Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

print
டலூரில் வாழும் வள்ளலாராக விளங்கிவரும் சிவப்பிரகாச சுவாமிகள் பற்றியும் முதுகெலும்பு உடைந்து கழுத்துக்கு கீழே அனைத்தும் செயலிழந்த நிலையிலும் சுவாமிகள் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வருவதை பற்றியும் சென்ற பதிவில் கூறியிருந்தோம்.

DSC05853

சுவாமிகளை பற்றித் தான் அந்த பதிவில் விரிவாக கூறியிருந்தோம். இல்லத்தை பற்றியும் இல்லத்தில் அடைக்கலம் பெற்று புனர்வாழ்வு பெற்று வருபவர்கள் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் இந்த பதிவு.

(Pls check : ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்! )

நாம் முதல் முறை சென்ற அன்று, என்.எல்.சி. அதிகாரி ஒருவர் தன் மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று இல்லத்தில் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தார். பிறந்த நாள் கண்ட அந்த பெண்ணுடன் குடும்பமே வந்திருந்தது.

DSC05889

அங்கிருந்த குழந்தைகள் அனைவர்க்கும் தலா ஒரு பெட்ஷீட், காட்பரிஸ் பெர்க் சாக்கலேட், மற்றும் ஒரு கேக் ஆகியவை வழங்கப்பட்டது.

DSC05890

குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும், அவர்களை உட்காரச் சொல்லி, அவர்களுக்கு கொஞ்சம் பாடம் எடுத்தார் அந்த பெண். ஒரு ஆங்கில RHYME பாடத்தை ஜாலியாக சொல்லிக்கொடுத்த அந்த பெண்ணின் திறமை வியக்கவைத்தது. குழந்தைகளும் ஆர்வமுடன் அமர்ந்து அதை கேட்டனர். அந்த பெண், அந்த ரைமை சொல்லச் சொல்ல இவர்களும் திரும்ப சொன்னது அத்தனை அழகு.

DSC05892

பிறந்த நாளன்று அர்த்தமற்ற கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறவர்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்து, ஆடை தானமும் அளித்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்கள் முகத்தில் புன்னகையையும் வரவழைத்து… தன் பிறந்த நாளையே அர்த்தமுள்ளதாக்கிவிட்டாள் அந்த பெண். சபாஷ்.

DSC05895

இங்கிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னேயும் ஒரு நெஞ்சை உருக்கும் கதை இருக்கிறது. அது பற்றிய விபரம் பின்னால் வரும்.

DSC05909

இதற்கிடையே, காலை டிபன் தயாராகிவிட, இட்லி, வடை மற்றும் கேசரி ஆகியவற்றை ஒரு பிடி பிடித்தோம். வழக்கமாக இங்கு காலை இட்லி, பொங்கல், உப்புமா உள்ளிட்ட டிபன் வகைகள் அனைவருக்கும் வழங்கப்படும். பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விஷேட நாட்ஜ்களில் எவரேனும் ஸ்பான்சர் செய்யும்போது வடை, கேசரி, மற்றும் பாயசத்துடன் அது சிறப்பு உணவாக பரிமாறப்படும்.

DSC05912

இங்கு சமைப்பதற்கு என்று தனியாக எவரும் கிடையாது. இந்த இல்லத்தில் தங்கி அடைக்கலம் பெற்றுள்ள பெண்களே சமைக்கிறார்கள். வயதானவர்கள் அவர்களால் இயன்ற வேலைகளை மனமுவந்து ஆர்வமுடன் செய்கிறார்கள்.

DSC05925

ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 60 பேர் தவிர, இங்கு ஆதரவற்ற முதியோர் சுமார் 25 பேர் உண்டு. இங்குள்ள குழந்தைகள் போன்றே ஒவ்வொருவர் பின்னேயும் ஒரு சோகக்கதை உண்டு.

DSC05932

காய்கறி நறுக்குவது, காய் கறிகளின் தோல் சீவுவது, பாத்திரம் தேய்ப்பது ஆகிய வேலைகளை இங்குள்ள முதியோர்களே செய்வது நெகிழ வைக்கும் ஒன்று.

குழந்தைகளுடனான நாம் நேரத்தை எப்படி செலவிட்டோம் என்பதை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு, இல்லத்தை ஒரு ரவுண்ட் வருவோம்.

DSCN3450

இல்லத்தின் பின்புறம் கோ-சாலை உண்டு. அங்கு தான் முதியோர் இல்லம் உண்டு. சென்ற முறை சென்ற பொது, கோ-சாலைக்கு ஒரு ஓரத்தில் தான் முதியோர் இல்லம் இருந்தது. தற்போது, கோ-சாலை தனியாகவும், முதியோர் இல்லம் தனியாகவும் கட்டப்பட்டுவிட்டது.

இங்கு பசு மாடு வந்த கதையே நெகிழ வைக்கும் ஒன்று. சிவப்பிரகாச சுவாமிகள் இத்தனை பேரை வைத்து இல்லம் நடத்துகிறார். ஒரு பசு மாடு இருந்தால், பால், தயிர், மோர் உள்ளிட்ட தேவைகளுக்கு உபயோகமாய் இருக்கும் என்று நினைத்த யாரோ, ஒரு நாள் ஒரு லாரியில் நல்ல நிலையில் உள்ள பசுவையும் கன்றையும் சந்தையில் வாங்கி, வண்டியில் ஏற்றி இங்கு அனுப்பிவிட்டார்களாம். இன்று வரைக்கு யார் பசுமாடும் கன்றும் வாங்கித் தந்தது என்று யாருக்குமே தெரியாதாம். இது எப்படி இருக்கு…

ஒன்று ரெண்டாகி…. ரெண்டு நான்காகி…. இன்று ஒரு கோ-சாலையே இங்கு உள்ளது. இங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும் இந்த கோ-சாலையின் பால் தான் உயிரூட்டுகிறது. சமீபத்தில் இங்குள்ள பசு ஒன்று சமீபத்தில் ஆண் கன்றை ஈன்றுள்ளது. பார்க்க பார்க்க சலிக்காதவைகளுள் கன்றுக் குட்டியும் ஒன்று தானே…

இந்த இல்லத்தில் தங்கி புனர்வாழ்வு பெற்று வரும் முதியோர்களை பற்றியும் அவர்கள் கதையையும் அவசியம் நீங்கள் கேட்கவேண்டும்.

“என் பிள்ளை அப்படிப்பட்டவன் இல்லே. என் மகள் அப்படிப்பட்டவ இல்லை” என்று ஒரு பேசியவர்கள் தான் இவர்கள் அனைவரும். ஆனால் இன்று முதுமையும் இயலாமையும் தாக்கும்போது பிள்ளைகளால் கைவிடப்பட்டு இங்கு வந்து அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள்.

(அந்தந்த பெயர்களுக்கு நேரே புகைப்படங்களை அளிப்பது சவாலாக இருக்கிறது. எனவே  அருகருகே இல்லாமல் மாறி இருக்கலாம்.)

DSCN3215

இந்த அம்மா பெயர் கோவிந்தம்மாள். வயது 65. சொந்த ஊர் காட்டுமன்னார்குடி இவருக்கு பிள்ளைகள் கிடையாது. கணவர் இறந்த பின்னர் அநாதையாகிவிட்டார். இந்த இல்லம் தான் எல்லாமே இவருக்கு இப்போது.

DSCN3372

இவர் பெயர் கஸ்தூரி. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. அப்பா அம்மா இறந்த பிறகு ஒரே அண்ணன் தான் இவரை பார்த்துக்கொண்டார். அவர் சில மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட அவரது குடும்பத்தினரால் இவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் வாடகை வீடு வேறு. சரி யாருக்கும் எந்த துன்பமும் கொடுக்கவேண்டாம் என்று இவராகவே வெளியேறிவிட்டார். அங்கஇங்கே விசாரித்து இங்கு வந்து சேர்த்துவிட்டார்.

கண் பார்வையற்ற மனைவிக்கு உற்ற துணையாக இருக்கும் நெசவாளி ராமலிங்கம்
கண் பார்வையற்ற மனைவிக்கு உற்ற துணையாக இருக்கும் நெசவாளி ராமலிங்கம்

இவர் பெயர் ராமலிங்கம். இவரது மனைவி லட்சுமி. சேலத்தை சேர்ந்த இருவருக்கும் வயது 60 இருக்கும். சொந்த ஊர் சேலம். நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். வயோதிகம் காரணமாக கண் பார்வை மங்கிவிட, நெசவு சரியாக வரவில்லை. இவர் நெய்த புடவைகளை வேண்டாம் என்று இவர் முதலாளி சொல்லிவிட்டார். இவர்கள் இருந்ததோ வாடகை வீடு. வருமானம் இன்றி வாடகை கொடுப்பது எப்படி? எங்கெங்கோ விசாரித்து இங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். தற்போது இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அவரது மனைவி லட்சுமிக்கு கண்பார்வை கிடையாது. கண்பார்வையற்ற மனைவிக்கு இவர் தான் எல்லாமே. இவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது.

பார்வதி பரமேஸ்வரன் போன்று காட்சியளித்த இவர்கள் காலில் வீழ்ந்து ஆசிபெற்றோம்.

ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தரகாண்டம் இவருக்கு பரிசளிக்கப்பட்டது.

DSCN3233

அன்னதானம் செய்வது பற்றி சிவப்பிரகாச சுவாமிகள் ஆஸ்ரமத்தில் கண்ட வாசகங்கள்.

எப்போதெல்லாம்  அன்னதானம் செய்யவேண்டும் ?

* உங்கள் தாய் தந்தை பிறந்த நாள் மற்றும் மறைந்த நாள்

* நீங்கள் பிறந்த நாள்

* உங்கள் இணையர் பிறந்த நாள்

* உங்கள் குழந்தைகள் பிறந்த நாள்

* நீங்கள் தொழில் தொடங்கிய நாள்

* புதுமனையில் வாழ்க்கை ஆரம்பித்த நாள்

* நீங்கள் அரசுப் பணியில் அமர்ந்த நாள்

* மிக மிக வருத்தத்துடன் பணி நிறைவு பெற்ற நாள்

* தங்கள் இல்லத்தில் நிகழும் சிறப்பு நாட்கள்

* உங்கள் குருநாதர் பிறந்த நாள்

* உங்கள் குருநாதர் திருவருட் கலப்பெய்திய நாள்

* நால்வர் பெருமக்கள் குருபூஜை நாள்

* ஆழ்வார்கள் திருநாடு அலங்கரித்த நாள்

* மற்ற அருளாளர்கள் விதேக முத்தி அடைந்த நாள்

* நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள் பிறந்த நாள் & இறந்த நாள்

* தமிழ வருடப் பிறப்பு நாள்

* அமாவாசை அல்லது நிறைமதி நாள்

* அல்லது நீங்கள் செய்ய விரும்பும் எந்த  நாளிலும் செய்யலாம்.

புண்ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே!
பாவம் என்பது ஜீவகாருண்யம் செய்யாமல் இருப்பதே!!

DSCN3237

“தினமும் இதை படிச்சிட்டு வாங்க. உங்க நிலைமையில நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்.” என்று கூறியிருக்கிறோம்.

DSCN3255

இவர் பெயர் ஆச்சியம்மாள். வயது 80. இவரது மகன் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது 9 மாத குழந்தையை விட்டுவிட்டு மாரடைப்பில் காலமாகிவிட்டான். மகன் இறந்த பிறகு, குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்கள் மீது விழுந்துவிட்டது. மகள் வீட்டில் தங்கி, பஞ்சு மில்லில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து பேரன் பேத்திகளை காப்பாற்றி வந்தார். பையனின் பிள்ளைகளை இவர் வேலை செய்து காப்பாற்றுவது பெண்ணுக்கு பொறுக்கவில்லை. அடித்து விரட்டிவிட்டாள். எங்கு போவது என்று தெரியாமல் இங்கு வந்து தஞ்சம் அடைந்திருக்கிறார். இவர் கணவர் ஆஸ்துமா வந்து காலமாகிவிட்டாராம்.

DSCN3264

DSCN3193

இவர் பெயர் நவாப் ஜான். புதுவையை சேர்ந்தவர் இவர். ஒரே பையன். ஒரே பொண்ணு. எனக்கு கண் பார்வை குறைவாக இருப்பதால் எந்த வேலைக்கும் செல்லமுடியவில்லை. மனைவி பேச்சை கேட்டு என்னை வார்த்தைகளால் காயப்படுத்தினான். அதனால் வெளியேறிவிட்டார்.

 ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தர காண்டம் பரிசளிக்கபட்டபோது
ராமர் ஜாதகத்துடன் கூடிய சுந்தர காண்டம் பரிசளிக்கபட்டபோது

அடுத்து திரு.ராஜா. இங்கு இருப்பவர்களிலேயே உருக்கமான கதை இவருடையது தான். வயது அநேகமாக 35 – 40 க்குள் தான் இருக்கும். டிப்ளோமா முடித்தவிட்டு வளைகுடாவில் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயராக வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்த இடத்தில் விபத்து ஏற்பட்டு மண்டையிலும் கையிலும் அடிபட்டுவிட்டது. கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து நைஸாக சென்னை அனுப்பிவிட்டார்கள். இங்கே வந்த இடத்தில் ஆப்பரேஷன் செய்ய அட்மிட் செய்தால் அவர்கள் தப்பாக ஆப்பரேஷன் செய்துவிட்டார்கள். விளைவு? இவரது வலது பக்கம் முழுதும் செயலிழந்துவிட்டது.

DSCN3282

இதற்கிடையே இவர் மனைவி வேறு கர்ப்பம் தரித்துவிட்டார்கள். தற்போது மூன்று மாதம். இந்த நிலையில் ஒரு பக்கம் செயலிழந்த இவரை எப்படி வைத்து பராமரிப்பது? எனவே இங்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டாராம்.

இவரால் பேச முடியாது. விந்தி விந்தி ஒரு பக்க அசைவுடன் தான் நடக்க முடியும்.

நாம் இவரிடம், சென்று அன்பாக அரவணைப்பாக பேசிக்கொண்டிருந்தோம். பதிலுக்கு அவரால் பேச முடியாவிட்டாலும் நம் அன்பை புரிந்துகொள்ள முடிந்தது.

கையெடுத்து கும்பிட முடியவில்லை. ஒரு கையை மட்டும் உயர்த்தி நன்றி சொன்னார்.

இவரது நிலைமையும் குடும்பத்தின் சூழ்நிலையையும் கேள்விப்பட்ட எப்படியாவது இவர் விரைந்து குணம் பெறவேண்டும் என்ற தவிப்பில் ராமர் ஜாதாகத்துடன் கூடிய சுந்தரகாண்டம் இவருக்கு பரிசளித்தோம். ராமர் ஜாதகம் கையில் கிடைத்தாலே அங்கு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துவிடும் என்பது நம்பிக்கை. பார்க்கலாம். ராமன் தான்கண் திறக்க வேண்டும்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் இவர் பெயர் பார்த்திபன். இவரால் சரியாக நடக்க முடியாது. ஆதரிப்பவர்கள் யாரும் இல்லை.

DSCN3262

அடுத்து இங்கிருக்கும் குழந்தைகள்.

இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கூறி உங்களிடம் அறிமுகப்படுத்தவேண்டும் என்றே நாம் விரும்பினோம்.

குழந்தைகளின் கதையை போட்டு அருகில் அவர்கள் படத்தை போடுவது தவறு. நாளை வளர்ந்து ஆளாகும்போது நம்மை பற்றி இப்படி ஒரு வெப்சைட்டில் வந்தது என்று தெரிந்தால் வருத்தப்படுவார்கள். ஆகையால் பொதுவாக அவர்களின் கதையை சொல்லி படங்களை தருகிறேன்.

DSCN3313

இங்கிருக்கும் மூன்று குழந்தைகளின் அப்பா குடிப்பழக்கத்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அம்மா வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட பாட்டி இங்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள். மூவருமே, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் குடும்பத்தை பற்றி சொல்லும்போது, அந்த குழந்தைகள் தங்கள் தந்தைக்கு நேர்ந்த கதியை பற்றியும் தாய் ஓடிப்போனதை பற்றியும் அழுதுகொண்டே தான் நம்மிடம் சொன்னார்கள். நமக்கே கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. தாய் வேறு யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று அந்த குழந்தைகளுக்கு இந்த வயதிலேயே தெரிவது எத்தனை கொடுமை….

குடிப்பழக்கம், சமூகத்தின் தீமைகள் அனைத்திற்கும் ஆணிவேராகும்.

DSCN3342

மற்றொரு குழந்தைகளின் அப்பா, குடிக்க பணம் தரவில்லை என்கிற காரணத்தால் அம்மாவை அடித்தே கொன்றுவிட்டாராம். அவர் ஜெயிலுக்கு போய்விட, குழந்தைகள் அனாதையாகிவிட்டது. குழ்யந்தைகள் பற்றி யாரோ தகவல் கொடுத்து இவர்கள் போய் மீட்டுக்கொண்டு வந்து இங்கே சேர்த்து படிக்க வைத்துவருகிறார்கள்.

இன்னொரு குழந்தையின் அம்மா குழந்தைக்கு 4 வயது இருக்கும்போது ஏதோ ஒரு இயலாமையை கூறி கொண்டு வந்து சேர்த்துவிட்டு போனவர்கள் தான். அதற்கு பிறகு ஆளே காணவில்லையாம்.

DSCN3361

மற்றுமொரு குழந்தைகளின் கதை ரொம்ப கொடுமை. அம்மா இறந்துவிட, அப்பா கஞ்சா விற்றுகொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் போலி பிடித்துக்கொண்டு போய்விட்டது. குழந்தைகள் அனாதையாகிவிட்டனர். உறவினர்கள் தான் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

DSCN3385

தவிர, பூம் பூம் மாடை வைத்து பிழைப்பு நடத்தும் குழந்தைகள் பலர் இங்கு உண்டு. படிக்கவேண்டிய பூம் பூம் மாடி பிடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தவர்களை சமூகனலத்துரையினர் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அப்படி 10 குழந்தைகளுக்கும் மேல் இங்கு உள்ளனர்.

தாய் மீதுள்ள வெறுப்பில் பெற்ற தந்தையே சிகரெட்டால் சூடு வைத்த குழந்தை முதல் சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்த குழந்தைகள் வரை இங்கு பலர் உண்டு. இங்கு சில குழந்தைகள் அப்பா அம்மா பற்றியே எதுவும் தெரியவில்லை.

இங்குள்ள ஒரு குழந்தை 8 மாதமாக இருக்கும்போது இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டாள். ஸ்வாமிகள் தான் அவளுக்கு தந்தை என்று கூறி அக்குழந்தை வளர்க்கப்பட்டு வருகிறாள். அக்குழந்தைக்கும் தாம் அனாதை என்று தெரியாது. திருநாவுக்கரசரின் தாயாரான மாதினியாரின் பெயர் அக்குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ளது.

உங்கள் லட்சியம் என்ன? என்னவாக விரும்புகிறீர்கள் என்று இந்த நிமிடம் உங்கள் அனைவரிடமும் கேட்டால் எத்தனை பேர் உடனடியாக பதில் சொல்வீர்கள் என்று தெரியாது. ஆனால், இந்த குழந்தைகள் டாண் டாண் என்று பதில் சொல்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உண்டு. டாக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஐ.பி.எஸ்., கப்பல் கேப்டன் என்று.

இறுதியாக குழந்தைகளுக்கு நம் தளத்தில் இருந்து நான்கைந்து நீதிக்கதைகளை சொன்னோம். அனைவரும்  ஆவலுடன் கேட்டார்கள்.

DSCN3338 copy2குழந்தைகளிடம் விடைபெறும்போது “அடுத்த முறை வரும்போது வாங்கிட்டு வர்றோம். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபோது, ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.

ஆனால், ராஜலட்சுமி என்கிற இந்த சிறுமி சொன்னது என்ன தெரியுமா?

“அங்கிள் எனக்கு ஒன்னும் வேண்டாம். நான் கலெக்டர் ஆகிறதுக்கு எனக்கு உதவி பண்ணீங்கன்னா போதும்!” என்பது தான்.

இதற்க்கு பெயர் தான் விஷன். உங்களில் எத்தனை பேருக்கு இது உள்ளது?

நிச்சயம் இவளது கனவுக்கு உறுதினையாய் இருப்போம் என்கிற உறுதியை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

'என் கடன் பணி செய்து கிடப்பதே' - இல்லத்தில் உள்ள ஆதரவற்ற ஒரு அம்மாவுடன்  பேசிக்கொண்டிருந்தபோது...
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ – இல்லத்தில் உள்ள ஆதரவற்ற ஒரு அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது…

இவர்களுடன் நாம் செலவழித்த அந்த சில மணிநேரங்கள் தான் நாம் உண்மையாக வாழ்ந்த நேரம். மற்றதெல்லாம் நாம் மூச்சு விடும் நேரம் அவ்வளவு தான்.

அவர்களிடம் பரிவுடன் பேசி, சிரித்து மகிழ்ந்து கதை சொல்லி…. அந்த இன்ப்பம் சொன்னால் புரியாது.

DSCN3227

முதியவர்களிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் குறைகளை கேட்டறிந்து நம்மால் இயன்றதை தீர்ப்போம் என்று சொல்லி விடைபெற்றபோது அவர்கள் கையெடுத்து நம்மை கும்பிட்டது… நெஞ்சை நெகிழவைக்கும் ஒன்று.

இப்படியும் கூட இன்பம் உண்டு என்பதை உணர்ந்தபோது கண்கள் பனித்தது.

==================================================================

முந்தைய பதிவில் கூறியபடி, வரும் சனிக்கிழமை 24 மே அன்று இரவு வடலூர் கிளம்புகிறோம். டெம்போ ட்ராவலர் புக் செய்திருக்கிறோம். வாசகர்கள் சிலர் குடும்பத்தோடு வருகிறார்கள். மொத்தம் 15 – 20 பேர் வருவார்கள் என்று கருதுகிறோம்.

சிவப்பிரகாச சுவாமிகளை சந்திக்கவும் இல்லத்தை பார்வையிடவும் நம்முடன் வடலூர் வரவிரும்பும் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் உடனடியாக நம்மை தொடர்புகொள்ளவும். சிவனருளால் வரும் மே 24 சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு மே 25 இரவு சென்னை திரும்புவதாக ப்ளான்.
இல்லத்துக்கு நாம் வாங்கவேண்டிய பொருட்கள் : முதியோர்கள் பிரிவில் சுமார் எட்டு சீலிங் பேன், மெயின் ஹால் & சமையல் கூடத்தில் எக்ஹாஸ்ட் பேன்கள் 2, இல்லத்துக்கு வருபவர்கள் அமர பி.வி.சி. சேர்கள் ஒரு பத்து, தலையணைகள் ஒரு பத்து, குழாயுடன் கூடிய தண்ணீர் அருந்தும் டிரம்கள் இரண்டு என்று தேவைப்படுவதாக தெரிகிறது. இதைத் தவிர குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள் மற்றும் துணிமணிகள்.

DSCN3376

மேலே நாம் அளித்த பட்டியல் படி, அனைத்து பொருட்களும் ஒவ்வொன்றாக வாங்கப்பட்டு வருகிறது.

இது தவிர நூடுல்ஸ் பாக்கெட்டுகள் ஒரு பெட்டி வாங்கவிருக்கிறோம். இவர்கள் நூடுல்ஸ்ஸே சாப்பிட்டதில்லை. நாள் கிழமை விசேஷங்களின் போது கூட அதே பொங்கல், இட்லி வடை, தோசை, கேசரி என்று தான் சாப்பிடுகிறார்கள். நூடுல்ஸ் என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். எனவே இங்கிருந்து நூடுல்ஸ் ஒரு பெரிய கேஸ் வாங்கிக்கொண்டு போய், அவர்களுடன் நாம் ஞாயிறு காலை அவர்களுடன் உணவருந்தும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து நூடுல்ஸ் தான் சாப்பிடப் போகிறோம்.

எப்படியும் அனைத்து சேர்த்து சுமார் ரூ.25,000 வரும் என்று கருதுகிறோம். இதுதவிர, வடலூர் சென்று வரும் வேன் செலவு தனி. நம்முடன் வேனில் வடலூருக்கு வருபவர்களிடம் இவ்வளவு தான் வேண்டும் என்று நாம் யாரையும் வற்புறுத்தவில்லை. இயன்றதை கொடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் கூறியிருக்கிறோம்.

நாம் கேட்டுக்கொண்டபடி வாசகர்கள் ஒவ்வொருவராக அவர்களால் இயன்ற தொகையை நிதி அளித்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி. வசூலாகும் மொத்த தொகையயை பொறுத்து சற்று கூடவோ குறையவோ பொருட்கள் வாங்கப்படும். அனேகமாக நாம் வாக்குறுதி அளித்த பொருட்களை எப்படியும் வாங்கிவிடுவோம். திருவருள் துணை செய்ய வேண்டும்.

இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் நிதி அளிக்க விரும்புகிறவர்கள் சனிக்கிழமை மாலை வரை அளிக்கலாம்.

கீழே நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அளித்திருக்கிறோம். இந்த அரிய பணிக்கு உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவும்படி வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிதியளிக்கும்போது நம் தளத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும் சேர்த்து நிதியளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தளத்தின் நிர்வாகச் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. நீங்கள் அளிக்கும் நிதியை கொண்டே இந்த தளம் நடத்தப்படுகிறது. நம் தளத்துக்கு விளம்பர வருவாயோ அல்லது இதர வருவாயோ எதுவும் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

==================================================================

[END]

6 thoughts on “வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

  1. மிகவும் நீண்ட பதிவு with photos. நீங்கள் நேரில் சென்று பார்த்ததை ஒன்று விடாமல் பதிவு செய்திருக்கிறீர்கள். NLC அதிகாரியின் பெண்ணிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்க்கள் தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து இருக்கிறார்கள். சிவப்ரகாச சுவாமிகள் நினைத்ததை நடத்தி கொடுக்க இறைவன் பிரத்யக்ஷமாய் இருக்கிறார், அந்த இல்லத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் குழந்தைகள் கதைகளை படிக்கும் பொழுது மனது கனக்கிறது. அந்த குழந்தைகளின் கனவு நனவாக எமது வாழ்த்துக்கள் குழந்தை ராஜ லக்ஷ்மியின் கலெக்டர் கனவு நனவாக எமது வாழ்த்துக்கள் அங்குள்ள முதியவர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் இந்த இல்லத்தை வெகு சிறப்பாக நடத்து சுவாமிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    இறை அருளால் இல்லத்திற்கு தேவையாயான தாங்கள் வாக்குறுதி கொடுத்த அ னைத்து பொருட்களும் வாங்க இறைவன் துணை இருப்பார்.

    நன்றி
    உமா

  2. வீணான கேளிக்கைகளிலும்,கொண்டாட்டங்களிலும் நேரத்தை செலவிடும் இந்த தலைமுறையினரிடமிருந்து, தனது பிறந்த நாளின் போது அன்னதானம் தருவதோடு மட்டும் தனது கடமை முடிந்து விடாமல் , அந்த நாளை இனிமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்த அந்த குழந்தை (பெயர் தெரியவில்லை) தனது வாழ் நாளில் எல்லாவித சகல சௌபாக்கியங்களையும் பெற மனதார வாழ்த்துவோம்.
    மேலும் தங்களது பணியும் சிறியது அல்லவே.
    இவ்வளவு வேலையிலும் இது போன்று தொண்டாற்றவும்,இது போல மற்றவர்களையும் செய்ய வைத்து அவர்களுக்கும் புண்ணியம் சேர செய்யும் உங்களது சேவையும் வாழ்க.
    இதன் மூலம் நாம் இறைவனை தேடி செல்ல வேண்டாம். அவனே நம்மிடம் ஓடி வருவான்.
    ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல, இந்த குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற சிரிப்பிலும் அந்த கண்ணனை நாம் காணலாம்(நமக்கு கண் இருந்தால்).
    மே 24 உங்கள் பயணம் இனிதாக அமையும்.
    வாழ்க உமது தொண்டு
    வளர்க உமது பணி(பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம்) .

  3. இந்த பதிவை படித்ததும் ஒரு பக்கம் மனம் கனத்தாலும், நம் தளத்தின் மூலம் இவர்களுக்கு நம்மால் இயன்றதை செய்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் பூரிக்கிறது. இந்த நற்செயல்களுக்கு மூல காரணமாக இருக்கும் சுந்தரக்கு மனமார்ந்த நன்றி.

    இந்த இல்லத்தைப்பற்றி என் நண்பரிடம் சொன்னவுடன் கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக ஒரு தொகையை என்னிடம் கொடுத்து சுந்தரிடம் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். எல்லாம் ஆண்டவன் செயல்.

  4. ”இவர்களுடன் நாம் செலவழித்த அந்த சில மணிநேரங்கள் தான் நாம் உண்மையாக வாழ்ந்த நேரம். மற்றதெல்லாம் நாம் மூச்சு விடும் நேரம் அவ்வளவு தான்” –

    உள் நெஞ்சை தொட்ட வரிகள் . சுவாமிகளை 3 ஆண்டுகளாக யாமும் அறிவோம் . ஆனால் பல புதிய தகவல்கள் … ஒவ்வொரு குழந்தையின் வாழ்வும் ஒரு போராட்டம். குடிப்பழக்கமே அனைத்து துன்பத்தின் ஆணிவேர் ;

  5. மகத்தான பணி, வாழ்த்துக்கள் சுந்தர். நன்றி.

Leave a Reply to Srinivasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *