இராஜம்மாள் அன்னையை குடியாத்தம் முற்றோதல் நிகழ்ச்சியில் சந்தித்தது தொடர்பான பதிவை எழுதி வருகிறேன். திருவருள் துணைக்கொண்டு இன்று இரவுக்குள் எப்படியும் எழுதி முடித்து பதிவு செய்துவிடுவேன் என்று கருதுகிறேன். நாளை பிரார்த்தனை கிளப் தொடர்பான பதிவு இடம்பெறவிருக்கிறது. இந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு மிகப் பெரிய மனிதர், நல்ல மனிதர் – நான் ரோல்மாடலாக கருதும் நபர்களில் ஒருவர் – தலைமையேற்க இருக்கிறார்.
இறைவனிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு நம் கடமைகளை சரிவரச் செய்தால் நம் உயர்வை அவன் பார்த்துக்கொள்வான் என்பதற்கு நேரடி உதாரணம் இவர்.
அன்னையை சந்தித்த அனுபவப் பதிவை எழுதி வருவதால் வேறு பதிவு எதுவும் எழுத இயலவில்லை. இருப்பினும் ஆவலுடன் காத்திருக்கும் உங்களை ஏமாற்றவும் மனமில்லை.
எனவே இப்போதைக்கு ஒரு FILLER போல இந்த பதிவை அளிக்கிறேன்.
ஒருவர்க்கு இன்றியமையாத செல்வம் எது தெரியுமா?
உடல் ஆரோக்கியமும் ஒற்றுமையான நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் தான்.
அனைவரும் பார்த்து பொறாமைப்படும் பெருமூச்சு விடும் மிகப் பெரிய செல்வந்தர்கள் கூட இவை இரண்டும் இல்லாது அல்லலுறுவதை பார்த்திருக்கிறேன்
ஆரோக்கியத்தை நல்ல பழக்கவழக்கங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ளலாம். தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் குடும்ப ஒற்றுமை ? அது நமது கைகளில் மட்டும் இருப்பது கிடையாதே… மற்ற குடும்ப உறுப்பினர்களையும் சார்ந்துள்ள விஷயம் அது.
ஒருவரின் நிம்மதிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் மிக மிக முக்கியம். ஒருவர்க்கு வீட்டில் அமைதி இல்லையேல் அவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அமைதி கிட்டாது.
எனவே சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் பெருக மனநிம்மதி கிடைக்க கீழ்கண்ட பதிகத்தை ஓதி வாருங்கள்.
முதல் வார்த்தையே பாருங்கள் எத்தனை அற்புதமாக வைத்திருக்கிறார் நம் ஆளுடையப் பிள்ளை. நம்பிக்கையுடன் படித்து வாருங்கள். அகமும் புறமும் சுத்தமாகி நல்லது நடக்கும்.
சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் பெருக
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;
கண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
போதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்
காதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
தொண்டு அணை செய் தொழில், துயர் அறுத்து உய்யலாம்;
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண்துணை நெற்றியான்; கழுமல வளநகர்ப்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெய, பெருந்தகை இருந்ததே
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழிநெஞ்சமே
விடைஅமர் கொடியினான்: விண்ணவர் தொழுதுஎழும்
கடைஉயர்மாடம் ஆர் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே; மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள்உடைப் பெருந்தகை இருந்ததே
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே
நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
களை வளர் பொழில்அணி கழுமல வள நகர்ப்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே
அரக்கனார், அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்; நீடுயாழ் பாடவே
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப்
பெருக்கும் நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே
நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடிகமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
தார்உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர்உறு சொல் களைந்து அடிஇணை அடைந்து உயம்மின்
கார்உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
கருந்தடம் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் போய், விண்ணுலகு ஆள்வரே
திருச்சிற்றம்பலம்
[END]
மிகவும் நன்றி சார்.
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் பெண்கள் படிக்க வேண்டிய பதிகம்.
குறை இல்லாத வீடே இல்லை என்று கூட சொல்லலாம்.
இதை தினமும் படிப்பதின் மூலம் எல்லா வீட்டிலும் நிம்மதியும் செல்வமும் சேர வேண்டும் என்று கடவுளை வேண்டலாம்.
ரோல்மாடலாக கருதும் இந்த வார பிரார்த்தனை கூட்ட தலைவரை பார்க்க ஆவலுடன் எதிர்பார்கிறோம்
சுந்தர் சார்
அருமையான பதிவு..
அனைவரும் பின்பற்ற வேண்டிய பதிவு..
நன்றி சார்
சுந்தர் சார்,
உங்களது பதிவுகளில் இது ஒரு முக்கியமான பதிவு. நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்.
நன்றியுடன் அருண்.
“இப்போதைக்கு ஒரு FILLER போல இந்த பதிவை அளிக்கிறேன்” என்று இருக்கிறது. இது FILLER பதிவு அல்ல. இன்றைய குடும்ப நிலைக்கு இது ஒரு பில்லர் (தூண்) பதிவு. நன்றி
சுந்தர்ஜி,
அருமையான உபயோகமுள்ள பதிவு.அதுவும் இன்று பல பேர் வீட்டில் சண்டை சச்சரவுகளால் குடும்ப நிம்மதியை இழந்து தவிகின்றார்கள் .
எல்லோருக்கும் இந்த ஸ்லோகம் ஒரு வரப்ரசதமாகும் இந்த பதிகத்தை படித்து யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
ரோல் மாடல் வி ஐ பி காக காத்திருக்கிறோம்
நன்றி
உபயோகமான மற்றும் அவசியமான பதிவு !!!
வீட்டில் நிம்மதி இல்லை என்றால் அதை வேறு எங்கு போனாலும் கிட்டாது – ஆழமான ஆணித்தரமான உண்மை !!!
நம் உள்ளத்தை தூய்மையாக்கி சுற்றத்தை நல்ல முறையில் பார்த்துக்கொண்டோமேயானால் வீடும் நாடும் தாமாகவே நலமும் வளமும் பெரும் !!!