Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

print
நாயன்மார்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தொண்டால், மேற்கொண்ட சிவபக்தியால் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். “இது தான் பக்தி, இப்படித் தான் தொண்டு செய்யவேண்டும், இப்படித் தான் வாழவேண்டும்” என்று எடுத்துக்காட்டினார்கள். ‘இறைவனுக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதற்காகவும் இறைவனை துறந்துவிடக்கூடாது’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இன்று சித்திரை பரணி. சிறுத்தொண்ட நாயனாரது குருபூஜை.

சிறுத்தொண்ட நாயனாரது சரிதம் மிக மிக தனித்தன்மை வாய்ந்தது. வாத்ஸல்யத்திலேயே மிகப்பெரிய வாத்ஸல்யமான புத்திர வாத்ஸல்யத்தை சிவனுக்காக தியாகம் செய்தவர் இவர்.

DSC02234

சிறுத்தொண்டர் என்னும் அருந்தொண்டர்! 

டியார்களுக்கு தொண்டு செய்வதில் கற்பனைக்கெட்டாத ஒரு உயர்ந்த நிலையை கடைபிடித்து வந்தார் பரஞ்ஜோதியார். சிவனடியார்களின் முன்பு சிறியவராக அவர்களை பணிந்து நடந்ததால் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்டார். சைவ சமயத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் முக்கியமானவர். சிவத்தொண்டிற்கு முன்பாக எதுவும் பெரிதல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியவர். திருச்செங்காட்டாங் குடியில் வாழ்ந்து வந்த சிறுத்தொண்டர் அங்குள்ள இறைவனை நாள்தோறும் தொழுது, சிவதொண்டினை தவறாமல் செய்து வந்தார்.

சிறுத்தொண்டர், திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த நங்கை என்பவரை மணந்து கொண்டார். கணவரின் சிவதொண்டுக்கு, எந்த வகையிலும் பங்கம் வராத வகையில் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார் நங்கை. இவர்களுக்கு இனிய இல்லறத்தின் பலனாக ஆண் குழந்தை பிறந்தது. சீராளத்தேவர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சீராளத்தேவனுக்கு ஐந்து வயது பிறந்தபொழுது, கல்வி பயில அனுப்பினர்.

சோதிக்க வந்த சிவன்

சிறுத்தொண்டரது உண்மை அன்பை பரிசோதித்து பார்க்க விரும்பினார் சிவபெருமான். பைரவ அடியாராக வேடந்தாங்கி, திருச்செங்காட்டாங்குடியை அடைந்து சிறுத்தொண்டர் வீட்டு முன்பு போய் நின்றார். ‘தொண்டருக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ?’ எனக் கேட்டார். அவர் குரல் கேட்டு வெளியே வந்த நங்கை, ‘அடியவரே! அமுது செய்வதற்கு அடியார் எவரும் காணாமல் வெளியே போய் தேடி வரச் சென்றுள்ளார் எம்மவர். நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்தால் அவர் பேருவகை அடைவார். சிறிதும் தாமதிக்காமல் வந்து விடுவார். எனவே வீட்டிற்குள் எழுந்தருள வேண்டும்’ என்று கோரினாள்.

‘மாதரசியே! நான் உத்திரபதி. சிறுத்தொண்டரையே காணவந்தோம். அவர் இல்லாமல் இங்கே தங்க மாட்டேன். நான் கணபதீச்சரத்து திருவாத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறேன். சிறுத்தொண்டர் வந்தால் நான் வந்த செய்தியை கூறுங்கள்’ என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் பைரவ அடியார்.

அமுது படைக்க அடியாரைத் தேடி வெளியே சென்றிருந்த சிறுத்தொண்டர், அடியார் யாரும் காணாமல் வெறும் கையோடு திரும்பி வந்தார். பின்னர் அடியார் இல்லாத நிலை குறித்து மனைவியிடம் கூறி வருத்தமுற்றார். அப்பொழுது நங்கையார், உத்திரபதி என்ற பைரவ அடியார் வந்த செய்தியை கூறினாள். அதனைக் கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்தார் சிறுத்தொண்டர்.

சிறிதும் தாமதிக்காமல் அடியாரைக் காண திருவாத்தி மரம் நோக்கி சென்றார். அங்கிருந்த அடியாரை வணங்கி நின்றார். ‘நீரோ சிறுத்தொண்டர்?’ என்று கேள்வி எழுப்பினார் பைரவ அடியார்.

ஆம் என்று கூறிய சிறுத்தொண்டர், ‘இன்று அமுது செய்விப்பதற்காக எங்கு தேடியும் அடியாரை காணமுடியவில்லை. நான் செய்த தவப்பலனால் இங்கு உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என வேண்டினார்.

புன்முறுவல் பூத்த பைரவ அடியார், ‘சிறுத்தொண்டரே! என்னை பரிவுடன் அழைத்துப் போய் உணவளிக்க உம்மால் முடியாது. நான் உண்ணும் அமுதை படைப்பது எளிய காரியம் அல்ல’ என்றார்.

‘சுவாமி! தாங்கள் அமுது செய்வது எப்படி என்று கூறியருளினால், அதன்படி விரைந்து உணவு செய்ய நான் சித்தமாவேன்’ என்றார் சிறுத்தொண்டர்.

Siruthonda Nayanar

பிள்ளைக் கறியமுது

பைரவ அடியார், ‘அன்புக்குரிய தொண்டரே! நான் ஆறுமாதத்திற்கு ஒரு முறை பிள்ளை கறியமுது உண்ணுவேன். அதற்குரிய நாள் இன்றேயாகும். அந்த பிள்ளை ஐந்து வயதுக்குள் இருக்க வேண்டும். உடலில் எந்த ஊனமும் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே மகனாக இருக்க வேண்டும். அந்த பிள்ளையை தாய் மனமுவந்து பிடித்துக் கொள்ள, தந்தை அரிந்து, குற்றமின்றி கறியமுது படைத்து கொடுத்தால் தான் நான் உண்பேன்’ என்றார். அதற்கு சிறுத்தொண்டர், ‘அடியார் அமுது சாப்பிடுவதென்றால், எதுவும் அரிதன்று. இப்போதே கறியமுது படைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறி வீட்டை நோக்கிச் சென்றார்.

பின்னர் தன் மனைவியிடம் இதுபற்றி தெரிவித்தார். அவரும் மனம் மகிழ்ந்தார். பின், ‘ஐந்து வயது குழந்தைக்கு எங்கே போவது, அதுவும் மனமுவந்து அந்த பிள்ளையை கறியமுது படைக்க ஒப்புக் கொள்ளும் தாய், தந்தையர் எங்கு கிடைப்பார்கள். எனவே நம் குழந்தையை இங்கு அழைத்து கறியமுது செய்து அடியாருக்கு படைப்போம்’ என்று கூறினார் சிறுத்தொண்டர். அதற்கு நங்கையும் மனமகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.

மகனையே கறியமுது செய்தார்

சிறுத்தொண்டர் தன் மைந்தன் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்கு சென்றார். தந்தையை பார்த்ததும் தன் சிறுபாதம் பதிய, பாதச்சலங்கை ஒலியெழுப்ப ஓடி வந்த சீராளத்தேவரை, தழுவியபடி தூக்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.

எதிர் சென்று மைந்தனை வாங்கிய நங்கை, அவனுக்கு முகம் துடைத்து, தலை சீவி, திருமஞ்சனமாட்டி கணவர் கையில் கொடுத்தாள். அடியாருக்கு படைக்கப்பட உள்ள கறியமுது என்பதால் மைந்தனை உச்சி முகரவில்லை சிறுத்தொண்டர். அவர் தன் பிள்ளையின் தலையை பிடித்துக் கொள்ள, தாயார், கிண்கிணி கொஞ்சும் பிஞ்சு பாதங்களை தன் மடியில் வைத்து இடுக்கிக் கொண்டார்.

அப்போது தன் பெற்றோரைப் பார்த்து அந்த பாலகன், மகிழ்ந்து சிரித்தான். ஈன்றெடுத்த தனியொரு மகனின் தலையரிவாராய், தாய் தந்தையர் இருவரும் மனமுவந்து அரிய செயல் செய்தனர். இறைச்சிகளை எல்லாம் அறுத்து பாகம்பண்ணி, வேறு கறிகளும் சமைத்து சோறும் ஆக்கிவிட்டு தன் கணவருக்குத் தெரிவித்தார் நங்கை.

உணவருந்த வந்த ஈசன்

சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘சுவாமி! காலம் தாழ்ந்து போனாலும் கூட, தாங்கள் கூறியபடியே திருவமுது சமைத்தேன். அடியேன் வீட்டில் விரைந்து எழுந்தருள வேண்டும்’ என்றார்.

சிறுத்தொண்டருடன் வீட்டிற்கு வந்த அடியாருக்கு, நங்கையார் தூய நீரினால் அவரது பாதங்களை தூய்மை படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் சமைக்கப்பட்ட இனிய அன்னத்துடன், கறியமுதையும் படைத்து வைத்தார்.

அப்போது பைரவ அடியார், ‘நான் எப்போதும் தனித்து உண்ணுதல் கிடையாது. எனவே இறைவனடியார் எவராவது பக்கத்தில் இருப்பின் அழைத்து வா!’ என்று சிறுத் தொண்டரிடம் கூறினார். உத்தரவிடப்பட்டதைப் போல் விரைந்து போன சிறுத்தொண்டர் சிறிது நேரம் கழித்து முக வாட்டத்துடன் திரும்பி வந்தார்.

சிறுத்தொண்டரும் உணவருந்த…

‘எங்கு தேடினும் அடியார் எவரும் காணக் கிடைக்க வில்லை’ என்றார் வருத்தத்துடன். அதைக் கேட்ட பைரவ அடியார், ‘திருநீறு உடலெங்கும் பூசியிருக்கும் நீரும் ஒரு அடியார் தான். எனவே நீயே என் அருகில் இருந்து உணவு உண்ணுவாய்’ என்று கூறினார்.

சிறுத்தொண்டரும் பைரவ அடியாரின் அருகில் அமர்ந்தார். அவருக்கும் இலை இட்டு, அன்னம் மற்றும் கறியமுது பரிமாறினார் நங்கையார். சிறுத்தொண்டர் அன்னத்தை உண்ணப் போனார். அப்போது அவரை கையமர்த்திய பைரவ அடியார், ‘ஆறு மாதங்களுக்கு ஒருமுறையே உணவுண்ணும் நானே இன்னும் உண்ணவில்லை. தினமும் சாப்பிடும் நீ ஏன் அவசரப்படுகிறாய். சரி போகட்டும்! நீர் மகனை பெற்றவராக இருப்பின், நம்முடன் உணவுண்ண அவனை அழையுங்கள்’ என்றார்.

‘இப்போது அவன் உதவ மாட்டான்’ என்றார் சிறுத்தொண்டர். ஆனால் பைரவ அடியாரோ, ‘அவன் வந்தால் தான் நான் உணவு உண்ணுவேன். ஆகையால் அவனை அழையுங்கள்’ என்று கூறிவிட்டார்.

உயிருடன் வந்த சீராளத்தேவர்

வேறு வழியில்லை. கணவனும்–மனைவியும் வீட்டின் புறவாசல் பக்கம் சென்று, ‘எங்கள் அருமை மைந்தனே! சீராளா! அடியார் உணவுண்ண விரைந்து வா!’ என்று மனமுருகி அழைத்தனர்.

ஆச்சரியமா? அதிசயமா? என்று சொல்ல முடியாத நிலை பெற்றவர்களான சிறுதொண்டருக்கும் நங்கையாருக்கும். தங்கள் கையால் அரிந்து கறியமுது செய்து விட்ட, சீராளத் தேவர், பள்ளியில் இருந்து வருவதைப் போல கையில் பையுடன், கால் சலங்கை சத்தமிட கொஞ்சும் குரலில் தாய் தந்தையை அழைத்தபடியே ஓடி வந்தான்.

ஓடி வந்த புதல்வனை வாரி எடுத்தனர் பெற்றவர்கள். ‘அடியார் அமுதுண்ணாமல் போய்விடுவாரோ என்று நினைத்தோம். இப்போது மகன் வந்து விட்டதால் அவர் நிச்சயம் அமுதுண்ணுவார்’ என்று நினைத்தபடி மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார் சிறுதொண்டர்.

அங்கு அடியாரைக் காணவில்லை. ஆனால் அவருக்கு படைக்கப்பட்ட அமுது காலியாகி இருந்தது. அப்பொழுது ஈசன், உமையாளோடும், முருகனோடும் எழுந்தருளி, சிறுதொண்டருக்கு திருவருள் புரிந்தார். தான் தினமும் துதிக்கும் இறைவனை நேரில் கண்டதும் மனமுருக வேண்டி துதித்தார் சிறுதொண்டர். அவரையும் அவர் குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாது திருக்கயிலை அடைந்தார் சிவபெருமான்.

(ஆக்கத்தில் உதவி : தினத்தந்தி)

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!
– திருநாவுக்கரசர்

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள கோ-சாலையில் பசுக்களை பராமரிப்பதில் உதவியாக இருந்து வரும் கல்லூரி மாணவர் திரு.பத்ரி 

DSCN9688
மாட்டுப் பொங்கல் அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் கோ-சாலை பசுவுடன் திரு.பத்ரி

த்ரி அவர்களைப் பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையிருக்காது. பத்ரி அவர்களின் வயது 20. ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வருகிறார். தனது ஒய்வு நேரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்து அங்கு கோ-சாலை பராமரிப்பு பணிகளில் உதவியாக இருக்கிறார். பசுக்கு தீவனம் வைப்பது, தண்ணீர் வைப்பது, குளிப்பாட்டுவது, கோ-சாலையை சுத்தம் செய்வது என அனைத்தையும் இவர் வாலண்டியராக செய்கிறார். இன்றைய மாணவர்கள் எப்படியெல்லாம் நேரத்தை வீணடித்து வருகிறார்கள் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், பத்ரி அவர்கள் செய்து வரும் இந்த அரும்பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நாம் இவருக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம்.

கடந்த மூன்றாண்டுகளாக நாம் இவரை பார்த்துவருகிறோம். ஒவ்வொருமுறையும் பண்டிகை உள்ளிட்ட விஷேட நாட்கள் மற்றும் கன்று பிறக்கும் போது நாம் செய்யும் விசேஷ கோ-சமரட்சணத்தின் போது மற்ற பணியாளர்களோடு இவரையும் கௌரவிக்க நாம் தவறுவதில்லை.

DSCN9565

சமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைதேகி என்ற கன்று பிறந்ததையடுத்து சென்ற ஞாயிறு நடைபெற்ற விசேஷ கோ-சம்ரட்சணதில் இவரையும் கௌரவித்தோம். அப்போதே நமது பிரார்த்தனை கிளப் பற்றி கூறி அடுத்த வாரம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இந்த வார பிரார்த்தனையை கோ-சாலையிலேயே செய்யவிருக்கிறார். கோ-சாலையில் பசுக்களுடன் செய்யும் பிரார்த்தனை நதி தீரத்தில் செய்யும் பிரார்த்தனையைவிட பல ஆயிரம் மடங்கு பவித்திரமானது. பலன் தரவல்லது.

இந்த வார பொதுப் பிரார்த்தனைக்கான கோரிக்கையின் கருப்பொருளையும் இவர் தான் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also check :  கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: 

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள் தான். அதில் இருவர் நமது அலுவலகத்திற்கே நேரில் வந்து கோரிக்கையை தங்கள் கைப்பட எழுதித் தந்தனர்.

முதல் கோரிக்கையை ஒரு வாசக அன்பர் தனது உறவினர் ஒருவருக்காக சமர்பித்திருக்கிறார். மற்றவருக்காக பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அவருக்கு ஒரு சல்யூட்.

அடுத்தவர் தனது தங்கைக்காக ஒரு வாசகி அனுப்பியிருக்கும் கோரிக்கை. ஒரு சகோதரியாக தனது தங்கை படும் அவஸ்தையை கண்டு அவர் எந்தளவு வேதனைப்படுகிறார் என்று அறிந்துகொள்ளமுடிகிறது. நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை பலன் தரும். அதே நேரம், அவர் ஏதாவது கோ-சாலை ஒன்றில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். (கீழே அளித்துள்ள ரமணர் தொடர்பான பதிவின் சுட்டியை காண்க!)

மூன்றாவது தனது மகனுக்காக தந்தை சமர்பித்திருக்கும் பிரார்த்தனை. தனது மகன் தனித்தன்மை வாய்ந்தவன். பத்தோடு பதினொன்று அல்ல என்று அவர் தந்தை கூறியிருப்பதை கவனியுங்கள். நிச்சயம் அவர் பிரார்த்தனை நிறைவேறும். அதே போன்று அவர் தனது பொருளாதாரப் பிரச்சனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அதற்கும் தீர்வு ஏற்படும் என்பது உறுதி.

இவர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மீதும், உங்கள் பிரார்த்தனை மீதும் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.

பொதுப் பிரார்த்தனை… இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் சொன்ன ஒரு கருத்து! இன்றைக்கு மிகவும் தேவையான ஒன்று!!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) Relative suffering from cancer

One of my relatives, Pushpa (53), has been diagnosed for breast cancer. One more test is pending, but the other tests have confirmed the affliction. Her family members and as a well-wishing relative myself are deeply worried about this.

I request you to include her in your prayers so she can be cured of this disease completely and lead a healthy life.

Advance thanks for your prayers.

Yours faithfully,
Right Mantra reader

(2) தங்கையை பாடாய்படுத்தும் தோல் நோய்!

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் உறுப்பினர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம்.

என் தங்கைக்காக இந்த பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்.

என் தங்கை மைதிலி கடந்த 15 வருடங்களாக சொரியாசிஸ் என்னும் தோல் நோயால் தலை முதல் கழுத்து வரை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறாள். ஒரு பெண்ணாக இது அவளை எந்தளவு பாதிக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. அதுவும் இது கோடைக்காலம் என்பதால் அந்த பாதிப்பு ஏற்படுத்தும் துன்பம் சொல்லி மாளாது. அவளுக்கு விரைவில் அந்நோய் முற்றிலும் குணமாகி அவள் பழைய நிலையை அடையவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டுகிறேன்.

இப்படிக்கு.
பெயர் வெளியிட விரும்பாத வாசகி

(3) மகனின் மேல் படிப்பு தடையின்றி அமையவேண்டும் !

ஆசிரியருக்கும் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கும் என் வணக்கம்.

என் பெயர் திருவேங்கடம். என் மகன் சித்தார்த் (28) எம்.பி.பி.எஸ். முடித்து தற்போது எமெஜென்சி மெடிசின் பிரிவில் முதுகலைப் படிப்புக்கு முயற்சி செய்து வருகிறான். இதற்காக கடுமையாக உழைத்து தன்னை தயார் செய்து கொண்டு வருகிறான். அவனது முயற்சிகள் ஈடேறி அவனுக்கு தான் விரும்பியவாறு மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு படிக்க இடம் கிடைக்கவேண்டும். மருத்துவத் துறையில் சேவை மனப்பான்மையுடன் இன்சொல் பேசி தொண்டாற்ற அவன் உறுதி பூண்டிருக்கிறான்.

அவன் விரும்பியாவாறு முதுகலை படிப்பில் இடம் கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு மன்ற உறுப்பினர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு வரவேண்டிய எனக்கு சொந்தமான பணம் பல இடங்களில் சிக்கி லாக் ஆகி வரவில்லை. அந்தப் பணம் முழுதும் எனக்கு திரும்ப கிடைக்கவும் பிரார்த்தனை செய்யவேண்டுகிறேன். அப்படி திரும்ப கிடைக்கும் பட்சத்தில் நல்ல விஷயங்களுக்கு அப்பணத்தில் கணிசமான ஒரு பகுதியை செலவு செய்ய சித்தமாக இருக்கிறேன்.

நன்றி!

J. திருவேங்கடம்,
சென்னை – 10.

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை (அதே மின்னஞ்சலை) திரும்ப அனுப்பவும். (அல்லது) நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

==========================================================

பொது பிரார்த்தனை

குடியால் சீரழியும் மாணவர் சமுதாயம்!

கல்லூரி இறுதியாண்டு என்பது மாணவர்களின் மிக முக்கியமான பருவம். அந்த பருவத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முடிவு தான் அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நம்மை நிலைநிறுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டிய ஒரு பருவத்தில் மாணவர்கள் மதுக்கோப்பையை கையிலெடுப்பதாக வருத்தப்படுகிறார் பத்ரி.

tasmac evil

ஒரு கல்லூரி மாணவராக அவருக்கு இது குறித்த ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. ஏனெனில் தமிழகத்தில் 13 முதல் 16 வயது வரையுள்ள இளைஞர்களில் 11 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 17 – 21 வயதுள்ள மாணவர்களில் 25% மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.

கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்களுக்கு தாங்கள் பணிக்கு சென்று பிரதியுபகாரம் செய்யவேண்டிய ஒரு தருணத்தில், அவர்களிடமே பணம் பெற்று அதை கொண்டு போய் மதுக்கடைகளில் கொட்டும் அவலத்தை என்னவென்று சொல்ல?

விரைவில் மதுவில்லா தமிழகத்தை நாம் காணவேண்டும். மது என்கிற அரக்கன் ஒழியவேண்டும். மாணவர்கள் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டு, வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் செயல்களில் ஈடுபடவேண்டும். இதுவே நம் பொது பிரார்த்தனை.

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நம் வாசகரின் உறவினர் புஷ்பா அவர்களுக்கு விரைவில் அந்நோய் நீங்கி அவர் பரிபூரண குணம் பெறவும், சோரியாஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வாசகியின் சகோதரி திருமதி.மைதிலி அவர்கள் அந்நோயினின்று விடுபட்டு முழுமையான குணம் பெறவும், மருத்துவ மேற்படிப்புக்காக முயற்சி செய்துகொண்டிருக்கும் நம் திரு.வேங்கடம் அவர்கள் மகன் சித்தார்த் அவர்களுக்கு தான் விரும்பியவாறு முதுகலை பிரிவில் இடம் கிடைக்கவும், அவருக்கு வெளியிலிருந்து வரவேண்டிய பணம் அனைத்தும் திரும்ப வரவும், அவர் தம் அறம் சிறக்கவும் அதன் மூலம் கிடைக்கும் இன்பம் பெருகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். அதே போன்று பொதுப் பிரார்த்தனையாக அறிவிக்கப்பட்டுள்ள மதுப்பழக்கமில்லா இளைய சமுதாயம் அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.பத்ரி அவர்கள் நல்லமுறையில் தனது கல்வியை முடித்து அவர் விருப்பம்போல, அவருக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும். அவர் தம் தொண்டு சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மே 8, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் ஸத்குரு ஸபா வேத பாடசாலை மாணவர்கள்

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தி.நகர் ஸத்குரு ஸபா பாடசாலை மாணவர்கள் தலைமை ஏற்றிருந்தது தெரிந்திருக்கும். மாணவர்களுடன் நாமும் பிரார்த்தனையில் இணைய விரும்பி அங்கு சென்றிருந்தோம்.

நமது பிரார்த்தனை நேரமான 5.30 pm – 5.45 pm சரியாக பிரார்த்தனை நடைபெற்றது. வாசகர்கள் அனுப்பிய பிரார்த்தனை கோரிக்கைகளை நாம் படித்துக்காட்ட, மாணவர்கள் மற்றும் வாத்தியார் உட்பட அனைவரும் கவனமாய் கேட்டு பிரார்த்தனை செய்தனர்.

DSC03869-22222

பொதுப் பிரார்த்தனையாக நாட்டில் வறட்சி நீங்கி பசுமை தழைக்கவும் குறையின்றி மழை பொழிந்து உயிர்கள் இன்புறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

ராம நாமத்துடன் பிரார்த்தனை நடைபெற்றது. துவக்கத்திலும் இறுதியிலும் தேவார பாடல்கள் சிலவற்றை நாம் பாடி பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!

==========================================================

[END]

4 thoughts on “ஈசனருளால் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை – Rightmantra Prayer Club

  1. அனனவரும் நல்ல்லாம் பெற எல்லாம்வல்ல மகாபெரிய்வாள் ப்ராத்தனை செய்வொவ்ம்.

    நாராயணன்.

  2. அருமை ஜி,

    அந்த கடைசி வரி அற்புதம்!

    “அவரையும் அவரது குடும்பத்தாரையும் பிரிய மனமில்லாது திருக்கயிலை சென்றார் பெருமான்.”

    கண்களில் நீர் வந்துவிட்டது அய்யா!

    சிவ சிவ

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

    1. அந்த வரி என்னுடைய வார்த்தை அல்ல. சம்பந்தப்பட்ட நாளிதழில் அதை எழுதியவரின் வார்த்தை.

  3. சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் .
    சிறுதொண்ட நாயனாருக்கு ஈசன் காட்சி கொடுத்த விதம் அருமை .
    ஒவ்வரு பதிவின் நிறைவில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் அந்த பதிவுக்கு கிரீடம் சூட்டியது போல் அமைந்துள்ளது .
    “வையகமும் வானும் வாழ்க! மறைமுதல் தர்மம் வாழ்க!
    செய்யும் நற்செயல்கள் வாழ்க! திருவருள் விளக்கம் வாழ்க!
    நையும் ஊழ் உடையார் தத்தம் நலிவகன்று இனிது வாழ்க!
    ஐயனாய் ஐயனானான் அவன் பதம் வணக்கம் செய்வோம்”!!!

    ஈசன் அருளால் எந்நாளும் இன்பமே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *