Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > ‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

print
சென்னையை புரட்டிப்போட்டுள்ள மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் சீரடையவில்லை. தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருக்கின்றன.

ஆசை, ஆசையாய் கடன்பட்டு கஷ்டப்பட்டு பாடுபட்டு வாங்கிய வீடு, கார், பைக், டி.வி, பிரிஜ், வாஷிங் மெஷின், இப்படி பல சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று மேற்கூறிய இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். சென்ற ஞாயிறு நள்ளிரவு வீட்டுக்குள் எவரும் எதிர்பாராமல் புகுந்த மழை நீரால் மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். மின்விநியோகம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல கால்நடைகள், தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகள் மடிந்திருக்கின்றன. அவற்றின் உடல் தேங்கியுள்ள நீரில் கிடந்து அழுகி வருகின்றன. தொற்றுநோய் இனி சென்னையை மிரட்ட வாய்ப்பிருக்கிறது.

SYLENRABABU RESQUE 1சென்னையில் இதற்கு முன்பு 1984, 1992, 2008 ஆகிய ஆண்டுகளில் இதே போன்று மழை பெய்திருந்தாலும் பாதிப்பு இந்த முறை தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது. காரணம் முறையற்ற ரியல்-எஸ்டேட் வணிகம், ஆக்ரமிக்கப்பட்டு ஃபிளாட்டுகளான நீர்நிலைகள் இப்படி எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் நீர் வழித்தடங்கள் மற்றும் கால்வாய்களை அடைத்துக்கொன்டுவிட நீரானது வெளியேற வழியின்றி போய்விட்டது.

ஏரிகளை ஆக்கிரமித்தால் என்ன நேரும் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிட்டது சென்னையைப் புரட்டிப்போட்ட கனமழை. நீர்நிலைகளாக இருந்த ஏரிகளையும் கால்வாய்களையும் மனைகளாக மாற்றி விற்பனை செய்ததன் விளைவுதான், இன்று சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதற்குக் காரணம். மனிதர்கள் என்றைக்குமே இயற்கையை எதிர்க்கவோ, வெல்லவோ முடியாது என்பதற்கு சென்னையின் மழை, வெள்ள பாதிப்புகள் ஓர் உதாரணம்.

chennaiite stranded in floods

பலர் தங்கள் பெற்றோர்களை இங்கே தனியே விட்டுவிட்டு அயல்நாட்டிற்கு சென்று பொருளீட்டி வருகின்றனர். வயதானவர்கள் வீட்டில் தனியே இருக்கும் போது இப்படி வீட்டுக்குள் வெள்ளம் வந்தால் என்ன செய்வார்கள்?

இந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்வோம். இதற்கென தனி பிரார்த்தனை பதிவு விரைவில் அளிக்கப்படவிருக்கிறது.

விகடன் இணைய தளத்தில் நாம் படித்த நெகிழ வைக்கும் பதிவு ஒன்றை இங்கே பகிர்கிறோம்.

=============================================================

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’

– வெள்ளத்தில் சிக்கிய விகடன் வாசகியின் வேதனை அனுபவம்

சினிமாக்களிலும் நாடகங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவதுபோல, நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித்தான் போகின்றன.

ஏழு நாட்களுக்கு முன், கடலூர் பகுதியின் வெள்ள நிலவரத்தை பட்டாணியை கொறித்தபடி டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த நான், கொஞ்சம்கூட நினைத்தும் பார்க்கவில்லை, அடுத்த வாரம் எங்கள் பகுதிக்கும் இப்படியொரு நிலைமை வருமென்று!

கனமழையால் முடிச்சூர் ரோடு, பாரதி நகரில் உள்ள எங்கள் வீட்டைச் சுற்றி இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர். மாடியில் தஞ்சமடைந்தோம். மூன்று நாட்களாக கரண்ட் கிடையாது. வீட்டுக்குள் மழைநீர் தேங்கிக்கிடந்தாலும், குடிக்கத் தண்ணீர் கிடையாது. மழைநீரைப் பிடித்துக் குடித்தோம். ஹெலிகாப்டரில் ரவுண்ட் வந்த மீட்புக் குழுவினர், உணவுப் பொட்டலங்களை எங்கள் பகுதியில் வீசினார்கள். ஹெலிகாப்டர் கண்ணில் பட்டபோதெல்லாம் “ தண்ணீர்… தண்ணீர்…” என்று நாங்கள் கத்தியும், சைகை செய்தும் கண்டுகொள்ளவே இல்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியிலிருந்த ஒருவர், “ நீங்க தண்ணீர் என்று சைகை செய்வதை அவர்கள் சாப்பாடு என்று நினைத்து அந்த பாக்கெட்டை இங்கே போட்டுவிடப் போகிறார்கள். தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு தூக்கி காட்டுங்கள்” என்று ஒருவர் யோசனை சொல்ல, அப்படியே செய்தோம். ஊஹூம்….. ஹெலிகாப்டர் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த பகுதியும் பாதிக்கப்படும்போது யாரையென்று அவர்கள் கவனிக்க முடியும்.

storm tamparam 600 11பால் வண்டி வர முடியாததால் பால், தயிர் கிடையாது. என்னைப் பற்றி கவலை கிடையாது. 90 வயதைத்  தாண்டிய அம்மா,  வீட்டில் எத்தனை விதமான உணவு வகை இருந்தாலும் இட்லி தோசைக்கும், சாதத்துக்கும் தயிரை மட்டுமே கேட்பார். ஆனால், நிலைமையைப் புரிந்து கொண்டு “எனக்கு தயிர் வேண்டாம். குளிராக இருக்கிறதே…. இட்லி மிளகாய்ப் பொடிக்கு எண்ணையே போதும் “ என்று சொன்னபோது மனதில் ஒரு வலி.

சென்னையில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது நானும் என் சகோதரியும், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து போர்வை, புடவை, துணிமணிகளை கலெக்ட் பண்ணிக்கொண்டு,  குறைந்தது நூறு பிஸ்கட் பாக்கெட், பன் என்று வாங்கிக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கு போய்க் கொடுத்து விட்டு வந்தோம். கொடுக்கத்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும் முன்பாகவே சிலர் ஓடி வந்து, எங்கள் கையிலிருந்த துணிகளை பறித்து சென்றார்கள். அவர்கள் நிலையை நினைத்து மனம் அழுதது.

இவ்வளவுக்கும் அவர்கள் நேற்று வரை நல்ல நிலையில் இருந்து, இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, இன்று இந்த நிலையில் இருக்கிறார்களே என்று நினைக்கும்  போது மனதுக்குள் ஒரு வலி தோன்றியது. புயல் ஒரே நாளில், மனிதர்களின் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது. சிலசமயம் தொலைக்காட்சி செய்திகளில், புயல் சூழ்ந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வீச, மற்றவர்கள் அதை ஓடி ஓடிப் பிடிக்கும்போது, “எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரகள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானே” என்று நினைப்பேன்.

ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜ வாழ்வில் நடந்து விடுகிறது.

எங்கள் பகுதிக்கு படகு வந்து  விருப்பப்பட்டவர்களை வெளியிடத்துக்கு கூட்டிச் சென்றது. அவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அந்த உணர்ச்சி மிகுதியில் குறைந்தது 10 பேரையாவது என் வீட்டில் வைத்துப் பராமரிக்க மனம் எண்ணியது. ஆனால் நாங்களே,  ‘மாடிக்கு எப்போது தண்ணீர் வருமோ தெரியலையே…’ என்ற பயத்தில் இருக்கும்போது, எதை நம்பி அவர்களை வீட்டுக்குள் அழைக்கமுடியும்? ஏதாவது முகாமுக்குப் போனால், இவர்களுக்கு சாப்பாட்டை ஏதோ ஒரு வகையில், யாரோ ஏற்பாடு செய்வார்கள். இங்கே வந்து, நம்மோடு சேர்ந்து தண்ணீர் இல்லாமல் இவர்களும் ஏன் தவிக்க வேண்டும்  என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

எங்கள் பகுதிக்குள் வந்த படகுக்காரர்களிடம் ‘பால், தண்ணீர் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்’ என்றோம். ‘கடை எதுவுமே திறந்திருக்கவில்லையே’ என்று கைவிரித்துவிட்டனர். உண்மைதான். தோழிகளோடு வெளியிடங்களுக்கு செல்லும்போது தோழிகள் என்னிடம் மட்டும் “அது வேண்டுமா… இது வேண்டுமா?” என்று விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். அதைப் பார்க்கும் சிலர், “அது என்ன அவங்களுக்கு மட்டும்  ஸ்பெஷல் உபசரிப்பு?” என்று கேட்கும்போது, “நாம வேணும்ங்கிறதை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். அவங்க கேட்க மாட்டாங்க. கூச்சப்படுவாங்க” என்று தோழிகள் சொல்வார்கள்.

p12cஹெலிகாப்டரைப் பார்த்து நான் “தண்ணீர்…” என்று கேட்டு சைகை செய்தபோது, இந்த காட்சி என் கண்முன் விரிந்தது. “அய்யோ.. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நம்ம நட்பு வட்டங்கள் பக்கத்தில் இல்லாமல் போயிட்டாங்களே…!” என்று வருத்தப்பட்டேன்.

இரண்டு நாட்கள் பால் இல்லாத காப்பியை அம்மாவுக்கு கொடுத்தாகி விட்டது. இன்றைக்கும் அதே நிலை என்றால் அம்மா தாங்க மாட்டாள் என்று மனதிற்குள் குமைந்துகொண்டிருந்தேன். எனது குரல் கடவுளின் காதில் விழுந்து விட்டது போலும். இன்று ஒரு லாரியில் “ஆரோக்கியா” பால் பாக்கெட்டுகளை எங்கள் பகுதியில் இலவசமாக சப்ளை செய்தார்கள். பால் பாக்கெட் கொடுத்த அவர்கள்,  ‘சாப்பாடு வேண்டுமா…?” என்று கேட்டார்கள். “சாப்பாடு வேண்டாம்… தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும்!” என்று நான் சொல்ல, “அடுத்த வேனில் அதைக் கொண்டு வருகிறோம்” என்றார்கள்.

பாக்கெட் பால் என் கையில் வந்தபோது, என் கையில் யாரோ கோடி கோடியாகக் காசுகளை கொட்டியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இக்கட்டான நேரத்தில் உதவிய அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும். சற்று நேரத்திலேயே கரெண்ட் வந்தது. விடுவிடுவென தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி விட்டோம்.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லா இடத்து பாதிப்புகளையும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த நான், எங்கள் பகுதி வெள்ள நிலவரத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. தொலைக்காட்சிகளை பார்த்த வெளியூர் உறவுகள், உள்ளூர் நட்பு வட்டங்கள் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு கேட்ட முதல் கேள்வி,  “ இப்பத்தான் டீ.வியில பார்த்தோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க… சாப்பிட்டீங்களா ?“ என்பதுதான்.

அத்தனை பேருக்கும் நான் சொன்ன ஒரே பதில், “ருசியாக செய்து சாப்பிட வழியில்லை என்றாலும் பசிக்கு சாப்பிட தேவையான பொருள் இருக்கிறது. காய்கறி இல்லை. ஆனால் அப்பளம் இருக்கிறது. உங்களால் முடிந்தால், மின்சாரம், தண்ணீர், பால் இந்த மூன்றுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க “ என்பதுதான்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நம்மை நம்பி  நம்மோடு இருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க வழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் மழை மீது கோபம் வந்தது.

ஒரு ராஜாவின் மகனுக்கு, அதாவது ஒரு இளவரசனுக்கு பன்றியால்தான் மரணம் நேரும் என்று ஜோதிடர் சொல்ல, “என் மகன் பன்றி இருக்கிற இடத்துக்குப் போக வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி மரணம் நேரும்?” என்று கேட்டு கோபப்பட்ட ராஜா,  அந்த ஜோதிடரை தூக்கில் போடவேண்டுமென்று சொல்ல, அதற்கு ஜோதிடர், “ நான் குறிப்பிடும் அந்த வயதில் அவர் பன்றியால் மரணமடையாமல் உயிரோடு இருந்தால் அதன் பிறகு என்னை தண்டியுங்கள்” என்று சொல்ல, ராஜாவும் சம்மதித்து ஜோதிடரை சிறையில் வைத்தார்.

முடிவில் ஜோதிடர் சொன்னது நடந்தது. அந்த நாட்டுக் கொடியில் உள்ள சின்னம் பன்றி. காற்றில் கொடிக்கம்பு உடைந்து, அரண்மனை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் மீது விழ, கொடியிலிருந்த தங்கப் பன்றி இளவரசன் நெஞ்சில் குத்தி அவன் இறந்து போனான். இதுதான் விதியின் செயல்.

இப்படித்தான் தனுஷ்கோடி புயலின்போது, நடிகர் ஜெமினி கணேஷ் – சாவித்திரி தம்பதியர் தங்கள் மகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்குள் மாட்டிக் கொண்டனர். அதுபற்றி பின்னர் பேட்டியளித்த ஜெமினி, “எங்கள் வீட்டில் எத்தனையோ பேருக்கு தினம் தினம் சாப்பாடு கிடைக்கும். நாங்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாள் ஒன்று வரும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை“ என்று சொல்லியிருந்தார்.

அப்படித்தான் வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்துக் நாங்கள் கைக் காட்டி, தண்ணீரும் சாப்பாடும் கேட்க வேண்டும் என்ற ஒரு கணக்கை ஆண்டவன் எப்போதோ போட்டு வைத்திருக்கிறான் போலும்   .

எல்லாம் இருந்தும் தற்காலிகமான இந்த நிலைக்கே நாம சுய பச்சாதாபம் அடைகிறோமே. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக அகதிகளாக வேறோர் இடத்தில் தஞ்சம் அடைந்து, எது நிரந்தரம் என தெரியாமல் தவிப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கும்போதுதான் துயரம் மேலோங்குகிறது.

– அருணா எஸ்.சண்முகம் | www.vikatan.com

இந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக செய்வோம். இதற்கென தனி பிரார்த்தனை பதிவு விரைவில் அளிக்கப்படவிருக்கிறது.

3 thoughts on “‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

 1. மழை/புயல் என்று ஒன்று இல்லாதபோது நான் என் சிறு வயதில் இந்த கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன் //. அந்த மாதிரி சென்னை இப்போ இந்த கொடுமைகளை காண்கிறது.

  யார் யாரெல்லாம் உதவி செய்ய முடியுமோ அந்த விதத்தில் செய்ய வேண்டும்/ கடவுளே ஏன் இப்படி சோதனை செய்கிறாய் ?.

  டிவி யில் பார்க்கும் பொது மனது வெடியை போலே வெடிக்கிறது.

  கடவுளே எல்லோருக்கும் உதவி புரி .

  எல்லோரும் முடிந்தவரை ஒரு நாள் சம்பளத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க முன் வரவேண்டும். அரசு மட்டுமே செய்யும் என்று இருக்க கூடாது .
  மன பாரத்துடன்
  ரவிச்சந்திரன்
  கர்நாடகா

 2. இந்த பதிவை படிக்கும் பொழுது மனது கனக்கிறது. இயற்கைக்கு மாறாக செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்கள் எல்லோரும் உணர்ந்து இருப்பார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். 2008 ம் வருட மழையின் பொழுது எங்கள் வீடும் தண்ணீரால் மூழ்கி இரண்டு நாட்கள் அவஸ்தை பட்டோம். அப்பொழுது நாங்கள் பட்ட அவஸ்தை சொல்ல முடியாது. இப்பொழுது இந்த பாதிக்க பட்ட மக்களை பார்க்கும் பொழுது எனக்கு 2008 புயல் ஞாபகம் வருகிறது

  நேற்று whatsapp மெசேஜ் மூலம் பிரார்த்தனை யாருக்கு செய்ய வேண்டும் என்ற திரு பாலுவின் மெசேஜ் பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்

  லோகா சமஸ்தா சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்
  நன்றி
  உமா வெங்கட்

 3. அண்ணா இதில் நான் கூறி இருப்பது என்னுடைய சிறு ஆதங்கம் யார் மனதையும் புண்படுத்த அல்ல,

  “அடுக்கடுக்காக சீட்டு கெட்டு போல் வீடுகளை கெட்டி விட்டார்கள். எப்படி இனி வரப்போகும் அழிவுகளில் இருந்து சென்னை போன்ற நகரங்களை காப்பாற்றுவது (கண்டிப்பாக இது முடிவு இல்லை இது தொடக்கம் மட்டுமே) நீர் நிலைகள் அனைத்தும் ஆக்ரமிக்க பட்டுள்ளன. எப்படி செரி செய்ய போகிறார்கள்.

  அப்படியே புது ஆணைகள் பிறப்பித்தாலும் இப்பொழுது வாழ்ந்து வருபவர்கள் எங்கு போக சொல்வது. அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரு பிளாட் வாங்குவதில் அடங்கி விட்டது சொந்த கிராமங்களை மறந்து அகதிகளாய் சில தலைமுறைகளுக்கு முன் சென்னையில் ஆரம்பித்து இன்று தலைமுறைகள் கடந்தும் தீவுக்குள் மாட்டி கொண்ட அகதி போல் தான் இருக்கிறார்கள். பல படித்த பொறியாளர்களும் மருத்துவர்களும் இதில் அடக்கம்.

  என் தாத்தா என் தந்தைக்கும் என் தந்தை எனக்கும் சொல்லி தந்த பாடங்கள் சானல், ஆறு, கழிமுகம் ஏரி என்றால் என்ன? அவை எதற்கு பயன்படும்? எப்படி உருவாகும் ?என்று கூறியவற்றை என் வாரிசுகளுக்கு சொல்லி கொடுப்பது என் கடமை. இதை எல்லாம் ஏன் இந்த தலைமுறையில் மறந்துவிட்டார்கள். எல்லோரும் நகரத்தை நோக்கி படை எடுத்து அங்கு கால காலமாய் வாழ்ந்து வரும் பூர்வீக குடியினரின் நிம்மதியையும் கெடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

  இறைவன் இப்பொழுது நமக்கு சிறு எச்சரிக்கை மட்டுமே செய்துள்ளார். இனியும் சுதாரிக்க வில்லை என்றால் தஞ்சை கோயில், கல்லணை போன்ற நுட்பமான கட்டிட கலைகள் உலகுக்கு எடுத்து கூறிய தமிழ் இனம் புதிய பரிமாண இந்த உதவாத அடுக்கு மாடி கட்டிட அமைப்புகளால் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  இது சென்னை மக்களுக்கு மட்டும் இல்லை தமிழகத்தில் எந்த ஊரில் எல்லாம் ஏரி குளங்களை நிரப்பி பேருந்து நிலையம் அமைதுள்ளர்களோ வீடு கெட்டி உள்ளார்களோ அனைவருக்கும் தான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *