Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

print
‘தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் முதலீடுகள் உண்டு, தன் குடும்பம் உண்டு’ என்று உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளும் சினிமா நட்சத்திரங்களை பற்றி கேட்கவே வேண்டாம். அதுவும் குறிப்பாக நடிகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். வார மாத இதழ்களுக்கு பேட்டி கொடுப்பதும், டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவதும், கவர்ச்சியாக பத்திரிகை அட்டைகளுக்கு போஸ் கொடுப்பதும், சான்ஸ் பிடிக்க திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக ஆடை அணிந்து கலந்து கொள்வதும், சம்பந்தமேயில்லாது விருது விழாக்களில் தோன்றுவதும், மார்க்கெட் போன பின்பு ஒரு தொழிலதிபருடன் கல்யாணம் பின்னர் சில வருடங்களில் விவாகரத்து – இது தான் இங்குள்ள நடிகைகளின் வாழ்க்கை முறை. இதற்கு மேல் சிந்திக்கும் நடிகைகள் இங்கு குறைவு. (ஹன்சிகா மோட்வானி தவிர்த்து.)

இங்குள்ள நடிகைகளுக்கே  வாழ்க்கை முறை இதுவென்றால் ஹாலிவுட் நடிகைகளை பற்றி கேட்க வேண்டுமா?  விவாகரத்து செய்வதற்கே அவர்களில் பலருக்கு நேரமிருப்பதில்லை.

இந்த சூழ்நிலையில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ஒரு முன்னணி ஹாலிவுட் நடிகை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் உலகெங்கிலும் உள்ள போரால் பாதிக்கப்பட்ட அகதி மக்களை தேடி தேடிச் சென்று அவர்கள் துயர் துடைப்பதில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ? அவர்கள் நலனுக்காக இதுவரை பல நூறு கோடிகள் அளித்துள்ளார் என்றால் அதைவிட ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ?

இன்றைய அவசர யுகத்தில் கூடப் பிறந்தவங்க கஷ்டத்தை சொன்னாலே காது கொடுத்து கேட்க பலருக்கு நேரமும் இருப்பதில்லை மனசும் இருப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏஞ்சலினா ஜோலி. உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர். ஜூன் 4 அவரது பிறந்த நாள். இவர் ஒரு நடிகை மட்டுமல்ல. மிகச் சிறந்த சமூக சேவகர். பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்.

தான் பெற்ற குழந்தைகள் மட்டுமல்ல, வெவ்வேறு நாடுகளில் போரால் பாதிக்கப்பட்டு அனாதையான மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது சொத்துக்களை பெற்ற குழந்தைகள் போல அக்குழந்தைகளுக்கும் சரி சமமாக எழுதி வைத்துள்ளார். அவர்களை பெற்ற தாய் போல கவனித்துக்கொள்கிறார்

நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்!

ஜோலியின் மணிமகுடத்தில் மற்றொரு வைரமாய் அவரது சமீபத்திய செயல்பாடு இடம்பிடித்திருக்கிறது.

என்ன அது?

திரைப்பட நடிகைகளுக்கு முக்கியமான அங்கமே அவர்களது மார்பகங்கள் தான் என்பதை அனைவரும் அறிவீர்கள். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ‘பரம்பரை மார்பக புற்றுநோய்’ ஏற்படும் சாத்தியக்கூறு இருப்பதால் தனது இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதோடல்லாமல் அதை பகிரங்கமாக வெளியே சொல்லி அதன் மூலம் ஒரு மிகப் பெரிய முன்னுதாரணம் ஏற்படுத்தி இருக்கிறார் ஜோலி.

2006 ஆம் ஆண்டு – கோஸ்டா ரிகா நாட்டில் ஜோலி தம்பதியினர்

ஒரு திரைப்பட நடிகைக்கு மார்பகங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்லவேண்டியதில்லை. கோலிவுட் என்றில்லை பாலிவுட் என்றில்லை உலகம் முழுவதும் உள்ள சினிமா நடிகைகளுக்கும் முக்கியமான ASSET அது தான். அதையே ஒரு நடிகை அகற்ற துணிகிறார் என்றால் அவரது மனோதிடத்தையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் எப்படி பாராட்டுவது? என்ன சொல்லி பாராட்டுவது? ஒருவேளை இந்த முடிவை வேறு நடிகையர் எவரேனும் எடுத்திருந்தால் அதை வெளியே சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

ஆனால் ஜோலி பிறர் நன்மைக்காக – அது பற்றிய விழிப்புணர்வுக்காக – வெளியே சொன்னார். அறுவை சிகிச்சை முடிந்து, வீட்டுக்கு வந்த ஜோலி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? அடுத்த பட டிஸ்கஷனில் பங்கேற்று அதற்கான ஸ்டோரி போர்டு தயாரிப்பில் ஈடுபட்டது தான். அவரை பொறுத்தவரை SO WHAT? LIFE MOVES ON. அவ்வளவு தான்.

மருத்துவ உலகமே ஜோலியை பாராட்டிக்கொண்டிருக்கிறது. ஜோலியின் செயல் மருத்துவ உலகில் எவ்வளவு பெரிய புரட்சி என்பதை பெண் மருத்துவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

ஜோலியின் இந்த செயல் பல பாடங்களை நமக்கு கற்றுக்கொடுத்தாலும் அதில் முக்கியமான சில ….

1. புற்றுநோய் – குறிப்பாக மார்பக புற்றுநோய் – எவருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்க்கு ஏழை பணக்காரர், அழாகனவர் அழகற்றவர், பிரபலமானவர் பிரபலம் இல்லாதவர் என்ற பேதம் கிடையாது.

2. இது எல்லாரையும் பாதிக்கிறது. ஆண்களில் இருவரில் ஒருவரும் பெண்களில் இருவரில் ஒருவரும் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை ஏதேனும் ஒரு ரூபத்தில் சந்திக்கின்றனர். இது உங்களை கலவரப்படுத்த சொல்லவில்லை. யதார்த்தத்தை சொல்கிறேன்.

3. புற்றுநோய் வருவதை நாம் எவரும் விரும்பவில்லை. ஆனால் வராமல் தடுக்க முயற்சிக்கிறோமா? அதற்காக எதையேனும் தியாகம் செய்யும் மனப் பக்குவம் நம்மிடம் இருக்கிறதா? (உதாரணத்துக்கு சிகரெட், மது, பான்பராக், தவறான உணவு முறைகள், உடற்பயிற்சி செய்யாது இருப்பது Etc.Etc.)

4. புற்றுநோய் பாதிப்பின் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரின் அரவணைப்பு மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோலி என்ன சொல்கிறார் தெரியுமா? “பிராட் பிட் போன்ற அன்பான, அக்கறையுள்ள கணவர் எனக்கு வாய்த்தது நான் செய்த அதிர்ஷ்டம்.”

5. அப்படி புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் அவசியம். அதை டெஸ்ட் செய்யும் தருணங்கள் மிக மிக கொடுமையானவை. “ஆனால் அந்த சூழ்நிலையிலும் நாங்கள் புன்னகை சிந்த தவறவில்லை!” என்று ஜோலி ஒரு முறை சொன்னது குறிப்பிடத்தக்கது.


.
ஜோலியின் இந்த செயல் உலகம் முழுதும் பத்திரிக்கைகளால் போற்றப்படுவது மட்டுமல்லாமல் அவர் செய்து வரும் பல உன்னத விஷயங்களையும் அவை சிலாகித்து எழுதி வருகின்றன.

உலகம் முழுதும் ஜோலி செய்த நற்பணிகள் !!

அப்படி என்ன செஞ்சிட்டாங்க ஜோலி? படியுங்கள். நீங்களே சொல்லுங்கள்.

ஜோலியின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கை மிகுந்த சர்ச்சைக்குரியது. ஆனால் தற்போதைய வாழ்க்கை போற்றுதலுக்குரியது.

இந்த மாற்றம் எப்படி இது சாத்தியமாயிற்று ?

சினிமா, நடிப்பு, சம்பளம், கவர்ச்சி, திரைப்பட விழா அதில் போஸ் என்று ஒரு வழக்கமான ஹாலிவுட் நடிகையின் அன்றாட வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வந்தார் ஜோலி. ஆனால் 2001 ஆம் ஆண்டு Lara Croft: Tomb Raider என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கம்போடியா நாட்டுக்கு சென்றபோது தான், உலகில் இப்படியெல்லாம் கூட கஷ்டப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டார் ஜோலி.

சாட் நாட்டில் நிவாரணப் பணியின் போது

உள்நாட்டு போராலும், கலவரத்தாலும், இனப்படுகொலைகளாலும் பாதிக்கப்பட்டு (நம் ஈழத் தமிழர்கள் போல) வீடிழந்து உறவுகள் இழந்து வாடிய மக்கள் ஜோலியிடம் தங்கள் கண்ணீர் கதைகளை கூற, அது ஜோலியின் மனதை மிகவும் பாதித்துவிட்டது. நினைத்திருந்தால் பர்ஸிலிருந்து கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவர்களிடம் திணித்து அத்தோடு கிளம்பிவந்திருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஹை-கமிஷனரை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி ஆலோசித்தார்.

அதன் பிறகு 18 நாள் பயணமாக ஆப்ரிக்காவில் உள்ள சியர்ரா லியோன் மற்றும் டான்சானியா சென்றார். அதற்கு பிறகு கம்போடியாவுக்கு இரண்டு வார பயணம் செய்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் சென்று அங்கு ஆப்கான் அகதிகளை சந்தித்தார். இவரது ஆர்வத்தை பார்த்த ஐக்கிய நாடுகள் சபை, இவரை ஊக்குவித்து இவர் மூலம் நற்காரியங்களை செய்ய இவரை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவுக்கு நல்லெண்ண தூதராக நியமித்தது. (GOODWILL AMBASSADOR).

அதன் பிறகு ஜோலி முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செய்து அகதி மக்களை சந்தித்தார் ஜோலி. பல இடங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருப்பினும் அதற்க்கெல்லாம் ஜோலி பயப்படவில்லை.

மால்டாவில் தஞ்சம் புகுந்து அடைக்கலம் எதிர்நோக்கும் மக்களிடையே

இப்படி ரிஸ்க்கான இடங்களுக்கு அடிக்கடி செல்வதால் இவர் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று இவர் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து கடைசீயாக ஆப்கானிஸ்தான் கிளம்புவதற்கு முன்னர் தனது கணவர் பிராட் பிட்டுக்கு FAREWELL LETTER எழுதிவிட்டு தான் சென்றாராம். இவர் ஆப்கானிஸ்தான் சென்று திரும்பிய பின்னர் ஐ.நா.வின் பதுங்கு குழி ஒன்று தீவிரவாதிகளால் குண்டு வீசி தாக்கப்பட்டு அதில் பலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நல்லெண்ண தூதராக தான் செயல்பட்ட காலத்தில் ஜோலி மேற்க்கொண்ட பல பயணங்கள் அவரது தைரியத்திற்கும் மனவுறுதிக்கும் எடுத்துக்காட்டு. உதாரணத்திற்கு சூடானில் கலவரம் உச்சத்தில் இருந்தபோது அங்குள்ள டார்ஃபர் நகருக்கு சென்றார். உள்நாட்டு போரின் பொது சாட் நாட்டிக்கும், லிபியா மற்றும் ஈராக்கிற்கு லிபியாவில் புரட்சி வெடித்தபோதும் சென்றார் ஜோலி.

ஈராக்கில் ஒரு ஆபத்தான இடத்தில்

மொத்தத்தில் போர் மற்றும் சண்டைகளால் பாதிப்பட்டு வீடிழந்து உடமைகளை இழந்து உறுப்புக்களை இழந்து இன்னும் பலவற்றை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் ஜோலி தனி கவனம் செலுத்தினார். இதன் காரணமாக பாகிஸ்தான், தாய்லாந்து, ஈக்வடார், கொசோவோ, கென்யா, நமிபீயா, இலங்கை, வடக்கு காவ்காசாஸ், ஜோர்டான், எகிப்து, புது டில்லி, கோஸ்டா ரிகா, சாட், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு சென்றார் ஜோலி.

தமிழர்களை மறக்கவில்லை ஜோலி

தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே.

இலங்கையில்…. தமிழர்களுக்கு ஆறுதல்!

அந்த வைத்தியசாலையின் வாசலில் நடிகை ஏஞ்சலினா ஜோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.நா அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் பதவியை ஏஞ்சலினா ஜோலிக்கு வழங்கியிருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் மகிழ்வான செய்தியாகும்.

பூகம்பம் மற்றும் இயற்க்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ஹைத்தி மக்களுக்கு பலவகைகளில் உதவினார் ஜோலி.

பாகிஸ்தானில் – 2005 ஆம் ஆண்டு

இந்த பணிகளுக்கு பல அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி அளித்த ஜோலி தானும் சொந்தமாக அறக்கட்டளை துவக்கினார்.

2003 இல் கம்போடியா சென்றபோது தான் தத்தெடுத்த தனது முதல் குழந்தை மாடாக்ஸின் பெயரில் கம்போடியா நாட்டின் சீர்த்திருத்திற்க்காக Maddox Jolie-Pitt Foundation என்ற அமைப்பை துவக்கினார்.

இத்தோடு முடிந்ததா என்றால் அது தான் இல்லை… உள்நாட்டு போர், கலவரம், மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வி நலனுக்காக 2007 ஆம் ஆண்டு பிரபல பொருளாதார நிபுணர் டாக்டர்.ஜீன் ஸ்பெர்லிங்குடன் இணைந்து ‘Education Partnership for Children of Conflict’ என்ற அமைப்பை துவக்கினார்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள இது போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த உள்நாட்டு போர் அகதிகளின் குழந்தைகளின் நலனுக்காக 2008 ஆம் ஆன்று மைக்ரோசாஃப்ட்டுடன் இணைந்து ‘Kids in Need of Defense’ என்கிற ஒரு இலவச சட்ட ஆலோசனை மையத்தை துவக்கினார்.

போரில் கற்பழிப்பு குற்றத்தை எதிர்த்து குரல் கொடுத்துவரும் பிரிட்டன் எம்.பி. வில்லியம் ஹேக்குடன் சமீபத்தில்

ஜோலி இந்த உன்னத பணியில் அவரது கணவர் பிராட் பிட்டும் சேர்ந்து தனது திரைப்பட சம்பளத்தில் இருந்து பல கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்து வந்துள்ளார். 2009 ஆண்டு மட்டும் இத்தம்பதிகள் சுமார் ஏழு மில்லியன் டாலர் கொடுத்துள்ளனராம். (ஒரு மில்லியன் டாலர் = பத்து லட்சம் டாலர்கள். ஒரு டாலர் = ரூ.55 என்றால் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.)

தங்களது திருமண வீடியோவையும் தங்கள் குழந்தையின் முதல் படத்தையும் நல்ல தொகைக்கு ஊடகத்திற்கு விற்கும் நம்ம ஊர் நட்சத்திரங்களுக்கு நடுவே இவர்கள் செய்தது என்ன தெரியுமா? தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் முதல் புகைப்படத்தை ஒரு பிரபல பத்திரிக்கைக்கு 14 மில்லியன் டாலருக்கு விற்று அதில் கிடைத்த முழு பணத்தையும் (சுமார் 77 கோடி ரூபாய்) தங்களது Maddox Jolie-Pitt Foundation அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டனர் ஜோலி – பிராட் பிட் தம்பதியினர்.

ஈக்வடார் நாட்டில் 2010 ஆம் ஆண்டு

இது எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் பிரபல சமூக ஆர்வலரும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினருமான  வில்லியம் ஹேக்குடன் இணைந்து போரில் பெண்களை கற்பழிக்கும் கொடூரத்தை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இருவரும் காங்கோ நாட்டுக்கு பயணம் செய்து அங்குள்ள மக்கள் மத்தியில் இது பற்றி பேசினர். (அங்கு இது போன்ற குற்றங்கள் சர்வ சாதாரணமாம்!).

இதே பிரச்னையை G8 மாநாட்டிலும் பேசி கவனத்தை ஈர்த்தார் ஜோலி.

தான் இயக்கிய தனது முதல் படமான ‘In the Land of Blood and Honey’ மூலம் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற போர் குற்றங்களை அம்பலப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கும் அவரது குழுவினருக்கும் பல்வேறு மிரட்டல்கள் வந்தன.

இது பற்றி சாராஜெவோ வந்தபோது ஜோலி கூறியதாவது : “எனக்கும் மட்டுமல்லாது என் குழுவினருக்கும் பல மிரட்டல்கள் வந்தன. ஆனால் என் குழுவினர் என்னிடம் அதை காட்டிக்கொள்ளவில்லை. மற்றவர்கள் சொல்லித் தான் நான் அதை பற்றி கேள்விப்பட்டேன். எங்கள் குழுவினர் சென்ற கார்கள் தாக்கப்பட்டன.”

ஹைத்தி நாட்டில் 2006 ஆம் ஆண்டு – உடன் (இடது) கணவர் பிராட் பிட்

ஜோலி தனது தன்னலம் கருதாத மகத்தான சேவைகள், தாராளமான அறப்பணிகள், தர்ம காரியங்கள், பாசமுள்ள தத்து தாய், இப்படி பல விஷயங்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருந்தாலும் சமீபத்தில் அவர் வேறொரு துணிச்சலான காரியத்திற்காக போற்றப்பட்டார்.

ஆம், தனது புற்றுநோய் அபாயம் காரணமாக தனது மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கியதோடல்லாமால் அதை வெளிப்படையாக அறிவித்து ஒரு மிகப் பெரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டார் ஜோலி. இதன் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பிடித்துவிட்டார் ஜோலி.

ஐ.நா.அகதிகள் நல்வாழ்வு கமிஷன் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

துணிச்சலான் ஒரு முடிவு எடுத்ததோடு மட்டுமல்லாமல் பிறரின் நன்மைக்காக அந்த முடிவு பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் எடிட்டோரியல் கூட எழுதினார். மார்பக புற்றுநோய் மூலம் மடியும் பெண்களின் எண்ணிக்கை இதன் மூலம் நிச்சயம் சரியும் என எதிர்பார்க்கலாம்.

தனது மனைவியின் இந்த முடிவு பற்றி அவரது கணவர் பிராட் பிட் என்ன கூறுகிறார் ?

“அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் எப்போதுமே இப்படித் தான். அவள் ஒரு தனிப்பிறவி. சுயநலத்தின் காரணமாக அவள் எதையும் செய்ததில்லை. தனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது அதை துணிவோடு எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்கு இருந்தது. அது குறித்த தனது அறிவை அனுபவத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்திருக்கிறாள். இதன் மூலம் பலர் பயனடைவார்கள் என்பது உறுதி. அவள் எப்போதும் என்னுடன் என் அருகில் இருப்பதையே நான் விரும்புகிறேன். எங்கள் வாழ்க்கை அது பாட்டுக்கு போய்கொண்டே இருக்கும். நாங்கள் பாட்டுக்கு எங்கள் கடமையை செய்துகொண்டிருப்போம்.”

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள் 56)

துணிச்சல், பக்குவம், கருணை, அடக்கம் – இது தான் ஏஞ்சலினா ஜோலி.

உலகிலேயே அழகான பெண் யார் தெரியுமா? ஏஞ்சலினா ஜோலி தான். ஏனெனில் இது தாய்மையின் அழகு. கருணையின் அழகு. கனிவின் அழகு.

2009 ஆம் ஆண்டு – கென்யா நாட்டில்

உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சுயமுன்னேற்றம் & ஆன்மீக தளம் நடத்திக்கொண்டிருக்கும் நாம் அளித்திருக்கும் இந்த பதிவு ஜோலிக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அது தான் நாம் அவருக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை.

அவரும் அவர் குடும்பத்தாரும் என்றென்றும் மகிழ்ச்சியாக நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

WE LOVE YOU SO MUCH JOLIE.

WE ARE PROUD TO POST AN ARTICLE ABOUT YOU IN OUR WEBSITE.

WE ALL WISH YOU A HAPPY AND SOULFUL BIRTHDAY JOLIE. MAY GOD BLESS YOU WITH ALL WEALTH AND HEALTH.

[END]

15 thoughts on “இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா? வியக்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

  1. சார், உங்கள் பதிவுகளில் மிக போற்றத்தக்க கட்டுரை.
    SO WHAT? LIFE MOVES ON இப்படி பல பேர் நினைக்க தொடங்கினால் ஒரு நல்ல சமுதாய மாற்றம் நிகழும். தன் சுயநலம் குறையும்.
    முடிவில் ஒரு திருக்குறள் பொருத்தமாக சொல்கிறிர்கள்.
    பாதிக்க பட்ட மக்களுக்கு அவர் செய்யும் தொண்டும் தியாகமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    நிச்சயம் அவரும் அவர் குடும்பத்தாரும் என்றென்றும் மகிழ்ச்சியாக நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  2. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்..

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…

    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…

    இந்த பாடல் வரிகள் ஏஞ்சலினா ஜோலி க்கு பொருந்தும் .

    realy சூப்பர் Hats Off…

    1. திரு மனோஹரனின் கருத்திணை அப்படியே ஆமோதிக்கிறேன் . வாழ்க தங்கள் நற்பணிகள் . அன்பன் ராதாகிருஷ்ணன்..

  3. மிக அருமையான போஸ்ட் சுந்தர். கடைசிய்லே உள்ள திருக்குறள் தங்கத்தில் வைரத்தை பதித்த மாதிரி இருக்கு

    1. வருகைக்கு நன்றி ராம்ஜி.
      – சுந்தர்

  4. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடவுள் நேரடியாக வந்து உதவி செய்வதில்லை இப்படி மனிதர்கள் வடிவில் வந்து தான் உதவி செய்கின்றார் என இந்த பதிவை பார்க்கும்போது புரிகிறது .
    நடிகை ஏஞ்சலினா ஜோலி நீண்ட காலம் வாழ வேண்டும் .

  5. சார் வணக்கம் ,

    உங்களுடன் சேர்ந்து நடிகை ஏஞ்சலினா அவர்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .

  6. சுந்தர் சார், ஏஞ்சலின் ஜோலி நிச்சயம் உலகம் போற்றும்.

    நன்றி,
    அ. அருணோதய குமார்.

  7. மிகவும் உன்னதமான சேவை. திரைத்துறையில் இருந்து கொண்டு இந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்படுவதென்பது மிகவும் ஆச்சரியம்…ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டும் செல்லாமல், உலகில் எங்கெல்லாம் மக்கள் அகதிகளாய் வாழ்கிறார்களோ அங்கெல்ல்லாம் சென்று பார்வையிட்டு, வேண்டிய உதவிகளை செய்வதென்பது மகத்தானது. அதுவும் இலங்கை தமிழர்களுக்கு செய்திருக்கும் உதவி, நம்மூர் அரசியல்வாதிகளுக்கும், திரைத்துறைக்கும் மிகப்பெரிய பாடம்.
    மக்களை உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக் கூடிய விஷயம்.

    ஏஞ்சலினா செல்லும் இடமெல்லாம் தானும் சென்று தன்னையும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவரது கணவர் பிராட் பிட்-ட்டுக்கும் எத்துனை நன்றிகள் சொன்னாலும் தகும்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

    விஜய் ஆனந்த்

  8. முதலில் நடிகை ஏஞ்சலினா அவர்களுக்கு ஒரு சல்யுட். தான் ஒரு நடிகை என்கின்ற பந்தா இல்லாமல் பிறர் நலன் கருதும் அவர்
    தொண்டு மெய் சிலிர்க்க வைக்கின்றது. அவர் நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிரார்திகின்றேன். இதை போன்ற articles கொடுத்து எங்களையும் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி சுந்தர்ஜி

  9. ஜோலி அவர்களைப்பற்றி பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி !!!

    இப்போதெல்லாம் பிறர்க்கு உதவுவது விளம்பரத்துக்காகவும் மட்ட்ரவர்கள் தம்மை புகழ வேண்டும் என்பதற்காகவும் அதன் மூலம் ஆதாயம் தேடும் சிறு புத்தி உள்ளவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள் !!!

    இப்படிப்பட்டவர்களில் பிறர் துயரை தம் துயராக கருதி தம்மால் இயன்ற உதவிகளை சத்தமில்லாமல் வெளி உலகுக்கு தெரியாமல் செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !!!

    பிறருக்கு உதவுவதும் அவர் தம் உதட்டோரம் சிரிப்பினையும் கண்களில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் காண்பதில் இருக்கும் இன்பம் சொல்லி புரியாது அதை அனுபவித்தால் தான் புரியும் !!!

    அவ்வகையில் ஏஞ்சலினா ஜோலி ஒரு மிக சிறந்த முன் உதாரணம் !!! ப்ராட் பிட் போன்ற நல்ல புரிதல் உள்ள கணவன் கிடைத்ததற்கு அவர் உண்மையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !!!

    அவரும் பல்லாண்டு வாழ்ந்து மட்ட்ரவர்களையும் வாழ வைக்க நம் எல்லோரின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!

  10. இன்றைய வறண்டுபோன வர்த்தக உலகத்தில், நிச்சயம் ஏன்ஜெலீனவும் அவரது கணவர் பிராட் பிட்டும் ஒரு பாலைவன சோலை. நம் கலாசாரம் சீரழிவதற்கு காரணம் மேற்கத்திய நாடுகளை நாம் பின்பற்றுவதுதான் என்றால், தன குழந்தைகளோடு சேர்த்து ஆதரவற்ற குழந்தைகளையும் வளர்க்கும் ஏன்ஜெலீனவும் ஒரு மேர்கதியர்தானே. இந்த கலாசாரத்தை நம்மால் ஏன் பின்பற்ற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மவர்கள்தான் பெற்ற குழந்தையை குப்பை தொட்டியிலும் தெருவிலும் போட்டுவிட்டு நிம்மதியாக வாழ்கை நடத்துகிறார்கள். கொடி பிடித்து ஊர்வலம் சென்று அரசியல் செய்யாமல் உண்மையிலேயே ஊர் ஊராக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தான் செய்துகொண்ட அறுவை சிகிச்சையை எல்லோருக்கும் சொல்லி மக்கள் மனதில் புற்று நோயைபற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார். இவர்கள் சேவை நம் எல்லோருக்கும் ஒரு நல்ல எடுத்துகாட்டு.

    பதிவிற்கு நன்றி சுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *