பிறந்தநாளின் முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் நான் அளித்த பதிவுகளில் கூறப்பட்டிருந்தது எனக்கு முன்பே தெரியுமென்றாலும் ஒரு பதிவாக அதை அளித்து “இதை செய்யுங்கள்… இதை செய்யாதீர்கள்!” என்று உங்களுக்கு சொன்ன பிறகு அதில் கூறிய சிலவற்றையாவது நான் செய்யவில்லை என்றால் எப்படி ?
எனவே என் பிறந்த நாளன்று சில எளிய விஷயங்களை ஏற்பாடு செய்திருந்தேன். அதில் முக்கியமானது கணபதி ஹோமம் மற்றும் ஆயுஷ் ஹோமம். கணபதி ஹோமம் வீட்டில் அடிக்கடி செய்வது நல்லது. சுபகாரியத் தடைகள் விலகும், துர்தேவதைகள் ஏதேனும் வீட்டில் இருந்தால் ஓட்டம் பிடிக்கும். ஆயுஷ் ஹோமம் நோயற்ற வாழ்வையும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரவல்லது. பிறந்தநாளன்று ஆயுஷ் ஹோமம் செய்யும் வழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று தான் ஆயுஷ் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்தேன்.
திங்கள் இரவு பிறந்த நாள் தொடர்பான பதிவை தயார் செய்து காலை அது தானே PUBLISH ஆகுமாறு அதை AUTO SCHEDULE வைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டேன். நான் உறங்கச் சென்ற போது மணி நள்ளிரவு 12.00 தாண்டியிருந்தது. (என் பிறந்த நாளான 26 ஆம் தேதி பிறந்துவிட்டது).
காலை 5.30 க்கு ஹோமம் மற்றும் பூஜை துவங்கிவிடும் என்பதால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் வைத்து படுத்துவிட்டேன்.
காலை எழுந்தவுடன் அப்பா அம்மாவை பார்த்துவிட்டு, பிறகு சுவாமி படத்தை பார்த்துவிட்டு தான் குளிப்பதற்கு தயாரானேன்.
ஹோமத்திற்கு தேவையான மோதகம் உள்ளிட்ட நிவேதனப் பொருட்கள், சாஸ்திரிகள் சாப்பிட டிஃபன் உள்ளிட்டவைகளை தயார் செய்ய வேண்டும் என்பதால் அப்பா அம்மா எனக்கு முன்பே – காலை 3.00 க்கெல்லாம் – எழுந்துவிட்டார்கள். இந்த ஏற்பாடுகளினால் அவர்களுக்கு தான் சற்று சிரமம்.
நான் குளித்துவிட்டு தயாராகிக்கொண்டிருக்கும்போதே 5.00 மணிக்கெல்லாம் புரோகிதர்கள் வந்துவிட்டனர்.
அவர்களை வரவேற்று அமர வைத்தேன். அவர்கள் கூறிய லிஸ்ட் படி வாங்கி வைத்திருந்த சாமான்களை கொண்டு ஹோமத்திற்க்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது அவர்களுடன் சற்று பேசிக்கொண்டிருந்தேன். நம்மை பற்றி விசாரித்தார்கள். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மகா பெரியவாவின் பக்தகோடிகளில் ஒருவனாக இருக்கும் பாக்கியம் பெற்றதையும் அவர்களிடம் சொன்னேன்.
அவர்கள் கலசம் தயார் செய்வது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடிக்க தொடர்ந்து 5.30 க்கெல்லாம் ஹோமம் துவங்கிவிட்டது. மகா பெரியவாவின் சிறிய படம் ஒன்று பூஜையறையில் உள்ளது. அதை கொண்டு வந்து எதிரே கண்ணில்படுவது போல வைத்துகொள்ளலாம் என்று நினைத்து அப்பா, அம்மாவிடம் மேற்படி படத்தை கொண்டு வருமாறு கேட்டுகொண்டேன்.
ஆனால் அடுத்த நொடியே எதிரே “இதோ மகா பெரியவாவே வந்துட்டார் பாருங்க…” என்று எதிரே டி.வி.யை காட்டினார் புரோகிதர்களில் ஒருவர்.
அங்கு சங்கரா டி.வி.யில் மகா பெரியவாவை பற்றி ஒரு நிகழ்ச்சி துவங்கி (சன்னமான ஒலியில்) ஓடிக்கொண்டிருந்தது. காலை மங்களகரமான பாடல்கள் ஒலிக்கட்டுமே என்று அப்பா, சங்கரா டி.வி.யை வைத்திருந்தார் போல..
என்னை பொறுத்தவரை பிறந்தநாளன்று சரியாக எனக்கு ஆசி கூற சாட்சாத் மகா பெரியவாவே வந்துவிட்டதாகவே எனக்கு தோன்றியது. “குருவே சரணம்…” என்று இரு கைகளையும் கூப்பி வணங்கினேன். (கேமிராவை அருகே இருந்த ஸ்லாட்டில் தான் சார்ஜ் போட்டிருந்தபடியால் டக்கென்று எடுத்து போட்டோ எடுக்க சௌகரியமாய் இருந்தது.)
ஹோமத்திற்கு குருவின் ஆசி கிடைத்ததையடுத்து மனம் சற்று அமைதியடைந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கணபதி ஹோமமும், ஆயுஷ் ஹோமமும் நடைபெற்றது.
பூர்ணாஹூதி முடிந்து, உபாத்தியார்களுக்கு தக்ஷனை கொடுத்து அவர்களிடம் ஆசிபெற்று, பின் அப்பா அம்மா, பெரியவர்கள் என அனைவரிடமும் ஆசி பெற்றேன்.
புரோகிதர்களையும் அவர்களுடன் வந்திருந்த டிரைவர்களையும் சிற்றுண்டி சாப்பிடச் செய்துவிட்டு பிறகு நான் சாப்பிட்டேன்.
இன்று புத்தாடை ஏதேனும் உடுத்தினால் நலம் என்பதால் ஒரே ஒரு சட்டை புதிதாக எடுத்துவைத்திருந்தேன். அதை அப்பா, அம்மா கையால் குங்குமம் வைத்து வாங்கி போட்டுக்கொண்டேன்.
கிடைத்த கொஞ்ச நேரத்தில் கணினி முன்பாக அமர்ந்தேன். உங்களுக்காக மதியம் படிக்க சிறிய பதிவு எதையாவது தயார் செய்ய முடியுமா என்று பார்த்தேன்… ஹூம்..ஹூம்… கணினி முன்பாக தொடர்ந்து அமரவே முடியவில்லை. நண்பர்கள் சிலர் அலைபேசியில் தொடர்புகொண்டு நமக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியபடி இருந்தனர். பலர் ஹோமம் எப்படி சென்றது என்பது குறித்து ஆவலாக விசாரித்தார்கள். அவர்களிடம் பேசி அவர்களது வாழ்த்துக்களை ஏற்று, நன்றி கூறினேன்.
(இன்று ஒருவேளை வீட்டில் ஆயுஷ் ஹோமம் ஏற்பாடு செய்யவில்லை என்றால் காலை நிச்சயம் பேரம்பாக்கம் சென்று நரசிம்மரை தரிசித்துவிட்டு வந்திருப்பேன். வாழ்வளித்த வள்ளலை மறக்கமுடியுமா? ஆனால் ஹோமம் முடிக்கவே 8.30 ஆகிவிட்டதால் பேரம்பாக்கம் செல்ல முடியவில்லை!)
முன்னதாக ஞாயிறு வடலூர் சென்றபோது நாம் பார்வையிட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு காலை சிறப்பு உணவு ஏற்பாடு செய்திருந்தோம். எனவே அது பற்றி அவர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். குழந்தைகள், மற்றும் முதியவர்கள் அனைவரும் சாப்பிட்டதாகவும், நமக்காக பிரார்த்தனை செய்ததாகவும் சொன்னார்கள். மனம் சற்று நிறைவடைந்தது.
முந்தைய தினம் குன்றத்தூர் முருகன் கோவிலில் ரகு குருக்கள் அவர்களிடம் நம் பிறந்தநாளை பற்றி சொல்லி, முருகனுக்கு ஏதேனும் செய்ய விரும்புவதாக சொன்னேன். பிறந்த நாள் என்றதும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தவர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யுங்கள் போதும் என்றார்.
அவர் கூறியபடி பாலபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தேன். காலை அபிஷேகம் காண வந்துவிடுமாறு கூறினார்.
“இல்லே… சுவாமி கஷ்டம். வீட்ல கணபதி ஹோமத்துக்கும் ஆயுஷ் ஹோமத்திற்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நான் ஹோமத்துல இருக்கணும்”
“ஒன்னும் பிரச்னையில்லே… நான் பால் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுத்துடுறேன்… நீங்க ஹோமமெல்லாம் முடிச்சிட்டு 10.30 மணிக்கு மேலே வாங்க போதும். அர்ச்சனை பண்ணிட்டு முருகனை தரிசனம் பண்ணலாம்” என்றார்.
இங்கு வேலைகளை முடித்துவிட்டு குன்றத்தூருக்கு கிளம்பினேன்.
அடிவாரத்தில் அர்ச்சனை பொருட்களை வாங்கி வைத்திருந்தேன். முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் என்பதாலோ என்னமோ கோவிலில் நல்ல கூட்டம்.
உள்ளே நுழையும் இடத்தில் உற்சவரை வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமியை அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். கண்குளிர தரிசித்தாலும், உங்கள் ஞாபகம் வந்தது. உடனே…. அலுவலகத்திற்கு ஓடிச் சென்று நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று அதை புகைப்படமெடுத்தேன். அந்த புகைப்படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது.
மூலஸ்தானத்தில் ரகு ஐயர் நம்மை பார்த்ததும் வரவேற்று வாழ்த்துக் கூறினார். அர்ச்சனை செய்து முருகனை அருகே நின்று கண்குளிர தரிசித்தேன்.
“ஐயனே… பிறந்தநாள் என்றால் என்ன? அதன் மகத்துவம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். இந்த எளியவனை நீ தடுத்தாட்கொண்டு ரட்சித்த காரணத்தினாலேயே இன்று உன்னை இங்கு தரிசிக்கிறேன்!”
வேறு என்ன அவனிடம் கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. “என் தேவையை உன்னைப்போல தெய்வமே அறியும் முருகா… மற்றபடி எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக ஆரோக்கியமாக மன நிம்மதியுடன் இருக்கவேண்டும்!!” என்று பிரார்த்தித்தேன்.
மனம் ‘திருவருள்’ படத்தில் வரும் கவியரசு கண்ணதாசன் எழுதி குன்னக்கடி இசையமைத்த கீழ்கண்ட பாடலை அசை போட்டது.
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன்)
மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!
ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)
பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!
நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா
அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!
மேற்படி பாடலில் உள்ள கருத்தே நம் கருத்து என்பதை நம் பதிவுகளை இதுவரை தவறாமல் படித்து வருபவர்களுக்கு புரியும்.
கிளம்பும்போது அர்ச்சனை பையை கையில் தந்து முருகனின் திருமேனியை தழுவிய மாலை ஒன்றை நம் கழுத்தில் அணிவித்தார்.
பிறந்தநாளன்று ஒருவருக்கு இதைவிட பெரிய பாக்கியம் வேண்டுமா என்ன?
பிரகாரத்தை வலம் வந்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், வெளியே வந்து ரகு குருக்கள்… “கொஞ்சம் வெயிட் பண்ணமுடியுமா? 12.00 மணிக்கு அன்ன தானம் நடக்குது. இன்னைக்கு வடை, பாயசத்தோட ஒருத்தர் சுமார் 200 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கிறார். நீங்க இருந்து அதை பண்ணிட்டு போகலாமே…?”
“நன்றி சுவாமி…ஆனால் வேறு ஒருத்தர் செலவு செய்து வழங்கும் அன்னதானத்தை நான் எப்படி செய்வது?” என்றேன் சற்று தயக்கத்துடன்.
“சார்… அப்படியில்லே… நீங்க இருந்து சர்வீஸ் பண்ணுங்க போதும். பரிமாறதுக்கு இங்கே போதுமான ஆள் இல்லே… அதுவும் இன்னைக்கு விசேஷ அன்னதானம் என்பதால் ஐட்டங்கள் கூட இருக்கும். ரெகுலரா இருக்குற ஆளுங்க சர்வீஸ் பத்தாது. நீங்கள் இருந்தீங்கன்னா கூட மாட இருந்து பக்தர்களுக்கு பரிமாறலாம்.. அதான் சொன்னேன” என்றார்.
இதற்கு மேல் நாம் மறுக்க முடியுமா?
“எத்தனை மணிக்கு சரியா ஆரம்பிப்பீங்க… ஏன்னா நான் 2.00 மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும். இன்னைக்கு அரை நாள் தான் லீவ் போட்டிருக்கேன்” என்றேன்.
“12.00 மணிக்கு ஆரம்பிச்சா 1.00 மணிக்கு முடிச்சிடலாம்” என்றார்.
“ஓ.கே. DONE. இதை முருகனோட கட்டளையாவே ஏத்துக்குறேன்…” என்று கூறிவிட்டு பையை கோவில் அலுவலகம் முன்பு பாதுகாப்பாக வைத்துவிட்டு அன்னதான ஏற்பாடுகளில் மூழ்கினேன்.
சற்று நேரத்திற்க்கெல்லாம் வேனில் சாப்பாடு வந்து இறங்கிவிட்டது.
தொடர்ந்து ஏற்கனவே அன்னதானத்திற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
ஒரு பந்திக்கு சுமார் 60-65 பேர் வீதம் உட்கார்ந்தார்கள்.
இலை போடுவதும், இனிப்பு (கேசரி) வைப்பது, அன்னம் போடுவது உள்ளிட்டவைகளை நான் பார்த்துக்கொண்டேன். கோவில் பணியாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது சவாலாக இருந்தது.
கோவிலில் அன்னதானம் செய்வது எனக்கு சற்று வித்தியாசமான அனுபவம் தான். (கடந்த சிவராத்திரியின்போது திருவேற்காடு கோவிலில் நம் தளம் சார்பாக சுண்டல் வழங்கியதுண்டு!).
மேற்படி அன்னதானத்தை வேறு ஒருவர் ஸ்பான்சர் செய்திருந்தாலும் அதை என் கைகளால் அதுவும் என் பிறந்தநாளன்று அதுவும் முருகப் பெருமானின் கோவிலில் பரிமாறும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை என்னவென்று சொல்வேன்?
ஏதோ நானே அன்னதானம் செய்வது போன்று இருந்தது. ஓடியாடி பக்தர்களுக்கு சர்வீஸ் செய்து அவர்கள் கேட்பதை போட்டு பரிமாறி…. அந்த ஒரு மணிநேரமும் எனக்கிருந்த அந்த மனநிறைவு மகிழ்ச்சி… வார்த்தைகளால் வடிக்க முடியாது.
பக்தர்கள் சாப்பிட்ட இலையை எடுக்க விரும்பி அந்த பணியை நானே ஏற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பந்தி முடியும்போதும் நானே முன்னின்று இலைகளை எடுத்து கூடையில் போட்டேன். எனக்கு உதவியாக கோவிலில் கூட்டிப் பெருக்கும் ஒரு அம்மா கூடையை கூடவே எடுத்துவந்தார்கள்.
=================================================================
கடைசி பந்தி போஜனத்தின் சிறப்பு!
எல்லாரும் சாப்பிட்ட பின்பு கடைசி பந்தியில் சாப்பிடுகிறார்கள் தெரியுமா அது மிக மிக புண்ணியம் தரவல்லது. கடைசி பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதற்கு முன்பு சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்ட புண்ணியம் கிடைக்கும்.
கடைசி பந்தியில் சாப்பிடும்போது பெரும்பாலும் பல பதார்த்தங்கள் தீர்ந்திருக்கும். கைங்கரியம் செய்பவர்களும், பந்தியில் பரிமாறுபவர்களும் தான் கடைசி பந்தியில் சாப்பிடுவார்கள். அவர்கள் விட்டுக்கொடுப்பதால் தான் பலர் சாப்பிட முடிகிறது என்பதால் கடைசி பந்தி போஜனம் மிகவும் உயர்வாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அதே போல… சாப்பிட்ட இலையை எடுப்பது இவை எல்லாவற்றையும் விட புண்ணியம் தரக்கூடியது. கடைசி பந்தியில் சாப்பிட்டவர்கள் உட்பட அந்த போஜனத்தில் சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் அன்னமிட்ட புண்ணியம் சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு கிடைக்கும்.
=================================================================
நான் இதை செய்தது புண்ணியம் கருதி அல்ல. என் கடமை அது. (சாப்பிட்ட இலையை எடுக்கும் கைங்கரியத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் செய்து வருவதுண்டு. நம்முடன் உழவாரப்பணிக்கு வருபவர்கள் இதை அறிவார்கள்.)
அவன் பக்தர்கள் எல்லோருக்கும் நான் எப்போதும் ஒரு தொண்டன் என்பதை நான் என்றும் நினைவல் கொள்ளவே இதை செய்து வருகிறேன். மேலும், இது போன்ற செயல்களை செய்யும்போது அகங்காரம் என்பது அணுவளவும் நம் மண்டைக்குள் ஏறாது.
நாளை வாழ்வின் எந்த நிலைக்கு நான் உயர்ந்தாலும் பக்தர்களுக்கு அன்னம் பரிமாறிவிட்டு, அவர்கள் சாப்பிட்ட இலையை எடுக்க முதல் ஆளாக முன்னே நிற்பேன்!
இரண்டு பந்திகள் முடிந்தவுடன் கடைசி பந்தி துவங்கியது. எனக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. நாம் பசியுடன் இருப்பதை எப்படி உணர்ந்துகொண்டாரோ ரகு குருக்கள் நம்மையும் பந்தியில் சேர்ந்து சாப்பிடுமாறு கூற, “நீங்கள் என்னுடன் சாப்பிடுவதாக இருந்தால் நான் சாப்பிடுகிறேன்” என்றேன்.
“நிச்சயம்… வாங்க ஒன்னாவே சாப்பிடுவோம்” என்று அவர் கூற எனக்கு ஒரே சந்தோஷம். இருவரும் அருகருகே உட்கார்ந்தோம். கோவில் மடப்பள்ளி ஊழியர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியுடன் பரிமாறினார்.
நான் பரிமாறிய அறுசுவை உணவு எங்களுக்கு பரிமாறப்பட்டது. ஏற்கனவே சரியான பசியில் இருந்த எனக்கு அது தேவார்மிதம் போல இருந்தது. இப்படி ஒரு விருந்தை இதுவரை சாப்பிட்டதேயில்லை என்னுமளவிற்கு போஜனம் அத்தனை பிரமாதம்.
கேசரி, பாயசம், பூப்போன்ற சாதம், கோஸ் பொரியல், உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என அனைத்து ஐட்டங்களும் பிரமாதம்.
“சுந்தர் சார்… உங்க பிறந்தநாளுக்கு நீங்களே அன்னதானம் பண்ணினது போல ஆச்சு…!” என்றார் ரகு குருக்கள்.
“சுவாமி…முருகனுக்கு இன்னைக்கு அர்ச்சனை பண்ணனும் என்று தான் நினைத்து நான் வந்தேன். ஆனால், இப்படி ஒரு விருந்தை பக்தர்களுக்கும் பரிமாறி நானும் சாப்பிடும் பாக்கியமும் என் பிறந்தநாளான இன்று கிடைத்ததை என்னெவென்று சொல்ல…?” என்று நா தழுதழுத்தபடி கூறினேன்.
பதிலுக்கு அவர் கோவில் கோபுரத்தை காட்டி… “எல்லாம் அவன் செயல்…!”‘ என்றார்.
அவர் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனெனில் எதுவுமே நானோ அவரோ திட்டமிட்டு செய்யவில்லை.
அவன் ஒன்றை நினைக்கும்போது அது நடக்காமல் இருக்குமா?
கூட இருந்து பரிமாறியதில் கோவில் ஊழியர்கள் அனைவரும் நமக்கு நல்ல பரிச்சயமாகிவிட்டனர். நம் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் மேலும் சில பெரிய இடத்து உறவினர்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
ரகு ஐயரிடம் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டு கோவிலின் முன்பாக உள்ள கொடிமரத்திற்கு முன்னே விழுந்து நமஸ்கரித்தேன்…!
“அன்னதானப் பிரபுவே…. இந்த எளியவனின் பிறந்தநாளன்று அடியேனுக்கு உன் பக்தர்களுக்கு உணவை பரிமாறும் பாக்கியத்தை தந்ததோடல்லாமல் எனக்கு மாலையிட்டு வயிறு நிறைய, மனம் குளிர விருந்திட்ட உன் கருணையை என்னவென்று சொல்வேன்…? இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்…?”
என் கடன் பனி செய்து கிடப்பதே…
உன் கடன் என்னை என்றும் காப்பதே…!
===================================================
மாலை நிலாச்சாரலில் உள்ள பார்வையற்ற மாணவிகளுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தேன். நீங்கள் அவசியம் வந்திருந்து அவர்களுடன் டின்னரை சாப்பிடவேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாலை அலுவலகம் முடிந்தவுடன் நிலாச்சாரல் பயணம்….
அங்கே… நடைபெற்ற நெஞ்சை நெகிழவைக்கும் அனுபவங்கள்… அடுத்த பதிவில்….
very interesting.
எல்லாம் அவன் செயல் என்பது இதுதான் சார் அந்த முருகனே உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறர்ர் பாருங்கள் இப்படி எல்லோருக்கும் கிடைக்காது அதுவும் அவன் திட்டப்படிதான் நடக்கும் எல்லாம் சிவ மயம் அவன் செய்யும் மாயம் ! வாழ்க வளமுடன்!
இறைவனிடம் நான் பல ஆண்டுகளாக வேண்டிக்கொண்டது – எனக்கு சத்சங்கம் வேண்டும் மன அமைதி வேண்டும். அதற்கு காரணம் நல்லவர்களின் நட்பும் அவர்களது துணையும் ஆசியும் என்னை நல்வழியில் நடத்திச்செல்லும் என்பதால்தான். பல காலமாக நான் வேண்டிக்கொண்டது வீண்போகவில்லை. சுந்தரின் நட்பு மூலம் ரைட்மந்த்ரா தளத்தின் தன்னலமற்ற வாசகர்கள் மூலமும் சத்சங்கம் என் வாழ்வில் அமையப்பெற்றது. சுந்தரின் பிறந்த நாள் பதிவே இதற்கு சாட்சி.
நன்றி சுந்தர்
டியர் சுந்தர்ஜி
உங்களுக்கு உங்களின் பிறந்த நாளின் பொழுது முருகன் உங்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும், அன்ன தான உணவையும் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணியிருக்கிறார். நீங்கள் மிகவும் பாக்கியசாலி. நீங்கள் மேலும் மேலும் முன்னேற இறைவன் அனுக்ரஹம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
‘மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்ற கண்ணதாசனின் வைர வரிகளுக்கு ஏற்ப குன்றத்தூர் முருகன் உங்களுக்கு மாலை அணிவித்து இருக்கிறார்.
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
உங்கள் பதிவு மிக அருமை.
நன்றி
உமா
மகா பெரியவரின் ஆசிர்வாதத்துடனும், குன்றத்தூர் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமியின் தரிசனத்துடனும் துவங்கிய உங்கள் பிறந்தநாள், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு, உங்கள் மனம் குளிரும்வகையில் உங்கள் எண்ணங்களிலும்,செயல்களிலும் வெற்றிகள் குவியும்
உங்கள் பதிவை பார்த்ததும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உண்மை சொல்லவேண்டும் என்றால் அணைத்து கடவுளின் அருள்
உங்களுக்கு இருக்கிறது. மேலும் பிறந்த நாள் அன்று நாம் என்ன செய்ய வேண்டும் எனறு உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். பிறந்த நாள் அன்று ஆயுஷ் ஹோமம், அன்னதானம் செய்வது போன்ற நல்ல காரியம் செய்ய வேண்டும் எனறு தெரிந்து கொண்டோம்
சுந்தர்ஜி
நல்லோரை காண்பதுவும் நன்று. நல்லோர் சொல் கேட்பதுவும் நன்று என்பதற்கேற்ப நல்ல செய்திகள் உங்களிடம் கேட்டோம். குருவருளோடும் இறையருளோடும் உங்கள் முதல் பிறந்த நாள்(!) இனிதாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. அனைவரும் இனி முறையாக பிறந்த நாள் கொண்டாட உங்கள் பதிவு வழிகாட்டும்.
நன்றி.
வணக்கம் சுந்தர் சார்
வார்த்தைகளால் விவரிக்க முடியல சார்..
தங்கள் பதிவு மிக மிக மிக அருமை.
நன்றி
உங்களின் முதல் பிறந்த நாள் விழா எப்படி நடைபெற்றது என்பதை பற்றி பதிவு போட்டு இருக்கீங்க. அந்த நாள் முழுதும் உங்களுடன் இருந்த உணர்வு வருகிறது.
குன்றத்தூர் முருகனும் அந்த மலையும் வானும் உங்களுக்கு வாழ்த்துக்களையும் சந்தோசங்களையும் கொடுத்துள்ளது.
குருவருளும் திருவருளும் ஒருங்கே அமையபெற்ற உங்களுக்கு எல்லாமே நல்லதாகத்தான் நடக்கும்.
சுந்தர் மிகவும் அருமையான பதிவு.