Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > வயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது! Rightmantra Prayer Club

வயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது! Rightmantra Prayer Club

print
டந்த வாரம் திருச்சி சென்றிருந்தபோது, முதல் நாள் காலை வயலூர் செல்வதற்கு முன்பு அரங்கனை தரிசித்துவிட்டு வந்துவிடலாம் என்று கருதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றால், திருமலையை போன்று கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட கூட்டம். ரூ.250/- டிக்கெட் வாங்கினால் கூட நிச்சயம் எப்படியும் மூன்று அல்லது நான்கு மணிநேரத்துக்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. வயலூரில் நண்பகல் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் வேறு ஏற்பாடு செய்திருந்தபடியால், மதியம் 12.00 மணிக்குள் அங்கு இருக்கவேண்டும். என்ன செய்வது….?

‘முதலில் உன் குலதெய்வத்தை பார்த்துவிட்டு வா. அப்புறம் என்னை பார்க்க வரலாம்!’ என்று அரங்கன் சொல்லாமல் சொல்வது போல தோன்றியது. அரங்கனை நாளை தரிசித்துக்கொள்ளலாம் என்று திரும்பி வந்துவிட்டோம்.

DSC02017

நம் காமிராவுக்கு ஏற்கனவே ஒரு 2 GB மெமரி கார்ட் இருக்கிறது. இருந்தாலும் அது சீக்கிரம் ஃபுல்லாகிவிடுகிறது. இது போன்ற வெளியூர் பயணங்களில் அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த முறை இரண்டு நாள் பயணம் + சாதனையாளர் சந்திப்பு + ஆலய தரிசனம் என்று எண்ணற்ற பிளான்கள் இருந்தபடியால், ஒரு மெமரி கார்ட் போதாது என்று புதிதாக ஒரு 8 GB மெமரி கார்ட் வாங்கியிருந்தோம். நமது காமிரா பவுச்சிலேயே அதை வைத்திருந்தோம்.

வயலூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அந்த மெமரி கார்ட் எங்கோ விழுந்துவிட்டது. கண்ணப்பனை உறையூரில் சென்று சந்தித்துவிட்டு திரும்பும்போது தான் மெமரி கார்ட் தொலைந்துபோன விஷயத்தையே உணர்ந்தோம். ஏற்கனவே நாம் சொன்ன ஒரு பிரச்னையின் காரணமாக மனம் வாடியிருந்தது. இதில் இது வேறு சேர்ந்துகொள்ள, டோட்டல் மூட் அவுட்.

வயலூரில் தான் காணமல் போயிருக்கவேண்டும் என்கிற சந்தேகம் நமக்கு. அங்கு தான் காமிரா பவுச்சை நான்கைந்து முறை எடுக்க நேர்ந்தது. வயலூருக்கு திரும்பி சென்று மெமரி கார்டை தேடலாமா என்று கூட தோன்றியது. துளியூண்டு மெமரி கார்டை அவ்வளவு பெரிய ஆலயத்தில் எங்கே என்று போய் தேடுவது?

“முருகா எப்படியாவது அந்த மெமரி கார்டை எனக்கு திரும்ப கொடுத்துவிடப்பா… அதை வைத்து தான் புகைப்படங்களை எடுக்கவேண்டும்” என்று பிரார்த்தித்துக்கொண்டேன்.

மறுநாள் காலை திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, மதியம் சற்று ஓய்வெடுத்துவிட்டு 3.00 மணியளவில் அரங்கன் சன்னதிக்கு கிளம்பிவிட்டோம்.

அரங்கனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது 5.15 ஆகிவிட்டது. பிரசாதம் சாப்பிட கருடாழ்வார் மண்டபத்தில் எல்லோரும் அமர, நேரம் 5.25 pm. நமது பிரார்த்தனை கிளப் நேரம் வரப்போகிறது.

நமது பிரார்த்தனை கிளப்புக்கான பிரார்த்தனையை பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் செய்யும் பாக்கியம் கிடைத்தது எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டோம்.

எங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்வது? சுற்று முற்றும் பார்த்தோம். எதிரே செங்கமலவல்லி நாச்சியார் தான்ய லக்ஷ்மி சன்னதி தென்பட்டது.

DSC02034

“நீங்க எல்லாம் இங்கே உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுங்கள். நான் அங்கே போய்ட்டு வந்துடுறேன்” என்று நம் பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினரிடம் கூறிவிட்டு நாம் தான்யலக்ஷ்மி சன்னதி நோக்கி சென்றோம்.

அந்நேரம் பார்த்து உறையூரில் இருந்து கண்ணப்பன் கூப்பிட்டார். (வேறு யாராவது இருந்திருந்தால் காலை எடுத்திருக்கமாட்டோம். கண்ணப்பன் என்பதால் அட்டெண்ட் செய்தோம்.)

“கண்ணப்பன் இப்போ எங்கே இருக்கேன் தெரியுமா?”

“எங்கே சார் இருக்கீங்க?” ஆவலுடன் கேட்டார்.

“ஸ்ரீரங்கத்துல. இப்போ தான் ரெங்கநாதரை தரிசித்துவிட்டு வந்தேன். இப்போ செங்கமலவல்லி நாச்சியார் சன்னதிக்கு போய் கிட்டுருக்கேன்.”

“ஓ … அப்படியா சார்… நான் வேணும்னா அப்புறமா கூப்பிடவா?”

“பரவாயில்லே….. நானே உங்ககிட்டே பேசணும்னு தான் நினைச்சிக்கிட்டுருந்தேன்!”

நமது மனக்குறையை அவரிடம் சொல்லவேண்டும் போல இருந்தது. நமது மனவாட்டதுக்கு காரணமாக அமைந்த அந்த சம்பவத்தை விவரித்தேன். (இதுவும் கிட்டத்தட்ட ஒரு தொலைந்துபோன சம்பவம் தான்!)

“சார்… விட்டுத் தள்ளுங்க சார். உங்களை பிடிச்ச கஷ்டம் எல்லாம் போய் இனி உங்களுக்கு நல்லகாலம் பொறந்திடிச்சுன்னு நினைச்சிக்கோங்க சார்!” என்றார்.

எதற்கும் கண்ணப்பனிடம் சொல்லி வைக்கலாம் என்று அடுத்து மெமரி கார்ட் காணாமல் போன விஷயத்தை கூறி, “உங்க கடையில எங்கேயாவது கீழே விழுந்திருக்கான்னு பாருங்க. பெருக்கும்போது கிடைச்சா எடுத்து வைங்க!” என்று கூறினோம். மேலும் அது புதிய மெமரி கார்ட் என்றும், வயலூர் தொடர்பான படங்கள் அதில் தான் இருப்பதாகவும் சொன்னோம்.

“ரெண்டு நாளைக்கு முன்னே தான் கண்ணப்பன் வாங்கினேன். வந்த இடத்துல இப்படி அதை மிஸ் பண்ணுவோம்னு நினைக்கலே! வயலூர் கோவில்ல தான் விழுந்திருக்கணும். எங்கேன்னு போய் தேடுறது?” என்றேன்.

“சார்… கவலைப்படாதீங்க சார். உங்க மெமரி கார்ட் நிச்சயம் கிடைக்கும். நான் ஐயப்பன் கிட்டே வேண்டிக்கிறேன்!” என்றார்.

கார்ட் கிடைக்குதோ இல்லையோ அவரிடம் பேசியதே ஆறுதலாக இருந்தது.

மற்றொரு பிரச்னை தொடர்பாக அவர் சொன்னது ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். அதை கேட்டபிறகு தான் நாம் ஓரளவு சமாதானமானோம்.

பிறகு தான்யலக்ஷ்மி சன்னதிக்கு சென்று தான்யலக்ஷ்மியை தரிசித்துவிட்டு குங்குமம் தரித்துக்கொண்டு வலம் வந்து ஒரு ஓரமாக காணப்பட்ட சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அந்த வார கோரிக்கைகளை மனதில் நினைத்து, பிரார்த்தித்தோம். இதற்கு முன் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்தவர்களுக்காக்வும், நம் நண்பர்கள், வாசகர்கள் மற்றும் நலம்விரும்பிகள் அனைவருக்காகவும் பிரார்த்தித்துக்கொண்டோம்.

அரங்கன் ஆலயத்தில் அன்னையின் சன்னதியில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை அமைந்தது நாம் செய்த புண்ணியமே.

முந்தைய தினமே ஒருவேளை அரங்கனை தரிசித்திருந்தால் நிச்சயம் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்காது. நடப்பெதல்லாம் நன்மைக்கே என்பதை மற்றொரு முறை உணர்ந்துகொண்டோம்.

நினைத்தது நடக்கும். கேட்பது கிடைக்கும்!

DSC02119

பிரார்த்தனை முடித்துவிட்டு சன்னதியில் இருந்து வெளியே வர முற்பட்ட போது எதிரே பார்த்தால் – “நினைத்தது நடக்கும். கேட்பது கிடைக்கும்!” என்ற வாசகம் கண்ணில்பட்டது. (பார்க்க மேலே காணும் புகைப்படம்)

ரணமாகி தவித்த நெஞ்சுக்கு மருந்திட்டது போன்றிருந்தது அந்த வாசகம். சாட்சாத் தான்யலக்ஷ்மி தாயாரே நமக்கு ஆறுதல் சொல்வது போல இருந்தது.

கருடாழ்வார் மண்டபத்தில் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அடுத்து திருவானைக்கா பயணம். (நாம் பிறந்த ஊர்!). திருவானைக்கா ஆலய தரிசன அனுபவமும், ஐயப்பனை அங்கு கண்டதும் வேறொரு பதிவில்.

இங்கே திருச்சி பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்த பிறகு, இரண்டு நாட்கள் கழித்து கண்ணப்பனிடம் இருந்து ஃபோன் வந்தது.

“உங்க மெமரி கார்ட் கிடைச்சிடுச்சு சார்!”

“வாவ்… என்னங்க சொல்றீங்க கண்ணப்பன்? உண்மையாவா? எங்கே இருந்தது?”

“கடை வாசல்ல கீழே கிடந்திருக்கு. என்ன ஏதுன்னு தெரியாமலேயே நம் ப்ரெண்ட் ஒருத்தரு அதை எடுத்து வெச்சிருந்திருக்காரு. நான் நேத்தைக்கு சொன்னேன் அந்த அண்ணனோட மெமரி கார்ட் ஏதோ காணாம் போச்சாம்டா. உங்களுக்கு ஏதாவது கிடைச்சா என்கிட்டே சொல்லுங்கன்னு. உடனே இதுவா பாருங்கன்னு பாக்கெட்ல இருந்து எடுத்து கொடுத்தான். நீங்க வந்துட்டு போன அன்னைக்கு சாயந்திரம் கீழே கிடந்திருக்கு. அது மெமரி கார்டுன்னு அவனுக்கு தெரியும். ஆனால் எதுக்கு யூஸ் பண்றதுன்னு தெரியாதாம். எதுக்கும் இருக்கட்டுமேன்னு எடுத்து வெச்சிருந்திருக்கான்!” என்றார்.

நமக்கு வார்த்தைகளே வரவில்லை. நாம் தொலைத்த ஒன்று, கிட்டத்தட்ட கிடைக்கவே கிடைக்காது என்று நாம் நினைத்தது கிடைத்தால் அது எத்தனை சந்தோஷமாக இருக்கும்?

மேலோட்டமாக பார்த்தால் இது என்ன பெரிய விஷயம் என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் நம் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு இது எத்தனை பெரிய விஷயம் என்று புரியும்.

இதில் என்ன ஒரு அற்புதம் என்றால் மெமரி கார்ட் வயலூரில் தான் தொலைந்திருக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில் அங்கு தான் காமிராவை பவுச்சில் இருந்து அடிக்கடி எடுத்து புகைப்படங்கள் எடுத்தபடி இருந்தோம். வயலூரில் இருந்து கிளம்பும்போதே ஏதோ ஒன்றை தவறவிட்டுவிட்டது போன்ற உள்ளுணர்வு நமக்கு இருந்தது. நாம் இருந்த பரபரப்பில் அது என்னவென்று புரியவில்லை. ஸ்ரீரங்கத்தில் நம் தங்கியிருந்த ரூமுக்கு வந்தவுடன் தான் மெமரி கார்ட் தொலைந்து போன தொலைந்துபோன விஷயம் தெரியும். உறையூரில் அது தொலைந்திருக்க வாய்ப்பு மிக மிக குறைவு. அப்படியிருக்கும் போது உறையூரில் அது கண்டெடுக்கப்பட்டது ஒரு அதிசயம் தான். மேலும் அந்த மெமரி கார்ட் எனக்கு சொந்தம் எனும்போது அது எப்படி என்னை விட்டு பிரியும்?

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (குறள் 376)

பொருள் : தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

நாம் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க அடுத்த நாளே மெமரி கார்டை கூரியரில் அனுப்பிவிட்டார் கண்ணப்பன்.

நடந்தது அனைத்தும் ஒரு அதிசயம் என உங்களுக்கு பட்டால்….நிச்சயம் இதற்கு முழுமுதற்காரணம் கண்ணப்பனும் அவர் வாக்கிலிருந்து வெளிப்பட்ட சுவாமி ஐயப்பனுமே என்றால் மிகையாகாது. இப்படிப்பட்ட ஒருவரை நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கச் சொன்னால் அது எப்படி இருக்கும்?

DSCN27242

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திருச்சி உறையூரை சேர்ந்த டூ-வீலர் மெக்கானிக் கண்ணப்பன் அவர்கள்.

கண்ணப்பன் இரண்டு கண்களிலும் பார்வையற்றவர். பார்வையில்லை என்றால் என்ன? அது என் முன்னேற்றத்தை முடக்கிவிடமுடியாது என்று விதிக்கே சவால் விட்டு இன்று எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவர்.

சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தரான கண்ணப்பன் இதுவரை பதினோரு முறை சபரிமலைக்கு சென்றுள்ளார். அடுத்த முறை அவருடன் இணைந்து முதல்முறையாக நாமும் சபரிமலை செல்லவிருக்கிறோம். நம்முடன் ரியல் ஹீரோ மெரினா வெங்கட்டும் இணையவிருக்கிறார். அவர் கண்ணப்பனைபோலவே ஏற்கனவே பலமுறை சபரிமலை சென்றிருக்கிறார்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி கண்ணப்பனிடம் எடுத்துக் கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை  ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். உறையூரில் ஐயப்பன் சந்நிதானத்திலேயே அந்நேரம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

=================================================================

திரு.கண்ணப்பனுடன் நமது சந்திப்பு பற்றிய பதிவிற்கு :

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

=================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

முதலில் பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருக்கும் கண்ணன் அவர்கள், நமது தளத்தின் அறப்பணிகளில் குறிப்பாக கோ-சம்ரோக்ஷனத்தில் பெரும்பங்கு வகிப்பவர். மாதாமாதம் நமது பணிகளுக்கு தன்னால் இயன்ற தொகையை அனுப்பிவருகிறார். சமீபத்தில் பேசியபோது தான் இவர் இப்படி ஒரு பிரச்னையில் இருப்பது நமக்கு தெரியும். மிகவும் வருத்தப்பட்டோம்.நமது பிரார்த்தனை கிளபுக்கு கோரிக்கையை உடனே அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம். இவரைப் போன்றவர்கள் எந்த குறையும் இல்லாமல் நிம்மதியாக சந்தோஷமாக இருந்தால் தான் அறச்செயல்களை பன்மடங்கு செய்ய முடியும்.

இரண்டாவதாக இடம் பெற்றுள்ள கோரிக்கை நாம் அளித்துள்ள கோரிக்கை. நம் உறவினர் ஒருவர் தொடர்புடையது. பாலைவனம் கடந்து வந்தும் பாதம் ஆறவில்லை கதை தான் அவர்களுக்கு. ஏற்கனவே போராட்டமயமான வாழ்க்கை. இதில் ஆசை ஆசையாக பெற்ற குழந்தைக்கு அதுவும் பெண் குழந்தைக்கு இப்படி ஒரு குறைபாடு. இறைவன் முன்ஜென்ம வினைகளை நீக்கி தவறுகளை மன்னித்து  நல்லருள் வழங்கவேண்டும்.

=================================================================

மனஅழுத்தம் நீங்க வேண்டும்; மனை சிறக்க வேண்டும்!

அன்புள்ள சுந்தருக்கு

நமது பிரார்த்தனை கிளப்புக்கு எனது வேண்டுகோளை சமர்பிக்கிறேன். என் மனைவி கடந்த 20 ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கு மருந்துகள் எடுத்து வருகிறார். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக மன அழுத்தம் அதிகமாகி அதனால் பலவித கடுமையான உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகிறார். அதிகமான எதிர்மறை எண்ணங்களால் அவதிப்படுகிறார். இது அவருக்கே நன்றாக தெரிந்தும் மாற்றிக்கொள்ள முடியாமல் மிகுந்த வேதனை படுகிறார். தற்போது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைவில் பூரண உடல் மற்றும் மன நலம் பெற்று எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ அனைவரும் நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

நன்றியுடன்
கண்ணன்.
மதுரை

=================================================================

குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு நீங்க வேண்டும்!

என் உறவினர் திருமதி. அகிலா என்கிற பால சரஸ்வதி அவர்களின் ஒரே மகள் பெயர் அபராஜிதா. வயது 5. அபராஜிதாவுக்கு ஆட்டிசம் எனப்படும் மூளை செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு குறை ஏற்பட்டிருப்பது பெற்றோர்களுக்கு இப்போது தான் தெரியும். அகிலா வாழ்க்கையில் பல மட்டங்களில் போராடி திருமண பந்தத்துக்குள் நுழைந்தவர். அவர்கள் வசதிமிக்கவர்கள் அல்லர்.

தங்களது செல்ல குழந்தைக்கு இப்படி ஒரு குறை ஏற்பட்டிருப்பது தாய் தந்தையர் இருவரும் கண்டு கலங்கி துடித்து வருகின்றனார். அகிலாவின் உடன் பிறந்த சகோதரர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர். தங்கள் அக்காவின் குழந்தைக்கு இப்படி ஒரு குறை என்றால் எந்த தம்பியால் தாங்கிக்கொள்ள முடியும்? 24 மணிநேரமும் அக்குழந்தையை கண்காணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் படும் துன்பத்தை கஷ்டத்தை இதற்கு மேல் விவரிக்க முடியாது.

இந்த விஷயம் சமீபத்தில் தான் நமக்கு தெரியும். ஒருவேளை அவர்களிடம் பிரார்த்தனை கிளப்பில் வெளியிடுவதாக சொன்னால் அவர்கள் தயங்கக்கூடும். ஆனாலும் நமது பிரார்த்தனை கிளப்பின் மீதும் அதற்கு தலைமை ஏற்கும் சான்றோர் மீதும் நமக்குள்ள அபரிமிதமான நம்பிக்கையின் பேரில் இந்த பிரார்த்தனையை இங்கு பதிவு செய்கிறோம். அதுவும் இந்த வாரம் தலைமை ஏற்கும் திரு.கண்ணப்பன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண கடாட்சம் பெற்றவர்.

=================================================================

இந்த வார பொது பிரார்த்தனை

நமக்காக போராடும் நந்தினியின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்!

நாமெல்லாம் உண்டுறங்கி, விழித்து, இன்பம் துய்த்து சுகவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்க எதிர்கால தமிழகம் சிறக்க ஒரு மாணவி தன் வாழ்க்கையையே பணயம் வைத்து போராடி வருகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

Nandhiniஇன்றைய தேதிக்கு உண்மையான விஷயம் என்றால் கூட அதை ஏன் உரக்க சொல்ல வேண்டும், பிறகு சிக்கலை சந்திக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட அனைவருமே பயந்து போய் அடக்கி வாசிக்கும் காலமிது. ஆனால் ஒரு குரல் கடந்த சில மாதங்களாக உரக்க ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நந்தினி. மதுரை சட்டக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி.

குடியின் கொடிய பிடியில் சிக்கி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சமுதாயம் வயது வித்தியாசமின்றி சீரழிந்துவருவது கண்டு கசிந்து கண்ணீர் பெருக்கியவர் ஒரு முடிவு எடுத்தார்.

இது சந்தேகமில்லாமல் போதைப் பொருள்தான், இதை அரசே விற்பது சட்ட விரோதம், இந்த தவறை இனியும் தொடர வேண்டாம் உடனே “டாஸ்மாக்’ கடைகளை மூட நடவடிக்கை எடுங்கள் இது குறித்து மதுவினால் நாசமான நூறு குடும்பத்து மாணவர்களோடு வந்து உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று முதல்வருக்கு கடிதம் போட்டார். பல மாதங்களாக பதில் ஏதுமேயில்லை.

இந்நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்க அனுமதி வழங்கும் தமிழக அரசை கண்டித்து, மாவட்டந்தோறும் பயணம் சென்று,  அங்குள்ள, மதுவால் சீரழிந்த குடும்பத்தில் உள்ள பெண்களை சந்தித்து, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம். நோட்டோவுக்கு ஓட்டு போட்டு எதிர்ப்பை தெரிவியுங்கள்  என்று பிரச்சாரம் செய்து வந்தார்.

சென்னை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.  பல்வேறு மாவட்ட பெண்களில் குமுறல்களைக்கொண்டு,  அவர்களின் சார்பாக முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு நின்று மண்ணை வாரி இறைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தார். இது தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார் நந்தினி. அவருடன் தந்தையும் உடனிருந்தார். துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த நந்தினியை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தையையும் கைது செய்தது போலீஸ்.

மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் நந்தினி நடத்தும் போராட்டத்துக்கும் வித்தியாசம் இருக்குது பாஸ்!

இன்றைக்கு நாம் பார்க்கும் பலவித சமூக சீர்கேடுகளுக்கு முழுமுதற்காரணம் மது தான். எத்தனையோ குடும்பங்களை அழித்து  வேர்களில்; வெந்நீரை ஊற்றி வருகிறது இந்த மது. மது அரக்கனுக்கு எதிராக தனி மனுஷியாய் போராடி வரும் நந்தினியின் போராட்டம் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் விரைவில் பூரண மதுவிலக்கு வரவேண்டும். அதுவே இந்த வார பொது பிரார்த்தனை.

நந்தினியைப் பற்றி விரிவான பதிவு விரைவில் வரவிருக்கிறது. முடிந்தால் அவரை நேரில் சந்தித்து நமது ஆதரவை தெரிவிக்கவிருக்கிறோம்.

=================================================================

மதுரையை சேர்ந்த கண்ணன் அவர்களின் திருமதிக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்த நோய் நீங்கி அவர்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழவும், நம் உறவினர் அகிலா அவர்களின் குழந்தை அபராஜிதாவுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் பாதிப்பு நீங்கி அக்குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த வித குறையுமின்றி அவள் பெற்றோர் மனம் குளிரும் வண்ணம் வளரவும், மதுவுக்கு எதிரான மாணவி நந்தினியின் போராட்டம் வெற்றி பெறவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.கண்ணப்பன் அவர்களுக்கு தொழில் நன்கு சிறக்கவும், எல்லா வித வளங்களும்  செல்வங்களும் அவர் பெற்று சந்தோஷமாக வாழவும் இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 27,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : குன்றத்தூர் முருகன் கோவில் மற்றும் கந்தலீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் திரு. திருமுருகன் அவர்கள்.

10 thoughts on “வயலூரில் தொலைத்தது உறையூரில் கிடைத்தது! Rightmantra Prayer Club

  1. இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் கண்ணபனுக்கு எனது வணக்கம். பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காக பிராத்திப்போம்

    மெமரி கார்டு காணாமல் போய் கிடைத்து இறைவன் செயல்

    நன்றி
    உமா

  2. மதுரையை சேர்ந்த கண்ணன் அவர்களின் திருமதிக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்த நோய் நீங்கி அவர்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழவும், நம் உறவினர் அகிலா அவர்களின் குழந்தை அபராஜிதாவுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் பாதிப்பு நீங்கி அக்குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த வித குறையுமின்றி அவள் பெற்றோர் மனம் குளிரும் வண்ணம் வளரவும், மதுவுக்கு எதிரான மாணவி நந்தினியின் போராட்டம் வெற்றி பெறவும், இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.கண்ணப்பன் அவர்களுக்கு தொழில் நன்கு சிறக்கவும், எல்லா வித வளங்களும் செல்வங்களும் அவர் பெற்று சந்தோஷமாக வாழவும் இறைவனை பிரார்த்திப்போம். –

  3. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.கண்ணப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி. அவரது தொழில் நன்கு சிறக்கவும், எல்லா வித வளங்களும் செல்வங்களும் அவர் பெற்று சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

    மதுரையை சேர்ந்த கண்ணன் அவர்களின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்த நோய் நீங்கி அவர்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழவும், நம் சகோதரி அகிலா அவர்களின் குழந்தை அபராஜிதாவுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் பாதிப்பு நீங்கி அக்குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த வித குறையுமின்றி,அவள் பெற்றோர் மனம் குளிரும் வண்ணம் வளரவும், மதுவுக்கு எதிரான மாணவி நந்தினியின் போராட்டம் வெற்றி பெறவும், திரு.கண்ணப்பன் அவர்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று முன்னேற, மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

  4. I really salute Ms. Nandhini and her father who are fighting for a great noble cause. There is absolutely no selfishness in this case. When girls of Nandhini’s age does not even bother about their own problems, here is one girl who has the heart of gold and is willing to sacrifice for the sake of society. At least after coming to know about her, may be somebody may quit drinking. Hope her fight against this biggest evil of society gets the support of more people and opens a new chapter for youngsters.

    Thank you Sundar for taking it up in our site.

  5. மெமரி கார்ட் ஹீரோவான கதை மிகவும் சுவாரஷ்யம் .நாங்களும் உடன் வந்து தேடவைத்து “நினைத்தது நடக்கும். கேட்பது கிடைக்கும்.” என்று பூலோக வைகுண்டம் தரிசனத்தை அளித்தமைக்கு நன்றி .

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் கண்ணபனுக்கு எனது வணக்கம். பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்காக பிராத்திப்போம்.

    -மனோகர்

  6. சுந்தர்ஜி

    ” நாம் தொலைத்த ஒன்று, கிட்டத்தட்ட கிடைக்கவே கிடைக்காது என்று நாம் நினைத்தது, கிடைத்தால் அது எத்தனை சந்தோஷமாக இருக்கும்?” அனுபவித்தபவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் . உங்கள் திருச்சி அனுபவத்தை படித்ததும் எனக்கு தோன்றும் வாசகம். “நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்.”

    கண்ணிருந்தும் நாமே பல சமயம் குருடர்கள் போல் நடந்து கொள்கிறோம். புறக்கண் இல்லை என்றாலும் தம் அகக்கண்ணால் வெற்றிகரமாக வாழ்ந்து வரும் திரு.கண்ணப்பன் அவர்களை வணங்கி அவர் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் . கண்ணப்பன் போன்றோரை சந்தித்த பிறகு ஆவது நம் ஞானக்கண்கள் திறக்கட்டும்.

    இந்த வார பிரார்த்தனைக்கு வந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் வழக்கம் போல் திரு.கண்ணப்பன் அவர்களொடு பிரார்த்திப்போம். செல்வி நந்தினியின் மதுவிலக்கு போராட்டம், வெற்றி பெற அனைவரும் வேண்டுவோம். இத்தனை சிறந்த பதிவினை அளித்த சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  7. திருவிடை மருதூர்[0435 2461946,2460660] பெருநலமாமுலைஅம்மை உடனுறை மகாலிங்க சுவாமி திருகோயில் வழிபாடு செய்து ,அங்கு உள்ள அசுவமேத பிரகாரத்தை வலம் வந்து[இதற்க்கு திருகோயில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்த வேண்டும்] மூலவரை வழிபடுவோர் சித்த சுவாதீனமின்மை, மனநோய் முதலியன நீங்கி நல்வாழ்வு வாழ்வர்.திருவிடை மருதூர் கோயில் இல் கிழக்கு வாசல் வழியாக சென்று தரிசனம் செய்து விட்டு மறுபடியும் அந்த வாசல் வழியாக வரகூடாது … ….. திருவலிவலம்[திருவாரூரிலிருந்து 8 கி. மீ]வாளையங்கண்ணி உடனுறை மனத்துணைநாதர் திருகோயில்[04366 205636,9486334025]. இங்கு வழிபட்டால் மன அழுத்தம்[டிப்ரஷன்] , மனச்சோர்வு,மனச்சிதைவு நோய்,மன நோய் ,மனக்கலக்கம், மன சஞ்சலம் முதலிய மன அழுத்த நோய்கள் யாவும் குணமாகி மனது தெளிவாகும் .3 இரவுகள் இங்கு தங்கி இருந்து தினமும் காலையில் தீர்த்தத்தில் நீராடி ,வலம்புரி விநாயகர் ,முருகன் ,சுவாமி ,அம்பாள் ,பைரவர் ஆகியோருக்கு அபிசேகம்[பால்,தேன் ,தயிர் ,சந்தனம் ,பன்னீர் ] ,வன்னி, கொன்றை மலர், ஊமத்தை மலர் சூடி ,அர்ச்சனை செய்து ,சுவாமிக்கு புனுகு பூசி வழிபட்டு வர ,கூடவே கோமுகி தீர்த்தம் சிறிது குடித்து வர வேண்டும் ..3 நாட்களும் கோயிலில் இத்தல சம்பந்தர்[ ஒல்லையாறி உள்ள],அப்பர்[ நல்லான்காண்]பதிகம்களை படித்து வரவும் . ..பின்பு வீட்டில் தினமும் ,

    “பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
    கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
    வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே”பாடலை பாடி பின்பு திருவலிவலம் தலத்துக்கான பின்வரும் பதிகம்களை வீட்டில் இரு வேளையும் தீபம் ஏற்றி வைத்து தொடர்ந்து 48 நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வரவும் …பலன் நிச்சயம் …அசைவம் தொடாதீர்கள் …

    திருச்சிற்றம்பலம்

    நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
    நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
    வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
    மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
    சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
    தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
    வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண்
    உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்
    தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண்
    தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட
    கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண்
    களியானை யீருரிவை கதறப் போர்த்தும்
    வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    யேவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண்
    இன்வன்காண் துன்பங்க ளில்லா தான்காண்
    தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத்
    தத்துவன்காண் உத்தமன்காண் தானேயெங்கும்
    ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
    அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்
    வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண்
    ஒங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்
    வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண்
    விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்
    பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண்
    புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி
    வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண்
    குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய
    நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண்
    நிமிரிபுன் சடைமுடிமேல் நீரார் கங்கை
    எற்றவன்காண் ஏழலகு மாயி னானிகாண்
    இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ
    மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    நிலையவன்காண் தோற்றவன் காணிறையானான்காண்
    நீரவன்காண் பாரவன்காண் ஊர்முன் றெய்த
    சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல்
    தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண்
    கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக்
    கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ
    மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும்
    பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்
    எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி
    இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்
    கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
    கதியவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங்
    மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானெ.

    முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி
    முதலவன்காண் முடியவன்காண் மூன்று சோதி
    அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும்
    அணியவன்காண் சேயவன்காண் அளவில்சோதி
    மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம்
    வேண்டினன் காணீண்டு புனற்கங்கைக் கென்றும்
    மன்னவன்காண் வானவைகள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா
    நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்
    கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண்
    பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்
    பாம்போடு திங்கள் பயில வைத்த
    மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

    பங்கயத்தின் மேலானும் பால னாகி
    உலகளந்த படியானும் பரவிக் காணா
    தங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா
    அனலவன்காண் அலைகடல்சூழிலங்கை வேந்தன்
    கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங்
    குழகன்காண் அழகன்காண் கோல மாய
    மங்கையர்கோர் கூறனகாண் வானோ ரேத்தும்
    வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே

    திருச்சிற்றம்பலம்……[திருநாவுக்கரசு சுவாமிகள்].

    ……………………………………..

    திருச்சிற்றம்பலம்

    ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
    சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
    நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
    வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

    இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
    பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
    தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
    மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.

    பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
    விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
    கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
    வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.

    மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
    செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
    நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
    வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.

    துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
    தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
    நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
    வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

    புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
    எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
    கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
    வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.

    தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
    ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
    ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
    மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

    நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
    வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
    தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
    வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.

    ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
    சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
    ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
    வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.

    பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
    பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
    விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
    மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

    வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
    பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
    பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
    மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே………..
    ………………………………………………….[ சம்பந்தர் ]

    திருச்சிற்றம்பலம்

    1. தங்களின் அற்புதமான தகவலுக்கு மிக்க நன்றி

      கண்ணன்
      மதுரை

      1. அய்யா ,தங்கள் நன்றி சுந்தர் சார் ,நம் சிவபெருமான் ,பைரவர் கு சொல்லுங்கள் ..
        என் பங்கு ஒன்றுமில்லை …சிவாய சிவா

  8. மன நோய் ,ஆட்டிஷம் குறைபாடுகள் அகல திருவிடை மருதூர் மகாலிங்கசுவாமி திருகோயில் சென்று ,பிரம்ம ஹத்தி தோசம் அகல பரிகாரம் செய்து கொள்ளவும் ..[திருகோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்,650 ரூபாய் கட்டணம் 04352461946,2460660]..இது நம்முடைய முன் ஜென்ம வினைகளை நீக்கி விடும் ..பின்பு அங்கு உள்ள 27 நட்சத்திர லிங்கம்களையும் வழிபட்டு ,அங்கு உள்ள அஸ்வமேத பிரகாரத்தை வலம வரவும் [கட்டணத்திற்கு திருகோயில் அலுவலகம் தொடர்பு கொள்ளவும் ]…இந்த அஸ்வமேத பிரகார வலம நம் மன நோய் ,ஆட்டிஷம் குறைபாடுகள் அகல துணை நிற்கும் ..மகாலிங்க ஸ்வாமியின் அருள்வெள்ளம் சொல்லி மாளாது ….துர்வாசபுரம் [புதுக்கோட்டை திருமயம் சென்று, அங்கிருந்து 8 கி.மீ,9442762219]சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்று அங்கு உள்ள பைரவர் வழிபட்டு அபிசேகம் ,அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வரவும் இது குழந்தைகளின் சகல உடல் நோய்,மன நோய் ஆட்டிஷம் குறைபாடுகள் அகல உதவும் ,…கூடவே சுவாமி மலை அருகில் உள்ள[சுவாமிமலை யில் இருந்து , திருவைகாவூர் செல்லும் பாதையில் 5 கி.மீ ] கூனஞ்சேரி கைலாசநாதர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள அஷ்ட லிங்கம்களையும் பால் அபிசேகம் செய்து வழிபட்டு ,மூலவர் கைலாச நாதரை வழிபட குழந்தையின் சகல வித பாதிப்புகளும் அகலும் என்பது திண்ணம் .. …வீட்டில் விடுபட்டு போன தெய்வ பிரார்த்தனைகளை மறக்காமல் நிறைவய்ற்றி விடவும் .குழந்தையை விராலிமலை [திருச்சி] முருக பெருமானுக்கு தத்து கொடுத்து ,தவிட்டுக்கு வாங்கி கொள்ளவும் …கூடவே தினமும்[48 நாட்கள் ] பின்வரும் பதிகம்களை படித்து வரவும்

    திருச்சிற்றம்பலம்

    சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
    மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
    பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
    பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

    கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிடம் ஆவது
    மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
    பொருது சாத்தொடு பூசல் அறாப்புன வாயிலே.

    தொக்காய மனம் என்னொடு சூளறும் வைகலும்
    நக்கான் நமையாளுடை யான்நவி லும்மிடம்
    அக்கோ டரவார்த்த பிரானடிக் கன்பராய்ப்
    புக்கார் அவர் போற்றொழி யாப்புன வாயிலே.

    வற்கென் றிருத்திகண் டாய்மனம் என்னொடு சூளறும்வைகலும்
    பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கை பொன்னா மதுவேபுகல்
    கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
    புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்புன வாயிலே.

    நில்லாய் மனம்என்னொடு சூளறும் வைகலும்
    நல்லான் நமையாளுடை யான்நவி லும்மிடம்
    வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெருண்டுபோய்ப்
    புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

    மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும்
    உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிடம் ஆவது
    பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
    புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

    ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும்
    பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி
    தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
    பூசற் றுடிபூசல் அறாப் புன வாயிலே.

    கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
    தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
    கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே
    புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

    எற்றே நினை என்னொடு சூளறும் வைகலும்
    மற்றேதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்தறக்
    கற்றூறு கார்க்காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
    புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

    பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
    அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன
    மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
    குடியாகப் பாடிநின்றாட வல்லார்க் கில்லை குற்றமே.

    திருச்சிற்றம்பலம்…[சுந்தரர் ]
    …………………………………………………………
    திருச்சிற்றம்பலம்

    ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
    கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
    தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
    டணிநீர மேலுலகம் எய்தலுறில் அறிமின் குறைவில்லை ஆனேறுடை
    மணிநீல கண்ட முடையபிரான் மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
    துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
    பூமாண் அலங்கல் இலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
    மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
    மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
    தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
    வியல்தீர மேலுக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
    உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
    துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற
    நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
    பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
    தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
    நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
    பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
    துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதுங்
    கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழுந்
    தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
    வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
    தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
    டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
    முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
    திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
    துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

    மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
    பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
    கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
    விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியது வேயாகும் வினைமாயுமே.

Leave a Reply to Baba Ram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *