அது ஒரு வாழ்வியல் பயிற்சி வகுப்பு. பலதரப்பட்ட மனிதர்கள் அதில் பங்கு பெற வந்திருந்தனர்.
அவர்களிடையே உரையாற்ற வந்திருந்த ட்ரெயினர் தனது டேபிளுக்கு முன்பு ஒரு பெரிய கண்ணாடி ஜாரை வைத்தார். பின்னர் அதில் இரண்டு இன்ச் அளவு விட்டமுடைய கருங்கற்களை போட்டு நிரப்பினார்.
“ஜாடி இப்போது நிரம்பியிருக்கிறதா பார்த்து சொல்லுங்கள்?” என்றார்.
அனைவரும் ஜாடியை பார்த்தபோது அதில் கற்கள் மேலும் போட இடமின்றி நிரப்பப்பட்டிருந்தன.
அடுத்து சிறிய கூழாங்கற்க்களை கொஞ்சம் எடுத்து போட்டு ஜாடியை மேலும் கீழும் உலுக்கினார். கூழாங்கற்கள் முன்பு போடப்பட்ட கருங்கற்கள் இடையே இருந்த இடைவெளிக்குள் உருண்டு சென்று ஓரளவு இடத்தை அடைத்துக்கொண்டன.
இப்போது மறுபடியும் ஜாடி நிரம்பிவிட்டதா என்று கேட்டார்.
இம்முறையும் பார்வையாளர்கள் ஆமாம் என்றனர்.
இந்த முறை ட்ரெயினர் தனது கைகளில் மணலை ஒரு பிடி எடுத்து ஜாடியில் போட்டு மேலும் கீழும் உலுக்க, மிச்ச மீதியிருந்த சிறு இடைவெளியை கூட விடாமல் மணல் நிரப்பியது.
மறுபடியும் “ஜாடி நிரம்பிவிட்டதா?” என்று கேட்டார் அனைவரையும் பார்த்து.
“ஆம்… !” இப்போது தான் ஜாடி உண்மையில் நிரம்பியிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு முறை நீங்கள் நிரம்பிவிட்டது என்று கூறியபோதும் என்னால் மேலும் சிலவற்றை அதில் போட முடிந்தது.
இந்த ஜாடி தான் உங்கள் வாழ்க்கை என்று வைத்துக்கொள்வோம். அதில் முதலில் நீங்கள் போட்ட பெரிய கற்கள் தான் மிக மிக முக்கியமானவை. அது தான் உங்கள் குடும்பம், குழந்தைகள், வாழ்க்கைத் துணை, அப்பா, அம்மா உள்ளிட்டோர். மற்ற எதுவும் இல்லையென்றாலும் கூட உங்கள் இவை இருந்தாலே வாழ்க்கை முழுமையடைந்தது போலத் தான்.
அடுத்து நான் போட்ட கூழாங்கற்கள் உங்கள் வேலை, உங்கள் வீடு, உங்கள் வாகனம் போன்றவை.
அடுத்து நான் போட்ட மணல், வாழ்க்கைக்கு நாம் சிறிதே சிறிது முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அற்ப விஷயங்கள்.
சிறிய பயனற்ற அற்ப விஷயங்களில் உங்கள் நேரத்தை நீங்கள் செலவிட்டால் முக்கியத்துவம் வாய்ந்த, பயனுள்ள, நாம் புறக்கணிக்கக்கூடாத, விஷயங்களுக்கு இடமேயிருக்காது.
உங்கள் மகிழ்ச்சிக்கும் (உண்மையான!) நிம்மதிக்கும் இன்றியமையாத விஷயங்களில் மட்டுமே உங்கள் நேரத்தை செலவிடவேண்டும். அடுத்து முன்னேற்றத்துக்கு தேவையான விஷயங்களில்!
இதில் நம் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட நாம் தயங்கவே கூடாது. நாளைக்கே நமக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்…. நமது நிறுவனம் நமது இடத்தில் வேறு ஒருவரை சுலபமாக பணியமர்த்தமுடியும். ஆனால் நம் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் அது ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆகையால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவது மிக மிக அவசியம். அப்பா…. அம்மா… மற்றும் உறவுகளின் அருமை … இருக்கும்போது தெரியாது….!
A FAMILY THAT PLAYS TOGETHER ALWAYS STAYS TOGETHER என்று கூறுவார்கள்.
உங்கள் குடும்பத்தினருடன் கழிக்க நீங்கள் ஒதுக்கும் நேரம் உண்மையில் ஆனந்தமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய முதலீடு.
அதே சமயம் ‘எனக்கு என் குடுப்பம் மட்டும் தான் முக்கியம். மத்ததை பத்தி கவலையில்லை’ என்று உங்கள் உலகம் – நீங்கள் உங்கள் அப்பா அம்மா குழந்தைகள் மற்றும் மனைவி – என்று மட்டும் சுருங்கி சுயநல வாழ்க்கை வாழும் விதம் அமைந்து விடக்கூடாது.
நேரத்தை வீணடிப்பவர்களையடுத்து கடவுள் வெறுப்பது சுயநலவாதிகளைத் தான்.
(“தான் உண்டு… தன் வேலை உண்டு” என்று இருப்பதற்கும் – “தான் மட்டும் உண்டு… தன் குடும்பமும் தன் வேலையும் மட்டுமே உண்டு” என்று இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு!)
என்ன சார் அப்படியும் சொல்றீங்க இப்படியும் சொல்றீங்க? என்று தானே கேட்கிறீர்கள்.
அடடா… நீங்க செய்யுற நல்ல காரியத்தை உங்க குடும்பத்தோட செஞ்சா முடிஞ்சிபோச்சு.
உதாரணத்துக்கு உங்கள் பிள்ளைகளோட பிறந்த நாளைன்னைக்கு அவங்களை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு அழைத்து சென்று அக்குழந்தைகளுக்கு உங்கள் குழந்தை மூலம் இனிப்புக்கள் தரலாம்.
உங்கள் அப்பா அம்மாவின் பிறந்த நாள் அன்று அவர்கள் கையால் கோவில்களில் அன்னதானம் செய்யலாம்.
உங்கள் திருமண நாள் மற்றும் இதர விசேஷங்களை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தொண்டு இல்லங்களில் வாழ்ந்துவருபவர்களுடன் கொண்டாடலாம்.
நீங்கள் பிற அறச் செயல்கள் செய்யும்போது உங்கள் மனைவியையோ கணவனையோ அழைத்து செல்லலாம்….
ஓகே? நல்லது செய்யனும்னா சேர்ந்து சந்தோஷமா செய்றதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு !
சுருங்கச் சொன்னால்….
உங்கள்….
* குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுங்கள்.
* நல்ல காரியங்களை அவர்களை வைத்தே செய்யுங்கள்.
* குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
* மனைவியை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
* அப்பா அம்மாவை மாதம் ஒரு முறை ஹோட்டலுக்கு கூட்டி சென்று அவர்களுக்கு பிரியப்பட்டதை வாங்கிக்கொடுங்கள். தம்பி தங்கைகள் மற்றும் உறவுகளுக்கு உதவுங்கள். அவர்கள் அவ்வாறு இல்லையென்றாலும் கூட.
* வீட்டை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி குடும்பத்துடன் சிறிய எளிமையான கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள். கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்லுங்கள்.
வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான கற்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மற்றவை ஜஸ்ட் மணல் தான். அவற்றை கொண்டு இடைவெளியை மட்டும் நிரப்பினால் போதும்.
“இல்லை…இல்லை… நான் மணலைத் தான் போடுவேன். அது தான் ஜாலியாயிருக்கு…..!!” என்று சொன்னால், எது முக்கியம் என்று காலம் புரியவைக்கும்!
[END]
நானும் மிக மிக அதிக மணலை ஜாடிக்குள் போட்டு விட்டேன் என்பதை கண்ணீருடன் ஒப்புக்கொள்கிறேன் .என்னுடைய தவறை சரியான நேரத்தில் திருத்திக் கொள்வதற்கு படிப்பினை தந்த சுய முன்னேற்றம் கட்டுரை.
நான் மணலை படித்த விநாடி முதல் அப்புறபடுத்தி விட்டேன் .
\\அவர்கள் அவ்வாறு இல்லையென்றாலும் கூட\\
\\அவர்கள் அவ்வாறு இல்லையென்றாலும் கூட\\
\\அவர்கள் அவ்வாறு இல்லையென்றாலும் கூட\\
மிகப் பெரிய விஷயத்தை சுருங்கச் சொன்ன உங்கள் பாணி மிகவும் அருமை….நிறையப் பேர் மணலை மட்டுமே நிரப்பிக்கொண்டு வாழ்க்கை நிறைவடைந்ததாக நினைத்துக் கொண்டுள்ளனர்…! அவர்களுக்கு எது கல், எது மணல் என்று கூட தெரிவதில்லை…! நானும் சில நேரங்களில் அப்படி இருந்ததுண்டு….! அந்த மாதிரியான சமயங்களில், இந்தப் பதிவு கண்டிப்பாய் மனமாற்றத்தை நமக்கு அளிக்கும்…! நன்றி …!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
ஒருவன் எவ்வளவு சாதித்தாலும்.. வேலையில் பெரும் வெற்றி கொண்டாலும் , ஒரு நாள் அடி சறுக்கும் – இது உலக நியதி !!..அப்பொழுது தாங்கி கொள்ள , தூக்கி நிறுத்த நம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கண்டிப்பாக தேவை… அவர்களை உதாசீன படுத்தி விட்டு பணி தான் முக்கியம் …பணம் தான் முக்கியம் என்று இருப்பவர்கள் – ஒரு நாள் உணர்வார்கள் …அப்பொழுது உணர்ந்தும் பிரயோஜனம் இல்லாமல் போகும்.
எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது….சுருக்கி சொல்கிறேன் ..
தன் ஆபீசில் இவர் தான் பெரிய ஆள்… கடமையே கருத்தாக இருப்பார் – நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்..இதனால் பெயருக்கும் செல்வத்துக்கும் பஞ்சம் இல்லை….ஒரு நாள் வழக்கம் போல் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பும் பொழுது இவரின் 9 வயது மகன் தூங்காமல் விழித்திருந்தான் …
மகனை தூக்கி முத்தமிட்ட அப்பா , மகனிடம்
“இன்னும் தூங்கலையா டா ?”…
“இல்லப்பா உங்களிடம் ஒன்னு கேட்கணும் ? ”
… மகன் விளையாட பொம்மை கேட்குறான் என்று நினைத்து
” சொல்லு” என்று அலுத்து கொண்டார் ….
“நீங்க ஒரு மணி நேரம் த்தில் எவ்வளவு சம்பாதிக்கிரிங்க னு சொல்லுங்க அப்பா ” என்று கேட்டான் சிறுவன்..
இவர் க்கு பயங்கர கோபம் ” இது ஏன் உனக்கு …. பெரியவர்கள் விஷயம் ….இது தான் உன் பிரண்ட்ஸ் கூட பேசுறியா?..இதை கேட்கத்தான் இவ்வளவு நேரம் தூங்காமல் இருந்தியா… ” என்று கண்டபடி அதட்டி விட்டு தூங்க சென்று விட்டார் …
தூங்க சென்றவர் க்கு ஏனோ மனசு ஒப்பவில்லை …என்னடா பையனை திட்டி விட்டோமே என்று எண்ணி ..சிறுவன் ரூம் க்கு சென்றார்…சிறுவன் இன்னும் தூங்கவில்லை …அவனை பார்த்து
“சரி இப்போ உனக்கு என்ன தெரியனும் ? “…..
சிறுவன் மெளனமாக இருந்தான் ..
இவர் தொடர்ந்தார் ” என்னோட ஒரு நாள் சம்பாத்தியமா ? ”
“இல்லப்பா …ஒரு மணி நேரம் ….”
இவர் யோசித்து விட்டு ” ஹ்ம்ம்ம்ம் …200 ருபாய் இருக்கும் ..இப்போ என்ன அதுக்கு ? ”
சிறுவன் உடனே கீழிருந்து ஒரு டப்பா எடுத்தான்….அதில் சில்லரைகள் அதிகம் இருந்தது…அதை காட்டி
“அப்பா …இதுல 100 ருபாய் இருக்கு…. இன்னொரு 100 ருபாய் நான் சீக்கிரமே சேகரிச்ச்சு குடுத்துடுறேன் ….என்னோட நீங்க நாளைக்கு ஒரு மணி நேரம் வர முடியுமா ? என்ன அந்த பார்க் க்கு கூட்டிட்டு போறீங்களா.. எனக்கு ஆசையா இருக்கு.. உங்க கை பிடிச்சி ….நான் என் பிரண்ட்ஸ் அவுங்க அப்பாக்கள கூட்டிட்டு வர மாதிரி ..நானும் உங்களோட பார்க் க்கு போகணும் விளையாடனும் ..ஒரு மணி நேரம் போதும் ப்பா..வரீங்களா ”
இவர் க்கு யாரோ தன் கன்னத்தில் பலமாக அடித்த மாதிரி இருந்தது !
தூள்…!
நெகிழ்ச்சியான கதை! பல வருடங்களுக்கு முன்பு இந்த கதையை படித்திருக்கிறேன். ஆனால் உணர்ந்ததில்லை! இப்போது உணர்கிறேன்!!
நன்றி தமிழிசை அப்பா.
– சுந்தர்
இன்றைய பெற்றோர்கள் சிலர் பிள்ளைகளோடு மகிழ்ந்து வாழாது, குடும்பத்தோடும் ஒட்டி வாழாது பணமே குறியாக காலம் கழிக்கிறார்கள். இக்கதை இவர்களுக்கு ஒரு அருமையான படிப்பினை.வாழ்த்துக்கள் தமிழிசை அப்பா. பாரிஸ் ஜமால், பி . த .சங்கம் . பாரிஸ் .
சரியான நேரத்தில் எனக்கு உணர்த்திய பாடம்
நன்றி
சார்
படிதயுடன் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
என் மகன் birthday க்கு டிரஸ் கேட்டான்
கடன் வாங்கியாவது அவனேகு டிரஸ் எடுதுகொடுபொன்
selvi
நீங்கள் கடன் வாங்கியாவது உங்கள் மகனுக்கு பர்த்டே ட்ரெஸ் எடுத்து கொடுக்க ஆசைப்படுவது ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து புரிந்துகொள்ளகூடியதே. சந்தோஷம்.
ஆனால் அப்படி செய்வதை உங்கள் மகனுக்கு நிச்சயம் தெரியப்படுத்தவும். கஷ்டம் தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று நினைக்கவேண்டாம்.
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு நம்மை வளர்க்கிறார்கள் என்பதை பிள்ளைகள் நிச்சயம் உணரவேண்டும்.
– சுந்தர்
மிக்க மிக்க நன்றி .ஐயா அவர்களுக்கு ,தன்னுடைய தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கணும் .அதை தான் நீங்கள் தெளிவுபடுத்து உள்ளீர்கள் .தான் பாசத்தை குழந்தையிடம் காட்ட தவறியதற்கு தண்டனை அனுபவித்தார் .இதை எல்லாரும் புரிந்துகொள்ளவேனும் .
வாழ்க்கையில் எந்த கல்லை முதலில் கண்ணாடி ஜாருக்குள் போட வேண்டும் என்று தெரியாமல் இருந்தேன் .இப்போழுது புரிந்து கொள்ள முடிந்தது .
நன்றி.
//இல்லை…இல்லை… நான் மணலைத் தான் போடுவேன். அது தான் ஜாலியாயிருக்கு…..!!” என்று சொன்னால், எது முக்கியம் என்று காலம் புரியவைக்கும்!// ———
சம்மட்டி-ல அடிச்ச மாதிரி சொல்லிட்டிங்க சுந்தர். காலம் கடந்து புரிஞ்சு பிரயோசனமே இல்லையே. அன்பு, பாசம் இல்லாம வாழ்றதுல அர்த்தமே இல்ல. நாம வாழற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே நம்ம குடும்பம், நல்ல நண்பர்கள், மற்றும் நாம் பண்ற நல்ல விஷயங்கள் தான். எப்ப எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தெரியனும். மனுஷங்கள மதிச்சாலே நம்ம வாழ்க்கை அர்த்தம் உள்ளதா இருக்கும் தானே. மிக அருமையா சொல்லிட்டிங்க. மிக்க நன்றி……
நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் முளைக்கும். நம் வாழ்கையின் முக்கியமான இளமை பருவத்தில் அதிலும் குறிப்பாக படிக்க வேண்டிய காலகட்டத்தில் நேரத்தை எப்படி செலவு செய்கிறோமோ அதற்கேற்றாற்போல் நம் வாழ்கை இருக்கும்.
அதிகமாக சினிமா பார்ப்பது, நமக்கு பிடித்த நடிகர்களின் படத்தை பலமுறை பார்த்து (அப்பாவின் செலவில்) அதை மற்றவர்களிடம் சொல்லி பெருமை கொள்வது, கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்து பொன்னான பொழுதையும் பணத்தையும் வீணடிப்பது, காதல் கீதல் என்று சினிமா வசனம் பேசி பெற்றவர்களை உதாசீனம் செய்வது, எப்பொழுது பார்த்தாலும் செல்போனில் பேசுவது, facebook-ல் மணிகணக்கில் விழுந்து கிடப்பது போன்ற செயல்கள் எல்லாம் கண்ணாடி ஜாடியில் மண்ணை நிரப்பவது போல்தான். இதை யாரவது நமக்கு சொல்லும்போது கோவம் வரலாம், ஆனால் அதுதான் உண்மை. மீண்டும் ஒரு அருமையான உபயோகமான பதிவிற்கு நன்றி சுந்தர்.
சூப்பர் .ரொம்ப அழகஹா சொன்னிங்க .
ஒரு அருமையான உபயோகமான பதிவிற்கு நன்றி….. இப்போழுது புரிந்து கொள்ள முடிந்தது……………..
இது போல் தொடர இனிய நல் வாழ்த்துக்கள்………..
சுந்தர்ஜி,
அருமையான பதிவு. ஜாடியில் கல்லை போடுகின்றோமா
மண்ணை போடுகின்றோமா என்கின்ற குழப்பம் எல்லோருக்கும் தீர்ந்து விட்டது.
நன்றி.
இக்கதையை பலர் தெரிந்து இருக்கலாம். நம் வாழ்வை திருத்தும்படி மனதைத் தொடும் அளவு எழுதியுள்ள விதம் மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள். பாரிஸ் ஜமால், நிறுவனத் தலைவர். பிரான்சு தமிழ்ச் சங்கம், பாரிஸ், பிரான்சு.
சுந்தர்ஜி,
அருமையான பதிவை அளித்ததற்கு நன்றி
சிந்திக்க தூண்டும் அருமையான பதிவு !!!
எந்திர மயமான இந்த அவசர யுகத்தில் சிறு சிறு விஷயங்கள் கூட நம் வாழ்வில் ஒளிந்திருக்கும் மகிழ்ச்சியை நமக்கு எவ்வளவு எளிமையாக அடையாளம் காட்டுகிறது என்று நினைக்கும் போது வாழ்க்கையில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை உணர முடிகிறது !!!
அடையாளம் காட்டியமைக்கு நன்றி !!!