Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > நினைப்பது நிறைவேறும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

நினைப்பது நிறைவேறும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

print
ம் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது பார்வைத் திறன் சவால் கொண்ட சாதனையாளர் திரு.இளங்கோ அவர்களின் நட்பும் அறிமுகமும் என்றால் மிகையாகாது. இது பற்றி ஏற்கனவே நாம் பலமுறை கூறியிருக்கிறோம்.

பார்வையற்றவர்கள் குறித்த நமது மதிப்பீட்டையே இளங்கோ அவர்கள் மாற்றிவிட்டார் என்றால் மிகையாகாது. பிறவியில் இருந்தே பார்வை இல்லாத ஒருவர், கஷ்டப்பட்டு, படித்து, முன்னேறி இன்று ஒரு நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்று, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்,  தொழில் நிறுவனங்களுக்கும், சென்று MOTIVATION SPEECH  கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்! ‘இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதன் நான் தான்’ என்கிறார்.

Untitled-1

இருளைத் தவிர வேறு ஒன்றையுமே அறியாத ஒருவர் “இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதன் நான் தான்!!” என்று சொல்லும்போது, ‘சகலவித சௌகரியங்களும் பெற்று அனுபவித்து வரும் நாம் (அவருடன் ஒப்பிடும்போது) செய்து கொண்டிருப்பது என்ன?’ என்று மனதில் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

நாட்டிற்கு வேண்டாம்… வீட்டிற்கு வேண்டாம்…. குறைந்த பட்சம் நமக்காவது பயனுள்ள வகையில் நம் வாழ்க்கை இருக்கிறதா, நமது செயல்கள் இருக்கிறதா என்று சீர்தூக்கி பார்த்ததன் விளைவு தான்…… இன்று நீங்கள் காணும் ‘ரைட்மந்த்ரா’ என்னும் விருட்சம்.

With Sylendra Babu IPS
இளங்கோ அவர்களின் உரையை ஆர்வமுடன் கேட்கும் திரு.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகள்

இளங்கோ அவர்களை பேட்டி எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பின்னர் அவர் நட்பு தொடர்ந்து அவர் 2012 ஆம் ஆண்டு பாரதி விழாவிற்கு வந்து, சென்ற ஆண்டு ‘ஜெயிப்பது நிஜம’ நூலை அவருக்காக எழுதியது வரை அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டோம். (Check : ‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி!)

இப்போது ‘ஜெயிப்பது நிஜம்’ நூலில் இரண்டு குறிப்பிட்ட அத்தியாயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

இந்த அத்தியாயங்களை நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். நாம் சர்வசாதரணமாக பெற்று அனுபவித்து வரும் சௌகரியங்களின் மதிப்பு அப்போது தான் உங்களுக்கு புரியும். வாழ்க்கை குறித்த உங்கள் அணுகுமுறை நிச்சயம் மாறும்.

அணுகுமுறை மாறினால் எல்லாமே மாறும். வாழ்க்கையின் மாற்றம், ஏற்றம் ஆகியவை உண்மையில் நமது அணுகுமுறையில் தான் இருக்கிறது. அதை விடுத்து குறுக்கு வழிகளில் வாழ்க்கையின் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தேடிக்கொண்டிருப்பவர்கள் காலத்தை வீணடித்து இறுதியில் ஏமாற்றத்திற்கு தான் உள்ளாவர். THERE IS NO SHORTCUT TO SUCCESS.

இரண்டு அத்தியாயங்களையும் படித்தபின்பு, உங்கள் சிந்தனையில் என்ன தோன்றுகிறது என்பது குறித்து தெரிவியுங்கள்!

ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம் இந்த பதிவு. நூல் முழுதும் படித்து பயன்பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  உங்கள் வீட்டு புக் ஷெல்ஃபில் நிரந்தரமாக இடம்பிடிக்கவேண்டிய நூல் இது. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்க ஏற்ற நூல்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ய : https://www.nhm.in/shop/978-93-5135-169-6.html

என்றென்றும் நன்றியுடன்…
– சுந்தர்,
www.rightmantra.com

===================================================================

நினைத்தது நிறைவேறும்!

