Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!

மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!

print
ந்த தளம் துவக்கியபோது… ‘இணையத்தில் ஏற்கனவே இது போன்று எண்ணற்ற ஆன்மீக / சுயமுன்னேற்ற தளங்கள் உள்ளனவே… நம்மால் என்ன பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் அல்லது வாசகர்களை பெற்றுவிட முடியும்?’ என்று நினைத்தேன். ஆனாலும் ஆண்டவன் கட்டளை இது என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாது பயணத்தை துவக்கினேன்.

நண்பர்களின் ஆதரவும் குருமார்களின் ஆசியும் சேர்ந்துகொள்ள இதோ நம்மால் இயன்ற ஒரு சிறிய விதையை நட்டிருக்கிறோம். இது வளர்ந்து விருட்சமாவது இறைவன் கைகளில் இருக்கிறது. .

‘பிரேமவாசம்’ – மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லம் பற்றி நம் தளத்தில் நாம் அளித்த பதிவை பார்த்துவிட்டு நண்பர்கள் பலர் நம்மை தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் நம் பணிகளில் தங்களை சேர்த்துக்கொள்ளும் படியும் கூறியிருந்தார்கள்.

அவர்களுக்கு உடனடி தேவை குழந்தைகள் துணி மணிகள் துவைக்க ஒரு வாஷிங் மெஷின் என்று குறிப்பிட்டிருந்தோம். இதையடுத்து யூ.எஸ்.ஸிலிருந்து நண்பர் காமேஷ் என்பவர் தாம் அதை வாங்கித் தருவதாகவும் விரைந்து ஏற்பாடுகளை செய்யும்படியும் கேட்டிருந்தார்.

====================================
Also check :
பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!
http://rightmantra.com/?p=4228
====================================

இதையடுத்து என்ன மாதிரியான வாஷிங் மெஷின் அவர்களுக்கு தேவைப்படுகிறது? என்ன பிராண்ட்?  என்ன மாடல்? உள்ளிட்டவைகளை பிரேமவாசத்திதில் கேட்டு தெரிந்துகொண்டேன்.

பின்னர் அதற்குரிய கொட்டேஷனை வாங்கி காமேஷ்க்கு மெயில் அனுப்ப, அவர் அடுத்த வினாடி என் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டார்.

(என்ன இது…. ஆர்வத்துடன் பார்க்கும் குழந்தைகள்!)

யூ.எஸ்.ல  இருக்கிறவர்… லட்சம் லட்சமா சம்பாதிக்கிறவர் தானே? இதுல என்ன பிரமாதம்…? என்று எவரும் நினைக்கவேண்டாம்.

லட்சம் லட்சமாக அல்ல… கோடி கோடியாக சம்பாதித்தாலும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறவர்கள் தான் செய்வார்கள். அந்த எண்ணம் அனைவருக்கும் வராது. மேலும் பணத்திற்குரிய செலவானது ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்க்கு ஏற்ப இருந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தால் நல்ல விஷயத்துக்கு என்றுமே செலவு செய்யமுடியாது.

(என்னென்னவோ அவர்களுக்கு தெரிந்த பெயர்களை குழந்தைகள் வாஷிங் மெஷினுக்கு வைத்துவிட்டனர்!)

நண்பர் காமேஷை பல மாதங்களாக நான் அறிவேன். அவரது சூழ்நிலையை அதை விட நன்கு அறிவேன். அவர் மிகப் பெரிய செல்வந்தரோ அல்லது நன்கு சம்பாதித்து யூ.எஸ்.ஸில்  செட்டிலானவரோ அல்ல. நம்மை போல அன்றாட வாழ்க்கையில் அங்கு தனது சர்வைவலுக்காக போராடும் ஒரு சாதாரண மனிதர்.

தொடர்ந்து வாட்டும் பல்வேறு பிரச்னைகளால் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் இங்கு தமிழகம் வந்து சில பரிகாரத் தலங்களை தரிசிக்க உத்தேசித்திருந்த அவர் அதன் பொருட்டு சிறுக சிறுக சேமித்து வந்தார்.

இதற்கிடையே பிரேமவாசம் பற்றிய பதிவை பார்த்தவுடன், “நான் கோவிலுக்கு போறதைவிட பிரேமவாசத்தின் தேவை ரொம்ப முக்கியமானது. நான் வேணும்னா என்னோட பயணத்தை ஒரு ரெண்டு மூணு மாசம் தள்ளி வெச்சிக்கிறேன். இப்போ நான் அனுப்புற பணத்துல உடனடியா வாஷிங் மெஷின் வாங்கி தர்றதுக்கு ஏற்பாடு செய்யுங்க சுந்தர்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் வாஷிங் மெஷினில் அவரது மகன் ‘பிரணவ்’ பெயரை போட்டு A HUMBLE GIFT BY PRANAV KAMESH, C/o. RIGHTMANTRA.COM என்று ஒரு ஸ்டிக்கர் போல தயார் செய்து ஒட்டச் சொன்னார். அதை புகைப்படம் எடுத்து அனுப்பும்படியும், தனது குழந்தைக்கு சிறு வயது முதலே (charity) ஈகையை பற்றி சொல்லிக்கொடுத்து வளர்ப்பதற்காகவும் தான் அதை கேட்பதாகவும் வேறு நோக்கம் இல்லை என்றும் சொன்னார். மேலும், நமது தளத்தில் வரும் நீதிக்கதைகளை அடிக்கடி தனது குழந்தைக்கு சொல்வதாகவும், அதை அவன் சுவாரஸ்யத்துடன் கேட்பதாகவும் கூறினார். (இதை இதைத் தான் நான் அனைவரிடமும் எதிர்பார்க்கிறேன்.) இப்படி ஒரு வாசகரை தந்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

சொன்ன மாதிரியே அவர் எனக்கு பணம் அனுப்ப, ரூ.11,500/- செலவில் ஒரு புத்தம் புதிய வாஷிங் மெஷின் வாங்கி பிரேமவாசத்திற்கு அளித்தாகிவிட்டது.

நம் தளத்தின் சார்பாக நாம் தரும் முதல் பெரிய கொடை என்பதால் பிரேமவாசத்தில் இதை கொடுப்பதை ஒரு எளிய நிகழ்ச்சியின் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் அதைத் தான் கூறினார்கள். இதையடுத்து நண்பர்கள் சிலரிடம் விபரத்தை கூறி மதியம் பிரேமவாசம் வர இயலுமா என்று கேட்டேன். பிரேம்கண்ணன், நாராயணன், மாரீஸ் கண்ணன் ஆகியோர் வருவதாக சொன்னார்கள்.

சரியாக ஞாயிறு மதியம் 3.00 மணிக்கு வாஷிங் மெஷின் வந்து இறங்க, அதை பிரேமவாசம் குழந்தைகள் முன்னிலையில் ஒப்படைத்தோம்.

நம் தளத்திற்கும் நண்பர் காமேஷ்க்கும் பிரேமவாசம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் நன்றி கூறினார்கள். (மாற்றுத் திறனாளியான மும்தாஜ் அவர்கள் பிரேமவாசத்தில் ஆற்றும் பங்கு மிகப் பெரியது.)

அந்த நேரத்தில் சற்று ரிலாக்சாக இருந்த ஹாலில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த, குழந்தைகள் சிலரை மட்டுமே அழைத்தோம். மற்றவர்களை நாம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

குழந்தைகள் அதை தொட்டு பார்த்து, ‘ஏ… நமக்கு வந்திருக்குடா… நமக்கு அங்கிள் வாங்கிட்டு வந்திருக்காருடா…. அடுத்த வாரம் பேட் & பால் வருது. இது எந்து. இதை தொடாதே… இல்லை இல்லை எந்து நீ தொடாதே… அங்கிள் அவனை பாருங்க அவன் அந்த சுவிச்சை திருப்புறான்… இல்லே அங்கிள் நான் ஒன்னுமே செய்யலே…” குழந்தைகள் இவ்வாறாக குதூகலப்பட….அவர்கள் முகத்தில் தான் எத்தனை எத்தனை சந்தோஷம்.

அவர்கள் பயன்படுத்தாத ஒரு பொருளுக்கே அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் விளையாட்டு சாமான்களை அவர்களுக்கு வாங்கித் தந்தால் அவர்கள் எத்தனை சந்தோஷப்படுவார்கள்?

அடுத்து என்னென்ன தேவைகள் என்பது குறித்த பட்டியலை பெற்று வந்திருக்கிறேன். சைக்கிள்கள், குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம், ஸ்கூல் பேக்குகள், விளையாட்டு சாமான்கள், ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட பொருட்கள் பட்டியலில் உள்ளன.

(கோவையிலிருந்து வாசகி சாந்தி, துபாயிலிருந்து மெய் நாதன், அபு தாபியிலிருந்து நண்பர் சிவக்குமார் ஆகியோர் தாங்களும் இந்த அரும்பணியில் இணைந்து இக்குழந்தைகளுக்கு உதவிட விரும்புவதாக  கூறியிருக்கிறார்கள். அவர்களிடமும் நம் நண்பர்களிடமும் பிரேமவாசத்திடமும் கலந்து பேசி அடுத்த கட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படும்.)

எங்கள் நிகழ்ச்சி முடிந்ததும் மாற்றுத் திறன் வாய்ந்த மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்க அவர்கள் அறைகளுக்கு சென்றோம்.

நண்பர்கள் பரணிகாவை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட முதல் தளத்திற்கு சென்றோம். அங்கு பரணிகாவை நண்பர்கள் பார்த்து கொஞ்சி மகிழ்ந்தனர். கண்களை உருட்டி உருட்டி எங்களையே பார்த்தபடி இருந்தாள் பரணிகா. அவள் அருகில்  ஒரு குழந்தை 3 வயதிருக்கும். எங்களை பார்த்து துள்ளி துள்ளி எழ முயற்சித்தான். கைகளை அருகே கொண்டு சென்றால், அதை பற்றி தனது தோளில் வைத்துக்கொண்டான். ‘என்னை தூக்கிங்கோ’ என்று அதற்கு அர்த்தம்.

தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தேன். “குட்டிப் பையனுக்கு என்ன வேணும்? உன் பேர் என்ன?” பலவாறாக கொஞ்சிக்கொண்டிருந்தேன். அப்போது தான் கவனித்தேன்… அவன் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

“பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்துவருகிறோம். தற்போது ஓரளவு எழுந்து நிற்க பழகுகிறான். கூடிய சீக்கிரம் அவனாகவே எழுந்து நிற்பான்” என்றார்கள் அந்த அறையில் இருந்த கேர்-டேக்கர்.

அறையின் ஓரத்தில் ஒரு 14 வயது சிறுமி, சிரித்துக்கொண்டே இருந்தாள். தான் யார் தனக்கு என்ன பிரச்னை என்கிற நினைவு அவளிடத்தில் இல்லை. மேலும் பல குழந்தைகள்… பல வித பிரச்னைகள். தூக்க கூடிய குழந்தைகளை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தோம்.

எனக்கு இது இரண்டாவது விசிட். ஆனால் நண்பர்களுக்கு முதல் விசிட். குழந்தைகளை அவர்களது நிலையை பார்த்து நண்பர்கள் கண்கலங்கிவிட்டனர்.

கீழே மறுபடியும் வந்து அலுவலகத்தில் மும்தாஜ் அவர்களை பார்த்து, “பிரேமவாசத்திற்கு உதவ இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்றேன்.

“நாங்க தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லணும். எங்கள் குழந்தைகள் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி…..!” என்றார்கள்.

அனைவரிடமும் விடை பெற்று கிளம்பி வந்தோம்.

இறைவனை பல நேரங்களில் நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதில் இது போன்ற குழந்தைகள் பிறப்பதும் ஒன்று.

அனைத்தும் முடித்து, வாஷிங் மெஷின் வாங்கிய பில், அவர் கேட்டுக்கொண்டவாறு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை காமேஷ்க்கு அனுப்பினேன்.

மெயிலில் நான் எதுவும் குறிப்பிடவில்லை. நான் அனுப்பியது நான்கே நான்கு வரிகள் தான்….

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

அவர் இங்கு வந்து பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து செய்ய வேண்டிய பரிகாரங்களை விட மிகப் பெரிய ஒரு பணி செய்துவிட்டபடியால் அவர் இனி பரிகாரம் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அவருக்கும் அவரது பல தலைமுறைகளுக்கும் சேர்த்து அவர் ஒரு கவசத்தை செய்துவிட்டார்.

அதான் வள்ளுவரே சொல்லிட்டாரேங்க…

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. (குறள் 213)

====================================
Also check :
பிரேமவாசம் – கடவுளின் இல்லத்தில் ஒரு நாள்…!
http://rightmantra.com/?p=4228
====================================

[END]

17 thoughts on “மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!

  1. நல்ல சிறப்பான துவக்கம்.
    மேலும் தொடர்ந்து நமது சேவை தொடரும் என்ற நம்பிக்கை
    பலமாக உள்ளது.
    வெகு விரைவில் எமது நண்பர்களுடன் வருகிறோம் .
    சுந்தர் எப்போதும் சொல்வது போல், நண்பர் காமேஷ் அவரது குடும்பத்தினர் மிகவும் சிறப்புடன் ஒரு கவசத்தை செய்துவிட்டார்.
    நண்பர் காமேஷ் அவர்களுக்கு மீண்டும் நம் தளம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . மகன் ‘பிரணவ்’ அவர்களுக்கும் மகிழ்ச்சியையும் நட்பினையும் தெரிவித்து கொள்கிறேன்.

    நன்றி ,நன்றி …..

  2. திரு சுந்தர் அவர்களுக்கு வணக்கம். அருமையான பணி. தொடரட்டும்.மொத்தம் எவ்வளவு ஸ்கூல் பாக்ஸ் (பை) தேவை படும்? தயவு செய்து தெரிவிக்கவும். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து தருகிறோம் மீதியை வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்.

    திருமதி சாந்தி மணி.
    பெங்களூர்

    1. இன்று இரவு விரிவான மின்னஞ்சல் அனுப்புகிறேன். அது குறித்து இங்கும் தெரிவிக்கிறேன். நன்றி.
      – சுந்தர்

  3. மிக அருமையான நற்பணி – இறைபணியையும் மிஞ்சி விட்டது. தங்களுடன் இதில் கலந்துகொள்ள முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன்.

    உங்கள் பணி மேன்மெலும் சிறப்பாக தொடரவும் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்.
    அன்பே சிவம்

  4. இதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வில் கலந்துகொண்டது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது…..
    .
    நம் வாழும் வாழ்கை வேறு இங்கு வாழ்பவர்கள் வாழ்கை வேறு…முந்தைய பதிவில் சுந்தர் சொன்னதுபோல் எதைபற்றியும் கவலையில்லாமல், சூதுவாது தெரியாமல் மகிழ்ச்சியக இருக்கும் இந்த குழந்தைகளை பார்க்கும் பொது மனது வலிகிறது….வாழ்வில் நாம் தெறிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு இந்த மாதிரி உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்வதன்மூலம் பிராயசிதம் தேடி கொள்ள ஒரு வாய்ப்பு…
    .
    நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொரு அறையாக நாம் பார்வையிட சென்றபோது அந்த குழந்தை பரணிகாவை பார்த்ததும் என்னை அறியாமல் கண்கள் கலங்கி விட்டன.. எத்தனை அழகான குழந்தை… பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உருண்டை விழிகள்….. அந்த குழந்தைக்கு தெரியுமா தனது பெற்றோரால் தாம் அனாதையாக வீசபட்டுவிட்டோம் என்று…?

    மேலும் தொடரமுடியாமல் யாரிடமும் சொல்லாமல் நான் கீழே வந்து விட்டேன்……மனது மிகவும் பாரமாக இருந்தது…
    .
    இதுபோல் இந்த உலகில் எண்ணற்ற குழந்தைகள் உள்ளார்கள்….அனால் இந்த பதிவில் சொன்னதுபோல் “”பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை; தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை”. இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்வேன்….என் அலுவலக நண்பர்களிடம் இந்த பதிவை இந்து காட்டியுள்ளேன்….facebook லும் ஷேர் பண்ணி முடிந்தவரை உதவி கிடைக்க ஏற்படு செய்யவேண்டும் என நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்…
    .
    மாரீஸ் கண்ணன்

  5. வியக்க வைக்கிறீர்கள். பிரமாதம். தங்களது தொண்டு சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

  6. சுந்தர் சார், என்ன சொல்றதுனே தெரியல, நீங்க நிஜமாவே கடவுளோட பரிசு, வாழ்த்துக்கள் சுந்தர் சார்,

  7. நண்பர் காமேஷ் மற்றும் அவர் தம் குடும்பத்தாருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் !!!

    பிரேமவாசத்தின் குழந்தைகளுக்கு மேலும் பல் வேறு உதவிகளை செய்ய காத்திருக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுதல்களும் !!!

    இந்த இனிய தொடக்கத்திற்கு வழிவகுத்த சுந்தர் அவர்களின் தொண்டு பாராட்டுக்குரியது !!!

    வாழ்க உங்கள் தொண்டு !!!
    வளர்க நற்பணி !!!

  8. சுந்தர்ஜி,

    வாழ்க வளமுடன்
    முதலில் சகோதரர் காமேஷ் குடும்பத்திற்கு சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

    தாங்கள் வாஷிங் மெஷின் கொடுக்கும்போது அத்தனை குழந்தைகள் முகத்திலும் என்ன ஒரு சிரிப்பு, என்ன ஒரு சந்தோஷம். தாங்கள் சொல்வது போல் வாஷிங் மெஷின் கொடுத்ததற்கே அவ்வளவு மகிழ்ச்சி என்றால் அந்த குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை போலும்.முடிந்த வரை நம் தளம் சார்பாக அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும்.அந்த குழந்தைகளை அனாதையாக விடுவதற்கு எப்படி மனம் வந்ததோ.கல் நெஞ்சக்காரர்கள் போலும். தற்போது மட்டும் பாரதியார் இருந்து இருந்தால் பெண்ணின் விடுதலைக்காக போராடியதை நினைத்து வருத்தம் கொண்டிருப்பார்.

  9. அன்பான சுந்தர் அவர்களுக்கு, அணைத்து குழந்தைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! தங்கள் நம் இல்லம் வந்தமைக்கும் தங்களுடைய பொன்னான நேரத்தை எங்களோடு செலவு செய்தமைக்கும், அதோடு நில்லாமல் தங்களுடைய இணையதளத்தில் பிரேமவாசம் பற்றி எழுதியமைக்கும் மேலும் குழந்தைகளை பற்றி அக்கறையோடும், அன்போடும் நிறைய எழுதியமைக்கும் நன்றிகள் பல. அதோடு மட்டும் நில்லாமல் என்ன வேண்டும் என்று எங்களது தேவைகளை கேட்டு வுடனே வாங்கி தந்தமைக்கும் அணைத்து குழந்தைகள் சார்பாக மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நமது நன்றியை காமேஷ் அவர்களுக்கும் தெரிவுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களோடு நம் இல்லத்திற்கு வந்த நண்பர்களுக்கும் கனிவான அன்பும் உரித்தாகுக.

    நன்றியுடன்,
    மும்தாஜ்.
    ஒருங்கிணைப்பாளர்
    பிரேமவாசம்.

  10. உண்மையில் இந்த மாதிரி இறைவனின் நேரடி கவனிப்பில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் செய்வது இறைவனுக்கு நேரிடையாக செய்யும் தொண்டை போன்றது இது போல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    இந்த முறை என்னால் வர முடியவில்லை அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன் ,அவர்களுக்கு என்ன தேவை என்பதை பட்டியல் போட்டு என் சார்பாக கொடுக்க வேண்டியதை சொல்லுங்கள் கண்டிப்பாக செய்வேன்

  11. உதவி புரிந்த நண்பர் காமேஷ் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  12. சரியான திரைப்பாடலையும், திருக்குறளையும் பொருத்தமான இடத்தில கொடுத்துள்ளிர்கள். உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும்

  13. இதை படிக்கும் போதே மனத்தை ஏதோ பிணைகிறது …
    இறைவன் சித்தம் அதுவாயின் அப்படியே ஆகட்டும்
    அனால் இன்றாவது தெரிந்து கொண்டேன் என்பதை நினைக்கும் போது
    சற்று ஆறுதல்

  14. சுந்தர்,நல்ல அருமையான பணி.(ஸ்கூல் யூனிபார்ம் etc).என்னைக்கு என்று சொல்லுங்கள் என்னால் முடிந்ததை செய்கிறேன்.நன்றி

    1. யூனிபார்ம் அவர்களுக்கு அவசரமாக தேவைப்படுகிறது. ஏனெனில் துணியாக வாங்கி தந்தால் அவர்கள் தைத்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள். தைப்பதற்கு அவகாசம் தேவைப்படும் அல்லவா?

      எனவே யூனிபார்ம் இந்த ஞாயிறு அவர்களுக்கு வாங்கி தரப்பட்டுவிடும். அதற்கு உதவ விரும்புகிறவர்கள் விரைவாக எம்மை தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *