Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

print
ஞானமும் ஆழ்ந்த பக்தியும் கைவரப்பெற்று கடுமையான விரதங்கள் இருந்தால் தான் இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் நாம் பாத்திரமாவோம் என்றில்லை. இதயத்தின் ஓரத்தில் ஓரளவு சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் இந்த கலியுகத்தில் கடைத்தேற. திருக்குறிப்பு தொண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சலவைத் தொழில் செய்து வந்த இவர், சிவனடியார்களின் ஆடைகளை இலவசமாக துவைத்து தரும் அரும்பணியை செய்து இறைவவனின் அருளுக்கு பாத்திரமானார். 63 நாயன்மார்களுள் ஒருவர் என்ற சிறப்பை பெற்றார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஞானமும், தவமும், குலமும், கல்வியும், செல்வமும் சாதிக்க திணறுவதை பிறருக்கு உதவும் எண்ணம் அதுவும் இறையடியார்களுக்கு உதவும் எண்ணம் எளிதாக சாதித்துவிடுகிறது அல்லவா…?

சிவராத்திரி விரதம் ஒருவர் அனுஷ்டிக்காவிட்டாலும், அனுஷ்டிப்பவர்களுக்கு அவர்களால் இயன்ற சிறு சிறு சேவைகளை செய்வதன் மூலம் அவர்களும் பலனடையலாம்.

நாம் கீழே கூறியவற்றுள் யார் யார் என்னென்ன செய்யமுடியுமோ அவற்றை செய்து அவன் அருளுக்கு பாத்திரமாகுங்கள். பக்தர்களுக்கு சேவை செய்வதைவிட உயர்ந்தது  வேறு எதுவும் இல்லை. அதாவது ஒன்னு நாம பக்தி செய்யனும் இல்லையா பக்தி செய்றவங்களுக்கு பக்கபலமா இருக்கணும்.

இந்த சிவராத்திரிக்கு நீங்கள் என்னென்ன செய்யலாம்?

* சிவராத்திரி விரதத்தின் மகிமையை அறிந்தவர்கள் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்கவேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் சிவாலயங்களின் பூஜைகளுக்கு மலர்கள், வில்வம் முதலியவற்றை வாங்கித் தரலாம். பணத்தை கொடுத்து செய்வதைவிட, உங்கள் கைகளால் மலர்கள் வாங்கித் தருவது சாலச் சிறந்தது.

* மூன்று கால அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், சந்தனம், மஞ்சள், நெய், தேன், பன்னீர், இளநீர் போன்ற பொருட்களை கோவிலில் விசாரித்து அவர்கள் தேவைகளை கேட்டறிந்து வாங்கித் தரலாம்.

* பிரசாதம் செய்ய தேவையான சமையல் பொருட்கள், மளிகை சாமான்களை வாங்கித் தரலாம். (நீங்கள் வாங்கித் தரும் பொருட்கள் தரமானதாக இருப்பது மிக மிக அவசியம்.).

* பெரிய தொகையை செலவிட முடியாதவர்கள் மடப்பள்ளிக்கு உங்களால் முடிந்த அளவு சமையல் எண்ணை (பெரும்பாலும் ரீஃபைண்டு ஆயில்) வாங்கித் தரலாம். அல்லது அவர்கள் கேட்கும் எண்ணையை வாங்கித் தாருங்கள்.

* சிவாலயங்களுக்கு முந்தைய தினம் சென்று அவர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தால் அனுமதி பெற்று அதில் உங்களை இணைத்துக்கொள்ளலாம். உங்களால் முடிந்த அளவு கோவிலை சுத்தம் செய்ய பொருளுதவியோ அல்லது சரீர உதவியோ செய்யலாம்.

* கோவிலை சுத்தம் செய்ய உங்கள் சரீர முயற்சி இருந்தால் உசிதம். அப்படி முடியாத பட்சம், ஆட்களை கூலிக்கு வைத்து கோவிலை சுத்தம் செய்து தரலாம்.

* கோவில்களில் மின்சார பல்புகள் ஒரு சில இடங்களில் ஃபியூஸ் போயிருக்க வாய்ப்புகள் உண்டு. புதிய பல்புகள் வாங்கித் தரலாம்.

* தண்ணீர் குழாய்கள் பழுதுபட்டிருந்தாலோ அல்லது கசிந்துகொண்டிருந்தாலோ சரி செய்ய பிளம்பரை ஏற்பாடு செய்து தரலாம். அதற்குரிய செலவை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

* பூச்சு வேலை ஏதாவது தேவைப்பட்டால் அதற்குரிய நபர்களை வைத்து பூச்சு வேலைகளை செய்து தரலாம்.

* ஆலயத்திடம் அனுமதி பெற்று கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியை ஏற்றுக்கொள்ளலாம்.

* சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். எனவே விளக்கேற்றுவதற்கு சுத்தமான தரமான நல்லெண்ணெய் அவரவர் சௌகரியப்படி வாங்கித் தரலாம்.

* அன்றைய தினம் பிரசாதம் விநியோகிக்க தொன்னைகள் தேவைப்படும். ப்ளாஸ்டிக்கை தவிர்த்து இலையால் செய்யப்பட்ட தொன்னைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி வாங்கித் தரலாம்.

* கொண்டைக்கடலை, மூக்கடலை போன்றவற்றை கொண்டு வீட்டில் சுத்தமாக சுண்டல் தயார் செய்து அதை இரவு கோவிலுக்கு வருபவர்களுக்கு தரலாம். தொன்னையில் தருவது உசிதம்.

* உங்களால் முடிந்த அளவு ஒரு லிட்டரோ அல்லது ரெண்டு லிட்டரோ பால் வாங்கி காய்ச்சி (பசும்பால் கிடைத்தால் உத்தமம்) அதில் அரை சர்க்கரை போட்டு தூக்கில் கொண்டு சென்று இரவு கோவிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு பேப்பர் கப்களில் தரலாம்.

* கோளறு பதிகம், லிங்காஷ்டகம் போன்ற துதிகள் மிகச் சிறிய புத்தகங்களாக கிடைக்கிறது. (விலை.ரூ.5/- க்கும் குறைவாக இருக்கும்). அவற்றை நூற்றுக்கணக்கில் வாங்கி வந்து கோவில்களில் விநியோகிக்கலாம். அதை படிக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் பெரும்புண்ணியத்தில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்.

(போன வருஷம் நான் விரதம் இருந்தப்போ இது போன்ற எளிமையான ஆனால் மகத்தான சேவைகளை பலர் செய்வதை நேரில் பார்த்து பூரித்தேன். அதைத் தான் உங்களுக்கு சொல்கிறேன்.)

* இது கூட முடியாது கஷ்டம் தான் என்பவர்கள் உங்கள் வீட்டில் உள்ள பழைய பேப்பர்களை கத்தரித்து சிறு சிறு துண்டுகளாக்கி அதை ஒரு கம்பியில் மாட்டி கோவிலில் கொடுங்கள். சேவார்த்திகள் விபூதி மடிக்க அது மிகவும் உதவும். (இதுவும் முடியாதா? ஜென்மம் கடைத்தேற உங்களுக்கு வழியே இல்லை என்று தான் சொல்லவேண்டும்!)

சிவராத்திரி விரதமிருப்பவர்கள் மற்றும் விரதமிருக்கமுடியாதவர்கள் யார் வேண்டுமானாலும் மேற்படி கைங்கரியங்களில் இயன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இறைவனின் அருளை பெறலாம்.

…………………………………………………………………………………………………
வரும் ஞாயிறு (10/03/2013) காலை திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நமது உழவாரப்பணி துவங்கவுள்ளது. நம்முடன் இணைய விருப்பமுள்ளவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். அதே போல அன்று இரவு நமது சிவராத்திரி விரதம் மற்றும் மூன்று கால தரிசனம் அதே கோவிலில் நடைபெறவுள்ளது. இணைய விருப்பமுள்ளவர்கள் இணைந்துகொள்ளலாம். சுந்தர் 9840169215
…………………………………………………………………………………………………

6 thoughts on “விரதமிருப்பது தவிர சிவராத்திரியன்று நீங்கள் வேறு என்ன செய்யலாம்? சிவராத்திரி 3

  1. ஜென்மம் கடைத்தேற எளிய வழிகளை இந்த பதிவின் மூலம் அருமையாக சொல்லியிருக்கும் சுந்தருக்கு நன்றி. படித்து பயன் பெறுவது அவரவர் பாக்கியம்.

  2. வாழ்த்துக்கள் சுந்தர். மகா சிவராத்திரி அன்று தங்களது திருப்பணிகள் வெற்றி அடையட்டும். பூரணம் பெறட்டும்.

    1. சாட் சாத் அந்த மகா பெரியவாவே தங்கள் மூலம் வாழ்த்தியதாக எண்ணி உவகையடைகிறேன். நன்றி! நன்றி!!

      – சுந்தர்

  3. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. உண்மையான சிவதொண்டனை இந்த பதிவின் மூலம் கண்டேன். மஹா சிவராத்திரி விரதத்தின் பலன்களையும், அதற்காக செய்ய வேண்டிய முறைகளையும் கடமைகளையும் தெள்ள தெளிவாக அனைவரும் அறிந்து பயனடையசெய்த உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். ( விரைவில் உங்களிடம் அறிமுகமாகிறேன்.)
    தொண்டன் சிவகுமார்

    1. காத்திருக்கிறேன். நன்றி.
      – சுந்தர்

  4. தகவல்களுக்கு மிக்க நன்றி !!!

    ஊழ்வினை அகல
    உளமார இறைவனை தொழுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *