Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > All in One > வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

print
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி எனக்கு எப்போதும் உண்டு. அதுவும் இப்போது அந்த வெறி உச்சத்தில் இருக்கிறது. சரியான பாதை, சரியான நண்பர்கள், நல்லோர் அறிமுகம் அதன் மூலம் நமக்குள் ஏற்படும் சிந்தனை மாற்றம்,  தன்னலமற்ற நல்ல உள்ளங்களின் நட்பு, விதியை புரட்டிபோட்டு வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்டிய சாதனையாளர்களின் சந்திப்பு – என்னுடைய நிகழ்காலம் இது தான். என்னுடைய பேச்சு, செயல், சிந்தனை, சந்திப்பு எல்லாம் தற்போது இது தான்.

வில்வித்தை போட்டியில் கௌரவர்களும் பாண்டவர்களும் பங்கேற்றபோது, துரோணர் அர்ஜூனனிடம் “குறிவைக்கப்படும் பறவையின் உருவம் தெரிகிறதா?” என்று கேட்டபோது “இல்லை.. அதன் கண்கள் மட்டுமே தெரிகிறது” என்றான் அர்ஜூனன். அது போல, எட்ட வேண்டிய இலக்கு தான் என் கண்களுக்கு தெரிகிறதே தவிர இடையில் சந்திக்கும் தடங்கல்கள், பிரச்சனைகள், சறுக்கல்கள், துரோகங்கள் இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

சரி…. சரி… விஷயத்திற்கு வருகிறேன்…

ஒரு நாள் பார்வையற்ற மாற்று திறனாளி – நண்பர் திரு.இளங்கோவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கண்ணதாசன் அவர்களை பற்றி எங்கள் பேச்சு திரும்பியது.

“வாழ்க்கையில் ஜெயிக்கிற வழியை பத்தி கண்ணதாசன் ஒரு பாட்டில் ரொம்ப அருமையாக சொல்லியிருப்பார் தெரியுமா சுந்தர்?” என்றார் அவர்.

“வாழ்க்கையில் ஜெயிப்பது பற்றி ஒரு பாட்டல்ல பல நூறு பாட்டுக்கள் கண்ணதாசன் எழுதியிருக்கிறாரே… நீங்க எந்த பாட்டை சொல்றீங்க?” என்றேன் நான்.

“உண்மை தான் கண்ணதாசன் நிறைய MOTIVATION SONGS எழுதியிருக்கார். ஆனால் இந்த ஸாங் எல்லாத்தையும் தாண்டி SOMETHING SPECIAL” என்றார்.

நான் ஆவலுடன் “எந்த பாடல்?” என்று கேட்டேன்.

இளங்கோ பாடியே காட்டினார். (அவர் ஒரு சிறந்த பாடகர். தெரியுமல்லவா?)

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

இந்த பாடலை பாடியவுடன், “சுந்தர்… பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்… பார்த்து நடந்தால் பயணம் தொடரும்” என்கிற இந்த வரியில் எவ்ளோ அர்த்தம் இருக்கு தெரியுமா?” என்றார்.

அதுவரை அந்தப் பாடலை கேட்டு வந்த நான் அதற்க்கு பிறகு தான் அனுபவிக்க ஆரம்பித்தேன். அடடா.. என்ன ஒரு கருத்து என்ன ஒரு கருத்து. என்று ஒவ்வொரு முறையும் வியந்து போகிறேன். (என்னோட மொபைல் காலர் ட்யூன் இப்போ இந்த பாட்டு தான்!)

வாழ நினைத்தால் வாழலாம் Song Video

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்க்கத் தெரிந்தவர்களுக்கு தான் பாதை தெரியும். எல்லோருக்கும் அல்ல. இந்த இடத்தில் நமது வெற்றியை அந்த சூழலை VISUALIZE செய்யவேண்டும். அதைத் தான் கண்ணதாசன் ‘பார்க்கத் தெரிந்தால்’ என்று கூறுகிறார். அப்துல் கலாம் அவர்கள் கூறும் ‘கனவு காணுங்கள்’ என்னும் வைர வாக்கியமும் இது தான்.

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

அப்படி வெற்றிக்கான பாதை தெரிந்த பின்பு அதில் பார்த்து நடக்கவேண்டும். பார்த்து நடக்கவேண்டும் என்பதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள். வெற்றிக்கான பாதையில் நடக்கும்போது ஆணவம், அலட்சியம், சோம்பல் ஆகியவை கூடவே கூடாது. ஒரு அடி தவறாக எடுத்து வைத்தால் கூட வெற்றிக்கான பாதையிலிருந்து விலகிவிடுவோம்.

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

அப்படி கண்ணும் கருத்துமாக பயணத்தை தொடர்ந்தால் வெற்றிக் கோட்டைக்கான கதவு திறக்கும். தொடர்ந்தால் என்கிற வார்த்தையில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.  வெற்றிக்கான பாதையில் தொடர்ந்து போய் கொண்டிருக்க வேண்டும். பாதியில் திரும்பிவிடக்கூடாது.

ஒரு பாடலுக்கே இத்தனை அர்த்தங்கள் என்றால் கண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்? வியப்பு தான் மேலிட்டது. அவரது பாடல்களை பற்றி கொள்கைகளை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவா ஏற்பட்டது.

இன்று கண்ணதாசன் அவர்கள் இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது முயற்சித்து அவரை சந்தித்து அவரை பேட்டி எடுத்திருப்பேன். அவர் இல்லாவிட்டால் என்ன?? ‘மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து வரும் அவர் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் இருக்கிறாரே… அவரை சந்திப்போம் என முடிவு செய்தேன். நாம் அடிக்கடி சொல்வது போல… மனித மனதிற்கு அளப்பரிய சக்தி உண்டு. வேண்டும் என்று ஒரு முக சிந்தனையுடன் முயற்சி செய்தால் வானமும் வசப்படும்.

அடுத்த சில நாட்களில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலை வாங்க தி.நகரில் உள்ள கண்ணதாசன் பதிப்பகம் சென்றேன். கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த வீட்டில் முதல் தளத்தில் பதிப்பகம் இயங்கிவருகிறது. கீழே அவருடைய புதல்வர் காந்தி கண்ணதாசன் வசிக்கிறார்.

நூலை வாங்கிவிட்டு அலுவலகத்தில் இருந்த அவரை சந்தித்து அவரிடம் நம்மை அறிமுகம் செய்துகொண்டு கவிஞரை பற்றியும் அவரின் காலத்தால் அழியா சில பாடல்களை பற்றியும் நம் தளத்திற்காக அவர் சிறப்பு பேட்டி ஒன்று தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டவர் “எப்ப முடியுமோ வாங்க… வரும்போது ஒரு ஃபோன் செய்துவிட்டு வாங்க. பேசலாம்.” என்றார்.

“ரொம்ப நன்றி சார். இப்போதைக்கு ஒரே ஒரு சின்ன தகவல் மட்டும் சொல்லமுடியுமா ?” என்றேன்.

“தாராளமா… என்ன தகவல் வேணும்?” என்பது போல பார்க்க…

“கவிஞரின் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.. தன்னம்பிக்கை பாடல்களில் முதலிடத்தில் இன்றும் இருப்பது அது தான். அந்த பாடல் பற்றியும் கவிஞர் அதை எழுதிய சூழல் பற்றியும் சொன்னால் எங்கள் வாசகர்களுக்கு உபயோகமாய் இருக்கும்”

அப்போது அவர் சொன்னது தான் கீழ்கண்ட முகவரியில் காணப்படும் பதிவு.

http://rightmantra.com/?p=986

மேற்கூறிய அருமையான தகவலை அவர் கூறிய பிறகு விரிவான சந்திப்புக்கு விரைவில் வருவதாக சொல்லிவிட்டு விடைபெற்றுகொண்டு திரும்பினோம்.

கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 24) எனவே பிறந்தநாள் சிறப்பு பதிவாக திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் பேட்டியை அளிக்கலாம் என்று கருதி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திரு.காந்தியை தொடர்புகொண்டு அப்பாயிண்ட்மெண்ட் பெற்று நேரில் சென்றேன். என்னுடன் நண்பர் பிரேம் கண்ணன் என்பவரும் வந்திருந்தார். நமது தளத்தின் ‘திருக்கோவில் உழாவாரப் பணிக்குழு’வில் உறுப்பினர் இவர்.

வாழ்க்கையில் வெற்றிக்கொடி நாட்ட உறுதி பூண்டு அதற்காக போராடி வருகிறார். இவரை போன்றவர் கண்ணதாசன் அவர்களை பற்றிய சந்திப்புக்கு உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் அவரை அழைத்து சென்றேன்.

எழுந்து நின்று நம்மை வரவேற்றவர் திரு.காந்தி கண்ணதாசன். நம்மை சௌகரியமாக அமரச் செய்தார். நண்பரை அவருக்கு அறிமுகப்படுத்தினோம். பரஸ்பர நல விசாரிப்புகள் மற்றும் அறிமுகங்கள் முடிந்தபிறகு நம் தளம்சார்பாக திரு.காந்திக்கு மலர்க்கொத்து அளிக்கப்பட்டது.

நண்பர் திரு.பிரேம் கண்ணன் திரு.காந்தி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறார்

அந்த இடத்திலேயே ஒரு வித பாஸிடிவ் வைப்ரேஷனை உணரமுடிந்தது. பின்னே கண்ணதாசனின் மூச்சு காற்று பட்ட இடமல்லவா?

சுவற்றில் PEOPLE’S PRESIDENT திரு.அப்துல் கலாம் அவர்களின் படம் காணப்பட்டது. மற்றும் கவிஞரின் மிகப் பெரிய படம் ஒன்றும் சுவாமி படங்களும் இருந்தன.

அடுத்த சில நிமிடங்களில் உரையாடல் தொடங்கியது.

நாம் : கவிஞரை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? அவரது பாடல்கள் இன்றும் கூட புகழ் குன்றாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

திரு.காந்தி கண்ணதாசன் : கண்ணதாசன் என்கிறவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. ஒரு சித்தர் மாதிரி. தன்னுடைய அனுபவத்தால் அனைத்தையும் எழுதியவர். அப்பாவுக்கு படிப்பறிவு கிடையாது. எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மிகப் பெரிய விஷயங்களை கூட இரண்டே வரிகளில் எழுதிவிடுகிறார் என்பதால் அது அந்த ஆண்டவனின் ஆசையைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

நாம் : பாடல்கள் எழுதுவதில் அப்பாவுக்கு இருந்த சவால் என்ன?

அதேசமயம் திரைப்பட பாடல்களை எழுதுவதில் அவருக்கு இருந்த சிரமம் என்னவென்றால் கதையும், அதற்கான சிச்சுவேஷனும் அந்த பாடலில் வரவேண்டும். அந்த காரக்டர் வரவேண்டும். அந்த ட்யூனுக்கு ஏற்றார்ப்போல பாடல் வரிகள் இருக்கவேண்டும். பாடுகிறவருக்கு வார்த்தைகள் சிரமத்தை தரக்கூடாது. சராசரி மனிதனுக்கு வரிகள் புரியவேண்டும். இவ்வளவு அளவுகோல்களை வைத்து எழுதி தான் அவர் திரைப்படப் பாடல்களில் கூட கருத்தை சொன்னார்.

இப்படிப்பட்ட கைவிலங்குகளுக்கு நடுவில் அவரால் பாடல்களில் மிகப் பெரிய விஷயங்களை சொல்ல முடிந்தது என்றால் அவர் நிச்சயம் ஞானி தான்.

நாம் : நிச்சயமாக…. அதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது சார்….

திரு.காந்தி கண்ணதாசன் : அவர் வாழ்ந்த காலம் குறுகிய காலம். திரைப்பட பாடல்கள் எழுதிய காலமும் குறுகிய காலம் தான். நிறைய காலங்கள் அரசியலில் வீண் போனது. அரசியலில் தொலைத்த அந்த காலங்கள் போக மீதமுள்ள காலங்களில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். டிராமா போட்டிருக்கிறார். இவ்வளவு விஷயங்களையும் மீறி வெறும் திரைப்படப் பாடல்கள் மட்டும் எழுதியிருந்தால் அந்த காலகட்டங்களில் கண்ணதாசனை மீறி திரைப்படப் பாடலாசிரியர்கள் எவரும் வந்தேயிருக்க முடியாது.

பல விஷயங்களில் அவர் கவனம் செலுத்தியதால் திரைப்படப் பாடல்கள் எழுதுவதில் அவரால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. சராசரியாக ஒரு நாளைக்கு அப்பா மூன்று பாடல்கள் எழுதக் கூடியவர். திரைப்படப் பாடல்கள் மட்டுமே அவர் எழுதியிருந்தால் மாதம் முழுக்க 100 பாடல்கள் எழுதிவிடுவார். நூறு பாடல் அவரே எழுதினால் வேறு எவரும் அங்கு அவருக்கு போட்டியாக வந்தேயிருக்க முடியாது.

அப்பா அரசியல் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று பேச, இரவு பகலாக பலமுறை பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். காலை சென்னை இரவு திருச்சி. மறுபடியும் சென்னை என அவர் ஓய்வில்லாமல் அரசியல் பணிகள் செய்த காலகட்டங்கள் உண்டு.

அரசியல் உள்ளிட்ட தளங்களில் அவர் ஈடுபடவில்லை என்றால் இன்னும் நிறைய பாடல்களை நமக்கு தந்திருப்பார். ஆனால் அவர் ஈடுபட்ட பல்வேறு துறைகள் தான் அவருக்கு அனுபவ மேடைகள் ஆயின. அது அவருக்கு பல விதங்களில் உதவியது. அவருடைய பணக்கஷ்டங்கள் உள்ளிட்ட பல துன்பங்கள், அனுபவங்கள், பாடல்களாக வந்தன. அவருக்கு எல்லாமே அனுபவங்கள் தான்.

வாழ்க்கையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் பல அனுபவப் பாடல்கள் தான். வாழ்க்கையில் அனுபவப்பட்டு அடிபட்டு அடிபட்டபிறகு – தான் கற்றுக்கொண்ட பாடம் என்ன – அந்த பாடம் தனக்கு என்ன பலன் கொடுத்தது – என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

‘சுமைதாங்கி’ படத்தில் வரும் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் பிறந்த கதை பற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருப்பேன்.

அப்பா கஷ்டப்பட்டார். கஷ்டப்பட்டது மட்டுமல்லாமல் ஒரே குறிக்கோளுடன் இருந்தார். அதாவது நாம் தோற்கமாட்டோம் நிச்சயம் ஜெயிப்போம் என்ற தன்னம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த தன்னம்பிக்கை மூலமாக மட்டுமே அவர் ஜெயித்தார்

இதில் மற்றவர்களுக்கு அவர் சொல்லக்கூடியது என்னவென்றால்…. பொதுவாக ஜெயித்தவர்கள் தாங்கள் ஜெயித்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள். ஆனால் கண்ணதாசனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அது தான்.

காரணம் ஜெயித்ததற்க்கான சூத்திரம் – FORMULA – வழிமுறை – மிகவும் சிக்கலானது. சிலர் அவர்களால் பழிவாங்கப்பட்டிருப்பார்கள். சிலர் ஒழித்துகட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் கண்ணதாசன் நேர்மையாக ஜெயித்தவர். நேர்மையாக கிடைத்த வெற்றி எனும்போது தான் ஜெயித்ததற்கான காரணத்தையும் அதில் சொல்லியிருப்பார். தோற்றதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார். ஆகையால் தான் காதல் பாடல்களில் கூட அவரால் தன்னம்பிக்கை பற்றி எழுத முடிந்தது.

நாம் : ஆமாம் சார்… பல காதல் பாடல்களில் கூட வெகு அழகாக தன்னம்பிக்கையை புகுத்தியிருப்பார் கவியரசர்.

திரு.காந்தி கண்ணதாசன் : வாழ நினைத்தால் வாழலாம்  என்பது கூட காதல் பாடல் தான்.

நாம் : ஆமாம் சார்…. அதில் இரண்டாவது மூன்றாவது சரணம் முழுக்க காதல் தான்.

திரு.காந்தி கண்ணதாசன் : கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள், காதல் பாடல்கள் என அனைத்திலும் சுயமுன்னேற்ற கருத்துக்கள் இருக்கும். தன்னுடைய அரிவாள் அனுபவத்தால் சொன்னது போக தன்னுடைய சித்தத்தால் சொன்னதும் ஏராளம் உண்டு.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,

அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

போனால் போகட்டும் போடா… என்பது ஜஸ்ட் மூன்று வார்த்தைகள் தான். “ஆனால் அது எவ்வளவு பெரிய ஆறுதல் எனக்கு தருகிறது தெரியுமா?” என்று அப்பாவின் ரசிகர் ஒருவர் அடிக்கடி என்னிடம் கூறுவதுண்டு.

வெறும் போனால் போகட்டும் போடா…. நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். ஆனால் அதை அவர் பாடலாக தரும்போது அதற்கு மிகப் பெரிய வீரியம் வந்துவிடுகிறது. LET GO என்பது உளவியலில் மிகப் பெரிய பாடம். அதை மிக சுலபமாக சொல்லிவிட்டு போய்விட்டார் கவிஞர்.

நாம் : உங்களுக்கு ஆறுதலாக இருக்கக் கூடிய உங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் எழுதிய பாடல் எது ?

திரு.காந்தி கண்ணதாசன் : உங்களுக்கு பிடித்த பாடல் தான். வாழ்க்கையே வெறுத்து மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் என்று புறப்பட்ட வாலியை சென்னையிலேயே சாதிக்க வைத்த அதே பாடல் ‘மயக்கமா கலக்கமா’ தான் எனக்கும் பிடித்த பாடல்.

நாம் :  காரணம் சார்?

திரு.காந்தி கண்ணதாசன் : அதில் பொதிந்துள்ள அர்த்தங்கள் தான்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வாழ்க்கையில ஒன்னு ரெண்டு இல்லை. ஆயிரம் இருக்கும். அப்படியிருக்கக்கூடிய காலகட்டத்துல நமக்கு ஏற்படும் ஒன்றிரண்டு பிரச்னைகள் பிரச்னைகளே அல்ல.
அந்த பாடலை அணு அணுவா பகுத்து பார்த்தால் வாழ்க்கையில இதை விட நிம்மதி தரக்கூடிய விஷயம்  வேறு இல்லை என்று தோன்றும்.

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

வந்த துன்பம் எதுவென்றாலும் அதாவது ‘எதுவென்றாலும்’ என்கிற இந்த பதத்தை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ‘எதுவென்றாலும்’ அல்லது “எது வென்றாலும்” – இரண்டிலுமே அர்த்தம் உண்டு.

நாம் : அதே போல இன்னொரு பாடல் ஒன்னு இருக்கு. அதை பற்றியும் நீங்கள் உங்கள் பார்வையில் கொஞ்சம் சொல்லவேண்டும். அதாவது “உன்னையறிந்தால்… நீ உன்னையறிந்தால்..” என்று வேட்டைக்காரன் படத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதியிருப்பார். இன்று எந்த தன்னம்பிக்கை நூல்களை எடுத்துக்கொண்டாலும் “தன்னை அறிவது” அதாவது SELF-REALISATION தான் அடிப்படை. அதாவது “KNOW YOURSELF”.

திரு.காந்தி கண்ணதாசன் :  KNOW YOURSELF அல்ல KNOW THYSELF  (நம்மை திருத்தினார்).

நாம் : திருத்தியதற்கு நன்றி. இந்த ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ பாட்டு பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்….

திரு.காந்தி கண்ணதாசன் :  எம்.ஜி.ஆர். பாடல்கள் அது எந்த பாடலானாலும் சரி… நீங்கள் மனம் சோர்ந்து போயிருக்கும்போது தனிமையில் கேட்டுப் பாருங்க. உங்க மூடே மாறிவிடும். இனம் புரியாத ஒரு உற்சாகமும் தன்னம்பிக்கையும் தொற்றிக்கொள்ளும்.

நாம் : ஆமாம் சார்… நீங்கள் சொல்வது சரி…. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு சின்ன மனக்கஷ்டம். நல்லதுக்கே காலமில்லை என்று என்று நான் மிகவும் வெறுத்துப் போயிருந்த நேரத்தில், ஏதோ ஒரு மியூசிக் சானலில் ‘தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்’… பாடலை கேட்டேன். பாடலை கேட்டவுடன் திரும்ப திரும்ப அதை YOUTUBE ல் போட்டுப் பார்த்தேன்.

‘கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்’ என்ற வரிகள் தான் எனக்கு மிகப் பெரும் ஆறுதலை தந்தது. எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்களையே எனது முன்னேற்றத்திற்க்கான படிக்கற்களாக இன்று வரை பயன்படுத்திவருகிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு மிகப் பெரிய தொர்கத்தை சந்திக்கும்போது வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுகிறேன்.

‘கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்’  அந்த வரி சாதாரண வரிகள் அல்ல….

திரு.காந்தி கண்ணதாசன் :  அப்பா… இன்னொரு வார்த்தையும் சொல்வார். ‘இறைவா என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று’ என்று.

எதிரின்னா தெரியும் அவன் எதிரின்னு. நண்பன் ஒருத்தன் கூடவே இருந்து எதிரியா இருப்பான். அது நமக்கு தெரியாது. அப்போ தான் அந்த நீங்கள் செய்த தர்மம் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே வந்து உங்களை காப்பாற்றிவிடும்.

இதுக்கு ஒரு அற்புதமான விளக்கம் இருக்கு. ஒருத்தன் அடிக்கடி தர்மம் பண்ணுவான். நல்லது செய்வான். அவனோட அக்கவுண்ட்ல கடவுள் அதுக்குரிய பலன்களை போட்டுகிட்டே வருவார். தினமும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு தான் வண்டி ஒட்டுவான். ஒரு நாள் ஹெல்மெட் போடாம வண்டி ஒட்டுவான். அன்னைக்குன்னு பார்த்து ஆக்சிடென்ட் ஆகும். கீழே விழுவான். ஆனா தலையில அடிபடாது.

எப்படிடா தலையில் மட்டும் அடிபடாம தப்பிச்சேன்னு கேட்டா அது ரொம்ப பெரிய விஷயம்… என்னோட நேரம் தப்பிச்சேன்…  அப்படின்னு சொல்வான். வேற ஒண்ணுமில்லே அவனோட தர்மம் அவனை காப்பாற்றியிருக்கு. தட்ஸ் ஆல்.

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்

நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

ரிக், யஜூர், சாம, அதர்வணம் – இந்த நான்கு வேதங்களிலும் சொல்லப்படுவது இது தான்.

நாம் கொஞ்சம் DEVIATE ஆகிட்டோம்னு நினைக்கிறேன்… என்ன கேள்வி கேட்டீங்க?

நாம் : உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் பாடல் பற்றி….

திரு.காந்தி கண்ணதாசன் : ஆம்… ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.’ இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.

அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மரணமும் துர்மரணம் நேரிட்டது நினைவிருக்கலாம். (சிலர் பெயர்களை சொல்கிறார்.).

ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து [புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். அண்ணா சமாதிக்கு வரும் கூட்டத்தை விட அவருக்கு அதிகம் வருகிறது.

இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.

அதுமட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு…. கண்ணதாசன் என்கிற உண்மையான கவிஞன் எழுதிய வரிகள் அப்படியே பலித்தது.

நாம் : ஆம் சார்… ‘கவிஞன் வாக்கு பொய்க்காது’ என்பார்கள்.

திரு.காந்தி கண்ணதாசன் : அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர். எப்படி போனார் தெரியுமில்லையா? வரும்போது சும்மா துள்ளி குதிச்சிகிட்டு வந்தார். காரணம்? அவர் தர்மம் அவரை காப்பாற்றியது. தர்மம் தலை காக்கும்.

நாம் : அடுத்து நடிகர் திலகத்திற்கு எழதிய பாடல் ஒன்று. மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இறைவனின் கட்டளையாக ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம்பெற்ற ‘ஆறு மனமே ஆறு’ பாடல் அமைந்துவிட்டது. கவிஞரின் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் அதுவும் ஒன்று. அந்த பாடலுக்கு பின்புலம் ஏதாவது உள்ளதா?

திரு.காந்தி கண்ணதாசன் : எல்லாப் பாடல்களுக்கும் பின்புலம் என்பது இருக்காது.’அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல’, ‘ஒரு கோப்பையில் என் குடியிருப்பு’ போன்ற சில பாடல்களில் தான் பின்னணியில் ஏதாவது அவரை பாதித்த சம்பவம் இருக்கும். கவிஞர் மொத்தம் சும்மார் 5000 பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் 300 லிருந்து 500 பாடல்கள் பாடல்கள் வரை பின்புலம் உண்டு. மற்றவற்றுக்கெல்லாம் கிடையாது.

அப்படிஎன்றால் மற்ற பாடல்களும் இந்த அனுபவப் பாடல்களை போன்றே சிறப்பாக இருக்கிறதே அதற்க்கு காரணம் என்னவென்றால் அந்த பாடல்களையெல்லாம் அவர் ஒரு சித்தரின் மனநிலையில் இருந்து தான் எழுதியிருப்பார்.

நீங்க கேட்டதனால் சொல்கிறேன். ஆறு மனமே ஆறு பாடலை பொறுத்தவரை, ‘ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்’ என்று எழுதியிருப்பார். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு பேசுவது தான். சாப்பிடுவது, தூங்குவது, கல்வியில் ஈடுபடுவது என நாம் செய்யும் அத்தனையும் விலங்குகளும் செய்கின்றன.

ஆகையால் ஆசை கோபம் களவு இவற்றோடு வாழ்பவன் மிருகம் என்கிறார் கவிஞர். ஆசையை ஏன் முதலில் வைத்தார் என்றால் அனைத்து தீங்குகளுக்கும் ஆசை தான் அடிப்படை.

நாம் : அதே போல ‘எங்களுக்கும் காலம் வரும் காலம்  வாழ்வு வரும்’ என்று பாசமலரில் ஒரு பாடல் வரும். அதில் கடைசியில் “நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை” என்ற வரி ஒன்று வரும்…

திரு.காந்தி கண்ணதாசன் : ஆமாம் அது அவரின் சொந்த வாழ்க்கை தானே ? அவர் யாரை வஞ்சம் செய்தார்? இன்றைக்கு கண்ணதாசன் மறைந்து 32 ஆண்டுகள் கழித்து என்னை நீங்கள் பேட்டி எடுக்க வருகிறீர்கள் என்றால் அதற்கு காரணாம் அவர் வாழ்ந்த வஞ்சமில்லா வாழ்க்கை தானே?

எத்தனை அரசியல்வாதிகள் வாழ்ந்திருக்கிறார்கள் மறைந்திருக்கிறார்கள்… அவர்கள் வாரிசுகளை எத்தனை பேருக்கு தெரியும்? இருக்குமிடம் தெரியாமல் அல்லவா போய்விட்டார்கள்? அரசியல்வாதிகள் பலர் வஞ்சத்தோடு வாழ்ந்தவர்கள் தான் என்பது அதற்க்கு காரணம்.

வாழும் காலத்திலேயே காணாமல் போகிறவர்கள் மத்தியில் கண்ணதாசன் இறந்தபிறகும் கூட வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அதற்க்கு காரணம் அவர் வாழ்ந்த வஞ்சகம் இல்லாத வாழ்க்கை தான்.

நாம் : உண்மை சார். வஞ்சத்தோடு வாழ்பவர்கள் தடம் தெரியாமல் அழிந்துபோவார்கள்.

நாம் : அடுத்து சார்… ஒரு சந்தேகம்… உங்களின் பெயரில் இருக்கும் ‘காந்தி’ என்பதற்கு காரணம் என்ன? அப்பாவுக்கு காந்தி மேல் இருந்த பற்றா?

திரு.காந்தி கண்ணதாசன் : உண்மையை சொல்லவேண்டும் என்றால் என்னுடைய அத்தை அதாவது அப்பாவின் அக்கா பெயர் காந்திமதி. அப்பாவுக்கு ஒரு 20 வயது இருக்கும்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். என்னை என் தாயார் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தபோது அப்பாவுக்கு ஒரு கனவு வந்தது. அதில் வந்த என் அத்தை, “பிறக்கப்போகும் உன் பிள்ளைக்கு என் பெயரை வை” என்று அதில் அவர்கள் கேட்டுக்கொள்ள எனக்கு காந்தி என்று பெயர் வைத்தார்கள்.

நாம் : ஓ… உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கா…. INTERESTING

திரு.காந்தி கண்ணதாசன் : ஒருவேளை நான் பெண்ணாக பிறந்திருந்தால் காந்திமதி என்று பெயர் வைத்திருப்பார் அப்பா. வளரும் வரை கே.காந்தி என்று தான் என் பெயர் இருந்தது. கல்லூரியில் சேர்ந்தவுடன் காந்தி கண்ணதாசன் என்று அதுவே மாறிவிட்டது.

திரு.காந்தி கண்ணதாசன் அவர்களின் சந்திப்பு முதல் பாகம் முடிந்தது.

குறிப்பு : இந்த சந்திப்பை இதை விட சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். மேலும் மேலும் பல கேள்விகள் கேட்டிருக்கலாம். கண்ணதாசன் அவர்களின் பாடல்களைப் பற்றியும் அவரைப் பற்றியும் ஒரு பேட்டியில் just like that அடக்கிவிடமுடியுமா?

மேலும் என் நோக்கம் பேட்டி அல்ல. ஏதோ ஒரு உள்ளுணர்வு “அங்கே போ… உன் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நான் நினைத்தது போலவே என் மிகப் பெரிய சந்தேகம் ஒன்றிற்கு திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் மூலம் விடை கிடைத்தது. மேலும், Rightmantra.com போன்று வளர்ந்துவரும் ஒரு இணையதளத்திற்காக தனது கடுமையான பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நம்முடன் பொறுமையாக உரையாடிய கண்ணதாசன் அவர்களின் நேரத்தை நாம் மேலும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாம் உரையாடிக்கொண்டிருந்த சுமார் முக்கால் மணிநேரமும் பல செக்குகளில் கையெழுத்திடுவதும் பைல்களில் கையெழுத்திடுவதும் என மிக மிக பரபரப்பாக இருந்தார் திரு.காந்தி. எனவே சற்று சுருக்கமாகவே எங்கள் சந்திப்பை முடித்துக்கொண்டோம்.

============================================

அடுத்த பகுதியில் :

* சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்ணதாசனும் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அன்பும் மதிப்பும்.

* என்றும் பணியுமாம் பெருமை – கண்ணதாசன் அவர்களின் பணிவை விவரிக்கும் ஒரு சம்பவம்

* திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் நமக்களித்த நெகிழ வைத்த பரிசு

* வெற்றியாளர்களிடம் உள்ள மிகப் பெரிய ஒற்றுமை
* வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்னையா? நம் வாசகர்களுக்கு திரு.காந்தி கண்ணதாசன் அவர்கள் விடுக்கும் செய்தி
============================================

 

8 thoughts on “வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

  1. வணக்கம் சார்

    தக்க சமயதில் கிடைக்கும் பதிவுக்கு என்ன சொல்வது ………

    வாழ நினைத்தால் வாழலாம் கண்டிப்பா சார்

    மிக்க நன்றி சார்…….

  2. excellent interview
    திரு.கண்ணதாசன் அவர்கள் ஒரு அழியாத காவியம்.
    இளங்கோ சார் சொன்னது போல பார்க்க தெரிந்தால் பாதை தெரியும் என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளது.
    ஒவ்வாரு வார்த்தைக்கும் நீங்கள் சொன்ன கருத்துக்கள் சூப்பர்.
    தோண்ட தோண்ட வரும் வைரம் போல அவர் பாடல்கள் அனைத்தும் யாராலும் மறக்க முடியாத வாழ்க்கையில் இணைந்த பாடல்கள்.
    உங்கள் அனுபவ பாடலும் சூப்பர்
    அவர் இருக்கும் பொது மட்டுமல்ல அவர் மறைந்த பிறகும் அவருக்கு புகழ் மாலைகளுக்கு பஞ்சமில்லை.
    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த பிறவியிலும் எனக்கு மரணமில்லை ” என்று பாடியுள்ளார்
    இப்படி ஒரு அருமையான பேட்டியை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி சார்.

  3. மிக மிக அருமையான பதிவு அண்ணா,

    “கண்ணதாசன் என்கிறவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. ஒரு சித்தர் மாதிரி”, முற்றிலும் உண்மை. இல்லையென்றால் அவரால் காலத்தால் அழியாத பல பாடல்களை தர முடியுமா,

    “பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்”

    என்னுடன் பேசும் போது நீங்கள் இந்த வரிகளை நினைவூட்டினீர்கள் அண்ணா. இந்த வரிகள் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    அருமையான பகிர்வுக்கு நன்றி,

    மு. சுந்தரபாண்டி.

  4. உள்ளம் உடைஞ்சு போய் உட்கார்ந்திருந்தேன் அண்ணா இன்று…அது என்னமோ தெரியல “மயக்கமா கலக்கமா” பாட்டை கேட்டதிலிருந்து ஆறுதலா இருக்கு.. பதிவை தொடர்ந்து படிக்க படிக்க மனம் மாறி தெம்பா இருக்குது. …சரியான நேரத்தில் மிகச் சரியான பதிவை தந்த உங்களுக்கும், அதைப் படிக்கச் செய்த கடவுளுக்கும் நன்றி….!

    ஒருவரின் கெட்ட எண்ணம் ஆயிரம் பேரை காயப்படுத்தும்…ஆனால் ஒருவரின் நல்ல எண்ணங்கள் ஆயிரம் நல்ல விசயங்களை இழுத்து வரும்…! நன்றி அண்ணா !

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

    விஜய் ஆனந்த்

  5. சுந்தர் ஜி.
    தங்கள் சந்திப்பின் போது ,விவாத்தித்த பாடல்கள் அனைத்தும் எம்மை செதுக்கி ,மீண்டும் ஒரு புதிய உற்சாகத்தை தந்துள்ளது .

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் …

    வாழ்த்துக்கள் .நன்றி .

    ==============================================================
    கண்ணதாசன் நான் படித்த சிறு குறிப்புகள்.
    காட்டுக்கு ராஜா…? சிங்கம் . கவிதைக்கு ராஜா… கண்ணதாசன் !’ பெருந்தலைவர் காமராஜரர் சொன்னது .
    கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம், நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான் என்று அவரே கூறியுள்ளார் .
    கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல் “திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா” தனக்குப்பிடித்த பாடல்களாக என்னடா பொல்லாத வாழ்க்கை . “சம்சாரம் என்பது வீணை” ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

    “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, “கண்ணே கலைமானே” கவிஞரின் கடைசிப் பாட்டு.

    சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்திஇல்
    ‘பராசக்தி’”. “ரத்தத்திலகம்’’ “கறுப்புப்பணம்” “சூரியகாந்தி” உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

    தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,”வனவாசம்” , “மனவாசம்” இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் .

    -மனோகர்

  6. சுந்தர்ஜி,

    எங்களுக்கு தாங்கள் கிடைத்தது அறிய பொக்கிஷம் . வீடு வேலை என்று இருந்த எங்களையும் சிந்திக்க தூண்டிய பெருமை உங்களைதான் சேரும்……………….. அருமையான பதிவப்பா/////////////

    நிச்சயம் தங்களுக்கு கூடிய விரைவில் வெற்றி மீது வெற்றி வந்து
    பூமாலை, புகழ் மாலையாக வந்து சேரும்.

    அடுத்த பதிவிற்காக காத்திரிகின்றோம்.

  7. சுந்தர்ஜி, மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.
    கவியரசு பற்றிய பதிவு மிக அருமை. அவரது வரலாற்று நினைவுகளை திரு காந்தி கண்ணதாசன் மூலம் மீண்டும் எல்லோருக்கும் தெரிவுதுள்ளீர்கள்.

    அவருடைய கற்பனை பாராசூட் எங்கு பறக்கும் – எங்கு இறங்கும் என்று யாராலும் சொல்லமுடியாது..

    உயர்த்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
    அதில் அர்த்தமுள்ளது.
    அன்பே சிவம்

  8. அருமையான அர்த்தமுள்ள சந்திப்பு !!!
    வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறாக துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் மன நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடிய பல அறிய கருத்துக்களை கவிஞர் மிக நேர்த்தியாக தமது பாடல்களில் கையாண்டிருப்பார் !!!
    அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் என்றென்றும் நமக்கு பாடங்கள் !!!
    வளர்க அவரது புகழ் !!!

Leave a Reply to manoharan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *