Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை

print
ரசியல், சினிமா, விபத்து தவிர நாம் அன்றாடம் படிக்கும் செய்தித் தாள்களில் நமக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அளிக்கக்கூடிய எத்தனையோ செய்திகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன. நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்குபவர்களுக்கு தினம் தினம் சுப தினம் தான். எனக்கு தெரிந்தவர்களிடமும் என் நண்பர்களிடமும் நான் அடிக்கடி வலியுறுத்துவது இது தான். செய்தித் தாள் படிப்பதை கட்டாயம் தினசரி வழக்கமாக அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்பது தான். நம்மை சுற்றி என்ன நடக்கிறது, யார் யார் என்ன சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது மிக மிக அவசியம்.

நேற்று வெளியான தினத்தந்தியில் (19/02/2013)  நான் படித்த – என்னை கவர்ந்த – செய்தி ஒன்றை இங்கே உங்களுக்காக தருகிறேன். ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் பாளையங்கோட்டையில் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய உரை பற்றிய செய்தி அது.

இந்த அற்புதமான செய்தியை நமது தளத்தில் உரிய புகைப்படங்களோடு தர விரும்பி அதற்கு நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மூலம் ஒரு மிகப் பெரிய தொடர்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் நமது தளம் மற்றொரு வட்டத்தில் பரவுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. “நம்பிக்கையுடன் எதையும் அணுகுபவர்களுக்கு இந்த உலகின் கதவு எப்போதும் திறந்திருக்கிறது” என்கிற விவேகானந்தர் வாக்கு மற்றொரு முறை மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

கீழ் காண்பவற்றை அவசியம் படியுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீதிபதி அவர்கள் தனது உரையில் இறுதியில் கூறிய கண்ணதாசனின் வரிகள் மட்டும் சில விடுபட்டிருக்கின்றன. எனவே அவற்றை முதலில் இங்கே முழுமையாக தந்திருக்கிறேன்.

கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

– கவியரசு கண்ணதாசன்

…………………………………………………………………………………………….

பாளையங்கோட்டை கல்லூரி பட்டமளிப்பு விழா:
ஏழை விறகு வெட்டியின் குட்டிக்கதை
ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

நெல்லை, பிப்.19-

பாளையங்கோட்டையில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஏழை விறகு வெட்டியின் குட்டிக்கதையை கூறி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.

பட்டமளிப்பு விழா

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 87-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சேவியர் கலைமனைகளின் அதிபர் பிரிட்டோ வின்சென்ட் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் வரவேற்று பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இளநிலை பட்டம் 500 பேருக்கும், முதுநிலை பட்டம் 176 பேருக்கும், எம்.பில். பட்டம் 38 பேருக்கும் ஆக மொத்தம் 714 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.

பின்னர் ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:-

ஒரு மெழுகுவர்த்தி தன்னை அழித்துக்கொண்டு ஒளியை கொடுக்கிறது. கல்வியில் முதலில் வருவது முக்கியம் அல்ல, நல்ல குணம்தான் முக்கியம். இதற்கு ஒரு சில எடுத்துக்காட்டை கூற விரும்புகிறேன்.

பாதிரியார்

கேரள மாநிலத்தில் பெனடிக்ட் ஓமணகுட்டி என்ற பாதிரியார் இருந்தார். அவர் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக போடப்பட்ட வழக்கில் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள், தீர்ப்புகளின்போது பாதிரியார் எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார்.

35 ஆண்டுகள் கழித்து 2 பேர் அந்த பாதிரியாரை வந்து பார்த்தனர். அப்போது அவர்கள், எங்களுடைய தந்தை ஒரு டாக்டர், அவர் சாவதற்கு முன்பு ஒரு உண்மையை எங்களிடம் கூறினார். அதை உங்களிடம் சொல்ல வந்தோம் என்று கூறினார்கள். உங்களால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண் சாவுக்கு எங்களுடைய தந்தைதான் காரணம். அதாவது தோட்டத்து முதலாளிக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையடுத்து முதலாளி அந்த பெண்ணை எங்களுடைய தந்தையிடம் அழைத்து வந்து கர்ப்பத்தை கலைக்க கேட்டு உள்ளார். கர்ப்பத்தை கலைத்தபோது அந்த பெண் இறந்துவிட்டாள். அந்த பெண் உடலை அரிவாளால் வெட்டி தோட்டத்தில் போட்டுவிட்டு அருகில் ஒரு பேனா கத்தியையும் போட்டுவிட்டனர் என்று கூறி உள்ளனர்.

செயலில் மாறாமல்

இந்த சம்பவங்களை கேட்ட பிறகும்கூட, பாதிரியார் எந்த வித சலனமும் காட்டவில்லை, அமைதியாக இருந்தார். ஆனால் அந்த 2 பேரும் அன்றைய நாளில் இருந்து 11 மாதங்கள் கழித்து வெளிஉலகுக்கு தெரிவித்து பாதிரியாரின் நல்ல குணத்தை எடுத்து கூறினர்.

இதன்பின்னர் தான், 40 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்கு பாதிரியார் பழிசுமந்தார் என்பது தெரியவந்தது. அவர் தான் எடுத்துக்கொண்ட பணியில், செயலில் மாறாமல் இருந்ததால் மக்கள் அவரை போற்றினர்.

விறகு வெட்டியின் கதை

பீகாரில் தசரத் முன்சி என்ற ஏழை விறகு வெட்டி, மலைகளுக்கு நடுவே 10 கிலோ மீட்டருக்கு அப்பால் கிராம மக்கள் சென்று தண்ணீர் எடுத்து வரும் சிரமத்தை பார்த்தார். ஒருநாள் அவர், கடப்பாறையால் மலையை தோண்டிக்கொண்டு இருந்தார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ஊர் மக்கள் கேலி செய்தனர். ஆனால் 22 ஆண்டுகள் கழித்து மலையில் பாதை உருவானது. இதே போல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 25 கிணறுகளையும் அவர் தோண்டினார். அவருடைய சேவையை பாராட்டி 2007-ல் அரசு விழா நடத்தியது.

படிப்பறிவு இல்லாத ஏழை விறகு வெட்டியின் தன்னலமற்ற சேவையை நாம் இன்றும் பாராட்டுகிறோம். அப்படி என்றால் படித்தவர்கள், இளைஞர்கள் நாட்டுக்கு பல நன்மைகளை செய்யலாம். படித்த இளைஞர்கள் தன்னலமற்ற சேவை செய்ய முன்வர வேண்டும்.

அவ்வை மூதாட்டி

தலைசிறந்த தத்துவ ஞானி அவ்வை மூதாட்டி. அவர் அதியமானின் தூதுவராக எதிர்நாட்டு மன்னரிடத்தில் சென்றார். எதிர்நாட்டு மன்னன் படைக்கலன்களின் பளபளப்பை பார்த்தார். அப்போது அவ்வையார், ‘அதியமானின் படை கருவிகள் சேதம் அடைந்து உருக்குலைந்து பட்டறையில் கிடக்கிறது’ என்று மட்டும் பதில் அளித்தார். இந்த ஒரு கருத்தின் மூலம் 2 நாட்டுக்கு இடையே நடக்க இருந்த போரை அவ்வை மூதாட்டி நிறுத்தினார். இதுபோல் குறிப்பறிந்து மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும்.

கண்ணதாசன் அழகான கவிதை வடித்து உள்ளார். பிறப்பில் வருவது யாதென கேட்டேன், பிறந்து பார் தெரியும் என்றார் இறைவன். படிப்பில் வருவது யாதென கேட்டேன், படித்து பார் தெரியும் என்றார் இறைவன். இவ்வாறு பல விஷயங்களை கூறிவிட்டு, முடிவில் இறப்பில் வருவது யாதென கேட்டேன், இறந்து பார் தெரியும் என்றார் இறைவன், என கண்ணதாசன் கூறி உள்ளார்.

அதாவது அனுபவத்தில் மனிதன் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்கிறான். எனவே கல்வியுடன் உலக விஷயங்களை கற்றுக்கொண்டு சமுதாயத்துக்கு பயன் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசினார்.

…………………………………………………………………………………………
குறிப்பு :
நீதிபதி மேற்கோள் கூறும் பீகாரை சேர்ந்த தசரத் முன்சியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிடுகிறது அல்லவா?

அடுத்து வருவது….
தனியாளாக மலையை பிளந்த தசரத் முன்சி – முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அரிய நிகழ்வு!
…………………………………………………………………………………………

8 thoughts on “கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கூறிய ஏழை விறகு வெட்டியின் உண்மைக் கதை

  1. கல்வி மட்டும் ஒரு மனிதனுக்கு போதாது தனலமற்ற சேவை மனபாண்மையும் தேவை என்பதை மிக தெல்விஆக சொல்லி உள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள்.இன்றைய இளைஞர்களுக்கு இவரை போன்றவர்கள் தான் மிக பெரிய எடுத்துகாட்டு

    ———————————————————————————————–

    திரு தசரத் முன்சி அவர்களை பற்றிய பதிவிற்காக காத்துகொண்டு இருக்கிறோம்

  2. பட்டம் பெற்று பதவியில் அமர்ந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர்களை மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மாணவர்களிடம் பேசியதை நிச்சயம் பாராட்டவேண்டும்.

  3. உயரிய கருத்துக்களை எவ்வளவு எளிமையாக திரு கண்ணதாசன் சொல்லயுள்ளார். இரண்டு உண்மை சம்பவம் தன்னலமற்ற சேவைதனை பறை சாற்றுகிறது.

    நன்றி சுந்தர்ஜி….

    ப.சங்கரநாராயணன்

  4. Indeed, I’m very happy to see these kind of people who are honouring their positions by having high values and ethics to lead their lives to the core.
    ***
    It’s become an age that whether anyone at such a higher position would speak like this, or even if they do, whether would it be from their heart – is sometimes doubtful.
    ***
    I sincerely appreciate and thank Mr. Sundaresh’s and your efforts in making people realize their good will and the strengths and with it comes, the power to help people.
    ***
    Thanks so much for this. And I wish the future will be great for us and for the future generations as well.

    And I love the Avvai’s and Bihar real hero’s story – which teaches us so many good things.
    ***
    Chitti.
    Thoughts becomes things..

  5. அருமையான பதிவு …..

    படித்த இளைஞர்கள் தன்னலமற்ற சேவை செய்ய முன்வர வேண்டும்.

    பாராட்ட பட வேண்டிய மற்றும் பின் பட வேண்டிய வார்த்தைகள் …

  6. படிப்பு முக்கியம் இல்லை குணம்தான் முக்கியம் என்று கூறியதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *