Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

print
“ஹீரோ தண்ணியில்லா காட்டுக்கு வருகிறார். (நான் சொல்றது அத்தியாவசியமான தண்ணியை பத்தி!). அந்த கிராமத்து குழந்தைகள் கல்வியறிவு இல்லாமல் இருப்பதையும், இளைஞர்கள் மதுவால் சீரழிவதையும் பார்க்கிறார். பொங்கி எழுகிறார். புரட்சி செய்கிறார். பள்ளிக்கூடங்கள் திறக்கிறார். இளைஞர்களை திருத்துகிறார். கிராம மக்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய சக்தியாக எழுகிறார்…!”

சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட இதை தொன்று தொட்டு பார்த்து பார்த்து கைதட்டி, விசிலடித்து, ஆனந்தப்படுவது நம் மக்களின் வழக்கம். ஆனால் நிஜத்தில் ஒருவர் இப்படி செயல்படுவது சாத்தியமா?

ஆனால் தர்மபுரியை சேர்ந்த உதவி கல்வி அதிகாரி ஒருவர் ஒருவர் இது போல ஒரு சாதனையை நிகழ்த்தியிருப்பது தெரியுமா? (சினிமாவில் ஹீரோவுக்கு உள்ள சௌகரியங்கள், டேக்குகள் நிஜத்தில் இல்லை என்பது தெரியும் தானே?)

மிழகத்தில் உழைக்கும் வர்க்கத்தினரும் இளைய சமுதாயத்தினரும் மதுவின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பதை முந்தைய பிரார்த்தனை பதிவு ஒன்றில் நாம் வேதனையோடு குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். நம் பிரார்த்தனை இறைவனை எட்டியிருக்கும் போல.

‘எண்ணங்களின் சங்கமம்’ நிறுவனர் திரு.ஜே.பி. (இவரைப் பற்றியும் இவரது மகத்தான பணிகள் பற்றியும் விரைவில் சொல்கிறேன்!) அவர்களுடன் ஞாயிறு அன்று மாலை பேசிக்கொண்டிருந்த போது தர்மபுரியில் தங்கவேல் (44) என்கிற தனிமனிதர், மதுவுக்கு எதிரான போரில் ஒரு கிராமத்தில் இளைஞர்களை ஈடுபடவைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றும் அது குறித்த செய்தி அன்றைய தினமலர் நாளிதழில் வெளியாகியிருப்பதாகவும் நம்மை பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

தேசியம், தெய்வீகம், தன்னம்பிக்கை ஆகியவற்றை இணைத்து நடத்தப்படும் நமது ஆண்டுவிழாவில் “கிராமப்புற மறுமலர்ச்சி” என்கிற ஒரு உன்னதமான செக்மென்ட் மிஸ்ஸாகிறதே என்று நாம் கவலைப்பட்ட நேரத்தில் நமக்கு திரு.தங்கவேல் அவர்களை பற்றிய செய்தி கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

திரு.ஜே.பி. அவர்களிடம் “இதற்காகத் தான் சார்…. இப்படிப்பட்ட ஒருவருக்காகத் தான் சார்… காத்திருக்கிறேன். சென்ற வாரம் கூட தமிழகமே போதையின் பிடியில் சிக்கி தள்ளடிக்கொண்டிருக்கும் அவலத்தை பற்றி குறிப்பிட்டு ‘மது ஒழிப்பு’ குறித்து எங்கள் பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை வைத்தேன். இதோ அந்த பணியில் தனிமனிதனாக ஈடுபட்டு பட்டையை கிளப்பி வரும் ஒருவரை இறைவன் உடனே அடையாளம் காட்டியிருக்கிறான்” என்றேன் உற்சாகத்துடன்.

திரு.தங்கவேல்

அடுத்து உடனடியாக திரு.தங்கவேல் அவர்களை தொடர்பு கொண்டு பேசி, நமது விழாவை பற்றி எடுத்துக்கூறி நிச்சயம் சென்னை வந்து விழாவில் கலந்துகொண்டு நாம் அளிக்கும் விருதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மிக்க மகிழ்ச்சியுடன் தங்கவேல் ஒப்புக்கொண்டுள்ளார்.

அடிப்படை வசதியற்ற அந்த கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் படிக்க நம் தளம் சார்பாக சோலார் விளக்குகள் விழாவின்போது வழங்கப்படும். எண்ணிக்கையை இன்னும் முடிவு செய்யவில்லை. (இதற்கு முன்பு நாம் கோவை மாவட்டம் இராமம்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு இதே போன்று சோலார் விளக்குகளை வழங்கியியது நினைவிருக்கலாம்.)

மேற்படி சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பும் நம் வாசகர்கள் simplesundar@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது மாலை 7.00 மணிக்கு மேல் 9840169215 என்கிற என்னை தொடர்புகொள்ளலாம்.)

‘எண்ணங்களின் சங்கமம்’ நிறுவனர் திரு.ஜே.பி. சமீபத்தில் சென்றபோது…

இறுதியில் திரு.தங்கவேல் அவர்கள் கூறியிருக்கும் வார்த்தைகளை கவனியுங்கள்….

“விதைப்பவர் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை!!”

மேற்படி மேற்கோளை மையமாக வைத்து அதையே தலைப்பாக கொண்டு நம் தளத்தில் பதிவு ஒன்றை நாம் அளித்திருக்கிறோம் தெரியுமா?

(கீழ்கண்ட தினமலர் செய்தியில் இடம்பெற்றிருந்த ஒரு சிலர் பிழைகளை திரு.தங்கவேல் சுட்டிக்காட்டினார். அவற்றை திருத்தி அளித்திருக்கிறோம்.)

தனி ஒரு மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்று கருதுபவர்களுக்கு தங்கவேல் சவுக்கடி தந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

ஓவர் டு தினமலர்.

===============================================
மதுவை துறந்த தர்மபுரி இளைஞர்கள்

தமிழகத்தில், அதிக அளவு மது விற்பனையாகும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பேபின்னமருதஹள்ளி கிராம இளைஞர்கள், இனி சாகும் வரை, மதுபாட்டில்களை தொடுவதில்லை என, உறுதி எடுத்துள்ளனர். இந்த சம்பவம், போதையில் தள்ளாடும் அந்த மாவட்டத்துக்கு அதிர்ச்சியையும், போதைக்கு எதிரானவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சிக்கு அருகில், புளிஞ்சங்கொட்டா, பொந்தன் கொட்டா என்ற இரண்டு கிராமங்களுக்கு இடையில் உள்ளது, பேபின்னமருதஹள்ளி என்ற சிறிய கிராமம்.

மாறியது எப்படி?

ஒரு பக்கம், நாகாவதி அணையாலும், மூன்று பக்கம், காடுகளாலும் சூழப்பட்டுள்ள அந்த கிராமத்தில், மொத்தமாக, 450க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களில், 200 பேர், ஓட்டுரிமை பெற்றவர்கள்.அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், அரசியல் கட்சிகளும், அந்த ஊரை வெறும் ஓட்டு வங்கியாகவே, பயன்படுத்தி வந்துள்ளன. இந்தியாவின் எந்த வரைபடத்திலும் இல்லாத அந்த ஊரை, இன்று தமிழகத்துக்கே எடுத்துக்காட்டாக திகழும், கிராமமாக மாற்றி வருகிறார், அங்குள்ள உதவி கல்வி அதிகாரி, தங்கவேல்.

கடந்த, 2009ல், தங்கவேலு அந்த பகுதிக்கு சென்றபோது, குழந்தை திருமணம், போதைக்கு அடிமை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே அந்த கிராமம் அறியப்பட்டிருந்தது. படிப்பறிவில்லாத அந்த கிராமத்தினர், பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளில், கட்டுமான பணிகளிலும், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களில், சாயப்பட்டறைகளிலும், கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.

போதிய விழிப்புணர்வு இல்லாததால், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் இருந்தனர். ஊரில், வயோதிகர், கர்ப்பிணி பெண்களை தவிர்த்து வேறு யாரும் இருப்பதில்லை. அப்படி ஒரு குக்கிராமமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலைகீழ்.

அதை தங்கவேல் விவரிக்கிறார்:

பேபின்னமருதஹள்ளிக்கு, பள்ளிக்கூடம் வந்தால் அந்த பகுதி மக்களின் வாழ்வில், ஒரு மாற்றம் வரும் என நினைத்தேன். முதலில், ஆரம்ப பள்ளி அமைப்பது குறித்து, அந்த பகுதி மக்களிடம் விவாதித்தேன். குழந்தைகளை படிக்க வைப்பதற்கு, அவர்களிடம் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும், பண உதவி அளிக்க முன்வந்தனர்.

பள்ளி உதயம்:

தங்களுக்கு கல்வியறிவு இல்லை என்றாலும், தங்கள் குழந்தைகளுக்காவது படிப்பறிவு அளிக்க வேண்டும் என்பதில், அவர்களின் ஆர்வம் மெச்சும்படியாக இருந்தது. இவ்வாறு தங்கவேல் கூறினார்.

அங்கு உடனடியாக, ஆரம்ப பள்ளி துவங்க அனுமதி கிடைக்கவில்லை. இருந்தாலும், மனம் தளராத தங்கவேலு, கல்வி துறை மட்டுமின்றி, அரசு துறைகளின் அத்தனை படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கினார். ஒருவழியாக, அனுமதி கிடைத்தது. பள்ளி கட்டுமான பணிகளில், ஊரே ஒன்று கூடி சேர்ந்து உழைத்து, 2010, ஆகஸ்ட் மாதத்தில், பள்ளி திறக்கப்பட்டது. உடனே, 120க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளியில் சேர்ந்தனர். முதன்முதலாக, மாணவர்கள் படிக்கும் சத்தத்தை அந்த கிராமம் கேட்டது. அந்த சத்தத்தில், ஆண்டுக்கணக்கில் ஊரையே சூழ்ந்திருந்த அறியாமை இருட்டு, மெல்ல மெல்ல விலகியது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற, கட்டாயம் வந்த போது, பேபின்னமருதஹள்ளி கிராமத்து மக்கள் எல்லாரும், குடும்பத்துக்கு, 200 ரூபாய் வீதம், நன்கொடை அளித்தனர்.அடுத்த ஆண்டில், மாணவர் சேர்க்கை அதிகமான போது, மேலும் அதிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஓய்வு பெற்ற தமிழாசிரியரான, தன் சித்தப்பாவையே, பணிக்கு அமர்த்தினார், தங்கவேல். இன்று, 38க்கும் மேற்பட்ட குழந்தைகள், அதில் படித்து வருகின்றனர்.

பள்ளியைத் தாண்டி, அந்த பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்த நினைத்தார், தங்கவேலு. அதற்காக சங்கம் அமைக்க முடிவு செய்தார். சமூக ஆர்வலர்கள் பலரையும், அந்த பகுதிக்கு வரவழைத்து, பேச வைத்தார். விளைவு, இப்போது, பேபின்னமருதஹள்ளியில், ‘மருதம் இளைஞர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில், இளைஞர்களுக்கான அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. அதில், உறுப்பினர்களாக உள்ள, இளைஞர்கள், ‘இனிமேல் மது அருந்த மாட்டோம்’ என, உறுதி எடுத்துள்ளனர்.

போதையால் தள்ளாடும் ஊர் என, பெயரெடுத்த பகுதியில், இன்று மதுபாட்டில்களை உடைத்து போடும் அளவுக்கு, இளைஞர்கள் துணிந்து விட்டனர்.

இதுகுறித்து, தங்கவேல் கூறுகையில், ‘‘இளைஞர்களின் சூழ்நிலையே, அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால், தன்னை சுற்றி இருப்பவர்களையும், நல்வழிப்படுத்துவர். ஏனெனில், விதைப்பவர் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை,” என்றார்.

(நன்றி : தினமலர்.காம்)
===============================================

[END]

11 thoughts on “சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

  1. திரு.தங்கவேல் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் பிறருக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்து காட்டி இருக்கிறார். ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம் எவ்வளவு முக்கியம் என்று கருதி அதை நிறைவேற்ற எவ்வளவு உழைத்திருப்பார் என்று என்னும் பொழுது கண்ணீர் தான் வருகிறது.

    வாழ்க திரு.தங்கவேல், வளர்க அவர் தொண்டு.

  2. திரு.தங்கவேல் சார் அவர்கள் எடுத்த முயற்சியில் மனம் தளராமல் வெற்றி பெற்றுள்ளார்.
    பள்ளி துவங்க அந்த ஊர் மக்கள் காட்டிய ஆர்வமும் உதவியும் பாராட்டுவதற்கு உரியது.
    உதவி கல்வி அதிகாரிக்கே பள்ளி துவங்க அனுமதிக்கு போராட வேண்டி உள்ளது.
    மாணவர்கள் படிக்கும் சத்தத்தை அந்த கிராமம் கேட்டது. அந்த சத்தத்தில், ஆண்டுக்கணக்கில் ஊரையே சூழ்ந்திருந்த அறியாமை இருட்டு, மெல்ல மெல்ல விலகியது. இந்த வரிகளை படிக்கும் போது கண்ணீர் வழிந்தது.
    பள்ளியும் அவர் அமைத்த இளைஞர் நற்பணி மன்றமும் இன்னும் பல நற்செயல்கள் செய்து அவர் பெயரை நிலை பெற செய்ய வேண்டும்.
    வளர்க அவர் தொண்டு. தன்னலம் கருதாத அவர் தொண்டை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றி சார். வணக்கம்.

  3. தமிழ் நாட்டில் மொத்தம் 2851 மேல்நிலை பள்ளிகள் ,மற்றும்
    உயர் நிலை பள்ளிகள் 2739 ம் ,டாஸ்மார்க் கடைகள் மொத்தம் 6823 உள்ளன இந்த எண்ணிக்கையை குறைக்கவும் ,பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் திரு, தங்கவேல் அவர்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது …
    அந்த பணியில் தனிமனிதனாக ஈடுபட்டு பட்டையை கிளப்பி வரும் ஒருவரை இறைவன் உடனே அடையாளம் காட்டியிருக்கிறான்” நமக்கு …பேபின்னமருதஹள்ளி கிராமத்து மக்கலை போல தமிழ் நாட்டில் எவ்வளவோ உள்ளனர் ,,அவர்களில் 50 சதவீதம் பேர் திருந்தினால் கூட நம்ம தமிழ் நாடு வளர்ச்சி முழு ஆரோக்கியத்தை நோக்கி பயணிக்கும்..

  4. வணக்கம் சுந்தர் சார்

    திரு.தங்கவேல் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் பிறருக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்து காட்டி இருக்கிறார். நம் தளத்திற்கு திருவேணி சங்கமத்திற்கு வர இருக்கிறார் எனும் போது சந்தோசமாக இருக்கிறது சார்..
    மிக அருமையான பதிவு

    நன்றி

  5. சுந்தர் சார்,
    சேவை மற்றும் தன்னலம் கருத உள்ளம் படைத்த இவரை போல பல ‘தங்கவேல்’ கள் நம் நாட்டிற்கு தேவை.இளைஞர்களை நல்வழி காட்டிய திரு. தங்கவேல் ஐயாவின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறோம் .

  6. சுந்தர்,

    நமது தளத்தின் ஆண்டுவிழா, பல சாதனையாளர்களின் சங்கமமாக இருக்கும் என்று நினைகேறேன்

    – ராம்ஜி நடராஜன்

  7. நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் அடங்கிய நடிகர்களுக்கான அகில உலக ரசிகர் மன்றங்கள் மற்றும் நற்பணி மன்றங்கள் செய்ய முடியாத அல்ல செய்ய தவறிய ஒரு சமூக பணியை அரும் சாதனையை, திரு தங்கவேல் அவர்கள் விடா முயற்சியின் மூலமாக செய்து காண்பித்திருக்கிறார். இவரை நம் ஆண்டு விழாவிற்கு அழைத்தமைக்கு மிகவும் நன்றி சுந்தர்.

    சினிமாவில் நிறையா டேக் வாங்கி சாதைனை செய்யும் நாயகனுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் திரு தங்கவேல் அவர்களின் வழிகாட்டுதல் மூலம் குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒரு சாதனை. திரு தங்கவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இறைவன் அவரது சமூகப்பணிகளுக்கு துணையிருப்பார். பதிவிற்கு நன்றி சுந்தர்

  8. சுந்தர்ஜி,

    அற்புதமான பதிவு.

    விதைப்பவர் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை,” அருமையான வரிகள். தனி ஒரு மனிதராக இருந்து கொண்டு அவர் ஆற்றும் தொண்டை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. REALLY HATS OF MR
    THANGAGEL . இப்பவே அந்த ஊரை போய் பார்த்து விட வேண்டும் என்று மனம் நினைக்கின்றது. படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வெற்றி கண்டதுடன் , போதை பழக்கத்தையும் நிறுத்திய அவரை பற்றி படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது. அவரை பற்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    ஆண்டுவிழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  9. \\அங்கு உடனடியாக, ஆரம்ப பள்ளி துவங்க அனுமதி கிடைக்கவில்லை. இருந்தாலும், மனம் தளராத தங்கவேலு, கல்வி துறை மட்டுமின்றி, அரசு துறைகளின் அத்தனை படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கினார். ஒருவழியாக, அனுமதி கிடைத்தது.\\

    நல்லது பண்றது அவ்வளவு சுலபமில்லேங்கோ…?? எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகன்டுள்ளார் .அவரை வாழ்த்துவதை விட வணங்குவது தான் பொருத்தமானது .

    ” தங்கவேல் நிஜத்திலும் தங்கமாக வாழ்ந்து நமது மனங்களில் ஜொலிக்கின்றார் ”
    சாதனையாளர்களை சந்திப்பதில் ,நமது சங்கமத்தில் இணைப்பதில் சுந்தர்ஜி அவர்களின் அனுபவம் பாராட்டுக்குரியது .
    -நெகிழ்ச்சியுடன்
    மனோகர் .

  10. ஜெ.பி மற்றும் தங்கவேல் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்-
    ஜெயஹிந்த்

  11. அருமையான செய்தி

    நண்பர் திரு தங்கவேல் அவர்களின் செயல் படிப்பதற்கு வேண்டுமானால் சாதரணமாக தோன்றலாம் – ஆனால் அதை நடைமுரைபடுத்தும்போது அவர் எத்தகைய சோதனைகளை சந்தித்திருப்பார் என்று எண்ணி பார்க்கையில் மனம் பிரமிக்கிறது

    இன்றைய காலகட்டத்தில் நாம் சொல்லும் செய்தியை மற்றவர்க்கு விளங்க வைத்து அவருக்கு அதில் பிடிப்பை ஏற்படுத்தி அவருக்கு அவர்தம் நிலையை உணர வைத்து மனதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல

    எதிர்ப்பு, அவமானம், நிராகரிப்பு என பல்வேறு இன்னல்களை கடந்து அசாத்திய சகிப்புத்தன்மை உள்ள ஒருவரால் தான் இது சாத்தியம் ஆகும் – நண்பர் திரு தங்கவேல் அவர்கள் அப்பேற்பட்டவர்

    வாழ்க அவரது தொண்டு !!!

Leave a Reply to usha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *