Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை! DOCTORS DAY SPL 2

காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை! DOCTORS DAY SPL 2

print
து DOCTORS DAY ஸ்பெஷல் 2. கடந்த வாரம் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்புன்கூர், சிதம்பரம் உள்ளிட்ட ஷேத்ரங்களுக்கு சென்றிருந்தபோது சந்திக்க நேர்ந்த ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

டந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி பெற்றோருடன் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்பாம்புரம் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு சென்றிருந்தது நினைவிருக்கலாம். சென்னை எழும்பூரிலிருந்து 19  தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.30 க்கு உழவன் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணம். செல்லும் வழியிலேயே ரயிலில் இரவு முழுதும் அப்பா அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற வண்ணமிருந்தார். அவர் இப்படி செல்பவரல்ல. அவருக்கு வயது 72. என்ன பிரச்சனை அவருக்கு என்று தெரியவில்லையே என்று மனம் பதைபதைத்தது.

மறுநாள் அதிகாலை வைத்தீஸ்வரன் கோவிலில் இறங்கிய பின்னர், அங்கேயே ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அனைவரும் குளித்து முடித்து தயாரானவுடன், வைத்தியநாதரை தரிசிக்க சென்றோம்.

முன்னதாகவே குருக்களிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டபடியால், எல்லா சன்னதிகளிலும் சிறப்பு தரிசனம் + அர்ச்சனை.

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

அனைத்தையும் முறைப்படி முடிக்க (செவ்வாய்க்கு சிறப்பு அர்ச்சனை + அபிஷேகம்) கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கும் மேலானது. வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் முடிந்தவுடன் அங்கு ஒரு வாடகை காரை அமர்த்திக்கொண்டு அடுத்து அங்கிருந்து திருப்பாம்புரம் பயணம். இது ஒரு சிறந்த ராகு-கேது பரிகாரத் தலம். இராகு-கேது பரிகாரத்துக்கு காலஹஸ்தி தான் செல்லவேண்டும் என்பதில்லை. திருப்பாம்புரம் சென்றாலே போதும். (இது பற்றி விரிவான பதிவை பின்னர் அளிக்கிறோம்).

திருப்பாம்புரம்
திருப்பாம்புரம்

இடைப்பட்ட இந்த தருணத்தில் பல முறை அப்பாவுக்கு இயற்கை உபாதையை தணிக்க வேண்டியிருந்தது. திருப்பாம்புரம் தரிசனம் முடித்துவிட்டு கிளம்பும்போது நேரம் மதியம் 12.30. அதற்கு மேல் வேறு எந்த ஆலயமும் திறந்திருக்காது என்பதால் மீண்டும் வைத்தீஸ்வரன் கோவில் திரும்பி இரண்டு மணிநேரம் ஒய்வு எடுத்துகொண்டோம். அடுத்து நந்தி, நந்தனாருக்காக விலகிய திருப்புன்கூர் மற்றும் சிதம்பரம். சிதம்பரத்தில் தரிசனம் முடித்துக்கொண்டு மயிலாடுதுறையில் இரவு சென்னைக்கு ரயிலேற திட்டம். எனவே இங்கு அறையை வெக்கேட் செய்து கொண்டு திருப்புன்கூர் புறப்பட்டோம்.

திருப்புன்கூர்
திருப்புன்கூர்

திருப்புன்கூர் தரிசனம் முடித்துவிட்டு, சிதம்பரம் வரும்போது அப்பா மிகவும் சோர்வாகிவிட்டார். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தமையால் உடலில் இருந்த சத்தெல்லாம் போய்விட்டது. இங்கேயே ஏதேனும் டாக்டர் இருந்தால் பார்த்து செக்கப் செய்துவிட்டு ஒரு இன்ஜெக்ஷானாவது போடலாம் என்று அம்மா கூறினார்கள். அப்பா நிலைமையும் எனக்கு சற்று கவலையளித்ததால் சிதம்பரத்தில் ஒரு நல்ல டாக்டரை தேடி அலைந்தோம். வார இறுதி என்பதாலோ என்னவோ ஒரு மருத்துவரும் கிடைக்கவில்லை. சில பெரிய ஆஸ்பத்திரிகள் இருந்தன. அங்கு காண்பிக்க விருப்பம் இல்லை. கூட்டமும் அங்கு எக்கச்சக்கம். 20-30 பேர் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். மறுபடியும் டாக்டரை தேடி அலைந்தோம். அத்தனை பெரிய ஊரில் ஒரு ஜெனெரல் மருத்துவர் கூடவா இல்லை என்று தோன்றியது. சிதம்பரம் நகரை சுற்றி சுற்றி வந்தும் நோ யூஸ். நேரமோ ஓடிக்கொண்டிருந்தது. இரவு 10.00 மணிக்கு மயிலாடுதுறையில் ரயிலை பிடித்தாகவேண்டும். இங்கிருந்து 8.30 க்கு கிளம்பினால் தான் மயிலாடுதுறைக்கு குறித்த நேரத்தில் செல்லமுடியும்.

