Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > கை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு!

கை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு!

print
“ஒரு இலக்கை அடையவேண்டும் என்று தீர்மானித்து நீ உழைக்க ஆரம்பித்துவிட்டால், உன்னை தடுக்கக்கூடிய சக்தி இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது!” சுவாமி விவேகானந்தர் சொன்ன இந்த வாக்கியம் எத்தனை எத்தனை உண்மை!

தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை. தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

சற்று மனசாட்சியை தொட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்களின் இன்றைய நிலைக்கு காரணம் 90% நீங்கள் தானே? பிறகு எதற்கு கடவுள் மீதும் விதி மீதும் பழிபோடவேண்டும்?

எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், “அதனால் என்ன? அடுத்து என்ன?”

நல்ல வழி தானாகவே பிறக்கும். கீழ்காணும் சம்பவம் உணரத்துவதும் அதைத் தான்.

மாலைமலர் இணையத்தில் நாம் படித்து வியந்த கட்டுரை ஒன்றை இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

================================================================

27sld3தன்னம்பிக்கையால் உயர்ந்த ஏழை விவசாயி!

அரியானா மாநிலத்தின் யமுனா நகரில் உள்ள தம்லா கிராமத்தை சேர்ந்தவர், தரம்வீர் கம்போஜ் (51). 1986-ம் ஆண்டு தனது தந்தையுடன் ஏற்பட்ட வாய்த்தகராறில் 23 வயது இளைஞராக வீட்டை விட்டு வெளியேறிய தரம்வீர், பழைய டெல்லிக்கு வந்து வேலை தேடி திரிந்தார்.

அவர் எதிர்பார்த்ததை போல் எந்த வேலையும் கிடைக்காததால் வாடகைக்கு கை ரிக்‌ஷா இழுத்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டி வந்தார். ஆட்களை ஏற்றிக் கொண்டு வியர்க்க, விறுவிறுக்க ரிக்‌ஷாவை இழுத்தபடி, ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கும் ரெய்சினா ஹில்ஸ் பகுதியின் இயற்கை எழிலையும், ராஷ்ட்டிரபதி பவனின் அட்டகாசமான பிரமாண்டத்தையும் ஒரு சராசரி கிராமவாசியாக பார்த்து, ரசித்து, மகிழ்ந்த தரம்வீருக்கு அவ்வப்போது காரி பவ்லி பகுதியில் காய்கறிகள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகளை ஏற்றிச் செல்லும் ‘சவாரி’யும் கிடைப்பதுண்டு.

அந்த அரிய வகை மூலிகைகளை எல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்த அவர், ஒவ்வொரு மூலிகையின் மருத்துவ பலன்களையும் வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்து மனதில் பதிய வைத்துக் கொண்டார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கிய தரம்வீர், அரியானாவில் உள்ள சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல நேர்ந்தது.

அங்கு விவசாய தொழிலில் ஆர்வம் காட்டிய அவர், வேளாண்மை உற்பத்தியில் அதிக மகசூல் பெறும் நவீன வழிமுறைகளை கடைபிடித்து, தனது பண்ணை விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தினார். அந்த பகுதியிலேயே முதன்முதலாக ‘ஹை ப்ரீட்’ ரக தக்காளிகளை பயிரிட்டு 1990-களில் சாதனை படைத்த தரம்வீருக்கு விவசாயம் சார்ந்த தொழில் கருவிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

27sld2இதன் விளைவாக, டேப் ரெக்கார்டர் மோட்டர் மூலம் இயங்கும் சிறிய ரக மருந்து தெளிப்பான் இயந்திரம், பயிர்களை அழித்து நாசப்படுத்தும் புழு, பூச்சிகளை கவர்ந்து இழுத்து கொல்லும் ‘பொறி’ ஆகியவற்றையும், வளர்ந்து நிற்கும் கரும்பு பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் நிலத்தை உழும் நவீன ரக கலப்பை இயந்திரம் ஆகியவற்றையும் தனது சொந்த யோசனையினாலும், விடாமுயற்சியினாலும் இவர் உருவாக்கினார்.

இந்த கண்டுபிடிப்புகளின் உச்சகட்டமாக ஒரு மணி நேரத்துக்குள் 200 கிலோ தக்காளியை பிழிந்து கூழ் தயாரிக்கும் இயந்திரத்தை கடந்த 2008-ம் ஆண்டு தரம்வீர் தயாரித்தார். இந்த நவீன இயந்திரத்தின் மூலம் இதர பழ வகைகள், மூலிகை மற்றும் மலர்களில் இருந்து சாற்றையும், ‘எசென்ஸ்’சையும் மிக எளிதில், விரைவாக பிரித்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டின் ஜனாதிபதி மாளிகை நாட்டில் அபூர்வமான புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 5 நபர்களூக்கு ஆண்டுதோறும் அழைப்பு அனுப்பி, வரவழைத்து 20 நாட்கள் விருந்தினராக அங்கு தங்க வைத்து கவுரவித்து வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக வந்து தங்கும்படி, தரம்வீர் கம்போஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, கடந்த முதல் தேதியில் இருந்து அவர் தனது குடும்பத்தாருடன் ராஷ்ட்டிரபதி பவனில் தங்கியுள்ளார்.

இப்போதும், ரெய்சினா ஹில்ஸ் பகுதியின் இயற்கை எழிலை தரம்வீர் கண்டு, ரசித்து, மகிழ்கிறார். வயிற்றுப் பசியுடன் கை ரிக்‌ஷா இழுக்கும் கூலித் தொழிலாளியாக அல்ல; அயராத உழைப்பால் அருஞ்சாதனை படைத்து, ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கும் கவுரவத்துக்குரிய ஒரு விருந்தாளியாக…

‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொருள் பொதிந்த மந்திர வாசகங்களுக்கு சமீபத்திய கண்கண்ட உதாரணமாக திகழும் தரம்வீரை பார்த்து, மேலும் பல உழைப்பாளிகள், ‘இந்த கவுரவத்தை அடைவதற்கு, நாமும் ஏதாவது சாதனையை செய்து காட்ட வேண்டும்’ என்று முயற்சித்தால் வெகு விரைவில் அந்த இலக்கினை அவர்களும் எட்டி விடலாம் என்பது நிச்சயம்.

[END]

8 thoughts on “கை ரிக்‌ஷா இழுத்தவர் ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்த வரலாறு!

  1. வாசித்த வரிகள்:

    செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால், தரம் உயரா விட்டால், செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோ, கவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

    *நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

    செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

    நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.

    உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
    நீக்குகிறது. 1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.

    வால்டேர்

  2. ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொருள் பொதிந்த மந்திர வாசகங்களுக்கு உதாரணமாக திகழும் தரம்வீரை பார்த்து, மேலும் பல உழைப்பாளிகள், ‘இந்த கவுரவத்தை அடைவதற்கு, நாமும் ஏதாவது சாதனையை செய்து காட்ட வேண்டும்’ என்று முயற்சித்தால் வெகு விரைவில் அந்த இலக்கினை அவர்களும் எட்டி விடலாம் என்பது நிச்சயம். –

  3. தரம்வீர் அவர்களின் கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரை ஜனாதிபதியின் மாளிகையின் வாசலிலிருந்து உள்ளே விருந்தாளியாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

    நண்பர் வால்டேர் அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்ட கருத்து இன்றைய சமுதாயத்திற்கு நூறு சதவிகிதம் பொருந்துகிறது. குறிப்பாக “இது போன்ற உழைப்பு நாட்களை நகர்த்தலாம் ஆனால் வாழ்கையை நகர்த்தாது” என்கிற வரி பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டும்.

    கருத்து பகிர்வுக்கு நன்றி வால்டேர்.

  4. மிகவும் அருமையான தன்னம்பிக்கை தரும் பதிவு. நாம் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் அதையே வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும். சாதாரண உழைப்பாளியிலிருந்து ஜனாதிபதி மாளிகையின் விருந்தினராக உயர்ந்து சரித்திரத்தில் இடம் பெற்ற திரு தன்வீர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். .

    திரு வால்டர் அவர்கள் தனது கருத்துகளை அழகாக பதிவு செய்து இருக்கிறார்.

    //உழைப்பே உயர்வு//

    ”இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு//

    It means ,””Who pain as pleasure takes, he shall acquire the bliss to which his foes in vain aspire “”

    நன்றி
    உமா

  5. நாம் செய்யும் தொழில் எதுவாயினும் அதில் உண்மையான ஈடுபாடும், கடின உழைப்பும், updation இருந்தால் வெற்றி என்பது நமக்கு கடினம் இல்லை.
    நமது தோல்விக்கு காரணம் நமது சோம்பேறிதனம் தான்.

    ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’

  6. தரம்வீர் சிறந்த கர்மவீரர் .

    ப.சங்கரநாராயணன்

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *