனை பிரார்த்திப்பது நலம்.
படங்கள் மிக அருமை. ராதாமணி மேடம் சொன்னதை வழிமொழிகிறேன் விஷ்ணு பாதம் பார்த்தது சந்தோசம். அந்த தோல்வி தான் தற்போதைய வெற்றிக்கு 100% காரணம். அதனால் தான் எங்களுக்கு உங்களை மாதிரியே ஒரு நல்ல மனதும் எல்லோருக்கு உதவும் குணமும் எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்கும் மனமும் அமைந்தது. நீ நடந்த பாதையை திரும்பி பார் என்று சொல்வார்கள். நீங்கள் அடிக்கடி நினைப்பது போல தெரிகிறது.
ஆனால் அதுவும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு ஒரு அடிக்கும் தூண்டுகோலாக அமைகிறது.
நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டு விழா மிக பெரிய மண்டபத்தில் நடக்க வேண்டும். திரளான வாசகர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் ஆவல்.
சுந்தர் ஜி
நிஜமான உண்மை சார்
அடி பட்டவங்கலுக்கு தான் தெரியும் அதனுடைய வலி வேதனை சார்… அது அப்ப இப்போ தோல்விக்கும் சே து வெற்றி கொடி கட்டிகிட்டு இருக்கேங்க சார்..இறைவன் தரும் சோதனையலும் ஒரு பலன் கண்டிப்பா இருக்கு சார்
உணர்வு பூர்வமான பதிவு சார்
நன்றி
“வாழ்க்கை என்பது கால் பந்து ஆட்டத்தை போல..நீங்கள் ஒரு கோல் அடிப்பதற்கு பத்து பேர் உதவவும்..பதினோரு பேர் எதிர்க்கவும் தான் செய்வார்கள்” – இணையத்தில் படித்தது. உண்மைதான்
நமக்கு உதவும் நபர்களை விட, விமர்சிக்கும் நபர்கள் அதிகமாகவே இருப்பார்கள். நாம், நம்மை எதிர்த்தவர்களை/விமர்சித்தவர்களை தாண்டியே நம் லட்சியத்தை அடையமுடியும். அதற்க்கு நீங்கள் ஒரு உதாரணம் சுந்தர் சார்..இதுக்கே அசந்துட்டா எப்படி..இன்னும் எவ்வளவோ இருக்கு சுந்தர் சார் உங்களை பாராட்டவும்..புகழவும்..
நன்றி
திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்க உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதே போல் உண்மையில் உங்களுக்கு அன்று ஏற்பட்ட தோல்வியால் தான் நீங்கள் சென்று கொண்டு இருந்த பாதை எதோ தவறாக தெரிகிறதே என்று நீங்கள் பாதையை மாற்றி உள்ளீர்கள்,அன்று நீங்கள் பாதையை மாற்றும் போது உங்களோடு ஒரு சில நண்பர்கள் தான் இருந்தோம் ,ஆனால் கடவுளுக்கு நன்றி அப்படி உங்களோடு வந்து இருக்காவிட்டால் நாங்களும் பத்தோடு பதினொன்றாக இருந்து இருப்போம், ஆனால் இன்று நாங்கள் கனவிலும் யோசிக்காத உழவார பணி, மிக பெரிய சாதனையாளர்களின் சந்திப்பு எல்லாம் சாத்தியமாயிற்று ,இதற்க்கு முன் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால் போதும் என்று தன இருந்தேன் ,இப்பொழுது தான் இறைவனை வழிபட நிறைய பேர் இருகிறார்கள் அனால் அவனுடைய இருப்பிடத்தை சுத்தம் செய்ய தான் குறைந்த அளவில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன் .
அதே போல் முன்பு நீங்கள் செய்து கொண்டு இருந்தது எதற்கும் உபயோகம் இல்லாமல் சும்மா ஒரு entertainment காக தான் இருந்தது ,அதனால் தான் நீங்கள் மாறிய பொது நிறைய பேர் ஒதுங்கி விட்டார்கள் ,ஆனால் ரைட் மந்த்ரா என்பது ஒரு தேடுதலோடும் சாதிக்கும் மனநிலையோடு இருக்கும் அனைவரும் ஒன்று சேரும் சங்கமம் இது
“எல்லாம் நன்மைக்கே”அப்படிங்கிறது எவ்வளோ பெரிய வார்த்தை. நீங்கள் கூறியிருப்பது சிறந்த உதாரணம் …
சுந்தர்ஜி தயவுசெய்து மன்னிப்பு எல்லாம் கேட்காதிர்கள். எங்களுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. இந்த தளத்தை உருவாக்க நீங்கள் உழைத்த உழைப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கண்டிப்பாக தங்களை நாங்கள் இன்னும் முறையாக கௌரவிக்கவில்லை என்ற குற்றஉணர்வு எங்களிடையே அதிகமாக உள்ளது. மன்னிப்பு நாங்கள் தான் கேட்கவேண்டும்.
நீங்கள் உங்கள் தாய் தந்தை காலில் விழும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு அய்யனின் இந்த வாக்கு தான் என் நினைவில் வந்தது ..
<<
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை ச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
<<
பல்லாண்டு வாழ்க சுந்தர் ..தங்கள் தொண்டு செழிக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
நீங்கள் இந்த பதிவில் கூறியது முற்றிலும் உண்மை தான் சுந்தர்
2009ல் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது — என் வாழ்கையை தலை கீழ் ஆக்கிய விபத்து அது .. ஓர் இரவில் , மேடவாக்கம்- சோளிங்கநல்லூர் சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொழுது – எங்கிருந்தோ ஒரு நாய் குறுக்கே வந்து விழுந்தது ..இருட்டில் அதை கடைசி நொடியில் தான் கவனித்தேன் … நாயை காப்பாற்ற நான் வண்டியை நிறுத்த முயல , கீழே விழுந்து பலத்த அடி …… என்னை முடக்கி போட்டது ….வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்பு பறிபோனது (இன்று வரை அந்த வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை ).
அறுவைசிகிச்சை செய்ய நேரிட்டது … பெரும் பொருள் இழப்பு … மன உளைச்சல் … உடல் வலி … ஒரு முறை என் அம்மாவிடம் "நான் யாருக்கும் இது வரை எந்த கெடுதலும் செய்யலையே அம்மா …..எனக்கு ஏன் இப்படி " என்று சொல்லி அடக்க முடியாமல் அழுதேன் … அந்த தூக்கமில்லா தருணங்கள் என் வாழ்கையை மாற்றியது … நிறைய புரிதல் ஏற்பட்டது ..எழுந்து வழக்கம் போல் நடமாட பல மாதங்கள் ஆகின .. ஆனால் சில மாதங்களிலேயே எனக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது …. குடும்பத்தினர் திரும்பவும் விபத்தை பற்றி கேட்கும் போது.. " சோளிங்கநல்லூர் சிக்னலில் அந்த இரவு நேரத்தில் ஒரு லாரி அத்து மீறி என் மீது வந்து மோதியிருக்க வேண்டியது …இறைவன் பைரவர் ரூபத்தில் என் குறுக்கே வந்து என்னை காப்பாற்றியுள்ளான் " என்று சொல்வேன் ….. அந்த விபத்தினால் தான் நான் வெளிநாடு செல்லவில்லை –அதனால் வீட்டில் எனக்கு பெண் தேட ஆரம்பித்தனர் –நானும் ஒப்புக்கொண்டேன் ..திருமணம் செழிப்பாக நடந்தேறியது (நீங்கள் கூட வருகை புரிந்து வாழ்த்து தெரிவித்தீர்கள்).
இன்று எனக்கு ஒரு தங்கமான ஆருயிர் மனைவி..அழகான எழில் கொஞ்சும் குழந்தை …பிரச்சனைகள் ஆயிரம் இருந்தாலும் வீட்டில் இவர்கள் இருப்பதால் ஒரு உந்துதலோடு போராட முடிகிறது … ஒரு வேலை விபத்து நடக்கா விட்டால் — வெளிநாடு சென்று இருப்பேன்– சில வருடங்கள் அங்கு இருந்துருப்பேன் ..பணம் வந்துருக்கும் ..ஆனால் இப்படி ஒரு இல் வாழ்க்கை அமைந்திருக்காது ….
இறைவனுக்கு தெரியும் — யாருக்கு எதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று … He IS A MASTER CRAFT DESIGNER
கேட்பது என் உரிமை ..கொடுக்க வேண்டியது அவன் கடமை:பக்தியின் கடைநிலை.
(கடவுள் பக்தி இருக்கிறதே என ஏற்கலாம்)
கேட்பது என்கடமை…கொடுப்பது அவன் உரிமை…அடுத்த நிலை.
எதை கேட்பது…அவனுக்கு தெரியாதா ?? நிச்சயம் நிறைய கொடுப்பான்… அதற்க்கு அடுத்த நிலை..
எதுவும் கேட்கமாட்டேன்..உன் இஷ்டம்…அடுத்த நிலை…
உனக்கு என்னவேண்டும்…என்னையே தந்து விட்டேன் உயர்நிலை.
திருப்பதி அனுபவம் அத்தகையதுதான்.