படப்பை மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியானமந்திர பயணம் பற்றி திட்டமிட்டவுடன் தைப்பூசம் விரைவில் வருகிறதே அதையொட்டி நாம் போகும் வழியில் ஏதாவது முருகன் கோவில் இருந்தால் அதையும் நமது திட்டத்தில் சேர்த்து குமரனை தரிசித்துவிடலாம் என்று கருதி விசாரித்தபோது கிடைத்த தகவல் தான் குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோவில்.
தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு இருப்பதால் எப்படியும் தாம்பரம் போய் அங்கிருந்து தான் மலைப்பட்டு செல்லவேண்டும். எனவே குமரன் குன்றமும் எங்களது டிரிப்பில் இடம்பிடித்துவிட்டது.
குறித்த நேரத்தில் அனைவரும் பிக்-அப் பாயிண்ட்டான கிண்டி கத்திப்பாரா வந்துவிட, நாம் வேனுடன் அங்கு சென்று அனைவரையும் பிக்கப் செய்துகொண்டு குரோம்பேட்டை நோக்கி பயணித்தோம்.
குரோம்பேட்டை பாலத்தில் ஏறி இறங்கி இடது திரும்ப குமரன் குன்றம் வந்துவிட்டது. குரோம்பேட்டை நேரு நகரில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில். காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் அருள் வாக்கின்படி அமைக்கப்பட்ட மலைக்கோயிலிது.
சென்னையில் இருப்பவர்கள் அவசியம் ஒரு முறை குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்றுவிட்டு வாருங்கள்.
சுவாமி மலை & குமரன் குன்றம் ஒற்றுமைகள்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள “சுவாமி மலை’ போன்று இங்கும் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி, மலை மேல் கையில் தண்டாயுதத்துடன் அருள் பாலித்து வருகிறார். வடக்கு நோக்கிய சந்நிதி! இங்கு மயிலுக்குப் பதிலாக இறைவனை நோக்கிய வண்ணம் யானை உள்ளது. உற்சவர் கிழக்கு திசை பார்த்தபடி, சிறிய மண்டபத்தில் உள்ளார்.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கும் குமரன் குன்றம் முருகனுக்கும் என்ன தொடர்பு? சுவாமிமலை போலவே படிகள், மலைக்கோவில், மலை மேல் சிவன் அம்பாள் சந்நிதிகள் என்று சுவாமிமலையை ‘மாதிரி’ ஆகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே இந்த குமரன் குன்றம் முருகன் கோயில். இந்த தலத்தின் பெயர் ‘மத்ய சுவாமிமலை’.
மகா பெரியவாவின் அருளாசியின்படி உருவான கோவில்
பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் (1958) இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.
கோயில் அடிவாரத்தில் ஸ்ரீசித்தி விநாயகர், ஜெயமங்கள தன்ம காளி, நவக்கிரகங்கள், இடும்பன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
பிள்ளையாரை தரிசித்து சூடம் ஏற்றி வழிபட்ட பிறகு மலையேறினோம். படிகள் குறைவு தான். நூறு படிகள் ஏறினால் சிவன் கோயிலை அடையலாம். அங்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம். தனயனைப் போல தந்தையும் வடக்கு நோக்கியுள்ளார். தாய், கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள உற்சவ நடராஜர், கால் மாறி நடனமாடி மதுரையில் உள்ள “வெள்ளி அம்பலவாணரை’ நினைவூட்டுகிறார். அருகே சிவகாமி அம்மை, மாணிக்க வாசகர் ஆகியோர் தரிசனமளிக்கின்றனர்.
திருச்சுற்றின் கிழக்குப் பக்கத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதி உள்ளது. மேலும் கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்க்கை முதலியோர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர், “சிவ தரிசன புண்ணியம்’ தர, தனியே வீற்றிருக்கிறார்.
சூரியன், சந்திரன், பைரவர் சந்நிதிகளும், உற்சவர் மண்டபமும் சிவன் கோயிலிலேயே உள்ளன.
அனைத்துத் தெய்வங்களையும் சிவாலயத்தில் தரிசித்து, வெளியே வந்து மேலும் சில படிகள் ஏறினால் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலை அடையலாம். இந்த சந்நிதி அழகுற அமைந்துள்ளது.
சென்னை நகரின் சுற்றுபுறம் மிக அழகாக தெரிகிறது. திரிசூலம், திருநீர்மலை இரண்டுக்கும் இடையில் உள்ளது குமரன் குன்றம். இந்த அமைப்பு, “சோமாஸ்கந்த’ வடிவத்தை நினைவூட்டுகிறது.
விஷேட நாட்கள்
இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் (பால் காவடி), தைக் கிருத்திகை, சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு (குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினரின் மாபெரும் படித் திருவிழா), வைகாசி விசாக லட்சார்ச்சனை, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், திருக்கார்த்திகை முதலிய விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாம் சென்ற நேரம் முருகனுக்கு அலங்காரம் நடைபெற்று கொண்டிருந்தபடியால் அரை மணிநேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியதாயிற்று. கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நமது தளத்தின் காலண்டரை அங்கு மாட்டிவிட்டோம். பின்னர் எடுத்து சென்ற PHAMPLETS விநோயோகிக்கப்பட்டது.
அழகு என்ற சொல்லுக்கு முருகன்
அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டு குமரன் காட்சி தர…. அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்ற பெயர் ஏன் வந்தது என்று புரிந்தது எங்களுக்கு. அத்துணை அழகு. நைவேத்தியம் முடிந்து, அர்ச்சனைகள் முடிந்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
வெளியே வந்தவுடன் ஃபோட்டோ செஷன் நடைபெற்றது. அனைவரும் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். சிலர் அதற்குள் கீழே இறங்கிவிட்டார்கள்.
நாங்கள் படிகள் இறங்கி வந்தோம். மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் அரங்கில் தினசரி திருப்புகழ், தேவார இன்னிசையும், விழாக்காலங்களில் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. அருகில் உள்ள வேத பாடசாலையில் மாணவர்கள் “மறைகள்’ பயின்று வருகின்றனர்.
எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர்
சாஷ்டாங்க நமஸ்காரம் ஒன்றை முருகனுக்கும் கணபதிக்கும் செய்துவிட்டு வெளியே வருகிறேன்… ஒருவர் திடீரென்று…. “சுந்தர்ஜி சுந்தர்ஜி” என்று அழைத்தபடி என்னை நோக்கி விரைந்து வந்தார். யாரென்று தெரியவில்லை.
“என்னையா கூப்பிடுறீங்க?” என்றேன் சந்தேகத்துடன்.
“ஆமாம்…. உங்களைத் தான்” என்றார்.
கிட்டே வந்து நம் கைகளை பற்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“சுந்தர்ஜி நான் தான் சங்கர் சேஷாத்ரி. ரெண்டு மாசத்துக்கு முன்னே என் கால்ல ஆபரேஷன் செஞ்சப்போ உங்களுக்கு கூட என் பேர் ராசி நட்சத்திரம் இதெல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்பி அர்ச்சனை பண்ணச் சொன்னேனே? ஞாபகமிருக்கா?” என்றார்.
அப்போது தான் அவர் யார் என்று தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்ட இவர், என்னை கடந்த பல வருடங்களாக தெரியுமென்றும் அவரது காலில் பிரச்னை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதாகவும், விரைவில் குணம் பெற வேண்டி நான் கோவிலுக்கு செல்லும்போது அவர் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். நானும் அப்படியே செய்துவிட்டு அவருக்கு தகவல் சொன்னேன்.
தற்போது நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் நன்றி கூறினார்.
“நான் இங்கே வந்திருக்கிறது எப்படி தெரியும்? நீங்க இங்கே எப்படி??”
“வெளியே வேன் நிக்கிறதை பார்த்தேன். அதுல நம்ம RIGHTMANTRA.COM பேனர் கட்டியிருந்துச்சு. நீங்க வந்திருக்கிறதை புரிஞ்சிகிட்டேன். மேலே சன்னதியில இருப்பீங்கன்னு உங்களை மொபைல்ல கூப்பிடலே…. கீழே வந்தவுடனே பார்க்கலாம்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்.”
“நீங்க எப்படி இங்கே? வீடு இங்கே பக்கத்துல இருக்கா?” என்றேன்.
“நாங்க ராம் ராம் ராதே கிருஷ்ணான்னு ஒரு பஜன் மண்டலி நடத்திக்கிட்டுருக்கோம். அந்த மண்டலி சார்பா இன்னைக்கு ராதா கல்யாணம் மகோத்சவம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். தொடர்ந்து இதை 14 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கோம். நாங்கல்லாம் பீச்-தாம்பரம் ரூட்ல ஒரு குறிப்பிட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஒரு குறிப்பிட்ட கம்பார்ட்மெண்ட்ல ஒண்ணா ஆபீஸ் போவோம். போகும்போது பஜன்ஸ் பண்ணிகிட்டே போவோம். நாங்க எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்சது தான் இந்த பஜன் மண்டலி” என்றார்.
எப்பேர்ப்பட்ட சேவை? ட்ரெயினில் அலுவலகம் செல்லும்போது சூதாடுபவர்களுக்கு மத்தியில் இறைவனின் நாம பஜனையா? கேட்கவே செவிகளுக்கு தேனாக இருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரை – நண்பரை – இங்கு முருகன் சன்னதியின் அடிவாரத்தில் பார்க்கும்படி அமைந்ததற்கு முருகனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றியது.
நம் தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும் வெகுவாக பாராட்டியவர், தன்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு நமது தளமும் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டுவதாகவும் நமது பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவரை அழைத்து சென்று நமது நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.
நமது தளத்தின் காலண்டரை அங்கேயே வைத்து அவருக்கு பரிசளித்தேன். அஷ்டலக்ஷ்மியே தன்னை தேடி வந்ததில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம்.
ராஜ கோபுரம் கட்ட உதவுங்கள்
நண்பரிடம் விடைபெற்று புறப்படத் தயாரான தருணம் குமரன் குன்ற கோவிலின் பிரதான (ராஜ) கோபுரம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததை பார்த்தோம். இத்தனைச் சிறப்பு மிக்க கோயிலில் ராஜ கோபுரம் இல்லாதது ஓர் குறையாக இருந்து வந்தது. இதைத் தீர்க்க இந்து அறநிலையத்துறை ஒப்புதலுடன் ராஜ கோபுரத் திருப்பணியை ஆலய நிர்வாகத்தினர் துவங்கியுள்ளார்கள். ராஜகோபுரம் முடித்த பின்பு குடமுழுக்கு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பெருந்தொகை செலவாகக் கூடும்.
“ஸ்தூல லிங்கம்’ என்று ராஜ கோபுரத்தை சொல்வார்கள். நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்தும் ராஜ கோபுரத்தை தரிசிப்பது புண்ணியம். கண்களில் ராஜ கோபுரம் தென்படும் பொழுது அதையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவது முறை. எட்ட இருப்பவர்களுக்கும் கடவுளைப் பற்றிய ஞாபகமூட்டுதற்கே அது அமைந்திருக்கிறது.
“புல்லினால் ஐந்து கோடி, புது மண்ணால் பத்து கோடி, செல்லுமா ஞாலம் தன்னில் செங்கல்லால் நூறு கோடி அல்லியங் கோதை கேளாய் அரனுறை ஆலயத்தை கல்லினால் செய்வித்தோர்கள் கயிலை விட்டு அகலாரென்றே” என்ற வாக்கின்படி ஆலயத் திருப்பணியில் பங்கேற்போர் பெறும் புண்ணியம் அளவிடற்கரியது. எனவே இத்திருப்பணியில் முருக பக்தர்கள் எங்கிருந்தாலும் ஈடுபட்டு ஸ்ரீசுவாமிநாத சுவாமியின் அருளைப் பெற வேண்டும்.
“Kumaran Kundram Rajagopuram Tiruppani committee ” என்ற பெயரில் காசோலை / வரைவோலை எடுத்து, “”அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை-44” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
விவேகானந்தர் வாக்கு பலித்தது – தேடி வந்த வாய்ப்பு
முருகனுக்கும் அவரது அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம். வேனில் ஏறவிருந்த தருணம் திடீரென்று ஒருவர் என்னை நோக்கி வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது விசிட்டிங் கார்டை நீட்டினார்.
நான் எந்த விஷயத்தை செய்யனும்னு துடிச்சிகிட்டு இருக்கேனோ அதை செய்றதுக்கு தனக்கு ஒரு ஆள் தேவைப்படுவதாக கூறிய அவர் “உங்களால இதை செஞ்சி தர முடியுமா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை.
“இதை நான் தான் செய்யமுடியும் அப்படின்னு எப்படி உங்களுக்கு தோணிச்சி? எப்படி கரெக்டா நீங்க முடிவு பண்ணினீங்க?” என்று கேட்டேன்.
“வேனில் கட்டியிருந்த உங்களோட பேனரையும் டேக் லைனையும் பார்த்தவுடனே உங்களை பத்தி புரிஞ்சிகிட்டேன் சார்” என்றார்.
“நிச்சயம் செய்வோம். சாட்சாத் முருகப் பெருமானே உங்களை அனுப்பி வைத்திருப்பதாக எண்ணுகிறேன்” என்று கூறி அவர் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு என் கார்டை கொடுத்தேன்.
அவர் அப்படி என்ன கேட்டார்? நான் என்ன சொன்னேன்? நடத்திக் காட்டியவுடன் சொல்கிறேன்.
ஒரு விஷயத்தை நாம செய்யனும்னு நினைச்சி தேடிக்கிட்டு இருக்கும்போது அது சம்பந்தமா ஒரு விஷயம் நம்மளை தேடி வருது என்பது சாதாரண விஷயமா?
இது எப்படி சாத்தியமாச்சு? சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. அப்படி என்ன சொன்னார் அவர்? ஏற்கனவே சொன்னது தான். கீழே மறுபடியும் தந்திருக்கிறேன். படியுங்கள்.
நல்ல விஷயங்களை நோக்கி நாம போனா – நல்ல விஷயங்கள் காந்தம் மாதிரி நம்மளை தேடி வரும் – என்பதை அனுபவப்பூர்வமாக மற்றுமொருமுறை அன்று உணர்ந்துகொண்டேன்.
குமரனுக்கு எதிரே கோவிந்தன்
வெளியே வந்து வேனில் ஏறத் துவங்கும் தருணம், எதிரே பெருமாள் கோவில் ஒன்று தென்பட்டது. பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் என்று பெயர் காணப்பட்டது. “உள்ளே நரசிம்மர் இருக்கிறார். அவசியம் தரிசித்துவிட்டு செல்லலாம்” என்று நண்பர் கூற, வேனில் தயாராக இருந்தவர்களிடம் “சற்று பொறுங்கள்…. ஐந்து நிமிடத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு உடனே அங்கு ஓடினேன்.
திருப்பதியில் இருந்தே வேங்கடவன் விக்ரகம் ஒன்றை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருப்பதாகவும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவென்றும் குருக்கள் கூறினார். நரசிம்மர் பக்கத்திலேயே லக்ஷ்மி நரசிம்மர் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார். பக்கத்தில் ஆஞ்சநேயர். கோவில் எளிமையாக இருந்தது. நல்லதொரு வைப்ரேஷனை உணர முடிந்தது.
தீர்த்தப் பிரசாதம் பெற்று சடாரி ஆசி பெற்றுக்கொண்டு நமஸ்கரித்துவிட்டு மலைப்பட்டு நோக்கி கிளம்பினோம்.
நேரம் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல் இங்கு ஆகிவிட்டது. இருப்பினும் குமரன் குன்றத்தில் ஒன்றரை மணிநேரம் செலவிட என்ன பாக்கியம் செய்தோமோ என்று நினைத்துக்கொண்டு வேனில் மீண்டும் ஏறினோம்.
மலைப்பட்டு பாபாஜி மந்திர் அனுபவம் அடுத்த பதிவில்.
(குமரன் குன்றம் ஆலயத்தை பற்றிய செய்திகள் தினமணி நாளிதழில் இருந்து சிறிது எடுத்தாளப்பட்டுள்ளது.)
….. Malaippattu Mahavatar Babaji Temple visit experience to be posted in forthcoming post!
[END]
Wonderful experience Ji….Very nice Murugan temple in city…Everyone should visit Kumaran kunram when they get time….Thanks for giving us opportunity to visit superb temple…..
அந்த சுவாமிநாதனை தரிசித்த இனிய அனுபவத்தை அளித்த சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
தொடரட்டும் உமது தொண்டு !!!
வாழ்க வளமுடன் !!!
எங்கள் நண்பர் திரு.சங்கர் சேஷாத்ரி அவர்களை பற்றியும் நாங்கள் நடத்தி கொண்டிருக்கும் குழு பற்றியும் இந்த இனைய தலத்தில் குறிபிட்டு பெருமை படுத்திய மைக்கு எங்கள் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தொடரட்டும் உமது நற்பணிகள்
ஹாய் சுந்தர்ஜி.
அருமையான எழுத்து நடை .மெய் சிலிர்த்த அனுபவம் .
நன்றி ஜி .
சிவனடிமை மனோகரன்
சென்னைக்குள் இவ்வளவு கோவில்கள் அதுவும் பழமை மாறாமல் இருக்கிறது இது மாதிரி கோவில்களை மக்களுக்கு அறிமுக படுத்தி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறீர்கள்
அருமையான பதிவு…….அந்த உட்கார்ந்த ஆஞ்சனயர விட்டுடிங்கள…..சும்மா ஞாபக வந்துச்சி..
சுந்தர் ஜி
மிக்க நன்றி. நமது நண்பர் திரு.சங்கர் சேஷாத்ரி, நீங்கள் வந்தபோது என்னை அலை பேசியில் தொடர்பு கொண்டார். அந்த நேரம் நான் பைக்-ல் வந்து கொண்டிருந்ததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. நீங்கள் எங்களது ராதா கல்யாண வைபவத்திற்கு நமது தளம் நண்பர்களுடன் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் ஆன்மீக பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
ப.சங்கரநாராயணன்
வழக்கம் போல் அருமையான பதிவு. நாளுக்கு நாள் உங்கள் நட்பு வட்டம் அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. எனது ஆன்மீக குருவுடைய படமும் (தற்செயலாக எடுககபட்டிருதாலும்) இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வளர்க உங்கள் பணி.
—————————————————-
நீங்க சொன்ன பிறகு ஒவ்வொரு படத்தையா உத்து பார்த்துகிட்டே வந்தப்போ தான் கவனிச்சேன்.
உண்மையிலேயே தற்செயல் தான். இருந்தாலும் சூப்பர்.
– சுந்தர்
மிக்க நன்றி …We really missed you on the Radha kalyana Mahotsav. As promised we request you to make yourself available . we are eager and happy welcoming you. Thanks a Ton.
Sankar S
Hello Sunder ji,I just wanted to take the time to express my appreciation for this website! A brief thanks to all of you making this site and the excellent information available to us.
FYI,one of the most amazing,peaceful,historical and old shiva temple in my home place (திருக்கச்சூர் ஆலக்கோவில்)
…if u free kindly look at below link
http://www.shivatemples.com/tnaadut/tnt25.php
Thank you very much!!!
Great site, keep up the good work!!!!
Cheers
Sainaveen-SG
(Fan of superstar rajinikanth)
———————————————————–
Thank you Naveen.
Will visit this temple one day for sure.
God bless you.
– Sundar