தில்லையில் நடராஜரை எப்பாடுபட்டேனும் தரிசித்தே ஆகவேண்டும். காரணம் அன்றோடு மண்டலாபிஷேகம் முடிகிறது. குடமுழுக்கு நடைபெற்று 48 நாட்களுக்குள் அக்கோவிலை தரிசித்தால் குடமுழுக்கை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். அன்று தான் 48 வது நாள்.

சிதம்பரம்
சிதம்பரம்

நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் காரில் வேறு சுற்றிக்கொண்டிருக்கிறோம். அதுவும் அம்பாசிடர் கார். கேட்கவேண்டுமா? ஒரு இடத்தில் சில வினாடிகள் கூட நிறுத்தி விசாரிக்க முடியவில்லை. பின்னால் யாரேனும் வந்து ஹாரன் அடிக்கிறார்கள். வெறுத்தே போய்விட்டது.

அப்பா இருக்கும் நிலையில் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வது இயலாத காரியம். “முதல்ல ஒரு டாக்டரை பார்த்து அப்பாவை காண்பிப்போம். அப்புறம் நாங்க காரிலேயே இருக்கிறோம். நீ மட்டும் போய் தரிசனம் செய்துவிட்டு வா” என்றார் அம்மா.

அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் தரிசிக்க செல்வதா? நமக்கு மனமில்லை. தயங்கினோம்.

“யோசிக்கவேண்டாம். அப்பா இருக்கும் நிலையில் அங்கு வர முடியாது. யாருமே போகவில்லை என்றால் சிதம்பரம் வந்ததே வீணாகிவிடும். நீ மட்டுமாவது பார்த்துவிட்டு வா” என்றார்கள் அம்மா.

சரி முதல்ல ஒரு டாக்டர் கிடைக்குறாரான்னு பார்ப்போம் என்று சிதம்பரத்தில் இருந்த நம் நண்பர்கள் சிலரை அலைபேசியில் அழைத்தோம். ஒருவர் கோவிலில் தீட்சிதராக உள்ளார். மற்றொருவர் அங்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நேரம் பார்த்து இருவரையும் பிடிக்க முடியவில்லை. தீக்ஷிதர் நடராஜர் சன்னதியில் இருந்தார் போல. அலைபேசி எடுக்கவில்லை. (நண்பரோ குடும்பத்தோடு வெளியூர் சென்று திரும்பிக்கொண்டிருந்ததாக பின்னர் அறிந்துகொண்டோம்.)

நேரம் யாருக்கும் பயனின்றி அலைச்சலில் கழிந்துகொண்டிருந்தது.

நடராஜரிடம் விண்ணப்பித்தோம். “ஐயனே… உன்னை தரிசக்க வருகையில் இப்படி ஒரு சோதனையா? என் தந்தைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் என்னால் எப்படி நிம்மதியாக வந்து உன்னைக் காண இயலும்? நீ தான் உடனடியாக ஒரு வழி செய்து, தரிசனத்திற்கு ஆவன செய்யவேண்டும்… என் தந்தைக்கும் அருளவேண்டும்” என்று பிரார்த்திக்கொண்டோம். பிரார்த்தனை என்பதைவிட ஒரு முனுமுனுப்பு என்று கொள்ளலாம். ஏனெனில் நாம் அப்போது இருந்த நிலையில் பிரார்த்தனையெல்லாம் செய்ய மனம் செல்லவில்லை. ஒருவித சலிப்பான மனநிலை.

ஆனால், அவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்குமா? ஒரு ஆன்மாவின் மௌனத்தின் பொருளை கூட அறிபவனாயிற்றே அவன்.

Chidambaram north gopuram
தில்லை வடக்கு சன்னதி வீதி

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், தில்லை வடக்கு கோபுரத்தின் எதிரே, ஒரு வீட்டின் வாயிலில் ஒரு கிளினிக்கின் போர்டு காணப்பட்டது. உடனே காரை நிறுத்தச் சொல்லி இறங்கி ஓடினோம். கேட் உள்ளே பூட்டப்பட்டிருந்தது. சுவரோரம் காலிங் பெல்லை அழுத்தினோம். மேலேயிருந்து ஒரு பெரியவர் எட்டிப் பார்த்தார்.

“கொஞ்சம் அவசரமா டாக்டரை பார்க்கணும்….”

“இதோ வர்றேன்” என்றவர், அடுத்த சில நிமிடங்களில் கேட்டை திறந்தார்.

“அப்பாவுக்கு வந்த இடத்துல உடம்பு சரியில்லை”

“எங்கே இருக்கார்… அழைச்சுட்டு வாங்கோ….”

“இதோ… கார்ல தான் உட்கார்ந்திருக்கார். உடனே கூட்டிகிட்டு வர்றேன். நீங்க ??”

“நான் தான் டாக்டர். நீங்க அழைச்சுட்டு வாங்க” என்றார். டாக்டர் பார்க்க எங்கள் அப்பாவுக்கு ஒரு இரண்டு வயது வித்தியாசத்தில் ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார்.

வேகமாக சென்று அப்பாவை அழைத்து வந்தோம்.

உள்ளே அறையில் அமரவைத்தோம். டாக்டரிடம் அனைத்தையும் விபரமாக எடுத்துக்கூறினோம்.

அப்பாவும் பேசினார். அப்பா கூறிய அனைத்தையும் சிறிதும் முகம் சுளிக்காமல், பரபரக்காமல் கேட்டுக்கொண்டார். சில டாக்டர்கள் நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடில் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து ஹார்ட்பீட் உள்ளிட்ட அனைத்தும் செக் செய்தார். பின்னர் கண்கள், வாய் என் அனைத்தையும் செக் செய்தார்.

“சுகர் இருக்கா அப்பாவுக்கு?”

“இல்லை” – இது அப்பா.

“வாந்தி, மயக்கம், தலைசுத்தல் ஏதாவது இருக்கா?”

“அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் டயர்டா இருக்கு!”

நம்மிடம் திரும்பினார்…. “சுகர் இருக்கா இல்லையான்னு BLOOD TEST பண்ணினாத் தான் தெரியும். சுகர், யூரின், உள்ளிட்ட சில டெஸ்டெல்லாம் எழுதித் தர்றேன். மெட்ராஸ் போனவுடனேயே நல்ல லேப்ல டெஸ்ட் எடுத்திடுங்க” என்று கூறியவர், “ஒன்னும் பயப்படவேண்டாம். இப்போதைக்கு ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். சில மாத்திரைகள் எழுதித் தர்றேன். சென்னை போனவுடனே டெஸ்ட் எடுத்திடுங்க. ரிசல்ட் வந்தவுடனே ஃபோன் பண்ணுங்க. பார்த்துக்கலாம்” என்றார்.

அவர் போடும் மருந்து வேலை செய்கிறதோ இல்லையோ, அவர்அணுகுமுறை எங்களை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டது. ஒரு பக்குவமும் முதிர்ச்சியும் மிக்க மருத்துவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அவர் பாடம் எடுத்தது போல இருந்தது.

ஒரு நல்ல மருத்துவரின் இலக்கணம் என்ன தெரியுமா?

நோயாளியை அன்புடன் வரவேற்று, கனிவுடன் பேசி, நோயின் தன்மையை பற்றி விசாரித்து, அமைதியாகவும், பொறுமையாகவும் நோயாளி கூறும் உடல் துன்பங்களை கூர்ந்து கவனித்து. எந்நோயும் நிரந்தரமானதும், தீர்க்கமுடியாததுமல்ல என்று கூறி, நோயாளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி, நோயைப்பற்றிய பயத்தை முதலில் போக்கி அவருக்கு மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டும.

இது அத்தனையும் அவர் செய்தார்.

ஒரு நல்ல மருத்துவரின் இலக்கணம் என்ன தெரியுமா?

நோயாளியை அன்புடன் வரவேற்று, கனிவுடன் பேசி, நோயின் தன்மையை பற்றி விசாரித்து, அமைதியாகவும், பொறுமையாகவும் நோயாளி கூறும் உடல் துன்பங்களை கூர்ந்து கவனித்து. எந்நோயும் நிரந்தரமானதும், தீர்க்கமுடியாததுமல்ல என்று கூறி, நோயாளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி, நோயைப்பற்றிய பயத்தை முதலில் போக்கி அவருக்கு மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டும.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சற்று தைரியம் வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றோம் அனைவரும்.

ஃபீஸ் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

“ஃபீஸ் சார்?”

“உங்க டாக்டர் கிட்டே காட்டினா என்ன கொடுப்பீங்களோ அதை கொடுங்க போதும்” என்றார் பெருந்தன்மையுடன்.

நம்மை பற்றி விசாரித்தார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நமது தளத்தை பற்றியும் நமது பணிகளை பற்றியும் சொன்னோம்.

நமது விசிட்டிங் கார்டில் மஹா பெரியவாவின் படத்தையும், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் படத்தையும் பார்த்தவர், கண்களில் ஒத்திக்கொண்டார்.

“மிகப் பெரிய மகான்கள் படத்தையெல்லாம் கார்ட்ல போட்டிருக்கீங்க. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. எல்லார் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கட்டும்!”

“இந்த வெப்சைட் ஆரம்பிச்ச புதுசுல ஒரு அவசரத்துல ரெடி பண்ணின் கார்டு இது. இதுவே நல்லாயிருக்கேன்னு எல்லாரும் சொல்லவே அப்படியே விட்டுட்டேன் சார்”

அவருடைய கார்டை தந்தார். பெயரைப் பார்த்தவுடன் ஒரு வித பரவசம். இன்ப அதிர்ச்சி. பெயர் என்ன தெரியுமா?

Dr.V.NATARAJ B.Sc., M.B.B.S. F.C.C.P.  என்று இருந்தது.

டாக்டர். திரு.வி.நடராஜ்
டாக்டர். திரு.வி.நடராஜ்

சாட்சாத் அந்த நடராஜப் பெருமானே எங்களுக்காக இவரை ஏற்பாடு செய்தான் போல.

கண்கள் பனித்தன.

கோடிக்கணக்கானோர் அவனை ஒவ்வொரு நொடியும் துதித்துக்கொண்டிருக்க தில்லை நகர வீதிகளில் இந்த எளியோன் பெற்றோருடன் படும் பாட்டை பார்த்து மனமிரங்கி விட்டான் போல. அவனுக்கு தான் எத்தனை கருணை. அவன் அருளை பெற நமக்கு தகுதி உண்டா என்றெல்லாம் நமக்கு தெரியாது. அவன் பெயரைச் சொல்லவே தற்போது தான் நமக்கு தகுதி கிட்டியது என்று நாம் கருதுகிறோம்.

ஊர் உலகிற்கெல்லாம் அவன் தேவாதி தேவனாக இருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரை அன்பைக்கொண்டு அளக்கும்போது அவன் ஒரு சிறு பிள்ளை.

எளியோருக்கு எளியோன் அல்லவா அவன்…? ஊர் உலகிற்கெல்லாம் அவன் தேவாதி தேவனாக இருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரை அன்பைக்கொண்டு அளக்கும்போது அவன் ஒரு சிறு பிள்ளை. இதை நாம் பலமுறை உணர்ந்திருக்கிறோம். நமக்கு இறைவனிடம் பயம், பக்தி இவற்றையெல்லாம்விட அன்பு தான் அதிகம் இருக்கவேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு. நம்மைப் பற்றிய கவலைகளை விடுத்து அவனைப் பற்றி கவலைப்படும் ஒரு அன்பு. அந்த நிலை ஒருவருக்கு வந்தால் அதுவே பக்தியின் உச்சநிலை.

மீண்டும் விஷயத்திற்கு வருகிறோம்…

(நாம் இருந்த பரபரப்பில் வாசலில் போர்டில் இருந்த பெயரை கவனிக்கவில்லை. கிளினிக் பெயரைத் தான் – ரமணா கிளினிக் – கவனித்தோம்.)

மேலும் டாக்டர் திரு.நடராஜ், புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திரர் அவதாரத் தலத்தில் உள்ள மிருத்திகா பிருந்தாவனத்தின் டிரஸ்டியும் கூட. புவனகிரியிலும் கிளினிக் வைத்திருக்கிறார். (இவர் சொந்த ஊர் புவனகிரி!).

“சார்… உங்களை ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்றோம். “எதுக்கு??” சிரித்துகொண்டே கேட்டார்.

கார்டை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டோம்.

நேரே அடுத்து நடராஜரை தரிசிக்கவிருப்பதை சொன்னோம்.

“நானும் கோவிலுக்கு தான் கிளம்பிகிட்டிருந்தேன். நீங்க வரவே உங்களை அட்டெண்ட் பண்ணிட்டு போலாம்னு கிளினிக்கை திறந்தேன். என்னோட மெயின் கிளினிக் புவனகிரி தான். இது ரெசிடென்ஸ்.” என்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்….”

“ரிசல்ட் வந்தவுடனே ஃபோன் பண்ணுங்க”

புறப்படும் தருவாயில், அவரது கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும் என்று தோன்றியது.

முக்கிய கோரிக்கை ஒன்றை குறிப்பிட்டு, ஆசி கூறுமாறு வேண்டினோம்.

“எல்லாம் நல்லபடியா நடக்கும். ரொம்ப நல்லா வருவீங்க. மஹா பெரியவா துணையிருப்பார்” என்று ஆசி கூறினார்.

பின்னர் கிளினிக்கை பூட்டிவிட்டு கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அவர் எழுதித் தந்த மாத்திரைகளை அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பில் வாங்கி தந்து அப்பாவை சாப்பிட வைத்தோம்.

“நீ மட்டும் போய் ஸ்வாமியை தரிசனம் பண்ணிட்டு வந்துடு. நாங்க கார்லேயே வெயிட் பண்றோம். டயமாச்சு. கொஞ்ச சீக்கிரம் வந்துடுப்பா. 10.00 மணிக்கு மயிலாடுதுறையில இருக்கணும்” என்றனர்.

இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்...
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்…

நேரம் அப்போது 7.00 இருக்கும். நடராஜரை தரிசித்துவிட்டு நாம் திரும்பும்போது 8.45 pm ஆகிவிட்டது. நேரம் மிகவும் குறைவு. எப்படியும் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை செல்ல ஒருமணிநேரத்துக்கு மேல் ஆகும். அதுவும் நாங்கள் புக் செய்திருந்தது அம்பாசிடர்.

ஒருவழியாக மயிலாடுதுறை வந்து, ட்ரெயினைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

டெஸ்ட் ரிசல்ட் சொன்னது என்ன? அப்பாவுக்கு என்ன ஆயிற்று??

பிறிதொரு பதிவில் விளக்குகிறோம். நிச்சயம் உங்களுக்கும் அதில் பல பாடங்கள் உண்டு.

=================================================================================

‘கைங்கரிய ஸ்ரீ’ நடராஜ் !

இன்றைக்கு DOCTORS DAY வை முன்னிட்டு திரு.நடராஜ் அவர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம். இந்த பதிவை அவருக்கு அற்பணிக்கிறோம்.

டாக்டர் நடராஜ், இதுவரை நூற்றுக்கணக்கான மேடைகளில் திருமுறை குறித்து சொற்பொழிவாற்றியிருக்கிறார். இன்று மாலை கூட தில்லையில் நடராஜப் பெருமான் சன்னதியில் அவருக்கு சொற்பொழிவு உண்டு.

(சிதம்பரத்தை சேர்ந்த நம் நண்பர் ஒருவரிடம் டாக்டரின் இன்றைய சொற்பொழிவை பற்றி சொல்லி, அவரை தில்லை கோவிலுக்கு அனுப்பி இந்த புகைப்படத்தை எடுத்து நமக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். அவர் அனுப்பிய பிறகு இந்த பதிவை அளிக்கிறோம். இந்தப் படம் இன்று மாலை எடுத்தது.)

தில்லையில் சொற்பொழிவாற்றும் திரு.நடராஜ்
தில்லையில் சொற்பொழிவாற்றும் திரு.நடராஜ்

இன்னொரு விஷயம் தெரியுமா? திரு.நடராஜ் அவர்களுக்கு மஹா பெரியவா ‘கைங்கரிய ஸ்ரீ’ என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்.

“என்ன மஹா பெரியவா பட்டம் கொடுத்திருக்காரா? அப்போ….. மஹா பெரியவாவை இவர் பார்த்திருக்காரா?” என்று தானே கேட்கிறீர்கள்.

பார்த்திருக்காராவா?????? பார்த்து, பேசி, பழகியும் இருக்காருங்க. அதெல்லாம் தனித் தொடராக குரு தரிசனத்தில் வரவிருக்கிறது.

Dr nataraj discourse

விரைவில் புவனகிரி சென்று இவரை சந்தித்து விரிவாக பேசவிருக்கிறோம். அப்படியே ராயர் பிருந்தாவனம் தோன்றியபோது நடந்த அற்புதங்கள், மஹா பெரியவாவை இவர் சந்தித்தது உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி விரிவாக கவர் செய்யவிருக்கிறோம்.

ஒன்றே ஒன்று மட்டும் உண்மை….

காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை!

=================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=================================================================================

Also check :

இவர் தீர்க்காத நோய் இல்லை – வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் – DOCTORS DAY SPL 1

வைத்தியர்கள் மனம் குளிர்ந்தால்… HAPPY DOCTORS’ DAY!!

=================================================================================

[END]

18 thoughts on “காரணங்களின்றி காரியங்கள் நடப்பதில்லை! DOCTORS DAY SPL 2

  1. ஆச்சர்யம்…………………..ஆனால் உண்மை…………………அப்படின்னு சொல்லனும் போல இருக்கு.
    இறைவன் தன்னடியார்களை எவ்வாறெல்லாம் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.
    இறைவன் தன்னருளை உங்கள் மூலமாக நாங்கள் அறியத் தருகிறார். மிக்க நன்றி.

  2. வணக்கம் சுந்தர்.மிக மிக உண்மை சுந்தர் காரணம் இன்றி காரியம் இல்லை. டாக்டர் திரு நடராஜ் மூலம் என்ன நடத்த திட்டமிட்டு உள்ளான் என்பது அந்த தில்லை நடராஜனுகே வெளிச்சம்.மிகுந்த சிரம பட்டு இருக்கிறீர்கள்.எல்லாம் நல்லபடியாக முடிந்தே சிவகாம சுந்தரி சீரடிக்கு நன்றி .

  3. டாக்டர்ஸ் டே ஸ்பெஷல் 2 பதிவு நீண்ட பதிவாக இருந்தாலும் தாங்கள் எழுத்து நடை இந்த பதிவை மெருகூட்டி விட்டது, சாட்சாத் பரமேஸ்வரனே டாக்டர் ரூபத்தில் தங்கள் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்து இருக்கிறார். இவ்வளவு கஷ்டமான பயணத்துக்கு இடையேயு ம் கடவுள் ஒரு நல்ல மனிதரை அறிமுகப் படுத்தி இருக்கிறார்

    இந்த பதிவின் தொடர் பாகத்தை எதிர் பார்க்கிறேன்,

    வரும் தொடரில் டாக்டரைப் பற்றி பல அறிய தகவலை தெரிந்துகொள்ள ஆவல்.

    ஒவ்வொரு படங்களும் அருமை. பரவசமாக

    வாழ்க … வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

  4. உண்மை சுந்தர். காரணங்கள் இன்றி காரியங்கள் நடப்பது இல்லை. இவர் என்னுடைய தாய் வழி மாமா ஆவார்.

    நன்றி,
    வெங்கட்.

  5. வணக்கம் சுந்தர் சார்

    இறைவன் கருணையை கருணை,
    நம்பினோர் இறைவன் கைவிடமாட்டார்

    நன்றி

  6. உண்மைதான் சுந்தர் – காரணமில்லாமல் காரியமில்லை. சோதனையில்லாமல் இறைவனின் அருள் இல்லை.

    மருத்துவர் திரு நடராஜ் அவர்களின் மனிதாபிமானமும் இறை சேவையும் மனித குலத்திற்கு புதிய நம்பிக்கை. அவர் உங்கள் கண்ணில் படவேண்டும் அதன்மூலம் எங்களுக்கு அவரை பற்றி தெரியவேண்டும் என்று இறைவன் நடத்திய நாடகம் போல் இருக்கிறது.

  7. தந்தைக்கு உடல் நலமில்லை
    தில்லை அம்பலத்தானை தரிசித்தே ஆகவேண்டும்
    யாருக்காகவும் எதற்காகவும் காத்திராத காலம் அதன் போக்கில்
    இரவு ரயிலை வேறு சரியான நேரத்தில் பிடித்தாகவேண்டும்
    இவ்வளவு பரபரப்புக்கிடையில் உங்கள் கோரிக்கைக்கு முனுமுனுப்பிர்க்கு அந்த கூத்தன் செவிசாய்த்திருக்கிறார் என்றால் என்னே அவன் செயல்
    உள்ளத்தில் உண்மையான உறுதியான பக்தி இருந்தால் நாம் இறைவனை தேடி போக வேண்டியதில்லை அவரே நம்மை தேடி வருவார் என்பது நிரூபணமாகியுள்ளது
    அந்த சொக்கனுக்கு தெரியும் நம்மை எங்கே எப்போது எங்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ன தரவேண்டும் என்று
    படிக்கும் எங்களுக்கே மனம் சிலிர்க்கிறது என்றால் சுந்தர் ஜி உங்கள் மனநிலையை எங்களால் உணர முடிகிறது
    அந்த அம்பலத்தானின் அருளால் உங்கள் தந்தை விரைவில் பூரண உடல் நலம் பெற பிரார்த்திப்போம்
    அதே போல நீங்கள் வைத்த கோரிக்கையும் விரைவில் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்
    திருசிற்றம்பலம் !!!

  8. வணக்கம்………..இந்த பதிவை படிக்கையில் ஏனோ கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது……… இது இறைவனின் திருவிளையாடல்களில் மற்றுமொன்று………தில்லையம்பலத்தானையும், அம்மையையும் இந்த கண்கள் காணும் நாள் எந்நாளோ?………..

    காரணமின்றி காரியம் இல்லை என்பது நிதர்சனம்……….கைங்கர்யஸ்ரீ நடராஜ் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்……….

  9. ஹலோ சுந்தர் சார்,

    நீங்க கடவுள குழந்தை அப்படின்னு சொல்றீங்க. ஆனா அவன் நமக்கு அம்மா தான்… எதனாலன்னா … நீங்க சாமி கிட்ட வேண்டலை சும்மா முணுமுணுததா தான் சொன்னீங்க… அம்மா தான் நம்மோட எல்லா அசைவுக்கும் சரியாய் அர்த்தம் புரிஞ்சு நமக்கு வேண்டியதை செய்வா… மத்தவங்க எல்லாத்துக்குமே நாம விளக்கனும், புரியவெக்கணும்… அப்பதான் செய்வாங்க தெரியுமா…அதனால அடிச்சாலும் புடிச்சாலும் அம்மா தான் நாமளா எந்த எதிபார்ப்பும் இல்லாம நமக்கு தேவையானதை செய்வா..

    நன்றி
    பிரியா

    1. இறைவனை நண்பனாக பாவித்து செய்வது ஒருவகை. குருவாக பாவித்து பக்தி செய்வது ஒரு வகை. தந்தையாக தாயாக பாவித்து பக்திசெய்வது இதெல்லாம் ஒரு வகை.

      ஆனால், நான் ஏன் குழந்தை என்று சொன்னேன் என்றால்,

      குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
      குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

      ஆம்… இந்த ஒரு குணத்துக்காகவே நான் இறைவனை குழந்தை என்கிறேன். குழந்தைக்கு மட்டுமே இந்த குணம் உண்டு.

      என் பிழைகளை எல்லாம் அவன் நினைவில் வைத்திருந்தால், எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்காது.

      நாம் சுவாசிப்பதனால் உயிர் வாழ்வதில்லை. இறைவன் மன்னிப்பதால் உயிர் வாழ்கிறோம்.

      (நேற்று தொடங்கி இன்று காலை வரை இறைவன் எத்தனை முறை நம்மையெல்லாம் மன்னித்திருக்கிறான் தெரியுமா?)

      – சுந்தர்

      1. ஐ அக்ரீ.

        நீங்க சொன்ன அந்த இரண்டு வரிகளையும் (நாம் சுவசிபதினால் உயிர் வாழ்வதில்லை; இறைவன் மன்னிபதல் உயிர்வழகிறோம்) நான் என் வீட்டில் எழுதி வைத்து கொள்ள போகிறேன்… எவ்வளவு உண்மை…சமயத்தில் உரைபதில்லை… அப்பப்ப படிச்சாவது எனக்கு உபயோகமா இர்ருகும்னு நினைக்கிறன். மனிதனுக்கு மனிதன் எண்ணமும் கண்ணோட்டமும் வேறுபடுகிறது… அப்பதான் எல்ல விஷயதிளையும் உள்ள நல்லது கண்னுக்கு தெரியுது… இத பதிச்சவுடனே எனக்குள்ள ஒரு சின்ன தெளிவு வந்த பீலிங்… நன்றி சுந்தர் சார்.

        பிரியா

      2. once again its me..

        I was bit jealous on seeing the glorious foot of the god…I couldn’t go in person to see my sweetheart…his beautiful foot, nails, and the kolusu and the dhoti he is wearing… gorgeous…beyond bakthi somewhere I don’t know this jealousy feeling too comes when I see the god…I think not if in the same way as I feel, others too may have this thought in a different style isn’t it so….please correct if i am wrong

        priya

        1. ஒரு ஜீவன் மரித்து மேலுலகம் சென்றபின்னர், எமதர்மராஜன் சபையில் நீதி விசாரனை நடக்கும். அப்போது பாபிகளிடம் கடைசி சாய்ஸாக எமதர்மராஜன் கேட்பானாம்… “நீ சிதம்பரம் நடராஜரை தரிசனம் பண்ணியிருக்கியா இல்லே அந்த மண்ணையாவது மிதிச்சிருக்கியான்னு சொல்லு உன்னை நரகத்துலே இருந்து காப்பாத்துறேன்” என்று. சிதம்பரத்தின் மண்ணுக்கே அந்தளவு மகத்துவம் இருக்கிறது.

          எனவே மனிதர்களாக பிறந்தவர்கள் அவசியம் தில்லை சென்று நடராஜரை ஒரு முறையேனும் தரிசிப்பது அவசியம்.

          நீங்கள் நிச்சயம் விரைவில் தில்லை செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்யுங்கள். மற்றதை அவன் நடத்திக்காட்டுவான்.

          நாம் ஒரு அடி இறைவனை நோக்கி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்துவைப்பான்.

          – சுந்தர்

  10. This is certainly a noble incident. How is your dad now? I will pray for your family. God is with us always. We only couldnt see him thro our vision. He is always seeing / guiding all of us. There is a reason for every event. Marvelous explanation. Eager to get blessed by Doctor Natraj. I will surely get his blessing when i visit Chidambaram. Your dad will get well soon. Dont worry, we are all there to help you out. Call me anytime for any help please.

  11. Sundar Sir, I am sorry that your Mum and Dad had to stay in the car, and that after all the trouble your family had undertaken to reach Chidambaram,
    they (your Mum and Dad ) did not have a chance to have the Darshan of Lord Nataraja on that very special day. They must have been very disappointed.
    Lord Nataraja owes your parents an invitation to have a hearty darshan of HIM. He will fulfil His debt towards your parents.
    Meanwhile, please keep us informed about the test results of your Dad. There is another Doctor, Sri Guruvayurappan. Today, I will recite the 100th Dasaka of Narayaneeyam for your Dad’s health.
    Regards
    Shakunthala

  12. தங்கள் தந்தையின் சுகவீனத்தின் முலம், தில்லை நடராஜன், தன்னுடைய பெயரையே கொண்ட ஒரு மருத்துவரை அறிமுகபடுத்தி, அவர் முலம், மேலும் பல அரிய நிகழ்வுகளை நமது தளத்திற்கு தெரியபடுத்த வேண்டி, நடத்திய நாடகமோ என்று நினைக்க தோன்றுகிறது.

    ஆம். காரணங்கள் இல்லாமல் எந்த காரியமும் இல்லை.

    தங்கள் தந்தையார் பூரண நலமடையவும், தங்களின் பிரதான வேண்டுகோள் வெகு விரைவில் நிறைவேறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  13. காரணங்களின்றி காரியம் நடப்பதில்லை – சாதாரணமான வரிகள் அல்ல..அசாதாரமான உண்மையை புலப்படுத்திய தலைப்பு.

    படிக்க படிக்க..கண்ணில் நீர்த்துளி எட்டி பார்க்கிறது..இந்த நாடகம் ஏன் நடக்கிறது? என்பது பதிவை முழுதும் படித்த பின்பு தான் புரிந்தது.

    இறைஅடியாரை நமக்கு அறிமுகபடுத்த அவன் அருளாலே..அவன் தாள் வணங்கி…

    இனித்த முடைய எடுத்த பொற்பாதத்தை வணங்குகிறேன் …

    தொடர் பதிவில் நடந்த நிகழ்வுகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்..இந்த பதிவின் பின்னூட்டம் ஏகப்பட்ட செய்திகளை சொன்னது..(தில்லையின் சிறப்பு,இறை தன்மை என..)
    அனைவருக்கும் நன்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *