சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்று ஒரு குறள் இருக்கிறது. விமர்சிப்பது மிகவும் எளிதான செயல். ஆனால் செயலாற்றுவது மிகவும் கடினம்.
எண்ணற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பணியாற்றும் ‘மகாபாரதம்’ போன்ற ஒரு மிகப் பெரிய இதிகாசத்தை டெலிவிஷன் தொடராக எடுப்பது என்பது சாதாரணம் அல்ல. அதற்கு துறை அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒரு பொறுப்பாளர் வேண்டும். அப்படிப் பார்க்கும்போது இந்த தொடரை இயக்க தேர்வாகியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா மிக சரியான தேர்வு. (இதற்கு முன்பு இவரை பேட்டிக்காக இரு முறை சந்தித்திருக்கிறேன்.)
தொழில்நுட்பத்தில் இன்று மிரட்டும் இயக்குனர்களுக்கெல்லாம் இவர் தான் முன்னோடி. சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். இந்த தொடரை இயக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதன் மூலம் தனது பிறவி பயனை அடைந்துவிட்டார் சுரேஷ் கிருஷ்ணா என்றே நாம் கருதுகிறோம்.
இந்த தொடரின் இரு தூண்கள் – இயக்குனர் திரு.சுரேஷ் கிருஷ்ணா & இசையமைப்பாளர் திரு.தேவா இருவரும் சொல்லி வைத்தார்போல, “இந்த தொடரில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு பூர்வ ஜென்ம புண்ணியம் தான். இல்லையென்றால் இந்த தருணத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?” என்கின்றனர்.
மகாபாரதத்தின் மேன்மை தெரிந்தவர்களுக்கு தெரியும் இவர்கள் சொல்லும் வாக்கியத்தில் உள்ள ஆழம்.
“மகாபாரதத்தை இயக்குவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை” – சுரேஷ் கிருஷ்ணா
மகாபாரதம் தொடரின் அறிமுக நிகழ்ச்சி சென்ற வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் பத்திரிக்கையாளர்களிடம் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:
‘முன்ஜென்ம பாக்கியம்தான் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பகவான் கிருஷ்ணனின் கதையை ஒரு சுரேஷ் கிருஷ்ணன் டைரக்ட் செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்’ என்று சிலிர்த்துக் கொள்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.
“மகாபாரதத்தை இயக்குவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை. இதற்காக மகாபாரதம் நூல்களை வாங்கி படித்தேன். 25 ஆண்டுளில் 50 திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். அதைவிட மகாபாரதத்தை இயக்குவதுதான் கடினமான பணியாக இருக்கிறது. ஆனாலும், இதுதான் மனநிறைவைத் தருகிறது. நதிகள், கடல், மலை இவை எல்லாம் இணைந்திருக்கும் ஒரு இடத்தை பெங்களூர் அருகில் கண்டுபிடித்து அங்கு 25 அரண்மணை செட்டுகள் போட்டு படம்பிடித்து வருகிறோம். தினமும் ஆயிரக்கணக்கான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கு உடை தைப்பவர்கள், செட் போடுபவர்கள் உதவியாளர்கள் என்று சுமார் 5 ஆயிரம் பேர் இணைந்து இதனை உருவாக்கி வருகிறோம். தினமும் நடிகர்கள் தேர்வும், அவர்களுக்கு பயிற்சியும் இடைவிடாது நடந்து வருகிறது. ஷூட்டிங்கில் எந்த நடிகரையும் இங்க வந்து இப்படி நில்லு, அங்கே போய் நில்லு, ஒரு டேக் போய் பார்க்கலாம்’ என்றெல்லாம் பேசவே முடியவில்லை. வியாச மகரிஷி என்றால் அவரை வியாசராகவே பார்த்தேன். கிருஷ்ணன் என்றால் அவரை பகவான் கிருஷ்ணராகவே பார்த்தேன். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது மக்களின் மனங்களை அதிர வைக்கும்.” என்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.
தயாரிப்பாளர் சுனில் மேத்தா கூறுகையில்:
“தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் இது முக்கியமானதாக இருக்கும். பிராந்திய மொழியில் இவ்வளவு பெரிய பிரமாண்டத்தில் ஒரு தொடர் வெளிவருவது இதுதான் முதல் முறை” என்றார்.
“மகாபாரதத்துக்கு இசையமைப்பது என் பூர்வ ஜென்ம புண்ணியம்” – இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. தேனிசைத் தென்றல் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ என சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர். பல பக்தி பாடல் ஆல்பங்களையும் காசட்டுகளையும் வெளியிட்டிருக்கிறார். சிறந்த அம்மன் பக்தர். இவரையும் கடந்த 2011 ஆம் ஆண்டு பேட்டிக்காக சந்தித்திருக்கிறேன். எளிமைக்கு பெயர் பெற்றவர். பணிவின் சிகரம் திரு.தேவா அவர்கள். (இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் 2011 ஆம் ஆண்டு திரு.தேவாவை பேட்டிக்காக சந்தித்தபோது எடுத்தது!)
என் பூர்வ ஜென்ம புண்ணியம் – தேவா
மகாபாரதத்திற்கு இசையமைப்பது குறித்து இசையமைப்பாளர் தேவா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது :
இந்த தொடருக்கு இசையமைப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நான் என் பூர்வ ஜென்ம புண்ணியமாக கருதுகிறேன். இதை விட பாக்கியம் ஒரு இசைக் கலைஞனுக்கு வேறு என்ன இருக்க முடியும்? இதுவரை எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் அதன் மூலம் பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் இதன் மூலம் கிடைக்கும் பாராட்டுக்களையே நான் பெருமையாக கௌரவமாக கருதுகிறேன்.
மகாபாரதம் தொடரில் நான் கமிட் ஆனது முதல் பலர் எனக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தொடர் ஒளிபரப்பான முதல் நாளன்று மட்டுமே எனக்கு வாழ்த்து தெரிவித்து நூறு அழைப்புக்களுக்கு மேல் வந்தன.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த தொடருக்கு இசையமைக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டபோது முதலில் நான் தயங்கினேன். ஆனால் எங்களுக்குள் உள்ள புரிதல் மிகச் சிறப்பானது. “அது இந்த தொடரை நிச்சயம் வெற்றியடையவைக்கும்…. இசையையும் பேசப்படவைக்கும்… அவசியம் நீங்கள் இசையமைக்கவேண்டும்” என்று அவர் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதால் சம்மதித்தேன். நான் வணணங்கும் அம்மன் தான் இந்த வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறாள்.
மகாபாரதம் போன்ற இதிகாசங்களுக்கு இசையமைப்பது அத்தனை சாதாரணம் இல்லை. எனவே இதற்காக பல வித ஹோம்-வொர்க்குகளை செய்கிறேன். மகாபாரதம் குறித்து பல தகவல்களை மேலும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.”
மகாபாரதத்தில் அவருக்கு பிடித்த காரக்டர் என்றால் அது கர்ணன் தான் என்று கூறுகிறார் தேவா. அந்தளவு தம்மை இம்ப்ரெஸ் செய்த காரக்டர் அது என்கிறார்.
இவ்வாறு நம்மிடம் தனது கருத்துக்களை பதிவு செய்ததோடு “உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று கூறி வாழ்த்துக்களையும் கூறினார் தேனிசைத் தென்றல்.
‘மகாபாரதம்’ தொடர் – ஹைலைட்ஸ்
* இதுவரை ஒளிபரப்பான ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ போன்ற புராணத் தொடர்கள், இந்தியில் இருந்து டப் செய்யப்பட்டவை. இப்போதுதான் முதன் முறையாக ‘மகாபாரதம்’ தொடர் தமிழில் நேரடியாகத் தயாராகி உள்ளது.
* இத்தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
* தொடரை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி நடித்த ‘பாட்ஷா’, ‘வீரா’, ‘அண்ணாமலை’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.
* தேனிசைத் தென்றல் தேவா இத்தொடருக்கு இசை அமைத்துள்ளார். டைட்டில் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.
* இப்பாடலை சங்கர் மகாதேவன் உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். அசோக் ராஜன் நடனம் அமைத்துள்ளார். ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.
* சினி விஸ்டாஸ் நிறுவனம் சார்பில் சுனில் மேத்தா, பிரேம் கிஷண் மல்கோத்ரா தயாரித்துள்ளனர். இவர்கள் பிரபலமான ‘ஜுனூன்’ தொடரை தயாரித்தவர்கள்.
* வியாசர் எழுதிய மகாபாரதத்தை சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் கதையாக்கம் செய்துள்ளார்.
* இதில் இதுவரை இல்லாத அளவு 700 நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
* பிரமாண்ட அரங்குகளும் நவீன தொழில்நுட்பங்களும் இத்தொடரில் ஹைலைட் விஷயங்களில் ஒன்று.
* மகாபாரதக் கதை பெரியது. இதுவரை வந்த தொடர்களில் சில காட்சிகளை மட்டுமே எடுத்திருப்பார்கள். இத்தொடரில் முழுக் கதையும் காட்டப்பட இருக்கிறது.
* பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
* மயிர் கூச்செரிய வைக்கும் சண்டைக்காட்சிகள் மாஸ்டர் ‘கில்லி’ சேகர் மேற்பார்வையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
* ஏராளமான காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதை கண்டுபிடிக்க முடியாது.
* இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அலங்கார உடைகளும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகளும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
* பார்வையாளர்களை மெய்மறக்க வைக்கும் வகையில் படத்தின் காட்சிகளை படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் கணேஷ் குமார்.
அவசியம் குழந்தைகளோடு மகாபாரதம் பாருங்கள்…. அது உணர்த்தும் நீதியை பின்பற்றுங்கள்! சுபமஸ்து!!
(அறிவிப்பு : சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சிக்கு வரும் ஞாயிறு மதியம் 3.00 மணிக்கு செல்லவிருக்கிறோம். வர விரும்பும் அன்பர்கள் சரியாக மதியம் 2.45 மணிக்கு நுழைவாயில் அருகே வரவும். 24/02/2013 ஞாயிறு அன்று கண்காட்சி நிறைவு பெறுகிறது. சுந்தர் 9840169215)
மகாபாரதம்…..
அரசியல், ராஜதந்திரம், அன்பு, பாசம்,காதல்,சோகம் ,நம்பிக்கை, நட்பின் இலக்கணம் .நீதி,இறையாண்மை இன்னும் பல கிளை கதைகள் கொண்டது .
மிகவும் ஆவலுடன் ………………..
மனோகரன்
முழு கதை சரிதான். ஆனால் பரத மன்னனை பற்றிய தகவலை காட்டவில்லை. அவர் தான் ஹிமயம் முதல் குமரி வரை ஹச்டினாபுரத்தை தலைநகராக கொண்டு பாரத சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். மக்கள் ஆட்சியை முதலில் கொண்டுவந்தது அவர் தான். இந்த தகவலை மட்டும் முதல் தொடரில் காட்டி இருந்திர்கலாம்.
பழைய மகாபாரதத்தில்(தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட) காட்டப்படும் ஒவ்வொரு வசனமும் விஷயம் உள்ளதாகவே இருக்கும். வசனமும் சற்று விஷயம் உள்ளதாக காட்டப்பட வேண்டும். இது குறை கூறுவதற்காக அல்ல.சற்று மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில். I mean for Updation .
மிக அருமை. இன்றைய சூழ்நிலையில் அதுவும் ஞாயிற்று கிழமையில் அனைவரும் சினிமா சினிமா என்று அலையும் நேரத்தில் சரியான நேரத்தில் இந்த மஹா பாரதம் தொடர் வருவது பாராட்ட பட வேண்டிய விஷயம். குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் பார்க்க வேண்டிய ஒன்று.