Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > தெய்வானாம் மானுஷ ரூபாம் – (உண்மைச் சம்பவம்) – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

தெய்வானாம் மானுஷ ரூபாம் – (உண்மைச் சம்பவம்) – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

print
வ்வொரு மதத்திலும் அதை பின்பற்றுகிறவர்கள் “தங்கள் மதம் தான் உயர்ந்தது” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர். தங்கள் மதத்திற்கு பெருமை தேடித் தர முயற்சிக்கின்றனர். அப்படி பெருமை தேடும் முயற்சியில் அவர்கள் எதை செய்துவிட்டு பெருமை தேடுகின்றனர் என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.

கீழ்கண்ட உண்மை சம்பவத்தை படியுங்கள்.

ஒவ்வொரு மதத்தினரும் இது போன்ற விஷயங்களில் போட்டியிட்டால் இந்த உலகம் முழுக்க அன்பும், அமைதியும், சமாதானம் தவழும் என்பதில் ஐயமில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பையும், சமாதானத்தையும் தான்.

இந்தப் பதிவை நாம் ஏற்கனவே அளித்திருந்தாலும், தளத்தின் துவக்க காலத்தில் அளித்திருந்தபடியால் எத்தனை பேரை சென்றடைந்திருக்கும் என்று தெரியாது. தற்போது மீண்டும் அளிக்கிறேன்.

கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இந்த பதிவை அர்பணிக்கிறேன். அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

நன்றி…!

– சுந்தர்,
www.rightmantra.com

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

து நடந்து ஒரு ரெண்டு மூணு வருஷம் இருக்கும். என் வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் இது.

அது ஒரு விடுமுறை நாள். மணி இரவு 8.00 pm இருக்கும். நுங்கம்பாக்கத்தில் ஒரு வேலையை முடித்துவிட்டு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியே பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். வள்ளுவர் கோட்டமெல்லாம் தாண்டிய பிறகு, கோடம்பாக்கம் பிரிட்ஜில் சென்று கொண்டிருந்தேன்.

விடுமுறை நாளில் கூட ஓரளவு பரபரப்புடனேயே இருந்தது கோடம்பாக்கம் பாலம். (லீவ் நாளிலேயே இப்படின்னா மத்த நாளில் கேட்கவே வேண்டாம்). பாலத்தில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். சரியாக பாலத்தின் மையத்துக்கு சற்று முன்பாக, போக்குவரத்து சற்று மெதுவாக சென்றது தெரிந்தது.

கார் எதாச்சும் பிரேக் டவுனா இருக்குமோ… என்று பார்த்துகொண்டே முன்னே சென்றேன். (அங்கே அடிக்கடி பஸ் ஏதாவது பிரேக் டவுனாகும்) சரியாக பாலத்தின் நடுப்பகுதிக்கு சற்று முன்னர் சென்றபோது தான் காரணம் புரிந்தது.

அங்கே கண்ட காட்சி… சோன்பப்டி விற்கும் வண்டி ஒன்று இடது புற ஓரம் நின்றுகொண்டிருக்க, சோன்பப்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த பெரிய ஜார் கீழே சாலையில் விழுந்து நொறுங்கிப் போயிருந்தது. சாலையில் நடுப்பகுதி வரை சோன்பப்டி சிதறிக்கிடந்தது. வண்டிக்கார சிறுவன், வயது சுமார் 12 முதல் 15 இருக்கும்… கீழே ஓரமாக உட்கார்ந்து சிதறிக்கிடந்த சோன்பப்டியை சோகத்துடன் அள்ளிக் கொண்டிருந்தான். யாரும் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. வாகனங்கள் அது பாட்டுக்கு போய்கொண்டிருந்தன.

 

எனக்கு இந்த காட்சியை பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என யூகித்துவிட்டேன். சிறுவனை தாண்டி, என் பைக்கை சடாரென்று லெப்ட் இண்டிகேட்டர் போட்டு  நிறுத்திவிட்டு அவனுக்கு உதவுவதற்கு ஓடிவந்தேன்.

குத்துக்காலிட்டு அமர்ந்து, அவன் அள்ளிப்போட உதவிக்கொண்டே, “என்னப்பா ஆச்சு?” என்றேன்.

அவனுக்கு சிறிது நேரம் பேச வார்த்தைகளே வரவில்லை. அவன் பதிலுக்கு காத்திராமல், கொட்டி கிடக்கும் சோன்பப்டியை கைகளில் ஜாக்கிரதையாக அள்ளி, பாதி உடைந்த அந்த ஜாரில் போட்டுக் கொண்டிருந்தேன்.

“டூ-வீலர்ல போன ஒருத்தன் இடிச்சி தள்ளிட்டு போயிட்டான்னா. நிக்க கூட இல்லே.” கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொண்டே சொல்ல… எனக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

“இறைவா…யாரோ ஒருவருடைய தவறினால் இந்த ஏழையின் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதே. இனி நீ தான் இவனை காப்பாற்றவேண்டும்” ஒரு கணம் என் உள்ளம் பதறியது.

என்னுடன் சேர்ந்து சோன்பப்டியை அவனும் அள்ளி போட்டான். ரெண்டு மூன்று முறை அள்ளியிருப்போம்… “வேண்டாம்னா விட்டுடுங்க.. இதை இனிமே விக்க முடியாது. வேஸ்ட் தான். கிளாஸ் பீஸ் இதுல மிக்ஸாகியிருக்கும்” என்றான் தழுதழுத்த குரலில். பின்னர், கீழே எஞ்சியிருந்தவற்றை கைகளால் ரோட்டின் ஓரம் தள்ளிவிட ஆரம்பித்தான். பின்னர் என்ன நினைத்தானோ எழுந்து நின்றபடி கால்களால் தள்ளிவிட ஆரம்பித்தான்.

எனக்கு என்னவோபோலாகிவிட்டது.

“வண்டி நம்பர் எதாச்சும் நோட் பண்ணியா என்றேன்?” என்றேன் அவனைப் பார்த்து.

“திரும்பிப் பார்த்துட்டு அவன் ஸ்பீடா போயிட்டான்னா…ஒரு செகண்ட் கூட நிக்கலே.” நீரை துடைத்துக்கொண்டே சொல்ல…

[pulledquote]“அடப்பாவிகளா.. இடிச்சதே தப்பு. அதுலயும் நிக்காம போறது எவ்ளோ பெரிய தப்பு… பாவிங்களா…” என்று குமுறினேன். எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. யாரோ ஒரு முட்டாளுடைய அஜாக்கிரதை மற்றும் ராஷ் டிரைவிங்கினால் இங்கே ஒருவனுடைய வாழ்க்கையே தொலைந்து விட்டதே…[/pulledquote]

“அடப்பாவிகளா.. இடிச்சதே தப்பு. அதுலயும் நிக்காம போறது எவ்ளோ பெரிய தப்பு… பாவிங்களா…” என்று குமுறினேன். எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. யாரோ ஒரு முட்டாளுடைய அஜாக்கிரதை மற்றும் ராஷ் டிரைவிங்கினால் இங்கே ஒருவனுடைய வாழ்க்கையே தொலைந்து விட்டதே…

என் கையில இருக்கும் பணத்தை ஏதாவது கொஞ்சம் அவனுக்கு கொடுத்த உதவியா இருக்குமே என்ற யோசனையில்…”சொந்த வண்டியா? எவ்ளோ சரக்கு இருந்தது பாட்டில்ல?” என்றேன்.

“இல்லேன்னா… கமிஷனுக்கு விக்கிறேன். ஓனருக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலே….” என்றான். நான் கைகளால் தள்ளிக்கொண்டே அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் கைகளால் தள்ளுவதை பார்த்து கால்களை விட்டு அவனும் கைகளால் தள்ள ஆரம்பித்தான்.

சோன்பப்டியை இவ்வாறு ஒரு ஓரமாக நாங்கள் தள்ளிக்கொண்டே உரையாடிக்கொண்டிருக்க எங்களை கடந்து சென்ற ஒரு சிலர் உடைந்த ஜார் மற்றும் கீழே சிதறிக் கிடக்கும் சோன்பப்டியை பார்த்து உச்சு கொட்டியபடி சென்றனர்.

அப்போது டூ-வீலரில் எங்களை கடந்து சென்ற இருவர், இந்த காட்சியை பார்த்துவிட்டு, சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி எங்களிடம் ஓடி வந்தனர்.

“என்னாச்சு சார்?” என்றனர் என்னை பார்த்து. ஆர்வத்தை விட அக்கறை அவர்கள் கண்களில் தெரிந்தது.

எவனோ ஒரு முட்டாள் இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட கதையை சொன்னேன்.

“ஒ… ரியல்லி SAD…” இருவரும் உச்சுக்கொட்டினர்.

நாம் இந்த சிறுவனுக்கு கொடுப்பதாக நினைத்த தொகையை இவர்கள் எதிரில் கொடுத்தால் அவர்களும் தங்கள் பங்கிற்கு ஏதாவது தர முன்வருவார்கள். இவன் நஷ்டம் ஓரளவாவது குறையும் என்ற எண்ணத்தில், என் பர்ஸை எடுத்து அதில் இருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுக்க எத்தனிக்க, இருவரும் என் கையை பற்றி தடுத்தனர்.

“நோ… நோ… ப்ரதர்… WE WILL GIVE…. நாங்க கொடுக்குறோம்” என்று கூறியபடி, “தம்பி உனக்கு எவ்ளோ வேணும்?” என்று அந்த சிறுவனை பார்த்து அவர்கள் உரிமையுடன் கேட்க… அவனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.

“சரக்கோட மதிப்பு + பாட்டிலோட மதிப்பு எவ்ளோ இருக்கும் சொல்லு… சார் ஏதாவது தருவார்… நானும் தர்றேன்” என்றேன் நான்.

“ரெண்டும் சேர்த்து எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாய் இருக்கும்” என்றான் அவன்.

உடனே அந்த இருவரில் ஒருவர், தன் பர்ஸை எடுத்து, இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை உருவி, அந்த சிறுவனிடம் கொடுக்க… அவன் நெகிழ்ச்சியில் செய்வதறியாது ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கோ, அவங்க ஏதோ எனக்கே பணம் கொடுத்த மாதிரி அப்படி ஒரு சந்தோஷம். காரணம்… தொலைந்து போன அந்த சிறுவனின் வாழ்க்கை மறுபடியும் கிடைத்துவிட்டதே….

அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டு.. “தேங்க் யூ வெரி  மச் சார்… தேங்க் யூ வெரி  மச் சார்… இந்த உதவி… அதுவும் இவ்ளோ  பெரிய அமௌன்ட் சான்சே இல்லே.. GOD BLESS YOU GENTLEMEN” என்றேன்.

அவர்கள், மெலிதாக புன்னகைத்துகொண்டே… “WE ARE CHRISTIANS” என்றனர்.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. மனிதாபிமானத்திற்கு மதம் கிடையாது, அது மதங்களை கடந்தது என்பதால்… “HUMANITY HAS NO RELIGION SIR” என்றேன் பதிலுக்கு.

சிரித்துக்கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்து அந்த சிறுவனிடம் நன்றியை கூட எதிர்பார்க்காது பறந்தேவிட்டார்கள் இருவரும்.

மதங்களின் பெயரால் சண்டை சச்சரவுகளும் கலவரங்களும் பெருகி வரும் இன்றைய காலகட்டங்களில் இந்த விஷயம் என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது.

இவர்களை போன்ற இரக்க குணமுள்ளவர்கள் இருக்கும் வரையில் இந்த பூமி இருக்கும். அதன் சுழற்சியும் இருக்கும். என் தாய்த் திருநாட்டில் இப்படிப்பட்டவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நினைத்து ஒரு கணம் பெருமைப்பட்டேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்தின் மீதே எனக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது. கர்த்தரை நேரில் கண்டது போல உணர்ந்தேன்.

இந்தப் பக்கம் சிறுவனிடம் திரும்பி, “ஒ.கே.வா… ? பார்த்து ஜாக்ரதையா இனிமே போகணும் என்ன? என்று சொல்லி உடைந்த ஜாரை எடுத்து வண்டி மீது வைத்து அது மறுபடியும் விழாதவாறு கயிற்றில் கட்டினேன்.

இந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாததா அமைஞ்சிடுச்சு. கடவுளை  அல்லவா அன்று நான் நேரில் பார்த்தேன்!

கடவுள் என்பவர் ஏதோ கோவில் கருவறையிலும் மலைகளிலும் சர்ச்சிலும் மட்டும் இருப்பவர் அல்ல.

கடவுள் எங்கெங்கு இருக்கிறார் என்று வாலி மிக அருமையாக கீழ்கண்ட இந்த பாட்டில் கூறியிருக்கிறார்.

(படம் : நடிகர் திலகம் நடித்த ‘பாபு’).

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

அவன் பூ விரியும்
சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின்
தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும்
சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின்
தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென
தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும்
கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து
நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே
இருப்பது தான் தெய்வம்
இவை அனைத்திலுமே
இருப்பது தான் தெய்வம்

தன் வியர்வையிலும்
உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து
உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும்
சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்தச் சிரிப்பினிலே
இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே
கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்.

[உங்கள் வாழ்க்கையிலும் இதை போன்று ஏதாவது நெகிழ்ச்சியான (கடவுளை கண்ட) சம்பவங்கள் நடைபெற்றதுண்டா? இருந்தால் simplesundar@gmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணுடன் உடனே எழுதி அனுப்புங்கள். உங்கள் மொழி மற்றும் எழுத்து நடையை பற்றி கவலை வேண்டாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் உங்களை தொடர்புகொள்வேன். தகுதியுடையவை இந்த தொடரில் பிரசுரிக்கப்படும். முடிந்தால் இங்கிருப்பதை போன்று நமது ஓவியரை கொண்டு விசேஷ ஓவியமும் வரைந்து அதனுடன் பிரசுரிக்கப்படும்!]

கடவுள் தரிசனம் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *