Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 12, 2024
Please specify the group
Home > Featured > தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

print
மது அடுத்த உழவாரப்பணி நடைபெறவிருக்கும் தலம் பல பெருமைகள் வாய்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் சிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்கள் இருப்பது போல திருவள்ளூர் மாவட்டத்திலும் பஞ்ச ஆரண்ய தலங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவெண்பாக்கம் என்று அழைக்கப்படும் இந்த தலம். ஒரு காலத்தில் இது இலந்தைக் காடாக இருந்தது. தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டு  தலங்களில் 17 வது தலம் இது.

DSC00521

இந்த மாதம் உழவாரப்பணியை மேற்கொள்ள விரும்பியபோது சிவராத்திரியை முன்னிட்டு ஏதாவது ஒரு சைவத் தலத்தில் பணி செய்ய விரும்பினோம். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்தை தேடும் பணியை செய்துவந்தோம். விசாரிக்கும்போது ஒன்றும் போய் பார்க்கும்போது ஒன்றும் என இருக்கிறது. எனவே பேசிவிட்டு நேரே சென்று பார்த்தால் தான், உண்மையில் அங்கு உழவாரப்பணி தேவைப்படுகிறதா என்று அறிந்துகொள்ளமுடியும்.

நகர்ப்புறத்தில் அமைந்துள்ள தலங்களில் நாம் பணியை சுலபமாக செய்ய இயலும். ஆனால், அதிகம் பிரபலமாகாத, அதே சமயம் சற்று தேவைகள் உள்ள ஆலயமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடிய போது தான் இந்த ஆலயத்தை கண்டுபிடித்தோம்.

DSC00529
திருமலைக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள்!

சனிக்கிழமை (15/02/2014) ஆலய அலுவலகத்தில் பேசியதில், நமது உழவாரப்பணியின் தேவை இருப்பதை உணர்ந்து கொண்டோம். எதற்கும் நேரே சென்று பார்த்து சர்வே செய்துவிட்டு வருவோம். அப்படியே நமது ‘ஆலய தரிசனம்’ பகுதிக்காக கோவிலை பற்றி இங்கு ஒரு பதிவை அளித்தால் அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்று தோன்றியது.

DSC00532

DSC00589திருவள்ளூர் சென்று பின்னர் அங்கிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பாதையில் உள்ள பூண்டி செல்லவேண்டும். நீர்த்தேக்கப் பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. சென்னை நகரில் இருந்து திருவெண்பாக்கம் சுமார் 60 கி.மீ. இருக்கும். (திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் திருவெண்பாக்கம் அமைந்துள்ளது.)

DSC00539

நண்பர் மனோகரன் திருவள்ளூரில் வசிப்பதால் அவரை அழைத்துக்கொண்டு போக ஆசை. மனிதர் முழு குடும்பி. தவிர ஞாயிறு வேறு. தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசித்தோம். இருப்பினும் அவருக்கு தெரியாமல் அவர் பகுதியை நாம் தாண்டி சென்றது தெரியவந்தால் மனிதர் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவார். எனவே முன்தினம் இரவு அவரிடம் நாம் திருவெண்பாக்கம் செல்லும் விஷயத்தை கூறியதும் சற்றும் யோசிக்காமல், “ஒ.கே. ஜி. எத்தனை மணிக்கு வர்றீங்கன்னு சொல்லுங்க. நான் மெயின்ரோட்டுக்கு வந்து வெயிட் பண்றேன்!” என்றார்.

DSCN1514

(ஞாயிறு) காலை சீக்கிரம் எழுந்து தயாராகி திருவெண்பாக்கம் புறப்பட்டோம். திருவள்ளூரில் மனோகரன் காத்திருக்க, நாம் ஐயப்பன்தாங்கலில் இருந்து டூ-வீலரில் புறப்பட்டு திருவள்ளூர் சென்று அவரை பிக்கப் செய்து கொண்டு பூண்டி பயணமானோம்.

DSC00573

DSCN1518திருப்பதி செல்லும் சாலை என்பதால் சாலை மிகப் பிரமாதமாக இருந்தது. வழியெங்கும் பச்சை பசேலென்று வயல்வெளிகள். பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

(சென்னை-ஊத்துக்கோட்டை-திருப்பதி சாலை நன்றாக இருக்கும் அதே நேரம் அங்கிருந்து பூண்டிக்கு செல்லும் சாலை மிக மோசமாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருக்கிறது.)

DSC00574

சாரை சாரையாக பக்தர்கள் திருமலைக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தனர். ஓரிடத்தில் நமது வாகனத்தை நிறுத்திவிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்று,  செலவுக்கு சிறிது பணமும் கொடுத்தோம். தீர்த்தயாத்திரை மற்றும் பாதயாத்திரை செல்பவர்களின் செலவுக்கு பணம் கொடுப்பது மிக மிகப் பெரிய புண்ணிய காரியம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்த புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். (நாம் இதை செய்தது ஒரு ஆத்ம திருப்திக்காகவே தவிர புண்ணியத்துக்காக அல்ல!)

பசுமையை, வயல்வெளிகளை, கால் நடைகளின் கூட்டங்களை ரசித்துக்கொண்டு சென்றோம். சற்று நேரத்தில் பூண்டி வந்துவிட்டது. அங்கு அரசு மேனிலைப்பள்ளி எதிரே தான் ஊன்ரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் உள்ளது, உள்ளே நுழைந்ததும் நேரே அம்பாள் சந்நிதி காணப்படுகிறது – தெற்கு நோக்கியது. வெளிப்பிராகாரம் புல்தரை. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடங்கள் உயரத்தில் உள்ளன. வாயிலுள் நுழைந்ததும் கல்மண்டபம் – அழகான கட்டமைப்புடையது.

DSC00584

அப்புறம் முக்கிய விஷயம்…. இந்த கோவில் முன்பு வேறொரு இடத்தில் இருந்தது தெரியுமா? என்ன….?? கோவில் வேறொரு இடத்தில் இருந்ததா…. இதென்ன விந்தை?

அப்போ…. இப்போது இருப்பது?

பழைய கோயில் தற்போது நீர்த் தேக்கப் பகுதி அமைந்துள்ள திருவிளம்பூதூரில் இருந்தது. (இவ்வூர் குசஸ்தலையாற்றின் கரையில் இருந்தது.) திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி) சுந்தரருக்கு ஊன்றகோலை இறைவன் அளித்தருளிய தலம்.

DSCN1525
நீர்த்தேக்கத்தின் நடுவே தீவு போல காட்சியளிப்பது தான் திருவிளம்புதூர் – ஊன்றீஸ்வரர் முதலில் இருந்த இடம் (இந்த படம் பல மடங்கு ZOOM செய்து எடுக்கப்பட்டது!)

சென்னையின் குடிநீர்த்தேவையைப் போக்க, குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942 ஆம் ஆண்டு மதராஸ் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் திருவிளம்பூதூரும் அடங்கிற்று. ஆகவே அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு எம்.பக்தவத்சலம் அவர்கள், அப்போதைய அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் அதே பழமை மாறாமல் – பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்வெட்டில் பொறிக்கப்பட்டு சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.

DSCN1443 copy

அரசு திட்டங்களுக்காக அரசியல்வாதிகள் தங்கள் கட்டிடங்களையோ இடங்களையோ தராமல் அந்த திட்டங்களையே நீர்த்துபோகச் செய்வதை நாம் பார்க்கிறோம். ஆனால் நம் சிவபெருமான் ? அவன் தியாகத்தின் திருவுருவமல்லவா? மக்கள் நலனுக்காக தனது ஆலயத்தையே பெயர்த்து எடுத்து வேறொரு இடத்தில் வைக்க ஒப்புக்கொண்டான். அந்த முயற்சிக்கு இடையூறும் செய்யவில்லை. ஆலயத்தை வேறொரு இடத்தில் அமைக்க ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இந்த புதிய ஆலயத்தில் பழைய ஆலயத்தை விட வரும் பக்தர்களுக்கு அதிகமாக அருள் பாலித்து வருகிறான்.

DSC00548

அர்ச்சகரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். மிக்க மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்றவர்…. “முதல்ல சுவாமியை தரிசனம் பண்ணுங்கோ…” என்றார்.

இறைவன் அதிக உயரமில்லை. மூர்த்தி சிறிதாக இருந்தால் என்ன ? இவனுக்கு கீர்த்தி பெரிதல்லவா?

ஆலயத்தில் அரச்சனை செய்தபோது அற்புதமான ஒரு வைப்ரேஷனை ஆலயம் முழுக்க உணரமுடிந்தது. அர்ச்சகர் மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க கணீர் கணீர் என்று அவை நம் காதில் விழுந்தது. தொடர்ந்து மின்னொளி அம்பாளின் தரிசனம். (மின்னலொளி என்பது மருவி மின்னொளி என்றாயிற்று!).

DSCN1469 copy

தரிசனத்தை நிறைவு செய்த பின்னர் அர்ச்சகரிடம் பேசினோம். அலுவலகத்தில் பேசி அனுமதி பெற்று வந்த விஷயத்தை சொன்னோம்.

கோவிலில் ஒட்டடை அடிப்பது, பாத்திரங்கள் மற்றும் சர விளக்குகளை தேய்ப்பது, இறைவன் மற்றும் இறைவியின் வஸ்திரங்களை துவைப்பது என்று பணிகள் இருப்பதாக சொன்னார்.

பொதுவாக திருக்கோவில்களில் புனருத்தாரணம் செய்தால் மட்டுமே நமக்கு இறைபணி செய்த திருப்தியை உணரமுடியும். மற்றபடி இதெல்லாம் நமது திருப்திக்கு நாம் செய்வது.

DSCN1490

“இது போதாதே…சுவாமி… வேறு ஏதேனும் பணி இருக்கிறதா? எலக்ட்ரிகல், பிளம்பிங் இப்படி ? பல்புகள் ஏதேனும் பழுதடைந்திருந்தால் மாற்றி தருகிறோம்… ஞாயிறு வரும்போதே அனைத்தையும் முடித்துவிடலாம். சிவராத்திரி வேறு வருகிறதே” என்றோம்.

நாம் கூறியதும், சில ப்யூஸ் போன பல்புகளை மாற்றவேண்டியிருக்கிறது என்றார். மேலும் வாயிலுக்கு அழைத்து சென்று அங்கு முகப்பில் இருக்கும் பெரிய விளக்கில் இரண்டு பல்புகள் மாற்றவேண்டும் என்றார். விஷேட நாட்களில் வரும் பக்தர்களின் சௌகரியத்திற்காக கோவிலின் முகப்பில் ஒரு FOCUS LAMP வேண்டும் என்றும் இது தவிர, வேறு சில சில்லறை பணிகள் இருக்கின்றன என்றார்.

அனைத்தையும் முடித்து தருவதாக சொல்லியிருக்கிறோம்.

உழவாரப்பணிக்கு வரும் தினத்தன்று மதிய உணவு ஏதேனும் தயார் செய்து தரமுடியுமா என்று கேட்டோம். (காலை உணவு நாம் தயார் செய்து கொண்டு வருவது வழக்கம்!)

உணவு என்றதும் அவர் என்ன செய்யலாம் என்று சற்று யோசித்தார்.

அவர் மனவோட்டத்தை புரிந்துகொண்டு, “புளிசாதமும் தயிர்சாதமும் இருந்தால் போதும்” என்றோம்.

“அவ்வளவு தானே? சரி… ஏற்பாடு செஞ்சிடுறேன்” என்றார்.

சற்று கூடுதலாகவே தயார் செய்யுமாறும், சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அன்று வரும் பக்தர்களுக்கும் கொடுத்துவிட்டு பின்னர் எங்களுக்கு தந்தால் சந்தோஷம் என்று சொல்லியிருக்கிறோம்.

கோவிலில் பணி செய்பவர்கள் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டோம். துப்புரவு பணி செய்வதற்கு இரண்டு பெண்களும், காவலுக்கு இரண்டு காவலாளிகளும் இருக்கிறார்கள். உழவாரப்பணியின் போது வழக்கம்போல அவர்களும் கௌரவிக்கப்படுவார்கள்.

DSC00552

முன்னதாக இந்த ஆண்டு சிவராத்திரிக்கு கூட்டம் சற்று குறைவாக வரக்கூடிய ஏதாவது ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம்.  ஒவ்வொரு சிவராத்திரியின் போதும் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் & பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி ஆகிய கோவில்களில் தான் இருப்போம். ஆனால் அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. இறைவனை சரியாக தரிசிக்க கூட முடிவதில்லை. இந்த ஆலயத்தையும் வைப்ரேஷனையும் பார்த்தபின்னர் இங்கேயே சிவராத்திரி விரதம் இருந்து நான்கு கால பூஜைகளையும் கண்டு ரசிப்பது என்று முடிவு செய்துவிட்டோம்.

DSC00550

அர்ச்சகரிடம், நாம் சிவாராத்திரிக்கு இங்கு வருவதாகவும் அவருடன் இருந்து அவருக்கு பூஜையில் உதவுவதாக சொன்னதும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. “அவசியம் வாங்க…சார்… பிரமாதப்படுத்திடலாம்!” என்றார்.

(வாசகர்கள் எவரேனும் சிவராத்திரி அன்று இந்த ஆலயத்தில் நம்முடன் வந்திருந்து விரதம அனுஷ்டிக்க விரும்பினால் நமக்கு தகவல் தெரிவிக்கவும். வாசகர்கள் குடும்பத்தினரோடு வருவதாக இருந்தால் வேன் ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.)

மேலும் சிவராத்திரி அன்று இறைவனுக்கு தேவையான மாலைகள், புஷ்பங்கள், பூஜை சாமான்கள், ஸ்வாமிக்கு வஸ்திரம், அம்பாளுக்கு புடவை, மற்றும் இதர சந்நிதிகளுக்கு தேவையான மாலைகள், பிரசாதம் உளிட்ட அனைத்து செலவுகளையும் நம் தளம் சார்பாக ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறோம். இதற்கான மொத்த செலவின் மதிப்பீடு விரைவில் தெரியும். நண்பர் ஒருவர் இந்த பணியில் தம்மை இணைத்துகொள்வதாக கூறியிருக்கிறார்.

ஆலயத்தில் இருந்து கிளம்பியதும் பூண்டி நீர்த் தேக்கம் மற்றும் அணைப்பகுதிக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துவிட்டு கிளம்பினோம். குளுகுளுவென்று 100 ஏர்கண்டிஷன் மெஷின்களுக்கு நடுவே இருந்தது போலிருந்தது அந்த பகுதி. ( அந்த படங்கள் தான் நீங்கள் இடையில் பார்க்கும் நீர்த்தேக்கம் தொடர்பான படங்கள்.)

ஆலய தரிசனம் செய்யவும் + செலவின்றி இயற்கை காட்சிகளை ரசிக்கவும் குடும்பத்தினரோடு செல்லவேண்டிய இடம் பூண்டி. திருவள்ளூரிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது.

============================================================

இருண்ட வாழ்க்கைக்கு ஒளி தரும் நம்பிக்கை கோவில்!

திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் கோவில் தல வரலாறு & சிறப்பு

பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே
-சுந்தரர்

DSCN1449

இறைவன் – ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர்.

இறைவி – மின்னலொளி அம்மை. (மின்னொளி அம்மை என்றும் சொல்லலாம்)

சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி இருக்கிறது. ஒரே இடத்தில் நின்று சுவாமி, அம்பாள் இருவரையும் வழிபடும்படி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடனும், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் எட்டு கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

DSCN1470

இவருக்கு அஷ்டமி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே பாடல் பெற்ற தலங்களான கூவம், திருப்பாசூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கிறது. (சென்ற பிரார்த்தனை பதிவில் நாம் அளித்த கோவில் புகைப்படம் சாட்சாத் கூவம் திருபுராந்தகர் தான்! இந்த கோவிலுக்கு விளக்கேற்ற நமது தளம் சார்பாக எண்ணை வாங்கி தந்திருக்கிறோம்!)

DSCN1482

நந்தியின் கொம்பு உடைந்து காணப்படுவது இங்கு ஆச்சரியம்.

என்னது நந்தியின் கொம்பு உடைந்திருக்கிறதா? அவரின் கொம்பை உடைக்கும் துணிச்சல் யாருக்கு இருந்தது ?

வேறு யாருக்கு? இறைவனை நண்பனாக பெற்ற சுந்தரருக்கு தான்.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை.

DSCN1497

இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.

பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து “நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்’ என்றார்.

DSCN1446

தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை.

கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். எம்பிரான் மீது கோல் பட்டுவிடக்கூடாதே என்று நந்திதேவர் குறுக்கே பாய்ந்து தாங்கிக் கொண்டாராம். எனவே அவரது ஒரு கொம்பு உடைந்துவிட்டது.

DSCN1458
உடைந்து காணப்படும் நந்தியின் கொம்பு – அருகில் ஊன்று கோலுடன் சுந்தரர்

சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது.

பின் அம்பாள் சுந்தரரிடம், “மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது உன் கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள். தகுந்த காலத்தில் இறைவன் அருளால் பார்வை கிடைக்கும்’ என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் “மின்னொளி அம்பாள்’ என்றும், “கனிவாய் மொழிநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதி.

DSC00553

நம்பிக்கை கோயில்

வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள். வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி கொடுத்து வாழ வைக்கிறாள் என்பது நம்பிக்கை.

பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை ‘நம்பிக்கை கோயில்’ என்றும் சொல்கின்றனர்.

இப்படி ஒரு கோவிலை தரிசிப்பதற்கும் அங்கு பணி செய்வதற்கும் நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பையும் என்னவென்று சொல்வது?

DSC00547

“ஒறுத்தாய் நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும்; நாயேனைப் பொருட்படுத்திச்
செறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்
கறுத்தாய்; தண்கழனிக் கழிப்பாலை மேயானே!”

[END]

4 thoughts on “தேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை!

 1. நமது தளத்தின் உழவாரப்பணிக்கு நமது தள வாசகர்கள் அதிக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் கலந்துகொண்டு ,தங்கள் பங்களிப்பினை வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது .

  இந்தமுறை சுந்தர்ஜி உழவாரப்பணிக்கு ஆலயத்தை பார்க்க ,எனக்கு அழைப்பு விடுத்தது ,எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி .

  அன்று மலை வரை சிறிது மனக்கவலை.அதற்கு மருத்துவம் செய்வது போல் அமைந்தது சுந்தர் ஜி அவர்களின் அழைப்பு .
  பூண்டி சாலை எங்களுக்கு குளிர்ச்சியான வரவேற்ப்பினை அளித்தது . மனதிற்கு மனதிற்கும் ,கண்களுக்கும் மகிழ்ச்சயை வரி வழங்கியது .

  ஆலயத்தின் அருகில் சென்ற உடன் இறைவன் {vibration } அருள் என்மீது படர்ந்ததை என்னால் உணர முடிந்தது .
  ஆலயத்தில் அர்ச்சனை செய்து விபூதி அணிந்த உடன்,எனக்குள் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன் .
  நீர்த்தேக்கம் சென்று புகைப்படம் எடுத்தோம். நீர்த்தேக்கத்தை சுற்றிலும் பசுமையாக குளிர்ச்சியாக இருந்தது மறக்க முடியாதது.
  அந்த புகைப்படங்களில் தேந்தெடுத்து,இந்த தொகுப்பில் சிறப்பாக வழங்கி உள்ளார் .
  மேலும் இதில் கலந்துகொண்டு இறைவன் அருளும் ,சுற்றுலா சென்ற அனுபவமும் கிடக்கும் என்பதில் ஐயமில்லை .
  -மனோகர்

 2. சுந்தர் சார் ….சுபம் உண்டாகட்டும் …சிவம் துணை நிற்கும் …..
  நம் கலிகால மக்களுக்கு சரியான திருகோயில் இது சார் … நம் வாழ்வுக்கு துணை வரும் திருகோயில் இது

 3. டியர் சுந்தர்ஜி

  ஆலயத்தை பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறீர்கள். நாங்கள் கோவிலுக்கு சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் உழவார திருப்பணிக்கு வருகிறேன். நீங்கள்ளும் ரைட் mantra வாசகர்களுக்காக பழமையான கோவிலை தேடி கண்டுபிடித்து எங்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறீர்கள்.
  உங்கள் தொண்டிற்கு நன்றி

  உமா

 4. உங்களுடை பதிவுகள் பக்தர்களை வேற்றுலக அனுபவத்திற்கு இட்டு செல்கிறது. எனக்கு அருள் கிடைக்கிறதோ தெரியவில்லை ஆனால் மனம் லேசாஹி ஒரு நிம்மதி ஏற்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *