கிராமப்புறத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயியோ, அல்லது நெசவுத் தொழிலாளியோ அல்லது ஒரு ஏழை விதவைத் தாயோ தங்களுக்கு கிடைக்கவேண்டிய அரசாங்க உதவித் தொகைக்காக எத்தனை அலைய வேண்டியிருக்கிறது தெரியுமா? அதையும் மீறி அவற்றை வாங்கும்போது கையூட்டாகவே சில நூறுகளை அவர்கள் கொடுக்கவேண்டியிருக்கிறது.
இவற்றை இவர்கள் சார்பாக அலைந்து திரிந்து வாங்கித் தரவேண்டிய வாரிசுகள் இல்லாமல், தனிமரமாய் உதவிக்கு எவருமின்றி இதன் பொருட்டு அலையவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் ஒருப்பக்கம், வாரிசுகள் இருந்தும் குடியினால் சீரழிந்த அவர்களால் எந்த பயனும் இல்லை என்ற ரீதியில் இருப்பவர்கள் மறுபக்கம் என இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
அதுவும் இளம் விதவைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு வேறு விதமான பிரச்னைகள்.
எதற்கெடுத்தாலும் டூ-வீலரில் பறக்கும் நம்மால், ஐநூறுக்காகவும் ஆயிரத்துக்காகவும் அரசு அலுவலகங்களுக்கு, ரேஷன் கடைகளுக்கு அலையோ அலை என்று அலையும் ஏழைகளின் கஷ்டம் புரியாது. இத்தகையவர்களுக்கு உதவுவது எத்தனை பெரிய புண்ணியம்? சற்று யோசித்துப் பாருங்கள்.
இவர்களுக்கு உதவுவதற்கென்றே துவக்கப்பட்டுள்ள அமைப்பு தான் சட்ட பஞ்சாயத்து. இது கட்டப் பஞ்சாயத்து அல்ல. ஏழை எளியவர்களுக்கு உதவும் சட்ட பஞ்சயாத்து.
அரசு அலுவலகங்களில், ரேஷன் கடைகளில், மருத்துவமனைகளில் நியாயமாக நாம் பெறவேண்டிய சலுகைகளுக்கு உரிமைகளுக்கு கூட லஞ்சம் தரவேண்டும் என்கிற நிலையை மாற்ற உதயமாகியிருக்கிறது இந்த அமைப்பு.
பரந்து விரிந்த நம் நாட்டில் மக்கள் தொகை 100 கோடியை தொடவிருக்கிறது. (தமிழகத்தில் மட்டும் 7 கோடி). இவர்களில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு தான் எத்தனை எத்தனை பிரச்னை? சமூக அவலங்கள்?
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயர் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். பார்த்துகொண்டிருந்தால் போதுமா? இறங்கி செயலாற்ற வேண்டாமா? அப்படி ஒரு உத்வேகத்தில் துவக்கப்பட்டது தான் இந்த சட்ட பஞ்சாயத்து அமைப்பு. சமூத் தொண்டுக்கென்றே தங்களை அற்பணித்து கொண்ட சிலரின் சீரிய முயற்சியில் பல வித போராட்டங்களுக்கு பிறகு தடைகளை தாண்டி உதயமாகியுள்ளது ‘சட்ட பஞ்சாயத்து’ என்னும் இந்த அமைப்பு.
இந்த அமைப்பு ஏழை எளியோருக்கு உதவும் ஒரு கால் சென்டர் போல செயல்படும். அரசிடம் நாம் மிக எளிதாக செலவேயின்றி பெறக்கூடிய ரேஷன் கார்டு, பட்டா, டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு, இறப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் என சின்ன அத்தியாவசிய விஷயங்களை எப்படி பெற வேண்டும் என்று தெரியாமல் பலர் உள்ளனர். நகர்ப்புறத்தில் உள்ள பலருக்கு கூட இதை பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டு அரசு அதிகாரிகளும் நூறு ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.
குறிப்பாக ரேஷன் கார்டு வாங்க ஐந்தே ரூபாய் தான் செலவாகும். ஆனால் பல ஆயிரம் கொடுத்தும் இன்னும் கிடைக்காமல் நடையாய் நடப்பவர்கள் பலர் உள்ளனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துவக்கப்பட்ட்டிருப்பது தான் ‘சட்ட பஞ்சாயத்து இயக்கம்‘ அமைப்பு. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எப்படி சலுகைகளை பெற வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுதான் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கொள்கை.
இதை வலியுறுத்தி, லஞ்ச ஊழல், மது ஒழிப்புக்கான (கால் செண்டர் சேவை) தொலைபேசி சேவை மையத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடந்தது.
புதிய சேவை மைய தொலைபேசி எண்ணை, ஐஏஎஸ் அதிகாரியும், கோஆப் டெக்ஸ் மேலாண் இயக்குனருமான உ.சகாயம் அறிமுகப்படுத்தி பேசினார். சகாயம் அவர்கள் எந்தளவு லஞ்ச, ஊழலுக்கு எதிரான போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருபவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த தொலைபேசி சேவையின் மூலம் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதுடன், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ‘சட்ட பஞ்சாயத்து’ நடவடிக்கை எடுக்கும். கடந்த சில மாதங்களாக சோதனை முறையில் ‘76671 00100‘ என்ற தொலைபேசி எண்ணை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியபோது இந்த இயக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் தொடர்பு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் துவக்கவிழாவுக்கான அழைப்பிதழ் நமக்கு வந்திருந்தது.
டிசம்பர் 14, சனிக்கிழமை 4.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நமக்கு அலுவலகம் முடிய 6.30 ஆகிவிட்டது. இருப்பினும் இது போன்ற நிகழ்ச்சியில் முடியும்போதாவது நாம் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும் என்று கருதி, சனிக்கிழமை மாலை 6.45 அளவில் தியாகராயர் அரங்கிற்கு சென்றிருந்தோம். அங்கு மைக்கில் அறிவிப்புக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த ‘சட்டப் பஞ்சாயத்து’ தன்னார்வலர்களில் ஒருவரான திரு.ராதாகிருஷ்ணன் என்பவரை சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு மகத்தான முயற்சிக்கு வாழ்த்துக்கள் கூறினோம்.
அப்போது அவர் ‘உங்களை எனக்கு தெரியுமே… உங்களுக்கு எதற்கு அறிமுகம்?” என்றார்…நாம் வியப்பின் உச்சிக்கே சென்றோம்.
“உங்கள் பாரதி விழாவுக்கு நான் வந்திருந்தேன். தாமதமாகத் தான் வந்தேன். ஆனால் முழு விழாவையும் இரசித்துவிட்டுத் தான் சென்றேன்” என்றார்.
“அப்படியா… ரொம்ப தேங்க்ஸ் சார். உங்களை எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விழாவிலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு உங்களிடம் பேசியிருப்பேன்” என்றோம்.
“ஃபேஸ்புக்கில் பாரதி விழா குறித்து பார்த்து தெரிந்துகொண்டு வந்தேன்!” என்றார்.
நாமாவது அழைப்பு அனுப்பி அதனால் அங்கு சென்றோம். ஆனால் இவர், ஃபேஸ்புக்கில் நாம் வெளியிட்ட அழைப்பையே அன்போடு ஏற்றுக்கொண்டு வந்திருந்து தன்னை நம்மிடம் அறிமுகம் கூட செய்துகொள்ளாமல் சென்றிருக்கிறார் என்றால் எத்தனை பெரிய பண்பு…!
நல்லவேளை… இந்தளவு நமக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களின் விழாவிற்கு முடியும் தருவாயிலாவது நாம் வந்தோமே என்று ஒரு கணம் சந்தோஷப்பட்டோம்.
நமது விசிட்டிங் கார்டை அவரிடம் அளித்து “நிகழ்ச்சியின் புகைப்படங்களை அனுப்பி வையுங்கள். தளத்தில் ஒரு விரிவான பதிவளிக்கிறோம்.” என்று கூறிவிட்டு வந்தோம்.
நிச்சயம் இந்த சட்டபஞ்சாயத்து ஒரு நாள் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ உதவக்கூடும்.
விழாவில் திரு.சகாயம் அவர்கள் பேசியது தான் ஹை-லைட்.
சட்டப் பஞ்சாயத்து ஹெல்ப் லைன் எண்ணை வெளியிட்டு திரு.சகாயம் பேசியதாவது:
சுயநலமாக, வேகமாக ஓடும் மக்கள் மத்தியில், இங்கு பெருந்திரளாக திரண்டுள்ளீர்கள். இதைப் பார்க்கும்போது லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க அரசு அலுவலர்களும் மக்களும் மன மாற்றத்துக்கு வர வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
லஞ்சம் மற்றும் ஊழலை வேண்டுமானால் ஒழித்து விடலாம். ஆனால், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவை ஒழிக்க நாம் அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும்.
மக்கள் லஞ்சம் கொடுக்க முனையாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலமே நாட்டில் லஞ்சம், ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.
ஒரு நெசவாளன், 5.5 மீட்டர் சேலையை நெய்ய 19 ஆயிரம் முறைக்கு மேல் கை, கால்களை அசைக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் ஒரு நெசவாளனின் ஒரு நாள் கூலி ரூ.75 மட்டுமே. ஆனால் அரசு அதிகாரிகளின் சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம். ஆகவே அதிகாரிகள் நெசவாளர்களுக்காக, அவர்களுடைய அவல நிலையை போக்க ஏதேனும் நன்மை செய்ய வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் பொங்கலை முன்னிட்டு வாங்கும் ஜவுளியை கோ-ஆப்டெக்சில் வாங்கினால் அந்த நெசவாளிகள் பயன்பெறுவார்கள்.
சாதாரண மக்களுக்கும் சட்ட அறிவு மிக மிக அவசியம். சட்ட அறிவை பொதுமக்களிடம் வளர்க்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும் என்று கூறினார்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடக்க விழாவில் திரு.சகாயம் I.A.S அவர்களின் எழுச்சி மிகு உரை – VIDEO
முன்னதாக சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ பேசியது:
இந்த தொலைபேசி சேவையில், அரசு வழங்கும் சேவைகள் பற்றியும், லஞ்சம் கொடுக்காமல் சேவைகளைப் பெறுவது பற்றியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறித்தும், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 வரை 7 மணி நேரம் செயல்படுகிறது. இது வருங்காலத்தில் 24 மணி நேரமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
[END]
பதிவின் தலைப்பே மிரட்டலாக உள்ளது. மிகவும் அருமை. ஆன்மிக பதிவில் தான் மிரட்டுவீகள் என்று நினைத்தேன், மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி
uma
எல்லோருக்கும் முக்கியமாக கிராம புறங்களில் இருப்பவர்களுக்கும் மற்றும் உதவி செய்ய ஆளில்லாமல் இருப்பவர்களுக்கும் ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்த அமைப்பு ஒரு வர பிரசாதம்.
திரு. ராதாகிருஷ்ணன் சார் அவர்கள் நம் பாரதி விழாவிற்கு வந்தது ஒரு ஹை-லைட்.
இந்த சேவை பலருக்கும் பயன்படும்
சகாயத்தின் பேச்சு நன்கு உள்ளது. தொடரட்டும் உங்கள் நற்பணி.
Hi Sundhar sir,
அருமையான தகவலுக்கு நன்றி ….!
-Uday
எல்லோருக்கும் முக்கியமாக கிராம புறங்களில் இருப்பவர்களுக்கும் மற்றும் உதவி செய்ய ஆளில்லாமல் இருப்பவர்களுக்கும் ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இந்த அமைப்பு ஒரு வர பிரசாதம்
இது போன்ற இயக்கத்தை வளர மற்றும் விரிவு படுத்த நாம் பாடுபடுவோம்.
நன்றி
நந்தகோபால்
வந்தவாசி
Dear sundarji,
Very nice start up.
Thanks and Regards
Harish V
அவசியமான தகவல் ….அனைவரிகும் பயன்படும் நன்றி சுந்தர் சார்