Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

print
ன்று ‘அன்னையர் தினம்’. நம்மை பத்து மாதம் சுமந்து, பெற்று, எத்தனையோ தியாகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் நடுவே நம்மளை வளர்த்து ஆளாக்கிய நம் நம் அன்னையின் தியாகத்தை நினைவு கூர வேண்டிய நாள்.

உங்க பெத்தவங்களை சந்தோஷமா நீங்க வெச்சிருந்து அவங்களை மதிச்சி நடந்து வந்தாலே போதும்… உலகம் உங்கள் காலடியில் ஒரு நாள் கிடக்கும் என்பதை உணர்த்தும் வரலாறு ஒன்றை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறோம்.

தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்!

ஜத்வா, சாத்யகி என்ற இரு நடுத்தர வயது கணவன் மனைவி வடநாட்டில் வாழ்ந்து வந்தனர். பக்தியும் ஒழுக்கமும் நிரம்பிய அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு புத்திரப் பேறு இல்லை. ஸ்ரீமன் நாராயணனை அனுதினமும் இதற்காக உருகி உருகி பிரார்த்தனை செய்ய, இவர்களது பிரார்த்தனைக்கு மனமிரங்கிய இறைவன் அருளால் சாத்யகி கருத்தரிக்கிறார். சில மாதங்களில் அழகான ஆண் குழந்தை ஒன்று தம்பதிகளுக்கு பிறக்கிறது.

அக்குழந்தைக்கு ஹரி என்று பெயர் சூட்டுகிறார்கள். ஹரியை தம்பதிகள் இருவரும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். சகல சாஸ்திரங்களையும் அவனுக்கு கற்றுத்தருகிறார்கள். ஆனால், வயது கூட கூட, ஹரிக்கு படிப்பு ஏறாமல், கூடா சகவாசத்தால் தீய வழிகளில் செல்லத் துவங்குகிறான். ஆகையால் கவலை கொண்ட பெற்றோர்கள் அவனுக்கு கால்கட்டு போட விரும்பி தங்கள் குலத்தில் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இவர்கள் நேரம், வந்த மருமகளும் போகப் போக தனது வேலையை காட்டுகிறாள். நாம் நன்றாக தனிமையில் சந்தோஷமாக இளமையை கழிக்கவேண்டிய இந்த சமயத்தில் இந்த இரண்டு கிழங்களும் ஏன் வீட்டில் இருக்கவேண்டும் என்று அவளுக்கு தோன்றுகிறது. தலையணை மந்திரத்தை கணவனுக்கு ஓதி, பெற்றவர்கள் பால் அவனுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்கிறாள்.

ஏற்கனவே பெற்றவர்களை மதிக்காத அவன், மனைவியின் பேச்சை கேட்டு, அவர்களை இன்னமும் கொடுமைப் படுத்துகிறான்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

என்ற குறளுக்கேற்ப, அன்பு மகனின் சுடு சொற்கள் தாங்க முடியாது, வீட்டை விட்டு வெளியேறி காசிக்கு சென்று அங்கேயே தங்களது இறுதி காலத்தை கழித்துவிடுவது என்று முடிவு செய்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அந்த நிலையிலும் அவர்கள், மகனை சபிக்கவில்லை. “நீ எந்தக் குறையும் இல்லாம நல்லாயிருக்கனும்” என்று கூறி வாழ்த்திவிட்டு தான் செல்கின்றனர்.

கண்டிக்கவும் புத்திமதி கூறவும் இருந்த பெற்றோர்களே போய்விட்ட பிறகு ஹரியை பற்றி கேட்கவேண்டுமா என்ன. உள்ளூர் வேசி ஒருத்தியிடம் அவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அவள், ஹரிதாஸ் ஓரளவு வசதிமிக்கவன் என்று தெரிந்துகொண்டு அவனுடைய சொத்து மற்றும் அவன் மனைவி சீதனமாக கொண்டுவந்துள்ள பொருட்கள் ஆகியவறை மனதில் வைத்து ஹரியை தனது காம வலையில் வீழ்த்துகிறாள். அதன் பயனாக வீட்டை மறந்து தாசியின் காலடியே கதி என்று ஹரி கிடக்கலானான். அங்கு ஹரியின் மனைவி, தனது மாமனார் மாமியாரை விரட்டிவிட்டது எவ்ளோ பெரிய தவறு என்று புரிந்து வருத்தப்படுகிறாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது.

ஒரு நாள் அந்த தாசி, ஹரி காமத்திலும் போதையிலும் திளைக்கும் சமயத்தில் அவனது சொத்துக்களை எழுதி வாங்கிவிடுகிறாள். பின்னர் அவனது வீட்டிலிருந்தே உள்ளூர் பஞ்சாயத்தார் மூலம் விரட்டிவிட்டுவிடுகிறாள்.

ஹரிக்கு முதன் முறையாக நாம பண்ணின பாவத்துக்கு இது தண்டனை போலும் என்று உரைக்கிறது. அப்போது கூட அப்பா அம்மாவை அவன் கொடுமைபடுத்தியதை எண்ணி அவன் வருந்தவில்லை. தன் சொத்துக்கள் போய்விட்டதே என்று தான் வருந்துகிறான். இந்நிலையில், ஊர் அரசனுக்கு ஹரிதாஸ் தாசியால் வஞ்சிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்த விஷயம் தெரிந்து, தாசியை சிறையிலடைத்துவிட்டு ஹரியிடம் சொத்துக்களை மீண்டும் ஒப்படைக்கிறான்.

மீண்டும் வீட்டுக்கு வரும் ஹரிக்கு புதிய ஞானோதயம் ஒன்று ஏற்படுகிறது. தாசியிடம் சகவாசம் வைத்துக்கொண்ட பாவம் தீர காசிக்கு போய் குளித்தால் தான் ஆச்சு என்று தோன்றுகிறது. உடனே காசிக்கு கிளம்புகிறான். அவனது மனைவியும் உடன் வர பிரியப்பட, அவளையும் கூட்டிக்கொண்டு புறப்படுகிறான். தேவையான உணவுப் பண்டங்கள் மளிகை பொருட்கள் முதலியவற்றை எடுத்துக்கொண்டு கணவன் மனைவி இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு காசிக்கு கிளம்புகிறார்கள்.

அங்கே பல நூறு மைல்களுக்கு முன்னே அவனது பெற்றோர்கள் கால்நடையாக பஜனை கோஷ்டி ஒன்றுடன் காசிக்கு நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்களது அருமை மகன் மனைவியுடன் குதிரையில் கிளம்புகிறான்.

காசிக்கு செல்லும்வழியில் ஒரு நாள் மாலை கானகத்தின் நடுவே ஒரு சிறிய ஓடைக்கு அருகே குடிசை போன்ற ஒரு சிறிய ஆஸ்ரமத்தை காண்கின்றனர். அந்த ஆஸ்ரமம், குக்குடன் என்ற ஒருவனுக்கு சொந்தமானது. அவனிடம் சென்று, “காசி இன்னும் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கிறது?” என்று கேட்கிறான். அதற்க்கு குக்குடன், “காசியா…? அது ஏங்கே இருக்கிறதென்று எனக்கு தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் இங்கே தான் இருக்கிறேன். கண் தெரியாத என் அம்மாவையும், கால்கள் இல்லாத என் அப்பாவையும் உடனிருந்து கவனிக்கவேண்டியிருப்பதால் இந்த காட்டை விட்டு நான் வெளியே கூட சென்றதில்லை இதுவரை!” என்கிறான்.

KukkudanJ

சரி தான். இவன் ஒரு அப்பாவி. எனவே இவன் வீட்டருகே இரவு தங்குவது தான் பாதுகாப்பானது என்று கருதி ஆஸ்ரமத்துக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அடியில் ஹரியும் அவன் மனைவியும் தங்குகின்றனர்.

உணவை சாப்பிட்ட களைப்பில் மனைவி உறங்கிவிடுகிறாள். இவர்களுடன் வந்தவர்கள் பக்கத்து மரத்தடியில் உறங்கிவிடுகின்றனர்.

ஆனால் ஹரிக்கு மட்டும் தாசி தனக்கிழைத்த துரோகத்தை எண்ணி எண்ணி உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். அதிகாலை இருக்கும். ஏதோ ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்க்கிறது. எழுந்து சென்று என்னவென்று பார்க்கிறான். சற்று தொலைவில் அந்த ஆஸ்ரமத்தை நோக்கி மூன்று பெண்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். மூவரும் கிழிந்த கந்தலான ஆடைகள் அணிந்துகொண்டு தொழுநோயால் பீடிக்கப்பட்ட முகத்துடன் அருவருப்பாக காட்சியளிக்கின்றனர். மூவரும் சென்று அந்த ஆஸ்ரமத்தை கூட்டி பெருக்கி, சாணம் தெளித்து கோலமிட்டு, பல்வேறு பணிவிடைகள் செய்கின்றனர். பின்னர் அந்த ஆஸ்ரமம் வாயிலில் விழுந்து வணங்குகின்றனர். அவர்கள் தோற்றம் உடன தேவலோக குமரிகள் போல அழகாக மாறிவிடுகிறது.

இதை தூரத்தில் இருந்து காணும் ஹரிக்கு ஒரே வியப்பு. சந்தேகம். பொண்ணுங்க ஏன் அங்கே போறாங்க என்று. (புத்தி அப்படி!). உடனே அந்த பெண்கள் முன்னாடி ஓடிப் போய் நிற்கிறான். இவனை பார்த்தவுடன் அவர்கள் திடுக்கிட்டு சாக்டையில் இருந்து வரும் பன்றியை எதிரே பார்த்தால் விலகிப் போவோமே அப்படி பதறி விலகுகிறார்கள். “அய்யோ இவனையா பார்த்தோம்? மகா பாபியல்லவா இவன். பாபங்களின் பிறப்பிடமல்லவா இவன்?” என்று அலறுகின்றனர்.

ஹரிக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. “நீங்கள் எல்லாம் யார்? வரும்போது பிச்சைக்காரிகளை போல வந்தீர்கள்… போகும்போது இப்படி இத்துனை அழகாக போகிறீர்களே?” என்று கேட்கிறான்.

இவனுக்கு பதிலளிக்க அவர்கள் விரும்பாமல் இவனை கடக்க எத்தனிக்க, “எனக்கு பதில் சொல்லாமல் நீங்கள் இங்கிருந்து போகமுடியாது” என்று அவர்களை மறிக்கிறான்.

இவனுக்கு பதில் சொல்லிவிட்டு சீக்கிரம் இவனது பார்வையில் இருந்தே தொலைந்துவிடவேண்டும் என்று முடிவு செய்த அவர்கள் ஹரியிடம், “நாங்கள் கங்கா, யமுனை, சரஸ்வதி, ஆகிய புண்ணிய நதிகள். மக்கள் அன்றாடம் அவர்களது பாவங்களை எங்களிடம் நீராடி போக்கிக்கொள்வதால், நாங்கள் குரூரமான உருவத்தை அடைகிறோம். இந்த ஆஸ்ரமத்தில் உள்ள குக்குடன் என்பவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் இருக்கும் திசையை வணங்கி மீண்டும் எங்கள் சுய உருவத்தை பெறுகிறோம்.” என்கிறார்கள்.

இவன் நம்பமுடியாமல் அவர்களை பார்க்கிறான்.

“நீங்கள் சொல்வது உண்மையென்றே வைத்துக்கொள்வோம், புண்ணிய நதிகள் நீங்கள வந்து பணிவிடைகள் செய்து உங்கள் பாவத்தை போக்கிக் கொள்ளுமளவுக்கு இந்த ஆஸ்ரமத்தில் உள்ளவன் என்ன அவ்வளவு பெரிய புனிதனா? காசி எங்கே இருக்கிறதென்று கூட தெரியாத மடையன் ஆயிற்றே அவன்?”

“அடே…பாவி. எங்கள் பாவங்களை போக்கும் தெய்வம் அவர். அவரை மரியாதையின்றி பேசாதே. கண்களும் கால்களும் அற்ற பெற்ற தாய் தந்தையரையே உற்ற துணையாக கொண்டு, அவர்களுக்கு பணிவிடைகள் செய்து அவர்களை பூஜித்து வாழ்ந்து வருபவர் அவர். அவருக்கு பணிவிடைகள் செய்து அவர் இருக்கும் திசையை வணங்கினால் அன்றாடம் மக்கள் எங்களிடம் கழுவும் எங்கள் பாபங்கள் தொலையும், எங்களுக்கு ஏற்படும் அருவருப்பான உருவம் நீங்கி மீண்டும் சுய உருவத்தை பெறுவோம் என்று அகத்திய மகரிஷி எங்களுக்கு அருளியுள்ளார். ஆனால் உன்னைப் போன்ற துராத்மாக்களின் நிழல் கூட எங்கள் மீது பட்டால் எங்களுக்கு தீங்கு தான். இதோ பார்….!” என்று கூறி ஹரியின் நிழலில், மூவரும் ஒரு நொடி நிற்க, மீண்டும் அருவருப்பான உருவம் பெற்றுவிடுகின்றனர். “பார்த்தாயா… உன் நிழலின் ஸ்பரிசத்தால் எங்களுக்கு நேர்ந்த கதியை? இதனால் தான் நாங்கள் உன்னைக் கண்டவுடன் விலகி சென்றோம்.” என்று கூறி, மீண்டும் குக்குடன் இருக்கும் ஆசரமம் இருக்கும் திசையை நோக்கை விழுந்து வணங்குகின்றனர். மீண்டும் தங்கள் அழகிய உருவத்தை பெறுகின்றனர்.

(கெட்டவங்க நிழல் கூட நம்ம மேல படக்கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்போ புரியுதா?)

நடப்பதை எல்லாம் பார்த்த ஹரிக்கு ஒரு கணம் தலை சுற்றுகிறது. “அப்பா அம்மாவுக்கு பணிவிடைகள் செய்து வரும் ஒருவன் இருக்கும் இடத்தை கூட்டி பெருக்கி, அவன் இருக்கும் திசையில் விழுந்து வணங்கினால் இத்துனை பெருமை என்றால் அதை அனுஷ்டித்து வரும் குக்குடன் எவ்ளோ பெரிய பேறு பெற்றவன் என்பதை புரிந்துகொள்கிறான். அன்றாடம் லட்சகணக்கான மக்கள் நீராடி தங்களின் பாவத்தை போக்கிக்கொள்ளும் புண்ணிய நதிகளே தங்கள் பாவத்தை இவனிடம் தீர்க்கிறதே என்றால் குக்குடன் எந்தளவு பெருமை பெற்றவர் என்று புரிந்துகொள்கிறான். மேலும், தன் பெற்றோருக்கு தான் செய்த கொடுமைகள் கண் முன்னே நிழலாடுகின்றன. கண்ணீர் வடிக்கிறான். கங்கை யமுனை சரஸ்வதி ஆகியோரின் கால்களில் “என்னை மன்னித்து விடுங்கள் தாயே. இந்தப் பாவியை மன்னித்துவிடுங்கள் தாயே” என்று கதறியபடி விழுகிறான்.

“நீ விழவேண்டியது எங்கள் கால்கள் அல்ல… உன் பெற்றோரின் கால்கள். இனியாவது உன் பெற்றோர் மனம் குளிரும்படி நடந்துகொள்.” என்று கூறிவிட்டு மறைகின்றனர் அவர்கள்.

ஹரி, உடனே தனது மனைவியை எழுப்பி அவளை அழைத்துக்கொண்டு நடந்ததை கூறி பெற்றோரை தேடி செல்கிறான். அவர்களை காசிக்கு முன்னதாக கண்டுபிடித்து, அவர்கள் காலில் விழுகிறான். தன்னை மன்னிக்கும்படி கதறுகிறான். மகனுக்கு இப்போதாவது புத்தி வந்ததே என்று மகிழ்ந்த அவன் பெற்றோர் அவனை வாரியணைத்து முத்தமிடுகின்றனர்.

அவர்கள் உடனிருந்து காசி முதலான் புண்ணிய ஷேத்ரங்களை தரிசிக்க செய்துவிட்டு அந்த புண்ணிய பூமியிலேயே அவர்களுடன் எஞ்சியுள்ள காலத்தை கழிக்க விரும்பி, அங்கேயே ஒரு குடிசையை கட்டிக்கொண்டு தங்குகிறான்.

ஒரு நாள் பாயில் படுத்திருக்கும் பெற்றோர்களுக்கு கால்கள் அமுக்கி பணிவிடை செய்துகொண்டிருக்கிறான். அப்போது வாசலில் இருந்து ஒரு குரல் கேட்கிறது… பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குக்குடன் வேடத்தில் வந்து கூப்பிடுகிறார். “ஹரி… நான் குக்குடன் வந்திருக்கிறேன். ஒரு நிமிடம் எழுந்து வா வெளியே…” என்று.

ஆனால், ஹரியோ, “என்ன சுவாமி… வந்திருப்பது யார் என்று எனக்கு தெரியாதா? என் கண்ணனை நான் அறியமாட்டேனா?” என்று பதிலளிக்கிறான்.

அங்கே சாட்சாத் பகவான் கிருஷ்ணர் இவன் குடிசை வாசலில் வாயில் புல்லாங்குழலும், தலையில் மயிற்பீலி அணிந்தும் இடுப்பில் கைவைத்து அழகாக நின்றுகொண்டிருக்கிறார்.

“ஹரி.. சற்று வெளியே வா” என்று அண்ட சராசரங்களையும் கட்டி காப்பவன் கூப்பிட, ஹரி மறுக்கிறான். “மன்னிக்கவும் கிருஷ்ணா. என் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். இப்போது நான் எழுந்தால் அவர்களது உறக்கம் தடைபடும். அவர்கள் விழித்த பின்னர் வருகிறேன். அது வரை இந்த கல்லின் மீது நின்றுகொண்டிரு” என்று கூறி செங்கல் ஒன்றை எடுத்து போடுகிறான்.

கிருஷ்ணர் புன்னகைத்தபடி, “உன் பெற்றோரை நான் எழுப்புகிறேன். கவலைப்படாதே”. என்று கூறி தனது புல்லாங்குழலை இப்படி அப்படி அசைக்க, உறக்கத்திலிருந்து விழிக்கும் அவன் பெற்றோர் பரம்பொருள் வெளியே நிற்பதை பார்த்து பதறியடித்தபடி ஓடிவருகின்றனர்.

“என்ன அபச்சாரம் செய்துவிட்டாய் ஹரி… ஆண்டாண்டுகாலம் தவம் செய்தாலும் பார்க்கமுடியாத மணிவண்ணனை இப்படி எங்கள் பொருட்டு வெளியே காக்க வைத்துவிட்டாயே?” என்று பதற, அதற்கு கிருஷ்ணர், “இந்த உலகில் கண்கண்ட தெய்வங்கள் என்றால் அது பெற்ற தாய் தந்தையரே. அவர்களை பூஜித்து அவர்களுக்கு ஒருவன் பணிவிடை செய்துவந்தாலே என்னை பூஜித்து வந்ததாக கருதி மகிழ்வேன். தாய் தந்தையரான உங்களுக்கு பணிவிடை செய்து பூஜித்து வந்த காரணத்தினால் தான் ஹரிக்கு நாம் தரிசனம் தந்தோம். ஹரி செங்கலை போட்டு எம்மை நிற்கச் சொன்ன இந்த இடத்திலேயே நாம் நிரந்தரமாக கோவில் கொண்டு பண்டரிநாதனாக பக்தர்களுக்கு அருள் பாலிப்போம். இந்த திவ்யதேசமும் பண்டரிபுரம் என்று இனி வழங்கப் பெறும்.” என்று கூறி அப்படியே பகவான் சிலையாகிவிடுகிறார்.

Pandarinathan

மகாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் இன்னைக்கும் இருக்குங்க இந்த கோவில்.

(இந்தக் கதை தாங்க, எம்.கே.தியாகராஜா பாகவதர் நடிச்ச ‘ஹரிதாஸ்’ படமா வந்து மூணு தீபாவளி தாண்டி ஓடிச்சி.)

மேற்படி (உண்மை) சம்பவத்துல இருந்து நாம் தெரிஞ்சிக்க வேண்டிய நீதி என்ன?

* தாய் தந்தையரை போற்றி வணங்கி வருதல் இறைவனுக்கு செய்யும் தொண்டை விட மேன்மையானது.

* பெத்தவங்கள மதி, உன்னை தேடி எல்லாம் வரும்.

* கங்கை யமுனை சரஸ்வதி முதலிய நதிகளே தங்கள் பாவங்களை போக்கிக்க அப்பா அம்மாவுக்கு பணிவிடைகள் செய்கிற ஒருத்தருக்கு பதில் பணிவிடைகள் செய்யுறாங்கன்னா அப்பா அம்மாவை கண் கலங்காமல் கவனித்துக்கொள்வது எத்துனை பெரிய பேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

* பெற்றோரை மதிக்காது அவர்களை கண்கலங்க வைக்கும் ஒருவனின் நிழல் ஸ்பரிசம் கூட நமக்கு மிகவும் ஆபத்தானது.

இன்னைக்கு அன்னையர் தினம். எத்தனையோ கஷ்டத்துக்கு நடுவுல உங்களை வளர்த்து ஆளாக்கி, இன்னைக்கும் உங்களைப் பற்றி கவலைப்படுற உங்க அம்மாவை முதல்ல விழுந்து கும்பிடுங்க.

நீங்க தாங்க முடியாத வறுமையில இருக்கலாம். எத்தனையோ கஷ்டப்படலாம்…. நீங்க இதுவரை கேட்டது எதுவுமே வாழ்க்கைல கிடைக்காம இருக்கலாம். ஆனா, உங்க மேல பரிவும் பாசமும் காட்ட உங்க அம்மா கூட இருக்காங்கல்ல? அப்புறம் என்ன. அம்மாவுக்கு பதிலா, அவங்களை எடுத்துகிட்டு நீங்க கேட்கிற எதுவேணும்னாலும் தரத் தயாரா இருக்கான் ஆண்டவன். நீங்க ரெடியா? ஒத்துக்குவீங்களா? மாட்டீங்கல்ல? அப்புறம் என்ன? ஏன் “அது இல்லே… இது இல்லே”ன்னு கண்ணை கசக்கனும்.  உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உண்மையா கவலைப்படுற, கண்கலங்குற அப்பா அம்மா இருக்காங்க இல்ல? வேற என்னங்க வேண்டும் உங்களுக்கு?
 (வடபழனியில் சிக்னலுக்காக ஒரு முறை நின்ற போது கிளிக்கியது!)

(வடபழனியில் சிக்னலுக்காக ஒரு முறை நின்ற போது கிளிக்கியது!)

லட்ச லட்சமா நீங்க சம்பாதிச்சாலும் இந்த உலகத்தையே ஜெயிச்சாலும் அப்பா அம்மாவுக்கு ஒரு நல்லா பிள்ளையா நாம நடந்துக்குறோமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாருங்க. இல்லேன்னு உங்க மனசாட்சி சொல்லிச்சினா உடனே உங்களை மாத்திக்கோங்க.

நீங்க அடிக்கடி சினிமா, பீச், ஹோட்டல், நண்பர்கள் கூட ட்ரீட்னு லைப்பை என்ஜாய் பண்றீங்க. ஓகே தான். ஆனா உங்க வீட்டுக்குள்ளேயே வீட்டு வேலை பார்த்துகிட்டு அடைஞ்சி கிடக்குறாங்களே உங்க அம்மா… அவங்களை பத்தி எப்போவாவது யோசிச்சி பாக்குறீங்களா?

இனி மாசம் ரெண்டு தடவையாவது அட்லீஸ்ட் ஒரு தடவையாவது உங்க அப்பா அம்மாவை வெளியே கூட்டிகிட்டு போங்க. அவர் விரும்புற இடத்துக்கு கூட்டிகிட்டு பொங்க. அது கோவிலா இருக்கலா… சினிமாவா இருக்கலாம்… பீச்சா இருக்கலா…. இல்லே குவீன்ஸ்லான்ட், எம்.ஜி.எம். இந்த மாதிரி பொழுதுபோக்கு பூங்காக்களாக இருக்கலாம். அவங்களை நல்லா என்டர்டெயின் பண்ணுங்க.

பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டுல இருக்குற நண்பர்கள், அடிக்கடி அவங்க கூட ஃபோன்ல பேசுங்க. அவங்க தேவைகளை கேளுங்க. நீங்க கூடவே இருக்குற மாதிரி ஒரு உணர்வை அவங்களுக்கு கொடுங்க. அவங்களுக்கு ஏதாவது தேவையா? தயங்காம என்கிட்டே சொல்லுங்க. நான் செய்றேன். (in Sundays).

ஏற்கனவே வெளிநாட்டுல இருக்குற நண்பர்கள் நிறைய பேர் அவங்க அப்பா அம்மாவை அவங்க எங்கே இருந்தாலும் நல்லா கவனிச்சிக்கிறாங்க. அது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் சொல்றது வேற சிலருக்கு.

அவங்களோட தேவைகளை நல்லா கவனிச்சிக்கோங்க. முக்கிய முடிவுகளை எடுக்குறதுக்கு முன்னாடி அவங்களை கூப்பிட்டு சொல்லி அவங்களோட அபிப்ராயத்தை ஒரு ஃபார்மாலிட்டிக்காகவாவது கேளுங்க.

நாம் இன்றும் தினமும் அலுவலகம் புறப்படுவதற்கு முன்பும் வெளியே புறப்படுவதற்கு முன்பும் அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கிவிட்டு ஆசி பெற்றுவிட்டு தான் செல்வது வழக்கம். எதை மறந்தாலும் எதை செய்ய முடியாவிட்டாலும் இதை செய்ய நாம் தவறுவதில்லை.

தாயிற்ச் சிறந்த கோவிலுமில்லை – ‘அகத்தியர்’ படப் பாடல் வீடியோ

நீங்களும் இனிமே வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி உங்க அப்பா அம்மா கால்ல விழுந்து ஜஸ்ட் தொட்டுட்டு போங்க. அதையே வழக்கமா வெச்சிக்கோங்க. அப்புறம் பாருங்க நீங்க எந்த உயரத்துக்கு போறீங்கன்னு. இது சத்தியமான சத்தியம். இதை மட்டும் நீங்க வழக்கமா வெச்சிக்கிட்டீங்கன்னா போதும். எந்த கோவில் குளத்துக்கும் போகவேண்டாம். எந்த சாமியையும் கும்பிடவேண்டாம். எப்பேற்ப்பட்ட எதிர்ப்பும் சரி துரோகமும் சரி… உங்களை ஒன்னும் பண்ண முடியாது.

அப்பா அம்மாவை ஒரு தரம் சுத்தி வந்து நமஸ்காரம் பண்ணா உலகில் உள்ள அத்துனை தெய்வங்களையும் வணங்கின பலன் கிடைக்குமாம். நீங்க சுத்தி வந்தெல்லாம் நமஸ்காரம் பண்ணவேண்டாம். ஜஸ்ட் முதுகு வளைஞ்சி அவங்க காலை தொட்டு கும்பிட்டுட்டு போங்க. வாழ்க்கையல நாம எது எதுக்கோ எவன் எவன் கால்லயோ விழுந்திருக்கோம்.  நம்மளை பெத்த அப்பா அம்மா கால்ல விழுறதுக்கு எதுக்கு யோசிக்கணும், வெட்கப்படனும்? வெட்கப்படவேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்குங்க நம்ம கிட்டே. ஆனா இது பெருமைப்படவேண்டிய விஷயம்.

[END]

5 thoughts on “தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

  1. உண்மை 100% தாயில் சிறந்த கோவிலும் இல்லை.
    சுபா

  2. கெட்டவங்க நிழல்கூட நம்மீது விழக்கூடாது சாமி”’.

  3. கதை அருமை

    நேரில் நின்று பேசும் தெய்வம் அம்மா
    நேற்று அவர்களை வாழ்த்தி வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெற்றோம்

    நன்றி
    உமா

  4. நாம் ஒவ்வொருவரும் நமது தாயாருக்குப்பட்டுள்ள கடனை எந்த ஜன்மத்‌திலுமே தீர்க்க இயலாது. காரணம் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் சமயமும் அவள் தன்னுயிரை பணயம் வைத்‌துத்தான் பிரசவிக்கின்றாள். நம்து சாஸ்த்திரங்களிலும் மாதா,பிதா குரு பின்னர் தான் தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது. தாயின் தவத்திற்கு, தியாகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய கைம்மாறு எதுவாக இருக்க முடியும்?

  5. அன்னையர் தின வாழ்த்துக்கள். …. இந்த இனிய நாளில் நம் தாயை வணங்கி அவர்களிடம் ஆசி பெறுவோம் .

    \\தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க. மந்திர மில்லை //

    நன்றி

    உமா வெங்கட்

Leave a Reply to T.NOBLE ALEX Cancel reply

Your email address will not be published. Required fields are marked *