ஜெயிப்பது நிஜம் |அத்தியாயம் 9

இன்ஸ்பயரிங்  இளங்கோ கூறுகிறார்…

சேமிப்பு என்பது எனது சிறு வயது முதல் ரத்தத்தில் ஊறிய ஒன்று. பள்ளிக்கூட நாள்களில் இருந்தே வங்கிக் கணக்கைத் தொடங்கி அதை முறைப்படி பராமரித்து வருகிறேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு வளர்ந்து ஆளாகும் நேரம் எனக்கு காசோலைப் புத்தகமும் ஏ.டி.எம். கார்டும் தேவைப்பட்டது. அதற்காக வங்கியை அணுகியபோது, அப்ளிகேஷன் எழுதிக்கொடுங்கள். ஒரு நான்கைந்து நாள்களில் கிடைத்துவிடும் என்று கூறினார்கள்.

http://rightmantra.com/wp-content/uploads/2014/01/Jeyippadhu-Nijam.jpgநானும் அப்ளிகேஷன் எழுதிக்கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்… காத்திருந்தேன்… காத்திருந்தேன்… பலநாள்கள் காத்திருந்தும் வங்கியிடம் இருந்து பதிலேதும் இல்லை. பின்னர் அது தொடர்பாக ஃபாலோ அப் செய்யும்போது எனக்குக் கிடைத்த பதில், அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

‘சாரி…ஸார் உங்க அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆயிடுச்சு…’ என்றார்கள்.

எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன், எதற்காக ரிஜக்ட் செய்தார்கள்? எனது வங்கிக் கணக்கில் செக் பவுன்சிங் கூட இதுவரை நான் செய்ததில்லையே… தவிர வங்கிக் கணக்கையும் அதற்குரிய முறைப்படிதானே மெயிண்டெயின் செய்கிறேன். பின் எதற்காக? ஒரே குழப்பமாக இருந்தது.

வங்கிக்குச் சென்று, ‘ஏன்… என்ன காரணத்துக்காக ரிஜெக்ட் செய்தீர்கள்?’ என்று விசாரித்தேன்.

‘சார், நீங்க செக் புக்கையோ, ஏ.டி.எம் கார்டையோ உபயோகிக்கணும்னா மத்தவங்க உதவியைச் சார்ந்துதானே இருக்கணும். யாரோட உதவியும் இல்லாம யாரையும் சாராம உங்களால அதை ஹாண்டில் பண்ண முடியாது இல்லையா? அதனாலதான்…’ என்று இழுத்தார்கள்.

நான் சொன்னேன்… ‘நீங்கள் சொல்வது மற்ற யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ எனக்குப் பொருந்தாது. ஏன் என்றால்… எனது ஒவ்வொரு செயலையும் வேலைகளையும் சகல விஷயங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் நானேதான் மானேஜ் செய்துகொண்டு மற்றவர்களுக்கும் ஓர் ஆப்பர்சூனிட்டி கொடுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். சரி, ஒருவேளை அப்படியே ஏதாவது தவறு நடந்தது என்றாலும் அதற்கு நான் தானே பொறுப்பு? நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? என் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் அதை நான் தானே எதிர்கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு ஏதும் பாதிப்பில்லையே. அப்படியே ஏதாவது தப்பு நடந்ததென்றாலும் பணத்தை நீங்கள் திருப்பி கொடுத்து விடுவீர்களா அல்லது அந்தப் பொறுப்பைத்தான் எடுத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன்.

அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

பிறகு நான் உறுதியாகச் சொல்லி விட்டேன். ‘என்னுடைய செக் புக், ஏ.டி.எம். கார்டுகளுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். போதுமா?’

‘சார், இங்கே நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. எதற்கும் நீங்கள் எங்களுடைய ஹெட் ஆபீஸ் போய் கேளுங்கள்.’

அவர்கள் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.

ஆனால் நான் உறுதியா இருந்தேன். எனக்கு உரிமையான ஒன்றைப் பெற நான் எதற்காக அவுட் ஆஃப் தி வே முயற்சி செய்யவேண்டும்? முடியவே முடியாது. நீங்கள் எனக்கு கொடுத்து தான் ஆக வேண்டும்’ என்று உறுதியாக நின்றேன்.

அப்போது அந்த வங்கியில வேலை பார்க்கும் ஒரு நல்ல மனதுப் பெண் – என்னை அவங்களுக்கு நன்றாகத் தெரியும் – என் உதவிக்கு வந்தார்.

‘சார், நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்க அக்கவுண்ட் ஹிஸ்டரி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றியும் தெரியும். மற்றவர்களைவிட நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள்வீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று சொன்னதும்தான் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது.

ஒரு பெரிய மலையைத் தாண்டியாகிவிட்டது. ஏ.டி.எம். கார்டு கிடைத்துவிட்டது.

IMG_4148

அடுத்து செக் புக்.

செக் புக்கை எனக்கு தரமுடியாது என்பதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

பார்வையற்ற ஒருவர் செக் புத்தகத்தில் எப்படி கையெழுத்து போடுவார் – என்பதுதான்.

பார்வையே இல்லாமல் ஓவியம் வரைபவர்கள்கூட இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்கிறபோது நான் கையெழுத்துப் போடுவது என்ன பெரிய விஷயம்? இதை அவர்களுக்குச் சொல்லி புரிய வைப்பதற்குள் நான் பட்ட பாடு அப்பப்பா… அதைச் சொல்லி மாளாது….

‘ஒருவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுவதற்கு அவருடைய கை நன்றாக இருந்தால் போதும். எனது கை நன்றாக இருக்கிறது. பத்து விரல்களும் நன்றாக இயங்குகின்றன. இது போதாதா… நான் எனது கையெழுத்தைப் போடுவதற்கு? அதற்கும் பார்வை குறைபாட்டுக்கும் என்ன சம்பந்தம்? கண்டிப்பாக எனக்கு செக் புக் வேண்டும்‘ என்று சொல்லி அடமாக நின்றேன்.

‘கையெழுத்துப் போடுவீர்கள் என்பது சரிதான்… அதை சரியாக சரியான இடத்தில் எப்படிப் போடுவீர்கள்?’ என்று வங்கியில் கேட்டார்கள்.

‘செக்கில் எங்கே வேண்டுமானாலும் கையெழுத்துப் போடலாமா? போடக்கூடாது இல்லையா… ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது பாட்டம் ரைட் சைடில் தானே போட வேண்டும்? அது எனக்கு நன்றாகவே தெரியும்… மிகச் சரியாக அந்த இடத்தில் ‘என்’ கையெழுத்தைப் போடுவேன். போதுமா? உங்களுக்கு வேறென்ன பிரச்னை?’ என்று திருப்பிக் கேட்டேன்….

அப்போதும் வங்கியில் சமாதானமாகவில்லை… கடைசியில்…. பார்வையே இல்லாமல் படம் வரைகிறவர்கள் முதல் மிக நன்றாக கார் ஓட்டுகிறவர்கள் வரைக்கும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு விளக்கிக் கூறி ஒருவழியாக கன்வின்ஸ் செய்தேன்.

ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தன்னுடைய அடிப்படை உரிமைகளைக்கூட போராடித்தான் பெறவேண்டியுள்ளது என்ற நிலையில் நம் நாடு இருப்பதை நினைத்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கல்வியறிவு நிரம்பப் பெற்ற எனக்கே இப்படி ஒரு அனுபவம் என்றால் அதிகம் படித்திராத ஆனால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாதிக்கத் துடிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை எண்ணிப் பார்க்கிறேன்.

மேலும் உங்களுக்கு சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் சௌகரியங்களை உரிமைகளைப் பெற சிலர் எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் அனுபவித்து வரும் சௌகரியங்களின் அருமையை உணர்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் தரும் ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்பதே என் விருப்பம்.

உரிமைகளை கேட்டு மட்டுமல்ல போராடியும் பெற ஒருவர் தயாராக இருக்கவேண்டும்!

===================================================================

தட்டுங்கள் திறக்கப்படும்!

ஜெயிப்பது நிஜம் | அத்தியாயம்  10

டுத்து பாஸ்போர்ட் அப்ளை செய்து (போராடிப்) பெற்ற விவகாரத்தைப் பார்ப்போம்.கல்லூரியில் இளங்கலை படிக்கும்போதே நான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து விட்டேன். இது சம்பந்தமாக மனு செய்வதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன்.

எனது மனுவை ஏற்றுக்கொள்வதில் இருந்தே எனது போராட்டம் தொடங்கிவிட்டது.

மனுவை ஏற்றுக்கொள்ளும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர் ஒருவர் ‘நீங்க எப்படி பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யலாம்?’ என்றார் எடுத்த எடுப்பிலேயே.

நான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், ‘நான் இந்தியன் என்று கருதுவதால்’ என்றேன்.

இப்படியொரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. ‘நாம சீரியஸாக பேசுவோமா?’ என்றார்.

‘நான் சீரியசாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

‘உங்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்து நீங்க ஏதாவது வெளிநாட்டுக்குப் போய் அங்கே எங்காவது ஏடாகூடமா வழி தெரியாமல் மாட்டிக்கொண்டீர்களானால்… பிரச்னை உங்களுக்கு மட்டுமில்லை…. நமது நாட்டுக்கும்தான். இதனால் நமது நாட்டின் பெருமையே பாதிக்கப்படும்’ என்று அவர் மேலும் மேலும் சீரியஸாக ஏதேதோ சொல்லிக்கொண்டே போனார்.

ஆட்டோகிராஃப்!
ஆட்டோகிராஃப்!

என்னது பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் வெளிநாட்டுக்குப் போய் அங்கே தவித்தால் அது நாட்டுக்கு அவமானமா? என்ன ஒரு பேத்தல்… இதோ இதைப் படித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கே இது அபத்தமாக இல்லை… எனக்கு எப்படி இருந்திருக்கும்?

ஏதோ எனக்கு நல்லது சொல்வதாக நினைத்துக்கொண்டு அவர் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு எனக்கு அளவில்லாத கோபம் வந்தது.

என்ன ஒரு மிதமிஞ்சிய கற்பனை பாருங்கள்… அதுவும் இப்படிப்பட்ட கற்பனைகள் எப்போது வருகின்றன தெரியுமா… ஒரு கடமையைச் செய்யாமல் இருப்பதற்கும் அந்த கடமையைச் செய்யும்போது எழும் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்திக்காமல் இருப்பதற்காகவும்தான் இம்மாதிரி கற்பனைகள் நமது ஆட்களுக்கு வருகின்றன.

அவர் பேசப் பேச நான் ஒரு பக்கம் அதை கேட்டுக்கொண்டு சிரித்தவாறு இருந்தேன்.

அந்த நபர் எரிச்சல் அடைந்து ‘சார்… என்ன சிரிக்கிறீங்க? கொஞ்சம் சீரியஸா இருங்க.’ என்றார்.

அப்போதெல்லாம் நான் கொஞ்சம் துடுக்குத் தனமாக இருப்பேன். இப்போது அப்படி இல்லை. நிறையவே மாறிவிட்டேன்.

‘சார், நான் சீரியஸாக இருப்பதால்தான் சிரிக்கிறேன். நீங்கள் சொன்னதைக் கேட்டு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.’ என்றேன்.

‘நோ சார்… உங்களுக்கு பாஸ்போர்ட் தர முடியாது. உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் நீங்கள் ஜாயிண்ட் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்துகொள்ளுங்கள்.’

‘அதெப்படி சார்… ஜாயிண்ட் பாஸ்போர்ட்டில் என்னுடன் வருகிற நபர் 24 மணிநேரமும் என் கூடவே இருப்பாரா? எனக்கு சுதந்தரமாக நடமாட கால்கள் இருக்கிறது. என்னைச் சுற்றிலும் நடக்கிற விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அறிவு இருக்கிறது… அசாதரணமான சூழ்நிலைகளில் என்னைக் காப்பாற்றிக்கொள்ள எனக்குப் பேச்சுத் திறன் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக படிப்பறிவு இருக்கிறது… வேறென்ன வேண்டும் உங்களுக்கு?’

‘சார்…. நாட்டோட பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை வைத்துப் பார்க்கும்போது.. உங்களுக்கு தனிநபர் பாஸ்போர்ட் கொடுக்க முடியாது.’ அவர் குரலில் அதிகாரம் தொனித்தது.

‘பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவது நாட்டின் பெருமைக்கு உகந்தது அல்ல’ என்று நாடாளுமன்றத்தில் ஏதோ தீர்மானம் நிறைவேற்றிவிட்டது போலவும் அதை இவர் கண்டிப்பாக கடைப்பிடித்து வருவது போலவும் பேசியதைக் கேட்டு எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. மறுப்பக்கம் அதிர்ச்சி.

‘அதெப்படி எனக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் போகிறதென்று நானும் பார்த்துவிடுகிறேன்’ – அவரிடம் சற்று துணிச்சலாகவே பேசினேன்.

ரொம்பச் சுலபமாகச் சொல்லிவிட்டேனே தவிர அதற்காக நான் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடையாக நடக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஏழெட்டு முறை இதற்காக பாஸ்போர்ட் ஆபீஸுக்கு அலைந்தேன்.

ஒரு கட்டத்தில் சலித்துப் போய் கடுமையான முயற்சிக்குப் பின்… மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை நேரில் சந்திப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அவரைச் சந்தித்தேன்.

அங்கே அவரிடம் என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டுபொதுவாக ஆங்கிலத்திலேயே பேசினோம். என்னுடைய ஆங்கில உச்சரிப்பும் அதன் துல்லியமும் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்தது போலும்.

‘உங்கள் லாங்குவேஜ் மற்றும் அதன் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது…’ என்று அவர் பாராட்டினார்.

இறுதியாக நான் அவரைப் பார்க்க வந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னேன்.

‘அவ்வளவுதானே… ஜஸ்ட் எ மினிட்’ என்று சொன்னவர், எனக்கு யார் பாஸ்போர்ட் தரமாட்டேன் என்று சொன்னாரோ அதே ஊழியரை அவர் ரூமுக்கு வரச் சொன்னார்.

அவர் வந்ததும்… ‘இவர் பேப்பர்ஸ் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கரெக்ட்டா இருக்கா…’

‘இருக்கு சார்… ஆனா…. ‘

‘நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க… இவர் பேப்பர்ஸ் எல்லாம் சரியா இருக்கா?’

‘இருக்கு..’

‘அப்போ அவருக்கு பாஸ்போர்ட் கொடுத்துடுங்க’ என்று உத்தரவிட்டார்.

அவர் போனதற்குப் பிறகு… ‘ ஒரு பத்து நிமிஷம் காத்திருங்கள். உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்து விடும்.’ என்றார். அந்தப் பத்து நிமிடங்கள்வரை அவர் என்னுடன் பலவேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

சொன்னது போலவே பத்து நிமிடங்களில் பாஸ்போர்ட் என் கைக்கு வந்தது.

‘ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் இளங்கோ’ என்று பாஸ்போர்ட்டை என் கைகளில் கொடுத்து கை குலுக்கி வழியனுப்பி வைத்தார்.

நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மிகுந்த மிடுக்குடன்தான் பாஸ்போர்ட் அலுவலகத்தை விட்டுவெளியே வந்தேன். மனதெல்லாம் நினைத்ததை சாதித்த திருப்தி மேலோங்கி இருந்தது.

தட்டுங்கள் திறக்கப்படும்… திறக்கவில்லையா? தட்டிக்கொண்டே இருங்கள். திறப்பதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு!

[END]

4 thoughts on “நினைப்பது நிறைவேறும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

  1. Hi Ji,

    Hope you’re doing excellent. Wishing you the wonderful future along with this kind of real heroes in your journey. naan enna solrathu, athaan aandanvan kirubaiyaala ungalukku vetri mela vetriya vandhuttu irukke!

    Very very happy to see your excellent growth. The seed you have sown finally started to give the benefits up to the par as we, the site readers and loads of good people who’re well wishers of this site and yours out there expected:)

    Coming to the article, It’s excellent to see our humanly hero, Mr. Elango to win all the hurdles he had faced for getting even basic things which we all enjoy.

    As you had rightly mentioned, there are two things to remember here –

    1. we all need to have an attitude of gratitude for every thing – even very small thing – say, our parent’s smile in usual occasions (but of course they’re not small, considering the fact so many of us don’t have both parents with us today) to larger things – like getting a promotion or pay raise etc.

    2. As Mr. Elango exemplified and Sundarji said, we’ve to get what we want without compromising of giving up (of course, what we want, should not be at the cost of hurting others).
    As Edison did – failed 10,000+ times – FEEL IT, IT’S 10,000 TIME HE FAILED – to create a efficient, low cost working electric bulb and
    Col. sanders, Founder of KFC, at his age of 65 – failed 1000+ times in selling his first order of chicken receipe – AT THE AGE OF 65, WHEN WE (ALMOST ALL OF US, IF NOT OTHERS, DEFINITELY I) WOULD THINK IT’S TIME TO RETIRE, HE TRIED FOR 1000+ TIMES and founded KFC by then. (of course, I would not argue whether the kfc food is doing good to others. but what matters is, his trying. And no way, I would argue that only foreign people do these kind of trying, our people too do so. but they’re not being heard like the foreign counterparts).

    I wish all of our readers a bright future in this wonderful year ahead.

    Kudos and Hearty wishes for Sundarji for working non-stop every day to enlighten us through his articles.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  2. அன்பு சகோதரா
    உங்களுடைய பதிவுகள் சிலவற்றை படித்து என்னால் கடிதம் எழுத இயலவில்லை..மன்னிக்கவும்…இந்த பதிவைப் படிக்க படிக்க மெய் சிலிர்த்தது நிஜம்…நாம் எல்லாம் எத்தனை கோடி நன்றிகள் தினமும் சொல்ல வேண்டும்….இருக்கும் வரை நமக்கு எதனுடைய அருமையும் யாருடைய அருமையும் புரியாது…பார்வை குறைபாடு உள்ள இவர் எப்படி எல்லாம் அவமானங்களை சந்த்தித்து இருக்கிறார் என்பதை உங்களுடைய அழகிய எழுத்துக்களில் வடித்திருப்பது…கண்ணீரையே வரவைக்கிறது….இவருடனான உங்களுடைய நட்பு போற்றுதற்கு உரியது…வாழ்க வளமுடன் தம்பி… _/|\_

  3. சுந்தர் சார் வணக்கம்……இளங்கோ சார் தன்னம்பிக்கை பாராட்டுவதற்கு உரிய ஒன்று …..இந்த உலகத்திலேயே சந்தோஷமான மனிதன் நான் தான்….மிக அற்புதமான வார்த்தை நாம் இறைவனுக்கு பலகோடி நன்றிகள் சொல்ல வேண்டும் …..பார்வை குறைபாடு உள்ள இவர் பல அவமானங்களை சந்தித்தும் கூட அவர் தளராமல் தன்னம்பிக்கை ஓடு போராடி கொண்டு இருக்கிறார்….. தட்டுங்கள் திறக்கப்படும் …திறக்கவில்லையா தட்டி கொண்டே இருங்கள் ….திறப்பதை தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு மிக அற்புதமான வார்த்தை…. வாழ்க வளமுடன் ….. நன்றி தனலட்சுமி …..

  4. டியர் சுந்தர்ஜி

    திரு இளங்கோவை பற்றிய பதிவு அருமை. எல்லோரும் ஜெயிப்பது நிஜம் புக் படித்து பயன் பெற வேண்டும்

    இதன் மூலம் எல்லோருக்கும் வாழ்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.

    நன்றி
    உமா

Leave a Reply to Keeran Nalina Cancel reply

Your email address will not be published. Required fields are marked *