Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > எது ஈஸி ? எது ரொம்ப கஷ்டம் ?

எது ஈஸி ? எது ரொம்ப கஷ்டம் ?

print
ந்த நகரில் அவர் மிகப் பிரபலமான அனுபவமிக்க ஓவியர். அவரிடம் ஓவியம் பயிலுவதற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் வந்து செல்வார்கள். நாள் கணக்கில் அவரது ஓவியப் பள்ளியில் தங்கி ஓவியம் கற்றுச் செல்வார்கள். அப்படி அவரிடம் கற்றுகொண்டவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்ச்சியை நிறைவு செய்தவுடன், தன் குருவான ஓவியரிடம் விடைபெற்று கிளம்பி சென்றான்.

தான் கற்றுக்கொண்ட ஓவியத் திறன் குறித்து சுய மதிப்பீடு (Self-assessment) செய்து பார்க்கும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே தனது கற்பனைத் திறனில் ஒரு காட்சியை உருவகம் செய்து நான்கைந்து நாட்கள் செலவு செய்து அதை ஒரு அழகிய ஓவியமாக வரைந்தான்.

இது பற்றி பிறரின் கருத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே தனது ஓவியத்தை எடுத்து சென்று நகரின் சந்தையின் மையப் பகுதியில் அனைவரின் பார்வைக்கு வைத்தான்.

ஒரு போர்டு தயார் செய்து அதில், “அனைவருக்கும் வணக்கம். ஒரு பிரபல ஓவியரிடம் நான் மாதக்கணக்கில் கற்றுக்கொண்ட ஓவியக்கலையை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்ட கலை குறித்து எனக்கு ஒரு மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி நீங்கள் எங்காவது தவறு கண்டீர்களானால் அந்த இடத்தை ‘X’ என்று மார்க் செய்யவும்.” என்று எழுதி அங்கே ஒரு பேனாவையும் கட்டி தொங்க விட்டுவிட்டு சென்றான்.

மக்கள் நமது ஓவியம் குறித்து என்ன தீர்ப்பு கூறியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று ஆவலாக மறுபடியும் தான் ஓவியத்தை பார்வைக்கு வைத்த இடத்துக்கு வந்தவன் அங்கே தனது ஓவியத்தை பார்த்து நொறுங்கிப் போய்விட்டான். ஓவியத்தில் எங்கு பார்த்தாலும் ‘X’  ‘X’ என்று குறிக்கப்பட்டிருந்தது. ஓவியத்தில் அந்த மார்க் இல்லாத இடமே இல்லை என்னுமளவிற்கு எங்கு பார்த்தாலும் அந்த மார்க்இருந்தது. ஒரு சிலர், “இதெல்லாம் ஒரு ஓவியமா? இதை போய் பொது இடத்தில் வைத்து அபிப்ராயத்தை கேட்க வந்துவிட்டாய்…?” என்று எழுதியிருந்தார்கள்.

அழுதபடியே தனது குருநாதரிடம் ஓடிச் சென்றான். தனது ஓவியம் இருக்கும் பரிதாப நிலையை கதறி காண்பித்து அழுதான். எவ்வளவோ முயன்றும் அவன் குருவால் அவனை தேற்ற முடியவில்லை.

“குருவே… நான் ஒன்றுக்கும் பயனற்றவன்…. இதைத் தான் நான் வரையக் கற்றுகொண்டேன் என்றால் நான் ஓவியனாகவே தகுதியற்றவன். மக்கள் என்னை முழுமையாக நிராகரித்துவிட்டார்கள். நான் வாழ்வதைவிட சாவதே மேல்” என்றான்.

குரு மெலிதாக புன்னகைத்தார்.

“நீ ஒரு மிகச் சிறந்த ஓவியன்… ,மற்றவர்களால் குறைகளே கண்டுபிடிக்க முடியாத ஓவியத்தை உன்னால் வரைய முடியும் என்று நான் நிரூபிக்கிறேன்”

“குருவே என் திறமை மீது எனக்கு நம்பிக்கை போய் பல மணிநேரங்கள் ஆகிறது. எனக்கு வீணாக தவறான நம்பிக்கையை ஊட்டாதீர்கள்” என்கிறான்.

“குறுக்கே பேசாமல் நான் சொல்வதை செய். நீ திறமைசாலி என்பதை நான் நிரூபிக்கிறேன்.”

நான் ஒன்று சொன்னால் கேட்பாயா? நீ மறுபடியும் அதே ஓவியத்தை வரைந்து எடுத்து வா” என்கிறார்.

இளைஞன் அரைமனதுடன் ஒப்புக்கொண்டு செல்கிறான். அதே போல ஒரு ஓவியத்தை மூன்று நான்கு நாட்கள் அரும்பாடுபட்டு வரைகிறான். பின்னர் அதை எடுத்துக் கொண்டு குருவிடம் மீண்டும் செல்கிறான்.

குரு அந்த ஓவியத்தை புன்முறுவலுடன் பார்க்கிறார்.

“என்னுடன் வா” என்று கூறி மீண்டும் அவனை சந்தைக்கு அழைத்து செல்கிறார். வேறொரு முக்கிய சந்திப்பில் மக்கள் இன்னும் அதிகம் கடந்து செல்லும் ஒரு பகுதியில் அந்த ஓவியத்தை வைக்கிறார். அருகே அதே போல ஒரு போர்டு வைக்கப்படுகிறது. ஆனால் அதில்….”அனைவருக்கும் வணக்கம். ஒரு பிரபல ஓவியரிடம் நான் கற்றுக்கொண்ட ஓவியக்கலையை வைத்து இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறேன். இந்த ஓவியம் குறித்து எனக்கு ஒரு மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி நீங்கள் எங்காவது தவறு கண்டீர்களானால் இதோ அருகே இருக்கும் பிரஷ் மூலம் அதை சரி செய்யவும். நன்றி!” என்று எழுதப்பட்டிருக்கிறது. கூறியவாறே அருகே ஒரு தூரிகையையும் பெயின்ட்டையும் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

மாலை அதே இடத்துக்கு மீண்டும் இருவரும் வருகிறார்கள். ஓவியத்தை பார்க்கும் இளைஞனுக்கு ஒரே ஆச்சரியம். ஓவியம் எந்த இடத்திலும் திருத்தப்படவில்லை.

குருவுக்கு உள்ளுக்குள் தாம் எதிர்பார்த்தது மாதிரியே நடந்தது குறித்து மகிழ்ச்சி. இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல், “ஒருவேளை மக்களுக்கு குறைகளை கண்டுபிடித்து அவற்றை திருத்தம் செய்ய ஒரு நாள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இங்கே இந்த வார இறுதி முழுக்க இருக்கட்டும். நாம் அடுத்த வாரம் வந்து பார்க்கலாம். ஒருவேளை யாராவது திருத்தம் செய்யக்கூடும்…” என்று கூறிவிட்டு அவனை அழைத்து சென்றுவிடுகிறார்

சொன்னவாரே அடுத்த வாரம் வந்து பார்க்கிறார்கள். ஓவியம் எந்த வித திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. பல நாட்கள் வைத்து பார்த்தார்கள். அப்போதும் அப்படியே!

இளைஞன் நன்றிப் பெருக்குடன் தனது குருநாதரின் கால்களில் வீழ்ந்தான்.

“குருவே என் திறமை மீது இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அதே போல இந்த உலகத்தையும் மக்களையும் நன்கு புரிந்துகொண்டேன். இனி அதற்க்கேற்றார்போல நடந்துகொள்வேன்!” என்றான்.

உலகத்திலேயே சுலபமான வேலை ஒருவர் பணியை விமர்சனம் செய்வது. ஆனால் அந்த பணியை செய்வது என்பது மிக மிக கடினமான ஒன்று.

இன்னொரு ஆங்கிள்ல் சொல்லனும்னா… ஒரு வேலை செய்றது என்பது ரொம்ப கஷ்டம். ஆனா குத்தம் கண்டுபிடிக்கிறது அல்வா சாப்பிடுற மாதிரி… ரொம்ப ரொம்ப ஈஸி!

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664)

குறை சொல்றவங்க சொல்லிகிட்டே இருக்கட்டும். அவங்களால அதை மட்டும் தான் செய்ய முடியும். நாம செய்கிற (நல்ல) வேலையில நமக்கு மனநிறைவும் திருப்தியும் இருந்தாலே போதுமானது. நமது ஊக்கத்தை குலைக்கும் வகையில் வரும் விமர்சனங்களை கண்டு சோர்ந்துவிடக்கூடாது. விமர்சனங்கள் அவை உங்களை மேலும் மேலும் (Constructive Criticism) முன்னேற்ற தான் நீங்கள் அனுமதிக்க வேண்டுமே தவிர அவை உங்களை பாதிக்க அனுமதிக்கவே கூடாது. எதையுமே பாஸிட்டிவா எடுத்துக்குறவங்களுக்கு இது சுலபமா கைகூடிடும்! மத்தவங்களுக்கு கஷ்டம் தான். அதனால Always be positive in life!

………………………………………………………………………………..
குறிப்பு : திருமழிசை அருள்மிகு ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நேற்று (ஞாயிறு) நடைபெற்ற நமது உழவாரப்பணி ஜெகந்நாதனின் அருளால் வெகு சிறப்பாக நடந்தேறியது. கைங்கரியத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் அந்த ஜெகந்நாதனின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன். புகைப்படங்கள் மற்றும் முழு விபரங்கள் தனி பதிவாக அடுத்து அளிக்கப்படும்.
………………………………………………………………………………..

[END]

11 thoughts on “எது ஈஸி ? எது ரொம்ப கஷ்டம் ?

  1. விமர்சனங்களை கண்டு கலங்ககூடாது .

    தோல்வி, வெறுப்பு ,அவ நம்பிக்கைக்கு இடம் அளிக்கக்கூடாது .

    தன்னம்பிக்கைக்கு ஒரு டானிக் .

  2. மத்தவங்களை பார்த்து குற்றம், குறை சொல்லுவதுக்கு முன்னால் நாம்
    நம்முடைய குறைகளை நீவர்த்தி செய்ய வேண்டும்.
    நல்ல கருத்து உள்ள எளிதாக புரியும் படி கதை உள்ளது. நன்றி சுந்தர்ஜி .

  3. சுந்தர்ஜி,
    நன்றி ஆழமான கருத்து

    அடுத்தவர்களை குறை கூறுவது மிகவும் சுலபம்.
    அடுத்தவர்களை பாராட்டுவது மிகவும் கடினம்.

    அடுத்தவர்கள் குறை சொல்கின்றார்களே என்று மனதை போட்டு குழப்பாமல் நம் காரியதில் கண்ணாக இருந்து சாதிக்க வேண்டும். பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கு நாம் இடமளிக்க கூடாது.

  4. மிக அருமையான பதிவு. அனைவரும் படிக்க வேண்டியது.
    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
    அன்பே சிவம்

  5. ஜெயிச்சா லக்கு…தோத்தா மக்கு.. னு சொல்ற உலகம் இது சுந்தர்.

  6. குறை சொல்றவங்க இல்லைன்னா குறைகளை நிவர்த்தி செய்ய முடியாது. குறை சொல்வது மனித இயல்பு இதை யாராலும் மாற்ற முடியாது.

    யாராவது நம்மை குறை சொன்னால் உடனே கோவம் இல்லாம, அமைதியா யோசிச்சு, ஏன் குறை சொல்றாங்க, உண்மையிலேயே குறை இருக்கா, இருந்தா எப்படி நிவர்த்தி செய்யறதுன்னு பாக்கணும். அப்படி குறை இல்லேன்னா சொன்னவங்கள பாத்து கத்தாம அமைதியா ஒரு புன்னகை செஞ்சு, “அப்படியா ரொம்ப நன்றி சரி பண்றேன்” என்று சொல்லகூடிய மனப்பக்குவத்த வளத்துக்கணும். ஏன்னா குறை சொல்றவங்களோட உண்மையான நோக்கம் என்னன்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்தாமாதிரி நாம ரியாக்ட் பண்ணனும். அதுதான் வாழ்க்கைல முன்னேறுவதற்கு வழி. அதவிட்டுட்டு நம்மள யாருமே குறை சொல்லக்கூடாது அப்படீன்னு நினைக்கிறது மிகப்பெரிய அறியாமை. கற்றது கைய்யளவு கல்லாதது உலகளவு.

    1. பாபா ராம் ஜி

      நீங்கள் சொன்னது மிக பொருத்தமாக உள்ளது

      நன்றி ஜி .

  7. உலகத்திலேயே சுலபமான வேலை ஒருவர் பணியை விமர்சனம் செய்வது. ஆனால் அந்த பணியை செய்வது என்பது மிக மிக கடினமான ஒன்று.
    திருக்குரலை தெலிவாக சொல்லிவிட்டீர்கல்,

  8. சூப்பர் பதிவு. ஒரு அற்புதமான இன்ஸ்பி ரேஷன் கதை.

Leave a Reply to Shivakumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *