Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > All in One > செருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா?

செருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா?

print
து ஒரு பெரிய காலணி தயார் செய்யும் நிறுவனம். சந்தையை வளைத்துப் போடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. புதுப் புது மார்கெட்டை தேடி கண்டுபிடித்து அங்கு தங்கள் ஃபாக்டரியையோ கிளையையோ துவக்கிவிடுவார்கள். இதன் மூலம் எண்ணற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. நிறுவனமும் வளர்ந்து வந்தது.

தனது பணிகளை பகிர்ந்துகொள்ள ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய அந்த நிறுவனத்தின் முதலாளி மேனேஜர் பதவிக்கு ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார். புகழ் பெற்ற நிறுவனம் அதுவும் வளரும் நிறுவனம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அந்த பதவிக்கு மனு செய்தார்கள். முதலாளி அதிலிருந்து கஷ்டப்பட்டு தகுதியுடைய இரு இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறார். இருவரில் யாரை நியமிப்பது என்று அவருக்கு ஒரே குழப்பம். ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.

‘இருவருக்கும் ஒரு பரீட்சை வைப்போம். அதில் தேறுபவரை நியமித்துவிடலாம்’ என்று கருதி, அடர்ந்த மலைப் பிரதேசம் ஒன்றில் இருக்கும் சிற்றூர் ஒன்றுக்கு இருவரையும் மார்கெட் சர்வே செய்துவரச் சொல்லி அனுப்புகிறார்.

இருவரும் மிகுந்த ஆவலுடன் ‘எப்படியும் இந்த வேலையை நாம் கைப்பற்றிவிடவேண்டும். மார்கெட் சர்வே செய்வதில் நமக்குள்ள சாதுரியத்தை நிரூபிக்கவேண்டும்’ என்று சபதம் செய்து கிளம்புகிறார்கள்.

ரயில், பஸ் என மாறி மாறி பயணம் செய்து ஒரு வழியாக மலையேறி அந்த ஊரை அடைந்தால் அங்கே இவர்கள் கண்ட காட்சி…. அங்கே ஒருவருக்கு கூட செருப்பு போடும் வழக்கம் இருக்கவில்லை. சொல்லப்போனால் செருப்பு என்ற ஒன்று இருப்பதையே அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை.

இருவரும் ஊர் திரும்பினார்கள். மறுநாள், முதலாளியை பார்க்க அலுவலகத்துக்கு செல்கிறார்கள்.

முதலாமவன் உள்ளே செல்கிறான்.

“என்ன… அந்த ஊருக்கு போனியா? மார்கெட் சர்வே செஞ்சியா? நம்ம கிளையை அங்கே ஆரம்பிச்சுடலாமா?” என்று கேட்கிறார்.

“இல்லே… முதலாளி… அந்த ஊருல நாம கடை வைக்கிறது சுத்த வேஸ்ட். அந்த ஊர்ல இருக்குற யாருக்குமே செருப்பு போடுற பழக்கம் இல்லே. செருப்புன்னாலே என்னன்னு தெரியலே. சொல்லப்போனா ஷூ போட்டிருந்த என்னையவே அவங்க ஒரு மாதிரி பார்த்தாங்க” என்கிறான்.

“சரி… நீ போ… அவனை வரச் சொல்”

அடுத்தவன் உள்ளே வருகிறான்.

அவனிடமும் அதே கேள்வி.

அந்த இளைஞன் பிரகாசமான முகத்துடன் “முதலாளி… நாம கடை வைக்கக் ஏத்த இடம் அந்த ஊர் தான். அங்கே இருக்குற யாருக்குமே செருப்பு போடுற பழக்கம் இல்லை. நாம மட்டும் அங்கே முதல்ல கடை வெச்சோம்னு வைங்க… மொத்த ஊரையும் நம்மோட செருப்பை வாங்கி போட வெச்சிடலாம்.” என்கிறான்.

நீங்களே சொல்லுங்க…. மேற்சொன்ன ரெண்டு பேர்ல யாருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கிடைச்சிருக்கும்னு….

ரெண்டு பேருக்கும் ஒரே பிரச்னை தான். ஆனா அவங்களோட அணுகுமுறையில் தான் எவ்ளோ பெரிய வித்தியாசம். முதலாமவன் எதையுமே நெகட்டிவாக பார்த்தே பழக்கப்பட்டவன். ஆகையால் தான் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் நிர்வாகியாகும் வாய்ப்பு அவன் கதவைத் தட்டியபோது அதையும் பிரச்னையாகவே பார்த்து கோட்டைவிட்டுவிட்டான்.

இரண்டாமவன்… எதிலும் பாஸிட்டிவ் அப்ரோச் உள்ளவன். ஆகையால் தான் பிரச்னைகூட அவனுக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது.

நீங்கள் யாரைப் போல இருக்க ஆசைப்படுகிறீர்கள் ? மிகப் பெரிய வாய்ப்பையே பிரச்னையாக கருதி கோட்டை விட்டவனைப் போலவா? அல்லது பிரச்னையையே வாய்ப்பாக மாற்றி வெற்றியாளனாக மாறிவிட்ட மற்றொருவனை போலவா?

எதிர்மறையாக சிந்திப்பது என்பது கனவிலும் நாம் செய்யாக்கூடாத ஒன்று. அது நமக்கு கிடைக்கும் பல வாய்ப்புக்களை பறிபோகச் செய்துவிடும். புது புது சந்தர்ப்பங்களை கண்ணில் காட்டாது செய்துவிடும். விளைவு… குண்டுசட்டியும் குதிரையும் தான்!

கம்ப்யூட்டரிலும் நாம் செய்யும் ப்ராஜக்ட் மென்பொருளிலும் மட்டுமே CTRL+Z பட்டன் அதாவது UNDO உண்டு. நிஜ வாழ்க்கையில் கிடையாது. ஆகவே எதிர்மறை சிந்தனைகளை கொண்டு வாய்ப்புக்களை தவறவிட்டு விட வேண்டாம். அவை மறுபடியும் உங்கள் கதவை தட்டுவது அபூர்வம்.

எங்கும் எதிலும் நேர்மறையாகவே சிந்தியுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தை  மனதில் ஆழமாக விதையுங்கள். அப்புறம் என்ன தோல்வியாவது கீல்வியாவது…

(உங்கள் அலுவலகத்திலோ அல்லது நிறுவனத்திலோ நடக்கும் மீட்டிங்குகளில் உங்களுக்கு ஏதாவது பேச சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த கதையை கூறுங்கள். அப்புறம் என்ன? ஹீரோ தான் நீங்க!)

2 thoughts on “செருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா?

  1. எதிர்மறையாக சிந்திப்பது என்பது கனவிலும் நாம் செய்யாக்கூடாத ஒன்று.

    என்ன ஆழமன எளிமையான வாக்கியம் .

    சூப்பர் ஜி.

  2. இந்த பதிவை படித்தவும் நாம் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதை திறம்பட தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். அழகிய பதிவு

    நன்றி

    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *